செவ்வாய், செப்டம்பர் 06, 2011

பசுமைத்தாயே... பாராட்டுறேனுங்க ! - முதல்வர் 'செயல்’லலிதாவுக்கு கோவணாண்டி கடிதம்

''தங்கத் தாரகை, காவிரி தந்த செல்வி, கருணையுள்ளம் கொண்ட தாய், கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர், அம்மா அவர்களுக்கு, மறுபடியும் ஒருக்கா வணக்கம் சொல்லிக்கறான் உங்க பாசக்காரக் கோவணாண்டி. 'என்ன இவன்கூட ஒரே நொம்பலமா போச்சே’னு பதறாதீங்க. இந்த தடவை கோவணாண்டிக சார்புல உங்களை மனசரா வாழ்த்த வந்திருக்கேன்.


'இந்த அதிகாரிகளையும், ஆலோசகர்களையும் கூட்டி வெச்சு கருத்து கேட்டு, அதன்படியே நடக்காதீங்க. அனுபவ விவசாயிக சொல்றதுக்கும் காது கொடுங்க'னு வலியுறுத்தறதுக்காக நீங்க ஆட்சியில உக்கார்ந்த ஒடனேயே 'ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு... ஃபினிஸிங்ல பிரச்னை பண்ணிடாதீங்க'னு (10-06-11 தேதியிட்ட இதழ்) ஒரு கடுதாசியை எழுதினேன். அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்காம... வழக்கம்போல அதிகார வர்க்கம் சொல்றதுக்குத்தான் காது கொடுத்தீங்க.

அதனால கோவப்பட்டு, 'ரெண்டாவது பசுமைப் புரட்சி வேணாமுங்க'னு (10-07-11 தேதியிட்ட இதழ்) காச்மூச்னு மறுக்கா ஒரு கடுதாசியை எழுதிப் போட்டேன் ஏகக்கடுப்புல! ம்... இந்த அம்மாவாலயும் இந்த கோவணாண்டிகளுக்கும், நாட்டுக்கு ஒரு நல்லதும் நடக்கப் போறதில்லனு முடிவே பண்ணிட்டு, வேற வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இந்த நிலையில விவசாயத்தை அழிச்சுட்டிருக்கற நரகாசுர பிரச்னைகள ஒவ்வொண்ணா ஒழிக்கறதுக்காக உருப்படியா அடியெடுத்து வெச்சு, ஆச்சரியப்படுத்திட்டீங்க. இப்பகூட ஒங்கள பாராட்டலேனா, இந்தக் கோவணாண்டிக்கு நாக்கு அழுகிப் போயிடுமுங்க... அழுகி!

நம்ம அப்பனாத்தா சொல்லிக் கொடுத்த விவசாயத்தை, அதோட நுணுக்கத்தைக் காப்பாத்தியிருக்கீங்களே... அதுக்கே ஆயிரம் கோடி நன்றி சொல்லியாகணும். பின்னே என்னங்கம்மா, 'விவசாயம் படிச்சு, பட்டம் வாங்கினவங்க மட்டுந்தான் விவசாயத்தைப் பத்தி பேசணும். விவசாயிங்ககூட அதைப் பத்தியெல்லாம் பேசக் கூடாது. பக்கத்து வயலு விவசாயிகிட்ட, ஏம்ப்பா தண்ணி பாய்ச்சலையா?னு கேட்டாகூட ஜெயில்ல கம்பி எண்ணணும்’ங்கற அளவுக்கு, அநியாயச் சட்டம் போட்டு, போன ஆட்சியில அழிச்சாட்டியம் பண்ணினாங்க.

'கம்பெனிக்கார களவானிப் பயலுக போட்ட எலும்பைப் பொறுக்கறதுக்காக கொண்டு வந்ததுதான் இந்தச் சட்டமே!'னு நாயா பேயா... கூப்பாடு போட்டதுக்குப் பிறகு, போனா போகுதுனு சட்டத்தை தற்காலிகமா நிறுத்தி வெச்சார் முதல்வரா இருந்த கலைஞரு. ஆனா, அது தலைக்கு மேலத் தொங்கிட்டு இருக்கற கத்திதான். இப்ப விழுமோ, எப்ப விழுமோனு சொல்ல முடியாது. நிரந்தரமா நீக்குங்கனு கால்ல விழாத குறையா கதறினோம். கடைசிவரை, கண்டுக்கவே இல்ல. இப்ப, 'அவரு போட்ட சட்டம் தானாவே காலாவதியாகிப் போச்சு. நிரந்தரமா நீக்கறதுக்குண்டான நடவடிக்கை தேவையானு சட்ட வல்லுநர்கள்கிட்ட கேக்கறேன்'னு சொல்லி, எங்க வயித்துல பால் வார்த்திருக்கீங்க... நீங்க நல்லாயிருக்கணும்மா!

ரொம்ப காலமா நாங்க எதிர்ப்புக் காட்டிக்கிட்டிருந்த 'எண்டோஃசல்பான்' விஷத்துக்கும் வேட்டு வெச்சு அசத்திட்டீங்க. இதைவிட மோசமான பல பூச்சிக்கொல்லி விஷங்கள் நம்மூருல இன்னும் புழக்கத்துல இருக்குதுங்க. குறிப்பா, காலிஃபிளவருக்கும், திராட்சைக்கும் அடிக்கிற விஷத்தைப் பத்திக் கேட்டீங்கனா... இந்த ஜென்மத்துல மட்டுமில்ல, ஏழேழு ஜென்மத்துலயும் அதைச் சாப்பிடமாட்டீங்க. ஒட்டுமொத்தமா இந்த ரசாயன ராட்சஷனை தடை பண்ணிட்டு, பக்கத்துல இருக்கற கேரளா மாதிரி முழு இயற்கை விவசாய மாநிலமா மாத்துறது ஒண்ணுதான் நிரந்தரத் தீர்வு.

உடனே, 'பூச்சிக் கொல்லிகள நிறுத்திட்டா, உற்பத்தி ஊத்திக்கும்’னு உங்க அதிகாரிங்க அலறுவாங்க. நிஜத்தைத் தெரிஞ்சுக்கணும்னா... ஒங்களோட ஐதராபாத் தோட்டம், கொடநாடு எஸ்டேட்டு இங்கல்லாம் நேரடி பார்வையில இயற்கை விவசாயத்தை ஆரம்பிங்க... நீங்களே அந்த உண்மையைப் புரிஞ்சுக்கலாம். தமிழகத்துல இருக்கற இயற்கை விவசாயிங்க தோட்டத்துக்கும் போங்க. முக்கியமான விஷயம்... இந்த விஷயத்துல நீங்க நேரடியாத்தான் களத்துல இறங்கணும். இல்லாட்டி... இடையில புகுந்து விளையாடிடுவாங்க... பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைத்தடியா இருக்கற சில ஆபீஸருங்க.

கலப்பைக்காரங்கள கடன்காரங்களாக்கி, தூக்குல தொங்க விட்டுக்கிட்டு இருக்கற பி.டி. ரக விதைகளுக்கும் சாவுமணி அடிக்கறதுக்குண்டான அஸ்திரத்தைக் கையில எடுத்திருக்கீங்க. 'இதை விதைச்சா காய்ப்புழு தாக்காது, விளைஞ்சு குவிச்சுடும்’னு கதை கதையா விடுறாங்க. நம்பி ஏமாந்து போற விவசாயிங்க, அதிக காசு கொடுத்து விதையை வாங்கி நட்டுட்டு, கடைசியில நட்டப்பட்டு நிக்குறாங்க. நல்லவேளையா... சரியான நேரத்துல அதையும் கையில எடுத்திருக்கீங்க. அதுக்காக சந்தோஷப்படுறோமுங்க.

ஆனா... இந்த விஷயத்துல தனியார் விதை வியாபாரிகளைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லாம இருக்கறதுதான் குழப்பத்தை உண்டு பண்ணுது. தமிழ்நாட்டுக்கு நீங்கதான் முதலமைச்சர். இந்த மண்ணுக்கு என்ன தேவை... எது தேவையில்லைங்கறத முடிவு பண்ணுற உரிமை ஒங்ககிட்ட இருக்கு. மத்திய அரசை தைரியமா தட்டிக்கேட்டு செயல்படுத்தறதுக்கு ஒங்கள விட்டா, இப்போதைக்கு இந்தியாவுலயே ஆளில்லை. அதனால, இந்த விஷயத்துல உண்மை என்னங்கறத எங்கள மாதிரி ஆளுங்கள கூப்பிட்டுப் பேசி, ஒரு முடிவு கட்டுங்க. அதுக்குப் பிறகு பாருங்க... இந்த பூமி உள்ள காலம் வரை ஒங்கள 'பசுமைத் தாய்'னு இந்த உலகமே போற்றும்.

அப்படியே... நம்ம விவசாயப் பல்கலைக்கழகத்து மேலயும் ஒரு கண் வைங்க. கிட்டத்தட்ட மான்சான்டோ கம்பெனியோட தமிழ்நாட்டுக் கிளையாவே அது மாறிப் போச்சு. முதல்ல அதை மாத்துங்க. முன்னோடி விவசாயிகள இணைச்சு, விதை ஆராய்ச்சி செய்யச் சொல்லுங்க. விதைக்கு ஒரு போதும் அன்னியனை நம்பக் கூடாது. விதி கெட்டா, பரிகாரம் உண்டு. விதை கெட்டா, பரலோகம்தான்! கடைசியா ஒரு கோரிக்கை.. பார்த்தீனியத்தை ஒழிக்கப் போறதா சொல்லியிருக்கீங்க. சந்தோஷம். அந்தத் திட்டத்தை நூறு நாள் வேலைத் திட்டத்துல இணைச்சுப் போட்டீங்கனா நல்லாயிருக்கும். அந்தந்தப் பகுதிகள்ல இருக்கற பார்த்தீனியத்தை ஈஸியா ஒழிச்சுடலாம். அந்தப் பார்த்தீனியத்தை மக்க வெச்சே மண்புழு உரம் தயாரிக்கலாம். ஏற்கெனவே சில விவசாயிக இதை செஞ்சுகிட்டு இருக்காங்க. தயாரிக்குற உரத்தை கிராமப் பஞ்சாயத்து மூலமாவே சகாய விலையில விவசாயிகளுக்கு வித்துடலாம். இப்படி செஞ்சா ஒரே கல்லுல பல மாங்காய்களை அடிச்சுடலாம்.

கடைசியா ஒரு வார்த்தை... உங்க ஆட்சி 'ஜெஜெ'னு இருக்கறதும்... 'ச்சேச்சே'னு ஆகறதும் ஒங்க கையிலதான்ங்கறத மறந்துடாதீங்க!


இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10 செப்டம்பர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக