வெள்ளி, ஜூலை 26, 2013

'புடலங்காய் பொருளாதாரம் போதும்... இது, பொட்டிய கட்டுற நேரம்!' - 'அட்டகத்தி' பிரதமருக்கு கோவணாண்டி எச்சரிக்கை!

இந்தியாவோட 'இருபத்தி நாலாம் புலிகேசி', 'அட்டகத்தி', மாண்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங்ஜிக்கு, வணக்கம் சொல்லிக்கறான்... உங்க பாசக்கார கோவணாண்டி.

ஐயா, உங்களோட பொதுவாழ்க்கையில ஒரே ஒரு தடவை உண்மையைப் பேசி, உலகத்தையே புல்லரிக்க வெச்சுட்டீங்கனு... எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியாரு அடிக்கற ஆனந்தக் கூத்து... தாங்க முடியலீங்க.
நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியலையா?

''உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. அரசு நிர்ணயிச்ச விலை, அம்மிக் கல்லாட்டம் அசையாம கெடக்குது. எப்படி தொடர்ந்து தொழில் செய்யறது? லாபகரமான விலை கொடுத்தாத்தானே நாலு பேரு மூட்டையில பணத்த கட்டிக்கிட்டு நம்ம நாட்டுல தொழில் தொடங்க வருவாங்க. அப்பத்தானே, அன்னிய முதலீடு அம்பாரமா குவியும்! அதைப் பார்த்துட்டு உள்ளூரு தொழில் அதிபருங்களும், அவங்கவங்க குவிச்சு வெச்சுருக்கற பணத்த தொழில்ல முதலீடு செய்வாங்க'' அப்படினு ஒரு கூட்டத்துல வெளிப்படையா போட்டு உடைச்சுட்டீங்களாமே?!

இதை இங்கிலிபீஸு பத்திரிகையில படிச்சுட்டு வந்து, அவரு எங்ககிட்ட சொன்னதும், ''அள்ளையில ஆப்பு சொருகுனாலும், 'அய்யோ..'.னு கத்தாத மனுசன், இன்னிக்கு வாயத் தொறந்து நல்லது சொல்லியிருக்காரு. இனிமே பால் விலை, கரும்பு, நெல், தேங்காய்னு எல்லா விலையும் கூடிரும். விவசாய சாதிக்கு நல்ல காலம் பொறந்திருச்சு’'னு நான் புளகாங்கிதப்பட்டுப் போய் சொன்னதுதான் தாமசம், பொங்கி எழுந்துட்டாரு, மனுசன்.
''அடேய் கிறுக்குப்பயலே... அவரு சொன்னது உன்னைய மாதிரி கோவணாண்டிகளுக்கு இல்லைடா. கோமான், சீமான் மாதிரியான ஆளுங்களுக்கும், 8 ஆயிரம் கோடி செலவு பண்ணி, தன் பொஞ்சாதிக்கு ஒரு குடிசையைக் கட்டிக் கொடுத்த அம்பானிக்கும்... பல ஆயிரம் கோடிகளை வாங்கி, ஏரோபிளேன்ல கொட்டி பறக்கவிட்டுட்டு, பேங்குக்கு மஞ்சக் கடுதாசியை நீட்டுற அளவுக்கு நாடகமாடுற மல்லையா மாதிரி ஆளுங்களுக்காகவுந்தான் மன்மோகன் தன்னோட வாயைத் தொறந்துருக்காரு. ஆட்சியில உக்கார வெக்குறதும், கவுத்து விடுறதும், கவுறாம காப்பாத்துறதும் தொழில் அதிபருங்கதானே. அதனால நீ ஓவரா சந்தோஷப்படாதே... ஒடம்புக்கு ஆகாது. உன்னோட வேலை, ஓட்டுப் போடுறது மட்டுந்தான்.

உங்கள மாதிரி சம்சாரிக, 'விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கொடுங்க’னு பல வருஷமா கூப்பாடு போடுறீங்க. 'அதக் கேக்கக் கூடாது’னுதான் காதை தலைப்பாகையால மூடிக்கிட்டாரு சிங். அதைக்கூட விடுங்க, உசுரைக் கொடுத்து விளையவெச்சு, ஆலைக்கு கரும்பை கொடுத்து காசு வாங்க முடியாம கதறிக்கிட்டு கிடக்கீங்க. இந்தா தர்றேன்... அந்தா தர்றேன்னு போக்குக் காட்டுறாங்க. ஆனா, கேக்காமலேயே, முகேஷ் அம்பானி கம்பெனிக்கு... ரெண்டு மடங்கு விலையை அள்ளிக் கொடுத்திருக்காரு இந்த மவுனச்சாமி.

கிருஷ்ணா, கோதாவிரி நதிப்படுகையில கிடைக்கற இயற்கை எரிவாயுவை எடுத்து, ஒரு பி.டி.யு. (ஙிஜிஹிஙிக்ஷீவீtவீsலீ tலீமீக்ஷீனீணீறீ uஸீவீt)
4.2 அமெரிக்க டாலர்னு விலை வெச்சு, நம்ம அரசாங்கத்துக்கு விற்பனை பண்ணுது அம்பானி கம்பெனி. இது, இந்தியாவுல கிடைக்குற எரிவாயு. ஆனா, அமெரிக்க டாலர்ல விலையை நிர்ணயம் செய்றாங்க. ஏன்னா, இந்திய ரூபாயை அரசாங்கமே மதிக்கறதில்லையே. ஒரு டாலருக்கு 60 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்போது... யாருதான் மதிப்பா?

மத்த ஆசிய நாடுகள்ல, 'எரிவாயுவுக்கு என்ன விலை கொடுக்குறாங்க?’னு, ரங்கராஜன் தலைமையில ஒரு வல்லுநர் குழு ஆய்வு பண்ணி, 'ஒரு பி.டி.யு.-க்கு 6 அமெரிக்க டாலருக்கு மேல யாரும் விலை கொடுக்கல. நாமளும் 6 டாலர் கொடுக்கலாம்'னு சொன்னாங்க. ஆனா, '6 டாலர் கொடுத்தா... விலைவாசி கூடிப்போகும்.

மின்சாரம், உரம் விலை உசந்துடும்... இப்படியெல்லாம் எதிர்க்கட்சிகள் எகிற ஆரம்பிச்சிடுவாங்க’னு மின்சாரத் துறை, உரத் துறை அமைச்சருங்க கடுமையான எதிர்ப்பை தெரிவிச்சதோட, '5 டாலர் கொடுத்தா போதும்'னு அமைச்சரவைக் கூட்டத்துல சொல்லியிருக்காங்க. கடைசியா, 'ஆறே முக்கா டாலர் கொடுக்கலாம்'னு பிரதமருக்கு குறிப்பு எழுதியிருக்காரு பெட்ரோலிய மந்திரி.

ஆனா, இது எதையுமே கண்டுக்காம, குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி, 4.2 டாலரா இருந்த விலையை 100 மடங்கு உசத்தி... 8.4 டாலர்னு அறிவிச்சுட்டாரு சிங். அட, அந்த அம்பானியே இதை எதிர்பாக்கலைனா பார்த்துக்கோயேன்''னு வாத்தியாரு சொல்லச் சொல்ல... ஒடம்பு அப்படியே புல்லரிச்சு போச்சுங்கய்யா.

மண்ணுக்கு கீழ இருக்கறதெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்தான் சொந்தம். அதுல ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்கு இருக்கு. ஆனா, அந்த அம்பானி மட்டும்தான் இந்தியன்கிற கணக்கா, ஒரே ஒரு ஆளுக்கு மொத்தத்தையும் பட்டா போட்டுக் கொடுத்திருக்கீங்க. 'நீ அவல் கொண்டு வா... நான் உமி கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்'கற கதையா... நிலத்துல சும்மாச்சுக்கும் விரவிக் கிடக்கற கேஸை எடுத்து, நோகாம நொங்கு திங்குறவங்களுக்கு... கேக்காமலேயே கொடுக்குற நீங்க, கரடியா கத்துற எங்களை மட்டும் ஏன் கண்டுக்க மாட்டேங்கறீங்க.
சிமென்ட் கம்பெனி அதிபருங்க, துணி கம்பெனி அதிபருங்கனு எல்லாரும், விலையைக் கூட்டணும்னா... உற்பத்தியைக் குறைச்சு, விலையை ஏத்திடறாங்க. ஆனா, சம்சாரிக்கு மட்டும் உற்பத்தி குறைஞ்சாலும், கூடுனாலும் விலை கிடைக்கறதில்ல. அடிக்குற வெயிலுக்கு பனை மரமே கருகிப் போயி கெடக்குறப்ப, தென்னையைப் பத்தி என்னத்த சொல்ல? பல லட்சம் தென்னமரங்க கருகிப் போச்சு. தேங்காய் உற்பத்தி கொறைஞ்சு போச்சு. ஆனாலும், தேங்காய்க்கு அதே மூணு ரூபாய்... நாலு ரூபாய்தானே விலை கிடைக்குது. ஏனுங்க இப்படி? விவசாயிக மட்டும் இந்த நாட்டுல என்ன பாவம் செஞ்சாங்க?

ஆண்டவனும் காப்பாத்தல... ஆண்டவர்களும் காப்பாத்தல... ஆள்பவர்களும் காப்பாத்தல. இப்படியே, கம்பெனிக்காரங்க கண்ணுல வெண்ணையையும்... விவசாயிங்க கண்ணுல சுண்ணாம்பையும் வெச்சுக்கிட்டே போனா, சீக்கிரமே சோமாலியா மாதிரி சோத்துக்கு சிங்கியடிச்சுட்டு... அக்கம் பக்கத்து நாடுகள்ல பிச்சையெடுக்கற நிலைதான் இந்தியாவுக்கு வரும்.
ஆமா... தெரியாமத்தான் கேக்குறேன். 91-ம் வருஷம், நரசிம்ம ராவ் கெவருமென்ட் இருக்கும்போது, தடாலடியா நிதியமைச்சர் பதவியில வந்து குதிச்சீங்க. அரசியலுக்கு துளிகூட சம்பந்தமில்லாத உங்கள, அதுல உக்கார வெச்சாரு அந்த மவுனச்சாமியாரு நரசிம்ம ராவ். 'உலகமயம்... தாராளமயம்... இதெல்லாம்தான் எதிர்காலத்துல வலிமையான இந்தியாவை கட்டமைக்கும்'னு சொல்லிச் சொல்லியே... நாட்டை பல நாட்டுக்காரங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்தீங்க. கேள்வியே இல்லாம கண்ட கண்ட பொருளையும் ஊருக்குள்ள நுழையவிட்டீங்க. இடையில ஒண்ணு ரெண்டு வருஷம் நீங்க பதவியில இல்லாட்டியும், நீங்க போட்ட கோட்டைத் தாண்டாமத்தான் ஆட்சியை நடத்தி முடிச்சுது சுதேசி பேசுற பிஜேபி. ஆகக்கூடி, இருபது வருஷமா அதே பொருளாதார கொள்கையிலதான் ஊறுகாய் கணக்கா இந்தியாவே ஊறுது. நிலைமை அப்படியே நீடிச்சும்... உங்களோட பொருளாதாரப் புண்ணாக்கு கணக்கெல்லாம், எந்தப் பலனையும் தரலைனு நீங்களே இப்ப ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கறீங்க?

நிறையபேர் வீட்டு வாசல்ல கார் நிக்கறதும்... அத்தனை குடிமகன்களோட கைகள்ல செல்போன் இருக்கறதும் வளர்ச்சியா..? வீக்கத்துக்கும் வளர்ச்சிக்குமே வித்தியாசம் தெரியாத உங்களையெல்லாம் வெச்சுகிட்டு இந்த நாடு இன்னும் என்னென்ன பாடுபாடப் போகுதோ...

இப்பவே, ஏற்றுமதி குறைஞ்சு, இறக்குமதி எகிறி... 'கரன்ட் அக்கவுண்ட் டெபிசிட்' (வர்த்தகப் பற்றாக்குறை) வருது. இந்த நிலை நீடிச்சா... ஒட்டுமொத்தமா விவசாயம் அழிஞ்சு, 'கஞ்சிக்கே டெபிசிட்' வந்துடும்'னு பெரிய பெரிய படிப்பு படிச்சவங்கள்லாம் டி.வி. பொட்டியில வந்து வந்து கதறிட்டிருக்காங்க!

ஆகக்கூடி உங்க பொருளாதாரப் புடலங்காயெல்லாம் எந்தக் காலத்துலயும் வேகாதுங்கறதுதான் உண்மை. பேசாம பொட்டிய கட்டிக்கிட்டு வீட்டைப் பார்க்க கிளம்புங்க. இந்த நாடு இன்னும் நாசமா போற காலத்துல பிரதமரா நீங்க இல்லங்கற பேராவது மிஞ்சும்!
இப்படிக்கு,
கோவணாண்டி.

நன்றி: பசுமை விகடன், 25 ஜூலை 2013

செவ்வாய், ஜூலை 23, 2013

உணவு பாதுகாப்பு சட்டம்...1,000 ஓட்டைத் திட்டம்!

ஆளுக்கு 5 கிலோ அரிசி... அல்லது வேறு தானியம்... மலிவு விலையில் கிலோ 2 ரூபாய் அல்லது 3 ரூபாய்க்கு 65 சதவிகித இந்திய மக்களுக்கு தரவேண்டும் என்று அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். இந்த அதிசயத் திட்டத்துக்கு 'உணவு பாதுகாப்பு சட்டம்’ என்று பெயர் சூட்டி விழா எடுக்கிறது மத்திய அரசாங்கம்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு களுக்குப் பிறகும், 65 சதவிகித மக்கள் மாதம் 5 கிலோ உணவு பொருட்கள்கூட வாங்கமுடியாத  நிலையில் வைத்திருக்கிறோமே என்று வருத்தப்படுவதற்கு பதிலாக, வறுமையை, பசிப்பிணியை மூலதனமாக்கி, ஓட்டு வங்கியைப் பெருக்கி... மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காக அலைந்து திரிந்து அறிமுகம் செய்த திட்டம்தான் இந்த உணவு பாதுகாப்பு சட்டம். மொத்தமுள்ள 120 கோடி பேரில் சுமார் 80 கோடி பேர் சாப்பிடுவதற்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்றால், நாம் செய்திருப்பது கின்னஸ் சாதனைதான் போங்கள்...

பல்வேறு மாநில அரசுகள், இலவசமாக அரிசி வழங்கவே செய்கின்றன. அந்த இலவசத்திற்கு, இப்போது சட்ட அங்கீகாரம் தந்திருக்கிறது மத்திய அரசாங்கம். உணவு பாதுகாப்பு என்றால் என்ன?

தேவையான உணவு, தேவையானபோது, தேவையான அளவில், சிரமம் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். அதை வாங்கும் சக்தி மக்களுக்கு இயல்பாகவே இருக்கவேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு என்பது உலக அரங்கில் ஒப்பிட்டால் அதிகமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தோனேஷியாவில் ஒரு கிலோ அரிசி 2 டாலர். இந்தியாவில் அரை டாலருக்கும் ஒரு டாலருக்கும்தானே விற்கிறது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் முடங்கினால், எப்படி பொருளாதாரம் வளரும்? ஆக, எல்லாச் சூழலிலும், நிலைத்து நீடிக்க நிரந்தர உணவு உற்பத்திதானே, உணவு பாதுகாப்பாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்?

ஆனால், புரட்சிகரமான இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தில், உணவு உற்பத்தி பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. உற்பத்தியை உறுதி செய்யாமல் உணவு பாதுகாப்பு எப்படி சாத்தியம்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இந்த சட்டியில் ஆயிரம் ஓட்டை அல்லவா இருக்கிறது. சட்டி நிறைவது எப்போது, வயிறு நிறைவது எப்போது?

நமது நாட்டின் உணவுத் தேவையில் 70 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது சிறு விவசாயிகள்தான். ஆகவே, அரசு என்ன செய்யவேண்டும்? சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஊக்கம் தந்து,  மேலே சொன்ன நாடுகளைப்போல மானியம் தந்து உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியைக் கூட்டி வறுமையை ஒழிக்க இந்த சட்டத்தின் மூலம் வழி கண்டிருக்கவேண்டும். மாறாக, இந்த சட்டம் பிச்சைப் பாத்திரத்தை தூக்கி கையில் தந்துவிட்டு, வறுமையை விரட்டும் திட்டம் என்று கும்மாளம் போடுகிறது. அதேசமயம், நாள் ஒன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான சிறுகுறு விவசாயிகளை கிராமங்களைவிட்டு விரட்டி அடிக்கிறது.

மேலும், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், காடு கழனிகள் காங்கிரீட் காடுகளாகவும், மாறுகின்றன. நெல் நட்ட வயலில், கல்லு நட்டு காசு பண்ணுகின்றனர் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். அனைத்து கறுப்புப் பணமும் அங்குதான் பதுக்கப்படுகிறது. விளைநிலங்கள் விவசாயிகளைவிட்டு வேகமாக வெளியேறுகிறது. இது நல்லதுக்கு இல்லை. இதைத் தடுப்பது பற்றி இந்த சட்டத்தில் ஒன்றுமில்லை. ஆறுகள், மனித கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறிவிட்டன. திருப்பூர் சாயப்பட்டறை ரசாயனக் கழிவுகள், நொய்யல் வழியாக காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில்கூட விஷத்தைக் கக்குகிறது. அதேபோல் ஆம்பூர், வாணியம்பாடியில் உற்பத்தியாகும் விஷக்கழிவுகள் பாலாற்றை நாறடிக்கின்றன; நீரும் விஷமாகிவிட்டது. அளவுக்கு அதிகமான ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால், மண் புண்ணாகிக் கிடக்கிறது. நீரும் விஷம், நிலமும் விஷம்... அப்புறம் விளைவது மட்டும் எப்படி சொக்கத் தங்கமாக இருக்கும்?


இன்று உணவுக்கு செலவழிப்பதைவிட மருத்துவத்துக்குச் செலவழிப்பதே அதிகம். இந்தியாவில் 50 சதவிகித பெண்களுக்கு ரத்த சோகை, 47 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டசத்துக் குறைபாடு உள்ளது என்று ஐ.நா. எச்சரிக்கிறது. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், இது ஒரு தேசிய அவமானம் என்று சொல்லியதோடு நிறுத்திக்கொண்டார் பிரதமர் சிங். இந்த குறைபாடுகளை களைய ஒரு நடவடிக்கையும் எடுக்காதவர்கள், இன்று திடீரென ஞானோதயம் பிறந்துபோல ஆடுகிறார்கள்!  

விரைவில் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டம் கூடவிருக்கிறது. அங்கு விவாதத்திற்கு பிறகு இந்த சட்டம் கொண்டுவந்து இருக்கலாம். நிறைகுறைகள் சரி செய்யப்பட்டிருக்கும். சட்டம் முழுவடிவம் பெற்றிருக்கும். அதற்குள் ஏன் இந்த அவசரம்? கூடிய விரைவில் நடக்கப் போகும் தேர்தலில் வாக்கு வங்கி பெருக்க நினைக்கும் திட்டம்தான்.  

ஐந்து கிலோ அரிசியில் வறுமை நீங்கப்போவதும் இல்லை. வயிற்றுப் பசி ஆறப்போவதும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி இளைஞர்கள் திடகாத்திரமாக வளர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளிக்கொண்டு வரப்போவதும் இல்லை. வருடா வருடம் நான்கைந்து லட்சம் கோடி புரளுவதால், இன்னுமொரு உலகளாவிய ஊழலுக்கு வேண்டுமானால் இந்தச் சட்டம் உதவும்.

இப்போது கொள்முதல் செய்யப்படும், ஐந்தாறு கோடி டன் உணவு தானியங்களையே, ஒழுங்காக பாதுகாக்க அரசினால் முடியவில்லை. மழையில் நனைந்து, புழுத்து, முளைத்து, எலி பாதி... பெருச்சாளி பாதி என விரயமாகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்து முடித்த மாதிரி தெரியவில்லை. 'எலி தின்கிற தானியங்களை ஏழைகளுக்காவது இலவசமாக கொடுங்கள். பாவம் மக்கள் பசியாறட்டும்’ என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், பிரதமர் சிங்கோ, இலவசம், மானியம் இரண்டும்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் இரண்டு முக்கிய காரணிகள் என்று சொல்லி, விவசாயிகள் பயன்படுத்தி வந்த உர மானியத்தை எடுத்தார். பூசல் மானியத்தைத் தூக்கினார். வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் மானியத்தைத் தடுத்தார்.

ஆனாலும் என்ன ஆனது? ஏற்றுமதி இறங்கி வருகிறது. இறக்குமதி எகிறி வருகிறது. வர்த்தகப் பற்றாக்குறை விரிந்துகொண்டே போகிறது. இந்த இக்கட்டான நிலையில்  1.25 லட்சம் கோடி மானியம் என்பது சாத்தியமா? இதுவும் பொய் கணக்குதான். 3 லட்சம் கோடி தேவை. ஆளுக்கு 5 கிலோ. 80 கோடி மக்களுக்கு 4 கோடி டன் ஒரு மாதத்திற்கு, ஆக வருஷத்திற்கு 48 கோடி டன். சற்று ஏறக்குறைய 50 கோடி டன் கொள்முதல் செய்யவேண்டும். உணவு தானியங்கள் வாங்கி,  விநியோகம் செய்ய 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். நாடு இன்று இருக்கும் நிலையில் இது நடக்கிற காரியமா...?

ஆக, உற்பத்திக்கும் வழி வகுக்காமல், செலவுக்கும் வழி தெரியாமல், வாக்குச்சீட்டு ஒன்றை மனதில்கொண்டு போடப்பட்ட இந்தச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டமல்ல, உணவு உற்பத்தி ஒழிப்புத் திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

-பசுமை நம்பி

நன்றி: நாணயம் விகடன்,  28-07-2013

திங்கள், ஜூலை 01, 2013

பட்டினியால் இறந்த 'பல்லுயிர்ப் பெருக்கத்தின் தந்தை’ - விதை வரலாற்றின் கண்ணீர்ப் பக்கங்கள்...

விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை... ஆம். விதைகள் சாகாவரம் பெற்றவை. ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்தப் பகுதியின் தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்ப ஆயிரமாயிரம் விதைகளை அள்ளிக் கொடுத்துள்ளது, இயற்கை. காயாக, கனியாக, பருப்பாக, பூவில் இருந்து தேனாக என, பூமியில் உள்ள உயிர்களுக்கு உயிர் வாழத் தேவையான உணவை உற்பத்தி செய்து தருகின்றன, விதைகள். அந்த விதைகளைப் பன்னெடுங்காலமாக பாதுகாத்து போற்றி தலைமுறை தலைமுறையாகப் பரப்பிக் கொண்டு இருப்பவை பறவைகளும், விலங்குகளும் மட்டுமல்ல... சில மகத்தான மனிதர்களும் கூட. பலர், அத்தகையச் சிறப்பானப் பணிகளை பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் தவமாக செய்திருக்கிறார்கள். அவர்களை நினைவுகூர்வது, நம் கையிலுள்ள விதைகளுக்குச் சொல்லும் நன்றிக்கு ஒப்பானது.

அது... உலகில் அறிவியல் விழிப்பு உணர்வு ஆரம்பித்த காலம். கண்ணில் காணும் ஒவ்வொன்றைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த காலம். அந்தக் காலகட்டத்தில் விதைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார், 'பல்லுயிர்ப் பெருக்கத்தின் தந்தை’ என அழைக்கப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி நிகோலாய் இவனோவிச் வாவிலோ. ஒவ்வொரு பயிருக்குமான மூல விதைகளைத் தேடி உலகம் முழுக்கப் பயணித்தார். அதன் மூலமாக தாவரவியலில் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்தார். என்றாலும், இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை, உணவுப் பயிர்களின் தோற்ற மையங்கள்.

நெல்லின் தாயகம் இந்தியா மற்றும் சீனா; கோதுமையின் தாயகம் மெசபடோமியா; வேர்க்கடலையின் தாயகம் பிரேசில்; மக்காச்சோளத்தின் தாயகம் ஆப்பிரிக்கா... எனவும் ஒவ்வொரு பயிரின் தாயகத்தையும் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தவர்... இந்த இவனோவிச் வாவிலோ. அத்தோடு நில்லாமல், பல பயிர்களின் 'காட்டு விதை’ எனப்படும் மூல விதைகள், நாட்டு ரக விதைகளைத் தேடித் தேடி சேகரித்துப் பாதுகாத்தார். 

இவரை கௌரவிக்கும் விதமாக 1929-ம் ஆண்டு, வேளாண் விஞ்ஞான அகாடமி என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் முதல் தலைவராக வாவிலோவை அமர வைத்து அழகு பார்த்தார், அப்போதைய ரஷ்ய அதிபர் லெனின். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமான விஞ்ஞானிகள் இவரிடம் மாணவர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் அதிபராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 'டார்வினை விமர்ச்சித்தார், தேச விரோத சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்தார்’ எனப் பல காரணங்களைச் சொல்லி, வாவிலோவை சைபீரிய சிறையில் அடைத்தார். உலகம் முழுக்க விதைகளைத் தேடித் தேடிப் பறந்த அந்தப் பறவை, சிறைப்பறவையாக மாற்றப்பட... 1943-ம் ஆண்டு, தனது 56-ம் வயதில் பயணத்தை முடித்துக் கொண்டது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் விதைகள், கிழங்குகள், பழங்கள் என சேகரித்து வருங்கால மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்திய வாவிலோ, உண்ண உணவு இன்றி இறந்தது, சரித்திர சோகம்.
வாவிலோவின் விதை வங்கி, ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரின் ஜெர்மானியப் படை சோவியத் ரஷ்யாவின் மீது படையெடுத்து, பீட்டர்ஸ்பர்க் நகரை முற்றுகையிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உணவு இன்றி செத்து விழுந்தனர். அதேநேரம் வாவிலோவின் விதை வங்கியில், அவரது உதவியாளர்கள் 12 பேர் உள்ளேயே முடங்கி கிடந்தனர்.

அவர்களுக்குத் தேவைக்கும் அதிகமான உணவு, விதைகளாக அங்கு நிரம்பி இருந்தன. ஆனால், ஒருவர் கூட அந்த விதைகளைத் தொடாமல், பாதுகாத்ததோடு, உணவின்றி பட்டினியால் இறந்தும் போயினர். விதைகள் அடுத்தத் தலைமுறைக்கான உயிர் ஆதாரம் என்பதால், அதை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை நீத்த 12 விஞ்ஞானிகளின் தியாகம், விதைகள் வரலாற்றின் கண்ணீர்ப் பக்கங்கள்.

அவர்களுக்கு வீர வணக்கம் செய்வோம்..!


 தாரை வார்க்கப்பட்ட விதைகள்..!

இந்தியாவில் விதைகள் பற்றிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர் மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா. பல ஆண்டு கால கடின உழைப்பால் சேகரித்த இந்தியப் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்துக்குத் தாரை வார்த்து தருமாறு அப்போதைய இந்திய அரசு ரிச்சார்யாவுக்கு ஆணை பிறப்பித்தது. அப்போது, கிட்டத்தட்ட 20 ஆயிரம் நெல் வகைகள் இருப்பில் இருந்தன. நம் நாட்டின் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய விதைகளை, பன்னாட்டு நிறுவனத்துக்கு தர மறுத்தார், ரிச்சார்யா.

ஆராய்ச்சியாளர்கள், உணவு அமைச்சர் உள்ளிட்ட பலர் ரிச்சார்யாவிடம் விதைகளைக் கொடுத்து விடுமாறு மன்றாடினார்கள். ஆனால், 'நமது ரகங்கள்... வைரஸ் தாக்குதல் இல்லாதவை. ஆனால், இதை மேம்படுத்தித் தருகிறோம் என்ற பெயரில் நீங்கள் கொடுக்கப் போவது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் விதைகள். அதை நான் அனுமதிக்க முடியாது’ என தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். உடனடியாக, அவரை இயக்குநர் பொறுப்பில் இருந்து தூக்கியது, இந்திய அரசு. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார், ரிச்சார்யா. 'நாங்கள் ரிச்சார்யாவை ஒரு அறிவியலாளராகவே மதிக்கவில்லை’ என நீதிமன்றத்தில் தெரிவித்தது, 

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம். அரசுப் பணியில் இருந்து விடுபடுபவர்களுக்கு கிடைக்கும் நியாயமான உரிமைகள்கூட, கிடைக்காமல், தனது ஓய்வுகாலத்தை வறுமையோடு கழித்தார் ரிச்சார்யா.

அவர் பாடுபட்டு சேகரித்த அத்தனை மூல விதைகளும் இந்திராகாந்தி கிரிஷி விக்யான் வித்யாலயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் மூலமாக இங்கிருந்த 22 ஆயிரத்து 972 ரகங்கள் பன்னாட்டு நிறுவனமான ஸிண்ஜெண்டாவிடம் போய் சேர்ந்து விட்டது. ரிச்சார்யா அமர்ந்திருந்த இயக்குநர் பதவியில், அவருக்குப் பின்பு அமர்த்தப்பட்டவர்தான் 'பசுமைப் புரட்சி புகழ்’ எம்.எஸ். சுவாமிநாதன்.

-ஆர். குமரேசன் 

நன்றி: பசுமை விகடன், 10-07-2013