
ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012
மிக்க நலமுடைய மரங்கள் - சு.தியடோர் பாஸ்கரன்

ஞாயிறு, ஜனவரி 01, 2012
கூடங்குளம் திட்டம் - உருவான கதை

உடனே ஆத்திரம் அடைந்த இந்திரா காந்தி ரஷ்யாவின் உதவியை நாடினார். ரஷ்ய அரசு அணு நீர்மூழ்கிக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க சம்மதித்தது. ஆனால் அத்துடன் ஒரு நிபந்தனையையும் வைத்தது. இந்தியா ரஷ்யாவிடம் 8 அணுஉலைகளை வாங்க வேண்டும் என்பதுதான் அது. சம்மதித்த இந்திரா காந்தி அதனைத் தொடர்ந்த 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ராஜீவ் காந்தி அணு உலைக்கான ஒப்பந்தங்களில் நவம்பர் 20,1988 அன்று கையெழுத்திட்டார். 26 ஏப்ரல் 1986 அன்று செர்நோபிலில் வெடித்த அதே வகை அணு உலைகளைப் பெயர் மட்டும் மாற்றி ரஷ்யா விற்றபோதும் எந்த தயக்கமும் காட்டாமல் இந்தியா இந்த ஒப்பந்தத்தை முன் நகர்த்தியது.
முதலில் கேரளாவில் அமைப்பது என்று முடிவு செய்தது அரசு. ஆனால் அங்கு எல்லா கட்சிகளும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாக அந்த மாநிலத்தில் இருந்து அதனைத் தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள கூடங்குளத்திற்கு இடம் மாற்றினார்கள். இந்த அணு உலையைக் கட்டுவதற்கான இடம் தேர்வு முதலே அங்கு பிரசினைகள் தொடங்கின.
ரஷ்ய பொறியியல் நிபுணர்கள் குறித்து வைத்திருந்த இடத்தை இந்தியர்கள் மாற்றி அமைத்தார்கள். இந்தப் பத்தாண்டுகளில் தொடர்ந்து இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் மத்தியில் உடன்பாடுகள் ஏற்படாது தொடர்ந்து கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்தன. ஜூன் 2011ல் அதன் தலைமை வடிவமைப்பாளரான செர்கி ஃரைசோவும், அவருடன் முக்கிய பொறியாளர்கள் மூவரும் ரஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் இருந்த காலத்திலேயே இங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்படாமல் பல ஆண்டுகள் உலையை திறக்கப் போகிறோம் என்று தொடர்ந்து சுப முகூர்த்த தேதி குறிப்பதே வேலையாக அலைந்தார்கள் அதிகாரிகள்.
கூடங்குளத்தில் அமையவிருக்கும் வி.வி.இ.ஆர். ரஷ்ய உலைகளில் ஏராளமான பிரசினைகள் உள்ளன. அதன் கண்ட்ரோல் ராடு, அவசரகால மின்சார சேமிப்பு, பாதுகாப்பு அமைப்புகள் என அவை நீண்டு செல்கிறது. பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் “கண்ட்ரோல் ராடு” இயங்குமுறையில் பிரசினைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அணுஉலையில் நிகழும் அணுப்பிளவை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த இந்த “கண்ட்ரோல் ராடு”களின் உதவியோடுதான் யுரேனிய கம்பிகளைப் பிரித்து வைக்க வேண்டும். 2006, மார்ச் 1ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சுழற்சி பம்புகள் வேலை செய்யவில்லை. இதனால் “கண்ட்ரோல் ராடு” இயங்காததால் பெரும் விபத்து ஏற்பட்டது.
சமீபத்தில் ஃபுகிஷிமா விபத்து நடந்தவுடன் ரஷ்யாவில் உள்ள அணுஉலைகளின் நிலையை ஆராய ஒரு குழு அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அந்தக் குழு ஃபுகுஷிமா அளவு விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் தன்மை எந்த ரஷ்ய அணு உலைக்கும் இல்லை என்றது. இது தவிர்த்து ரஷ்ய அணுஉலைகளில் உள்ள மிக ஆபத்தான 31 பிரச்சினைகளைப் பற்றியும் அது பட்டியலிட்டுள்ளது.
இது தவிர்த்து கூடங்குளம் அணுஉலைக்கு ஈஐஏ அங்கீகாரம் கிடையாது. அணுசக்தித்துறையின் விதிமுறைகளின்படி முறையாக மக்கள் கருத்து கேட்பு நடத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படவில்லை. இவை சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நிர்வாகம் முன்னுக்குப்பின் முரணான பதில்களையே கூறுகிறது. பின்விளைவுகள் பற்றிய தொலைநோக்கு ஆய்வுகளின்படி
தொழில்நுட்ப முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டாக்டர் ரமேஷ் அவர்கள் 2002ல் வெளியிட்ட ஆய்வு பல கேள்விகளை எழுப்பியது. கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடம் எரிமலைக்குழம்புகளால் உருவானவை. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நிலவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி மற்றும் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ராம் சர்மா ஆகியோர் மேற்கூறிய எரிமலைக் குழம்புகள் பற்றி ஏராளமான தகவல்களைத் தங்களின் ஆய்வுகளில் உறுதிப் படுத்தியுள்ளனர். 2004 நவம்பரில் வெளிவந்த கரண்ட் சயின்ஸ் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. பொதுவாக, நிலப்பகுதிகளின் நீண்ட ஆய்வுக்குப் பின்தான் அணுஉலையின் கட்டுமானங்கள் சார்ந்த வடிவங்கள் தயாரிக்கப்படும். இந்த உருகிய பாறைப் பிதுங்கல்கள் நேரடியாக அணுஉலையின் ஸ்திரத்தன்மையை குலைத்திடலாம். ஒரு பெரும் இயற்கைச் சீற்றத்தில் அவை மேலெழுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வி.வி.இ.ஆர். 1000 அணுஉலைகள் இதுவரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை. ரஷ்யப் பொறியாளர்களுக்கு இதில் அனுபவமும் இல்லை. அதைவிட வி.வி.இ.ஆர். 1000 அணு உலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல் முறையாகக் கடல்நீரைப் பரிசோதிக்கவிருக்கிறது. கூடங்குளம் அணு உலையா? இல்லை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பட்டணந்திட்டா, கொல்லம் மாவட்டத்தின் மக்கள் பரிசோதனைக்கூட எலிகளா?
இன்றளவும் உலையிலிருந்து 1.6 கி.மீ. பகுதிக்குள் 35,000 மக்கள் வசிக்கிறார்கள். 5 கி.மீ. பகுதிக்குள் ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். எந்த வித பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படாமலேயே உலையில் டம்மி எரிபொருள் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி சோதனை ஓட்டம் நடந்த அன்று அங்கிருந்து பெரும் ஓசை வெளிப்பட்டுள்ளது. மக்களால் உறங்க முடியவில்லை.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கும்கூட அந்த ஓசை சில மைல் தொலைவில் கேட்டுள்ளது. எந்தவித பாதுகாப்பு ஒத்திகைகளும் பார்க்கப்படாத நிலையில் ஏன் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டது?
சனி, நவம்பர் 26, 2011
கன்னங்கருத்த அன்னம் - தியடோர் பாஸ்கரன்
பறவைகளைப்பற்றிப் பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி அன்னத்தைப் பற்றியது. தமிழ்நாட்டில் இப்பறவை இருந்ததா? அடுத்த கேள்வி அன்னம் நீரையும் பாலையும் பிரிக்கும் திறன் கொண்டதாமே? தண்ணீரைப் பாலிலிருந்து பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள், இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே. இரண்டு, மூன்று முறை குஜராத்தின் கட்ச் பகுதிக்கு இப்பறவை வந்தது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அன்னம் என்றறியப்படும் Swan இந்தியாவிலே இருந்ததில்லை. ஆனால் ஐரோப்பிய ஓவிய மரபின் தாக்கம் கொண்ட ராஜா ரவிவர்மா தீட்டிய அன்னம் விடு தூது ஓவியத்தில் தமயந்தியுடன் ஓர் Swanஐத்தான் சித்தரித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டில் இந்தப் பறவை இருந்ததில்லை. பின் அன்னம் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படுவது எந்தப் பறவை? அன்னநடை என்ற சொற்றொடர் எவ்வாறு புழக்கத்தில் வந்தது? பட்டைத்தலை வாத்துதான் (Barred headed goose) அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் அனுமானம். கூந்தங்குளம் போன்ற பறவை சரணாலயங்களுக்கு குளிர்காலங்களில் திரள்திரளாக வந்து தங்கும் இப்பறவை தென்னிந்தியாவில் காணப்படும் வாத்து இனங்களிலேயே பெரியது. பட்டைத்தலை வாத்து உயிரியல் ரீதியாக ஸ்வான் குடும்பத்தைச் சேர்ந்தது.
திருச்சிக்கு அருகிலுள்ள தேவராயன் ஏரியிலும் நான் இந்த வாத்தைப் பார்த்திருக்கின்றேன். நீர்நிலைகளில் சுதந்திரமாய் வாழும் உண்மையான அன்னத்தை, ஸ்வானை, நான் முதலில் பார்த்தது ஹாலந்தில். எந்தவிதமான ஒலியையும் எழுப்பாத இந்தப் பறவைக்கு Mute Swan என்று பெயர். இது முழுவதும் பால் போன்ற வெண்மை நிறம். அதே போல் முழுவதும் கருமை நிறம் கொண்ட ஸ்வான் இனம் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழ்கின்றது. அந்நாடு ஒரு தீவாக இருப்பதால் அங்கு கங்காரு, பிளாடிபஸ் போன்ற வேறெங்கும் காண முடியாத உயிரினங்கள் உருவாகியுள்ளன. அதுபோன்ற தீவில் தனிமையில் உருவான ஒரு பறவைதான் இந்த வான்கோழி பெரிய கறுப்பு அன்னம்.

அண்மையில் சிட்னி நகருக்கு 200 கி. மீ. தூரத்தில் ஒரு காட்டுயிர் சரணாலயத்திற்குப் பறவைகளை அவதானிக்கப் போய் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். காலையில் சாப்பாடு பொட்டலம், குடிநீர் பாட்டில் இவைகளுடன் கடலோரமாக நடக்க ஆரம்பித்து, மூன்று கி.மீ. கடந்து ஒரு ஏரிக்கரையை அடைந்தோம். ஒருபுறம் பசிபிக் சமுத்திரம். மறுபுறம் ஒரு ஏரி. நடுவே ஒரு மணற்திட்டு. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், பனி உருகியபோது, கடல் நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிலத்தினுள் புகுந்து இந்த நீர்நிலை உருவானது என்று அறிவிப்பு பலகை கூறியது. இந்த ஏரியின் பெயர் உல்லபுல்லா என்றும் அது ஒரு பறவை சரணாலயம் என்றும் இந்த அறிவிப்பு தெரிவித்தது. இந்தப் பெயர் ஆஸ்திரேலியப் பழங்குடியினரான அபாரிஜினி மொழியில் ஒரு சொல். அவர்களுக்கு இந்த நீர்நிலை ஒரு புனித இடமாக இருந்திருக்கின்றது.
அந்த ஏரியில் ஒரு கண்கொள்ளாக் காட்சி. பரந்த அந்த நீர்ப்பரப்பில் முழுவதுமாக ஆயிரக்கணக்கான... ஆமாம்... ஆயிரக்கணக்கான கறுப்பு அன்னங்கள் இருந்தன. சில நீந்திக்கொண்டிருந்தன. சில கரையில் இருந்தன. இதற்கு முன் இம்மாதிரி மிகப் பெரிய பறவைக் கூட்டத்தை நான் ஒரு முறைதான் கண்டிருக்கின்றேன். கென்யா நாட்டிலுள்ள நக்கூரா ஏரியில் பூநாரைகள் கூட்டத்தைப் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளம்சிவப்பு வண்ணம்தான் தெரிந்தது.
அத்தனை பறவைகள் இருந்தும் அமைதியான சூழ்நிலை. அவ்வப்போது உஸ். . . உஸ். . . என்று அன்னம் எழுப்பும் ஒலி மட்டும் கேட்டது. பைனாகுலரில் பார்த்தபோது சில அன்னங்கள் குஞ்சுகளுடன் இருப்பது தெரிந்தது. கறுப்பு அன்னத்தின் குஞ்சுகள் பொரிக்கும்போது வெண்மையாக இருக்கும். வளர வளரத்தான் கறுப்பாக மாறும். பெரிதான பின்கூட, இறக்கையில் ஒரு வெண்மை பகுதி இருக்கும். ஆனால் பறக்கும்போது மட்டுமே இப்பகுதி தெரியும். அலகு பவளச்சிவப்பு. நீண்ட கழுத்தை S வடிவில் வளைத்து வைத்துக்கொண்டு இந்தப் பறவை, எந்த முயற்சியுமின்றி மிதப்பது போன்று நீந்திச் செல்வது ஒரு எழிலார்ந்த காட்சி. பறக்கும்போது மட்டும் கொம்பூதுவது போல் ஒற்றை ஒலியை எழுப்பும்.
உவர்ப்பு நீர் கொண்ட இந்த ஏரியில் நீருக்கடியில் வளரும் சிலவகை தாவரங்கள் செழித்து மிகுந்துள்ளன. இந்தச் செடிகளால் ஈர்க்கப்பட்டுத்தான், செடிகளை மட்டுமே உண்ணும் கறுப்பு அன்னங்கள் இங்கே வருகின்றன. தன் நீண்ட கழுத்தை நீருக்குள் விட்டு இரை தேடும். ஒரு முறை 12000 அன்னங்கள் இங்கே கூடியிருந்ததைக் கண்டதாகப் பறவை ஆர்வலர் குழு ஒன்று பதிவு செய்துள்ளது. உப்பு நீரில் மட்டுமே பல்கிப் பெருகும் சிற்றுயிர்களை இரையாகக் கொள்ளும் புள்ளினங்களும் இந்த நீர்நிலையைத் தேடி வருகின்றன. இந்தியாவில் காணக்கூடிய நாமக்கோழி, கோட்டுள்ளான், உப்புக்கொத்தி போன்ற பட்சிகளை இங்கே பார்க்க முடிந்தது.
உல்லபுல்லா ஏரிக்கருகில் ஒரு கோல்ஃப் திடலை அமைக்க இன்று முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிச் செய்தால், புல்லுக்குப் போடும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து இவை ஏரிக்குள் வந்து அங்கு வளரும் தாவரங்களையும், சிற்றுயிர்களையும் அழித்து விடும் என்று அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. எங்கு சென்றாலும் இந்தப் பிரச்சினைதான். காட்டுயிர் வாழிடங்களில் அதிகம் அழிக்கப்படுவது, எளிதாக சீரழிக்கப்படுவது நீர்நிலைகள்தாம். ஆஸ்திரேலியாவில் இம்மாதிரியான இயக்கங்களை ஆதரிக்கும் Green party ஐச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கே மக்களின் ஆதரவை உல்லபுல்லா பறவைகளுக்காகத் திரட்டிக்கொண்டிருக்கின்றார்.

கறுப்பு அன்னங்கள் ஆயுள் முழுவதும் ஒரே ஜோடியுடன் இணை சேர்கின்றன. அது மட்டுமல்ல, கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளை இரு பறவைகளுமே செய்கின்றன. வட இந்தியாவில் வயல்களில் வாழும் நம் நாட்டு சாரஸ் கொக்கும் (கிரௌஞ்ச பறவை) உயிருள்ள வரை ஒரே துணையுடன் வாழும்.
பாலியல் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலையற்ற பறவை உலகில் இது வெகு அரிதான நடத்தை. பெருவாரியான புள்ளினம் இணை சேர்ந்தபின் தன் வழியே போய்விடும். பெட்டை பறவைதான் அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.
வேறு சில பறவைகள் இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தன் ஜதையுடனிருக்கும். கூடு கட்டுவது, குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போன்ற வேலைகளை ஆணும், பெட்டையும் செய்யும். தூக்கணாங்குருவி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போனபின், இவ்விரு பறவைகளும் தத்தம் வழியே போய்விடும். அடுத்த இனப்பெருக்க காலத்தில் வேறு துணையைத் தேடி இணையும். வேடந்தாங்கலில் கூடுகட்டும் அன்றில் பறவை வாழ்நாள் முழுதும் ஒரு துணையுடனிருக்கும். "அன்றில் சிறு பறவை ஆண்பிரிய வாழாது. ஞாயிறு தான் வெம்மை செயில் நாண் மலர்க்கு வாழ்வுளதோ" என்று பாரதி எழுதி வைத்தார்.
கறுப்பு அன்னங்கள் உலகின் பல நாடுகளில் வீடுகளிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன. நான் இந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தது ஷில்லாங் நகரில். நகரின் நடுவேயுள்ள ஏரியில் இரு கறுப்பு அன்னங்கள் விடப்பட்டு இருந்தன. இறக்கை, இறகுகள் சிலவற்றைக் கத்தரித்து விட்டால் அவைகளால் பறக்க முடியாது. நீந்தவும், கரையில் நன்றாக நடக்கவும் முடியும். இந்த இரு பறவைகளும் இனப்பெருக்கம் செய்ய தீர்மானித்து ஏரிக்கரையருகே கூடு அமைக்க ஆரம்பித்தபோது அன்று மேகாலயா சீப் செக்ரட்டரியாக இருந்த ருஸ்தம்ஜி -தீவிர பறவை ஆர்வலர்- இதைக் கவனித்து விட்டார். இந்த அன்னத் தம்பதிக்கு 24 மணி போலீஸ் காவல் போட்டார். தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது ஏரியில் நின்று இந்தப் பறவைகளைக் கவனித்து விட்டுத்தான் போவார். சில வாரங்களில் நான்கு குஞ்சுகளுடன் இந்த இரு பறவைகளும் ஏரியில் வலம் வர ஆரம்பித்தபோது, இந்த அன்னக் குடும்பத்தைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் வர ஆரம்பித்தனர்.
நன்றி : உயிர்மை
வியாழன், செப்டம்பர் 22, 2011
தொல்லை தராதீர் .......குளவிகள் கூடுகட்டுகின்றன!

லாரி பேக்கர் தனது பசுமை இல்லக் கனவினையும், அதற்கான எளிமையான தொழில் நுட்பத்தையும் குளவிகள் மூலம்தான் கண்டறிந்தாராம். இவற்றை, "இயற்கை படைத்த சிறந்த கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்" என பாராட்டும் இவரது வீடுகள் அனைத்தும் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டப்படுகின்றன. கம்பிக்குப் பதிலாக மூங்கிலோ அல்லது தென்னை கட்டைகளோ கிடைத்தால் அதுவே போதுமானதாகும். அதுபோல செம்மண் கலவை அதிகம் உபயோகிக்கப்படுகிறது. சுடப்படாத செங்கல்லே போதுமானது. இவ்வாறான கட்டுமான அமைப்பு, பல மாடிக் கட்டிடங்களாகவும், இயற்கை பேரிடர்களால் தாக்கப்படாததாக, தற்போது கட்டப்படும் கட்டுமான செலவில் 30 சதவீதம் குறைவாக உள்ளதால் கேரள மாநிலம் இவரின் தனித்திறமையைப் புரிந்து ஏழைகளுக்கான வீடுகட்டும் திட்டத்தை ஒப்படைத்தது. மிகக் குறைந்த செலவில் அதி நவீன இல்லங்களை, குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு மாசும் ஏற்படாத வகையில் கட்டித்தந்துள்ளார். இவரின் அரைமுட்டை வடிவ இல்லக் கூரை, குளவிக் கூடுகள் மூலம் கற்றுக் கொண்டதன் விளைவு என அடிக்கடி கூறுவதுண்டு.
குளவிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வகையினங்கள் உண்டு. இவை தேனி என்றும் கூறமுடியாமல் எறும்பு என்றும் வகைப்படுத்தப்படாமல் இரண்டிற்கும் இடையினலான அமைப்பாகத் திகழ்கிறது. இவ்வினத்தை "அபோ கிரைட்டா" என அறிவியல் கூறுகிறது. இவற்றின் உடல் மூன்றமைப்பு கொண்டது. தலை, நடுஉடல், பின்பகுதி. சில வகை கூட்டமாகவும், சில வகை தனிமையிலும் வாழ்கின்றன. கூட்டமாக வாழ்பவை, ராணி குளவியின் தலைமையில் இயங்குகின்றன. தேனீ, எறும்பினங்கள் போல், குளவி வகுப்பிலும் பெண்ணே சகல சக்தி படைத்தவையாக இருக்கிறது. ஒரு கூட்டத்தில் 10,000க்கும் மேல் இருக்கும். இங்கு ஆண் விந்தணுவைப் பாய்ச்சுவதற்கும், பெண்ணிற்குத் தேவைப்படும்போது உடலுறவு சுகத்தை தருவதற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர, எதிரிகள் வருவதை அடையாளம் கண்டு தெரிவிப்பது ,இதன் பிரத்யேகப் பணியாகும். வேலைக்காரக் குளவிகள் அனைத்தும் பெண்ணாக உள்ளது. ராணிக் குளவி சற்று பெரிதாக இருக்கும். அவை கட்டும் கூட்டில் ராணிக்கென்று தனி அறை உண்டு. ராணியின் முக்கிய வேலை, கூடு கட்டும் இடத்தை தேர்வு செய்து, கட்டுமானப் பிரிவுகளை வகுப்பது, இனப்பெருக்கம் செய்வது. தனியாக வாழும் வகுப்பினங்கள், தேவைப்படும்போது தங்கள் இன நபருடன் இணைந்து செயல்படும். சரியான நபர் கிடைக்காதபோது, பிற வகுப்புக் குளவிகளோடு இணையும். இதற்கு இரு சாராரிடம் இருந்தும் பெருமளவு எதிர்ப்புகள் வருவதில்லை.
இதன் தலைபாகத்தில் இரு ஜோடி கண்கள் உணர்வுக் கொம்புகள், வாய் காணப்படுகிறது. கிட்டத்தட்ட கூட்டுக்கண்கள் ஒத்த அமைப்பு .தவிர முன் தலை பகுதியில், முக்கோண அமைப்பிலான நிறைய கண்களும் சில இனங்களுக்கு உண்டு. இதை "ஒசிலி" என அழைக்கிறார்கள். இதன் உணர்வுக் கொம்புகள் 12---15 கட்டுகள் கொண்டதாக இருக்கும். கொம்புகள் மூலமே உணவின் தன்மை, கூடுகட்டும் போது தேவைப்படும் பொருட்களின் தன்மைகளைத் தொடுதல் உணர்ச்சி மூலம் கண்டறிகிறது. நடுப்பகுதியில் மூன்று ஜோடிக் கால்களும், இரண்டு ஜோடி இறகுகளும் இருக்கும். தேனிக்களைப் போல, இவைகளும், இறகுகளை விசிறிக் கொள்வதன் மூலம் சக தோழர்களுக்கு சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. பொதுவாக அவைகள் வேதி திரவத்தை வெளிப்படுத்துவதன் மூலமே சமிக்ஞைகளை தெரியப்படுத்தும். பின் பகுதியில் மலப்புழையும், கொடுக்கும் உள்ளது. இங்கு விஷத்தை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இதன் கொடுக்கானது உள்ளுணர்வின் கட்டளைக்கு அடிபணிந்தே செயல்படுகிறது. மலப்புழையின் மூலமே உடலுறவு கொள்ளும். இந்நிகழ்வு பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடக்கிறது. இவைகளுக்கு இரவில் கண்தெரியாது. இதனால் தன் நடமாட்டங்கள் அனைத்தையும் வெயிலுடன் கூடிய பகல் வேளையிலேயே செய்கின்றன. இவை பெருமளவு மனிதர்களாலும், பிற பறவையினங்களாலும் தாக்குதலுக்கு ஆளாவதும் இவ்வேளையில்தான்.

இதன் இல்லற வாழ்வு சுவாரசியமானது. பல கட்டங்களைக் கொண்டது. ராணிக் குளவி தான் காமமுற்றிருக்கும் போதெல்லாம் ஆணை அழைத்து உறவு கொள்ளும். பருவ காலங்களில் தன் கருப்பையில் முட்டை உருவாகி விட்டால், வலுவான ஆணுடன் உறவு கொண்டு, அதன் விந்தணுவை ,தன் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள பை போன்ற பிரத்யேக அமைப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளும். கருமுட்டை சீராக உருவான பின் விந்தணுவோடு கலப்புறச் செய்து , குஞ்சு பொரித்தலுக்கு உண்டான ஏற்ற பக்குவத்தோடு, வெளியேற்றும். குளவிகள் முட்டைச் சார்பு கொண்டவை. அதாவது, பிற உயிரினங்களின் உடலில் தங்களது முட்டையை செலுத்தி பொரித்தலுக்கு ஏதுவாக்கும். இதன் காரணமாகவே இவை புழுக்களை அதிகம் வேட்டையாடுகின்றன. பாயர் கம்பெனியில் வேலை பார்த்து வெளியேறிய அண்ணன் வெங்கட் ராமன் குளவிகளை "விவசாயிகளின் நெருங்கிய ,நம்பகத் தோழன்" என்றழைப்பார். தங்கள் கம்பெனி பூச்சி மருந்துகளே இவைகளை அழித்து வருவதாக அடிக்கடி கூறுவார். புழுக்கள் கிடைக்காத போது மண்ணிற்குள் புதைந்து வாழும் "நில சிலந்திகளை" இவை வேட்டையாடும்.
குளவிகள் பிராந்தியம் சார்ந்து வாழ்பவை என்பதால், அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தங்களது கூட்டை அமைத்துக் கொள்ளும். தேனிக்களைப் போல் இவைகளுக்கு மெழுகு சுரக்கும் சுரப்பிகள் கிடையாது. எனவே மண், மரப்பிசின், சுண்ணாம்புக் கலவை போன்றவை கொண்டே அழகான கூட்டை அமைத்துக் கொள்கின்றன.அப்பொருட்களை உருண்டையாக்கி, கவ்விக் கொணர்ந்து வாயினாலும், முன்னங்கால்களாலும், அமைக்கும் அழகையும், அப்போது அவை வெளியிடும் ரீங்கார ஒலியையும் ரசிப்பதற்கு தனி
உணர்வு வேண்டும். பாதி கூட்டைக் கட்டி முடித்த பின், தான் கொணர்ந்த புழுவையோ, சிலந்தியையோ உட்செலுத்தும். கொட்டுப்பட்டதால் ஏற்கெனவே மயக்க நிலையில் உள்ள இவை, எதிர்ப்பேதும் தெரிவிக்க முடியாத நிலையில், அதன் உடலில் கொடுக்கின் உதவி கொண்டு ஓரிரு திடகாத்திரமான முட்டைகளை உட்செலுத்தும். பின் மீதமுள்ள கூட்டையும், அதன் வாயிலையும் அடைத்து விடும். இரையின் உடலில் உள்ள முட்டை, பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து வெளியேறும் வரை அவை உயிரோடு இருக்கும். உடலைக் கிழித்து வெளியேறும் குளவிக் குஞ்சுகளுக்கு, புழுவின் உடலே துவக்க இரையாகும். முட்டை பொரிந்ததை உணர்ந்த தாய்க் குளவி, கூட்டின் வாயிலை உடைத்து,தன் வாரிசை அழைத்துக் கொண்டு தன் கூட்டை அடையும். பின் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு , வேலைக்காரப் பெண் குளவிகளிடம் ஒப்படைக்கப்படும். அவை இதற்கு தேன், இனிப்பு கலந்த பழச்சாறு போன்றவைகளை உணவாக ஊட்டுகின்றன. இவை பெரும்பாலும் இவ்வகை உணவுகளையே உட்கொண்டாலும், அவ்வப்போது, சிறிய ஈ, கொசு, வண்டுகளையும் உணவாக்கிக் கொள்ள தயங்குவதில்லை.
வேலைக்காரக் குளவிகள் வளர்த்த, திடகாத்திரமான பெண் குளவி, பிற்காலத்தில் ராணிக்குளவியாகும் சந்தர்ப்பம் ஏற்படின், தலைமையோடு பெருமளவு விரிசல் கொள்ளாமல், சில சந்தர்ப்பம் சார்ந்த எதிர்ப்புகளை மட்டுமே காண்பித்து , பின் வெளியேறும். அப்போது அது, தனக்கு விசுவாசமான ஆண் மற்றும் பெண் குளவிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லும். அந்த சமயங்களில் தான் அவை பிற குளவிகளின் கூட்டையோ அல்லது தேனீக்களின் கூட்டையோ தாக்கி, தனதாக்கிக் கொள்கின்றன. அந்தப் போரில் பலத்த உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் அவை கூட்டமாக இறந்து விடும்போது, ராணிக் குளவி தன் கூட்டிலேயே ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, ஆணை விந்தணுவைப் பாய்ச்ச ஆணையிடும். இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இவற்றின் வாழ்க்கை முறை இதுவரை சரியாக கணிக்கப்படவில்லை. ஆப்பிரிக்க,ஆஸ்திரேலிய வகை குளவிகள், நம் தோட்டங்களில் காணப்படும் கதம்ப வண்டு, போன்ற இனங்கள் மிகவும் கொடியவை, கோபம் கொள்பவை. தங்கள் எதிரியை 1/2 கி.மீ. துரத்திக் கொட்டுபவை. ஒரு முறை என் வலது தோள்பட்டையில் கொட்டுப்பட்டு, இரண்டு மாத காலம் கையை அசைக்கவே முடியாத அளவு வேதனைப்பட்டிருக்கிறேன்.
இப்பூமிப்பந்து,பூச்சிகளால் நிரம்பியது. அதன் சமநிலையும் இவைகளால் மட்டுமே நிலைநாட்டப்படுகிறது. அவற்றுக்கு தோள்கொடுப்பதாய் பறவைகளும்,பிற ஜீவராசிகளும் உள்ளன. இங்கு மனிதனால் ஆவதற்கு ஒன்றுமே இல்லை. இந்தியாவைப் பொறுத்த மட்டில் குளவிகளைப்பற்றிய விரிவான புத்தகம் என்று ஒன்றுமே கிடைக்கவில்லை. தற்போது பெங்களூர் மீனாட்சி எழுதிய நூல் மட்டுமே உள்ளது. தவிர குளவி, தேனீ, பிற பூச்சியினங்களுக்கு அயல் நாட்டவரின் புத்தகங்களையே நாட வேண்டியுள்ளது. அவை அந்தப் பிரதேசங்களை வைத்தே பெரும்பாலும் எழுதப்பட்டவை. பிளினி, சிசரோ போன்ற தத்துவ, அறிவியல் அறிஞர்கள் தொடங்கி, கடந்த 60 வருடங்களாக குளவிகள் குறித்த ஆய்வு உலகெங்கிலும் நடந்து வருகின்றது. டாக்டர் ஷூவல்ட்டே, அதன் பிதாமகராகத் திகழ்கிறார். அயல் மகரந்தச் சேர்க்கையின் அற்புத தூதுவனாகவும், வேளாண்மையின் பாதுகாவலனாகவும் திகழும் பூச்சிகளைப் பற்றிய விரிந்த ஆய்வுகளும் அதைப்பற்றிய நூல்களுமே இந்தியாவில் நிறைய வரவேண்டும்.
1945ல் வந்திறங்கிய டி.டி.டி. துவங்கி, இன்று புழக்கத்தில் உள்ள என்டோ சல்ஃபான் வரை, இவைகளைக் கொன்று குவித்து வருவதை ஐ.நா. சபையின் பூச்சியியல் ஆய்வாளர்கள், கவனத்தில் கொள்ளவில்லை போலும்! இதே நிலை நீடிக்குமெனில் குளவிகளும் "அழிவின் சிவப்பு பட்டியலில்" வெகு விரைவில் இடம்பெறும்.
-கிருஷ்ணன் ரஞ்சனா
நன்றி: உயிர்மை இணையம்
புதன், செப்டம்பர் 14, 2011
வண்ணத்துப்பூச்சி - நிறங்களைக் கையாளும் சூப்பர் ஜீன்கள்
"ஒரு வனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்பார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். சிறு பூச்சிகளும், வண்டுகளும் வனத்தின் கணையம்,கல்லீரல், மண்ணீரல் என எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் என்பது வனவியலாளர் உல்லாஸ் கரந்தின் கருத்து. வண்ணத்துப்பூச்சிகளின் பிரதான வேலை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது என்ற போதும், சிறு உயிரிகள், பறவைகளின் பிரதான உணவாகவும் திகழ்கிறது. இவை உணவாக்கப்படுவதும், படாமல் போவதும் அதன் இறகுகளில் பூசியிருக்கும் வண்ணங்களால் தான் என்ற உண்மை இப்போதுதான் அறிவியல் உலகிற்கே தெரியவந்துள்ளது. இவை தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவை என்ற உண்மை அழகியலாளர் முதல் அறிவியலாளர் வரை புருவத்தை நிமிர்த்தக்கூடிய செய்தியாக உள்ளது. மாறும் வண்ணம் தொடர்பான மர்மம் தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றாற் போல் வண்ணத்தை மாற்றிக் கொள்வதும், பின் இயல்பு நிறத்திற்குத் திரும்புவதையும் ,விஞ்ஞானிகள் கண்டறிந்து ஆச்சரியமுறுகின்றனர். இந்த ஆய்வு ஐரோப்பிய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
மரபணு தொடர்பான நீண்ட ஆய்வுகளை நடத்திய வேல்ஸ்,பேட்ஸ், டார்வின் போன்றோர் கூட இது தொடர்பான ஐயங்களைக் கொண்டிருந்தனர். ஒரு நாள், சில பறவைகள் ,சில வண்ணத்துப்பூச்சிகளை உணவாகக் கொள்வதைக் கண்டனர். அடுத்த நாள் அதே வகை வண்ணத்துப் பூச்சிகள் வேறு நிறத்தில் இருப்பதையும், பறவைகள் அவற்றை வெறுத்து விட்டதையும் பார்த்து, இது ஏதோ பறவைகளின் உணவுத் தேர்வு தொடர்பானது என விட்டு விட்டனர். அதே சமயம்,இவ்வாறு பறவைகள் பூச்சிகளை சாப்பிடாமல் ஒதுக்குவது "மனிதக் கண்களுக்குத் தெரியாத மாற்றம் பறவைகளை அறுவறுக்கச் செய்கிறது" என ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறார் வேல்ஸ். இங்கிலாந்து பல்கலைக்கழகமும், பாரீஸ் பல்கலைக்கழகமும் இணைந்து முதன் முதலாக நீண்ட, ஆழமான , வண்ணத்துப்பூச்சிகளின் மாறும் வண்ணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உத்தியாக இந்த வண்ண மாறுதலை அவை மேற்கொள்கின்றன எனக் கண்டறிந்தனர். இந்த ஆய்விற்காக ,இவர்கள் அமேசான் வகை வண்ணத்துப்பூச்சியான "ஹெலிகோனியஸ் நுமட்டா" என்ற பூச்சிகளைத் தேர்ந்தெடுத்தனர். மிக நீண்ட, அதிக செலவு பிடித்த இந்த ஆய்வில் பல வகை வண்ணத்துப்பூச்சிகளும் உட்படுத்தப்பட்டன.
மழைக் காடுகளில் மட்டுமே வாழும் நுமட்டா வகை வண்ணத்துப் பூச்சிகளே தங்களை இவ்வாறான நிற மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் என்ற தங்கள் கருத்தாக்கங்களை ,வெப்ப மண்டல வகையினங்களும் மாறுதலுக்கு உள்ளாகி ,தகர்த்தெறிந்தன. ஒரே இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் ,தங்கள் இறகுகளில் பல வித வண்ணங்களைக் கொண்டிருந்தன.சில, பறவைகளுக்கு உணவானதும், தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொண்ட மற்றவை, அவற்றின் முன்பே பறந்தாலும் ,உணவாகமல் இருப்பதையும் கண்டனர். இந்தியாவில் அதிகம் காணப்படும் மோனார்க் வகை பூச்சிகளின் நிறத்தை ஒத்த சில வகை நுமட்டோக்களே இவ்வாறான நிறமாற்றத்தைக் கொண்டன. இந்த மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சிகளே அதிவேகமாக, அதிக தொலைவு, கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும்.
குரோமோசோம்களின் நிலைப்பாடே இவ்வாறான நிற மாற்றத்திற்கு முக்கிய காரணம் .பொதுவாக வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களும், அவைகளின் நிற மாறுபாடுகளும், குரோமோசோம்களில் அடங்கிய குறிப்பிட்ட ஜீன் தொகுப்பால் உருவாக்கப்படுகிறது. இந்த வகை ஜீனை விஞ்ஞானிகள் "சூப்பர் ஜீன்" என்றழைக் கின்றனர். இந்தத் தொகுப்பு ஜீன்கள் வண்ணத்துப்பூச்சிகளின் தற்காப்புக்காவும், உணவு களைத் தக்க வைக்கவும், பிற இனத்தோடு இணை சேரவும் உதவுகிறது. இந்த வகை மாற்றங்கள் நத்தை இனங்களிலும் ஏற்படுகிறது. சில நத்தைகள், ரோஜாப் பூக்களின் ரோஸ் நிறத்தைக் கண்டவுடன் இந்நிறத்தை ஒத்து தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. இவ்வாறான நிற மாற்றம், இவை பிற பறவைகளால் அடையாளம் காண முடியாத சூழலை உருவாக்கும். அதே சமயம், நத்தைகள் இருப்பதை அறியாத தேனீக்களும், பிற பூச்சிகளும் பூவை அணுகும் போது அவை கொல்லப்படுகின்றன. இவ்வாறான சூப்பர் ஜீன்கள் இயற்கையின் மாற்றத்தில் பெரும் பங்காற்றுகின்றன என்கிறார் டாக்டர். ஃபெப்பர். இவர் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சி மையத்தில் பூச்சியியல் தொடர்பான ஆய்வாளர்.
பாரீஸை சேர்ந்த டாக்டர் மாத்யூஷோரன், "நாங்கள் இவ்வாறான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ந்து விட்டோம்" என்றார். பூச்சிகள் உலகில் நிகழும் செயற்கையான உருமாற்றங்களை இந்த ஆய்வு அறிவியல் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டது. இனி இது தொடர்பான,தேவையான ஆய்வுகளும் நடத்தப்படும் என்றார் பேராசிரியர் ரிச்சர்ட் பிரின்ஸ். இது இயற்கையின் தேர்வு --காலா காலத்திற்கும் நடந்து கொண்டே இருக்கும். நமக்குத் தேவையான அறிவியல் உபகரணங்களும், குறிப்புகளும் இப்போதுதான் கிடைத்துள்ளது. எனவே நாம் இப்போது தான் அறிந்துள்ளோம் என்றார். இது தொடர்பான ஆய்வுகள் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டனில் துவங்கியது. குரோமோசோம்களின் தரவரிசை, மாறுபாடுகளை உண்டாக்கும் சூப்பர் ஜீன்களை உருவாக்குவதுதான். இது இயற்கையின் மாபெரும் நிகழ்வு. மேத்யூஷோரன், கிரிஸ் ஜிக்கிள் என்ற இரு விஞ்ஞானிகள் வண்ணத்துப்பூச்சிகளின் உணவுத் தேடலில் குரோமோசோம்களின் பங்களிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் N,YP,SB,H குரோமோசோம்களின் நிலைப்பாடு, பெரும் பங்காற்றுவதைக் கண்டறிந்தனர். தவிர இவை உணவுத் தேடல், பொறாமை கொள்ளல் என்ற உணர்வுகளையும் தூண்டுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
விஷமுள்ள வண்ணத்துப்பூச்சிகள், பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவை. இவை அதிகம் வண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, துர்நாற்றத்தை தங்கள் மலக்குழாய் வழியே பீய்ச்சியடித்து எதிரிகளை நிலைகுலையச் செய்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் சிவப்பு நிற உருவாக்கத்தை "ஆப்டிக்ஸ்" என்ற ஜீன் வழங்குகிறது. இது ஆபத்தை சுட்டிக் காட்டுவதோடல்லாமல், பிற உயிரிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞையாக, தான் காதலில் உள்ளதை, அதிக காமமுற்று உள்ளதை, நோய்வாய்ப்பட்டிருப்பதை, போன்றவைகளின் குறிப்பேற்று அறிகுறிகளாகவும் பயன்படுத்துகிறது. இந்தச் சிவப்பு நிறம், பொதுவாக அவைகளின் கண்களில் அதிகம் உருவாக்கும். ஓம்மோ குரோம் நிறமிகள் இதனுடன் சேர்ந்து இறகுகளின் நிறமியை உருவாக்கும். இந்த வகை குரோமோசோம்களின் கட்டமைப்புகள் பிராந்தியம் சார்ந்தும், சூழ்நிலைப் பொறுத்தும் வெகு எளிதாகச் செயல்படுகின்றன.
-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
நன்றி: உயிரோசை இணையம்
செவ்வாய், செப்டம்பர் 06, 2011
அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்..
பார்க்கும்போது சற்று பயமாகவும், சிறிது நேர நிலைப்பாட்டிற்குப்பின் ஆச்சரியமாகவும் இருந்தது. நான் தினமும் மாலை நடை
போகும் குளக்கரையில் மாலை 6 மணிக்கு 500க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் திடீரென பறந்து அங்குமிங்கும் அமர்ந்தவாறு இருந்தது. சிறிதும், பெரிதுமாக பச்சை, பழுப்பு, வெளிர் மஞ்சள் என பல நிறங்களோடு என் இருபக்கமும் உள்ள மக்காச்சோள கதிர்கள்,காலிஃபிளவர் செடிகளில் அமர்ந்து இலைகளை உண்ணத்துவங்கின. என் மேல் அமர்ந்த சிறிய மஞ்சள் நிற வெட்டுக்கிளியைக் கையில் பிடித்தபோது, படுபயங்கரமான துர்நாற்றத்தை வெளிப்படுத்த,சட்டென அதை விடுவிக்க வேண்டியதாகியது. நாம் இதுவரை தொலைக்காட்சி சேனல்களிலும், சில ஆங்கிலப் படங்களிலுமே பார்த்துப்பழகியதை, நேரில் இவ்வளவு எண்ணிக்கையில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்! இத்தனை எண்ணிக்கையில் எங்கிருந்து வந்தன? என் மனதில் தோன்றிய அடிப்படையான கேள்விக்கு ,உத்தமபாளைய கல்லூரி, விலங்கியல் துறை பேராசிரியர் பதிலளித்தார். பருவ மழை பொய்ப்பதும், பருவத்திற்கு ஏற்றாற் போல் வெயிலில் மாற்றங்கள் இல்லாமையும், இவ்வாறு வெட்டுக்கிளிகள்,பூச்சிகள் போன்ற சிற்றினங்களின் திடீர் வளர்ச்சியைத் தூண்டி விடுகின்றன என்றார்.
கணுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த வெட்டுக்கிளிகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்கப்படாத வகையினங்களும் இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. விஞ்ஞானிகள் வெட்டுக்கிளியின் உடலமைப்பை மூன்று
பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். தலைப்பகுதி, நடுப்பகுதி, பின்பகுதி. தலைப்பகுதியில் கண்கள் ,வாய், உணர்வுக் கொம்புகள் உள்ளன. கூட்டுக்கண்கள் போல் தோற்றமளிக்கும் இவைகளுக்கு 5 கண்கள் உண்டு. வாயில் 32 பற்கள் உண்டு. இவை ரம்பம் போல் செயல்படுகின்றன. பற்களின் எண்ணிக்கை வகையினத்திற்கு ஏற்றாற் போல் மாறுபடுகின்றன. இவைகளின் உண்ணும் முறையும் சற்று வித்தியாசமானது. இட வல அமைப்பைக் கொண்ட வாய்ப்பகுதி மேலும் கீழுமாக அசைந்து உணவை சிறிது சிறிதாக பிய்த்து, முதலில் வாயின் உள்ளே மடக்கித் தள்ளி ,பின் நிதானமாக அரைத்து, கூழாக்கி உண்ணுகின்றன.கண்களை மேலும், கீழுமாகவும் ,இடவலமாகவும் உருட்டும். இதனால் நாலா திசைகளையும் ,பார்க்க முடிகிறது. கண்களை விட உணர்வுக் கொம்புகள் மூலம் தமக்கு எதிரானவைகளை அடையாளம் கண்டுகொள்கிறது.
இதன் நடுப்பகுதி, வயிறு, 2 இறக்கைகளைக் கொண்டுள்ளது. இறக்கைகள் பறப்பதற்கு மட்டுமல்லாமல், மேலும் கீழும் அசைத்து ஓசை எழுப்பி, எதிர்பாலினத்தைக் கவரவும் பயன்படுத்துகிறது. தவிர தனது உடலைச் சுத்தப்படுத்தவும் இவ்வாறு செய்யும். இப்பகுதியில் 2 ஜோடி குட்டையான முன்னங்கால்கள் உள்ளன. பின் பகுதியில் 2 ஜோடி உயரமான பின்னங்கால்கள் உள்ளன. இவை தாவிக் குதிக்கும்போது ஸ்பிரிங் போல் செயல்படுகின்றன. இரண்டு தனித்தனி துண்டங்களாக உள்ள இவை, ஒரு இணைப்பால் இணைக்கப்பட்டு எப்போதும் எம்பிக் குதிக்க உதவுகின்றன. இவ்வமைப்பு இதன் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் கருவியாகச் செயல்பட்டாலும், இக்குணம் அறிந்த பறவைகள்,அலட்டிக் கொள்ளாமல் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. பின்பகுதியிலேயே துர்நாற்றத்தை உமிழக் கூடிய சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகள் மூலம் வெளிப்படும் திரவம்,எதிரிகளை விரட்டுவதற்கும், தன் குழு சார்ந்த நபர்களை அழைப்பதற்கும் பயன்படுகிறது. இந்த வாசனையை நுகர்ந்து, இதன் சகாக்கள் ,பல மீட்டர் தூரத்திலிருந்தும் ஒன்று கூடி வரும். பின் பகுதியின் இறுதியில் முனை அமைப்பு உள்ளது. இது தான் மலப்புழை . அதுவே புணர்ச்சிக்கான உறுப்பாகவும் செயல்படுகிறது.
பெண்களே ஆணை விடப் பெரிதாக இருக்கும். பருவம் கொண்ட பெண்கள் தங்கள் உடலின் நெடியின் மூலம் ஆணை அழைக்கும். இந்த நெடியை சில சமயம் நாம் அறியலாம்.பருவம் எய்த ஆண்கள், தங்கள் உடலைப் பின்னங்கால் உதவியோடு உயர்த்தி, நிமிர்ந்த வாக்கில் தன் இரு இறக்கைகளையும் மேலும் கீழும் அசைத்து ஒலி எழுப்பும். உடன்படும் ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும். உடலுறவு, பல மணி நேரம், பல தடவை, பல ஆண் பெண்களோடு கலவையாக நடக்கும். உடலுறவுக்கேற்ற கால, நேர, சந்தர்ப்ப, சூழல்களை இவை ஏற்றுக் கொள்வதில்லை. பெண் வருடத்திற்கு குறைந்தது 5 முறை முட்டையிடுகிறது. முட்டைகளை சற்று நீர்ப்பாங்கான இடங்களில் 1 செ.மீ. குழி பறித்து அதில் இடும். மலப்புழையின் இறுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய கொக்கி போன்ற அமைப்பு மூலமே பூமியில் குழி தோண்டிக் கொள்கின்றன. இவை சுமார் 180 முட்டைகள் இடும். இதைக் கஞ்சி போன்ற திரவம் மூடியிருக்கும். 18 நாட்களுக்குப் பின் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. பருவ நிலை மாறுபாடு ,வெட்டுக்கிளிகளின் சுரப்பிகளைத் தூண்டி, அதிகமாக சுரக்கச் செய்து ,அதிக உடலுறவில் ஈடுபடச் செய்கிறது. இதுவே இதன் அதீத இனப்பெருக்கத்திற்கு காரணம் என்கிறார்கள் சார்லஸ் வேலண்டைன் ரிலே மற்றும் நார்மன் சிரிடில். இவர்களின் ஆய்வே வெட்டுக்கிளிகள் குறித்த சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது.
வெட்டுக்கிளிகள் பொதுவாக பிரதேசம் சார்ந்தவை. பூச்சி மருந்துகளின் பாதிப்பு, எதிரிகளின் தொல்லை கருதி இவை இடம் பெயருகின்றன. உலகளாவிய அளவில் விவசாயிகளின் பெரும் எதிரியாகக் கருதப்படும் இவை, வேதியியல் தெளிப்புகளால் அதிகம் கொல்லப்படுகின்றன. அதிகளவில் இனப்பெருக்கம் உள்ள ஐரோப்பிய வெட்டுக்கிளிகளை, சிறிய ஹெலிகாப்டர் கொண்டு, ஆஸ்திரேலியா,அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வானிலிருந்து மருந்து தெளித்துக் கொல்கின்றனர். இதனால் இவை இடப்பெயர்ச்சிக்கு ஆளாகின்றன. ஓர் ஆய்வின்படி ஒரு வெட்டுக்கிளி 27 நாட்களில் 400கி.மீ. பயணித்ததாக அறிக்கை வந்துள்ளது. அதிகபட்சமாக 14 வருடங்கள் வாழும் இவை, மிக அதிக புரதச்சத்து, அதிக நார்ச்சத்து கொண்ட கோதுமை, கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றையே உண்கின்றன. ஆஸ்திரேலிய மலை வெட்டுக்கிளிகள் சுமார் 5000 எண்ணிக்கையில் ,திடீர் தாக்குதல் நடத்தி, கோதுமை வயல்களில் சுமார் 4 மணி நேரத்தில் 10 ஏக்கர் பயிரை நாசமாக்குமாம்.
பசியாலும், பஞ்சத்தாலும்,கையேந்தி நிற்கும் ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, நைஜர், உகாண்டா போன்ற நாட்டு மக்கள் இதைப் பிடித்து, இறக்கை, கால்களை வெட்டிவிட்டு வறுத்து, உப்பு போட்டு உண்கிறார்கள். போர்க் காலத்தில் இவையே அவர்களின் பிரதான உணவாக இருந்ததாம். சீனா போன்ற அதிகளவு பூச்சிகளை உண்ணும் நாடுகள் இவற்றைப் பிடித்து கால், இறக்கைகளை நீக்கிவிட்டு ,லேசாக உடலை அழுத்த அதன் மலப்புழையிலிருக்கும் கழிவுகள் ,பச்சை ரத்தம் வெளியேறிவிடும். ஹீமோலிம்ப் என்ற திரவமே சத்துகளை கடத்தியாக உள்ளது. இதுவே கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. இதில் ஆக்ஸிஜன் இல்லாததால் இவற்றின் ரத்தம் பச்சை நிறமாக உள்ளது. ரத்தம் முழுவதும் வெளியேறியதும், மசாலா பொருட்கள் சேர்த்து வறுத்து நீண்ட கம்பியில் குத்தி வைத்து விடுவார்கள். ஒவ்வொன்றாக எடுத்து உண்பது மட்டுமே பாக்கி. சீனர்களின் மிக விசேஷ உணவு "வெட்டுக்கிளி ஃபிரை" .
ஆஸ்திரேலியப் பழங்குடிகளில் பெண்கள் தாங்கள் கருவுற்ற காலத்தில் இதை உண்கிறார்கள்.. இவர்களைப் போல், செங்கால் நாரை, ஆந்தைகள் இரவில் இவற்றைப் பிடித்து உண்கின்றன. உடலுறுதி கொண்ட வளமான சந்ததிகளை உருவாக்குவதே இதன் நோக்கம்!
- கிருஷ்ணன் ரஞ்சனா
நன்றி: உயிரோசை இணையம்
ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011
குக்கூ என அழைத்தது கருங்குயில் ஒன்று.....!
சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில் மரக்கா மலைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான், என் மனைவி, என் மகள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றோம். என் வாழ்க்கையில் நிகழ்ந்த நிறைய இனிய அனுபவங்களில் இதையும் ஒன்றாகக் கருதுகிறேன். மலையடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சுமார் 300 மீ. உயரம் வரை அடர்ந்த காட்டின் வழியாக நடந்து சென்றோம். மாலை ஆறு மணி என்பதால் சுற்றுவட்டாரத்தில் ஆள் அரவமற்றுக் கிடந்தது.மா, தென்னை, சப்போட்டா, வாழை, கரும்பு, கொய்யா என அணி அணியாகத் தோப்புகள் வர, அதைப் பிளந்து அமைக்கப்பட்ட ஒத்தையடிப் பாதை வழியாகத்தான் நாம் மலைக்குப்போக வேண்டும். நம் இடப்புறம் வாய்க்காலில் சலசலத்து நீரோடும். காலை நனைத்தவாறே செல்லலாம். வருடுகின்ற தென்றலும், வானுயர்ந்த மரங்களும்,மயங்கும் சூரியனும், வந்தடையும் காக்கை,குருவிகளும் ஏகாந்த கவிச்சூழலை உருவாக்கின. கருக்கல் நேரம் என்பதால் நாங்கள் மலையடிவாரத்திற்குத் திரும்பினோம். ஏனெனில் திடீரென்று காட்டு மாடுகளோ, ஓநாய்களோ அங்கு வரக்கூடிய சாத்தியம் உண்டு, எனவே அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது தான் நன்று. 2 மணி நேரத்திற்குப் பின் நாங்கள் திரும்பும்போது, உயர்ந்த பருத்த மரங்களில் நிறைய குருவிகள் கத்தியவாறே இருந்தன. வரும் வழியில் குயில் ஒன்றைக் கண்டேன். மிக நீண்ட இடைவெளிக்குப்பின் குயிலைக் காண்கிறேன். புகைப்படம் பிடிக்க முயலும் போதெல்லாம் அது பறந்து மறைந்து விடுவதும், மீண்டும் மரங்களில் உட்காருவதாகவும் இருந்தது. குக்கூ...குக்கூ என்று கூவியவாறே அது என்னை வழியனுப்பியது. அதன் நெடிய குரலோசை வீடு திரும்பும்வரை செவிகளில் ஒலித்தவாறே இருந்தது.
குயில்கள் அண்டார்டிகா தவிர்த்து உலகெங்கும் வாழ்பவை. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட வகையினங்கள் இவற்றில் உள்ளதன. நம் இந்தியாவில் காணப்படும் குயில்கள் ஆசிய வகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. பிரதேசங்களுக்கு ஏற்றவாறு, அங்குள்ள பறவைகளில் சிலவகை, அவைகளின் குரல் ஒலியின் விசேஷத்திற்காக குயில் வகுப்பில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக குயில்கள் மரங்களில் வாழும் நடுத்தரப் பறவை. பார்ப்பதற்கு கவர்ச்சியற்றே காணப்படும்.இந்தியாவில் குயில்களில் ஆண் சிறியதாக, கறுப்பு நிறத்தோடும், பெண் சற்று பெரிதாக,இறகுகள் பழுப்பு நிறம் கொண்டும் ஆங்காங்கே கறுப்புப் புள்ளிகள் கொண்டும் இருக்கும். குயில்களின் சிறப்பே அதன் குரலோசையும், முட்டை இடும் தன்மையும்தான். குயில்களில் ஆண் மட்டும் குக்கூ...... என நெடிய ஒலியையும், பெண் க்யிக்...க்யிக்....என்று குறைந்த அழுத்தத்தில் இடைவெளி விட்டும் குரலெழுப்புகிறது. இங்கு குரலோசை எதிர்பால் இனத்தைக் கவர்வதற்காகவே எழுப்பப்படுகிறது. பொதுவாக இவை தனிமையில்தான் வாழ்கின்றன. இணை சேரும் காலத்தில் மட்டும் அவை ஒன்று கூடும். ஆண்--பெண் இனச்சேர்க்ககை வருடத்திற்கு ஒருமுறை நடக்கும். ஒரு ஆண் பல பெண்களோடும், ஒரு பெண் பல ஆண்களோடும் உறவு கொள்ளும். வழக்கமான முறையில் பெண் கீழே அமர்ந்தும், ஆண் மேலே இருந்தும் உறவு கொள்ளும். ஒரிரு முறை மட்டுமே உடலுறவு நிகழ்ச்சி நடக்கும். ஆண் இந்த சந்தர்ப்பத்திலேயே தேவையான விந்தைப் பாய்ச்சும்.
குயில்கள் பிரதேசம் சார்ந்தே வாழ்பவை. அவை தங்கள் பிரதேசம் விட்டு, பிற இடங்களுக்குச் செல்வது அரிது. ஆப்பிரிக்கவாழ் குயில்களில் தரையினக் குயில்கள் உண்டு. இவை தரையிலேயே வாழும். புழு, வண்டு, ஓணான் மற்றும் சிறு குருவிகளையும் ஓடி, விரட்டி ,பிடித்துண்ணும். நிமிடத்திற்கு 30 கி.மீ.வேகத்தோடு ஓடும் இவைகளின் உடல் பருத்துக் காணப்பட்டாலும், எடை லேசாகவும், பார்ப்பதற்கு பருந்து போலவும் இருக்கும். தரையிலேயே குழியமைத்து முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். இவை பழுப்பு நிறத்தில் காணப்படும்.
இந்தியக் குயில்கள் கொட்டையுள்ள பழங்களை மட்டுமே உண்கின்றன. அதனால், அவை மரங்களிலேயே வசிக்கின்றன.அமெரிக்காவில் வாழும் குயில்கள் சிறு உயிரினங்களை உண்பதோடு, பழங்களையும் உண்ணும்.இவை வெளிர் நிறத்திலும்,நீல நிறத்திலும் காணப்படும். எல்லா வகை குயில்களுக்கும் கண் சிவப்பாகவும், கருவிழியோடு எடுப்பாகத் தெரியும்.குயில்களுக்கான விசேஷ குணம் முட்டையிடுதல். இந்தியாவில் வாழ்பவை காக்கை கூடுகளிலும், இலங்கை, பர்மாவில் வாழ்பவை நாரை அமைத்த நீர்நிலை சார்ந்த கூடுகளிலும், ஆப்பிரிக்கவாழ் மரம் சார்ந்த குயில்கள் தேன் சிட்டுகளின் கூடுகளிலும் தங்கள் முட்டைகளை இடும். ஆப்பிரிக்க தேன் சிட்டுகள், நம் இந்திய தேன் சிட்டுக்களைப் போல் சிறியதாக இல்லாமல், புறா அளவிற்குப் பெரியதாகக் காணப்படும்.
குயில்கள் எந்தப் பறவையின் கூடுகளைத் தேர்ந்தெடுக்கிறதோ, அது போன்ற நிறத்திலேயே முட்டையிடும். காக்கையின் கூட்டிலும் முட்டையிடும்போது பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், தேன் சிட்டுகளின் கூட்டில் முட்டையிடும்போது பழுப்பு நிறத்திலும், காணப்படும். இவைகளின் அலகை வைத்தே, இனம் காணமுடியும். கறுப்பு, பழுப்பு, வெளிர் மஞ்சள் என நிற வகை உண்டு. பெண் குயில்கள் முட்டையிடும் முன்பு, தான் முட்டையிடப்போகும் கூட்டைக் கண்காணிக்கும். அங்கு ஏற்கனவே வேறு பறவையின் முட்டையிருப்பின் அவற்றைக் கீழே தள்ளிவிடும். பின் அப்பறவை இல்லாத போது, இது சென்று முட்டையிடும். 2---7 முட்டை வரை இடும். குயில்களின் முட்டை, பிற முட்டைகள் குஞ்சு பொரிக்கும் காலத்திற்கு 3 நாட்கள் முன்பே பொரிந்துவிடும்.
பொரிந்த குஞ்சுகள் கூட்டிலுள்ள மற்ற பறவையின் குஞ்சைப் போலவே குரலெழுப்பும். உருவ அமைப்பிலும் வேறுபாடு காட்டாது. அதே சமயம், பிற இனக் குஞ்சுகளை கீழே தள்ளாது. கூட்டின் உரிமையாளர் இல்லாதபோது, தாய் அல்லது தந்தைக்குயில் பிற குஞ்சுகளைக் கீழே தள்ளிக் கொன்றுவிடும். இவை அதிகமான உணவை உட்கொள்ளும். இதனால் 3 நாட்களில் போதுமான உடல் பருமனை அடையும். உணவுப் பற்றாக்குறையால் பிற குஞ்சுகள் இறந்து விடும். 17 நாட்களில் அக்கூட்டை விட்டு, உரிமைப் பறவைக்குத் தெரியாமல், தனது தாயுடன் பறந்து சென்றுவிடும். இவ்வாறான நிகழ்வுகள் அனைத்தும் பாரம்பரிய கடத்தியாகவே உள்ளன.
48 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த பறவையாக மாறிவிடும். இதன் கால்கள் 4 விரல் கொண்ட விசேஷ அமைப்பு கொண்டவை. முன்னோக்கி 2 விரலும், பின்னோக்கி 2 விரலும் இருக்கும். இவற்றின் நகம் மிகக் கூர்மையானது. சிறு பூச்சிகளைப் பிடிக்க பேருதவி புரிகிறது. கம்பளிப்பூச்சி போன்ற முடியுள்ள பூச்சிகளை உண்ணும் ஒரே பறவையினம் இவை. பிடித்த பூச்சியை, இரண்டு மூன்றாக கிழித்து எறிந்து விடும். பல சமயம் ஓடுள்ள உயிரினங்களான சிறு நண்டு, வண்டு, நத்தைகளைத் தனது அலகின்கீழ் புறத்தால் ஓங்கித் தட்டும். அதிக பலத்தோடும் அழுத்தத்தோடும், தாக்குதல் நடத்தி அதன் ஓட்டினை உடையச் செய்துவிடும்.
இவை பொதுவாகவே காலைப் பொழுதைவிட இரவு நேரங்களில் மட்டுமே அதிக ஓசை எழுப்பும் என்கிறது பறவையியல் குறித்த ஆய்வுகள். இந்திய குயில்களின் இரவு ஓசையைப் பற்றிய குறிப்புகள் தெரியவில்லை. நம் தமிழகத்தில் குயில்களை விட , செம்போத்துப் பறவைகளே அதிகம் ஓசையை எழுப்புவதாகவும், ரம்யமான அந்த ஒலி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்றும், பல சமயம்,ஆண்குயிலின் அழைப்பை ஒத்திருக்கும் என்றும் கூறுகிறார் பறவையியல் நிபுணரான ரமணி.நானும் இக்கட்டுரை எழுதும்வரை அதைக் குயிலின் ஓசை என்றே நினைத்திருந்தேன்.
உத்தரப் பிரதேசத்தில் குயில்களைக் கூண்டில் அடைத்து வளர்க்கும் பழக்கம் சில வருடங்களுக்கு முன்வரை இருந்ததாம்.மலைக்காடுகள் உள்ள மாநிலங்களான மேகாலயா, சிக்கிம் போன்றவை அவற்றின் கறியை விசேஷ உணவாக,திருவிழா காலங்களின் பரிமாறுகின்றனர். இலங்கையில் வீடு கட்டும்முன் அல்லது புது மனை புகுவிழாவின் முன், குயில்கள் கூவினால்,அது நல்லசகுனம் என்றும் "கோகிலா தேவியே" தங்கள் இல்லத்திற்குள் குடியேறப் போவதாக நம்புகின்றனர்.
வனங்களின் அழிவு, இன்று பல பறவைகளைப் போலவே இதன் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அழிந்து வரும் பறவையினங்களில் ஒன்றாக, ஐ.நா.சபை அறிவிக்காவிட்டாலும் ,இன்னும் சில வருடங்களில் இவை அழிந்தே போகும் சாத்தியம் அதிகமுள்ளது...!?
-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
நன்றி: உயிர்மை.காம்
புதன், ஆகஸ்ட் 17, 2011
சிறுநுண் எறும்பின் சூழல் - சு.தியடோர் பாஸ்கரன்
பணி ஓய்வுகாலத்தின் பெரிய அனுகூலம் காலையில் அவசரமாகப் புறப்பட்டு வேலைக்கு ஓட வேண்டியதில்லை. மனம்போனபடி நடைப்பயிற்சி போகலாம். எங்கள் வீட்டருகிலேயே இருக்கும் வயற்புரங்கள், கொய்யாத் தோப்பு, ஏரிக்கரை இவைதான் நான்போகும் தடங்கள். நடக்கும் பாதையில் நான் அடிக்கடி பார்ப்பது சாரிசாரியாக எறும்புகள் எங்கோ போய்க்கொண்டிருப்பது. காலையில் மட்டும்தான் இதைப் பார்க்க முடியும். சில இடங்களில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் போய்க்கொண்டிருக்கும். சிலசமயம் ஒரு தனிக்குழுவாகவும் நகர்ந்துகொண்டிருக்கும். இவைகளை மிதித்துவிடாமல் எச்சரிக்கையாக சென்றபோதிலும், ஒருநாளும் நான் உட்கார்ந்து அவைகளை உன்னிப்பாக கவனித்ததில்லை. அண்மையில் கிடைத்த எறும்பு பற்றிய ஒரு நூலை படிக்கும் வரை.
பெங்களூர்வாசிகளான அஜய் நரேந்திராவுக்கும் சுனில் குமாருக்கும் எறும்புகள் மேல்தனி அக்கறை. கடந்த நூற்றாண்டில் தேனி, குளவி போன்ற சிற்றுயிர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுகள் (Sociobiology) பலவிவரங்களைதந்து, ஒரு புதிய ஆய்வுதளத்தை திறந்துவிட்டிருக்கின்றன. இதில் எறும்புகள் பற்றிய ஆய்வு தனித்துறையாக வளர்ந்திருக்கின்றது. புதியபுதிய தொழில்நுட்பக்கருவிகளின் வரவும், கம்ப்யூட்டரின் துணையும், டிஜிட்டல் போட்டோகிராபியும் இத்துறையில் பலர் ஆர்வம் கொள்ள செய்திருக்கிறது. துல்லியமாகப் படமெடுக்கக்கூடிய காமிராக்களின் வரவால் சிற்றுயிர்கள் பற்றிய கவனிப்பு அதிகரித்திருக்கின்றது.

அஜயும் சுனிலும் எறும்புகளைப் பற்றி தகவல் திரட்டும்போது, இந்தப் பொருளில் இதுவரை 1903இல் பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய ஒரே ஒரு புத்தகம்தான் வந்திருக்கின்றது என்ற விவரத்தைக் கவனித்தார்கள். ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகிவிட்டது. இன்னொரு நூல் எழுதினால் என்ன என்று கேட்டதின் பலன்தான் நூற்றிஐம்பது வண்ணப்படங்களுடன்கூடிய இந்த அருமையான 2நூல். நண்பர்களிடமும், காட்டுயிர் ஆர்வலர்களிடமும் நிதிதிரட்டி அவர்களே வெளியிட்டுள்ளனர். கடந்த நூறாண்டுகளில் இந்தத் துறையில் நடந்த ஆய்வுகளின் சாராம்சத்தை உள்ளடக்கியது இந்நூல். அத்துடன், எறும்புகளை இனங்கண்டுகொள்ள தனித்தனி அடையாளக் குறிப்புகளும், படத்துடன், இடம் பெற்றிருக்கின்றன. இருபத்து வருட உழைப்பு.
இவ்வுலகில் ஒரு கடுகளவிலிருந்து நான்கு செ.மீ அளவுள்ள ஏறக்குறைய 12000 வகை எறும்புகள் உள்ளன. அவை எல்லா இடங்களிலும் வியாபித்து, பரவி இருக்கின்றன. அதிலும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் எறும்புகள் இல்லாத இடமே இல்லை எனலாம். மழைக்காடுகளில் மரத்தின் விதானங்களிலும், தரைக்கு அடியில் வளைகளிலும், மக்கிப்போகும் மரக்கட்டைகளிலும் என எறும்புகளுக்குப் பலவித வாழ்விடங்கள். காட்டுத்தரையில் கிடக்கும் இலைக்குவியல்களில் வசிக்கும் எறும்புவகைகளும் உண்டு. தரைக்கடியில் உள்ள காலனிக்கு ஒரு கோட்டை போல வட்டமான மண்ணாலான வாசலைக் கட்டும் எறும்புகள் உண்டு. புள்ளினங்கள் போலவே, காட்டின் வெவ்வேறு சூழல்களில் - மரப்பொந்துகளில், புதர்களில் - வாழும் விதவிதமான எறும்பினங்கள் ஒரு காட்டின் செழுமைக்கு ஒரு குறியீடு. அதிலும் தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் நெருக்கம் மிகுதி. சில எறும்பினங்களுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதுடன் விதைகளைப் பரப்புவதிலும் பங்கு உண்டு. பறவைகள் போன்ற பல உயிரினங்களுக்கு எறும்புகள் இரையாகின்றன. இதையே பிரதான இரையாகக் கொள்ளும் ஒருவிலங்கு, உடும்பு போன்ற விலங்கு. இதன் ஆங்கிலப்பெயர் Ant-eater. அவ்வப்போது கூவம் நதிக்கரையில் பிடிபட்டு இதன்படம் ‘அதிசயவிலங்கு’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியாவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
தேனிக்களின் சமூக அமைப்பு போன்றே எறும்புகளிலும் ராணி, வேலைக்காரன், சிப்பாய் என தனித்தனி வேலை செய்யும் எறும்புகள் உள்ளன. நாம் சாதாரணமாக வெளியில் காண்பவை எல்லாமே பெண் வேலைக்கார எறும்புகளே. ஆண் எறும்புகளைக் காண்பதரிது. காலனியில்தானிருக்கும். கூட்டையும் உணவு சேகரிப்பையும் பாதுகாப்பது சிப்பாய்களின் வேலை. ஒரு காலனிக்கும் மற்றொன்றிக்கும் போர்மூள்வதும் உண்டு. சில இனங்கள் அடிமை எறும்புகளையும் உருவாக்கி, காலனிக்கு வேண்டிய வேலைகளை எல்லாம் இவைகளைச் செய்யவைக்கின்றன.
மற்ற உயிரினங்கள் சிலவற்றுடன் சேர்ந்து எறும்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்று நூலாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒரு எறும்பினம் கூடு கட்டுவதற்கெனவே வங்கு போன்ற இடத்தை தண்டின் நடுவே உருவாக்கிக்கொள்ளும் மரமொன்று இருக்கின்றது. அதுபோலவே, தமிழகக் காடுகளில் இலைகளைக் கொண்டு மரங்களில் ஒரு பலூன் போல, கூடுகட்டும் எறும்பினம் உண்டு. எச்சிலுடன் இலைகளைமென்று, ஒரு பசையை உருவாக்கி பல அறைகளுடைய இக்கூட்டைக் கட்டுகின்றன. மரத்தில் தூக்கணாங்குருவி கூடுபோல், கால்பந்து அளவில் தொங்கும் இதில் சிவப்புமரங்கொத்தி (Rufous Woodpecker) ஒரு கூட்டை உருவாக்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது. அதிசயம் என்னவென்றால் இந்த முட்டைகளையோ, அதிலிருந்து பொரிக்கும் குஞ்சுகளையோ எறும்புகள் ஒன்றும் செய்வதில்லை. இந்தப் பிணைப்பினால் எறும்புகளுக்கும், மரங்கொத்திக்கும் என்ன நன்மை என்பது பறவையியலாளர்கள் மத்தியில் ஒரு புதிராகவே இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு எறும்புக் கூட்டில் மரங்கொத்தி தொத்திக் கொண்டிருப்பதை நான் முதுமலைக்காட்டில் பார்த்ததுண்டு. தாவரங்களில், அதிலும் ரோஜா செடியில் காணக்கூடிய aphid ஒட்டுப் பூச்சிசுரக்கும் பால் போன்ற திரவத்தை எறும்புகள் உட்கொள்கின்றன. ஆகவே எறும்புகளின் பசு என்று இந்தப்பூச்சி குறிப்பிடப்படுகின்றது.
வேதியல் எறும்புகளின் வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. ஊர்ந்து செல்லும்போது அவை வகையான வேதியல் தடயத்தை விட்டுச்செல்கின்றன. இதைத் தொடர்ந்துதான் மற்ற எறும்புகள் சாரிசாரியாக ஊர்கின்றன. கவனித்துப் பார்த்தால் அவை நேர்கோட்டில் போகாமல், வளைந்து வளைந்து செல்வது தெரியும். எறும்புக்காலனியில் இவை ஒரு நெடியைப் பரப்பி அபாய அறிவிப்பை விடுக்கின்றன.
எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, ஒவ்வொரு எறும்பையும் மோந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச்சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்லவிடுகின்றது எவ்வாறு தேனீயின் நடனத்திலிருந்து மனிதர் சில அறிவியல் உண்மைகளை கண்டுகொண்டார்களோ அதேபோல எறும்புகளிடமிருந்தும் பலபாடங்களை மனிதர் கற்றுக் கொள்ள முடிகின்றது. உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் முக்கியமானது. தாங்கள் சேர்த்துவைக்கும் உணவில் பூசனம் பூத்துவிடாமலிருக்க இவை ஒருவேதியல் கூறைப் பயன்படுத்துகின்றன. இதைப்பார்த்து மனிதர்களும் பாடம் கற்றுள்ளனர், அந்த வேதியல்கூற்றை தனிப்படுத்தி, அதன் இயல்பைக் கண்டறிந்த பின்னர், மருந்து தயாரிப்பில் இன்று அது பயன்படுத்தப்படுகின்றது. எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக ஒரு அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது.
நமது பழமொழிகளிலும், நாட்டுப்புறவியலிலும் புராணங்களிலும் எறும்புகள் அவ்வவ்போது தோன்றுகின்றன. திருச்சிக்கருகே உள்ள திருவெறும்பூர் சிவாலயத்தின் கதையில் எறும்பிற்குச் சிறப்பிடம் உண்டு. அசுரர்களுக்குப் பயந்த தேவர்கள், அவர்கள் கண்களிலிருந்து தப்ப எறும்பு உருவெடுத்து தினமும் வரிசையாக ஊர்ந்து அந்தப்பாறையின் உச்சிக்குச் சென்று சிவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தேவர்களின் அன்பால் நெகிழ்ந்த சிவன் எறும்பேஸ்வரன் எனும் பெயரை ஏற்றுக்கொண்டு தேவர்களுக்கு அருள்பாலித்ததாக ஸ்தலபுராணம் கூறுகின்றது. அதே போல திருவானைக்கோவில் சிவன் கோயிலில் லிங்கத்தை சிலந்தி வழிபட்டதாக ஐதீகம்.
*புறம்: 173:6-7
On A Trial with Ants. A Handbook of Ants
Of Peninsular India. By Ajay Narendra
And Sunil Kumar. 2006. Bangalore
நன்றி: உயிர்மை, ஜூலை 2011
செவ்வாய், மே 24, 2011
பறவைகளின் தேவ சிற்பி: தூக்கணாங் குருவிகள்
நான் 10 , 11ம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் தேனி சுந்தரம் தியேட்டர் என் கலை ஆர்வத்தின் கற்பனைத் திறவுகோலாக இருந்தது. என் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் அங்கு சென்று விடலாம். இந்த தியேட்டரின் சிறப்பே இரவு 8.30 ஷோ தான். இது இங்கு மட்டுமே .முழுக்க முழுக்க ஆங்கிலப் படங்கள்தான். ஒரு படம் ஒரு நாள் மட்டுமே காண்பிக்கப்படும். அந்தக் காட்சிக்கான டிக்கெட் விலையும் அதிகம். தினமும் எப்படியாவது அந்தக் காட்சிக்கு சென்றுவிடுவேன். அன்டோனியா பண்டாரஸ் எட்டி மர்ஃபி. பில் ஸ்மித் என்று என் ஆகர்ஷன கதாநாயகர்கள் இந்த தியேட்டரின் உபயத்தில் வந்து போனார்கள். ஆக்க்ஷன் படங்களுக்கு இடையே ‘ப்ளூ லாகூன்’ போன்ற கிளர்ச்சிப் படங்களும் காட்டப்பட்டு இளைஞர்களைக் கிறங்க வைக்கும்.
மெக்கனஸ் கோல்ட் போல் ஆக்க்ஷன் காட்ட முடியாவிட்டாலும், கெளபாய் தொப்பி போட்டு மனது ஆசுவாசப்படும். தியேட்டரைப் போலவே அங்கு வளர்ந்திருக்கும் வாகை, புன்னை மரங்கள் என்னை மிகவும் கவர்ந்ததவை. திராட்சைக் கொத்துகள் தொங்குவது போல பல நூறு தூக்கணாங்குருவி கூடுங்கள்.

சுற்றித் திரியும் பல நூறு குருவிகள், பகல் நேரத்திலும் அங்கு சென்று வர மனதைத் தூண்டும். எப்போதாவது கீழே கிடக்கும் கூடுகள் என் பொக்கிஷமாய் வீடு வரும். தியேட்டரின் எதிரில் எங்களுக்கு சொந்தமான வயல் வெளி இருந்தது. அங்கு சிறு கிணறும், அதை ஒட்டி வளைந்து நிற்கும் வாகை மரமும் நிறைய கூடுகளைப் பூக்களாய்த் தாங்கி நின்றது. பல சமயம் என் பொழுது போக்கு இடம் அதுவாகவே இருக்கும். அங்கு குருவிகளையும், அவை கூடு பின்னும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமூட்டும். சூழ்நிலையின் கட்டாயத்தில் வயல் வெளியை மிகக் குறைந்த விலைக்கு விற்க நேர்ந்தது. வாங்கியவர் முதல் நாளே அங்கிருந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். பதறிப்போன குருவிகளைப் பார்த்து என் மனது பதைபதைக்கத் துவங்கியது. குற்ற உணர்வும், மன வலியும் ஒன்று சேர அன்றிலிருந்து அந்தப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டேன்....
தூக்கணாங்குருவிகள் ஆசியப் பகுதிகள் முழுவதும், குறிப்பாக தென் பகுதி முழுவதும் காணப்படும் பறவை இனம். கூட்டம் கூட்டமாய் வாழும். பெரும்பாலும் வயல் வெளி சார்ந்த பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். அடர்த்தியான புதர்கள் ,நீரோடை சார்ந்த வனம் மற்றும் ஆற்றங்கரை ,குளக்கரையோரம் அமைந்த மரங்களில் வளைந்த கிளைகள், வயல் வெளி, கிணறுகளில் வளர்ந்த ஆல், அரசு, மரக்கிளைகளில் கூடு அமைக்கும். பெரும்பாலும் முள் மரம் அல்லது மிக உயரமான ,பிற ஜீவராசிகளின் தொந்தரவு இல்லாத நிலையில் மட்டுமே கூடுகளைப் பின்னத் துவங்கும். கூடுகளை நார், இலைகள் கொண்டு பின்னும். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விரவி, பரவிக் காணப்படும். இவை பிராந்தியம் சார்ந்து தங்கள் குணநலன்களை மாற்றிக் கொள்பவை. குறிப்பாக ,மழை மற்றும் உணவை மையப்படுத்தி, தங்கள் வாழ்வியல் முறையை மேற் கொள்கின்றன.
நாம் தவிட்டுக் குருவிகள் என அழைக்கும் சிட்டுக்குருவிகள் போல் காணப்படும் இவை ஏறத்தாழ அதே வண்ணத்தில், உருவ அமைப்பில் காணப்படுவதால் வித்தியாசம் காண்பது எளிதல்ல. 15 செ.மீ. அளவே உருவம் கொண்ட இவைகளின் பால் வேறுபாடு காண்பது எளிதல்ல. கூர்மையான வலிமையான அலகும், குட்டையான வாலும் மட்டுமே, இதை சிட்டுக்குருவிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். கண்கள் மிகக் கூர்மையான பார்வை சக்தி கொண்டவை. கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படும். வயது வந்த ஆண்கள் பளபளப்பான மஞ்சள் நிறம் பூசிய ,பழுப்பு நிறம் மேலோங்கிய தலைமுடி கொண்டிருக்கும். உணவின் இருப்பிடத்தை ஒரு குருவி அறிந்து விட்டால், தன் கூட்டத்தை மொத்தமாக அழைத்து வரும். இருப்பிடத்தை அடைந்த குருவிகள், பல்வேறு திசைகளிலும் பரவி, உணவை உட்கொள்ளும். முக்கியமாக நெல், கம்பு, கேப்பை போன்றவற்றை உண்ணும், வட மாநிலங்களில் கோதுமை வயல், திராட்சைத் தோட்டம் அமைந்த பிரதேசங்களைத் தேர்ந்தெடுக்கும். உணவு மிகக் குறைவாக இருந்தால் பயிர்களின் குருத்தை உண்ணும். இதனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இதை "தொல்லை தரும் குருவி" என அழைக்கிறார்கள். இதைக் கொல்வதற்காக விசேஷ பூச்சி மருந்து தயாரித்து ,"வயல்வெளிகளைப் பாழாக்கும் குருவிகளைக் கொல்வோம் " என்ற விளம்பரப் படத்துடன் இம் மருந்துகள் அங்கு விற்பனைசெய்யப்படுவது கொடுமை.
கர்ப்ப காலங்களில் தவளை ,மண்புழு , வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரிகளை உண்ணும். குஞ்சுகளுக்கும் அதையே ஊட்டும். பருவ நிலை மாற்றங்கள் இதன் வாழ்வின் பிரதான காரணிகளாகின்றன. இதன் வாழ்க்கைப் பற்றிய முழு விவரங்களைத் திரட்டுவது இன்று வரை கடினமாக உள்ளது. மிக வேகமாகப் பறக்கும் இவை, சிட்.....சிரிக் ....என குரல் எழுப்புகின்றன. பரபரப்பான சூழலில் சிரீக்...சிரீக்...என நீண்ட அலறலை வெளிப்படுத்தி தன் சகாக்களை எச்சரிக்கை செய்கின்றன. இதைத் தவிர, காமமுற்ற வேளைகளிலும், கர்ப்பம் தரித்த காலத்திலும், முட்டையிடும்போதும் இவ்வாறான நீண்ட அலறலை வெளிப்படுத்துகின்றன. உறவு கொள்ளும்போது, பரவசத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் இவ்வாறான நீண்ட குரலெழுப்புகின்றன.
மழைக் காலங்களையே இவை உறவுக் காலமாகத் தேர்ந்தெடுக்கின்றன. குறைந்தது ஒருமாத காலம், தொடர்ந்து உறவில்
ஈடுபடுகின்றன. சூழலுக்கு ஏற்ப, பகலிலும், இரவிலும் கூட இது தொடரும். வெப்ப காலங்களை மிக அரிதாகவே தேர்ந்தெடுக்கின்றன. பருவகாலங்களில் மட்டும் ஆணுக்கு இனப்பெருக்க உறுப்பு ,ஒரு நீட்சி போல உருவாகிறது. விந்து சுரப்பிகளும் அப்போது தான் உருவாகும். நீட்சியைப் பெண்ணின் புழைக்குள் உட்செலுத்துவதன் மூலம் விந்து நீரை பாய்ச்சுகிறது. பெண் கீழ் அமர்ந்து ,கிட்டத்தட்ட படுத்த நிலையில் வாலை செங்குத்தாகத் தூக்க ,ஆண் மேல் அமர்ந்து செயல்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் பருவம் கொண்ட தம்பதியினர் ஒன்று சேர்ந்து ,பல கூடுகளை உருவாக்குகின்றன. ஒரே இடத்தில் கொத்து கொத்தாகப் பல கூடுகளை நாம் காண இயலும். இவற்றின் எண்ணிக்கை 5---30 வரை இருக்கும். கூடு அமையப் பெறும் இடத்தில் உணவு, நீர்,மற்றும் கூடு அமைப்பதற்கான புல், இலை, நார் போன்ற உப பொருட்களும் இருத்தல் வேண்டும். ஆண்குருவிகளே கூடுகளைப் பின்னும். பெண் அவ்வப் போது உதவும். பெண்ணே கூடு கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும். கீழ் நோக்கித் தொங்கும் குழாய் போன்ற அமைப்பு கொண்ட கூடைக் கண்டு பிரமித்த லியனார்டோ டாவின்சி இதை " உலகின் பேரதிசயம்" என புகழ்கிறார்.இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கூடே உலகின் மிகப் பெரிய பறவைக் கூடு என கருதப்படுகிறது.இதன் நீளம் சுமார் 2 அடி.
நீண்ட குழல் போன்ற அமைப்பு கொண்ட இதன் கூடுகள் ,மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ,சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்டதாக இருக்கும். முதல் அறை நுழைவு மற்றும் ஆணின் ஓய்வு அறை, இரண்டாவதாகப் பெண் மற்றும் குஞ்சுகளுக்கான பிரத்யேக அறை ,மூன்றாவது வெளியில் செல்ல ஏதுவாகப் பின்வாசல் அமைப்போடு பின்னப்பட்ட அறை. கடினமான புற்களையும், வைக்கோல் ,மர நார்களைக் கொண்டு கூடு பின்னப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட சுமார் 500---1000 புற்கள் தேவைப்படும். மிக நேர்த்தியாக அடர்த்தியாக அமையப் பெற்றிருக்கும். ஒவ்வொரு புல்லும் 30 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். எப்போதும் இக்குருவிகள், தாம் கட்டும் மரத்தின் தென் பகுதியையே தேர்ந்தெடுக்கும். கிழக்கிலிருந்து வீசும் காற்றும் , மழையும் குஞ்சுகளைத் தாக்காத வாறு ,இதன் கால ,இட தேர்வு அமையும். இதைக் கண்டு, விவசாயிகள் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என அக்காலத்தில் நம்பினர். அதற்கேற்ப குருவிகளும், பருவமும் அப்போது ஏமாற்றவில்லை.கருங்குருவிகள் ,இதன் கைவிடப்பட்ட கூடுகளைக் கையகப்படுத்தி ,தனது இருப்பிடமாக்கிக் கொள்ளும். இளம் குருவிகள் முதிர் குருவிகளின் கூடுகளுக்கு அருகில், கூடு கட்டிப் பழகும்.
பர்மாவில் காணப்படும் குருவிகள் ,வீடுகளின் மாடியில் ஒரு மூலையில் கூடமைக்கும் குணம் கொண்டவை. இது இந்நாட்டுக் குருவிகளுக்கு மட்டுமே உரித்தான குணம். அதற்கேற்ப அம்மக்களும், தங்கள் இல்லங்களின் மூலையில் இதற்கான தனி அமைப்பை உருவாக்கி வைக்கின்றனர். ஆண் குருவி ஒரு கூட்டைப் பின்னி முடிக்க 18--20 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பெண் முதல் கட்ட பணிகளை ஆராய்ந்து, தனது கற்பனைக்கேற்ப கூட்டில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னால் ஆணும் உடனடியாக தலைபடுகிறது. சில நேரங்களில் 75 சதவீத பணி முடிந்த பின்னும் ,பெண் கூட்டை நிராகரித்தால், ஆண் சளைக்காமல் புதிய கூட்டைப் பின்னத் துவங்கும். அப்போது 8 நாட்களில் அவை பின்னி முடிக்கிறது. கூட்டைப் பலப்படுத்தவும், தட்ப வெப்ப நிலையை சீராக வைக்கவும் ,பெண் களிமண் உருண்டைகளைக் கொணர்ந்து கூட்டின் உட்பகுதியில் பூசும். ஆணும் இப்பூச்சு வேலையில் பங்குகொள்ளும். அப்போது காதல் லீலைகளும் நிகழும். ஆண்மைக்கான நிரூபணமாக ,அழகாக களிமண் பூசும் ஆணையே பெண் விரும்புகிறது.

காரல் ஆண்டர்சன் நடத்திய தற்போதைய ஆய்வின் மூலமே இது தெரிய வந்திருக்கிறது. ஆணும், பெண்ணும் ஒரே சமயத்தில் பலருடன் உறவில் ஈடுபடும். ஆண், தனது மனைவியருக்காகப் பல கூடுகளைத் தயார் செய்து கொடுக்கும். சில சமயங்களில் தான் கட்டிய கூட்டிற்குப் பல பெண்களை அழைத்து வரும். இது பெண்களுக்கிடையேயான யுத்தத்தில் முடியும். அபூர்வமாக ஒரே கூட்டில் இரு பெண்கள் முட்டையிடும். 3--4 முட்டைகள் இடும். 14---20 நாட்கள் அடைகாத்தலுக்குப் பின் குஞ்சு வெளிவரும். பெண்ணே, குஞ்சைப் பராமரிக்கும். அவ்வப்போது ,ஆணும் உதவிசெய்யும். 6 மாத காலப் பராமரிப்புக்கு பின், குஞ்சுகள் தன் பெற்றோரைப் பிரிந்து தனி வாழ்க்கை மேற்கொள்ளும். ஒரு வருட வளர்ச்சிக்குப் பின் பருவம் எய்திய ஆணும், பெண்ணும் உறவுக்குத் தயாராகும். குறைந்தது 4 வருடங்கள் வாழும். உடலில் ஏற்படும் வர்ண மாற்றத்தின் மூலம் தாங்கள் பருவமெய்தியதை வெளிப்படுத்தும். காதலின் முதல் நிகழ்வாக ஆணும், பெண்ணும் இறக்கைகளை அடித்து ,மெல்லிய நடன அசைவுகளைப் பறந்தபடியே தரும்.
அபுல் ஃபசல் எழுதிய "அய்னி அக்பரி"யில் அக்பர் காலத்தில், கிளிகளைப் போல் இக்குருவிகளையும் மனிதர்கள் பிடித்து ,பயிற்றுவித்து ,சிறு வித்தைகள் செய்யப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.பயிற்சியாளன் குரல் எழுப்பியதும், கீழே உள்ள கூழாங்கற்களைக் கொத்தி எடுத்து வந்தும், அதே போல் ,கீழே கிடந்த காசை எடுத்து வந்து தந்ததையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். ஜோர்டன் என்ற ஆய்வாளர் 1926ல் தான் எழுதிய கட்டிட கலை தொடர்பான புத்தகத்தில் இதையே செய்திருப்பதுடன்,இவற்றை "சிறந்த கட்டிடக் கலைஞன் " என்ற புகழாரம் சூட்டுகிறார். 1924 ல் டாக்டர் டி.பி. பிளட்சர் எழுதிய "இந்திய தோட்டக் குருவிகள்" என்ற புத்தகத்தில் பஞ்சாபில் நிலவும் ஒரு பழங்கதையை மேற்கோள் காட்டுகிறார். ஒரு குரங்கு தூக்கணாங்குருவிகளைப் பார்த்துக் கேலி செய்து ,அதன் கூட்டைப் பிரித்து துரத்தி அடித்து, தன் உருவத்தோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தியதாம். அக்குருவிகள் பேசாமல் மெளனம் காத்தன. மழைக் காலம் வந்ததும், குருவிகள் தான் கட்டிய வீட்டில் நனையாமல் பத்திரமாய் இருக்க, குரங்கோ மழையில் நனைந்து வீடில்லாமல் ,உணவில்லாமல் வருந்தியதாம். " உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்ற அறநெறி அடிப்படையில் இக்கதை புனைவிக்கப்பட்டிருக்கிறது. மின்மினிப்பூச்சிகளை வெளிச்சத்திற்காக இவை பிடித்துச் சென்று தன் கூட்டில் வைத்துக் கொள்ளும் என்ற புனைவு நம்மிடத்தில் உள்ளது.
புற்றீசல் போல் தோன்றியுள்ள செல்போன் டவர் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளின் கர்ப்பப்பை மட்டும் தாக்கப்படவில்லை. தூக்கணாங்குருவிகளின் கருவும் கலைந்து ,குருவிகளே அற்றுப் போகும் நிலைக்கு வந்துவிட்டது. வயல் வெளிகளில் தெளிக்கப்படும் கொடூரமான ரசாயன மருந்துகளும் இதன் உயிருக்கு உலை வைத்து விட்டது. தற்போதெல்லாம் தூக்கணாங்குருவிக் கூடுகளை எந்த ஊரிலும் எளிதாக காண இயலவில்லை... வருத்தமாக உள்ளது...
-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நன்றி: உயிரோசை இணையம்