ஞாயிறு, மே 02, 2010

"பூவுலகு" இதழுக்கு 'சுஜாதா விருது 2010' !

உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து சுஜாதா பெயரில் ஆறு விருதுகளை கடந்த பிப்ரவரி 27 அவரது இரண்டாவது நினைவு தினத்தன்று அறிவித்தன. சுஜாதா பெயரில் சிறுகதை, கவிதை, நாவல், உரைநடை, சிற்றிதழ், இணையம் ஆகிய ஆறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகளுக்கு நடுவர்களாக முறையே இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி, பிரபஞ்சன், திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட இணக்கம் தெரிவித்தனர்.

சுஜாதா சிற்றிதழ் விருது: பூவுலகு

தேர்வு: திலீப் குமார்

'பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழ் மதிப்பு மிக்க லட்சியங்களோடு சிறப்பான தரத்தில் வெளிவருவது மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. முன்எப்போதையும் விட சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளும் அம்சங்களும் நமது வாழ்வில் இன்றியமையாத பகுதிகளாகிவிட்டன. இவை குறித்த ஒரு சரியான விழிப்புணர்வை நாம் பெற்றிருக்கவேண்டியது அவசியம் மட்டுமல்ல; நமது கடமையும் கூட.


தொண்ணூறுகளுக்குப் பின், தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் சமூகவியல், பொருளாதாரம், தத்துவம், நுண்கலைகள் என தங்கள் எல்லைகளை விரித்துக் கொண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை அவற்றால் ஓரளவுக்கே கவனப்படுத்த முடிந்துள்ளது. "பூவுலகு" இதழை நடத்தும் "பூவுலகின் நண்பர்கள்" குழுவினர் தமிழ் சிற்றிதழ்களோடும் முற்போக்கு இயக்கங்களோடும் நீண்ட தொடர்புடையவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் நூல்களும் தமிழில் வெளியாக முன்னோடிகளாகச் செயல்பட்டவர்கள்.


கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் விளைவுகளும் பயன்களும் ஒரு பத்திரிகையின் ஒருங்கிணைப்பில் மேலும் துலக்கம் பெற வாய்ப்புள்ளது. இத்தகைய ஒரு முக்கிய தேவையை "பூவுலகு"இதழ் நிறைவு செய்கிறது. அதோடு தொடர்புடையவர்கள் இக்காரியத்தைச் செய்வதற்கான முழுத் தகுதியுடையவர்களாகவும் இருக்கிறார்கள். "பூவுலகு"இதழின் தொனி, உள்ளடக்கம், வடிவமைப்பு ஆகிய எல்லா அம்சங்களிலும் அவர்களின் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் வெளிப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேல், ஒரு கால் நூற்றாண்டாக, ஆழ்ந்த பொறுப்புணர்வோடும், விரிவான அக்கறைகளோடும் இயங்கி வரும் இவர்களது பணி மகத்தானது.