ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

உயிருள்ள பட்டாம்பூச்சியை உருவாக்க முடியுமா?



வெறும் ஐந்தாம் வகுப்பே படித்த ஒருவர் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இன்னும் சொல்லப்போனால் அவர் கல்லூரி பேராசிரியர்களுக்கும், பி.எட் படிக்கும் வருங்கால பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட வகுப்புகள் எடுக்கிறார். எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். மூன்று சிறு படங்களை எடுத்திருக்கிறார்.

தனது கடும் உழைப்பாலும் கரையில்லாத கற்கும் ஆர்வத்தாலும் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த கோவை சதாசிவம். அவருடன் பேசியதிலிருந்து...,

"" எனது முப்பாட்டன், பாட்டன் காலத்திலிருந்து முதன்முதலாக 5 ஆம் வகுப்பு வரை படித்த முதல் ஆள் நான்தான். ஐந்தாவது வரைக்கும் கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள பாலரங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தேன். அப்போது என் அப்பாவால் ரூ.200 பள்ளிக் கட்டணமாகச் செலுத்த முடியவில்லை. அதோடு என் படிப்பு முடிந்தது.

அப்புறம் தினக்கூலி வெறும் ஐம்பது பைசாவுக்கு ஒரு லேத் பட்டறையில் சேர்ந்தேன், குழந்தைத் தொழிலாளியாக. ஆனாலும் படிப்பின் மீதிருந்த என் ஆர்வம் குறையவில்லை. நிறையப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். கவிதையின் மீது ரொம்ப ஆர்வம் இருந்தது. எனது 17 - 18 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அதற்குப் பின்பு சைக்கிள் கடை வைத்தேன். சைக்கிள் கடையில் நிறைய நேரம் இருந்தது. நிறையப் புத்தகங்களைப் படித்து என் அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தொகுத்து "பரிணாமங்கள்' என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தேன். அந்தப் புத்தகம் கொண்டு வருவதற்கான செலவை சைக்கிள் கடையிலிருந்த சைக்கிளை விற்றுச் சமாளித்தேன்.

இப்படியே போனால் ஒன்றும் இருக்காது என்று நினைத்த என் மனைவி எதிர்ப்புத் தெரிவித்தார். அதனால் சைக்கிள் கடை முழுவதையும் இன்னொருவருக்கு விற்றுவிட்டு திருப்பூருக்கு 1983 இல் வந்தேன். திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் கட்டிங் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன்.

திருப்பூர் அப்போது நகர்மயம் ஆகத் தொடங்கியிருந்தது. அது தனது பழைய முகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. அதன் நீர் வளம் சுருங்கிக் கொண்டிருந்தது. நிலத்தடி நீர் ரசாயனப் பொருட்களாலும், சாயத் தண்ணீராலும் நாசமாகிக் கொண்டிருந்தது. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. இதைப் பற்றி 64 பக்கமுள்ள "பின்னல் நகரம்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன்.

சுற்றுச் சூழல் பற்றி இன்று உள்ள அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத அன்றையக் காலத்தில் இந்தப் பிரச்னை குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூலாக அனேகமாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் பரவலாக அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தது. அப்படிக் கவரப்பட்டவர்களில் ஒருவர் காளிதாசன். அவரால் என் வாழ்க்கையின் போக்கு மாறப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியாது.

நண்பர் காளிதாசன் "ஓசை' என்ற பெயரில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். வருகிறார். அந்த அமைப்பின் மூலமாக அவர் பல கல்லூரிகளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வந்தார். என்னுடைய புத்தகத்தைப் படித்த அவர், எனக்குக் காடுகளைப் பற்றி அதிகம்
தெரிந்தால் நான் அவற்றைப் பற்றி நன்றாக எழுதுவேன் என்று நினைத்தார். அதனால் என்னைக் காடுகளுக்கு அழைத்துச் சென்றார். அப்புறம் அவர் வகுப்பு எடுக்கும் மாணவ, மாணவியரிடையே என்னையும் வகுப்புகளை எடுக்கச் சொன்னார்.

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் மாணவ, மாணவியரை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாம் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. அந்த வெளியூர் முகாம்களில் பலவித நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மருத்துவமுகாம், ரத்த தான முகாம், எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி முகாம் என்று பலவித முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதில் சுற்றுச் சூழல் முகாமும் ஒன்று. இந்தச் சுற்றுச் சூழல் முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுக்கும் வேலையைத்தான் தற்போது செய்து வருகிறேன். பனியன் தொழிற்சாலையில் கட்டிங் மாஸ்டர் வேலையை விட்டுவிட்டுவிட்டேன்.

மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வெறும் கரும்பலகையில் எழுதிப் போடுவதாலோ, சொற்பொழிவு நிகழ்த்துவதாலோ அந்த அளவுக்கு ஆர்வத்தை உருவாக்க முடியாது என்று நினைத்தேன்.

எனது கவனம் இதனால் சிறு படங்களை எடுப்பதில் திரும்பியது. "மண்' என்ற 9 நிமிடங்களே ஓடும் குறும்படத்தை எடுத்தேன். அதில் மண்ணில் நாம் ஏற்படுத்தும் மாசுகளைப் பற்றி மண்ணே நம்மிடம் பேசும். இந்த குறும்படம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்துவிட்டது.

மயில் நமது தேசியப் பறவை. ஆனால் அதை கோவைப் பகுதியில் உள்ள விவசாயிகளில் சிலர் அடியோடு வெறுத்தனர். மயில் தங்களுக்குத் தொந்தரவு செய்கிறது என்று நினைத்தார்கள். இத்தனைக்கும் அங்கிருந்த மயில்கள் அவர்களால் வளர்க்கப்பட்டவையல்ல. பிற ஊர்களில் காக்கைகள் இருப்பதைப் போல அந்தப் பகுதிகளில் மயில்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் மயில்களை விஷம் வைத்து கொல்லவும் சில விவசாயிகள் துணிந்துவிட்டனர். மயில்கள் விவசாயிகளின் நண்பன். வேளாண்மைக்குக் கேடு செய்யும் புழு, பூச்சிகளை உண்டு உயிர் வாழ்பவை என்பதை வலியுறுத்தும் வகையில் "மயில்' என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். அதற்காக தமிழ்நாட்டில் மயில்கள் வாழும் பல இடங்களுக்குப் பயணம் செய்தேன்.

அடுத்து நான் எடுத்தது "சிட்டு' என்ற விவரணப்படம். அது 16 நிமிடம் ஓடக் கூடியது. நகர்மயமாதலினால் நீர்நிலைகள், மரங்கள் அழிந்து போகின்றன. சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கான சூழ்நிலை நகரங்களில் இல்லாமற் போகிறது. எனவே சிட்டுக் குருவிகள் நகரங்களில் காணாமற் போகிறது. சிட்டுக் குருவிகள் இல்லாத இடம் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற இடமாகத்தான் போகப் போகிறது என்பதைச் சொல்லும் படம்தான் "சிட்டு'

இப்போது நீர்வாழ் பறவைகள் பற்றிய படம் ஒன்றை எடுத்து வருகிறேன்.

இப்படி வகுப்புகள் எடுப்பதுடன் நின்றுவிட்டால் சுற்றுச் சூழலைக் காப்பாற்ற முடியாது என்பதால் சுற்றுச் சூழல் சீர்கேட்டை எதிர்த்து நடக்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து ஆர்வமாக வரும் மாணவர்களையும் என்னுடன் இணைத்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மிகுந்த அபாயமுள்ள சுற்றுச் சூழல் சீர்கேடு மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் நடைபெற்று வருகிறது.

குமரி முதல் மகாராஷ்டிரம் வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 29 லட்சம் ஏக்கர் பரப்புள்ள காடுகளை அழித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான அமராவதி, பவானி, நொய்யல் போன்ற ஆறுகளின் பிறப்பிடமும் அதுதான்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளை அழிப்பதனால் மழை பெய்வது குறைந்தால் நமக்கு விவசாயம் செய்யத் தண்ணீர் எப்படிக் கிடைக்கும்?

ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் நிறைய கல்வி நிறுவனங்கள், மடங்கள், ஓட்டல்கள், உல்லாச விடுதிகள், பெரிய நிறுவனங்களின் புதிய புதிய காப்பி, தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்குத் துரத்தப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, அங்குள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. வனவிலங்குகள் வாழ முடியாமல் போகின்றன. வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றன.

குறிப்பாக யானைகள் உலாவும் இடங்களை மேற்குத் தொடர்ச்சி மலையில் அழித்து வருகிறோம். அவை காடுகளை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் நகரின் சூலூர் பகுதி வரை வந்துவிடுகின்றன. அப்படி வரும் யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. இது நல்லதல்ல.

மனிதர்களைவிட யானைகள் அதிக அளவில் காடுகளை உருவாக்கும். எப்படி என்கிறீர்களா? காடுகளில் வாழும் யானைகள் ஓர் இடத்தில் அப்படியே இருக்காது. அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்கும். அப்படிப் போகும்போது ஒருநாளைக்கு அவை 16 முறை சாணம் போடும். அதன்மூலம் நிறைய விதைகளை அவை காடுகள் முழுக்க விதைத்துக் கொண்டே போகின்றன. இதனால் காடுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

இது நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பூமி. இதை நாம் நமது வருங்காலத் தலைமுறைக்கு எந்தப் பழுதுமில்லாமல் விட்டுச் செல்ல வேண்டும். மனிதன் தன் லாப நோக்கத்தினால் சுற்றுச் சூழலை நாசம் செய்கிறான். எவ்வளவோ விஞ்ஞானிகள் எத்தனையோ புதிய புதிய இயந்திரங்களை உருவாக்கலாம். ஆனால் உயிருள்ள ஒரு பட்டாம்பூச்சியை உருவாக்க முடியுமா? எனவே சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதே எனக்கு இப்போது முக்கியமான வேலையாகிவிட்டது'' என்றார் அந்த முன்னாள் லேத் பட்டறைத் தொழிலாளி.
Align Right
-ந. ஜீவா

நன்றி: தினமணி கதிர், 06-09-2009

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

முதல்வர் கருணாநிதியின் முன் 2 கேள்விகள்

விவசாயம் செய்பவர்கள் பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளிடம் மட்டுமே தங்களுக்கு வேண்டிய அறிவை இனிமேல் பெற வேண்டும். தந்தையின் அனுபவ அறிவைப் பெறுவதுகூட சட்டவிரோதம். அதற்கு அத் தந்தை இனி தண்டிக்கப்படுவார்.

""இனி இவர்கள் சொல்வதை மட்டுமே தமிழக விவசாயிகள் கேட்க வேண்டும்...'' என்ற சட்ட மசோதாவை முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது.

தாத்தாவின் விரல் பிடித்து, தந்தையுடன் வயலில் நடந்து சென்று, விவசாய அறிவை சிறுவயது முதல் சுவீகரித்து வளர்ந்தது தான் விவசாய சமூகம். முன்னோர்களிடமிருந்து, பெற்ற அறிவை தலைமுறைக்குத் தலைமுறை மேம்படுத்தி வந்ததன் விளைவே நிலவள மேம்பாடு, கால்நடைகள் மேம்பாடு, விதை உற்பத்தி, புதிய ரகங்களை உருவாக்குதல், பூச்சிக் கட்டுப்பாடு, பருவத்திற்கேற்ற, மண்ணின் தன்மைக்கேற்ற ரகங்கள் உருவாக்கம் எனப் பலதும் நடந்தது. பச்சைப் புரட்(டு)சிக்கு முன் இந்தியாவில் இருந்த 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் ரகங்கள் எல்லாம் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயிலாத "பாமர' விவசாயிகள் இப்படி மேம்படுத்திய அறிவின் விளைவால் உருவானதே.

பல்கலைக்கழகங்கள், பச்சைப்புரட்சி என்றுகூறி இந்த விதைவளத்தையும், விவசாயியின் அறிவையும் சிதைத்து, பண்ணையில் பயிரிடப்பட்ட பயிர்களின் வகைகளைக் குறைத்தது. ஒவ்வொரு பயிரிலும் இருந்த ரகங்களின் எண்ணிக்கையையும் அழித்தது. 10,000 ஆண்டுகள் சிதையாதிருந்த இந்திய வேளாண்மையை தனது உலக வணிக மேலாதிக்கத்துக்காக ஆங்கில அரசு சிதைத்திருந்தது. அமெரிக்காவின் ரசாயன விவசாய மாதிரியை விவசாயக் கல்வியாக்கிக் கொண்ட விவசாயப் பல்கலைக்கழகங்கள் மூலம் ஏற்கெனவே சிதைவுற்றிருந்தது, மேலும் சிதிலம் அடைந்தது. கடன் வாங்குவதே கேவலம் என்றிருந்த சமூகத்தை ""கடன் தள்ளுபடி செய், இல்லாவிடில் வாழ முடியாது'' என்ற நிலைக்குத் தள்ளி மானமிழக்கச் செய்தது இந்த விவசாயமுறை.

அறுபதுகளின் கடைசிவரையில், ஆங்கிலேயரின் கொள்கைகளால் சிதைவுற்றிருந்த பின்னரும், ஒரு விவசாயி தன் மகனுக்குப் படிப்பு ஏறாவிட்டாலும் "மாடும் காடும் உள்ளது, பிழைத்துக் கொள்வான்' என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், இன்றோ எல்லா தந்தையருமே விவசாயத்தை விட்டு ஓடிவிட முயல்கின்றனர். ""எங்கள் கிராமம் விற்பனைக்கு'' என்று வார்தா அருகே டோர்லி கிராமம் தன்னையே விற்க விளம்பரம் செய்த அவலம், திணிக்கப்பட்ட விவசாய முறையின் விளைவு. அரசின் கொள்கைகள் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் விதமாகவே உள்ளது. கம்பெனிகள் ஆயிரமாயிரம் ஏக்கர்களில் நிலம் வாங்குகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியக் கம்பெனிகள் விவசாயக் கம்பெனிகள் தொடங்கி பல்லாயிரம் ஏக்கர்களை வளைத்துப் புதிய காலனி ஆதிக்கத்துக்கு இந்திய அரசின் உதவியோடு அச்சாரம் போடுகின்றன.

நிறைய விளைந்து தள்ளிய விவசாயம் இங்கிருந்தது என்பதற்கும், ஆங்கிலேய அரசால் அது சிதைக்கப்பட்டது என்பதற்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகள் பல இன்னமும் அழியாமல் உள்ளன.

பச்சைப் புரட்சியையும் அமெரிக்க மாதிரி விவசாய முறையையும் ஆதரிப்பவர்கள் 1940-களில் நிகழ்ந்த வங்க பஞ்சத்தையே காரணம் காட்டுகின்றனர், ஓர் உண்மையை மறைத்து. 30 லட்சம் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த அதே காலத்தில் கோல்கத்தா துறைமுகத்திலிருந்து உலக வர்க்கத்துக்காக கப்பல் கப்பலாக அரிசியையும், சர்க்கரையையும் ஏற்றுமதி செய்தது ஆங்கில அரசு. பஞ்சத்துக்கான உண்மையான காரணம் விளையாததல்ல, விளைந்ததைப் பிடுங்கியதும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததுமே.

விவசாயம் என்பது வெறும் பயிர் வளர்ப்பதல்ல. அற்புதமான வாழ்வு முறை. எந்தவொரு அரசனின், அரசின் கையையும் எதிர்பார்க்காது வாழ்ந்த உன்னத வாழ்வு முறை. அதை கம்பெனிகள் நலனுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட இரவல் அறிவு வெறும் வணிகத்திற்கு சுருக்கியது.

இதனுடைய விளைவு 10,000 ஆண்டுகால நம்பிக்கை சிதைந்தது மட்டுமன்றி நீர் கெட்டது, கிணறுகள் வறண்டன, நிலம் மலடானது.

இந்தச் சிதைவையும் இதற்கான காரணத்தையும் அறிந்த சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகிழ்த்தனர். கிராமத்து மக்களின் கதைகளிலும், பழமொழிகளிலும் விடுகதைகளிலும், நாட்டுப்புற இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் விவசாய அறிவை மீட்டெடுத்து அதை அறிவியல் விளக்கங்களுக்கு உட்படுத்தி விவசாயிகளிடமே திரும்பத் தந்தனர். இது அவர்களுக்கு புதிய அறிவைக் கொடுப்பதாக அல்லாமல் அவர்தம் அறிவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் "விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக' இயக்கமாகத் தொடங்கியது இன்று தமிழகத்தின் எல்லா வட்டங்களுக்குமாகப் பரவியுள்ளது. இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. உலகில் உள்ள பலவகையான இயற்கை விவசாய முறைகளையும் அறிந்து தத்தமது பண்ணைச் சூழலுக்கும், கிராமச் சூழலுக்கும் ஏற்ப தன்மயப்படுத்தி பரப்பினர். வேளாண் பல்கலைக்கழகம் அறிவதற்கு முன்பே முதலமைச்சர் கருணாநிதி செம்மை நெல் சாகுபடி என்று பெயரிடப்பட்ட சாகுபடி முறையை 1999-லேயே தமிழக விவசாயிகள் கடைப்பிடித்து ஒற்றை நாற்று நடவு என்று பெயரிட்டுப் பரப்பினர். இவையனைத்தும் அரசின் உதவியோ, வேறு வெளி உதவிகளோ இன்றி நடந்தேறியது.

இயற்கை வழியில் விவசாயிகள் பெற்ற தன்னம்பிக்கையும், சுயசார்பையும் கண்ணுற்ற பிற விவசாயிகளும் பல்கலை அறிவியல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். இவ்விரு பிரிவினரும் பல்கலைக்கழகத்தின் அறிவைக் கேள்விக்குறியாக்குகின்றனர். பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைக்கின்றனர். கம்பெனிகளுக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மரபணு மாற்றுப் பருத்தியை ஆதரிக்கத் தொடங்கிய பின் வேளாண்மைப் பல்கலை எத்தனை பருத்தி ரகங்களை வெளியிட்டுள்ளது என்று வினா தொடுக்கின்றனர். செலவுமிக்க பி.டி. பருத்தி மூலம் அதிகம் விளைகிறதா, புழு கட்டுப்படுகிறதா அல்லது பல்கலைக்கழகமே பாராட்டிப் பரப்பிய எளிய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் அதிகம் விளைகிறதா, புழுக்கள் கட்டுப்படுகிறதா என்று ஒப்பீட்டாய்வை ஏன் செய்யவில்லை என்கின்றனர். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் எல்லா வணிகப் பயிர்களிலும் 30 - 50 சதவீதம்வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும் என்று சொன்ன பல்கலைக்கழகம் இப்போது ஏன் அம்முறைகளைப் பற்றிப் பேசுவதில்லை, அதை ஏன் அமுக்கிவிட்டது என்று கேட்கின்றனர்.

இப்படி விவசாயிகளும், விவசாய சங்கத் தலைவர்களும் கேள்விகள் கேட்பது பல்கலைக்கழகத்திற்கு மட்டும் நெருடலாக இருக்கவில்லை. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையை 70 சதத்திலிருந்து 20 - 25 சதமாகக் குறைக்க வேண்டும், கம்பெனிகள் விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற உலகமய, உலக வங்கிப் போக்குகளுக்கு எதிராக இருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் நடமாடும் விவசாயக் களஞ்சியமாக மாறுவதும் இரவல் அறிவின் அர்ச்சகர்களுக்கு நெருடலாக இருக்கிறது. இவை அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடந்தேற வேண்டிய "சில' திட்டங்களை நடந்திடாது தடுத்துவிடும் என்பதால் தமிழக அரசைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் வெளிப்பாடே பட்ஜெட் தொடரின் கடைசி நாளன்று எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்ட 30 சட்ட மசோதாக்களில் ஒன்றான இச்சட்டம். தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் - 2009 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட இம் மசோதாவை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஆற அமர அதைப் படிக்கும்போது, ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடிய ஒரு மோசமான சட்டத்திற்கு வாக்களித்தோம் என்பதை உணர்வார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் முன் இப்போது இரு வழிகள் உள்ளன. தனக்கும் தம் ஆட்சிக்கும் பழியைச் சேர்க்க இருக்கும் இந்தச் சட்டத்தை முற்றாக ரத்து செய்வது. ஏனெனில் இத்தகு மன்றத்திற்கு எவ்விதத் தேவையும் இல்லை. மற்றொன்று தமது அரசு கம்பெனிகளின் போக்கில் போகிறது என்பதைக் காட்டும்விதமாக இம்மசோதாவை உடனே சட்டமாக்குவது.

முடிவு முதல்வரிடம்!

இரா, செல்வம்
நன்றி: தினமணி 04-09-2009

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்



Saw Fishஅழகாக இருப்பது ஆபத்தானதா? குரங்கினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிறவியான தேவாங்கைப் பொருத்தவரை ஆபத்துதான்.

தெற்காசிய காடுகளில் வாழும் சிறிய பாலூட்டியான தேவாங்கு, காட்டுயிர் கள்ள வர்த்தகத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. நம்மூர் வசைமொழிகளில் ஒன்றாக இந்த காட்டுயிரின் பெயர் பயன்படுத்தப்பட்டாலும், உண்மையில் இது அழகான உயிரினம். ஜப்பானில் இதை செல்லப் பிராணியாக வளர்க்க பணக்காரர்கள் விரும்புகின்றனர். ஒரு தேவாங்குக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.5 லட்சம் தர அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

சிறிய உடல் கொண்ட, இரவில் நடமாடும் இந்த தேவாங்கு காடுகளில் கண்ணி வைத்து பிடிக்கப்படுகிறது. பிறகு அதன் பற்கள் பிடுங்கப்பட்டு வீட்டு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தப்படுகிறது. அல்லது குட்டியாக இருக்கும்போதே பிடிக்கப்பட்டுவிடுகிறது என்று சைட்ஸ் (CITES) அறிக்கை தெரிவிக்கிறது. உணவுப் பொருளாகவும், பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுவது, மற்றொருபுறம் தென்கிழக்கு ஆசியாவில் கடுமையாக மரம் வெட்டப்படுவதன் காரணமாக, பாரம்பரியமாக வாழும் பகுதிகளில் இருந்து தேவாங்கு மறைந்துவிட்டது.

ஐ.நா.வின் துணை நிறுவனங்களில் ஒன்றான 'அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் விற்பனையை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு' (UN Convention on International Trade in Endangered Species (CITES)) உலகிலுள்ள காட்டுயிர்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. உலகிலுள்ள 33,000 தாவர, காட்டுயிர் வகைகளில் முறையின்றி விற்பனை செய்யப்படுபவை எவை என்று இந்த அமைப்பு கண்காணிக்கிறது. இந்த அமைப்பில் 171 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

உலகின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருளாக, மருந்துப் பொருளாக, செல்லப்பிராணியாக வளர்க்க சந்தைகளில் விற்கப்படும் காட்டுயிர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை சைட்ஸ் அமைப்பு சமீபத்தில் மறுபரிசீலனை செய்தது. அந்த அமைப்பு சமீபத்தில் எடுத்த முடிவுகளின்படி, கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட வேண்டிய சில காட்டுயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தேவாங்கை கடத்தி விற்பனை செய்வதை இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. கள்ளச்சந்தையில் இந்த காட்டுயிர் மோசமான பாதிப்பை சந்திப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிசய உயிரினங்களில் ஒன்றான ரம்பமீன் (saw fish) மின்சக்தியை பாய்ச்சும் தன்மை கொண்டது. இந்த மீன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. தனித்தன்மைமிக்க மூக்கு அல்லது முன்பகுதியே இந்த மீன் கடத்தப்பட்டு விற்கப்படுவதற்கு முக்கிய காரணம். முன்பு வாழ்ந்த இடங்களில், தற்போது இந்த மீன்களின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது.

இந்த மீன் வகையின் மற்ற பாகங்களுக்கும் கிராக்கி அதிகம். சுறா துடுப்பு சூப் தயாரிக்கப்படுவதைப் போல, இந்த ரம்பமீன் துடுப்பு சூப்பும் ஆசியாவில் பிரபலம். தென்னமெரிக்காவில் நடத்தப்படும் கோழிச்சண்டையில், கோழிகளின் கால்களில் கட்டப்படும் சிறு கத்திகளுக்கு இவற்றின் பற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆபத்தில் உள்ளவை

அழியும் ஆபத்தில் உள்ள மற்றொரு காட்டுயிர் முள் நாய்மீன் (spiny dogfish). சுறா வகையைச் சேர்ந்த இந்த மீன் பிரிட்டன் உணவுப் பட்டியலில் 'ராக் சால்மன்' என்ற பெயரில் வறுத்து விற்கப்படுகிறது. ஐரோப்பிய, வடஅமெரிக்க கடற்பகுதிகளில் அதிகமாக பிடிக்கப்படுவதாக தகவல்கள் கூறினாலும், சர்வதேச சந்தையில் இதன் விற்பனையை தடை செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

Porbeagle Sharkபாப்கேட் என்று தவறாக அடையாளம் காணப்பட்டு பிற காட்டுயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருப்பதால், காமன் பாப்கேட்டை (common bobcat) விற்பனை செய்வதற்கான சர்வதேச தடை தொடருகிறது. இந்த காட்டுப்பூனைகள், அவற்றின் பாகங்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால், தடையை விலக்கினால் அவற்றைப் போன்ற தோற்றம் கொண்ட இதர அரிய பூனைகள் (எ.கா. லிங்க்ஸ் - சிறுத்தை போன்ற காட்டுயிர்) கொல்லப்பட அதிக வாய்ப்புள்ளதால் அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பாப்கேட்டை கொல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பூனையை விற்கலாம். இப்பொழுதும் சர்வதேச மயிர்ப்போர்வை (Fur coat) சந்தையில் இந்த பூனையின் தோல் விற்கப்படுகிறது.

அழகாக இருப்பது மட்டுமல்ல, அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட கொல்லப்படுவதில் இருந்து காட்டுயிர்கள் தப்பிக்க முடிவதில்லை. மனிதனைவிட தந்திர உபயம் குறைந்ததாக இருந்தால் அவற்றைக் கொல்வது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. போர்பீகிள் சுறா (porbeagle shark) இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் மாமிசத்துக்கும், துடுப்புகளுக்கும் இந்த இரைகொல்லி டன்டன்னாக பிடிக்கப்படுகிறது.

பாரம்பரிய வாழிடங்களில் போர்பீகிள் சுறாக்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவிகிதம்கூட தற்போது இல்லை. இந்த காட்டுயிரை கொல்வது சர்வதேச அளவில் தடை செய்யப்படவில்லை. இந்த சுறா எண்ணிக்கையை நிர்வகிப்பது மண்டல அளவிலான பிரச்சினை என்று சைட்ஸ் கூறிவிட்டது. சரி, மற்ற காட்டுயிர்கள் இருக்கட்டும், இந்தியாவின் கௌரவங்களில் ஒன்றான புலிகள் அழிந்து வருவது பற்றி சைட்ஸ் கூட்டத்தில் விவாதிக்கவில்லையா? விவாதிக்கப்பட்டது.

புலிகள்

உலகில் இந்தியா, நேபாளம், பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா, ரஷ்யாவில் புலிகள் உள்ளன. ஆசிய நாடுகளில் மட்டுமே புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் கொல்லப்பட சீனா, திபெத் நாடுகளே முக்கிய காரணம். இந்தியாவில் இருந்து புலிகள், அவற்றின் பாகங்கள் கடத்தப்பட சீனாவில் மேற்கொள்ளப்படும் கள்ள வர்த்தகம் பெரும் ஊக்கமளிக்கிறது. ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயத்தில் ஒட்டுமொத்தமாக புலிகள் அழியவும், ரன்தம்போர் உள்ளிட்ட சரணாலயங்களில் புலிகள் எண்ணிக்கை குறையவும் சீன கள்ளச்சந்தை பெரும் பணம் அளித்ததே முக்கிய காரணம். தற்போது இந்தியாவில் 1,500க்கும் குறைவான புலிகள் மட்டுமே இருப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பு வெளிவருவதற்கு முன்பே சைட்ஸ் கூட்டம் நடத்தப்பட்டுவிட்டது.

சீனாவில் ஐந்தாயிரம் புலிகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தில் புலிகளின் பாகங்களை விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள தொழில்முனைவோர் அரசை வற்புறுத்தி வருகின்றனர். சீனாவுக்கு சைட்ஸ் அமைப்பு முறைப்படி தெரிவித்த கண்டனத்தில், பாரம்பரிய மருத்துவ வர்த்தகத்துக்காக பண்ணைகளில் வளர்த்து விற்கப்படும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இந்த கண்டனத்தை உலக இயற்கை நிதியம் (WWF) வரவேற்றுள்ளது.

'புலிகளின் எந்த பாகத்தை விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்காமல் இருப்பது வரவேற்கத்தக்க ஒர் அம்சம். காடுகளில் வாழும் புலிகளை பாதுகாக்க வேண்டும்' என்று உலக இயற்கை நிதிகம் கோரிக்கை விடுத்துள்ளது. நமது பாரம்பரியப் பெருமையான புலிகள் பாதுகாக்கப்படுமா, இல்லையா என்பது நெடுங்காலத்தில்தான் தெரியும். சைட்ஸ் அமைப்பின் நடவடிக்கைகள் அதற்கு உதவும் என்று நம்புவோம்.


-ஆதி

(adhi@poovulagu.org)

நன்றி: கீற்று இணையதளம்