செவ்வாய், அக்டோபர் 30, 2012

மாடித் தோட்டம் - ஒரு மகத்தான மகசூல்!


'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.
''மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு... அதுல செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் பண்றேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக்கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழைனு அத்தனையையும் வளக்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலயும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்புன சாக்குப் பையிலயும் வளக்குறேன். இந்த ஆயிரம் சதுரடியில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள்னு 50 வகையான தாவரங்கள் இருக்கு.

பொதுவா, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவுக்கு மீறி இருந்தா ஆபத்தாகிடும். அதனால, வெளிச்சத்தைப் பாதியா குறைக்கறதுக்காக பசுமைக் குடில் அமைச்சுருக்கேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெயைத் தண்ணியில கலந்து தெளிப்பேன். காலையிலயும் சாயங்காலமும் தண்ணி ஊத்துவேன். தொட்டியில வழிஞ்சு வர்ற தண்ணி, தொட்டிக்குக் கீழ இருக்கற தட்டுலயே தங்கிடும். அதனால அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோட, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது.
கழிவுகள்ல இருந்து எரிவாயு தயாரிக்கற கலனை வீட்டுல அமைச்சுருக்கேன். கழிவுகளை அரைச்சு அதுல ஊத்திட்டா வீட்டுக்குத் தேவையான எரிவாயு கிடைச்சுடுது. ஆரம்பகட்டத்துல ஆகுற செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலன்ல இருந்து வெளியாகுற கழிவு நீர்... நல்ல உரம்.
இதைத்தான் செடிகளுக்கு ஊட்டத்துக்காகக் கொடுக்கிறேன். அதனால, ஒரு சொட்டு ரசாயனத்தைக்கூட பயன்படுத்தறதில்லை. ஒரு வருஷமா... எங்க வீட்டுல விளையுற காய்களைத்தான் நாங்க சாப்பிடறோம். தேவைக்குப் போக மீதம் உள்ளதை வித்துடறோம்'' என்ற ராதாகிருஷ்ணன், 
 
''வயசான காலத்துல சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம்னு எல்லாம் கொடுக்கிற இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போறேன்னுதான் தெரியல'' என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 98410-23448

நா. சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ. வேங்கடராஜ்



நன்றி: பசுமை விகடன், 10-11-2012


வெள்ளி, அக்டோபர் 26, 2012

பூவுலகின் நண்பன்: பியூஸ் மானுஷ்


பியூஸ்... ஓர் உற்சாகமான இளைஞர். எதைப் பற்றியும் அவரிடம் பேசலாம். ''எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா, நல்லாத் தமிழ் பேசுவேன். தமிழ்நாட்டின் வரலாறு தெரியும். குறிப்பா, இந்த சேலம் நகரத்தைப் பத்தி முழுக்கத் தெரியும். நான் பொறந்து, வளர்ந்த மண் இதுதான். அதனால் நீங்களாவது, 'எங்கேயோ பிறந்து, இங்கு வந்து’னு எழுதிடாதீங்க...'' - அன்பாகச் சிரிக்கிறார் பியூஸ் மானுஷ். இரு தலைமுறைகளுக்கு முன்பு துணி வியாபாரம் செய்ய ராஜஸ்தானில் இருந்து சேலத் துக்கு வந்த குடும்பத்தின் வாரிசு. பியூஸ் சேத்தியா இவரது உண்மைப் பெயர். சேத்தியா என்ற சொல் சாதியைக் குறிப்பதால் தன் பெயரை 'பியூஸ் மானுஷ்’ என்று மாற்றிக்கொண்டார்.  

கடந்த சில ஆண்டுகளில் சேலம் நகரத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பலவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. 'சேலம் மக்கள் குழு’, 'சேலமே குரல் கொடு’ போன்ற அமைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்னைகளுக்காக அரசாங்கத்துடன் மல்லுக்கட்டிவரும் இவர், சேலத்தில் ஒரு பிரமாண்ட பறவைகள் சரணாலயத்தையே உருவாக்கி இருக்கிறார். கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் இருந்து சில பன்னாட்டு நிறுவனங்களைப் பின்வாங்க வைத்திருக்கிறார். 150 ஏக்கரில் ஒரு கூட்டுறவுப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேலான மரங்களை சேலம் மலைப் பகுதி களில் உருவாக்கி இருக்கிறார்.
''சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் படித்தேன். எங்கள் வகுப்பறையில் இருந்து பார்த்தால் மலைகள் தெரியும். ஒருநாள் ஆசிரியர் எங்களை மலைகளை வரையச் சொன்னார். நான் மட்டும் பிரவுன் நிறத்தில் வரைந்தேன். 'ஏன் பச்சையா வரையலை?’ என்று அவர் கேட்க... 'எந்த மலையும் பச்சையா இல்லையே சார்?’ என்று நான் சொன்னதைக் கேட்டு அவருக்கு அதிர்ச்சி. உடனே, எல்லோரையும் பிரவுன் நிறத்திலேயே வரையச் சொன்னார். 'நம் வார்த்தை ஒரு வகுப்பறை அளவில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது எனில், இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய முடியும்’ என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாகப் பதிந்தது.

பிறகு, சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்தேன். பெரும்பாலான தனியார் கல்லூரி களில் என்னவெல்லாம் அட்டூழியங்கள் நடக்குமோ, அனைத்தும் அங்கும் உண்டு. முந்தைய ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்குச் சொற்ப சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாக நியமிப்பார்கள். கல்வியில் கொஞ்சமும் தரம் இருக்காது. இவற்றை எதிர்த்துக் கேட்கலாம் என்றால், மாணவர் சங்கத்துக்கு அனுமதி இல்லை. ஆகவே, நான் மாணவர்களைத் திரட்டி, தரமான கல்விக்காகப் போராட்டம் நடத்தினேன். கோரிக்கை நியாயமானது என்பதால், அரசாங்கம் எங்கள் பக்கம் நிற்கும் என்று நினைத்தேன். ஆனால், என் மீது பொய்யாகக் கொலை முயற்சி வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். முதன்முறையாக இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்தேன்.  

கல்லூரி முடிந்து வெளியே வந்ததும் சேலத்தைச் சுற்றி இருக்கும் மலைப் பகுதிகளில் மரங்கள் நட ஆரம்பித்தேன். அப்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் நட்டிருப்பேன். பிறகு, மேட்டூர் பகுதியில் நீர் வளத்தையும் நில வளத்தையும் நஞ்சாக்கிவரும் 'கெம்பிளாஸ்ட் சன்மார்’ என்ற தொழிற்சாலைக்கு எதிராகப் போராடியவர் களுடன் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் உண்மையிலேயே 'ஆக்டிவிஸம்’ என்றால் என்ன, மக்களுடன் இணைந்து வேலை பார்ப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். மேட்டூரில் அந்தத் தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளினால் பல நூறு ஏக்கர் விவசாய நிலம் நிரந்தரமாக நஞ்சாகிவிட்டது. இப்போதும் முழுமையாகப் பிரச்னை தீரவில்லை என்றாலும், போராட்டங்கள் மூலமாக ஓரளவு மக்களுக்கு நீதி கிடைத்தது.  

அதன் பிறகு, பன்னாட்டு நிறுவனச் சூறையாடல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடத் துவங்கினோம். 2008-ல் 'ஜிண்டால் குழுமம்’ கஞ்ச மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்காக ஒரு திட்ட வரைவைக் கொடுத்தது. அதன்படி அவர்கள் திறந்தவெளிச் சுரங்கத்தில் வெடி வைத்து மலையை உடைப்பார்கள். இத்தனைக்கும் நகரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கிறது அந்த மலை. மூன்று லட்சம் மக்கள் அங்கு வசிக்கின்றனர். சேலத்துக்குத் தேவையான கணிச மான காய்கறிகள் அந்தப் பகுதியில் இருந்துதான் வருகின்றன. 40 ஆயிரத்துக்கும் அதிகமான கால் நடைகள் அங்கு இருக்கின்றன. அந்தச் சுரங்கம் மட்டும் வந்துவிட்டால் இவை அத்தனையும் காலி. ஆனால், இவ்வளவும் தெரிந்து, அரசு அனுமதி கொடுத்தது. அதற்கு எதிராக  மக்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடினோம். இறுதியில், அந்த நிறுவனம் திட்டத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டது.

அடுத்து, வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான 'மால்கோ’ நிறுவனம் 1996-ம் ஆண்டில் இருந்து ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் இருந்து பாக்ஸைட் தாதுவை வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. கொல்லிமலையில் இருந்து தினசரி 400 லாரி லோடு மண்ணும் ஏற்காட்டில் இருந்து தினமும் 40 லாரி லோடு மண்ணும் கீழே இறங்கியது. இவை எவற்றுக்கும் எந்த அனுமதியும் இல்லை. காட்டில் சுள்ளி பொறுக்கப்போகும் ஏழை மக்களை விரட்டி அடிக்கும் வனத் துறை, 2008-ம் ஆண்டு வரை இயற்கை வளத்தைச் சூறையாடிய இந்த நிறுவனங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, தடுத்து நிறுத்தினோம். ஆனால், பாக்ஸைட் எடுத்தது போக மீதம் உள்ள 80 சதவிகித ரசாயனக் கழிவுகள் கலந்த மண்ணை காவிரி ஓரத்தில்தான் கொட்டினார்கள். வருடக்கணக்கில் கொட்டிய அந்த ஆபத்தான கழிவுகள், இப்போதும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. இன்று அந்த விஷத்துக்கும் ஒரு மதிப்பு வந்துவிட்ட தால் எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதை முழுவதும் அள்ளவே குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.

இப்படி சேலத்தின் கனிம வளங்களைச் சட்டத் துக்குப் புறம்பாக வெட்டி எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான எங்களின் போராட்டம் இப்போதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், இந்த அரசு ஓய்வு கொடுப்பதே இல்லை. ஒன்று முடிந்தால் அடுத்தது, அது முடிந்தால் இன் னொன்று என வரிசையாகப் பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது!'' என்று ஒரு தேர்ந்த தொழிற்சங்கவாதிபோலப் பேசும் பியூஸ், ஈழப் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன் நிற்கிறார். சேலம் நகரத்தின் குறுக்காக ஓடும் திருமணிமுத்தாறு, ஒரு சாக்கடையாக மாற்றப்பட்டதையும் உலக வங்கி நிதி உதவியுடன் அதில் சிமென்ட் தரை அமைக்கப்பட்டதையும் எதிர்த்து சட்டப் போராட்டமும் நடத்திவருகிறார்.
பியூஸின் முக்கியமான பங்களிப்பு, கன்னங்குறிச்சியில் இருக்கும் மூக்கனேரி பறவைகள் சரணாலயம். இந்தப் பிரமாண்டமான ஏரியை இரண்டே வருடங்களில் ஒரு சரணாலயமாக மாற்றி இருக்கிறார். ''2009-10 வருடத்தில் சேலத்தில் கடுமையான வறட்சி. அப்போதுதான் குறைந்தபட்சம் ஏரியைத் தூர் வாருவோம் என நினைத்து இதைச் செய்தோம். தூர் வாரிய மண்ணைக்கொண்டு ஏரிக்குள்ளேயே சிறு மணல் திட்டுக்களை உருவாக்கினோம். அவற்றில் புங்கன், கருவேலம், அரச மரம், ஆல மரம், மூங்கில், சீத்தாபழம், சிங்கப்பூர் செர்ரி, கோணப் புளியங்காய் என விதவிதமான மரக்கன்றுகளை நட்டோம். மணல் திட்டு கரை யாமல் இருக்க பக்கவாட்டில் அருகம்புல்,வெட்டி வேர், மூங்கில் ஆகியவற்றை வைத்தோம். எல்லா வேலைகளும் ஒரே நேரத்தில் நடந்தன. மக்கள் பணம் 17 லட்ச ரூபாயைக்கொண்டு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினோம். அடுத்த சில மாதங்களில் நல்ல மழை. தூர் வாரியதால் ஏழு கிலோ மீட்டருக்கு நிலத்தடி நீர் ஊறியது. நட்ட மரங்கள் செழித்து வளர்ந்தன. ஒவ்வொரு மணல் திட்டும் ஒரு தீவுபோல மாறியது. படிப் படியாகப் பறவைகள் வந்து சேர்ந்தன. இப்போது இங்கே 41 வகையான பறவைகள் இருக்கின்றன. நிறையப் பறவைகள் இங்கேயே கூடு கட்டிக் குஞ்சு பொரித்து... இது ஒரு பறவைகள் சரணாலயமாகவே உருவாகிவிட்டது. இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகத் தேர்வுசெய்திருக்கும் தமிழக அரசு, மாநிலம் முழுக்க உள்ள 500 ஏரி களில் இதேபோல செய்யப்போகிறது!'' என்கிறார்.

இந்த ஏரிக்குள் இப்போது 45 மணல் திட்டுக்களும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களும்-இருக்கின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, 'மூக்கனேரியில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்த விநாயகர் சிலைகளைக் கரைக் கக் கூடாது’ என்று சேலம் நகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார் பியூஸ். ஆனாலும், கரைக்கப்பட்டன. உடனே, 'மக்களிடம் பணம் வசூலித்துதான் இந்த ஏரி தூர் வாரப்பட்டது. அதில் சிலைகள் கரைக்கப்பட்டபோது தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஆனால், என்னால் முடியவில்லை. என்னைக் கைது செய்யுங்கள்’ என்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த விஷயம் பரவலான கவனத்தைப் பெற்றது.

''என்னைச் சிலர் 'வட நாட்டு ஆள்’ என்பார்கள். சிலர் 'பச்சைத் தமிழன் இல்லை’ என்பார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. நான் பச்சைத் தமிழனோ, சிவப்புத் தமிழனோ... சாதாரண மக்களை அரசாங்கம் வஞ்சிக்கும்போதும், நிறுவனங்கள் சுரண்டும்போதும் அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருக்க என்னால் முடியாது. திராவிடம், தமிழ்த் தேசியம், கம்யூனிஸம் என நான் எந்த அரசியல் கொள்கையும் பயின்றது இல்லை. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களோடு போராடுகிறேன். தவறுகள் வந்தால் திருத்திக்கொள்வேன்!'' - மூக்கனேரி பறவைகள் சரணாலயத் தில் பரிசலில் துடுப்பு போட்டபடியே பேசுகிறார் பியூஸ். மேலே பறந்து செல்லும் பறவைகள் சிறகுஅசைத்து ஆமோதிக்கின்றன!

-பாரதி தம்பி
படங்கள் : எம்.விஜயகுமார்

நன்றி: ஆனந்தவிகடன், 31-10-2012

புதன், அக்டோபர் 17, 2012

பவர்கட் பிரச்னையா...சோலாருக்கு மாறுங்க !


'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால், அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.

மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த  விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.
''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்... அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.

பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்... குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.
தற்போது... வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்...'' என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.

''சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!'' என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் 'மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்'. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ''சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!
வீடுகளில்... ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ... மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்'' என்று சொன்னார்.

எல்லாம் சரி... சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?
அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ''அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை... சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்... மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.

இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்... (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்'' என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,
''இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல... இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!'' என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!

நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!

சோலார் தரும் லாபம்!
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்...  டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.

மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...)  840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).
இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது... 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்... 'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்... மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.

சூரிய மின்சாரம்...     அசத்தும் குஜராத்!
ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து  214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது, குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.

தமிழகத்திலும் சோலார் பார்க் அமைத்தால்?!
சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in என்ற வலைதளத்தை அணுகலாம்.
தொடர்புக்கு: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஈ.வி.கே. சம்பத் மாளிகை, ஐந்தாவது மாடி, 68, காலேஜ் ரோடு, சென்னை 6, தொலைபேசி: 044-28224830.

-சா.வடிவரசு
படங்கள்: எம்.உசேன், ஆ.முத்துகுமார், ஜெ.வேங்கடராஜ்


நன்றி: அவள் விகடன், 23-10-2-12

வெள்ளி, அக்டோபர் 12, 2012

போபால்..கூடங்குளம்: இவர்களை நம்பியா இருக்கிறோம்?


னி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங் கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங் கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!

போபால் பேரழிவுக்குப் பிந்தைய இந்த 28 ஆண்டுகளில், போபால் துயரத்தைக் கடந்து நாம் எவ்வளவோ தூரம் வந்திருக்கலாம். ஆனால், 'யூனியன் கார்பைடு நிறுவனம்’ பறித்த உயிர்களின் ஆன்மாக்கள் இந்தியாவின் மனசாட்சியைத் தொடந்து உலுக்கிக்கொண்டே இருக்கின்றன. 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தை ஆகிய கொடூரங்களை எல்லாம் தாண்டி, இன்னமும் விஷத் தைக் குடித்துக்கொண்டு இருக்கும் போபால் மக்களை இந்தியா எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று கேட் கின்றன அந்த ஆன்மாக்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வு, போபாலில் 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்ட இடத்தைச் சுற்றி மூன்று கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகி இருப்பதை உறுதி செய்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் மேற் கொண்ட பரிசோதனையோ, 'ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு வரை ரசாயனக் காரணிகள் அடங்கிய தண்ணீரைக் குடிக்கிறார்கள் போபால்வாசிகள்’ என்கிறது. ''இங்கு 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்டபோது, அது பூச்சிக்கொல்லியை உருவாக் கியது. அது மூடப்பட்ட பிறகு, புற்றுநோயாளி களையும் சிறுநீரக நோயாளிகளையும் உருவாக் கிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார்கள் போபால்வாசிகள். காரணம், ஆலையைச் சுற்றி  பரவியிருக்கும் 350 டன் நச்சுக் கழிவுகள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று இந்திய அரசுக்குத் தெரியவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்ற இறுதிக் கெடு விதித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கழிவுகளை அகற்றும் வழி தெரியாததால்,  25 கோடி நிதி ஒதுக்கி, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் (ஜி.ஐ.எஸ்.) இந்தப் பணியை ஒப்படைத்தது இந்திய அரசு. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை ஆகிய காரணங்களைக் காட்டி கடந்த வாரம் இந்தப் பணியில் இருந்து பின்வாங்கிவிட்டது அந்த நிறுவனம். இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது இந்திய அரசு. நம்முடைய லட்சணம் இதுதான்.

போபால் பேரழிவுக்குக் காரணமாக இருந்தது ஆலையில் இருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோசயனேட்’. குளிர் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய ரசாயனம் இது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், குளிர் சாதனங்களை இயக்குவதை ஆலை நிர்வாகம் நிறுத்தியதால் ஏற்பட்ட வெப்ப நிலை உயர்வாலேயே 'மெத்தில் ஐசோசயனேட்’ வெடித்து வெளியேறியது. 'மெத்தில் ஐசோசயனேட்’ ரசாயனத்தை எதிர்கொள்ள எளிய பாதுகாப்பு முறை ஒன்று உண்டு. மூக்கையும் வாயையும் ஈரத் துணியால் மூடிக்கொண்டு வாயு பரவும் திசைக்கு எதிர் திசையில் மெள்ள முன்னேறுவது. ஆனால், இந்த எளிய முன்னெச்சரிக்கைப் பயிற்சியைக்கூட ஆலையைச் சுற்றி உள்ள மக்களுக்கு ஆலை நிர்வாகமோ, அரசோ கொடுக்கவில்லை. இந்த அழிவுக்கு முன்பே ஆலையில் ஏராளமான விபத்துகள் நடந்தன; அவற்றை அரசு வழக்கம்போல் மூடி மறைத்தது. அழிவு நடந்த அடுத்த சில வாரங்களில் ஏராளமான மருத்துவக் குழுக் களைக் கண்துடைப்பாக அரசு அழைத்துச் சென்றபோது, அப்படி ஒரு சூழலை எதிர்கொண்ட பழக்கம் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் முன் செய்வதறியாமல் நின்றார்கள் மருத்துவர்கள். 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சூழல்கள் எல்லாம் இந்தியாவில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன?

வளர்ச்சியின் பெயரால் கொஞ்சமும் அறி முகம் இல்லாத எவ்வளவோ அபாயகரமான தொழில்நுட்பங்களுடன் இயங்கும் நிறுவனங் களை நாட்டில் அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாயகரமான வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி ஆகின்றன. தவிர, உள்நாட்டிலும் உற்பத்தியாகின்றன அணுக் கழிவுகள் உட்பட. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறே கடக்கிறோம்.

யாரை நம்பி?
இப்படி ஒரு படுகொலையின் பிரதான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டு, ஏனைய உள்ளூர் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின் வெறும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசை நம்பி. ஒரு தொழிற்சாலை விபத்து எவ்வளவு மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான எல்லா அனுபவங்களையும் 'யூனியன் கார்பைடு’ நிறுவனத்திடம் இருந்து பெற்ற பின்னும் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமான வகையில், அணு சக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றிய அரசை நம்பி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் நியாயமான இழப்பீட்டுக்காகப் போராடும் மக்களுக்கு, குடிக்கக்கூட பாதுகாப்பான தண்ணீரை வழங்காத அரசை நம்பி!

மார்க்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது: ''வரலாறு திரும்பவும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது, முதல் முறை விபத்தாக, மறுமுறை கேலிக்கூத்தாக!''

-சமஸ்

நன்றி:  ஆனந்தவிகடன், 17-10-2012

புதன், அக்டோபர் 10, 2012

கூடங்குளம் எழுப்பும் பிரச்சினைகள் -வி. எஸ். அச்சுதானந்தன்


1. கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரிலும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான் மைல் தூரத்திலும் உள்ள கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் செயல்படப்போகிறது. மின் உற்பத்தித் துறையில் அணு ஆற்றல் நமக்கு அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுப்புறவாசிகளுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா? அணுமின் நிலையம் அமைக்கக் கூடங்குளம் பொருத்தமானதா? அங்குக் கட்டப்பட்டுள்ள மின் நிலையம் பாதுகாப்பானதா? இவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டியது அவசரத் தேவையாகி இருக்கிறது.


2. உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும்போது இந்தியா மட்டும் ஒதுங்கி இருக்க முடியாது என்னும் வாதம் எதார்த்த நிலைக்கு முரணானது. இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்கு அணுமின் நிலையங்களைச் சார்ந்துள்ளன. உலகில் கிடைக்கும் யுரேனியத்தில் 23% ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால் அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை. உலகத்தின் மின்தேவையில் வெறும் 7% மட்டுமே அணுசக்தி வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. அணுமின் நிலையங்களைத் தவிர்க்க முடியாது என்னும் வாதம் அடிப்படையற்றது. மிகவும் சிக்கனமான மின்உற்பத்திக்கான வழிமுறை அணுமின் நிலையங்கள்தாம் என்பதும் சரியல்ல. விபத்திற்கான வாய்ப்புகள் மிக அதிகமுள்ளதும் அதிகப்படியான கட்டுமானச் செலவுகளை ஏற்படுத்துவதுமான அணுமின் நிலையங்களுக்குக் கடன் அளிப்பதில்லை என்று 2007இல் அமெரிக்காவின் முக்கிய ஆறு வங்கிகள் அமெரிக்க எரிசக்தித் துறைக்குத் தெரிவித்துள்ளன.

3. இது மிகவும் லாபகரமான மின் ஆற்றல் என்பது பன்னாட்டு அணு நிறுவனங்களுக்கு உதவிபுரிவதற்காகச் சொல்லப்படும் பொய்ப் பிரசாரம். கர்நாடக மாநிலம் கைகாவில் 230 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரு ரியாக்டர்கள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அரசு அளித்த ஹெவிவாட்டர் மான்யம் மட்டும் 1450 கோடி ரூபாய் என்றாலும் மின்கட்டணம் யூனிட்டிற்கு 2. 90 ரூபாயாக உள்ளது. எந்தத் திட்டத்திற்கும் அதைத் தொடங்கும்போதுள்ள கட்டுமானச் செலவு, அவசியமான எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு, அதன் விலை, திட்டம் செயல்படும்போது ஜீவராசிகளுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் உண்டாகும் பிரச்சினைகள், விபத்திற்கான சாத்தியங்கள், விபத்து நிவாரணம், அணுக் கழிவு மேலாண்மை என்பவற்றைக் கணக்கிலெடுக்க வேண்டும். இவை ஒவ்வொன்றையும் பரிசீலித்தால் ஒன்றில்கூட அணுமின் நிலையங்களுக்கு பாஸ் மார்க் கிடைக்காது.

4. அன்றாடச் செயல்பாடுகளைப் பரிசீலிக்கும்போது, நிலையத்தின் செயல்பாட்டிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகள் வெளியேற்ற முடியாத ஒன்று. மற்ற கழிவுகளைப் போல அல்ல அணுக் கழிவு. அவற்றை அழிக்க ஆக்கபூர்வமான முறைகள் எவையும் நடைமுறையில் இல்லை. அமெரிக்காவிலும் பிரான்சிலும் மின் உற்பத்தி முடிந்த நிலையிலும் பல அணுமின் நிலையங்கள் இன்றும் குளிர்விப்பதற்காக வேண்டிச் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கழிவுகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததே இதற்குக் காரணம்.

5. அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் ரத்தப் புற்று நோய், தைராய்டு, கேன்சர் முதலிய கொடிய நோய்கள் பரவுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. இந்த ஆய்வுகளை இல்லாமற் செய்யும் முயற்சிகள் அணுமின் நிலைய அதிகாரிகளின் தரப்பிலிருந்து செய்யப்படுகின்றன. பன்னாட்டு அணு சக்தி நிறுவனம் உலக சுகாதார நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி ஐ. ஏ. இ. ஏ-இன் அனுமதியின்றி அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது. இப்படி ஓர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? புகுஷிமா அணு விபத்திற்குப் பிறகு பன்னாட்டு கார்பொரேட் ஊடகங்கள் கடைப்பிடிக்கும் மௌனத்தையும் இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும். மூன்றாம் உலக நாடுகளையும் கார்பொரேட் ஊடகங்களையும் உலக சுகாதார நிறுவனத்தையும் இந்த அணு நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன என்னும் குற்றச்சாட்டு உறுதியானது. இந்த மௌனத்தை நற்சான்றாக மாற்றும் மக்கள் விரோத விஞ்ஞானிகள் சிலரும் இணையும்போது பேரபாயங்கள் மீண்டும் தொடர்கின்றன.

உயிர்ச்சூழலுக்கு ஆபத்து
6. அணுமின் நிலையங்கள் செயல்பட மிக அதிகமான தண்ணீர் அவசியம். கூடங்குளத்தின் 1000 மெகாவாட் ரியாக்டருக்குத் தினமும் 51 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆறு ரியாக்டர்கள் செயல்படத் தொடங்கினால் தினமும் 2.02 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு அதிகமான தண்ணீரை அதிக ஆற்றலுடன் உறிஞ்சும்போது கடலில் மீன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் இல்லாமல் போகும். மீன்கள் அணு உலைக்குள் செல்லாமல் இருக்கச் சல்லடைகள் வைக்கப்படும் என வாதம் செய்கின்றனர். இது போன்ற சல்லடைகளில் வேகமாக மோதும் பெரிய மீன்கள்கூடச் செத்துப்போகின்றன என்பதுதான் இதுவரையுள்ள அனுபவங்கள். அணுமின் நிலையத்தின் பயன்பாட்டிற்குப் பிறகு அணுக் கழிவுகளை உட்கொண்ட வெப்ப நீர் அன்றாடம் கடலில் திறந்துவிடப்படுகிறது. 140 டிகிரிக்கு நெருக்கமான கடலின் வெப்பநிலை கிட்டதட்ட 13 டிகிரி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கடலின் உயிர்ச்சுழற்சியைப் பாழாக்குகிறது. பின்பு மீன் பிடிப்புத் தொழிலைக் காலப்போக்கில் அழிக்கிறது. அணுமின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் எரிபொருளை மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதால் அணுக் கழிவுகள் குறைவாகவே வரும் என்பது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பதற்கு ஒப்பாகும். மறுசுழற்சி செய்வது வெறும் 1 விழுக்காடு மட்டுமே. 1000 மெகாவாட் திறனுள்ள ஓர் அணுமின் நிலையம் ஒரு வருடம் குறைந்தது 30 டன் அணுக் கழிவை வெளியேற்றும். இது கேன்சரையும் மரபுரீதியான பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். இந்தத் தீய பூதத்தைதான் கடலில் தள்ளுகின்றனர்.

7. அணுமின் நிலையங்களின் விபத்திற்கான வாய்ப்புத்தான் மிகப் பயங்கரமானது. கையாள்பவரின் கவனக்குறைவு, இயந்திரக் கோளாறு, இயற்கைச் சீற்றம் முதலியவற்றால்தான் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்துத் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிற விபத்துகள் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு என்றால் அணுமின் நிலைய விபத்துகள் தொடர்ச்சியானவை. அவற்றைப் பின்வரும் நமது தலைமுறைகள் அனுபவிக்க வேண்டி நேர்கிறது. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்நோபில் அணு உலை விபத்து நிகழ்ந்தது. இதன் காரணமாக 1986 முதல் 2004 வரை 9,85,000 மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் காளான்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் ஜீன்களில் மாற்றத்தை ஏற்படுத்திய அவலம் அது. செர்நோபில் மற்றும் அதற்கு முன் ஏற்பட்ட அயர்லாந்தின் த்ரீமைல் ஐலேண்ட் ஆகியவற்றிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டுள்ளதால் அதன் பின்னர் கட்டப்படும் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதுதான் பின்னாட்களில் நடைபெற்றுவரும் பிரச்சாரம். ஆனால் 2011 மார்ச் 11 அன்று உலகத்தை நடுங்க வைத்த ஜப்பான் புக்குஷிமாவில் விபத்து ஏற்பட்டது. பூகம்பமும் சுனாமியும் ஒன்றிணைந்து அங்குள்ள 3 ரியாக்டர்களும் உபயோகித்த அணுக் கழிவைப் பாதுகாத்து வைத்திருந்த 4 தொட்டிகளும் விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தின் தீவிரத்தை இனிமேல் தான் உலகம் அறியப்போகிறது. காற்றுக் கடலை நோக்கி வீசியதால் 80% அணுப்பொருட்களும் பசிபிக் கடலில் கலந்ததின் காரணமாக ஜப்பான் நாட்டின் மிச்சமீதி இன்று இருக்கிறது. ஆனால் அணு உலையைக் குளிரூட்ட உபயோகித்த கடல் நீரில் 12,000 டன் நீர் புகுஷிமா நிலையத்தின் அஸ்திவாரத்தில் தேங்கி நிற்கிறது. இதில் 6 விழுக்காடு புளூட்டேனியம் அடங்கிய மோக்ஸ் எனப் படும் அணுப்பொருட்களாகும். ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டைவிடப் பத்து மடங்கு அபாயமானது இந்தத் தேங்கி நிற்கும் நீர், இதைக் கடலில் கலக்கும்போது இதன் விளைவுகளை வரும் தலை முறைகளும் அனுபவிக்க நேரும்.

8. மே மாதம் 2012இல் ஜப்பான் தனது 54 அணுமின் நிலையங்களையும் ஜெர்மனி தனது 17 அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடிவிட்டன. இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டது. விபத்துகளிலிருந்து இவர்கள் பாடம் கற்றுக்கொண்டபோது, இந்தியா அணுமின் திட்டத்தை நோக்கி நகருகிறது. அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்மோகன்சிங் அரசு புக்குஷிமாவுக்குப் பிறகும் கூடங்குளம் திட்டத்துடன் முன்னேறுகிறது. இந்தத் திட்டத்தில் விபத்து நேரிட்டால், தமிழகத்தின் தென் பகுதியும், கர்நாடகத்தின் தென் பகுதியும் கேரளமும் இலங்கையும் கிட்டத்தட்ட முழுமையாக அபாயகரமான எல்லைக்குள் வரும். அதனால்தான் கூடங்குளம் என்னும் இடம் இந்தத் திட்டத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதைப் பரிசீலிக்க வேண்டியது நம்மைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாததாகிறது.

9. புகுஷிமாவில் ஏற்பட்ட விபத்து பூகம்பத்தாலும் சுனாமியாலும் ஏற்பட்டதே தவிர, தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதல்ல என்று அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்களே வாதாடுகின்றனர். உண்மையில் பூகம்பம் உண்டானதால் ஏற்பட்ட மின்சாரப் பிரச்சினை தான் இந்தப் பேரழிவின் தொடக்கம். கூடங்குளத்தில் மின்சாரப் பிரச்சினை ஏற்படப் பூகம்பம்தான் உண்டாக வேண்டுமென்பதில்லை. இந்திய அரசு வெளியிடும் ‘வல்னரபிலிட்டி அட்லஸ்’படி கூடங்குளம், பிரதேசம்-3 பூகம்பத்திற்கான சாத்தியமுள்ள பகுதி. அபூர்வமான எரிமலைகள் உள்ள இடம். கூடங்குளத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் மன்னார் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் எரிமலைகள் உள்ளன. கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் 1998இலும் 2008இலும் பூமிக்கடியில் பாறைகள் உருகி வழிந்த சம்பவங்கள் நடந்துள்ளன. 2004இல் சுனாமியால் சின்னாபின்னமாக்கப்பட்ட கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளுக்கு அருகேதான் கூடங்குளம் உள்ளது. 1986இல் அணு சக்தித் துறை வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியக் கடலோரங்களில் சுனாமிக்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் புயலை மட்டும் கணக்கில் கொண்டால் போதும் என்று சொல்கிறது. 2001இல் கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2004இல் சுனாமித் தாக்குதலைக் கணக்கிலெடுத்து அரசு தன்னுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். சுனாமித் தாக்குதலையும் கவனத்தில் கொண்டிருந்த போதும் அணுமின் நிலையம் பாதுகாப்பானதே என்று மத்திய அரசு இப்போது சொல்கிறது. இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது மக்களுக்கல்ல அணு ஆயுத நிறுவனங்களுக்குத்தான் என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று எதுவும் தேவையா?

10. கடந்த மூன்று வருடங்களில் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் மூன்று இடங்களில் மழைநீர் பூமியைப் பிளந்து கிணறு வடிவத்தில் பூமிக்கடியில் போன நிகழ்வும் நடந்துள்ளது. சுருக்கமாகக் கூடங்குளம் பிரதேசம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அணுமின் நிலையத்திற்குப் பொருத்தமானதல்ல. இங்கு தான் 600 மெகாவாட் சக்தியுள்ள ஆறு ரியாக்டர்கள் தொடங்க உத்தேசித்துள்ளனர். 2001இல் கட்டத் தொடங்கிய இரண்டு ரியாக்டர்களும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்குப் பிறகு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட நான்கு ரியாக்டர்களும் இதில் உட்படும். இப்போது கட்டுமானம் முடிந்த அணுமின் உலைகள் சுற்றுப்புறச் சூழல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் கட்டப்பட்டவையாகும். ஜெய்தாபூரில் இப்படி ஒரு சுற்றுப்புறச் சூழல் ஆய்வை இந்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமருக்கு புகார் அளித்திருந்தனர். அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு நிலையத்தை நடத்தும் என்.பி.சி.எல்லுக்குத்தான் என்று சொன்ன பிரதமர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு விபத்து உண்டானால் யார் பொறுப்பு என்பதில் சந்தேகத்தைக் கிளப்புகிறார். அணுமின் நிலையங்களை ஆதரித்தவர்களுக்கெல்லாம் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சலுகைகளை வழங்கிய அணு சக்தி ஒப்பந்தத்தில் பதினேழாம் பிரிவில் முழுப் பொறுப்பும் அணுமின் நிலையத்தின் இந்திய ஏஜென்சிகளுக்குத்தான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

11. கூடங்குளத்தில் உபயோகிக்கப்படும் வி. வி. இ. ஆர்-100 என்னும் மாடல் உலைக்குப் பல தொழில்நுட்பக் குறைபாடுகளும் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. ஆனால் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தின் பிரச்சினை இதிலும் அபூர்வமானது. முக்கியமான பாகங்களில் வெல்டிங் செய்யக் கூடாது என்பது ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து. ஆனால் 6 வெல்டிங்குகள் உள்ள ரியாக்டர்கள் செயல்படவிருக்கின்றன.

கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று யார் சொன்னாலும் இந்தத் தலைமுறையால் கண்முன் கண்ட பேரழிவுகளை மறக்க முடியாது. பாதுகாப்பு விஷயங்களில் இப்போதுள்ள பொறுப்பின்மையை இந்த அணு நிறுவனங்கள் தொடர்ந்தால் செர்நோபிலும் புகுஷிமாவும் இங்கே நடக்குமென்று சி. ஏ. ஜீ. தனது செயல்பாட்டுத் தணிக்கை அறிக்கையில் முன்னெச்சரிக்கை கொடுக்கிறார். அதனால் இந்த அணுஆயுத வெடிகுண்டு நமக்கு வேண்டாம். நிலையத்தின் செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரளமும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பெரும் அபாயத்தைப் புரிந்துகொண்டு கேரள அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து எரிபொருள் நிரப்பும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள்கூட விபத்து நேர்ந்த பிறகு 54 அணுமின் நிலையங்களை அடைத்துப் பூட்டிவிட்டனர். மற்றவர்களின் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அணுமின் நிலையங்களுக்குக் கொடுக்கும் மானியத்தைச் சூரியசக்தி மின்சாரத்திற்கு கொடுத்திருந்தால் நாட்டின் மின் பற்றாக்குறைக்குத் தீர்வு காண அது போதுமானது. நம்மை அது நாசமாக்கும் என்னும் பீதியும் எழவாய்ப்பில்லை.

நன்றி: மாத்ருபூமி 
மலையாள நாளிதழ் 10.09.2012

(வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைவர்களில் ஒருவர்.)

தமிழாக்கம்: டி.வி.பாலசுப்ரமணியம்

நன்றி: காலச்சுவடு, அக்டோபர், 2012

அடுத்தக் கட்டம் நோக்கி 'மான்சான்டோ'... அமெரிக்கப் பயண அனுபவம்!


மரபணு மாற்றுப் பயிர்களுக்கு, உலகம் முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக மிரண்டு போயிருக்கும், மரபணு விதை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், எதிராகக் குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்களைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து விவசாயப் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதை நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அடங்கியக் குழுவை, அமெரிக்காவில் உள்ள தங்களது ஆய்வகங்களைப் பார்வையிடுவதற்காக சமீபத்தில் அழைத்துச் சென்றது மான்சான்டோ நிறுவனம். அந்தக் குழுவில் நானும் ஒருவன்.

அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோவின்  மூலக்கூறு இனப்பெருக்க ஆய்வகத்துக்கு (Monsanto Molecular Breeding Center) அழைத்துச் சென்று, கண்ணாடி சன்னல்கள் வழியே உள்ளே இருந்த இயந்திரங்களைக் காட்டி, தங்களது தொழில்நுட்பங்கள் 'பாதுகாப்பானது' என விளக்கினர். தங்களின் புதிய ஆய்வுகள் எப்படி நடக்கின்றன என்று, நடைபாதையில் பொறுத்தியிருந்த கணினித் திரையில் படமாகக் காட்டினர்.
அங்கு நடந்த ஆய்வுகளைப் பார்த்தபோது, மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு உலகமெங்கும் எதிர்ப்பு இருப்பதால், அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. 'மரபணு மாற்றம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தாது' என்று நம்பப்படுகிற 'ஜீன் மார்க்கர்’ என்கிற தொழில்நுட்பத்தில் மிகவேகமாக ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அதேபோல, 'எம்.ஆர்.என்.ஏ. தெளிப்பு' Messenger RNA என்கிற தொழில்நுட்பத்துக்கும் நகர்ந்திருக்கிறார்கள். மரபணுக்களின் ஆதாரமாக அமைந்துள்ள டி.என்.ஏ (DNA) மூலக்கூறுகளை அலசி ஆராய்ந்து, தேவையான இணைப்பை மட்டும் எடுத்து, தங்களின் விருப்பமான விதைக்குள் புகுத்துவதே இந்தத் தொழில்நுட்பம். முதற்கட்டமாக, மக்காசோளம் மற்றும் சோயா மொச்சையில் இந்த ஆய்வுகளை மான்சான்டோ கையில் எடுத்துள்ளது. இதற்காக ஆண்டொன்றுக்கு 1 பில்லியன் டாலர்களை, இந்திய மதிப்பில் 550 கோடி ரூபாயை செலவு செய்கிறது.

இத்தகைய ஆய்வை மரபணு மாற்று விதைகளைத் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுமே செய்து வருகின்றன. அவற்றுள் ஒன்றான பயனீர் (Pioneer-DuPont) ஆய்வகத்துக்குள்ளும் சென்று பார்வையிட்டோம். எல்லா வகை விதைகளையும், அதை வைத்தே அனைத்து வகை உணவுப் பண்டங்களையும் காப்புரிமைக்குள் கொண்டுவர, இந்நிறுவனங்கள் முனைப்புடன் இயங்குவது நன்றாகவே புலப்பட்டது. 'அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க வேண்டும். அதிக விளைச்சல் எடுக்க வேண்டும்' என்பதே எங்கள் நோக்கம் என்று இதற்கு காரணம் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அங்கு நடக்கும் ஆய்வுகள் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆய்வுகள் அல்ல என்பதுதான் உண்மை. அவர்களுக்குத்தான் தெரியுமே... விளைச்சல் என்பது பல்வேறு காரணங்களால் நடப்பது என்று!
இந்தியாவில் இருந்து வந்திருந்தவர்களுக்கான தனி விளக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ராஷ்மி நாயர், மான்சான்டோவின் அடுத்தத் திட்டமான 'ஒருங்கிணைந்த விவசாய முறைகள்' பற்றி விளக்கினார். 

அதாவது அனைத்து இடங்களிலும் விளைச்சல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குறைவாக விளையும் இடங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப விதைக்கச் சொல்கிறது இந்தத் திட்டம். இதற்காக மண்வளத்தை செயற்கைக் கோள்கள் மூலமும், மண்பரிசோதனைகள் மூலமும் ஆராய்ந்து, பல ஆண்டுகளாக எடுத்து வைத்துள்ள மண்பரிசோதனை முடிவுகளையும் கணினியில் செலுத்தி, வெவ்வேறு இடங்களில் உள்ள மண்வகை வேறுபாடுகளுக்கு ஏற்ப பயிர்களின் இடைவெளியை மாற்றி விதைப்பதையும், அவ்விடங்களுக்கு ஏற்ப இயந்திரங்கள் மூலமே உரமிடுவதையும் அது பரிந்துரைக்கிறது. இதற்காக கணினி மூலம் திட்டமிட்டு விதைக்கும் கருவி, உரமிடும் கருவி, களைக் கொல்லி தெளிப்பது ஆகிய வேலைகளை அதாவது பல வகைத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதையே... 'ஒருங்கிணைந்த விவசாயம்' என்கிறது மான்சான்டோ.

மான்சான்டோவின் நிர்வாகத் துணைத் தலைவரும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியுமான ராப் ப்ராளே, ''ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்'’ என்றார். நான் ஒரு தாளில் ''உண்மையில் பி.டி. மரபணு விதைகள் விளைச்சலை அதிகப்படுத்தியதா?, அமெரிக்க விவசாயத்தில் இன்று பெரும் பிரச்னையாக வளர்ந்துவரும் களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தியை களைகள் பெற்று வருவது பற்றி தங்களின் கருத்து?'' என்றெல்லாம் கேட்டேன். என் வாழ்நாளில் நான் கேட்டிராத மிக வளவள... கொழகொழ பதிலை பி.டி பருத்தி கேள்விக்குச் சொல்லிவிட்டு, 'கேள்வி நேரம் முடிந்தது' என்று முடித்துக் கொண்டார்.
களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தி பெறும் களைகள் பற்றிய கேள்வியை, விடாமல் மான்சான்டோவின் மற்ற அதிகாரிகளிடமும் கேட்கவே செய்தேன். 'சால்ஜாப்பு' மட்டுமே பதிலாகக் கிடைத்தது. மிசிசிபி மாநிலத்தில் உள்ள மான்சான்டோவின் கற்கும் மையத்தில் இருந்த ஜே ப்ரேயர் என்கிற விஞ்ஞானி மட்டும் ஓரளவு உண்மையைப் பேசினார். ''ஆமாம் இது இங்கு பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனாலும் சமாளிக்க முடியும் அளவில்தான் உள்ளது'’ என்றார்.

''எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு...

''மான்சான்டோவின் 'ரவுண்டப்' தெளித்து, சாகாத களைகள் இருந்தால், பிற களைக்கொல்லிகளைத் தெளிக்க, பரிந்துரைத்துள்ளோம்'' என்றார்.

''அப்படியெனில், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்டோமே'' என்றேன்.

''புரியவில்லை'’ என்றார்.

''மான்சான்டோவின் களைக்கொல்லிகளை, பயிர் இருக்கும் போதே, தெளிக்கலாம். ஆனால், வேறு கம்பெனி களைக்கொல்லி என்றால், அது பயிர் மீது படாமல்தானே தெளிக்க வேண்டும்... இல்லையா?. இது கூடுதல் வேலை தானே?’ என்றதும் புரிந்துகொண்டவர், ''உண்மைதான். ஆனால் இதை அப்படிப் பார்க்கக் கூடாது'’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

'நிறைய விளக்கங்கள் கிடைக்கும், மரபணு மாற்றுப் பயிர்கள் பற்றிய புதிய தெளிவு கிடைக்கும் அங்குள்ள விஞ்ஞானிகளிடம் பேசிய பின் எதிர்க்க மாட்டீர்கள்’ என்றெல்லாம் கூறித்தான் இங்கிருந்து விமானத்தில் ஏற்றினார்கள். ஆனால், அவர்களுடைய உண்மையான நோக்கம்... விளக்கம் கொடுப்பதல்ல, தனக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்குவதுதான் என்பதை பயணத்தின் முடிவில் நன்றாகவே உணர முடிந்தது! விவசாயிகளும், நுகர்வோரும் விழித்துக் கொண்டால் மட்டுமே தப்பிக்க முடியும்!

வேறென்ன சொல்ல?!










-அரச்சலூர் இரா. செல்வம்

நன்றி: பசுமைவிகடன், 25 அக்டோபர், 2012








திங்கள், அக்டோபர் 08, 2012

கூடங்குளம் போராட்டம் : நாம் என்ன செய்ய வேண்டும்? -ஞாநி


கூடங்குளத்தில் இத்தனை நாட்களாக அமைதியாகப் போராடி வந்த மக்கள் திடீரென்று அணு உலைக்குள் நுழைய முற்பட்டதனால்தானே வன்முறை ஏற்பட்டது ?
இல்லை. இது தவறான பிரசாரம். இடிந்தகரை மக்கள் அணு உலைக்குள் நுழையவேண்டுமென்றால், சாலைகள் வழியே கூடங்குளம் பக்கம்தான் செல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை.தங்கள் இடிந்தகரை கிராமத்தின் கடற்கரைப் பகுதிக்குத்தான் சென்றார்கள். அந்தப் பகுதிக்கருகே அணு உலையின் சுற்றுச் சுவர்தான் இருக்கிறது. நுழைவு வழி எதுவும் கிடையாது. சுவரையடுத்து கடற்கரை வரை புதர்கள். பின்னர் மணற்பரப்பு. அடுத்து கடல். மணற்பரப்பில் கூடிய மக்கள் அங்கேயே இருந்து முற்றுகைப் போராட்டம் செய்யப் போவதாகத்தான் தெரிவித்தார்கள். அதற்காகப் பந்தல் போடத் தொடங்கினார்கள். அதைக் கண்டு அரசு பயந்தது. இடிந்தகரை லூர்து கோவில் மைதானத்தில் சுமார் 400 நாட்களாக பந்தலில் உண்ணாவிரதமிருந்தது போல இங்கேயும் தொடர்ந்து உட்கார்ந்துவிடப் போகிறார்களே என்ற பயத்தில் அவசர அவசரமாக தடியடி கண்ணீர் புகை பயன்படுத்தி மக்களை அடித்து விரட்டியது.அணு உலையை முற்றுகை இடுவது என்பது வன்முறையில்லையா?இல்லை. அவர்கள் உலை வளாகத்துக்குள் நுழையப் போவதாகச் சொல்லவில்லை. முயற்சிக்கவும் இல்லை. வெளியே உட்கார்ந்து தர்ணா செய்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறவழி முறை. அதைத்தான் செய்தார்கள். உண்மையில் இடிந்தகரையில் போராடுவதற்காக கூடிய மக்கள் நினைத்திருந்தால் சென்ற ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் உலைக்குள் நுழைந்திருக்க முடியும். மார்ச் 19 வரை அங்கே பெருத்த போலீஸ் குவிப்பு கிடையாது. அதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் நுழைந்து வன்முறை செய்திருக்கலாமே. அவர்கள் செய்யவில்லை. சுமார் 400 நாட்களாக ஆயிர்ககணக்கான மக்கள் தினசரி தங்கள் ஊர்ப் பந்தலில் கூடி அமைதியாகவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி காந்திய வழியில் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள்.

பெண்களையும் குழந்தைகளையும் முன்னே நிறுத்தி கேடயமாக்கி உதயகுமாரும் இதர தலைவர்களும் தாங்கள் தப்பித்துக்கொள்வது கோழைத்தனமில்லையா? இது காந்திய அற வழியா?

விருப்பமில்லாதவர்களை கொண்டு வந்து முன்னே நிறுத்தினால்தான் தவறு; கோழைத்தனம். ஓராண்டுக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இதில் கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் பெண்கள்தான். தங்கள் குடும்பம், அடுத்த தலைமுறைகளின் பாதுகாப்பு பற்றிய கவலையில் அவர்கள் பங்கேற்பது மட்டுமல்ல, ஆண்களையும் அவர்கள்தான் வழி நடத்துகிறார்கள். குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு வந்து போராடுவது பெண்கள் வழக்கமல்ல. காந்தியின் உப்பு சத்யாக்கிரகப் போராட்டத்தில் கைகுழந்தைகளுடன் பெண்கள் வந்து போராடியது வரலாறு. அரசே ‘ஆண்-பெண் சமத்துவத்துடன்’தான் போராட்டக்காரர்களை நடத்துகிறது. ஆண்களை அடிக்க ஆண் போலீசையும் பெண்களை அடிக்க பெண் போலீசையும் அங்கே வைத்திருக்கிறது. நெருக்கடி நிலையின்போது ( மறைந்த )மார்க்சிஸ்ட் தலைவர் டபிள்யூ ஆர். வரதராஜன் தொழிசங்கத்தலைவராக இருந்தார். அவரைக் கைது செய்ய போலீஸ் வேட்டை நடந்தது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின்போது ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பேசும் தகவல் கிடைத்து போலீஸ் அங்கே வந்தது. அவர் பேசி முடித்ததும் போலீஸ் அவரை நெருங்கவிடாமல், வங்கியின் பெண் ஊழியர்கள் மனிதச் சங்கிலி அமைத்து வரதராஜனை வழியனுப்பினார்கள். தாங்கள் நேசிக்கும் தலைவரை போலீசிடமிருந்து காப்பாற்ற முயற்சிப்பது போராடும் சாதாரண மக்களின் இயல்பு. அன்று நெருக்கடி நிலையில் வரதராஜனுக்கு செய்ததைத்தான் இன்று உதயகுமாருக்கும் செய்தார்கள். இப்போது கூடங்குளம் பகுதியில் தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு, சாலைகள் துண்டிப்பு ,வீடுகள் சூறையாடல் என்று அரசின் நெருக்கடி நிலைதான் தொடர்கிறது.

போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் இது வரை இல்லாத கடுமையோடு பேசுகிறார்களே?

உண்மையில் ஜெயலலிதா அரசை தன் அடியாளாக நினைத்து மத்திய அரசு நடத்துகிறது. போராடுவோரை கொன்றால் கூட காங்கிரசுக்கு மகிழ்ச்சியாகத்தானிருக்கும். ஒரிசாவில் முதல் நாள் போராட்டத்திலேயே ஒரு பெண் போலீசை அடித்து உதைத்த காங்கிரசாருக்கு 400 நாள் அறவழியில் போராடுவோர்தான் தீவிரவாதிகளாகத் தெரிவார்கள்.

அணு உலையில் எரிபொருள் நிரப்பத் தடையேதுமில்லை என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியபின்னர் ஏன் மக்கள் போராடவேண்டும் ? மேல் முறையீட்டுக்குச் செல்ல வேண்டியதுதானே?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது கூடங்குளம் இடிந்தகரை மக்கள் அல்ல. அவர்கள் எப்போதும் களத்தில்தான் அமைதியாகப் போராடி வருகிறார்கள். அவர்களை ஆதரிக்கக்கூடிய அறிவுஜீவி-நேச சக்திகளில் ஒன்றான பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்புதான் வழக்கு தொடுத்தது. அது மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவிர கடந்த 400 நாட்களாகவே பல அணு உலை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அதனால் மக்கள் அங்கே தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லமுடியுமா என்ன? சட்ட ரீதியான போராட்டம் ஒருபக்கமும், களத்தில் அறவழிப் போராட்டம் இன்னொரு பக்கமுமாக நடப்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

உச்ச நீதிமன்றம் சொன்னால் ஒப்புக் கொண்டு விடுவார்களா?
என்ன சொல்லும் என்பதைப் பொறுத்தது அது. உச்ச நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு மக்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லையென்றால் தொடர்ந்து போராடுவதில் என்ன தவறு ? பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை இல்லாததாக்குவதற்காக ,அரசாங்கங்கள் தீர்ப்பு வந்தபின் சட்டங்களை திருத்தியிருக்கின்றன. ராமர் பாலம், பாபர் மசூதி விஷயங்களில் உச்ச நீதிமன்றம் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்று இந்துத்துவ அமைப்புகள் சொன்னதில்லையா? இது எங்கள் மத நம்பிக்கை, இதை கோர்ட் முடிவு செய்யமுடியாது என்று அவர்கள் வாதிடவில்லையா? அவ்வளவு ஏன்? காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை இன்று வரை கர்நாடக அரசு மதித்து நிறைவேற்றவே இல்லையே. ஓர் அரசாங்கமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதபோது அதன் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லையே. ஆனால் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை பாதுகாக்கப் போராடும்போது மட்டும் நீதிமன்றத்தைக் காட்டி மிரட்டுவது நியாயமா? தவிர இந்த பிரச்சினையில் கீழ் நீதிமன்றம் பல முக்கியமான வாதங்களை புறக்கணித்துவிட்டது. அவற்றை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை மக்கள் சார்பில் வழக்கு தொடுப்பவர்களுக்கு இருக்கிறது.

என்ன விஷயங்கள் பரிசீலிக்கப்படவேண்டும் ?
இந்திய அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம், உலக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் முகமை ஆகியவற்றின் விதிகளின்படி அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் ஒரே ஒரு கிராமத்தில் சுமார் 50 பேர் முன்னால் ஒரு உரையை நிகழ்த்திவிட்டு, ஒத்திகைகள் மொத்தமாக நடத்தப்பட்டுவிட்டதாக அணுசக்தி துறை சாதிக்கிறது. மத்திய தகவலறியும் உரிமைக்கான ஆணையத்தின் முன்பு போராட்டக்குழுவின் சார்பில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த ஆணையம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அவற்றை அணுசக்தித்துறை தரவே இல்லை. புகொஷிமா அணு உலை விபத்துக்குப் பின் இந்திய அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் அமைத்த குழு, இனி இந்திய அணு உலைகளில் பின்பற்றவேண்டிய கூடுதல் பாதுகாப்புக்கான வழிமுறைகளை வகுத்தது. மொத்தம் 17 நெறிமுறைகள். அவற்றை கூடங்குளத்தில் நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்துக்கு செல்லக்கூடாது. அவற்றை நிறைவேற்ற இரு வருடங்கள் தேவைப்படும் என்று வாரியமே சொல்லியிருக்கிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் எரிபொருள் நிரப்பும் பணியை வேகமாகச் செய்ய அணுசக்திதுறை அவசரப்படுகிறது. அதற்கு தமிழக அரசு போலீஸ் உதவியை அளித்து மக்களை ஒடுக்குகிறது.

அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள் ஏன் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி கவலைப்படவேண்டும் ? தொடர்ந்து உலையை மூடு என்ற போராட்டத்தையே செய்யவேண்டியதுதானே ?

உலையே வேண்டாம் என்பதுதான் சரியான கருத்து. ஆனால் உலை வேண்டும் என்பவர்கள் அக்கறை காட்டவேண்டிய விஷயம் உலையின் பாதுகாப்பு அம்சங்கள். அவர்கள் அதற்கு குரல் கொடுக்காமல் இருப்பதால், அவர்கள் சார்பில் அவர்கள் நன்மைக்காகவும் சேர்த்து உலை எதிர்ப்பாளர்கள் பேச வேண்டியிருக்கிறது. ஏன் உலை வேண்டாம் என்று சொல்பவர்கள் கருத்தை சரியாக எல்லாரும் கேட்டால் இன்னும் பலரும் மனம் மாறக் கூடும்.உலை பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் முதல் பல நிபுணர்கள் சொன்னதைக் கேட்டு உலை எதிர்ப்பாளர்கள் கூட மனம் மாறலாம் இல்லையா?எதிர்ப்பாளர்கள் திறந்த மனதோடு மத்திய அரசின் நிபுணர் குழு, மாநில அரசின் நிபுணர் குழு கொடுத்த அறிக்கைகளை எல்லாம் படித்தார்கள். தங்களுக்கு உதவுவதற்காக, அணு உலைகளை எதிர்க்கும் விமர்சிக்கும் விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்தார்கள். அரசாங்க விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கைகள் தொடர்பாக பல கேள்விகளை சந்தேகங்களை எழுப்பினார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முன்வரவே இல்லை. எதிர்ப்பாளர்கள் அமைத்த மாற்று விஞ்ஞானிகள் குழுவை சந்தித்து விவாதிக்கச் சொல்லியும் அரசு விஞ்ஞானிகள் தயாராக இல்லை. கேட்ட பல ஆவணங்களைத் தரவும் மறுக்கவேதான் தகவலறியும் உரிமை ஆணையத்தில் மனு போட்டு கேட்கவேண்டியதாயிற்று. ஆணையம் உத்தரவிட்டும் ஆவணங்களைத் தரவில்லை. இவையெல்லாம் இல்லாமல் எப்படி வெறும் வாய்ப்பேச்சை நம்பி மக்கள் ஒப்புக் கொள்வார்கள் ? விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு ?

அரசும், உலையை நிறுவிய ரஷ்ய கம்பெனியும் தானே பொறுப்பு ?

நஷ்ட ஈடு யார் யார் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் ரஷ்யாவுடன் மன்மோகன்சிங் அரசு போட்ட ஒப்பந்தத்தை வெளியிடச் சொல்கிறோம். அதை வெளியிட அரசு தொடர்ந்து மறுக்கிறது. இது ராணுவ ரகசியம் அல்ல. ஆனாலும் மறுக்கிறார்கள்.

இப்போது இதெல்லாம் அந்நிய என்ஜிஓக்களின் சதி என்று மத்திய உள்துறை அமைசர் ஷிண்டே சொல்லுகிறாரே ?

இது ஏற்கனவே நாராயணசாமி ஓராண்டில் பல முறை சொல்லி அடிபட்டுப் போன அவதூறு. சில தொண்டு நிறுவனங்கள் மீது ரெய்டு கூட செய்யப்பட்டது. ஆனால் கடைசியில் நாடாளுமன்றத்திலேயே இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றுதான் அமைச்சர் பதில் சொல்லவேண்டியிருந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன ?போலீசை வைத்து மக்களை அடித்து நொறுக்கிவிட்டு அணு உலையை திறப்பதுதான் தீர்வு என்று மத்திய அரசும் மாநில அரசும் நினைக்கின்றன. இது தீர்வு அல்ல. இந்த நினைப்புதான் பிரச்சினை.

அப்படியானால் என்ன செய்யவேண்டும் ?

முதலில் 400 நாட்களாக அமைதியாக அறவழியில் போராடிய மக்கள் மீதும் அவர்களை சிறப்பாக நெறிப்படுத்திய தலைவர்கள் மீதும் போட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். உச்ச நீதி மன்ற வழக்குகள் முடியும் வரையிலும் , பாதுகாப்பு தொடர்பான எல்லா விதிமுறைகளும் பின்பற்றப்படும்வரை, எரிபொருள் நிரப்பி உலையை மேலும் ஆபத்தானதாக ஆக்காமல் நிறுத்த வேண்டும். இரு தரப்பு விஞ்ஞானிகளையும் ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கச் செய்ய வேண்டும். இந்திய அணு சக்தி துறையின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு உலைகளை மூடி வரும் நிலையில் நமது அணு உலைகள் பற்றிய மறுபரிசீலனையை நேர்மையாக செய்யவேண்டும்.

இதையெல்லாம் இந்த கூடங்குளம் உலையைக் கட்டுவதற்கு முன்பே செய்திருக்கலாம் இல்லையா?

சுமார் 40 வருடங்களாக இந்தியாவெங்கும் அணு உலை எதிர்ப்பு அறிஞர்கள் சொல்லி வந்ததை அரசு அலட்சியப்படுத்தியது. கூடங்குளத்தில் இடிந்தகரையில் சாதாரண மக்கள் பல்லாயிரக்கணக்கில் அமைதியாக உண்ணாவிரதப் போராட்டத்தை 400 நாட்கள் நடத்திய சூழலில்தான் முதல்முறையாக அணுசக்தி துறை பதில் சொல்லவே ஆரம்பித்திருக்கிறது.

இந்த எதிர்ப்பை உலை கட்டும் முன்பு ஆரம்பத்திலேயே செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று கலைஞர் கருணாநிதி சொல்லியிருக்கிறாரே ?

அதைச் சொல்லும் தகுதியே அவருக்குக் கிடையாது. 1987௮8 சமயத்தில் நான் தேசிய முன்னணிக்கு ஆதரவு நிலை எடுத்து முரசொலியில் ஞாயிறு மலரைத் தயாரிக்கும் வேலை செய்துவந்தேன். அப்போது தினசரி சந்திக்கும் முரசொலி மாறனிடம் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச் சொன்னோம். அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. டெல்லி நிர்ப்பந்தம் காரணம் என்று மாறன் என்னிடம் சொன்னார். டெல்லிக்கு பயந்தது மட்டுமல்ல கருணாநிதி செய்தது. மே 1, 1989ல் அவர் முதல்வராக இருந்த போது கன்யாகுமரியில் அணு உலையை எதிர்த்து மாபெரும் மீனவர் பேரணி நடந்தது. அதில் கலைஞரின் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் இறந்தார். ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சினையை அவர் அணுகிய விதம் இதுதான்.

ஜெயலலிதா அணுகிய விதம் வித்யாசமானதா ?

காமராஜர் சொன்னது போல எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். முதலில் உள்ளாட்சி தேர்தல்கள், பின்னர் மார்ச் 18 சங்கரன் கோவில் தேர்தல் முடியும்வரை போராட்டத்துக்கு ஆதரவு நிலை எடுப்பது போல சில செயல்களை செய்து ஏமாற்றினார். தேர்தல் முடிந்த மறு நாளே மக்கள் மீது போலீஸ் முற்றுகையை ஏவி , பால், குடிநீர் உணவு எதுவும் கிராமங்களுக்கு செல்லவிடாமல் தடுத்தார். அந்த அணுகுமுறையின் அடுத்த கட்டம்தான் செப்டம்பர் 10 தடியடி. (அது அணுசக்தி வரலாற்றில் ஏற்கனவே ஒரு முக்கியமான நாள். தாராபூரில் இருக்கும் அணு உலையில் 700 லிட்டர் கதிரியக்க ஐயோடின் 1989 செப்டம்பர் 10 அன்று கசிந்தது. அடுத்து ஒரு வருடத்துக்கு உலை மூடப்பட்டிருந்தது. இதுதான் இந்திய அணுசக்தி துறையின் சாதனைச் சோற்றில் ஒரு பருக்கை .)

இப்போது ஜெயலலிதா என்ன செய்யவேண்டும் ?

முதலில் அவர் மக்களுக்காக வேலை செய்யும் ஒரு மரியாதைக்குரிய வேலையாள்தான் முதலமைச்சர் பதவி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வாதிகாரியின் அடிமைகளாக நாடும் நாட்டு மக்களும் இருப்பது போல, எதற்கெடுத்தாலும் என் அரசு என்று அறிக்கை விடும் மனோநிலையிலிருந்து வெளியே வரவேண்டும். வாராவாரம் பத்திரிகைகளை சந்திப்பேன் என்று சொன்ன வாக்குறுதியை நான்கே வாரங்களில் பறக்கவிட்டவர் இனி வாராவாரம் ஊடகங்களை சந்தித்து விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முன்வரவேண்டும். தேர்ந்தெடுத்த சில அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் மட்டுமே சந்திப்பது என்ற பழக்கத்தை கைவிடவேண்டும். அசல் உலகம் என்ன என்று அவருக்குத் தெரியாமல் அவரை வைத்திருப்பதில் சில அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லாபம் இருக்கலாம். ஆனால் நஷ்டம் மக்களுடையது. கருணாநிதியின் பலமே அவரை எப்போதும் யாரும் சந்திக்கமுடியும் என்பதுதான். பிரச்சினையைத் தீர்க்கிறாரோ இல்லையோ அவர் முதல்வராக இருந்தால் போராட்டக் குழுவினரை இதற்குள் ஓராண்டில் நான்கைந்து முறையாவது சந்தித்து பேசியிருப்பார். அணு உலை தொடர்பாக தங்கள் கருத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் நேரம் கேட்டு மனு அனுப்பினார்கள் பார்க்க இயலாது என்ற பதில் கூட வரவில்லை.ஒரு பக்கத் தகவல்கள் மட்டுமே ஜெயலலிதாவுக்குக் கிடைக்கின்றன என்பதும் அதன் அடிப்படையில்தான் அவர் முடிவுகள் எடுக்கிறார் என்பதும் தான் அவரது மிகப் பெரிய பலவீனம். இதிலிருந்து வெளியே வராவிட்டால் அவருக்கு அதிகபட்ச நஷ்டம் அடுத்த தேர்தல் தோல்வி. ஆனால் மக்களுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம். எம்.ஜிஆர் காலத்திலிருந்து விஸ்வாசமாக அ.தி.மு.கவுக்கு ஓட்டு போடும் மீனவ மக்களின் ஓட்டை , ஜெயலலிதா அணு உலை விவகாரத்தை கையாண்ட விதத்திலும் இடிந்தகரை தாக்குதலையடுத்தும் இழந்துவிட்டார் என்று இப்போதே சொல்லலாம். அதை மனதில் வைத்துத்தான் கருணாநிதி தாக்குதல் நடந்து 48 மணி நேரம் வரை யோசித்துவிட்டு பின்னர், இடிந்தகரை மக்கள் சார்பான அறிக்கையை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அடுத்த 25 வருடங்களுக்கு நிச்சயமாக மீனவர் ஓட்டு தனக்கு உறுதிப்பட வேண்டுமென்றால் ஜெயலலிதா செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். போலீஸ் நடவடிக்கைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ( மக்கள் ரொம்ப நல்லவர்கள்; உடனே மன்னித்துவிடுவார்கள்! ), கூடங்குளம் அணு உலையைக் கைவிடும்படி மத்திய அரசுக்கு சொல்லவேண்டும். எப்படியும் அதிலிருந்து மின்சாரம் பெரிதாக வந்துவிடப் போவதில்லை. ஓட்டாவது வருகிறமாதிரி பார்த்துக் கொள்ளலாம்.


மற்ற அரசியல் கட்சிகள் என்ன செய்யவேண்டும் ?
அணு உலையை இதுவரை ஆதரிக்கும் கட்சிகள் எல்லாரும் நேர்மையாக அணு உலைப் பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்புக்குப் பொறுப்பான ஒழுங்குபடுத்தல் வாரியமே 30 வருடமாக சரியாக செயல்படவில்லை என்று கடுமையாக தணிக்கை அதிகாரி ஏன் சொன்னார் என்று படித்துப் பார்க்க வேண்டும். அணு உலை கூடாது என்ற போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் போராடும் மக்கள் மீது அரசு வன்முறை நடந்த பிறகு தெருவுக்குவந்து குரல் கொடுக்கும் அபத்தத்தைக் கைவிட வேண்டும். செப்டம்பர் 9 அன்றே இடிந்தகரையில் மக்கள் கடற்கரையில் கூடினார்கள். போலீஸ் சுற்றி வளைத்தது. அன்றே ஆதரவுக் கட்சிகள் எல்லாம் தமிழ்நாடெங்கும் பின்னர் நடத்திய சாலை மறியல், போராட்டம், தர்ணா எல்லாவற்றையும் நடத்தியிருந்தால், நிச்சயம் அரசு செப்டம்பர் 10 காலை இடிந்தகரை மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்கியிருக்கும். மாறாக மக்கள் அடித்து நொறுக்கப்பட்டபின்னர், செப்டம்பர் 11 அன்று கண்டனப் போராட்டங்களை நடத்தியதில் ஒரு பயனும் இல்லை. மருத்துவமனையில் போராடும் நோயாளிக்கு ரத்த தானம் தர வருவதற்கு பதில் அவர் இறந்ததும் வந்து மாலை போட்டு ஒப்பாரி வைக்கும் போக்கை ஆதரவு இயக்கங்கள் கைவிடவேண்டும்.

பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் ?

படிப்பறிவில்லாத, பொருளாதார வலிமை இல்லாத இடிந்தகரை, கூடங்குளம் பொது மக்களிடமிருந்து , இதர ஊர்களில் இருக்கும் படித்த வசதியான பொதுமக்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். உங்களுக்கெல்லாம் புரியாது என்று ஏளனம் செய்யப்படும் மக்கள், அணு உலைகளால் என்னென்ன ஆபத்து வர முடியும் என்று பலரிடமும் கேட்டுத் தெரிந்துவைத்துக் கொண்டுதான் போராட வந்தார்கள். தாமாகவே படித்துத் தெரிந்துகொள்ளும் வசதியில் இருக்கும் பொதுமக்கள், ‘யார் எங்கே செத்தாலென்ன, என் வீட்டில் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தால் போதும்’ என்ற கேவலமான மனநிலையிலிருந்து வெளிவரவேண்டும். எத்தனை அணு உலை நிறுவி அதில் ஏற்படும் சிக்கல்களால் மக்கள் செத்தாலும் சாகாவிட்டாலும், அதிலிருந்து போதுமான மின்சாரம் வரப்போவதில்லை என்பதுதான் உண்மை. இன்னும் பல கோடி பேர் உயிருக்கு நிரந்தர ஆபத்தானாலும் பரவாயில்லை என்று மேலும் ஐந்தாறு அணு உலைகளை நிறுவினாலும் தமிழ்நாட்டில் 24 மணி நேரம் தடையற்ற தூய மின்சாரம் வரப் போவதில்லை. ஏன் அது அப்படி என்று படித்தவர்கள் பிறர் சொல்லிப் புரியாவிட்டாலும் தாமாகவே படித்தேனும் புரிந்துகொள்ளவேண்டும்.

-ஞாநி

வெள்ளி, அக்டோபர் 05, 2012

இடிந்தகரையில் இருந்து ஒரு பெண் குரல்..!

அனுப்புதல்

இடிந்தகரை பெண்கள்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
திருநெல்வேலி மாவட்டம்

அன்புள்ள சகோதரி,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இது நாங்கள் எழுதும் நான்காவது கடிதம். இந்த முறை உங்களுக்குச் சொல்ல எங்களிடம் அதிக செய்திகள் இல்லை.

நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆம்! செப்டம்பர் 10ம் தேதி நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தெரிவிக்கும் முரண்பட்ட தகவல்கள், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் இவற்றுக்கு நடுவே எங்களுடைய வாழ்க்கை அந்தரத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.

அக்டோபர் 8ம் தேதி, நாங்கள் அனைவரும் கடற்கரைக்குச் சென்று வெயிலிலும் கடல் அலைகளுக்கு மத்தியிலும் போராடப்போகிறோம். எங்களுக்கு அழிவுக்கு இட்டுச்செல்லும் கூடங்குளம் அணுமின் நிலையத்தையொட்டிய கடல் பகுதியில் படகுகளில் சென்று ஆண்கள் முற்றுகையிட்டுப் போராடவிருக்கின்றனர். இவற்றுக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், செப்டம்பர் 13 அன்று இறந்த சகாயத்தின் 4 குழந்தைகளும், சேவியரம்மாவின் வயதான தாயும், அவரது குழந்தைகளும், செல்வியின் மகனும் கண்ணீருடன் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அக்டோபர் 8 அன்றும்கூட எங்களுடைய அமைதியான போராட்டத்தைக் குலைக்க அடக்குமுறை ஏவப்படும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், நாங்கள் ஏன் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். எங்களுடைய கேள்விகளுக்கும் அச்சங்களுக்கும் இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஜனநாயக முறையில் எங்களுடன் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. உங்கள் பகுதியில் நச்சு பரப்பும் அமைப்பொன்றை நிறுவ நீங்கள் அனுமதிப்பீர்களா? கதிர்வீச்சுக்கு உங்கள் குழந்தைகளை இரையாக விடுவீர்களா? எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் நம்பியிருக்கும் கடல் நீர் மாசுபடுவது பாதுகாப்பானதுதானா? எங்கள் கேள்விகள் இந்த நொடி வரை விடையளிக்கப்படாமலும், செவிமடுக்கப்படாமலும் இருபதை என்ணி நாங்கள் கோபமுற்று இருக்கிறோம்.

ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம். இப்போதும்கூட, இந்த நிலைமையிலும்கூட ஒரு பேச்சுவார்த்தையோ, கலந்தாலோசனையோ நிகழக்கூடும் என்று நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இருக்குமிடம், பதவி எதுவாயினும், உங்கள் அதிகாரம் சக்தி அனைத்தையும் அளித்து நீங்கள் எங்களுக்கு உதவவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து 8ம் தேதி உங்கள் கண்கள் எங்களை நோக்கி இருக்கட்டும். தமிழக முதல்வருக்கும், தொடர்புடைய மற்றவர்களுக்கும் தயவு செய்து எழுதுங்கள். காவல்துறையைக் கொண்டு எங்களை பயமுறுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுங்கள். நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. ஆனால், இந்த வேண்டுகோள் எந்தளவுக்குத் தேவை என்பதை நீங்களும் அவர்களும் உணரவேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். அவர்களுடைய தைரியத்தை அவ்வாறு காண்பிப்பதற்கு பதில் எங்களை நோக்கி வரச்சொல்லி அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். சட்டத்தை மீறுவதோ, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. எங்களுக்குத் தீராத இன்னலைத் தரும் ஒன்றை நோக்கிய அமைதியான பயணமாகவே எங்கள் போராட்டம் இருக்கும். உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.

தயவுசெய்து அவர்களுக்குச் சொல்லுங்கள். இன்னும் 72 மணி நேரம் இருக்கிறது. இப்போது கூட எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க அவர்களுக்கு நேரம் இருக்கிறது. 

தயவுசெய்து சிறையில் இருக்கும் எங்கள் சகோதரிகளை விடுதலை செய்யக் கோருங்கள். ஆண்கள் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்படிக் கூறுங்கள். இதையெல்லாம் கோருவது சட்டத்துக்குப் புறம்பானதா என்ன?

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு எங்களின் குரலாய் இருங்கள்!

நன்றி

இடிந்தகரையிலிருந்து...
சகோதரிகள்
அக்டோபர் 5, 2012
( எஸ்.அனிதாவிடம் 4.10.2012 அன்று கூறியபடி)

கூடங்குளம் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை கண்டித்து வழக்கறிஞர்களின் அறப்போராட்டம் !!



மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி,  பிரிட்டிஷ் அரசை விமர்சித்து யங் இந்தியாபத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக 1922ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124(A) பிரிவின்படி தேசத்துரோக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. இந்த வழக்கு விசாரணையின்போது "இந்த அரசுக்கும் ஆட்சிக்கும் எதிராக எழுதுவதும் பேசுவதும் எனக்கு உணர்வுப் பூர்வமான விஷயமாக உள்ளது. தேசப்பற்று என்பதைச் சட்டத்தின் மூலம் உருவாக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது. இந்த 124(A)  என்கிற சட்டப் பிரிவு என்பது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவும் ஒடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களில் முதன்மையானது'' என்று காந்தி குறிப்பிட்டார்.

 1951-ல் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, நாடாளுமன்றத்தில் "இதுபோன்ற கண்டனத்துக்கு உரிய சட்டப் பிரிவு எதுவுமே இருக்க முடியாது என்றும், இதை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது!” என்றும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த சட்டத்தை உருவாக்கிய ஆங்கிலேயரே இச்சட்டத்தை 2010ம் ஆண்டில் அவர்கள் நாட்டிலிருந்து முழுமையாக அகற்றிவிட்டனர். ஆனால் இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் இந்தியாவிலோ இந்த கருப்புச் சட்டம் இன்றும் அமலில் உள்ளது.

இன்றைய இந்திய அரசை விமர்சிப்பவர்கள் மீதும் இந்த கருப்புச்சட்டம் இரக்கமின்றி ஏவப்படுகிறது. சராசரி இந்தியக்குடிமகனின் மனசாட்சியாக விளங்கும் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் அரசின் மருத்துவக்கொள்கைகளை விமர்சித்த மருத்துவர் பிநாயக் சென் போன்றவர்களையும் இந்த சட்டம் முற்றுகையிடத் தவறவில்லை.

தங்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் மக்கள் போராட்டங்கள் அனைத்தையும், தம் ஆட்சியை கவிழ்க்கும் சதியாகப் பார்த்து பீதியடையும் ஆட்சியாளர்கள், போராடும் மக்களை ஒடுக்குவதற்கு அறமற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துகின்றனர்.

இன்று தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும் கூடங்குளம் பகுதி மக்களையும் இவ்வாறே அடக்கி ஒடுக்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு சுமார் 25 ஆண்டு கால வரலாறு உள்ளது. 1986ம் ஆண்டிலேயே இந்த போராட்டம் தொடங்கிவிட்டது. நெடுஞ்செழியன், அசுரன், பாமரன், டி.என்.கோபாலன், ஞாநி, ஏ.எஸ். பன்னீர் செல்வம், நாகார்ஜுனன் போன்ற பத்திரிகையாளர்கள்-எழுத்தாளர்கள்; செ. நெ. தெய்வநாயகம், வி.டி. பத்மநாபன், புகழேந்தி, ரமேஷ் போன்ற மருத்துவர்கள்; அன்டன் கோமஸ், சுப. உதயகுமார் போன்ற சமூகத் தலைவர்கள் – ஆர்வலர்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வந்தனர். கூடங்குளம் அணுஉலைக்கு முறையே அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, அப்போதைய குடியரசு தலைவர் திரு.ஆர். வெங்கட்ராமன், அப்போதைய தமிழக முதல்வர் திரு. கருணாநிதி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, மக்களிடம் இருந்த எதிர்ப்பின் காரணமாக இந்த விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிரான பரப்புரைகள் பெருகின. அணுஉலைகளால் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சம் அனைத்து மக்களையும் ஆட்கொண்டது.  இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மாறாக கூடங்குளம் மக்களைச் சந்தித்து அவர்களது பீதியை அதிகப்படுத்தும் அளவிலான வகுப்புகளை அணுமின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.

'அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்என்று தொடங்கி 'ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாதுஎன்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர். தாங்கள், சாவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை கூடங்குளம் மக்கள் அப்போதுதான் உணர ஆரம்பித்தனர். உடனே, 'கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருமுனைப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். மாதத்துக்கு ஒரு கிராமத்தில் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட, பெண்கள் மட்டும் இதில் கலந்துகொள்வது என்று முடிவானது. முதலில் கூடங்குளம்... அடுத்து இடிந்தகரை... கூத்தங்குழி... பெருமணல்... வைராவிக் கிணறு... கூடுதாழை... செட்டிக்குளம் என்று போராட்டம் பரவியது. மாதத்துக்கு ஓர் ஊர் என்று இருந்ததை, தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர். இடிந்தகரையில் பந்தல் போட்டு 127 பேர் உட்கார்ந்தனர். இதனைத் தொடர்ந்து கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது தமிழக அரசு. இந்த தடை இன்று வரை நீக்கப்படவில்லை.

 இவ்வாறு ஆரம்பித்து கடந்த சுமார் 400 நாட்களை கடந்தும் வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காமல் தொடரும் இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 10-9-2011 முதல் 29-12-2011 வரை மட்டும் அரசு மக்களுக்கு எதிராக 107 குற்ற வழக்குகளைப் பதிவு செய்தன. 55795 பேருக்கு எதிராக இத்தகைய வழக்குகள் உள்ளன. குறிப்பாக 6800 பேர்மீது “தேசத்துரோகம்” மற்றும் அல்லது “தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல்” ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வழக்குகள் இன்று வரை தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் மீது பதிவு செய்யப்படுகின்றன.  

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அல்லது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்கூட ஒரு காவல்நிலையத்தில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் இத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இது சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் செயலாகும். அமைதியான வழியில், ஜனநாயக முறையில் போராடும் மக்கள் மீது இத்தகைய வழக்குகளை பதிவு செய்வது, எதிர் கருத்துகளை நசுக்குவதற்கே! சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அல்ல!!

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியதை அடுத்து, கடந்த செப்டம்பர் 10, 11 தேதிகளில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.  போராட்டத்தை அடக்குவதற்கு எவ்வித அடிப்படை நியாயங்களும் இல்லாமல் காவல்துறை மக்கள் மீது புரிந்த வன்முறைகள் ஊடகங்கள் மூலம் உலகதிற்கு வெட்டவெளிச்சமானது.

ரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரையில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையை அவர் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட கேள்வி குரூரத்தின் உச்சம்: ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?'' இது ஒரு உதாரணம்தான்!

 ''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சிச் சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது அரசு இயந்திரம்! '' என்பதை போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன் வெளிப்படுத்தியுள்ளார்.

"போராட்டக்களத்தில் இருந்தவர்களை மட்டுமல்ல, கூடங்குளம், இடிந்தகரை, வைராவிக்கிணறு உள்ளிட்ட கிராமங்களில் அவரவர் வீடுகளில் இருந்தவர்களையும் காவல்துறை பலவிதங்களிலும் துன்புறுத்தியுள்ளது. சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரையும் தாக்கியும், கீழ்த்தரமான வார்த்தைகளால் ஏசியும், பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்" என்று மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் கூடங்குளம் சென்ற உண்மை அறியும் குழுவின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

 இதைத் தொடர்ந்து 7 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளத்தை சேர்ந்த கருணாசாகர், முத்துகுமரேசன், வைராவிக்குளத்தை சேர்ந்த ராஜகுமார், இடிந்தகரையைச் சேர்ந்த கிஷன் ஆகிய நால்வரும் 16 வயதுகூட நிரம்பாத இளஞ்சிறார்கள்...சட்டப்படி சிறுவர்கள்! இவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு!  இவர்கள் மட்டும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அரசின் கருத்தை விமர்சிப்பதும், மாற்றுக்கருத்தை முன்வைப்பதும் மனித உரிமையே!

வாழ்வுரிமை கேள்விக்குறியாகும்போது போராடுவது அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமையே!

மத்திய மாநில அரசுகளே
#  வாழ்வுரிமைக்கு போராடும் கூடங்குளம் மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசதுரோக வழக்குகளையும் மற்ற அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறு !

# கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து அமலில் உள்ள 144 தடை உத்தரவை உடனே திரும்ப பெறு !

# கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும்  உறுதி செய் !

-சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்