பனி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங் கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங் கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!



போபால் பேரழிவுக்குக் காரணமாக இருந்தது ஆலையில் இருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோசயனேட்’. குளிர் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய ரசாயனம் இது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், குளிர் சாதனங்களை இயக்குவதை ஆலை நிர்வாகம் நிறுத்தியதால் ஏற்பட்ட வெப்ப நிலை உயர்வாலேயே 'மெத்தில் ஐசோசயனேட்’ வெடித்து வெளியேறியது. 'மெத்தில் ஐசோசயனேட்’ ரசாயனத்தை எதிர்கொள்ள எளிய பாதுகாப்பு முறை ஒன்று உண்டு. மூக்கையும் வாயையும் ஈரத் துணியால் மூடிக்கொண்டு வாயு பரவும் திசைக்கு எதிர் திசையில் மெள்ள முன்னேறுவது. ஆனால், இந்த எளிய முன்னெச்சரிக்கைப் பயிற்சியைக்கூட ஆலையைச் சுற்றி உள்ள மக்களுக்கு ஆலை நிர்வாகமோ, அரசோ கொடுக்கவில்லை. இந்த அழிவுக்கு முன்பே ஆலையில் ஏராளமான விபத்துகள் நடந்தன; அவற்றை அரசு வழக்கம்போல் மூடி மறைத்தது. அழிவு நடந்த அடுத்த சில வாரங்களில் ஏராளமான மருத்துவக் குழுக் களைக் கண்துடைப்பாக அரசு அழைத்துச் சென்றபோது, அப்படி ஒரு சூழலை எதிர்கொண்ட பழக்கம் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் முன் செய்வதறியாமல் நின்றார்கள் மருத்துவர்கள். 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சூழல்கள் எல்லாம் இந்தியாவில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன?
வளர்ச்சியின் பெயரால் கொஞ்சமும் அறி முகம் இல்லாத எவ்வளவோ அபாயகரமான தொழில்நுட்பங்களுடன் இயங்கும் நிறுவனங் களை நாட்டில் அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாயகரமான வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி ஆகின்றன. தவிர, உள்நாட்டிலும் உற்பத்தியாகின்றன அணுக் கழிவுகள் உட்பட. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறே கடக்கிறோம்.
யாரை நம்பி?
இப்படி ஒரு படுகொலையின் பிரதான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டு, ஏனைய உள்ளூர் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின் வெறும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசை நம்பி. ஒரு தொழிற்சாலை விபத்து எவ்வளவு மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான எல்லா அனுபவங்களையும் 'யூனியன் கார்பைடு’ நிறுவனத்திடம் இருந்து பெற்ற பின்னும் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமான வகையில், அணு சக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றிய அரசை நம்பி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் நியாயமான இழப்பீட்டுக்காகப் போராடும் மக்களுக்கு, குடிக்கக்கூட பாதுகாப்பான தண்ணீரை வழங்காத அரசை நம்பி!
மார்க்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது: ''வரலாறு திரும்பவும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது, முதல் முறை விபத்தாக, மறுமுறை கேலிக்கூத்தாக!''
-சமஸ்
நன்றி: ஆனந்தவிகடன், 17-10-2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக