புதன், செப்டம்பர் 03, 2014

ஃபுகுஷிமா குறிப்புகள்: ஒரு போராட்டத்தை நோக்கி வரலாற்று பயணம்- கோ.சுந்தர்ராஜன்

வருடந்தோறும் பனிப்பொழிவின் முதல் வாசனையை திருவிழாவாக கொண்டாடும் அழகிய, சிறுநகரம்தான் இதாதே. இதாதே நகரத்தை பொருத்தவரையில் பனிப்பொழிவு எப்போதும் புன்னகைகளை பரிசளிக்கும். பனிப்பொழிவு, வசந்தகாலத்தின் வரவேற்பு. மரப்பலகைகளில் சாக்பீஸ்களால் வரையப்பட்ட கோடுகள் சொல்கின்றன, ஒவ்வொரு வருடமும் பனிப்பொழிவு தரும் மகிழ்ச்சியை. “பனிப்பொழிவு தொடங்கும் நாளை இப்படி கோடு வரைந்து குறித்துக்கொள்வோம், பல விஷயங்களை திட்டமிட உதவும்” என்கிறார் கெனிச்சி ஹசேகவா.

தலைமுறை தலைமுறையாக பால் பண்ணை நடத்தி வருபவர் ஹசேகவா. இது பனிப்பொழிவு காலம். ஆனால் ஹசேகவாவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. இப்போதெல்லாம் பனிப்பொழிவு அந்த மகிழ்ச்சி பற்றிய நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது.

ஹசேகவாவின் சாக்பீஸ் குறிப்புகள் 2011ஓடு முடிகிறது. அந்த வருடம் மார்ச் மாதம்தான் ஃபுகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 160,000 பேர் இடம் பெயர்க்கப்பட்டார்கள். அந்த வருடத்திலிருந்து பனிப்பொழிவு உற்சாகத்தை கொண்டு வரவில்லை. அப்போதிலிருந்து இதாதேவில் விவசாயப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஹசேகவாவின் பால் பண்ணை வியாபாரமும் முடங்கிவிட்டது. தனது அழகிய சிறுநகரத்தில் வாழும் மற்றவர்களை போலவே இதையெல்லாம் மீண்டும் தொடங்குவது சாத்தியமா என்று மலைத்துப் போய் முடங்கியிருக்கிறார் ஹசேகவா.

 ஃபுகுஷிமாவில் பாதிக்கப்பட்ட பிறரைப் போலவே ஹசேகவாவின் வாழ்க்கையும் சிதறிப் போயிருக்கிறது. பால் பண்ணை அவருக்கு தொழில் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக அது அவரது குடும்பத்தை ஒன்றிணைத்த பந்தம். ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு அது அப்படி தொடராது என்று அவருக்கு தெரியும். பல வருடங்களாக அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த 50 மாடுகளை அவர் தனது கைகளால் விஷம் வைத்து கொன்றார். “அவை எனக்கு குடும்பம் போல, ஆனால் வேறு வழியில்லை. கதிரியக்கத்தால் அவை பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றால் மற்றவருக்கும் ஆபத்து” சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் வெடிக்கிறது அவரிடம்.

ஃபுகுஷிமா விபத்து அவருக்கு ஒரு புதிய தொழிலை சொல்லித் தந்திருக்கிறது. இதுவரை அவர் அறிந்திராத தொழில் அது. ஒரு கேமராவை கையில் ஏந்தியபடி அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு ஒளிப்படமும் அவருக்கும் அவருடைய அழகிய இதாதே நகருக்கும் இடையே இருந்த பந்தத்தை உயிர்க்கச் செய்யும் என்று அவர் நம்புகிறார். “என்னுடைய நகரத்துடன் எனக்கு இருக்கும் கடைசி பிணைப்பு இது. இந்த நகரில்தான் எனது தந்தையரும் மூதாதையரும் வாழ்ந்தார்கள். இங்குதான் நான் படித்தேன், விளையாடினேன், வாழ்ந்தேன். இறப்பேன் என்று நம்பினேன்.” அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் சாக் பீஸ் குறிப்புகள் போல தெளிவானவையாக இல்லை. இதாதே நகரின் மனநிலையை பிரதிபலிப்பது போல ஒரு வலியை அவை வெளிப்படுத்துகின்றன. இருந்தாலும் அது மட்டுமே இதாதே நகருடனான தனது தொடர்பை பேணும் வழி என்று நம்புகிறார் ஹசேகவா. “நான் ஒரு விவசாயி, எனது நிலத்தை தொலைத்திருக்கிறேன். இந்த அழகிய நகரத்தை தொலைத்திருக்கிறேன். இந்த வலியை சொல்ல எந்த வார்த்தைகளும் இல்லை.”

கேமராவை மார்போடு அணைத்த படி கண்ணீரில் நனைகிறார் ஹசேகவா. கடந்த மூன்று வருடங்களாக தாதே நகரத்தில் தற்காலிக குடியிருப்பில் வாழ்கிறார் அவர். விபத்தில் அவரது குடும்பம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை..

தொழில் மாறுவது என்பது, ஹசேகவாவிற்கு மட்டும் நடக்கவில்லை. முப்பது ஆண்டுகளாக இயற்கை விவசாயியாக இருந்தவர் டாட்சுகோ ஒகவரா. இப்போது கதிரியக்க வீச்சின் அளவு   குறிப்புகளை கொண்ட விவசாய பொருட்களை விற்கும் கடையை வைத்திருக்கிறார். மாதம் ஒரு முறை ஷியாடகே* காளான் கதையை வளர்ந்தவர்களுக்கு சொல்லும் பொம்மலாட்டத்தை  நடத்துகிறார். சுமார் 35 வருடங்களாக ஷியாடகே காளான் விவசாயிகளாக இருந்த அவரது நண்பர்களின் கண்ணீர் கதையை சொல்லும் பொம்மலாட்டம் அது. “ஃபுகுஷிமாவால் அவர்கள் நான்கு டன் ஷியாடகே காளான்களை வீணடிக்க வேண்டியிருந்தது. கதிரியக்க குப்பை என்று குறிக்கப்பட்ட 60,000 காளான்கள்தான் இப்போது அவர்களிடம் எஞ்சியிருக்கின்றன. அவர்களின் கதையை சொல்லதான் நான் இந்த பொம்மலாட்டத்தை உருவாக்கினேன். என்னுடைய இந்த பொம்மலாட்டம் இன்னமும் நிறைவு பெறவில்லை, இது தொடர வேண்டும், முடிந்தவரை எல்லோருக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும் என்றுதான் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.”

ஒகவராவைப் பொறுத்தவரையில் மறப்பது என்பது அவரை மிகவும் அச்சுறுத்துகிறது. “அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்று எனக்கு கவலையாக இருக்கிறது. அது மிகவும் அச்சுறுத்தக்கூடியது. அவர்கள் மறந்துவிட்டால், அந்த விபத்து மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றுதானே பொருள்” என்று கேட்கிறார், கண்ணீர்த்துளியை துடைத்தபடி.  

”கடந்து போனவற்றை மறக்கிறவர்கள், அதை மீண்டும் மீண்டும் நிகழ்த்துமாறு கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்க தத்துவவியலாளார் ஜார்ஜ் சண்டியானா சொன்னது எனக்கு அப்போது நினைவு வந்தது. ஒகவரா பயப்படுவது போல ஃபுகுஷிமாவில் மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் அது நிகழலாம் என்பதுதான் உண்மை.

 ஃபுகுஷிமா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் வாய்ப்போடு க்ரீன் பீஸ் இந்தியா அமைப்பு என்னை தொடர்பு கொண்ட போது, அந்த வாய்ப்பை தவறவிட கூடாது என்பதுதான் எனது முக்கியமான எண்ணமாக இருந்தது. இடிந்தகரை மக்களுக்கு ஃபுகுஷிமாவில் நடந்த விபத்துதான் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஃபுகுஷிமாவில் விபத்து நடக்கும் வரை, அவர்களது ஊரில் இருக்கும் அணு உலைகளால் எந்த பிரச்னையும் வரும் என்று அவர்கள் நம்பவில்லை. தொலைகாட்சியில் ஃபுகுஷிமா விபத்தின் கோரக் காட்சிகளை பார்த்து போராட வெளியேறியவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை. சாதாரண பெண்களையும் மீனவர்களையும் ஒரு தீவிரமான வீரியமான போராட்டத்திற்கு தலைமையேற்க வைத்ததன் பின்னணியில் ஃபுகுஷிமா விபத்து இருந்திருக்கிறது. ஃபுகுஷிமா விபத்தின் காரணமாகவே, மிகப்பெரிய அதிகாரத்தை எதிர்க்கும் உறுதி அவர்களுக்கு வந்தது.

எனது ஜப்பான் பயணம் ஒரு நல்லெண்ண அடிப்படையிலேயே தொடங்கியது. விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு செல்வதால் விசா தொகையை செலுத்த வேண்டாம் என்று சொன்னது ஜப்பான் தூதரகம். அப்போது ஜப்பானிற்கு அதன் மக்கள் மீதிருந்த கரிசனம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அந்த வியப்பு ஜப்பான் சென்றவுடன் காணாமல் போனது. தங்களை அரசாங்கம் எப்படி கைவிட்டதென்று ஃபுகுஷிமாவை சேர்ந்த ஒவ்வொரு ஜப்பான் குடிமகனும் குடிமகளும் சொன்ன போது அரசாங்கங்கள் மக்களுக்கானவை அல்ல என்பது மீண்டும் உறுதியானது. ஃபுகுஷிமா அணு உலை தொடங்கப்படவிருந்த காலகட்டத்திலிருந்தே அதை குறித்த அவநம்பிக்கைகளோடு இருந்தவர் அணு உலை இருக்கும் பகுதியான ஃபுதாபா நகரத்தின் நகரதந்தை காத்சுதகா இடோகாவா.  

அணு உலை தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே அவர் ஜப்பான் மத்திய அரசிடமும் டோக்கியோ மின்சார கம்பனியிடமும் (டெப்கோ) ஒரே ஒரு கேள்வியைதான் மீண்டும் மீண்டும் கேட்டார். “இந்த அணு உலைகளில் விபத்து ஏற்படாது என்று நீங்கள் உறுதியாக உத்திரவாதம் தர முடியுமா?” ஒரே பதிலைதான் அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். “நிச்சயமாக.”

"ஃபுகுஷிமா மாநிலம், ஃபுதாபா நகரம் மற்றும் டெப்கோவிற்கு இடையில் அணு உலைகளில் விபத்து நிகழாது" என்று ஒப்பந்தமே கையெழுத்தானதாக இடோகாவா சொல்கிறார்.  ஃபுகுஷிமா விபத்து நடப்பதற்கு முன்பே அரசாங்கமும் டெப்கோவும் எங்களிடம் பொய்தான் சொல்கிறது என்று எனக்கு தெரியும் என்கிறார் இடோகாவா.


தனது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த நாளை மிகத்துல்லியமாக நினைவுக்கூறுகிறார் இடோகாவா. “நகர மையத்தின் நான்காவது மாடியிலுள்ள ஜன்னலிலிருந்து என்னால் கடலை பார்க்க முடிந்தது. அலைகளில் வீடுகளும் மரங்களும் மிதந்து கொண்டிருந்தன. அங்கு இருக்க கூடாத பொருட்கள் இருந்தன, இருக்க வேண்டிய பொருட்கள் காணாமல் போயிருந்தன. அது போல ஒரு காட்சியை நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை.”

ஃபுகுஷிமாவில் தொடர்ந்து நிறைய பேரிடம் உரையாடும், அவர்களது அனுபவங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது மினாகோ சுகனோ என்கிற பெண்ணின் வார்த்தைகள்தாம். மூன்று குழந்தைகளின் தாய் அவர். இப்போது அணு உலை எதிர்ப்பு போராளி. ”எனக்கு மூன்று அழகான குழந்தைகள் இருக்கிறார்கள். செய்வதற்கு அழகான வேலைகள் இருக்கின்றன. ஆனால் அணு உலைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். தினமும் இணையத்தில் அணு உலை பற்றி எதையாவது வாசித்துக்கொண்டிருக்கிறேன். உலகிலுள்ள அணு உலை எதிர்ப்பு போராளிகளை தொடர்பு கொண்டு அவர்களோடு இணைந்து பணி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்” என்கிறார் சுகனோ. “உங்களது முதல்வர் ஒரு பெண் தானே? கதிரியக்க நிலத்தில் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நிச்சயம் அவர் புரிந்து கொள்வார். நான் வேண்டுமானால் அந்த கொடுமையின் அனுபவத்தைச் சொல்லி அவருக்கு ஒரு கடிதம் எழுதட்டுமா?” என்று ஆர்வமாக கேட்கும் சுகனோவிடம் சொல்வதற்கு ஒரு நம்பிக்கையான வார்த்தையும் என்னிடம் இல்லை.  

அவரது ஊரில் விபத்து நிகழ்ந்த காலகட்டத்திலிருந்து இப்போது வரையில் பார்க்கும் எல்லோரிடமும் கதிரியக்கம் தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்றும் அது எவ்வளவு ஆபத்தானது என்றும் அவர் சொல்ல தயங்குவதில்லை. “அவர்கள் பிறந்து வளர்ந்த நிலத்திலிருந்து எனது குழந்தைகளை நான் பிடுங்கி வர வேண்டியிருந்தது. எனது மூத்த மகனுக்கு அந்த வீட்டிலிருந்து வர விருப்பமே இல்லை. இந்த இடமும் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் எனது சொந்த வீட்டை விட இங்கு கதிரியக்க அபாயம் கொஞ்சம் குறைவு” என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் துணிகளை காயப்போடுகிறார் சுகனோ. “வெளியே உலர்த்துவது ஆபத்து, கதிரியக்க அளவு வெளியே மிக அதிகம்.”

ஃபுகுஷிமாவில் நுழந்த முதல்நாளே கதிரியக்கம் மக்களை எவ்வளவு பயமுறுத்தி வைத்திருக்கிறது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஃபுகுஷிமாவில் நுழந்தவுடன் கையில் இரண்டு கருவிகளை திணிக்கிறார்கள். அவற்றை உடலில் பொருத்திக்கொள்ளும் படி அறிவுறுத்துகிறார்கள். தொடர்ந்து நமது உடலில் கதிரியக்க அளவை கண்காணிக்கும் கருவிகள் அவை. அதே போல தங்கும் விடுதியின் அறைக்குள் நுழைந்தவுடன் அறையை இரண்டாக பிரித்துவிட சொல்கிறார்கள் அமைப்பாளர்கள். வெளியிலிருந்து கொண்டு வந்த கதிர்வீச்சுள்ள பொருட்களை முதல் பாதியிலேயே விட்டுவிட வேண்டும், அறையின் இன்னொரு பாதியை கதிரியக்கம் குறைவாக உள்ள பகுதியாக வைத்திருக்க வேண்டும்.

சுகனோவின் வீட்டில் இது போல பல நிபந்தனைகளுடன்தான் அவர் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கிறது.

சுகனோவிடம் பேசும் போது எல்லாம் எனக்கு சுந்தரி அக்காவின் நினைவு மேலோங்கிக்கொண்டேதானிருந்தது. வெறும் எட்டாவது மட்டுமே படித்த,  குடும்பத்தலைவியாக மட்டுமே இருந்த சுந்தரி அக்காவை ஃபுகுஷிமாதானே போராட்ட தலைவியாக மாற்றியது? அவரும் சுகனோ போல ஒரு தாய். சுகனோ போலவே தனது குழந்தைகளுக்காகவும் வருங்கால தலைமுறையினருக்காகவும் போராட வீதிக்கு வந்திருக்கும் ஒரு பெண்.

ஜப்பானில் என்னை வியப்பில் ஆழ்த்திய, மனநிறைவை அளித்த ஒரு கணம் வாய்த்தது. வாரந்தோறும் ஜப்பானில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடக்கும். வெள்ளிகிழமை தோறும் நடக்கும் அந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டு ஆடல், பாடல், கோஷம் எழுப்புதல்  என்று பல வடிவங்களில் அணு உலை எதிர்ப்பை பதிவு செய்வார்கள். நான் சென்ற வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திய பதாகைகளில் இடிந்தகரை போராட்ட புகைப்படங்களும் இருந்தன. ஃபுகுஷிமாவிலிருந்து பாடம் பெற்றவர்கள் நாம். இன்று நமது போராட்டத்தை அவர்கள் முன்னுதாரணமாக ஏந்தி நிற்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. இடிந்தகரையில் உள்ள தோழர்களிடம் ஃபுகுஷிமாவைப் பற்றி சொல்லும் போது அந்த பயணத்தில் அவர்களும் ஒரு பகுதியாக இருந்ததை பகிர்ந்து கொண்டேன். அதனாலேயே எப்போதும் மறக்க முடியாத பயணம் அது.

சுந்தரி அக்காவிலிருந்து சுகனோ வரையில், பெண்கள் தான் உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள் என்று எனக்கு உணர்த்திய பயணம். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் அமைதியான எதிர்காலத்திற்காக இந்த போராட்டத்தை தொடர வேண்டும் என்று நினைவுறுத்திய பயணம் அது.  
·         
குறிப்பு: ஷியாடகே காளான் என்பது ஜப்பானில் மிகவும் பாரம்பரியமான ஒரு காளான் வகை.