புதன், அக்டோபர் 26, 2011

கூடங்குளம் போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா?

கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து இரண்டாவது கட்டப் பட்டினிப் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், உள்ளாட்சித் தேர்தலுக்காக கடந்த 17-ம் தேதி மட்டும் இடைவெளி விட்டு, போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், வதந்தி ஒன்று பரவியது.


'போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் சுப.உதயகுமாரன் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்பு​ரோஸ் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்குகிறார்கள். வெளிநாட்டுத் தூண்டுதல் காரணமாகத்தான் இந்தப் போராட்டத்தையே நடத்துகிறார்கள்’ என்று செய்திகள் பரபரத்தன!

உதயகுமாரனிடமே இதுபற்றிக் கேட்டோம். ''இப்படி வதந்திகளைப் பரப்புகிறவர்கள் மீது வழக்குத் தொடரப்போகிறோம். நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அணுமின் நிலைய நிர்வாகத்தினர்தான் எங்களை மிரட்டுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு என் வீட்டில் போலீஸார் ரெய்டு வர இருப்பதாக தகவல்கள் வர, சில பத்திரிகையாளர்களும் வந்தனர். ஆனால், கடைசி வரை ரெய்டு நடக்கவில்லை. ஏன் இப்படி வதந்தி பரப்புகின்றனர்? எங்கள் போராட்டங்களுக்கான நிதியைத் திரட்ட... இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் சுற்றி இருக்கும் சில கிராமங்களில் 'ஊர் கமிட்டி’ ஒன்றை நிறுவி, ஒவ்வொரு வீட்டிலும் நிதி திரட்டுகிறார்கள். இதற்கான கணக்குகளை

'நிதிக் குழு’ பதிவு செய்கிறது. ஆகவே, 'பணம் வாங்கிவிட்டார்கள்’ என்று சொல்வது, இந்த மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகும். முதலில், அணுமின் நிலையத்தார் இத்தனை வருடமாகச் செலவழித்த தொகை பற்றிய வரவு - செலவு கணக்குகளை வெளியிடட்டும். நாங்களும் எங்கள் கணக்குகளை வெளியிடுகிறோம்.

இது தவிர, தனிப்பட்ட முறையிலும் மிரட்டுகிறார்கள். தூத்துக்குடி அரசு அலுவலகம் ஒன்றில் பணி செய்யும் எனது சகோதரியை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான நரேந்திர நாயர், 'உன் அண்ணன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறார். அவரை சிறையில் தள்ள வேண்டி இருக்கும்’ என்றரீதியில் மிரட்டி இருக்கிறார்...'' என்கிறார் ஆவேசத்துடன்.

இதுகுறித்து அருட்தந்தை செல்வராஜ், ''முன்பு இந்தப் போராட்டத்தை நாடார்களுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சாதிச் சாயம் பூச முயன்றார்கள். இப்போது மதச் சாயம் பூச நினைக்கிறார்கள். சில விஷமிகள், 'ரஷ்யா ஒரு நாத்திக நாடு. அதனால், இங்குள்ள பாதிரியார்கள் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்க்கிறார்கள்’ என்கிறார்கள். இதை தா.பாண்டியன் போன்றோரும் ஆதரித்ததுதான் ஆச்சர்யம். 'மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிப்பவர்கள்’ இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடந்த 14-ம் தேதி அகில இந்திய பேராயர் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் க்ரேசியஸை தொலைபேசியில் அழைத்து, 'இப்படியான போராட்டங்களுக்கு பாதிரியார்கள் முன்வரக் கூடாது என்று சொல்லுங்கள்’ என்று பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். முதல் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, 'ஏ... நாடார்களே! பிரச்னை பரதவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்..’ என்று அறைகூவல் விடுத்த 'அய்யா வழி’ பாலபிரஜாபதி, என்ன காரணத்தினாலோ திடீரென்று, 'இந்தப் போராட்டத்தை யாரோ சிலர் தூண்டிவிடுகிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.

இன்னும் சிலர், 'இத்தனை வருடங்களாக இல்லாத போராட்டம் இப்போது ஏன்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து 1989-ல் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதை எல்லாம் தமிழக மக்கள் மறந்துவிட்டார்களா?'' என்று கேள்வி எழுப்புகிறார் செல்வராஜ்.

சுப.உதயகுமாரனின் தங்கையை மிரட்டி​யதாகக் கூறப்படுகிறதே என்று தூத்துக்குடி எஸ்.பி நரேந்திர நாயரிடம் கேட்டபோது, 'அவரது தங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை, மிரட்டவும் இல்லை'' என்றார்.

போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருப்​பதாக சொல்லப்படும் பால பிரஜாபதியிடம் பேசினோம். ''போராட்​டத்தில் இருந்து நான் ஒதுங்கி இருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் ஒளியவில்லை. தொடக்கத்தில், மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்காக என்னை பேச்சாளராகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நாளடைவில் போராட்டம் குறித்த தகவல்கள் எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. திடீர் திடீரென, கலந்து ஆலோசிக்காமல் போராட்டத்தில் இறங்கினர். முதல்வர் மற்றும் பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. ஆனால் முதல்வரை சந்தித்துவிட்டு வந்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டார்கள். கடற்கரை மக்களை முன்நிறுத்துவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முறையாக ஆலோசித்து களத்தில் இறங்காமல் உணர்ச்சி வேகத்தில் திடீர் மறியல் போராட்டத்தில் இறங்கினால், அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஆபத்து நேர அதிக வாய்ப்பு உண்டு. இதை அவர்கள் உணராத காரணத்தால் நான் ஒதுங்கிக் கொண்டேன்'' என்றார்.

மக்களின் வாழ்வோடு அரசுகள் விளையாடுகின்றன. இது எங்கே போய் முடியுமோ?

  • நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை எல்லாம் மூடக் கோரி, பிரஷாந்த் பூஷண் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்று கடந்த 14&ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மரபணு மாற்று பயிர்த் திட்டத்தை எதிர்த்து வரும் பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால் உட்பட பலரும் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.
-ந.வினோத் குமார், என்.சுவாமிநாதன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி: ஜூனியர் விகடன், 30-அக்டோபர் -2011

புதன், அக்டோபர் 12, 2011

ஜப்பான் அணு உலை விபத்து - பாடம் கற்க மறுக்கும் இந்தியா

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும் அதனைத் தொடர்ந்த அணுஉலை விபத்தும் உலகம் முழுவதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. புகுசீமா அணு உலை விபத்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடுமையான கதிர்வீச்சுக்கு உட்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புகுசீமா அணு உலை விபத்து பல நாடுகளின் அணு உலைகளை மூடவோ அல்லது அத்திட்டங்களை கைவிடவோ அல்லது பரீசிலிக்கவோ ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.


 அணு உலை விபத்து ஏற்பட்ட ஜப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூட வைத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி கொள்கையானது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 சுவிட்சர்லாந்து புது உலைகளை கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.

 ஜெர்மனியானது 17 உலைகளை கலைப்பதை தாமதிப்பது என்ற முடிவை தள்ளிப்போட்டுள்ளது

 சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

 அமெரிக்காவில் டெக்சாஸில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு பெரிய உலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 95 விழுக்காடு மக்கள் அணு உலைகள் அமைப்பதை எதிர்த்துள்ளனர்.

 பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 62 விழுக்காடு மக்கள் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 15 விழுக்காடு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

 ஐரோப்பிய நாடுகளில் இன்னும் செர்னோபிள் அணு உலை விபத்தின் அதிர்ச்சியிலிருந்தே மீளாத நிலை உள்ளது.

 அணு உலைக் கம்பெனியான அரெவா திவாலாகும் நிலையில் உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இக்கம்பெனியின் உலைகள் தோல்வியடைந்து விட்டன. இது தொடர்பாக கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 9 மாதகாலமாக அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவில் கடந்த 1973லிருந்தே எந்த புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.

இதெல்லாம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் ஜப்பான் அணு உலை விபத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். ஆனால் இந்தியாவில் எந்தவித சிறு சலனத்தையும் கூட ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த விபத்து ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக, இருக்கின்ற அணு உலைத்திட்டங்கள் விரிவாக்கப்பட உள்ளன. புதிய திட்டங்களும் வரவிருக்கின்றன. தற்போது கூடங்குளத்தில் இரண்டு மென்ரக நீர் ஈவு உலைகளிலும் (ஒவ்வொன்றிலும் 1000 மெகாவாட் மின்சக்தி தயாரிக்க கூடியவை), ராஜஸ்தானில் ரவாபாட்டா என்ற பகுதியிலும் குஜராத்தில் காக்ரபூரிலும் ஆக இரு கனரக நீர் ஈவு உலைகளும் (ஒவ்வொன்றும் 700 மெகாவாட் தயாரிக்கக் கூடியவை)நிறுவப்படுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 5 உலைகள் ஐந்து இடங்களில் வர உள்ளன.

அணுசக்தி குறித்த அனைத்து விசயங்களுக்கும் நிறுவனங்களுக்கும் பெருங்குடை போன்ற அமைப்பாகத் திகழ்கின்ற அணுசக்தி கழகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லாமல் இரகசியமாகவே உள்ளன. அணுசக்தி ஒழுங்குபடுத்தும் வாரியத்தின் பணி, அனைத்து அணுஉலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுதான். கதிரியக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பொது மக்களுக்கு தகவல் அளிப்பதும் இந்த அமைப்பின் முக்கிய பணியாக உள்ளது. ஆனால் அந்தப் பணியினை மேற்கொள்ளாமல் அலுவலக ரகசிய சட்டத்தைப் பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் தேசப்பாதுகாப்பு என்று கூறி தர மறுக்கிறது. அணு உலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்பட அனைத்தையும் ரகசியமாகவே பாவிக்கிறது.

அணுசக்தி உலைகள் யாருக்கும் கட்டுபடாதவை. நாட்டின் உயரிய ஆட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் கூட அணுஉலையின் செயல்பாடுகள், அதன் முதலீடு, செலவுகள் மற்றும் அங்கு நடக்கும் விபத்துகள் குறித்து பேச முடியாது. எந்த மக்கள் பிரதிநிதியும் அவ்வளவு ஏன் அமைச்சர் கூட கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் ஜனநாயகத்துடன் செயல்படுவதற்கு அங்கு இடமில்லை. எல்லாவற்றையும் நாட்டின் பாதுகாப்பு என்பதற்குள் அடக்கி சர்வ அதிகாரத்துடன் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புகளை திறந்த வெளிப்படையான அமைப்பாக செயல்பட வைக்க 1993ல் அணு சக்தி ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிருந்தே போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக அமைப்பை ஒரளவுக்கு வெளிப்படையாக செயல்பட வைத்தார். சில காலம் வெளிப்படையாக செயல்பட்டதால் அணு உலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் வெளியே தெரிய வந்தன. 1995ல் இவ்வமைப்பு பாதுகாப்பு குறித்த ஒரு கணக்கு தணிக்கையை நடத்தியது. அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த தணிக்கையில் அணு உலைகளில் உள்ள 134 பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டன. இதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய 95 பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டன. இந்த அறிக்கையை வெளியிட மக்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். அறிக்கையை வெளியிட்டால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அணு உலை அமைப்பு மறுத்துவிட்டது. இதனைத் தெடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அணு உலை கழகத்தின் தேசிய பாதுகாப்பு வாதமானது உறுதி செய்யப்பட்டது.

அணு உலைக்கழகமானது 134 பாதுகாப்பு பிரச்சினைகளில் 119 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும் இதில் முதன்மையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. முக்கியமாக கோபாலகிருஷ்ணன் அறிக்கை அணு சக்தி உற்பத்திக்குப் பின்னர் மூல எந்திரங்களை குளிர்விக்கும் அமைப்புகளில் கடுமையான குறைபாடுகளும் பலவீனங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்சினையால்தான் புகுசீமாவில் பேரழிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா அணு உலைகளிலும் பேரழிவை விளைவிக்கும் கதிரியக்க அபாயத்தை தவிர்க்க முடியாது. அதன் கழிவுகளை பூமிக்கு அடியில் எத்தனை அடி ஆழத்தில் புதைத்து வைத்தாலும் அந்த கழிவுகளில் உள்ள கதிரியக்கமானது பல ஆயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அணு உலை கழிவுகளை என்ன செய்வது என்ற பிரச்சினை உலகம் முழுவதும் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக இன்னும் நீடிக்கிறது. அணு உலைக் கழிவுகளை பராமரிக்கும் செலவு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதால் மட்டுமே பல நாடுகளில் அணு உலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அணு உலைகளில் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் கதிரியக்க கசிவுகளும் தவிர்க்க முடியாதது. அணு உலைகளில் ஏற்படும் கதிரியக்கமும் உலைகளில் ஏற்படும் விபத்துகளினால் ஏற்படும் பாதிப்பையும் விரிவாக இங்கு காண்போம்.

அணு சக்தி உற்பத்தி

முதலில் அணுப்பிளவின்போது வெளிப்பட்ட வெப்பத்தை தேவையற்றதாக கருதப்பட்டது. அதை பயன்பாடு அற்றது என்று அறிவியலாளர்கள் கருதினர். 1940வரை அணு உலைகளை புளுட்டோனியம் மட்டுமே தயாரிக்கப் பயன்படுத்தினர். அப்புளுட்டோனியம் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என சொல்லத்தேவையில்லை. இந்த சூழ்நிலையில் 1940களின் கடைசியில் மலிவான புதைபடிவ எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. அப்போது அணு உலைகளில் வெளியாகும் வெப்பத்தின் மூலம் நீரை நீராவியாக்கி அதன்மூலம் சுழலிகளைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அணுப்பிளவு தொடர்ச்சியாக நடைபெறும்போது தோன்றும் வெப்பத்தால் நீர் சூடாக்கப்பட்டு, நீராவியாக மாற்றப்படுகிறது. அந்த நீராவியைக் கொண்டு மாபெரும் சுழலிகள் சுழலச்செய்யப்படுகின்றன. அச்சுழலிகளின் சுழற்சியால் மின்இயற்றி மூலம் மின்ஆற்றல் உருவாகிறது. சுழலியைச் சுழலச்செய்த பிறகு அந்நீராவி கடல் மற்றும் நதி நீரால் இயங்கும் குளிர்விப்பானால் மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. அந்நீர் மீண்டும் உலைக்களத்திற்குள் செலுத்தப்படுகிறது. அணு உலையின் மையப்பகுதி மிகுந்த வெப்பத்தால் உருகி விடும் அபாயத்திற்கு அணு உலை உருகுதல் என்று அழைக்கப்படுகிறது. முக்கியமான குளிர்விக்கும் குழாய் அடைபடும்போது அல்லது உடைந்து விடும்போது மையப்பகுதியின் வெப்பம் கணிசமாக‌ உயர்ந்து விடும். அச்சமயங்களில் ஆபத்துகால குளிர்விப்பான் உடனே வேலை செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக இவை வேலை செய்வதில்லை. அக்குளிர்விப்பான்கள் தகராறு செய்யும்போது எரிபொருள் குழாய்கள் முதலில் உருகுகின்றன. பின் எரிபொருளே உருகுகின்றது. மையப்பகுதிகள் முழுவதும் சூடான கதிரியக்க வாயுக்களால் சூழப்படுகிறது. உருகிய எரிபொருள் அழுத்தத்தால் எரிகிறது. நீராவி வெடித்துக் கிளம்பி கூரையை உடைத்து உள்ளிருப்பவைகளை வெளியே தூக்கி எறிகிறது. உருகிய யுரேனியம் கீழ்ப்பகுதியை பொசுக்கி பூமிக்குள் இறங்குகிறது. இதில் உள்ள மாபெரும் கதிரியக்க அபாயம் வாயு வடிவத்தில் இருக்கும் அணு பிளவுப் பொருட்கள்தான்.

அணு உலைக்கசிவுகள் ஒருபுறமிருக்க, இது தான் அடிக்கடி ஒரு அணு உலையில் விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு அணு உலையின் கசிவைப் பொருத்தவரை அதிலுள்ள கதிரியக்கம் பல ஆயிரம் மக்களை கொல்ல முடியும்.

கதிரியக்கம் என்றால் என்ன?

கதிரியக்கத்தை கண்ணால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. நுகர முடியாது. அதை திரும்பிப்போ என்று கட்டளையிடவும் முடியாது. பரவி விட்டால் அதை உணர முடியாது. அவை மனித உடலில் நுழைந்து திசுக்களை அழித்து மரபுக் கூறுகளை ஏப்பம் விட்டபின்னர்தான் தெரிய வரும். அதற்குள் காலம் கடந்து விடும். அணு உலை உருகுவதன் மூலம் கதிரியக்கம் பயங்கரமாக பரவி பேரழிவை உருவாக்கும்.

இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. அதன் வீரியம் 2,40,000 ஆண்டுகள் வரை கூட மங்காமல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அது உயிர் உள்ள இனங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் எல்லாவற்றிலும் பரவுகிறது. பல நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க இருக்கும் குழந்தைகளைக் கூட இது பாதிக்கும்.

அணு உலை என்றாலே கதிரியக்கம்தான். கதிரியக்கம் அணு உலைகளில் அணுவைப் பிளக்கும் போதிலிருந்து தொடங்குகிறது. அதை குளிர வைக்கும் நீரில் கலந்து அந்நீர் வெளியேற்றப்படும்போது, தானும் வெளியேறி பரவுகிறது. எரிபொருள் கழிவான புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் மிகுந்த கதிரியக்கம் கொண்டவை. தேவையற்றவை என புதைக்கப்படும் கழிவுகளின் கதிரியக்கத்தின் தன்மை பல ஆயிரம் ஆண்டுகள் வரை அப்படியே நீடிக்கக் கூடியது. அணு சக்தி உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் இந்த அணு கதிரியக்கம் தவிர்க்க முடியாதது.

அணு உற்பத்தியின் முதல் நிலையான யுரேனியத்தை சுரங்கம் தோண்டி எடுக்கும்போது (இந்தியாவில் மேகாலயாவிலுள்ள மேற்கு காசி மலைகள்) ஏற்படும் உதிரிக்கழிவுகளிலுள்ள கதிரியக்கம் எத்தனை ஆண்டுகாலம் நீடிக்கும்? இக்கழிவுகளிலுள்ள கூறுகள் முறையே ரேடியம்-226, மற்றும் தோரியம்-236 (இது போன்ற எண்கள் அணுக்கூறுகளின் தனித்தன்மையை குறிப்பிடுபவை) தோரியம் உள்ள கழிவுள்ள கதிரியக்கம் அதன் பாதி வீரியம் மறைவதற்கு 76000 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் எந்த சுரங்க முதலாளி இதைப்பற்றி கவலைப்படபோகிறான்?

இரண்டாவது நிலையில், அணு உலையிலுள்ள கம்பிகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகும் தேய்மானத்திற்காக இரசாயனங்களில் சுத்திகரிக்கப்படுகின்றன. கம்பிகளுள்ள கதிரியக்கக் கூறுகள் ஸ்ட்ரான்டியம்-0, சீசியம்-137மற்றும் புளுட்டோனியம் ஆகும். இதில் இரண்டு வகை உள்ள புளுட்டோனியக் கூறுகள் முறையே புளுட்டோனியம்-239 மற்றும் புளுட்டோனியம்-242 ஆகியவை உள்ளன. முதல்வகை புளுட்டோனியத்தின் பாதி வீரியம் மறைவதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளும் இரண்டாம் வகை புளுட்டோனியத்தின் வீரியம் மறைவதற்கு 3,80,000 ஆண்டுகள் ஆகும். இவ்வகை புளுட்டேனியத்தின் 10 ஆயிரத்தில் ஒரு பங்கை மனிதன் சுவாசித்தால் மரணத்தை விளைவிக்கக்கூடிய புற்றுநோய்கள் உருவாகும்.

ஐப்பானில் புகுசீமாவில் ஏற்பட்ட அணு உலைவிபத்திற்கு பின்னர் உடனடியாக அரசு அதிகாரிகள் 2 இலட்சம் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனித்தனியாக கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டனரா என்று பரிசோதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் இப்படிப்பட்ட விபத்துகள் அணு உலைகளில் நிகழ்ந்தால் இங்கு அவற்றை எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது?

இங்கு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்தும் தமிகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவைத் தொடர்ந்தும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும் பேரிடர் மேலாண்மை அமைப்பும் அதற்கான வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டன. தேசிய அளவிலும மாநில மற்றும் மாவட்ட அளவிலும் பேரிடர்களை எதிர்கொள்ள அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பயிற்சிகளும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. சுனாமிக்குப் பின்னர் சிலகாலம் வரை நடைபெற்ற இவை இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க இத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களோ மருத்துவமனைகளோ இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய விசயம். உலக நாடுகளே அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்த பின்னரும் இந்தியா விடாப்பிடியாக அணு உலைகள் என்ற பெயரில் மக்களுக்கு சமாதி கட்ட தயாராகி விட்டது.

பொருளாதார இழப்பு தொடர்கதையாகும்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தந்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவிற்கு இலாபம் என்ற வாதங்கள் முற்றிலும் கலப்படமற்ற பொய்களே. ஒப்பந்தம் 2005லிருந்தே 5 ஆண்டுகளாக முன் வைக்கப்படும் குழப்பமான பேச்சுவார்த்தைகள் பயமுறுத்துகின்ற தொழில்நுட்ப பதங்கள் அடிப்படையான விசயங்களை மறைக்கின்றன. இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பெரும் இழப்பு, இறையாண்மையே பறிபோகும் அரசியல் பின்னணி, பல கோடி மக்களை வறுமையில் ஆழ்த்தி விட்டு இந்திய ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதி இதற்கெல்லாம் மேலாக நமக்கும் எதிர்காலச்சந்ததியினருக்கும் அணுசக்தி உற்பத்தி ஏற்படுத்தப்போகும் பாதிப்பு-இவற்றை மறைக்கின்றனர்.

"நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதற்கான மூலப்பொருள் யுரேனியம் நம் நாட்டில் இல்லை. யுரேனியத்தை அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால் இந்த ஒப்பந்தத்தை செய்தே ஆகவேண்டும். அணு சக்தியை தயாரிக்க விட்டால் நம் நாடு பின்தங்கி விடும். உலக நாடுகளிலிருந்து தனிமைப்பட்டு விடுவோம்" என்றெல்லாம் இந்த ஒப்பந்தத்திற்கான ஆதரவாளர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் துளி அளவு கூட உண்மைகள் இல்லை. காலங்காலமாக அணுசக்தி கழகத்தினால் இந்த பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகா வாட். இதில் நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 விழுக்காடு, அணைகளில் மற்றும் நீர் வீழ்ச்சிகளினால் உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சாரம் 26 விழுக்காடு, சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற வழிகளில் கிடைக்கும் மின்சாரம் 5 விழுக்காடு. அணு உலைகளில் மூலம் பெறப்படும் மின்சாரம் வெறும் 2.5 விழுக்காடுதான்.

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்சக்தியின் அளவை 6 விழுக்காடாக அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இப்போது சூரிய சக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கீடு தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 விழுக்காடு மின்சாரத்தை தந்து விடுகின்றன. இப்போது அணு சக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி ரூபாய். ஆனால் அவை தருவது 2.5 விழுக்காடு மின்சாரம் தான்.

இங்கே யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பது அரசு திட்டமிட்டு அளிக்கும் தவறான தகவல். அடுத்த 40 ஆண்டுகளில் மின்சாரம் மற்றும் அணு ஆயுத உற்பத்திற்கும் தேவைப்படும் யுரேனியத்தைப் போன்ற மூலப்பொருளான தோரியம் 25 ஆயிரம் மெட்ரிக் டன்களுக்கும் மேலாக உள்ளது. உலகிலேயே ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக நம்மிடம்தான் சுமார் 3 லட்சம் அளவு டன்கள் அளவு தோரியம் உள்ளது. இதை வைத்து 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழிற்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவியலாளர்கள் உருவாக்கியாற்று. இதை அடுத்த 40 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்துவதுதான் அணுசக்தி துறை வைத்திருந்த திட்டம். அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

இப்போதுள்ள அணுசக்தித் துறையின் திட்டப்படி இன்னும் 25 ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டாலும் நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின் தேவையில் 9 விழுக்காட்டை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால் ஒரு அணு உலையை நிர்மாணிக்கும் செலவு அதிகரிக்கும். அணு உலை நிறுவிட 9 கோடி செலவாகும். மன்மோகன் சிங் உத்திரவாதமளிக்கும் 20 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரத்திற்கு செலவிடப்போகும் தொகை 20 லட்சம் கோடி. அதாவது ஒரு ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு இந்த ஒப்பந்தத்தின்படி 10 கோடி ரூபாய் ஆகும். நீர் ஆற்றலை பயன்படுத்தினாலும் காற்றாலையை பயன்படுத்தினாலும் நாம் ஏராளமான மின்சாரம் தயாரிக்க முடியும். இமாலயப் பகுதியிலிருந்து மட்டும் இவ்வாறு ஆண்டு தோறும் 1.5 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும். ஆந்திராவில் நீர் ஆற்றலைப் பயன்படுத்தி 50 முதல் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாராம் தயாரிப்பது அணு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை விட செலவு குறைவானது; மிகவும் பாதுகாப்பானது. நாம் எந்த நாட்டிற்கும் அடிபணிய வேண்டியதில்லை.

- சேது ராமலிங்கம்

( msethuram61@gmail.com)

Courtesy: Keetru.Com

செவ்வாய், அக்டோபர் 11, 2011

கூடங்குளம் அணுஉலை திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும், ஏன்?

கூடங்குளம் அணுஉலை திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுவதற்கான நான்கு அடிப்படைக் காரணங்கள்:

1) இந்த அணுஉலை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச்சூழல் பற்றி அணுசக்தித் துறை இதுவரை எந்த ஆராய்ச்சியும் நடத்தவில்லை

2) நடைபெற வாய்ப்புள்ள பின்விளைவுகளைப் பற்றி எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் தொழில்நுட்ப முடிவுகள் மனம் போன போக்கில் எடுக்கப்பட்டுள்ளன

3) இந்திய – அமெரிக்க அணுஒப்பந்தத்துக்குப் பின் அரசு தொழில்நுட்ப நிர்வாகத் துறையினரின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகள்

4) சட்டப் பிரச்சினைகள்.

இவற்றை விரிவாகப் பார்ப்போம்.

1)அந்த இடத்தின் சுற்றுச்சூழல் தொடர்பாக அணுசக்தித் துறை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் சிவில் சமூகத்தினரே ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்தப் பகுதியின் நில இயல் இயல்பு தொடர்பாக அரசு நிர்வாகத்துக்கு எதுவும் தெரியாது. அந்த இடத்தின் புவிஇயற்பியல் தொடர்பாக எந்த வகையான நுண்ணிய அளவிலான ஆராய்ச்சியோ, பெரிய அளவிலான ஆராய்ச்சியோ நடத்தாமல், கூடங்குளம் அணுஉலை இவ்வளவு அளவு கொண்ட நிலஅதிர்ச்சியைத் தாங்கக் கூடியது என்று பொத்தாம்பொதுவாக அரசு அமைப்புகள் கூறி வருகின்றன.

சிவில் சமூகத்தினரான எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆராய்ச்சியை செய்திருக்கிறோம். இந்த ஆராய்ச்சி பற்றி அரசு நிர்வாகத்திடம் நேரடியாக பகிர்ந்து கொள்ள முயற்சித்தோம், பிறகு ஊடகங்கள் மூலமாகவும், கடைசியாக 2002 மே மாதம் உச்சநீதிமன்றத்திலும் சமர்ப்பித்தோம். ஆனால் நீதிமன்றம் உள்பட அனைவராலும் எங்களது ஆராய்ச்சி புறக்கணிக்கப்பட்டது, கணக்கில் எடுக்கப்படவில்லை.

ஆனால் 2002 ஆராய்ச்சியில் ( R.Ramesh - Listen to the Voice of Geology, May 2002, Doctors for Safer Environment) நாங்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளஇல் ஒன்று, சார்னோகைட் பாறை அஸ்திவாரத்தின் மேல் 14 கார்பனாடைட் டைக்ஸ் இருக்கிறது (இவை உறுதியற்ற நிலப்பகுதிகள். பண்டைய புவி யுகங்களில் உறுதியாக மாறிய எரிமலைக் குழம்புகளால் உருவானவை. 90களில் கேரள பல்கலைக்கழகத்தின் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜு, பேராசிரியர் ராம சர்மா ஆகிய இருவரும் இதை கண்டுபிடித்திருக்கிறார்கள்), என்ற விஷயத்தை சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த டாக்டர் பூமிநாதன் என்பவர் எதிர்பாராதவிதமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 2004 நவம்பர் மாத கரண்ட் சயின்ஸ் இதழில் “அணுஉலைகள் தொடர்பான இந்திய அனுபவங்கள்” என்ற ஆராய்ச்சி கட்டுரையில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் பிஜு கண்டுபிடித்ததை அவர் உறுதிப்படுத்தினாலும், கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள அதே முறிவுப் பாதையின் (fault line) மீது 1998 – 2002 வரை உருகிய பாறைப் பிதுங்கல்கள் (Rock Melt Extrusions - RME) ஏற்பட்டுள்ளன என்பதை டாக்டர் பூமிநாதன் உறுதிப்படுத்தவில்லை. 2003ஆம் ஆண்டில் இந்த பலவீனமான இடங்களைப் பற்றி கண்டறிந்த பிறகு, அது தொடர்பாக அரசு நிர்வாகம் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளது. இந்த இடத்தை அகழ்ந்தெடுத்து, இந்தப் பகுதிகளை வலுப்படுத்த அதற்குள் காங்கிரீட்டை ஊற்றியிருக்கிறார்கள். இருந்தபோதும், இந்த உறுதியற்ற பாறை கூட்டங்களின் ஆழத்தைக் கண்டறிவதன் அவசியத்தை அவர்கள் உணரவில்லை.

பேராசிரியர் ராம சர்மா தனது கட்டுரையில், இந்த உறுதியற்ற பாறை கூட்டங்கள் பூமியின் மேலோடு வரை, அதாவது 30 கி.மீ. ஆழத்துக்கு நீண்டிருக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார். எங்களது கருத்து இதுதான் 1) கூடங்குளம் அணுஉலை தொடர்பாக ரஷ்யர்கள் தயாரித்து, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் (ஏ.இ.ஆர்.பி) சமர்ப்பித்த முதல்கட்ட பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் மேற்கண்ட விஷயம் பற்றி எந்தத் தகவலும் இல்லை; இதற்குக் காரணம் என்னவென்றால் இந்த அறிக்கைக்கான ஆய்வு 1998ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் நடத்தப்பட்டு, 1999 தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதாவது இந்த உருகிய பாறைப் பிதுங்கல் நிகழ்வுகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் நில இயல், அறிவியல் இதழ்களால மறுஆய்வு செய்யப்பட்டு 2001ஆம் ஆண்டுக்குப் பிறகே வெளி வந்தன. அதற்கு முன்னதாகவே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள பலவீனமான கார்பனாடைட் டைக்ஸ் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிலஅதிர்ச்சி, ஆழிப் பேரலையால் எப்படி பாதிக்கப்படும், மேலும் அவற்றின் இயல்பு என்ன என்பது பற்றி புரிந்துகொள்ள ஆழமான நிலஇயற்பியல், நிலஅதிர்வு ஆராய்ச்சிகள் அவசியம் நடத்தப்பட வேண்டும். 2002 ஜனவரி மாதத்தில் இருந்து இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வருகிறோம். இந்தப் பகுதியில் விரிவான நுண்ணிய நில இயல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல், இந்த அணுஉலை அமைந்துள்ள இடத்தில் நிகழ்ந்துள்ள உருகிய பாறைப் பிதுங்கல்கள் நிகழ்வை சாதாரணமாக புறமொதுக்கிவிட முடியாது.

எனவே, இந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வி.வி.இ.ஆர். 1000, வி 392 அணுஉலைகளில் அந்த பகுதியின் நில இயல்புக்கு ஏற்ப வடிவ மாறுதல்கள் தேவை. இந்த இடத்தில் உள்ள பலவீனமான பகுதிகள் காரணமாக மிதமான நிலஅதிர்வுகள்கூட அணுஉலையை பாதிக்கக் கூடும். மேலும் உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்து நேரடியாக அணுஉலையை பாதிக்கலாம் அல்லது மறைமுகமாக தீவிபத்துகளை தூண்டிவிடலாம் என்ற வாதங்களை புறக்கணித்துவிட முடியாது. ஆனால் அரசு அணுசக்தித் துறை இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் தப்பிக்கப் பார்க்கிறது.

இந்த இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தால், அதிலும் மோசமாக ஆழிப் பேரலை, நிலஅதிர்வு, உருகிய பாறைப் பிதுங்கல்கள் போன்றவை ஒரே நேரத்தில் ஏற்பட்டால், அவற்றைக் கையாள அணுசக்தித் துறையிடம் அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப வல்லமையும் திறமையும் இருக்கிறதா? சுத்தமாக இல்லை என்பதே உண்மை.

2) கூடங்குளம் அணுஉலையில் அணுசக்தித் துறை மேற்கொண்ட முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலாக்குகின்றன. கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுஉலையின் முதன்மை குளிர்விப்பு குழாய்களுக்கு தண்ணீர் எடுக்கப்படும் என்று 2006 அக்டோபர் வரை கூறப்பட்டு வந்தது. இந்த அணை கூடங்குளம் அணுஉலையில் இருந்து வடமேற்கில் 65 கி.மீ. தொலைவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி நடத்திய திருவாங்கூர் மாநிலத்தால் இந்த அணை கட்டப்பட்டது. ராஜிவும் கோர்பசேவும் 1988ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நேரத்தில் பேச்சிப்பாறை அணை நீரை பயன்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டில் 4 வி.வி.இ.ஆர் கூடுதல் அணுஉலைகளுக்காக நாக்பூரை மையமாகக் கொண்ட நீரி அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலை திட்டத்தின் தலைமைப் பொறியாளர் எஸ்.கே.அகர்வால், நியூக்ளியர் எஞ்சினியரிங் அண்ட் டிசைன் இதழிலில் 2006ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் திருநெல்வேலியில் 2006 அக்டோபரில் நடப்பதாக இருந்து, பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட முதல் மக்கள் கலந்தாய்வு கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு திடீரென மாற்றிக் கொள்ளப்பட்டது.

2006ஆம் ஆண்டின் கடைசியில் இருந்து கூடங்குளம் அணுஉலைக்கு பேச்சிப்பாறை அணை தண்ணீர் பயன்படுத்தப்படாது, அதற்கு பதிலாக புதிய கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று அரசு நிர்வாகம் ஊடகங்களில் தெரிவிக்க ஆரம்பித்தது. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி ஏற்படவில்லை.

ஏனென்றால், அணையின் கொள்ளளவு தொடர்பான முதல் ஒருங்கிணைந்த ஆய்வைப் பற்றி எடுத்துக் கூறி, அந்த நீராதாரத்தை அணுஉலைக்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்பதை மக்கள் கலந்தாய்வு மூலம் அதிகாரிகளுக்கு தெரிவித்ததே நாங்கள்தான். அந்த அணுஉலை செயல்படுவதாகச் சொல்லப்பட்ட 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்ப, அரசியல் பின்விளைவுகளை எதிர்நோக்காமல் அந்த அணையில் இருந்து தண்ணீரைப் பெற முடியாது என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபித்தது. 1992ஆம் ஆண்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அந்த அணையில் நடைபெற்ற வண்டல்படிவு ஆராய்ச்சியை பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. அந்த அணையில் நூறு ஆண்டுகளாக ஏற்பட்ட வண்டல்படிவு, அணையின் உண்மையான கொள்ளளவில் பாதியை மூடிவிட்டது.

தனது முதன்மை அணுஉலை திட்டத்துக்கான தண்ணீர் விநியோகத்துக்கான அணையின் கொள்ளளவு தொடர்பாக ஆராய்ச்சி நடத்துவது பற்றி அணுசக்தித் துறை எந்த வகையிலும் கவலைப்படவில்லை. இந்த அம்சத்தை 18 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த அணுசக்தித் துறை, சிவில் சமூகம் தனது ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்ட பின்னர்தான் விழித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய உண்மை.

பேச்சிப்பாறை திட்டத்தை கைவிட்ட பிறகு அணுசக்தித் துறை என்ன செய்தது? தனது கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்துக்காக பாரம்பரிய மல்டி ஸ்டேஜ் ஃபிளாஷ் அல்லது மல்டி எஃபெக்ட் டிஸ்டிலேஷன் தொழில்நுட்பங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஏனென்றால் பேச்சிப்பாறை அணை தண்ணீரைப் பெறும் திட்டத்துடன் அணுஉலைகள் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு விட்டனவே ஒழிய, தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அணுஉலைகள் வடிவமைக்கப்படவில்லை. எனவே, இந்த பாரம்பரிய தொழில்நுட்பங்கள் வி.வி.இ.ஆர் அணுஉலையின் வடிவமைப்பில் ஏற்படுத்தும் “செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும்” மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஆராய வேண்டி இருக்கிறது. (இதுவரை எந்த வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையும் கடற்கரையில் அமைக்கப்பட்டது இல்லை. கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 அணுஉலைகள்தான் முதன்முறையாக தனது முதன்மை, பதிலி குளிர்விப்பான்களுக்கு கடல்நீரை பயன்படுத்தப் போகின்றன). இந்த பிரச்சினையில் சிக்கி அடிபடாமல் இருக்க, அணுசக்தித் துறை ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தது. அணுத் தொழிலில் இதுவரை பரிசோதித்துப் பார்க்கப்படாத, விலை அதிகமான மெக்கானிகல் வேபர் கம்ப்ரெஷன் என்ற புதிய தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையில் எடுத்தது.

கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடத்தில் அணுஉலைகள் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆழிப்பேரலை வந்தால் இந்த அணுஉலைகள் பாதிக்கப்படாது என்று அணுசக்தித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் ஆழிப் பேரலையோ அல்லது புயலோ இந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை.
(2004 ஆழிப்பேரலையின்போது கூடங்குளம் அணுஉலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது); ஆழிப்பேரலை நிகழும் நேரத்திலேயே கார்பனாடைட் டைக்ஸில் நிலஅதிர்வு ஏற்பட்டு உறுதி குலைந்தால், உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

3) இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் வி.கே.சதுர்வேதி மற்றொரு மிகப் பெரிய முக்கியமான பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார். 2008ஆம் ஆண்டில் அனில் திருபாய் அம்பானியின் அணு முன்முயற்சி குழுவில் அவர் சேர்ந்துள்ளார். அதற்குப் பிறகு இந்திய அணுசக்தித் துறையில் உள்ள சிறந்த திறமையாளர்களை ரிலையன்ஸ், தனியார் நிறுவனங்களில் சேருமாறு அவர் பிரசாரம் செய்து வருகிறார். இப்படியாக ஏற்கெனவே கவனக்குறைவாகவும் பொறுப்பில்லாமலும் உள்ள அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை இன்னும் பொறுப்பில்லாததாக மாற்றி வருகிறார்.

4) எல்லாம் மிகவும் மோசமடையும் நிலையில், ஃபுகுஷிமா நெருக்கடியைப் போல் இல்லாமல், கூடங்குளம் அணுஉலையில் ஏற்படும் அணுஉலை நெருக்கடியை அந்த உலையின் காவலர்கள்தான் கையாளுவார்கள் போலத் தெரிகிறது. ஏனென்றால் அதற்குள் அணுசக்தித் துறையில் உளஅள நிபுணர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்து இருப்பார்கள். 2004 ஆழிப்பேரலையின் போது கல்பாக்கத்தில் இது நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் கூடங்குளத்திலும் இது மீண்டும் நடப்பதற்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு நிதர்சனமானது.

கூடங்குளம் அணுஉலை ஏன் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான எங்களது வலியுறுத்தல் மேற்கண்ட காரணங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

- டாக்டர் ஆர்.ரமேஷ், டாக்டர்.வீ.புகழேந்தி, டாக்டர்.வி,டி.பத்மநாபன்

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு (Doctors for Safer Environment)

திங்கள், அக்டோபர் 10, 2011

அது...வெள்ளைக்காரன் சட்டம்...இது...கொள்ளைக்காரன் சட்டம்! - கோவணாண்டி

பி.டி. கத்திரி விதை விஷ(ய)த்துல... ச்சும்மா அமெரிக்காவே அதிர்ற மாதிரி விவசாயிகளுக்கு ஆதரவா கர்ஜனை செஞ்சுட்டு, இப்ப விவசாய நிலங்களைக் கைப்பத்துற விஷயத்துல, விவசாயிகளுக்கு வேட்டு வைச்சுக்கிட்டிருக்கற மவராசன்... மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு வணக்கம் சொல்லிக்கிறான்... ஒங்க பாசக்கார கோவணாண்டி!

பி.டி. கத்திரிக்காயை நீங்க கையாண்ட விதத்தைப் பார்த்துட்டு, 'மந்திரிகள்ல மாவீரரு... மனசாட்சி உள்ளவரு... அறிவுள்ளவரு... ஆண்மை உள்ளவரு'னு எங்க கோவணாண்டிங்க ஒட்டுன போஸ்டர் ஈரம் காயறதுக்குள்ளயே... எங்க ஈரக் குலையில ஏறி மிதிச்சுட்டீங்களே... இது நியாயமா?

அய்யா, 'இப்ப இருக்கற நிலம் கையகப்படுத்துற சட்டம், இந்தியா அடிமையா இருந்தப்போ வெள்ளைக்காரன் கொண்டு வந்தது'னு சொல்லிக்கறாங்க. அதை வெச்சுக்கிட்டுதான் இத்தனை வருஷமா விவசாயிங்கள அடிமை கணக்கா உருட்டி, மிரட்டி, அவனோட நிலத்தை வளைச்சுக்கிட்டிருக்காங்க/வளைச்சுக்கிட்டிருக்கீங்க. நாய்க்கு எலும்புத் துண்டை தூக்கிப் போடற மாதிரி, பிச்சைக் காசை விவசாயிகிட்ட விட்டெறிஞ்சுட்டு, இஷ்டப்பட்டவங்களுக்கு எல்லாம் பட்டா போட்டுக் கொடுத்துட்டு இருந்தாங்க/இருக்கீங்க.

'அங்க கார் ஃபேக்டரி வருது. அது நாட்டோட பொருளாதாரத்தை உசத்தும்... இங்க நிலக்கரிச் சுரங்கம் வருது. அது நாட்டோட மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும். இதுக்காக நீங்கள்லாம் கொஞ்சம் தியாகம் பண்ணணும்'னு எங்கள தியாகி ஆக்கிட்டு, ஃபேக்டரி முதலாளிங்களுக்கு விசுவாசியா இருந்து ஸ்விஸ் பேங்க்ல பொட்டி பொட்டியா சேர்த்தாங்க/ சேர்த்துக்கிட்டிருக்காங்க ஒங்க பங்காளிங்க. இப்ப, நீங்களும் அந்தப் பாதையில நடக்க ஆரம்பிச்சுட்டீங்களோனு சந்தேகம் லேசா எட்டிப் பார்க்குதுங்க.

சுதந்திரம் வாங்கின இந்த 60 வருஷத்துல... இப்பத்தான் எங்காளுங்களுக்கும் கொஞ்சம் வீரம் பொறந்து, இந்த அரசியல்வாதிங்க, பண முதலைங்களோட அழிச்சாட்டியத்துக்கு எதிராக லேசா மூச்சுவிட ஆரம்பிச்சுருக்காங்க. ஒங்க கட்சியில இருக்கற தம்பி ராகுல்கூட இப்ப வாய்க்கா, வரப்புனு அதனாலதான் அலைஞ்சு திரிஞ்சுகிட்டு இருக்காரு.

'நிலத்தைக் கையகப்படுத்தற பழையச் சட்டத்துல திருத்தம் கொண்டு வரணும்... விவசாயிகளுக்கு துரோகம் கூடாது... அவங்களுக்கு சாதகமான அம்சங்கள சேர்க்கணும்'னு பலரும் சொல்லிக்கிட்டிருக்காங்க. இந்த விஷயத்துக்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டுலகூட மாயாவதி முதற்கொண்டு பல அரசியல்வாதிங்களும் வாங்கிக் கட்டிக்கிட்டிருக்காங்க.

இத்தனை நடந்த பிறகும், 'சட்டத்துல திருத்தம் பண்றோம்... விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களைச் சேர்க்கிறோம்'னெல்லாம் சொல்லிக்கிட்டே... மறுபடியும் எங்க தலையிலயே கை வெக்கறதுக்குண்டான ஷரத்துகள அதுல நீங்க சேர்த்துட்டு இருக்கறதா ஊர் பூரா பேச்சா இருக்குது.

நீங்க கொண்டு வரப்போற 'நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்ட'த்துல சொல்லியிருக்கற ரெண்டு, மூணு விஷயங்கள் சம்சாரிகளுக்கு எதிரா இருக்குனு விவரம் தெரிஞ்ச பெரியவங்க சொல்றாங்க. 'பொதுக் காரியத்துக்காகவும், பொதுத் தேவையில் ஈடுபடும் தனியாருக்கும், தனியார், அரசு இணைந்தப் பணிகளுக்காகவும் தேவைப்படும் இடங்களில் நிலம் கையகப்படுத்தலாம்'னு சட்ட வரைவுல சொல்லியிருக்கீங்களாமே! இங்கதாங்கய்யா இடிக்குது.

அரசாங்க ஆபீஸ், ஆஸ்பத்திரி, ரோடு, ரயில் பாதைனு நிலம் வேணுமா... உரிய விலையைக் கொடுத்துட்டு எடுத்துக்கோங்க. ஆனா, கருவாடு விக்குறவங்க, கம்பெனி கட்டுறவங்க, விளக்குமாறு விக்குறவங்க, சாராயம் காய்ச்சுறவங்க, வீடு கட்டுறவங்களுக்காக நீங்க ஏன் புரோக்கர் வேலை பாக்கறீங்கனுதான் கேக்குறோம்.

இடம் தேவைப்படுறவங்க, எங்ககிட்ட வரட்டும், கட்டுப்படியான விலையைச் சொல்றோம், கட்டுப்படியானா வாங்கட்டும்... இல்லைனா போகட்டும். அதை விட்டுட்டு புதுசா ஒரு சட்டத்தைப் போட்டு நீங்க ஏன் மூக்கை நுழைக்குறீங்க. கஷ்டமோ, நஷ்டமோ நாங்களே பாத்துக்கறோம், நீங்க தலையிடாம இருந்தாலே போதும்.

எங்க நிலத்த வாங்கி 10 மாடி, 20 மாடினு குடியிருப்புகளைக் கட்டி, கோடி கோடியா குவிக்க போற ரியல் எஸ்டேட் பெருச்சாளிங்களுக்காக, நாட்டோட முதுகெலும்பான எங்களை உடைக்க சட்டம்ங்கிற பேர்ல சம்மட்டியைத் தயாரிச்சிருக்கீங்களே இது அடுக்குமா?

முதலாளிமாருக ஒண்ணு கூடி, திட்டம் தீட்டி சொன்னதை, நீங்க அப்படியே சட்டமா போட்டுட்டீங்களோனு சந்தேகமா இருக்கு. இந்தியாவுல யாவாரம் (தொழில்) பண்ணி, உழைக்கற மக்களோட ரத்தத்தை உறிஞ்சி, வெளிநாட்டு பேங்குல பணமா குவிக்குற கொள்ளைக்காரங்களுக்காக, தான் பட்டினி கிடந்தாலும் தேசத்துக்கே சோறு போடுற எங்க கோவணாண்டிகளோட கையகல நிலத்தையும் பறிச்சு கொடுக்க சட்டம் போடுறீங்களே... உங்களுக்கெல்லாம் கூச்ச, நாச்சமே இல்லையா?

புதுச் சட்டப்படி விலை நிர்ணயம் செய்றதுலயும் பெரும் மோசடி நடந்திருக்காம்ல. 'நகர எல்லைக்குள் நிலங்களைக் கையகப்படுத்தினா... அரசு வழிகாட்டி மதிப்பைவிட இரண்டு மடங்கு தொகையும், கிராமங்களா இருந்தா... நாலு மடங்கு தொகையும் நில உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்படும்’னு சொல்லுதாம்ல ஒங்க சட்டம். மேம்போக்கா பார்த்தா... சம்சாரிகளுக்கு சகாயம் செஞ்ச மாதிரிதான் தெரியும்.

ஆனா, புட்டு பார்த்தா அத்திப் பழம் கணக்கா... அத்தனையும் புழுவா நெளியுது. நகரத்துல விலை சதுர அடி கணக்குல நடக்குது. அதனால வழிகாட்டு மதிப்பீடு அதிகமா இருக்கு. கிராமத்துல ஏக்கர் கணக்குல விலை சொல்றதால, வழிகாட்டி மதிப்பு கம்மியா இருக்கு.

உதாரணமா... இரண்டாம் கட்ட நகரங்கள்ல தோராயமா ஒரு சென்ட் நிலம் 4 லட்சம்... 5 லட்சம்னு சொல்லுது வழிகாட்டி மதிப்பு. ஆனா, கிராமத்துல அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல வழிகாட்டி மதிப்பு இருக்கறதில்லை. அதனால, கிராமங்கள்ல கையகப்படுத்துற நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பைவிட 20 மடங்கு அதிகமா கொடுக்கணும்னு சொல்றோம்.

இதையெல்லாம் விட்டுட்டு கம்பெனிக்காரங்க போடுற நல்லி எலும்புக்கு ஆசைப்பட்டுக்கிட்டு கோவணாண்டிக வயித்துல அடிச்சுடாதீங்க. அப்படி அடிக்க நினைச்சா ஒங்க எல்லாரோட கதி என்னாகும்கறதுக்கு உதாரணத்தைத் தேடி எங்கயும் அலையத் தேவையில்லை... மேற்கு வங்காளத்தை ஆண்ட கம்யூனிஸ்டுங்களே போதும்.

முப்பது வருஷத்துக்கு மேல மேற்கு வங்காளத்துல கோட்டைக் கட்டி ஆண்ட கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்துக்கே வேட்டு வெச்சது... இந்த நிலப்பிரச்னைதான். சிங்கூர்ல விவசாயிகளோட நிலத்தை அடாவடியா பறிச்சு, டாடா கம்பெனிகிட்ட கொடுக்கற புரோக்கர் வேலையில இறங்கினதுதான் அந்தக் கட்சியோட ஆட்சிக்கே சாவுமணி அடிச்சி, மம்தா பானர்ஜியை ஆட்சியில உக்கார வெச்சுருக்கு.

அந்த உண்மை புரிஞ்சுதான், ஆட்சிக்கு வந்த கையோட நிலத்தை திருப்பித் தர்றதுக்காக சட்டம் போட்டாங்க அந்த அம்மா. தையா தக்கானு குதிச்சுக்கிட்டு கோர்ட்டுக்குப் போன டாடாவுக்கு, இப்ப குட்டு விழுந்திருக்கு. 'மம்தா செய்தது சரிதான். 6 மாசத்துல நிலத்தைத் திருப்பிக் கொடு'னு கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவு போட்டுடுச்சு.

எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்து, ஒழுங்கு மரியாதையா எங்களுக்கு உபகாரம் பண்ற மாதிரி சட்டத்தைப் போடுங்க. 'பழசு, வெள்ளைக்காரன் கொண்டாந்த சட்டம்... புதுசு, கொள்ளைக்காரனுங்க கொண்டு வந்த சட்டம்'னு எதிர்காலத்துல மக்கள் பேசுற அளவுக்கு வெச்சுடாதீங்க... ஆமாஞ் சொல்லிப்புட்டேன்.

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன், 25-10-11