விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 20, 2016

இ - வேஸ்ட் பயங்கரம்!

கடைசியாக நீங்கள் ஒரு புதிய மொபைலை வாங்கியது எப்போது, இந்த நொடி உங்கள் வீட்டுக்குள் எத்தனை மொபைல்கள் இருக்கின்றன, அதில் எத்தனை மொபைலை  நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ பயன்படுத்துகிறீர்கள்?

நாம் பயன்படுத்தாத மின்னணுப் பொருட்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் டெரா பைட் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்தியா ஓர் ஆண்டுக்கு 18 லட்சம் டன் மின்கழிவுகளைக் கொட்டுகிறது. 2018-ம் ஆண்டில் இது 30 லட்சம் டன்னாக உயரும். அதைவிட அதிர்ச்சித் தகவல்... பல லட்சம் டன் மின் கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து, நாம் இறக்குமதி செய்கிறோம். குப்பையை எதற்கு இறக்குமதி செய்யவேண்டும்?

மின்கழிவுகளில் இருந்து உதிரிப்பாகங்களைப் பிரித்தெடுத்து அதை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது உண்டு. அப்படிச் செய்வதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. சில சமயம் கதிர்வீச்சுகள்கூட இதில் சாத்தியம். தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்த பின்னர், எதற்குமே பயன்படாத பொருட்களை மண்ணில்தான் கொட்ட வேண்டும். அது சுற்றுச்சூழலுக்குக் கேடு. அதனால் முன்னேறிய பல நாடுகள்  தங்கள் தேசத்து மின்கழிவுகளை சட்டத்துக்கு விரோதமாக நம் நாட்டுக்குள் கொட்டிவிடுகின்றன. அதைப் பிரித்தெடுக்கும் ஆபத்தான வேலையையும், அந்த மின்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதகங்களையும் நம் தலையில் சுமத்துகின்றன. `அட்டிரோ’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் முறையாக உரிமம் பெற்று மின்கழிவுகளை இறக்குமதி செய்கிறது. மற்ற எல்லா இறக்குமதிகளுமே இல்லீகல்தான்.

மின்கழிவுகள் என்றதும் ஹாலிவுட் ஸ்டைலில்  பூமியை அழிக்கநினைக்கும் வேற்றுக் கிரகவாசிகளின் சதித்திட்டம் என நினைக்க வேண்டாம். நாம் தூக்கி எறியும் ரிமோட், மொபைல் சார்ஜர்கள், கேபிள்கள் தொடங்கி எல்லா தேவையற்ற மின் மற்றும் மின்னணுப் பொருட்கள்தான் மின் கழிவுகள்.
நாம் உருவாக்கும் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மின் கழிவுகள்,  டெல்லிக்கு அருகில் இருக்கும் சீலாம்பூர் நகருக்குத்தான் வருகின்றன. இது இந்தியாவில் மின் கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய இடம். சிறியதும் பெரியதுமாக 3,000 மின்கழிவுக் கடைகள் இங்கே இருக்கின்றன. உலகம் முழுவதும் உருவாகும் மின் கழிவுகளில் 70 சதவிகிதம் சீலாம்பூருக்குதான் வருகின்றன. இன்னும் முறைப்படுத்தப்படாத இந்தத் தொழிலால் இந்தியா முழுக்க ஒரு லட்சம் பேர் பிழைக்கிறார்கள். அதில் சீலாம்பூரில் மட்டும் 30,000 பேர்.

சீலாம்பூர் பகுதியில் வேலைசெய்வர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் தினம் 200-300 ரூபாய் வருமானத்துக்கு குழந்தைகளும் இளைஞர்களும் இங்கே வேலைசெய்கிறார்கள். இவர்களின் தலைமுடிகூட தங்கம்போல் மின்னுகின்றன. அதற்குக் காரணம் இந்த நகரின் காற்றில் கலந்திருக்கும் காப்பர். இவர்களின் வேலை, பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் காப்பரைப் பிரித்தெடுப்பது மட்டும்தான். அதன் பின்னர் அவை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலான மின்கழிவுகளில் இருக்கும் பாதரசம், ஈயம், கேட்மியம் போன்றவை விஷத்தன்மை உடையவை. இவற்றை மண்ணில் கொட்டுவதும், பூமிக்குள் புதைப்பதும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது. 

சீலாம்பூரில், குடும்பம் குடும்பமாக சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தையும், காப்பரையும் பிரித்தெடுக்கிறார்கள். ஆம்... அதிர்ஷ்டம் இருந்தால், சில மின்னணுப் பொருட்களில் இருந்து தங்கம்கூட கிடைக்கலாம் என்கிறார்கள். ஒரு மதர்போர்டைப் பார்த்தாலே, அது ஜப்பானில் தயாரித்ததா, சீனாவில் தயாரித்ததா என இந்த ஊர் குழந்தைகள்கூடச் சொல்லிவிடுகிறார்கள். சீனப் பொருட்களைவிட ஜப்பான் பொருட்களில் தங்கமும் நல்ல காப்பரும் கிடைக்கும் என்பது சீலாம்பூர் கண்டுபிடித்த ரகசியம். தங்கத்தையும் காப்பர் கம்பிகளையும் எடுத்த பிறகு ஒட்டுமொத்த யூனிட்டையும் எரிக்கிறார்கள். பிளாஸ்டிக் உருக, எஞ்சியிருக்கும் மெட்டல்களை விற்று காசாக்குகிறார்கள்.

மின்கழிவுகளைக் கையாள்வது எளிது அல்ல. பல குழந்தைகளின் கைகள் தினம் தினம் பிளாஸ்டிக் பொருட்களால் ரத்தத்தைப் பார்க்கின்றன. சில மின்கழிவுகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் உயிரையே பறிக்கலாம். 2010-ம் ஆண்டு சீலாம்பூர் அருகே இருக்கும் மாயபுரி என்ற இடத்தில் நடந்த கதிர்வீச்சு விபத்தில் ஒருவர் இறந்துபோனார். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்னமும் வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்திய அரசு விதிகளை இறுக்கியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை அரசு தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட மின்கழிவு நிறுவனங்கள் நிறைய வந்துவிட்டன. இவர்களால், சாதாரண வியாபாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தான இந்தத் தொழிலை முறைப்படுத்துவது முக்கியம். அதே சமயம், அதை கார்ப்பரேட் வசம் முழுமையாக ஒப்பட்டைப்பதும் ஆபத்தில் முடியலாம். அடுத்து வரும் ஆண்டு களில் ராட்சச வேகத்தில் வளர விருக்கும் இந்தத் துறையை கூடுதல் கவனத்தோடு அரசு கவனிக்க வேண்டும். மின்கழிவு நிறுவனங்களைச் சீரிய இடைவெளியில் அரசு கண்காணித்து உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வலியுறுத்தப்பட வேண்டும்.

மின்கழிவுகளில் இருந்து தங்கம் கிடைப்பதும் தகரம் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சீலாம்பூர்வாசிகள். அரசு என்ன எடுக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி!

அதிக மின்கழிவுகள் கொண்ட இந்திய மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிராவுக்கு முதல் இடம். தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூ ருக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் மின்கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இதைப் போல குறைந்தபட்சம் 10 தொழிற்சாலைகள் தமிழகத்துக்குத் தேவை என்கிறார்கள்!

-கார்க்கிபவா

நன்றி: ஆனந்தவிகடன், 20 ஜூலை 2016

வியாழன், நவம்பர் 12, 2015

தாயைக் காக்க களமிறங்கிய தாமிரபரணிப் பிள்ளைகள்

உண்ணலும் உனதே! உயிர்த்தலும் உனதே!
உடல் மனம் உயிர் எல்லாம் உனதே!
எண்ணலும் உனதே! இச்சையும் உனதே!
என் செயல், பயனெல்லாம் உனதே!
இப்படித் தொடங்குகிறது அந்தத் தாமிரபரணி விழிப்புணர்வு பாடல். இந்தப் பாடலை பாடிவிட்டுத்தான் அந்தப் பள்ளியில் பயிலும் 1200 மாணவ, மாணவிகளும் தங்கள் வகுப்பறைக்குள் நுழைகின்றனர். இப்படி ஒர் அதிசயப்( அத்தியாவசிய) பள்ளி திருநெல்வேலி சாந்தி நகரில் ‘மாக்தலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி’ என்ற பெயரால் 1987ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

தம்பதியினராகிய இந்தப் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர்கள் துணையோடு அந்தப் பள்ளியின் மாணவர்கள்  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் உயிர் நாடியான தங்கள் தாய்த் தாமிரபரணியைக் காக்க தயாராகி வருகின்றனர். முதற்கட்டமாகத் தாமிரபரணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தாமிரபரணி ஆற்றின் பல்வேறு இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை ஓவியங்களாக தங்கள் பள்ளி வளாகச் சுவரில் உயிர்ப்புடன் தீட்டியுள்ளனர்.






பள்ளியின் தாளாளர் திரு.செல்வராஜ் அவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தனது முதுமுனைவர் பட்டப் படிப்பிற்காக டென்மார்க்கில் உள்ள ‘ஆரூஸ்’ பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அவர் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த தலைப்போ ‘ஆற்று நீர் மேலாண்மை’. லண்டனின் ‘தேம்ஸ்’, இத்தாலியின் ‘சார்னோ’ ஆகிய நதிகளைத் தாமிரபரணி நதியோடு ஒப்பிட்டு தனது ஆய்வை இவர் மேற்கொண்டு வருகிறார்.
ஒரு மாதகாலம் தனது படிப்பினை டென்மார்க்கில் முடித்துவிட்டு திரும்பிய தாளாளர் செல்வராஜ் கடலூரில் மக்கள் உதவியுடன் மண்டிப்போன ஓர் ஏரியை அந்த மாவட்ட ஆட்சியாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி மீட்டெடுத்ததைப் பற்றிய செய்திகளைப் படித்துள்ளார். அதைப் படித்த பின்பு நாமும் நம்மளவில் தாமிரபரணியைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? என சிந்தித்துள்ளார். பின்னர் இவரும், இவரது மனைவி மெல்சன் செல்வராஜ் அவர்களும் இணைந்து மாணவ, மாணவிகளிடம் தாமிரபரணி பற்றிய ஒரு விழிப்புணர்வை அழிக்க முடியாதபடி  மனதில் பதியச் செய்யலாம் என்ற ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன் முதற்கட்டமாக எழுத்தாளர் ‘முத்தாலங்குறிச்சி காமராசு’ அவர்கள் எழுதிய  ‘தாமிரபரணி விழிப்புணர்வு பாடலை’ மாணவ, மாணவிகளைத் தினமும் காலையில் படிக்க வைப்பது என்ற முடிவு. இதற்காக அனைத்து மாணவர்களின் கையேடுகளிலும் ‘தாமிரபரணி விழிப்புணர்வு’ பாடலை அச்சிட்டு கொடுத்துள்ளனர். இசையமைத்து ஒரு பாடலாகவும் அதை உருவாக்கியுள்ளனர்.
“தாயிடம் யாம் அருந்தும்_ எங்கள்
தாய்ப்பாலில் நீயும்(தாமிரபரணி) உண்டு “




என்பது போன்ற மெய்சிலிர்க்கும் வரிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடுவதை கேட்கையில் நம் மனம் நெகிழ்ந்து போகிறது.
மேலும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி வருகிற நவம்பர் 30ஆம் தேதி மாவட்ட அளவிலான ஒரு வினா-விடை போட்டியினையும் நடத்த இருக்கின்றனர். அந்தப் போட்டியில் தாமிரபரணி ஆற்றின் வரலாறு, அணைக்கட்டுகள், கிளை நதிகள், பிரிவு வாய்க்கால்கள், மதகுகள் போன்றவற்றின் எண்ணிக்கை என்ற அடிப்படையிலேயே கேள்விகளை அமைக்க உள்ளனர். அன்றைய தினம் திருநெல்வேலி ஆட்சியாளரை அழைத்துத் தாங்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியினை திறந்து வைக்க உள்ளனர். அன்றைய தினத்தை முழுவதுமாக ‘தாமிரபரணி நாளாக’ கொண்டாட உள்ளனர்.

மேலும், மாதம் ஒருநாள் மாணவர்களை, தாமிரபரணி பாய்ந்தோடும் அனைத்து இடங்களுக்கும் ஒரு பசுமை நடை கூட்டிச் செல்லவும் முடிவெடுத்துள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரியின் உதவியுடன் இவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் திருநெல்வேலியில் உள்ள மற்ற பள்ளிகளும் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர்.

தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களும் சேர்ந்து போராட வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளது கங்கைகொண்டானில் பெப்சி ஆலை தொடங்க அரசாங்கம் அனுமதி அளித்த விவகாரம். இதற்கு எதிராகத் தமிழக அரசியல் கட்சிகள், சமூக நலன் சார்ந்த இயக்கங்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில் மாணவர்களிடம் நீங்கள் ஏற்படுத்தும் இந்த விழிப்புணர்பு எந்த மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும் என மாக்தலின் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.மெர்சன் செல்வராஜிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது “ திருநெல்வேலியில் பிறந்த ஒவ்வொரு குழந்தையின் தாயும் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள். ஆகவே அந்தப் பிள்ளைகள் குடித்த தாய்ப்பாலிலே தாமிரபரணி கலந்திருக்கிறது. அப்படித் தாய்க்கு நிகராக விளங்கும் தாமிரபரணிக்கு இப்போது ஒரு பிரச்சினை வருகிறது. அதைத் தடுக்க மாணவர்களாகிய  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை மட்டுமே நாங்கள் அவர்களிடத்தில் எழுப்பினோம். அதற்கே ஓவியம், வினா-விடை போட்டி, பசுமை நடை எனப் பல காரியங்கள் சாத்தியமாகியிருக்கிறது. நாளை இந்தத் தலைமுறைதான் இந்நிலத்தில் வாழப் போகிறது. அப்போது இவர்கள் நிச்சயம் தாமிரபரணியைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது.


ஒரு பன்னாட்டு நிறுவனம் நம்மூரில் இயங்கினால் அது அமைந்திருக்கும்  இடத்தைச் சுற்றி ஏதாவது நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தையல் இயந்திரத்தையும்,  நோட்டு புத்தகங்களையும் வழங்கி ஏமாற்றி வருகின்றனர். அப்படியில்லாமல் அந்தப் பகுதியில் உள்ள நீர்வளத்தைப் பெருக்க ஏதாவது ஒரு குளத்தையோ, நீர் நிலையையோ அவர்கள் சீரமைக்க வேண்டும். அதுவே சிறந்த நலத்திட்டமாகும்.

நாங்கள் 1200 மாணவர்களை வைத்துக் கொண்டு இந்த அளவில்தான் செயல்பட முடியும். ஆனால், இதுவே சமூகத்தில் சிறந்த மாற்றத்தை உண்டாக்கும் என நினைக்கிறோம். மேலும் எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், ‘தெகிடி’ படத்தின் இசையமைப்பாளருமான நிவாஸ் பிரசன்னாவை வைத்து தாமிரபரணி பற்றிய ஒரு சிறப்புப் பாடலை உருவாக்க இருக்கிறோம். என்றார்.

மேலும் இந்தப் பள்ளியின் தாளாளர் செல்வராஜ் கூறுகையில் “நாங்கள் தொடர்ந்து எங்கள் பள்ளியில் சிறப்புக் கூட்டங்கள் ஏற்படுத்தி தாமிரபரணி பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்ற இருக்கிறோம். இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்தர் சிங்கை அழைத்து திருநெல்வேலியில் எந்த விதமான மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்த முடியும் என ஆலோசிக்க இருக்கிறோம். அரசாங்கம் நினைத்தால் நம் நீர்நிலைகளை  பாதுகாக்க முடியும். ஆனால், அவர்கள்  அதை செய்யாத பட்சத்தில் நமக்கென்ன என்று ஒதுங்கி நிற்காமல் நம்மாலான அளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எங்களது முயற்சி தாமிரபரணியை நிச்சயம் காப்பாற்றும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்”. எனக் கூறினார்.


மாணவர்களே தாமிரபரணியை காக்க இந்த அளவிற்கு செயல்படும்போது, பிளாச்சிமடாவிலும், பெருந்துறையிலும் மக்கள் சக்தி ஒன்றிணைந்து பெப்சி, கோக் ஆலையை விரட்டியது போல, கங்கைகொண்டானிலும் பெப்சி, கோக் ஆலையை விரட்டி நம் உயிர் நதியான தாமிரபரணியை நாம் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.