புதன், ஜூலை 20, 2016

இ - வேஸ்ட் பயங்கரம்!

டைசியாக நீங்கள் ஒரு புதிய மொபைலை வாங்கியது எப்போது, இந்த நொடி உங்கள் வீட்டுக்குள் எத்தனை மொபைல்கள் இருக்கின்றன, அதில் எத்தனை மொபைலை  நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ பயன்படுத்துகிறீர்கள்?

நாம் பயன்படுத்தாத மின்னணுப் பொருட்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் டெரா பைட் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்தியா ஓர் ஆண்டுக்கு 18 லட்சம் டன் மின்கழிவுகளைக் கொட்டுகிறது. 2018-ம் ஆண்டில் இது 30 லட்சம் டன்னாக உயரும். அதைவிட அதிர்ச்சித் தகவல்... பல லட்சம் டன் மின் கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து, நாம் இறக்குமதி செய்கிறோம். குப்பையை எதற்கு இறக்குமதி செய்யவேண்டும்?

மின்கழிவுகளில் இருந்து உதிரிப்பாகங்களைப் பிரித்தெடுத்து அதை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது உண்டு. அப்படிச் செய்வதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. சில சமயம் கதிர்வீச்சுகள்கூட இதில் சாத்தியம். தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்த பின்னர், எதற்குமே பயன்படாத பொருட்களை மண்ணில்தான் கொட்ட வேண்டும். அது சுற்றுச்சூழலுக்குக் கேடு. அதனால் முன்னேறிய பல நாடுகள்  தங்கள் தேசத்து மின்கழிவுகளை சட்டத்துக்கு விரோதமாக நம் நாட்டுக்குள் கொட்டிவிடுகின்றன. அதைப் பிரித்தெடுக்கும் ஆபத்தான வேலையையும், அந்த மின்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதகங்களையும் நம் தலையில் சுமத்துகின்றன. `அட்டிரோ’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் முறையாக உரிமம் பெற்று மின்கழிவுகளை இறக்குமதி செய்கிறது. மற்ற எல்லா இறக்குமதிகளுமே இல்லீகல்தான்.

மின்கழிவுகள் என்றதும் ஹாலிவுட் ஸ்டைலில்  பூமியை அழிக்கநினைக்கும் வேற்றுக் கிரகவாசிகளின் சதித்திட்டம் என நினைக்க வேண்டாம். நாம் தூக்கி எறியும் ரிமோட், மொபைல் சார்ஜர்கள், கேபிள்கள் தொடங்கி எல்லா தேவையற்ற மின் மற்றும் மின்னணுப் பொருட்கள்தான் மின் கழிவுகள்.
நாம் உருவாக்கும் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மின் கழிவுகள்,  டெல்லிக்கு அருகில் இருக்கும் சீலாம்பூர் நகருக்குத்தான் வருகின்றன. இது இந்தியாவில் மின் கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய இடம். சிறியதும் பெரியதுமாக 3,000 மின்கழிவுக் கடைகள் இங்கே இருக்கின்றன. உலகம் முழுவதும் உருவாகும் மின் கழிவுகளில் 70 சதவிகிதம் சீலாம்பூருக்குதான் வருகின்றன. இன்னும் முறைப்படுத்தப்படாத இந்தத் தொழிலால் இந்தியா முழுக்க ஒரு லட்சம் பேர் பிழைக்கிறார்கள். அதில் சீலாம்பூரில் மட்டும் 30,000 பேர்.

சீலாம்பூர் பகுதியில் வேலைசெய்வர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் தினம் 200-300 ரூபாய் வருமானத்துக்கு குழந்தைகளும் இளைஞர்களும் இங்கே வேலைசெய்கிறார்கள். இவர்களின் தலைமுடிகூட தங்கம்போல் மின்னுகின்றன. அதற்குக் காரணம் இந்த நகரின் காற்றில் கலந்திருக்கும் காப்பர். இவர்களின் வேலை, பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் காப்பரைப் பிரித்தெடுப்பது மட்டும்தான். அதன் பின்னர் அவை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலான மின்கழிவுகளில் இருக்கும் பாதரசம், ஈயம், கேட்மியம் போன்றவை விஷத்தன்மை உடையவை. இவற்றை மண்ணில் கொட்டுவதும், பூமிக்குள் புதைப்பதும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது. 

சீலாம்பூரில், குடும்பம் குடும்பமாக சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தையும், காப்பரையும் பிரித்தெடுக்கிறார்கள். ஆம்... அதிர்ஷ்டம் இருந்தால், சில மின்னணுப் பொருட்களில் இருந்து தங்கம்கூட கிடைக்கலாம் என்கிறார்கள். ஒரு மதர்போர்டைப் பார்த்தாலே, அது ஜப்பானில் தயாரித்ததா, சீனாவில் தயாரித்ததா என இந்த ஊர் குழந்தைகள்கூடச் சொல்லிவிடுகிறார்கள். சீனப் பொருட்களைவிட ஜப்பான் பொருட்களில் தங்கமும் நல்ல காப்பரும் கிடைக்கும் என்பது சீலாம்பூர் கண்டுபிடித்த ரகசியம். தங்கத்தையும் காப்பர் கம்பிகளையும் எடுத்த பிறகு ஒட்டுமொத்த யூனிட்டையும் எரிக்கிறார்கள். பிளாஸ்டிக் உருக, எஞ்சியிருக்கும் மெட்டல்களை விற்று காசாக்குகிறார்கள்.

மின்கழிவுகளைக் கையாள்வது எளிது அல்ல. பல குழந்தைகளின் கைகள் தினம் தினம் பிளாஸ்டிக் பொருட்களால் ரத்தத்தைப் பார்க்கின்றன. சில மின்கழிவுகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் உயிரையே பறிக்கலாம். 2010-ம் ஆண்டு சீலாம்பூர் அருகே இருக்கும் மாயபுரி என்ற இடத்தில் நடந்த கதிர்வீச்சு விபத்தில் ஒருவர் இறந்துபோனார். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்னமும் வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு இந்திய அரசு விதிகளை இறுக்கியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை அரசு தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட மின்கழிவு நிறுவனங்கள் நிறைய வந்துவிட்டன. இவர்களால், சாதாரண வியாபாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தான இந்தத் தொழிலை முறைப்படுத்துவது முக்கியம். அதே சமயம், அதை கார்ப்பரேட் வசம் முழுமையாக ஒப்பட்டைப்பதும் ஆபத்தில் முடியலாம். அடுத்து வரும் ஆண்டு களில் ராட்சச வேகத்தில் வளர விருக்கும் இந்தத் துறையை கூடுதல் கவனத்தோடு அரசு கவனிக்க வேண்டும். மின்கழிவு நிறுவனங்களைச் சீரிய இடைவெளியில் அரசு கண்காணித்து உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வலியுறுத்தப்பட வேண்டும்.

மின்கழிவுகளில் இருந்து தங்கம் கிடைப்பதும் தகரம் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சீலாம்பூர்வாசிகள். அரசு என்ன எடுக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி!

திக மின்கழிவுகள் கொண்ட இந்திய மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிராவுக்கு முதல் இடம். தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூ ருக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் மின்கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இதைப் போல குறைந்தபட்சம் 10 தொழிற்சாலைகள் தமிழகத்துக்குத் தேவை என்கிறார்கள்!

-கார்க்கிபவா

நன்றி: ஆனந்தவிகடன், 20 ஜூலை 2016

1 கருத்து:

langdunianni சொன்னது…

Caesars Casino - Joliet - Hotels - JT Marriott
Welcome to Caesars Casino 계룡 출장샵 Joliet. Our newly 성남 출장마사지 opened hotel 과천 출장샵 offers 정읍 출장샵 comfortable rooms with free WiFi, a refrigerator, and an air 양주 출장샵 conditioning.

கருத்துரையிடுக