வியாழன், மார்ச் 31, 2016

துயரத்தின் சாட்சிகள்! - ஃபுகுஷிமாவில் இருந்து... -கவிதா முரளிதரன்

முதலில் பூகம்பம், அதைத் தொடர்ந்து சுனாமி... ஜப்பானை மட்டும் அல்ல, உலகையே உலுக்கிப்போட்ட ஃபுகுஷிமாவில் அணு உலை விபத்து நடந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. சுனாமிக்குப் பிறகு, அணுமின் நிலையத்தில் தொடர்ச்சியாக கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து மக்களைக் காப்பாற்ற, அணு உலையைச் சுற்றியிருந்த கிராமங்களில் இருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இன்னமும் ஒரு லட்சம் பேர் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். சுகேனோ, யொஷிஸவா என்கிற இரண்டு விவசாயிகள், இந்த அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள். ஒரு கருத்தரங்கில் உரையாற்ற சென்னை வந்திருந்தவர்களை ஓய்வு நேரத்தில் சந்தித்தோம்...

விபத்து நடந்த பகுதியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருந்தது யொஷிஸவாவின் வீடு. “சுனாமிக்குப் பிறகு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நான்கு அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தது. மிகக் கோரமான விபத்து அது. ஏழாவது நாள் அணு உலைகளை இயக்கிவந்த டெப்கோ அலுவலகத்துக்குச் சென்றேன்.  எனது எதிர்ப்பைப் பதிவுசெய்வதும் இழப்பீடு கோருவதும்தான் நோக்கம். அப்போதுகூட இந்த விபத்து எங்களை இவ்வளவு மோசமாகப் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. நான் மட்டும் அல்ல, ஃபுகுஷிமா மக்கள் யாருக்குமே ஆபத்தின் முழுமையான வீரியம் புரியவில்லை. எங்களுக்கு சொல்லப்படவும் இல்லை. நாங்கள் விபத்துக்குப் பிறகு அணு உலைகளுக்கு அருகில் செல்வதையும் பார்வையிடுவதையும் அணு உலை நிர்வாகம் தடுக்கவில்லை” என்கிறார் யொஷிஸவா.

பல குழப்பங்களுக்குப் பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து ஃபுகுஷிமா குடிமக்களுக்கு அரசிடம் இருந்து ஓர் உத்தரவு வந்தது. அவர்களிடம் இருந்த ஆடு, மாடுகளைக் கொன்றுவிடுமாறு சொன்னார்கள்.
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளால் பல  பிரச்னைகள் உண்டாகும் என்பதால், அந்த முடிவு. அரசின் உத்தரவை ஏற்று, பலரும் தாங்கள் வளர்த்த மாடுகளை விஷம்வைத்துக் கொன்றார்கள். சிலர் கொல்ல மனம் இன்றி அப்படியே விட்டுவிட, பல மாடுகள் பட்டினி  கிடந்து இறந்தன. ஆனால், யொஷிஸவா வேறு ஒரு முடிவை எடுத்தார்.

அவர் தனது மாடுகளையும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட மற்ற மாடுகளையும் வளர்ப்பது என முடிவுசெய்தார். அவரது முடிவுக்கு, மக்களிடம் ஆதரவு பெருகியது. இப்போது யொஷிஸவாவின் பண்ணையில் சுமார் 300 மாடுகள் இருக்கின்றன. `நம்பிக்கை பண்ணை' என அதற்குப் பெயர் வைத்திருக்கிறார். 

“அந்த மாடுகளால் எந்த லாபமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த மாடுகள் எங்களின் துயரத்தின் சாட்சி. அரசு மாடுகளைக் கொல்லச் சொல்லக் காரணம், தொந்தரவு செய்யும் உண்மைகளை மண் போட்டு மூடிவிட வேண்டும் என்பதே. அதனால்தான் இந்த மாடுகளை வளர்க்கிறேன்” என்கிறார் யொஷிஸவா. 

மிசுவோ சுகேனோவுக்கு 28 வயது. என்ன கேட்டாலும் அவரிடம் இருந்து வருவது ஒற்றைச் சொல் பதில்களே வருகின்றன. ஃபுகுஷிமா பற்றி சொல்ல அவரிடம் தீராத கதைகள் இருக்கின்றன. எல்லாமே, நிலத்தின் மீது நீங்காத பேரன்பு கொண்ட ஒரு தலைமுறை மக்களின் துயரம் தோய்ந்த கதைகள். சுகேனோ, இயற்கை விவசாயி. தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தின் தொழில் அது.
``நான் பல்கலைக்கழகப் படிப்பு முடித்து வீடு திரும்பி ஒரு வருடம் ஆகியிருந்தது. குடும்பத்தோடு நானும் விவசாயம்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.'' என நினைவுகூர்கிறார்.  விபத்து நடந்து ஐந்து வருடங்கள் முடிந்த பிறகும், சுகேனோவின் குரலில் நடுக்கம் இன்னும் மிச்சம் இருக்கிறது. இத்தனைக்கும் விபத்து நடந்த இடத்தில் இருந்து இவரது வீடும் நிலமும் 47 கி.மீ தள்ளியிருந்தது. 

“உண்மையைச் சொன்னால் அந்த விபத்தால் எங்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், கதிரியக்கம் எங்களது நிலங்களையும் விளைபொருட்களையும் கடுமையாகப் பாதித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்கிறார்.
சரியான வழிகாட்டுதலோ அறிவுறுத்தல்களோ இல்லாத நிலையில், தங்களுக்கு `சரி' எனத் தோன்றியதை அப்போது விவசாயிகள் செய்தார்கள். பசுமை இல்லத்தை உடனே முழுமையாக மூடிவைக்கும்படி சுகேனோவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் அவரது அப்பா. 

``விவசாயத்தைப் பொறுத்தவரையில் மண்தான் எல்லாம். அதனால் மண்ணைக் காப்பதுதான் எங்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. நாங்கள் செய்தது எல்லாம் சரியான விஷயங்கள்தானா என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், ஏதோ ஓர் உந்துதலில் எல்லாம் செய்தோம்” என்கிறார் சுகேனோ.

``கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் நிலை எங்களைவிட மிக மோசமாக இருந்தது. அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டிய தேவை இருந்தது. வீடு திரும்பிய பிறகு நாங்கள் பார்த்த முதல் வேலை, அவர்களுக்காகச் சில பொருட்களைச் சேகரித்து அனுப்பியதுதான்”-அதைத் தொடர்ச்சியாகச் செய்தது, சுகேனோவுக்கு வேறுவிதமான புரிதலையும் நிதானத்தையும் தந்தது.
பெரும்பாலான நேரத்தை தனது நிலத்தைக் காப்பாற்ற முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்வதிலேயே செலவழித்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட நிலத்தில் இருந்து, விளைபொருட்களுக்குக் கதிரியக்கம் பரவாமல் தடுக்க பல வழிகள் இருப்பதை தன் ஆய்வு மூலமாகக் கண்டுகொண்டார்.
 
``ஒருகட்டத்தில் நாங்கள் விற்பனைக்கு அனுப்பும் எந்த விளைபொருளிலும் கதிரியக்கமே இல்லை என்ற நிலை உருவானது” என்கிறார் அவர். தனது நிலத்தின் மீதான ஆழமான நம்பிக்கையின் வெற்றியாக அதைப் பார்க்கிறார் சுகேனோ. 

``என்ன விளைவு வரும் எனத் தெரியாத நிலையில் நான் நிலத்தில் விதைகளை விதைத்தேன். விதைகள் எனது மண்ணின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை” என்கிறார் அவர். ஆனால், அதன் பிறகுதான் அசலான சவால்கள் உருவாகின. ஃபுகுஷிமாவில் உள்ளவர்கள் சுகேனோவை நம்பினார்கள். அதைத் தாண்டி இருந்த மக்கள் நம்புவதற்குத் தயங்கினார்கள். அவர்களிடத்தில் ஃபுகுஷிமாவின் உண்மையையும் குரலையும் எடுத்துரைக்க சுகேனோ உருவாக்கிய அமைப்புதான் `கிபோதானே’ – நம்பிக்கையின் விதைகள்!
இந்த அமைப்பின் மூலம் ஃபுகுஷிமா மக்கள் மிக நேசிக்கும் மண்ணையும் விவசாயத்தையும் பிற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதுதான் சுகேனோவின் திட்டம். வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு ஃபுகுஷிமாவின் விவசாயத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பயணத் திட்டங்களை வகுப்பது, அவர்களை விவசாய நிலங்களில் உள்ள குடில்களில் தங்கவைத்து இயற்கை விவசாயம் பற்றி நேரடியான அனுபவத்தைத் தருவது என, பல விதங்களிலும் செயல்படுகிறது நம்பிக்கையின் விதைகள் அமைப்பு. 

“எஞ்சியிருக்கும் எங்களது வாழ்க்கையை உங்களிடம் சில உண்மைகளைப் பகிர்ந்தபடி கழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இந்தியாவுக்கு எல்லாம் வருவோம்; இங்கு இருக்கும் மாணவர்களுடன் உரையாடுவோம் என கனவிலும் நினைத்தது இல்லை” என்று சிரித்தபடியே சொல்கிறார்கள் இருவரும். 
``ஆனால் காலம், ஃபுகுஷிமாவில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமூகப் பணியாளராக மாற்றியிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? ஃபுகுஷிமாவில் நிலத்தையும் தமது ஆடு, மாடுகளையும்விட்டு பிரிய முடியாத 80 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளை தைராய்டு கேன்சர் தாக்கத் தொடங்கியிருக்கிறது. எஞ்சியிருப்பவர்கள் உங்களைப் போன்றோரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.”

`பூவுலகின் நண்பர்கள்' அழைப்பின் பேரில் சென்னை வந்து சென்னைப் பல்கலைக்கழக ஊடகவியல் மாணவர்களுடன் உரையாடிய சுகேனோவும் யொஷிஸவாவும், அது தங்களுக்குள் மிகப் பெரிய நம்பிக்கையை விதைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். 

“கல்லூரியில் படிக்கும்போது இப்படி சமூகத்துக்குப் பயனுள்ள ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும், மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு, இப்படி நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை” என்கிறார் சுகேனோ.

“அணு விபத்து, எங்களை வெவ்வேறு திசைகளை நோக்கி விரட்டியிருக்கிறது; நாங்கள் நினைத்துப்பார்க்க முடியாத தொலைவுகளைக் கடக்கவைத்திருக்கிறது; தாங்க முடியாது என நினைத்த வலிகளை எதிர்கொள்ள வைத்திருக்கிறது; எங்களது வாழ்க்கையை வரலாறாக்கி இருக்கிறது. இந்த வரலாறில் இருந்து நீங்கள் பாடம் படிக்க வேண்டும். இல்லை என்றால், வரலாறு திரும்பும். அதன் ஒரு வலி மிகுந்த பகுதியாக நீங்கள் மாறக்கூடும்'' - புன்னகையுடன் கைகொடுத்தபடி விடைபெறுகிறார் யொஷிஸவா.

``நீங்கள் ஃபுகுஷிமா வரும்போது சொல்லுங்கள், எங்கள் நிலத்துக்கே உரிய ஸ்ட்ராபெர்ரி ரைஸ் கேக்கை நீங்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது யொஷிஸவா வளர்க்கும் மாடுகளோடு எங்களது ரைஸ் கேக்கும் எதிர்ப்பின் குறியீடாக இருக்கிறது. எங்கள் உணவையும் நாங்கள் வளர்த்த மாடுகளையும்கூட போராட்ட ஆயுதங்களாக மாற்றியிருப்பதுதான் அணு விபத்து எங்களுக்கு செய்த நன்மை” என்று சொல்லும்போது சுகேனோவுக்குக் குரல் உடைகிறது. 

ஃபுகுஷிமாவில் அவர்கள் தொடர வேண்டிய பயணம் காத்திருக்கிறது!

-கவிதா முரளிதரன்

நன்றி: ஆனந்தவிகடன், 06 ஏப்ரல் 2016

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

வேதனை

Unknown சொன்னது…

அணுஉலையை மூடூவோம் மக்களை காப்போம்

கருத்துரையிடுக