வெள்ளி, டிசம்பர் 25, 2015

பேரிடரைத் தடுக்காமல் பேரழிவு ஆக்கிவிட்டோம்!

ழை முடிந்தபிறகும் மழையைப் பற்றியே பேசியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கிவிட்டது மழை!
‘தமிழகத்தில் வெள்ளம்’ என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் கடந்த 15-ம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
முதலில் பேசிய, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன், “மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டு அதை அறிக்கையாக அரசிடம் அளிக்கப்போகிறோம்” என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பேசினர்.
“பேரிடரைத் தடுக்க முடியும்!”
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும், நீர்வள நிபுணருமான எஸ்.ஜனகராஜன்: “சமீபத்திய மழை வெள்ளத்தால் ஏழை, நடுத்தர, உயர் வர்க்கத்தினர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்​பட்டனர். உரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், அதைப் பேரிடர் என்று சொல்ல முடியாது. முதலில், இந்த மழையால் என்னென்ன ‘ரிஸ்க்’ இருக்கும் என்பது பற்றிய புரிதல் இருந்ததா? எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்கிற ஆய்வு இருந்ததா? சிக்கலான சூழலைச் சமாளிக்கக்கூடிய உத்திகள் நம்மிடம் இருக்கிறதா? இதெல்லாம் இருந்தால்தான், இவ்வளவு மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொள்ள முடியும். பேரிடர் என்பது தடுக்கப்படக்கூடிய ஒன்று. அது எவ்வளவு பெரிய பேரிடராக இருந்தாலும் சரி. தென் அமெரிக்கா சந்தித்த பேரிடருடன் ஒப்பிடுகையில், இங்கு நாம் பார்த்த பேரிடர் ஒன்றுமே கிடையாது. தடுப்பதற்கான முயற்சி எதுவும் எடுக்காமல், ரிஸ்க் மேனேஜ்மென்ட் எதுவும் செய்யாமல் இருந்தால், கண்டிப்பாக அது பேரழிவாகத்தான் இருக்கும்.
 இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் 4-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஐ.டி. காரிடர் பற்றிய பெருமிதம் நமக்கு இருக்கிறது. ஐ.டி. ஏற்றுமதியில் இந்திய அளவில் 2-வது, 3-வது இடத்தில் சென்னை உள்ளது. என்ன கொடுமை என்றால், ஒட்டுமொத்த ஐ.டி. காரிடரும் இந்த வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இயற்கையிலேயே மிக அழகான அமைப்பில் உருவான வடிகால் அமைப்பு சென்னையில் உள்ளது. வட சென்னையில் கொசஸ்தலை ஆறு. மத்திய சென்னையில் கூவம் ஆறு. தென் சென்னையில் அடையாறு ஆறு என மூன்று ஆறுகள் உள்ளன. ஆந்திராவில் இருந்து பிச்சாவரம் வரை 480 கி.மீ. நீளத்துக்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளது. மாம்பலம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உட்பட 13 கால்வாய்கள் உள்ளன. அதுதவிர, வேளச்சேரி பள்ளிக்கரனை சதுப்பு நிலப்பகுதி உள்ளது. இவ்வளவு இருந்தும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த அமைப்புகள் அத்தனையும் ஆக்கிர​மிக்கப்பட்டு உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 3,600 சிறிய, நடுத்தர, பெரிய நீர்நிலைகள் உள்ளன. அவை, 40 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டவை. அந்தத் தண்ணீர் சென்னை நகருடைய மூன்று ஆண்டு தேவைக்குப் போதுமானது.” 
“விரயமாகும் நீர்வளம்!”
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் எல்.வெங்கடாசலம்: “சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றிய அடிப்படையான விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். பன்முக சூழல் அமைப்பை தண்ணீர் உருவாக்குகிறது. உணவு​ப் பொருட்களை உற்பத்தி செய்யவும், உணவு தயாரிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. இயற்கை அளிக்கும் அரிய மூலதனமான தண்ணீரை நாம் வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 41 ஆயிரம் நீர்ப்பாசன அமைப்புகள் இருந்தன. தற்போது 19 ஆயிரம் தான் உள்ளன. இவற்றிலும், பல செயலிழந்து போயுள்ளன.
இந்தப் பருவமழையின்போது, 327 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குப் போயுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிற இதே அரசுதான், பல மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கடலுக்குள் விடுகிறது. அபரிமிதமான தண்ணீரைக் கடலுக்குள் விட்டுவிட்டு, நெம்​மேலியில் கடல்நீரைக் குடிநீராக மாற்றிக்​கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் பெறுவதால், அது பல சமூகப் பிரச்னை​களை ஏற்படுத்துகிறது.
சென்னைக்குத் தண்ணீர் கொடுப்பதால், அங்குள்ள விவசாயிகளால் வேளாண்மை செய்ய முடியவில்லை. அங்கு, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஒரு பக்கம் உபரிநீர், இன்னொரு புறம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை. இதுபற்றி உடனடியாக நாம் சிந்திக்க வேண்டும்.”
“ஆறுகளுக்கு மறுவாழ்வு தேவை!”
சூழலியல் பொறியாளர் ஜெய்சங்கர்: “கூகுள் எர்த் வரைபடத்தில் பாத்தால், செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே வடிகால் பாதையின் அகலம் 800 அடியாக இருக்கிறது. இது, ஈக்காடுதாங்கலில் 123 அடியாகச் சுருங்கி, அடையாறு அருகே 300 அடியாக விரிகிறது. ஆக்கிரமிப்பு என்பது நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்​கிறது. சென்னையில் 6 ஆயிரம் கி.மீ. அளவுக்கு சாலைகளும், வீதிகளும் உள்ளன. ஆனால், 1,600 கி.மீ-க்குத்தான் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. அதைப் பராமரிப்பதும் எளிதான காரியம் இல்லை. சமீபத்தில் வெள்ளம் வந்தபோது, சென்னை குடிநீர்வாரியத்தின் கழிவுநீர் கால்வாய்கள்தான் உதவி செய்தன. வளர்ச்சித்திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குடிசைப்​பகுதிகளில் துப்புரவுத்​தொழிலாளர்களும், குடிநீர் வடிகால் தொழிலாளர்களும்தான் இருக்கிறார்்கள். வெள்ளம் வந்தால் அவர்கள்தான் முதலில் பாதிக்கப்​படுகிறார்கள். மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க நினைப்பதைப்போலவே, நம் ஆறுகளுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும்.”
“இயற்கையை அவமதிக்கிறீர்கள்!”
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம்: “அரிதிலும் அரிதான இயற்கைப் பேரழிவு என்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருக்​கிறார். இது ஒன்றும் அரிதானது நிகழ்வு அல்ல. வழக்கமான பருவமழைக் காலத்தில் பெய்த மழை இது. இது ஒன்றும் கூடுதல் மழை என்றும் சொல்ல முடியாது. ஏற்கெனவே இதைவிட அதிகமான அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளது. அபரிமிதமான தண்ணீரை இயற்கை கொடுக்கிறது. ஆனால் அதை, இயற்கைப் பேரழிவு என்று சொல்கிறீர்கள். இது முழுக்க முழுக்க மனிதத் தவறு.
சென்னையில் ஏன் இந்த பாதிப்பு ஏற்பட்டது? தாழ்வான பகுதிகளில் கட்டடங்​கள் கட்டக் கூடாது, நீர்நிலைகளில் கட்டங்கள் கட்டக் கூடாது என்று 2-வது மாஸ்டர் பிளானில் தெளிவாகச் சொல்லப்பட்டது. ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும் அந்தப் பிளானில் வகுக்கப்பட்டன. அவை எல்லாமே ஆவணங்களில் உள்ளன. ஆனால், அந்த விதிமுறைகளில் ஒன்றுகூட பின்பற்றப்படவில்லை. விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, ஊழலும் பேராசையும் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்தன. அறிக்கைகள், திட்டங்கள், உக்திகள், நிபுணர்களின் ஆய்வுகள் என எல்லாம் தூக்கியெறியப்பட்டன. ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லப்படும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், வேளச்சேரியில் மிகப் பெரிய மால், நுங்கம்பாக்கத்தில் சர்வதேசத் தரத்தில் டென்னிஸ் ஸ்டேடியம் என ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.
குளம், குட்டை, ஏரி என பள்ளமான இடங்களுக்குத் தண்ணீர் செல்லும். நீர் வழிகள் வழியாகவும் செல்லும். இதுதான் இயற்கை. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் இந்த நீர் வழிகள் வழியாக, நீர்நிலைகள் மூலம் தண்ணீர் வடிந்துவிடும். ஆனால், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? புயல் கிடையாது. இடி கிடையாது. வழக்கமான மழைப் பொழிவு இது. எனவே, அரிதிலும் அரிதான இயற்கைப் பேரழிவு என்று தலைமைச் செயலாளர் சொல்வதை நான் மறுக்கிறேன். இப்படிச் சொல்வதன் மூலமாக, இயற்கையை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.”
“இருவிதமான ஆக்கிரமிப்புகள்!”
சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்: “ஆக்கிரமிப்பு இரண்டு விதங்களாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று சட்ட ரீதியான ஆக்கிரமிப்பு. இன்னொன்று, இயற்கை ரீதியான ஆக்கிரமிப்பு. ஏரிக்குள் வீட்டைக் கட்டி, அதற்கு பட்டா கொடுத்து, சி.எம்.டி.ஏ அனுமதியும் கொடுத்துவிட்டால், சட்டரீதியாக அது ஆக்கிரமிப்பு இல்லை. ஆனால், நீரின் கண்ணோட்டத்தில் அது ஆக்கிரமிப்புதான். ஏழைகளின் ஆக்கிரமிப்பை சட்ட ரீதியான ஆக்கிரமிப்பு என்று அரசும், நீதிமன்றங்களும் பார்க்கின்றன. எனவே, ஏழைகளின் ஆக்கிரமிப்புகளை மட்டும்தான் அகற்றுவார்கள். பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளில் கைவைக்க மாட்டார்கள்.”  
- இந்த விவாதங்கள் நாடு முழுக்கத் தொடர்ந்து நடக்கட்டும்!
- ஆ.பழனியப்பன்
நன்றி: ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக