வியாழன், டிசம்பர் 10, 2015

ரஜினி, சகாயம், விஜய், டிராஃபிக் ராமசாமி, உதயகுமார்...

ஏழ்மை, வறுமை, உடல்நலமற்ற தாய், பொறுப்பற்ற குடிகாரத் தந்தை, சுத்தமில்லாத வாழ்விடம், ஊட்டச்சத்தில்லா உணவு, கல்வியின்மை, பல்வேறு நோய்கள் என பல விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோஞ்சான் குழந்தைக்கு ஒரே ஓர் இஞ்ஜெக்ஷன் மட்டும் போட்டு சரி செய்து விடலாம் என்று எண்ணுவது எவ்வளவு தவறோ, அது போலத்தான் ஒரே ஒரு போராளியை, அதிகாரியை, நடிகரை கொண்டு வந்து எட்டு கோடி தமிழருக்கும் ஏற்புடைய சுபிட்சம் தேடும் முயற்சியும்.
[1] பல கோடி மக்களின் ஐம்பதாண்டு காலப் பிரச்சினைகளுக்கு ஒரு நபராய் நின்று ஓரிரு நிமிடத்தில் தீர்வு சொல்வது தவறு.
[2] ஒரு தனி மனிதன் மீதான அபரிமிதப் பாசம், அதீத நம்பிக்கை, அடிமைத்தன சரணாகதி, ஆண்டவனே என்றழைக்கும் பக்திப் பரவசம் தவறாகவே வந்து முடிந்திருக்கிறது. இதற்கு தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மீண்டும் இதே தவறைச் செய்வோம் என்று சொல்வது மடமையிலும் மடமை.
[3] ஒரு போராட்டத்தை, அரசு ஊழியனாய் செய்த ஒரு வேலையை, ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட நபரது குணாதிசயங்கள், விருப்பு வெறுப்புக்கள், நம்பிக்கைகள், சித்தாந்தம், கொள்கை கோட்பாடு என எதைப் பற்றியும் கவலைப்படாது, "எங்களை ஆட்சி செய்" என்று சொல்வது மீண்டும் ஒரு தனிநபர் துதிக்குத்தான் இட்டுச் செல்லும். கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும் வேறு பெயர்களில், உருவங்களில் உலா வருவார்கள்.
[4] தேவதூதனாகவே இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தின் முழுப் பொறுப்பையும் ஒரு தனிநபர் கையில் கொடுத்துவிட்டு, அவர் பார்த்துக் கொள்வார், நாம் பழைய மாதிரியே வாளாவிருப்போம், அல்லது அவருக்கு 'ஜே' போடுவோம் என்பது எதேச்சாதிகாரத்துக்கும், தான்தோன்றித்தனத்துக்கும்தான் இட்டுச் செல்லும். பதவி, அதிகாரம், புகழுரைகள், ஆமாம் சாமிகள், (தமிழ்ச் சமுதாயத்தின்) அடிமைத்தனம் போன்றவை ஒரு மனிதனை எப்படி மாற்றும் என்பது கணிக்கமுடியாத ஒரு பெரும் புதிர்.
[5] ஊர்கூடித்தான் தேர் இழுக்க முடியும்; ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் செய்யும் வேலை அல்ல அது. பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந்து செய்ய வேண்டிய சமூக-பொருளாதார-அரசியல் புனரமைப்பு வேலையை ஒரே ஒரு நபரால் செய்ய முடியாது. புத்தன், ஏசு, நபி, காந்தி, அம்பேத்கர் போன்ற இறைத் தூதர்களாலும், இமாலய ஆளுமைகளாலும் செய்ய முடியாததை, ஒரு சாதாரண தனி நடிகரால், அதிகாரியால், போராளியால் எப்படிச் செய்ய முடியும்?
[6] கூட்டுத் தலைமை, கூடி முடிவெடுக்கும் தன்மை, சனநாயகம், திறந்தவெளித்தன்மை, பொறுப்புடைமை, முடிவுகள் எடுக்கும் திறன், திட்டங்களை அமுல்படுத்தும் செயல் திறன், பிறரை அரவணைத்துச் செல்லும் அடக்கம், உண்மை, நேர்மை, உறுதி, ஒழுக்கம் எனப் பல்வேறு அம்சங்கள் கொண்டவை அரசியல், ஆளுமை, ஆட்சி அதிகாரம் எல்லாமே.
[7] இன்றையத் தமிழகத்துக்கு தேவை ஒரு புதிய அரசியல் உபகரணம்:

[] நமது வளங்களைக் காத்துக்கொள்ள,
[] வாழ்வாதாரங்களை தக்கவைக்க,
[] இயற்கையை அழிக்காத, மக்களைக் கொல்லாத, தனியாருக்கு மட்டுமே லாபம் தராத வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்த,
[] பல்வேறு வழிகளில் நம்மை அழித்தொழிக்கும் ஊழலை ஒழிக்க,
[] சாராயத்திலும், சாலைகளிலும், சாகடிக்கும் கொலைக் கும்பல்கள் கையிலும் செத்துக் கொண்டிருக்கும் மனித உயிருக்கு மாண்பு சேர்க்க,
[] நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியை தரமுள்ளதாக்கி கல்விக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த,
[] நம் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள, போதிய வருமானமுள்ள வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த,
[] மக்கள் மாண்புமிக்க மனிதர்களாய் வாழ்ந்து, கடமைகளைச் செய்து, மகிழ்ச்சியான முதுமையை அனுபவித்து, கண்ணியத்துடன் சாக,
ஒரு புதிய அரசியல் கலாச்சாரம், சித்தாந்தம், வேலைத் திட்டம், கூட்டு முயற்சி.
இது நூறாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயின்று, ஒருவரையொருவர் பயிற்றுவித்து, கனவுகண்டு, கலந்துரையாடி, களமாடி, சண்டை போட்டு, விட்டுக்கொடுத்து, ஒவ்வொரு குடும்பமாக, ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு ஊராக மாற்றியெடுக்க முனைப்புடனும், முதிர்ச்சியுடனும் செய்ய வேண்டிய மிகக் கடினமான ஆனால் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கடமை, பணி, வேலை, சேவகம், ஊழியம், தொண்டு.

இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது, இதற்கு நான் என்ன செய்ய முடியும், எப்படிப் பங்களிக்க முடியும் என்று சிந்திப்பதும், செயல்படுவதும்தான் சிறப்பு. சும்மா ‘ராம நாமம்’ சொல்வது போல, மனதுக்குப் பிடித்த ஒருவர் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பது தன்னையும், தமிழர்களையும் ஏமாற்றும் வீண் வேலை.
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
டிசம்பர் 9, 2015.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக