சனி, நவம்பர் 26, 2011

கூடங்குளம் அணு உலை - அப்துல்கலாமின் குழப்பல் வாதம்

சிறந்த அறிவியலாளர், மனிதநேயர் என்று முனைவர் அப்துல் கலாமைக் கருதி கொண்டிருந்த பலரும் கூடங்குளம் அணு உலை குறித்த அவரது நேர்காணலைக் கேட்டபிறகு அதிர்ச்சியும் அருவெறுப்பும் அடைந்தார்கள். பொய்யுரையும், திரிபுகளும் நிறைந்த அவரது இந்தப் பேச்சு மக்களைக் குழப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருந்தது. கூடங்குளம் அணு உலையை இயக்கச் செய்வதற்காக இந்திய அரசின் தூதராக தான் வரவில்லை என்று சொல்லி கொண்டாலும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமின் முயற்சி உண்மையில் அதுவாகத்தான் இருக்கிறது.

கடந்த 06.11.2011 அன்று கூடங்குளம் அணு உலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு அவர் நடுநிலையாளர் அல்ல என்பதை அம்பலப்படுத்தியது. அணு உலையின் அவசியம் பற்றி அப்துல் கலாம் அதிகமாகவே வலியுறுத்தியவர்தான். என்றாலும் கூடங்குளம் செல்கிற அன்று ’இந்து’ நாளேட்டில் ஸ்ரீ ஜன்பால் சிங் என்பவருடன் இணைந்து அவர் எழுதிய நீண்ட கட்டுரை அவரது முன் முடிவை எடுத்துக் காட்டியது.

ஏற்கெனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு ஆற்றல் துறையினரும் கூறி வருவதைப் போலவே அணு மின்சாரத்தின் அவசியம் குறித்து பொய்யான விவரங்கள் அடிப்படையில் அப்துல் கலாமும் வலியுறுத்துகிறார்.

அணு உலை இயங்கும் போது சாதாரண காலத்திலேயே - இயல்பான உற்பத்தி நடக்கும்போதே அப்பகுதியில் கதிரியக்கத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அப்துல் கலாம் மறுத்தார்.

அதைவிட அணுமின் உலை கதிரியக்கத்தின் வெளிப்பாட்டால் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பு ஏதும் வராது என்று அடித்துப் பேசினார். அணுமின்சார உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கமானது உடனடியாக தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு புற்று நோயை உருவாக்கும் என்பதையும், அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கும் தொடர் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதையும் அடியோடு மறுத்த அப்துல் கலாம் இது காமிக் கதைகள் போன்ற கற்பனை என்று எள்ளி நகையாடினார். ஹிரோஷிமா, நாகசாகி பாதிப்பு கள் கூட மிகைப்படுத்தப்பட்ட பரப்புரை என்று கூறினார்(தி இந்து கட்டுரை, 06.11.2011).

அதே கட்டுரையில் கதிரியக்கம் தாக்கினால் மனித உடலில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை என்றும் கூறிக்கொள்கிறார்.

ஹிரோஷிமா அணு குண்டு வீச்சால் இன்று வரை ஜப்பானியர்களிடையே புற்று நோயும் பிறவி ஊனங்களும் தொடர்கின்றன என்ற உண்மை மக்களின் பட்டறிவு மூலமாகவும், பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் வழியாகவும் பலமுறை மெய்பிக்கப்பட்டுவிட்டன. அதைக்கூட அப்துல் கலாம் மறுக்கிறார்.

சோவியத் ஒன்றியத்தில் செர்னோபில் அணு மின்சார உலை விபத்து 1987-ல் நிகழ்ந்த போது உடனடியாக இறந்தவர்கள் 7000 பேர் தான். ஆனால் அதில் வெளிப்பட்ட மிகைக் கதிர்வீச்சு காற்றிலும் நிலத்திலும் தங்கி, தாவரங்களிலும், கால்நடைகளிலும் உயிரணுக்களில் படிந்து, மனிதர்களையும் தொற்றி 25 ஆண்டுகளுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சென்ற ஆண்டு வரை இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரம் பேர் என்பதும் இரஷ்ய அரசே ஒத்துகொண்டுள்ள உண்மையாகும்.

தாராப்பூர், கல்பாக்கம், கைகா அணு உலைகளில் ஏற்படும் கதிர்வீச்சால் அவற்றை சுற்றி வாழும் மக்களிடையே இரத்த புற்றுப்நோய், எலும்புப் புற்றுநோய், தைராய்டு வீக்கம் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளதை சுதந்திரமான அமைப்புகளின் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றில் எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் ”அறிவியலாளர்” அப்துல்கலாம் இவை காமிக் புத்தக கட்டுகதைகள் என எள்ளி நகையாடுவது அவர் கொஞ்சமும் நெஞ்சில் ஈர மற்றவர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

ஒரு சில மணிநேரங்கள் கூடங்குளம் அணுமின் உலையை சுற்றிப் பார்த்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன என்று அவர் சான்று வழங்கினார். அங்கு போவதற்கு முன்பே மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலிலும் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கூறி விட்டார்.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரஷ்யாவின் வி.வி.இ.ஆர்.1000 (V.V.E.R 1000) அணு உலையில் 31 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதையும் அணு உலை இயங்கத்தொடங்கி இரண்டாண்டுகளுக்கு பிறகு விபத்துகள் நேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் இரஷ்ய அறிவியலாளர்களே இரஷ்ய அரசுக்கு கடந்த சூலை 2011ல் அளித்த ஆய்வறிக்கையில் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றி அப்துல் கலாம் வாய் திறக்கவே இல்லை.

அணு உலைக்கு மிகப்பெரும் அளவில் கடல் நீர் வேகமாக உறிஞ்சப்படும் போதும், அணு உலையிலிருந்து கொதி நீர் கடலுக்குள் விடப்படும் போதும் கடலியல் சூழல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். மீன் வளம் பெருமளவு குறையும். இதனை ஏராளமான கடலியல் ஆய்வறிக்கைகளும் மீனவ மக்களின் பட்டறிவும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துள்ளன. தாராபூரிலும், கல்பாக்கத்திலும் மேற்கொள்ளப்பட்ட கடலியல் ஆய்வுகளும் இந்த உண்மையை உறுதி செய்துள்ளன.

இவைபற்றியெல்லாம் கலாமுக்கு கொஞ்சமும் கவலையில்லை. மீன்வளம் குறையாது மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நெஞ்சாரப் பொய்கூறினார்.

அணு உலையில் வெளிப்படும் கதிரியக்கக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு அப்துல் கலாமும் அவர் அருகில் இருந்த கூடங்குளம் அணு உலை உயர் அதிகாரி எஸ்.கே. ஜெயினும் ஆளுக்கொரு கருத்தை சொன்னார்கள். அணு உலை வளாகத்திற்குள்ளேயே ஆழக் குழிதோண்டி கதிரியக்கக் கழிவுகளை கனமான கலன்களில் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள் என கலாம் கூறினார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எஸ்.கே.ஜெயின் ஆபத்தான இக்கழிவுகளை மறு சுழற்சி செய்து கண்ணாடி இழைகளாக மாற்றி உருண்டை யாக உருட்டி வைத்து மேலேயே பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.

தில்லியில் இச்சிக்கல் குறித்து பேசிய இந்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் அணுக்கழிவுகளை தாராப்பூருக்கு எடுத்துச்சென்று விடுவோம் என்று கூறினார். இந்த அணுக் கழிவுகளை மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தி கொள்வோம் என இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ குமார் பானர்ஜி கூறி வருகிறார்.

இப்படி இவர்கள் ஆளுக்கொன்றாக கூறுவதிலிருந்தே அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்க இந்திய அரசிடம் எந்த திட்டவட்டமான ஏற்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது.

உலகம் முழுவதும் அரசுகள் சந்திக்கிற முக்கியமான பிரச்சினையாகவும் இது உள்ளது. அணு உலைகளை இனி இயக்க வேண்டாம், மூடிவிடலாம் என முடிவு செய்துவிட்ட நாடுகள் கூட இதுவரை வெளியான அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று உறுதியான முடிவெடுக்க முடியாமல் முடியை பிய்த்து கொண்டிருக்கிறார்கள் ஏனெனில் அணுக்கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் அணு உலையின் கதிரியக்கத்தை விட வீரியமானது; ஆபத்தானது. இவற்றின் கதிரியக்க வீரியம் பாதியாகக் குறைவதற்கே குறைந்தது 22, 500 ஆண்டுகள் ஆகும்.

அதற்கு பிறகும் கதிரியக்கம் தொடரும். குறைந்தது 25000 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக புதைத்து வைப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடித்தாக வேண்டும். இன்று வரை விடை கிடைக்காத பெரும் சிக்கல் இது.

நெல்லையப்பர் கோயிலும் தஞ்சை பெரிய கோயில் கோபுரமும் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதிலிருந்தே நெல்லை மாவட்டமும் கூடங்குளமும் நிலநடுக்கம் பாதிக்காத பகுதி என்பது தெரியவில்லையா என அப்துல் கலாம் கேட்டார். இது எளிய மக்களை குழப்புவதற்கான மலிவான உத்தி ஆகும்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் கோபுரமும் கூடங்குளம் அணு உலையும் ஒன்றல்ல. கோயில் கோபுரத்தில் சிறு விரிசலோ பிளவோ ஏற்பட்டால் கூட அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடாது; சரிசெய்து கொள்ள முடியும். திருச்சி, திருவரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடவில்லை. அக்கோபுரம் ஒருவாறு சீரமைக்கப்பட்டு இன்றும் நிற்கிறது. காளஹஸ்தி கோயில் கோபுரம் கடந்த ஆண்டு தரைமட்டமாக சரிந்தது. அதனால் சுற்றுச் சூழலுக்கோ மனித உயிர்களுக்கோ பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அணு உலை அப்படியானது அல்ல. அதன் ஆயுட்காலமே 35 ஆண்டுகள்தான் என அதை வடிவமைத்த வல்லுநர்களே வரையறுத்துவிட்டார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம், அதைத்தொடர்ந்த ஆழிபேரலை ஆகியவைதான் வரவேண்டும் என்பதல்ல, நில அதிர்வு ஏற்பட்டு அணு உலைச் சுவரில் சிறிய விரிசல் ஏற்பட்டாலே கூட அதன்வழியாக பெருமளவு கதிரியக்கம் வெளிப்பட்டு பேரழிவை ஏற்படுத்தி விடும்.

கூடங்குளம் பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் நில அதிர்வுகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே அடிக்கடி ஏற்பட்டு வருவதை அரசின் பதிவேடுகள் கூறுகின்றன. 2006 மார்ச் 10ஆம் நாள் கூடங்குளம் அருகில் உள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகிய சிற்றூர்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை அரசின் குறிப்புகளே பதிவு செய்துள்ளன. 2011 ஆகஸ்டில் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் நில அதிர்வு நிகழ்ந்துள்ளது.

தென் தமிழ்நாட்டின் கடலுக்குள் எரிமலை இருப்பதை நிலவியல் ஆய்வுகள் பலவும் எடுத்துகூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தை அச்சன் கோயில், தாமிரபரணி நிலக் கிழிவு மண்டலம் (AchanKovil , Thamirabharani Shear zone- ATS) என நில இயற்பியலாளர்கள் வகைப் படுத்துகின்றனர். அப்பகுதியில் உருகி உருமாறிய பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் உள்ளிட்ட பல்வேறு காலப்பகுதி பாறைகள் சந்திக்கின்றன என்றும் நிலத் தகடுகள், இணையும் பகுதியாக (Contact Zone) உள்ளதையும் ஆய்வுகள் எடுத்து கூறுகின்றன. (எ.கா Restivity studies to Deliniate st ructural features near Abhishekapatti, Thiru nelveli - Y.Srinivas et al-Journal of Indian Geophysics Union, Vol 12, no: 4, page 157 -163-October, 2008). இந்த நிலத் தகடுகள் ஒன்றின் மீது ஒன்று நகரும்போது இலேசான நில அதிர்வில் இருந்து பெரிய நிலநடுக்கம் வரையிலும் ஏற்படுகின்றன. இதுதான் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படக் காரணமாகும்.

இந்த அடிப்படை அறிவியல் உண்மையை மறைப்பதற்காகவே அப்துல் கலாம் கோயில் கோபுரத்தை எடுத்து காட்டாகக் கூறி குழப்ப முயல்கிறார்.

இதற்கு மேலும் உறுதியாக போராடிக்கொண்டிருக்கிற தமிழக மக்களை பிளவுப் படுத்துவதற்காக ஆசை வார்த்தை காட்டும் கேவலமான உத்தியிலும் அவர் இறங்கி விட்டார். சில நூறு கோடி ரூபாய் செலவில் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நாற்கரச் சாலை அமைப்பது, மருத்துவ மனை நிறுவுவது, புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவது, பள்ளிக்கூடங்கள் கட்டித் தருவது, பூங்காக்கள் அமைப்பது என ஆசைவார்த்தைகள் கூறி நாற்காலி அரசியல்வாதிகளின் நிலைக்கு இழிந்து பேசினார். இதன் மூலம் அப்பகுதி மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது என்பதே அவரது திட்டம்.

தான் பிறந்த இராமேசுவரம் பகுதியிலேயே நாள்தோறும் தமிழக மீனவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதையும், அவர் பிறந்த மண்ணிலிருந்து கூப்பிடு தொலைவில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒரே ஆண்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட்தையும் கண்டு மனச்சான்று உருத்தாத மனிதர்தான் இந்த அப்துல் கலாம்.

இவரைப்போலவே அரசமைப்புச் சட்ட பதவிகளில் இருந்த நீதிபதிகள் வீ.ஆர்.கிருஷ்ணய்யரும், பகவதியும் மக்கள் உரிமைக்காக அவ்வப்போது குரல் கொடுக்கும்போது பதவிக் காலம் முடிந்தபிறகும் மனிதப் படுகொலைகளை கூட கண்டிக்காத இந்தியத் தேசியக் கல் நெஞ்சர் தான் கலாம்.

மராட்டிய மாநிலத்தின் ஜெய்தாபூரிலும், மேற்கு வங்கத்தின் அரிபூரிலும் அணு உலைக்கு ஆதரவாக படையெடுக்காத அப்துல் கலாம் தமிழினத்தை அழிக்கும் கூடங்குளம் அணு உலையை நிலை நிறுத்துவதற்காக மட்டும் கோடாரிக் காம்பாக ஓடோடி வந்து ஒரு தலைச்சார்பாக பேசி சீர் குலைக்க முயல்கிறார்.

அணு மின்சாரம் சிக்கனமானது, தூய்மையானது, தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு தேவையானது என்ற ஆட்சியாளர்களின் வாதங்களையே மீண்டும் அவர் பேசினார். இவற்றிற்கெல்லாம் அறிவியல் வழிப் பட்ட விடைகளைச் சொல்லி யாகிவிட்டது. (காண்க: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15, 2011 மற்றும் கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது-த.தே.பொ.க வெளியீடு).

அப்துல் கலாமைப் போன்ற அறிவு அதிகார வர்க்கத்தினரையும், அறிவியல் அடியாட்களையும் எதிர்கொண்டு அணுஉலைக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் முன்னேற வேண்டியது அவசியமாகும்.

-கி. வெங்கட்ராமன்

நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் நவம்பர்16_2011

கன்னங்கருத்த அன்னம் - தியடோர் பாஸ்கரன்

பறவைகளைப்பற்றிப் பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி அன்னத்தைப் பற்றியது. தமிழ்நாட்டில் இப்பறவை இருந்ததா? அடுத்த கேள்வி அன்னம் நீரையும் பாலையும் பிரிக்கும் திறன் கொண்டதாமே? தண்ணீரைப் பாலிலிருந்து பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள், இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே. இரண்டு, மூன்று முறை குஜராத்தின் கட்ச் பகுதிக்கு இப்பறவை வந்தது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அன்னம் என்றறியப்படும் Swan இந்தியாவிலே இருந்ததில்லை. ஆனால் ஐரோப்பிய ஓவிய மரபின் தாக்கம் கொண்ட ராஜா ரவிவர்மா தீட்டிய அன்னம் விடு தூது ஓவியத்தில் தமயந்தியுடன் ஓர் Swanஐத்தான் சித்தரித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் இந்தப் பறவை இருந்ததில்லை. பின் அன்னம் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படுவது எந்தப் பறவை? அன்னநடை என்ற சொற்றொடர் எவ்வாறு புழக்கத்தில் வந்தது? பட்டைத்தலை வாத்துதான் (Barred headed goose) அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் அனுமானம். கூந்தங்குளம் போன்ற பறவை சரணாலயங்களுக்கு குளிர்காலங்களில் திரள்திரளாக வந்து தங்கும் இப்பறவை தென்னிந்தியாவில் காணப்படும் வாத்து இனங்களிலேயே பெரியது. பட்டைத்தலை வாத்து உயிரியல் ரீதியாக ஸ்வான் குடும்பத்தைச் சேர்ந்தது.

திருச்சிக்கு அருகிலுள்ள தேவராயன் ஏரியிலும் நான் இந்த வாத்தைப் பார்த்திருக்கின்றேன். நீர்நிலைகளில் சுதந்திரமாய் வாழும் உண்மையான அன்னத்தை, ஸ்வானை, நான் முதலில் பார்த்தது ஹாலந்தில். எந்தவிதமான ஒலியையும் எழுப்பாத இந்தப் பறவைக்கு Mute Swan என்று பெயர். இது முழுவதும் பால் போன்ற வெண்மை நிறம். அதே போல் முழுவதும் கருமை நிறம் கொண்ட ஸ்வான் இனம் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழ்கின்றது. அந்நாடு ஒரு தீவாக இருப்பதால் அங்கு கங்காரு, பிளாடிபஸ் போன்ற வேறெங்கும் காண முடியாத உயிரினங்கள் உருவாகியுள்ளன. அதுபோன்ற தீவில் தனிமையில் உருவான ஒரு பறவைதான் இந்த வான்கோழி பெரிய கறுப்பு அன்னம்.

அண்மையில் சிட்னி நகருக்கு 200 கி. மீ. தூரத்தில் ஒரு காட்டுயிர் சரணாலயத்திற்குப் பறவைகளை அவதானிக்கப் போய் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். காலையில் சாப்பாடு பொட்டலம், குடிநீர் பாட்டில் இவைகளுடன் கடலோரமாக நடக்க ஆரம்பித்து, மூன்று கி.மீ. கடந்து ஒரு ஏரிக்கரையை அடைந்தோம். ஒருபுறம் பசிபிக் சமுத்திரம். மறுபுறம் ஒரு ஏரி. நடுவே ஒரு மணற்திட்டு. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், பனி உருகியபோது, கடல் நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிலத்தினுள் புகுந்து இந்த நீர்நிலை உருவானது என்று அறிவிப்பு பலகை கூறியது. இந்த ஏரியின் பெயர் உல்லபுல்லா என்றும் அது ஒரு பறவை சரணாலயம் என்றும் இந்த அறிவிப்பு தெரிவித்தது. இந்தப் பெயர் ஆஸ்திரேலியப் பழங்குடியினரான அபாரிஜினி மொழியில் ஒரு சொல். அவர்களுக்கு இந்த நீர்நிலை ஒரு புனித இடமாக இருந்திருக்கின்றது.

அந்த ஏரியில் ஒரு கண்கொள்ளாக் காட்சி. பரந்த அந்த நீர்ப்பரப்பில் முழுவதுமாக ஆயிரக்கணக்கான... ஆமாம்... ஆயிரக்கணக்கான கறுப்பு அன்னங்கள் இருந்தன. சில நீந்திக்கொண்டிருந்தன. சில கரையில் இருந்தன. இதற்கு முன் இம்மாதிரி மிகப் பெரிய பறவைக் கூட்டத்தை நான் ஒரு முறைதான் கண்டிருக்கின்றேன். கென்யா நாட்டிலுள்ள நக்கூரா ஏரியில் பூநாரைகள் கூட்டத்தைப் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளம்சிவப்பு வண்ணம்தான் தெரிந்தது.

அத்தனை பறவைகள் இருந்தும் அமைதியான சூழ்நிலை. அவ்வப்போது உஸ். . . உஸ். . . என்று அன்னம் எழுப்பும் ஒலி மட்டும் கேட்டது. பைனாகுலரில் பார்த்தபோது சில அன்னங்கள் குஞ்சுகளுடன் இருப்பது தெரிந்தது. கறுப்பு அன்னத்தின் குஞ்சுகள் பொரிக்கும்போது வெண்மையாக இருக்கும். வளர வளரத்தான் கறுப்பாக மாறும். பெரிதான பின்கூட, இறக்கையில் ஒரு வெண்மை பகுதி இருக்கும். ஆனால் பறக்கும்போது மட்டுமே இப்பகுதி தெரியும். அலகு பவளச்சிவப்பு. நீண்ட கழுத்தை S வடிவில் வளைத்து வைத்துக்கொண்டு இந்தப் பறவை, எந்த முயற்சியுமின்றி மிதப்பது போன்று நீந்திச் செல்வது ஒரு எழிலார்ந்த காட்சி. பறக்கும்போது மட்டும் கொம்பூதுவது போல் ஒற்றை ஒலியை எழுப்பும்.

உவர்ப்பு நீர் கொண்ட இந்த ஏரியில் நீருக்கடியில் வளரும் சிலவகை தாவரங்கள் செழித்து மிகுந்துள்ளன. இந்தச் செடிகளால் ஈர்க்கப்பட்டுத்தான், செடிகளை மட்டுமே உண்ணும் கறுப்பு அன்னங்கள் இங்கே வருகின்றன. தன் நீண்ட கழுத்தை நீருக்குள் விட்டு இரை தேடும். ஒரு முறை 12000 அன்னங்கள் இங்கே கூடியிருந்ததைக் கண்டதாகப் பறவை ஆர்வலர் குழு ஒன்று பதிவு செய்துள்ளது. உப்பு நீரில் மட்டுமே பல்கிப் பெருகும் சிற்றுயிர்களை இரையாகக் கொள்ளும் புள்ளினங்களும் இந்த நீர்நிலையைத் தேடி வருகின்றன. இந்தியாவில் காணக்கூடிய நாமக்கோழி, கோட்டுள்ளான், உப்புக்கொத்தி போன்ற பட்சிகளை இங்கே பார்க்க முடிந்தது.

உல்லபுல்லா ஏரிக்கருகில் ஒரு கோல்ஃப் திடலை அமைக்க இன்று முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிச் செய்தால், புல்லுக்குப் போடும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து இவை ஏரிக்குள் வந்து அங்கு வளரும் தாவரங்களையும், சிற்றுயிர்களையும் அழித்து விடும் என்று அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. எங்கு சென்றாலும் இந்தப் பிரச்சினைதான். காட்டுயிர் வாழிடங்களில் அதிகம் அழிக்கப்படுவது, எளிதாக சீரழிக்கப்படுவது நீர்நிலைகள்தாம். ஆஸ்திரேலியாவில் இம்மாதிரியான இயக்கங்களை ஆதரிக்கும் Green party ஐச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கே மக்களின் ஆதரவை உல்லபுல்லா பறவைகளுக்காகத் திரட்டிக்கொண்டிருக்கின்றார்.

கறுப்பு அன்னங்கள் ஆயுள் முழுவதும் ஒரே ஜோடியுடன் இணை சேர்கின்றன. அது மட்டுமல்ல, கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளை இரு பறவைகளுமே செய்கின்றன. வட இந்தியாவில் வயல்களில் வாழும் நம் நாட்டு சாரஸ் கொக்கும் (கிரௌஞ்ச பறவை) உயிருள்ள வரை ஒரே துணையுடன் வாழும்.

பாலியல் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலையற்ற பறவை உலகில் இது வெகு அரிதான நடத்தை. பெருவாரியான புள்ளினம் இணை சேர்ந்தபின் தன் வழியே போய்விடும். பெட்டை பறவைதான் அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.

வேறு சில பறவைகள் இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தன் ஜதையுடனிருக்கும். கூடு கட்டுவது, குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போன்ற வேலைகளை ஆணும், பெட்டையும் செய்யும். தூக்கணாங்குருவி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போனபின், இவ்விரு பறவைகளும் தத்தம் வழியே போய்விடும். அடுத்த இனப்பெருக்க காலத்தில் வேறு துணையைத் தேடி இணையும். வேடந்தாங்கலில் கூடுகட்டும் அன்றில் பறவை வாழ்நாள் முழுதும் ஒரு துணையுடனிருக்கும். "அன்றில் சிறு பறவை ஆண்பிரிய வாழாது. ஞாயிறு தான் வெம்மை செயில் நாண் மலர்க்கு வாழ்வுளதோ" என்று பாரதி எழுதி வைத்தார்.

கறுப்பு அன்னங்கள் உலகின் பல நாடுகளில் வீடுகளிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன. நான் இந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தது ஷில்லாங் நகரில். நகரின் நடுவேயுள்ள ஏரியில் இரு கறுப்பு அன்னங்கள் விடப்பட்டு இருந்தன. இறக்கை, இறகுகள் சிலவற்றைக் கத்தரித்து விட்டால் அவைகளால் பறக்க முடியாது. நீந்தவும், கரையில் நன்றாக நடக்கவும் முடியும். இந்த இரு பறவைகளும் இனப்பெருக்கம் செய்ய தீர்மானித்து ஏரிக்கரையருகே கூடு அமைக்க ஆரம்பித்தபோது அன்று மேகாலயா சீப் செக்ரட்டரியாக இருந்த ருஸ்தம்ஜி -தீவிர பறவை ஆர்வலர்- இதைக் கவனித்து விட்டார். இந்த அன்னத் தம்பதிக்கு 24 மணி போலீஸ் காவல் போட்டார். தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது ஏரியில் நின்று இந்தப் பறவைகளைக் கவனித்து விட்டுத்தான் போவார். சில வாரங்களில் நான்கு குஞ்சுகளுடன் இந்த இரு பறவைகளும் ஏரியில் வலம் வர ஆரம்பித்தபோது, இந்த அன்னக் குடும்பத்தைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் வர ஆரம்பித்தனர்.

நன்றி : உயிர்மை

வியாழன், நவம்பர் 24, 2011

அணு மின்சாரம் - ஊருக்கு உபதேசம்!

மனித இனத்தின் வளர்ச்சிக்கு சோஷலிச சிந்தனையின் வழிப்பட்ட அரசும், மின்சக்தியும் அவசியம் என்று மாமேதை லெனின் சோவியத் விடுதலையின்போது குறிப்பிட்டார். அந்நாளில் அவர் அணுமின்சக்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வளர்ச்சி (வீக்கம்) என்ற ஆசையால் உந்தப்படும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், அதில் உறைந்திருக்கும் பேரழிவைக் குறைத்து மதிப்பிடுவது கவலையளிக்கிறது.


கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தென்கிழக்கே, 104 கி.மீ. தொலைவில், கடலுக்கடியில் ஓர் எரிமலை இன்றும் கனன்று கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.÷உலக எரிமலை ஆய்வு நிறுவனத்தால் "0305-01' என்று குறிப்பிடப்படும் இந்த எரிமலை, 1757-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் வெடித்துச் சிதறியதாக ஆவணங்கள் உள்ளன. பூம்புகார் நகரம் கடல்கோளால் மூழ்கியது என்ற இலக்கியங்களின் கூற்றும், அகழ்வாய்வில் அதற்கான தடயங்கள் உள்ளதும் நாமறிந்ததுதான்.

அணுமின் நிலையங்களின் கதிர்வீச்சின் விளைவாக, தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சிக் குன்றல், வயிற்றுப்புண் எனப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வனைத்தையும் மறந்துவிட்டு மின்சாரத்தின் தேவையை மட்டுமே முன்னிலைப்படுத்தும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், தற்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைப் பற்றி பேசுவதே இல்லை.

இந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சக்தி நம் மக்களின் தேவைகளுக்கு, வேலை வாய்ப்புக்கு, உள்நாட்டு நுகர்வுக்கான உற்பத்திக்கு என முன்னுரிமை கொடுத்து திட்டமிடுவதை விடுத்து, ""ஏற்றுமதி பொருளாதார நோக்கில்' செலவிடப்படுகிறது என்ற உண்மையை விளக்க மறுக்கின்றனர்.

÷எடுத்துக்காட்டாக, சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இது 16 லட்சம் யூனிட் மின்சாரச் செலவில் உருவானது.

இதுபோலவே மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் பி.பி.ஒ. பன்னாட்டு நிறுவனங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், மால்ஸ் எனும் பேரரங்குகள், கேளிக்கை-விற்பனை அரங்குகள் என சென்னை பகுதியில் அமைந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கட்டடங்கள் நாளொன்றுக்கு பல லட்சம் யூனிட்டுகள் மின் சக்தியை நுகர்கின்றன.

இந்தியாவில் தனி மனித ஆண்டு மின் நுகர்வு 704 யூனிட்டுகள்.

மக்கள்தொகையில் 33 சதவிகிதம் பேர் மின் இணைப்பற்றவர்கள். இந்த நுகர்வு ஐரோப்பியர்களின் நுகர்வில் 11 சதவிகிதம் மட்டுமே. எனவே, இந்திய ஆட்சியாளர்கள் உரத்து கூச்சலிடும் மின்சக்தி தேவை என்பது யாருடைய நலன்களுக்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

÷நம் நாட்டில் 65 சதவிகிதம் மக்கள் வேளாண் துறையை சார்ந்துள்ளனர். தற்போது உலகில் உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருக்கும் சூழலில், வேளாண் உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் பெருக்கி, வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டும் செயல்பாடுகளில் அரசு முனைந்து செயல்பட்டு, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (ஜிடிபி) உயர்த்தவும், மக்களின் வறுமையைப் போக்கவும் முன்னுரிமை கொடுத்து மின்சக்தியை வழங்கும் போக்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

÷இந்தியா உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம். எரிசக்தி பயன்பாடு 4 சதவிகிதம்; அமெரிக்கா உலக மக்கள்தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. ஆனால், எரிசக்தி பயன்பாடு 24 சதவிகிதம்.

உலகின் மிகவும் பணக்கார நாடான, தொழில் நுட்பத்திறனில் முன்னோடியான, அமெரிக்கா, தனது தேவையில் 20 சதவிகிதம் அளவுக்கே அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஓர் அணுமின் நிலையத்தைக்கூடக் கட்டவில்லை. படிப்பறிவால் உலகின் முன்னோடியாக உள்ள அந்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க அமெரிக்க அரசினால் இயலவில்லை. அப்படி இருக்கும்போது, இங்கே அணுமின் நிலையம் பற்றிய அச்சம் அடிப்படை இல்லாதது என்று எப்படிக் கூற முடியும்?

÷இந்தியாவில் தற்போது அணுமின்சக்தி 2.70 சதவிகிதம் மட்டுமே. மின் சக்தியைக் கடத்துவதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்பு 25 சதவிகிதம் (உலகத்திறன் 9 சதவிகிதம் மட்டுமே).

இதை மேம்படுத்துவதன் மூலம் 16 சதவிகிதம் இழப்பு மிச்சப்படுத்தலாம். இதுபோல மின் திறன் மேம்பாடுகளின் மூலம் குறைந்தது 15 சதவிகிதம் மிச்சப்படுத்தலாம்.

உற்பத்திக்கான சக்தி பயன்பாட்டில் இந்தியாவின் திறன் ஜப்பானுடன் ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் மட்டுமே. இதை மேம்படுத்தினால் நாம் இருக்கின்ற மின்சக்தியை வைத்தே இரு மடங்கு உற்பத்தியை எட்ட முடியும்.

÷நீர்மின் நிலையங்கள் மூலம் 90,780 மெகாவாட் மின் உற்பத்திக்கான வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி 2 லட்சம் சதுர கி.மீ. இங்கு சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கலாம். நம் நாடு மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளதால் நீண்ட கடற்கரையையும், பல்வேறு நதிகள் நாட்டின் குறுக்கே ஓடுவதால் நீண்ட நீர்வழித்தடத்தையும் கொண்டுள்ளது.

இது நமக்கு இயற்கையில் கிடைத்துள்ள பெருவாய்ப்பாகும். நாளும் 60 லட்சம் டன் பொருள்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு தரைவழி மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு நீர்வழித்தடத்தைப் பயன்படுத்தினால் 86 சதவிகிதம் எரிசக்தி மிச்சப்படும்.

இது நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில், 14 சதவிகிதம் குறைய வழிகாணும். இது 21,000 மெகாவாட் மின்சக்திக்கு சமம். அதாவது, 2.73 லட்சம் கோடி ரூபாய் செலவினைத் தவிர்த்து, அதனை நீர்வழி கட்டமைப்புக்குப் பயன்படுத்தலாம். பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்படுவது குறையும்.

÷உலக மயமாக்கல் போர்வையில் இந்தியா மேலைநாடுகளின் சந்தைக் காடாக மாறிவருவதையும், இதை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சிகள் ஆதரிக்கிறது என்பதையும் விக்கி லீக்ஸ் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரும் 20 ஆண்டுகளில், 40 ஆயிரம் மெகாவாட் அணுமின் நிலையங்களை, 6.4 லட்சம் கோடி ரூபாயில் அமைக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்குத்தான் உதவும் என்பது தெளிவு.

÷அணுமின் நிலைய விபத்துகளில் சில உங்களது பார்வைக்கு:

4 மே 1987-ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர்.

10 செப்டம்பர் 1989-தாராப்பூர் அயோடின் கசிவு - கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.

3 பிப்ரவரி 1995 -கோட்டா ராஜஸ்தான் - ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டுகள் மூடல். செலவு 280 மில்லியன் டாலர்.

22 அக்டோபர் 2002 - கல்பாக்கம்-100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு செலவு 30 மில்லியன் டாலர்.

எல்லா உற்பத்தி நிகழ்வுகளிலும் விபத்து என்பது தாங்கக்கூடிய அழிவு என்பதை உள்ளடக்கியதாக உள்ளதுதான். ஆனால், பேரழிவு என்பது அணுமின் நிலையங்களில் நிகழ வாய்ப்புள்ளது. இது இயற்கை சீற்றங்களினால் மேலும் உயரும் என்பது உண்மை. இம் மின் நிலையங்களில் பெறப்படும் கழிவுப் பொருள்களின் அரை ஆயுள் காலம் என்பது 25,000 ஆண்டுகளாகும். இதைப் பாதுகாப்பது என்பது வருங்கால சமுதாயத்துக்கு நாம் விட்டுச்செல்லும் பேராபத்தல்லவா?

÷கடந்த 8 மாதங்களுக்கு முன் (மார்ச்-2011) ஜப்பானில் சுனாமி வழி அணுமின்நிலைய விபத்து புகுஷிமாவில் ஏற்பட்டது.

அதைப் பார்வையிட சமீபத்தில் இதழாளர்களை அவ்வரசு அனுமதித்துள்ளது. கதிர்வீச்சைக் குறைத்து, செயலிழக்க வைத்து இந்நிலையத்தை மூட முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது செய்தி.

அணுமின் நிலையத்தில் உற்பத்தி இலக்கை அடைய பல மணி நேர இயக்கத்துக்குப் பின்னரே இயலும். இதை அவசியத் தேவை எனக் குறிப்பர். இதன் இயக்கத்தை நிறுத்தவும் பல மணி நேரமாகும். எனவேதான் இந்நிலையத்தை அடி ஆதார நிலையம் என்று அழைப்பர்.

சுனாமியின்போது அணுஉலையை குளிர்விப்பது என்பது மிகவும் சிக்கலானது என்பது ஜப்பானில் புகுஷிமா அணுமின்நிலைய விபத்தின்போது தெளிவாகியது. இதன் கதிர்வீச்சு 200-300 கி.மீ. என்பது கல்பாக்கம்/கூடங்குளத்துக்கும் பொருந்தும்.

உலகமயமாக்கல், ஏற்றுமதி பொருளாதாரம் என்ற மாயையிலிருந்து விலகி, நமது மண்ணுக்கேற்ற பொருளாதாரம், பெருவாரியான மக்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி முறைக்கு முன்னுரிமை என்று திட்டமிட்டால், "அணுமின்சக்தி' இல்லாமலேயே நாம் சிறப்பாக வாழ முடியும்.

அணுமின் நிலையம் பற்றிய தேவையற்ற பயம்; யாராவது "ரிஸ்க்' எடுக்கத்தானே வேண்டும்; தெருவில் நடந்து போனால் விபத்து ஏற்படும் என்பதால் நடக்காமலா இருக்கிறோம்; அணுமின் சக்தி இல்லாமல் இந்தியா வளர்ச்சியடைய முடியாது - இப்படி எத்தனை எத்தனையோ காரணங்களைக் கூறுபவர்களில் ஒருவர்கூட தங்களையோ, தங்கள் குடும்பத்தினரையோ சின்ன அளவில்கூட "ரிஸ்க்' எடுக்க அனுமதிக்காதவர்கள் என்பதையும் மினரல் வாட்டர் அல்லாமல் சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக்கூடக் குடிக்காதவர்கள் என்பதையும் மறுக்க முடியுமா?

சின்ன அளவு "ரிஸ்க்' எடுக்கவே பயப்படுபவர்கள் வீட்டு முற்றத்தில் அணு உலையை நிறுவ ஆதரவுக் குரல் எழுப்புகிறார்கள் என்றால், இவர்களது நோக்கம் மக்களை வளப்படுத்துவது அல்ல. வியாபார மற்றும் தொழில் நிறுவனங்களை பலப்படுத்துவதுதான்!

-பொன். ஏழுமலை

(கட்டுரையாளர்: மின் பொறிஞர் - சமூக ஆர்வலர்)

நன்றி: தினமணி, 24-11-2011

திங்கள், நவம்பர் 21, 2011

கூடங்குளம் : ஆற்றலும் அபாயங்களும்

1980களின் பிற்பகுதியில் நடந்த கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிமுகாம் ஒன்று இத்தருணத்தில் என் நினைவுக்கு வருகிறது. நான் பணியில் சேர்ந்து அப்போது இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. நான் பயின்ற கல்லூரியில் பணியாற்றிய, நான் பெருமளவு மதிப்பு வைத்திருந்த பேராசிரியர் ஒருவர் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் நுழைய அனுமதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள், அபாயங்கள் மற்றும் அவற்றின் சுரண்டல்கள் குறித்தெல்லாம் அம்முகாமில் தெளிவாகவும் விரிவாகவும் பேசினார். சமூக உணர்வு மிக்க செயல்பாட்டாளர் அவர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அப்போது அதிக அளவில் இந்தியாவில் இடம் இல்லாதிருந்தது. ஆனால், ‘உலகமயமாதல்’ என்னும் பெயரில், அவை இங்கே கடைவிரிப்பதற்கு வசதிகள் செய்துகொடுப்பதில் ஆர்வமாயிருந்தது மத்திய அரசு. ‘யூனியன் கார்பைடு’ விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட கொடிய விளைவுகள் மக்களிடையே அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், நொந்துகொள்வதையும் புலம்புவதையும் தவிர வேறென்னதான் அவர்களால் செய்ய இயலும்? வாக் களித்த மக்களைக் கேட்டா கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன?

நான் சொல்ல வந்த கதை வேறு. மேலே குறிப்பிட்ட முகாம் உரையின் விவாத வேளையில் ‘கூடங்குளம்’ குறித்த சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். ரஷ்ய நாட்டு உதவியுடன் 1,000 மெகாவாட் திறன் கொண்ட வி. வி. இ. ஆர். வகை அணு உலைகள் இரண்டு நெல்லை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றான கூடங்குளத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. ‘மூன்று மைல் தீவு’ மற்றும் ‘செர்னோபில்’ அணு உலை விபத்துகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீண்டிருக்கவில்லை. ‘கூடங்குளம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்’ என்று பல்வேறு குரல்கள் பரவலாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. பலமுனைகளில் அறப் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன. நண்பர்கள் மனோ, குமாரசெல்வா ஆகியோருடன் சில போராட்டங்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். இவற்றின் மூலம் நான் பெற்ற வெளிச்சத்தில் சில கருத்துகளை மேலே குறிப்பிட்ட விவாதத்தில் பகிர்ந்துகொண்டேன். மூன்று மைல் தீவு, செர்னோபில் விபத்துகளைப் பற்றிச் சொல்லி, அணு உலை விபத்துகளின் கொடூரங்களை விளக்கி, கூடங்குளம் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும் என்று பேசினேன். அதற்குப் பேராசிரியர் அளித்த பதிலுரை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. அவரது பதிலின் சாரம் இது : ‘மின்சாரம் நமக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. பேருந்து, ரயில் மற்றும் விமான விபத்துகள் ஏற்படுகின்றன என்பதற்காக அவை வேண்டாம் என்று சொல்கின்றோமா?’ பன்னாட்டு நிறுவனங்கள் விஷயத்தில் மிகவும் அறிவுபூர்வமாகப் பேசியவர் கூடங்குளம் விஷயத்தில் பாமரத்தனமாகப் பதிலளித்தது பெரும் புதிராயிருந்தது. நான் மறுபடியும் எழுந்து அணு உலை விபத்துகளைப் பேருந்து, ரயில், விமான விபத்துகளுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று ஆவேசத்துடன் சொன்னேன். தேநீர் இடைவேளையின்போது, முகாம் அமைப்பாளர்களில் ஒருவரான வேறொரு பேராசிரியர் என்னிடம் “நீங்கள் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவர் எவ்வளவு பெரிய மனிதர்! அவர் பேசியதை ‘முட்டாள்தனமானது’ என்றால் என்ன அர்த்தம்? அவரை மறைமுகமாக ‘முட்டாள்’ என்று சொல்வதற்கு நிகரல்லவா அது?” என்று கேட்டு என்னைக் கடிந்துகொண்டார். “முட்டாள்தனத்தை முட்டாள்தனம் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?” என்று அவரிடம் கேட்டேன்

முட்டாள்தனமான இதே கருத்தையே நடுத்தர வகுப்பினர் பலரும் கொண்டிருக்கிறார்கள். அணுசக்தித் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் திரும்பத் திரும்ப இந்த முட்டாள்தனத்துக்கும் மேலான முட்டாள்தனமான விஷயங்களை, அறியாமையால் அல்ல, அறிந்தே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசு சொல்வதை அப்படியே ஒப்பிக்கும் நிலையில் வாழ்ந்துவரும் அவர்கள் மாபெரும் பொய்கள் என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் அப்படிப் பேசுகிறார்கள். அணுசக்தித் துறையிடமிருந்து ஊதியம் பெற்றுக்கொண்டு அதன் அபாயங்களை வெளிப்படையாகப் பேசமுடியுமா என்ன? ஆனால் அணு உலைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமோ அவர்களின் நெருங்கிய உறவினர்களிடமோ தனியாகப் பேசிப்பாருங்கள். ஆண்டு தோறும் எத்தனை பேர் கதிர்வீச்சின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற உண்மையைப் பலரும் பேசுவார்கள். அணு உலை விபத்து ஏற்படாத போதே இந்த நிலையென்றால் விபத்து ஏற்பட்டால் விளைவு எப்படியிருக்கும்?

மின்சாரத்துக்கோ வளர்ச்சித் திட்டங்களுக்கோ நாம் எதிரிகளல்ல. மின்சாரம்தான் அரசின் குறிக்கோள் என்றால் அதற்கு நிறைய மாற்று வழிமுறைகள் இருக்கின்றன. கூடங்குளம் திட்டத்தைவிடக் குறைந்த பணச்செலவில், குறைந்த கால அவகாசத்தில் நிறைவேற்றியிருக்கக் கூடிய மின் திட்டங்கள் குறித்து அரசுகள் இதுவரை பரிசீலித்துப் பார்த்ததாகக்கூடத் தெரியவில்லை. கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால் ரஷ்யாவுக்கு எந்தப் பயனும் இல்லை. இருப்பினும் ரஷ்யா இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன்? இந்தப் புதிருக்கான விடை அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அணு உலைகளிலிருந்து கிடைக்கும் அணுக்கழிவானது அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்.

மின்சாரம் குறித்த இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமக்குத் தேவையான மின்சாரம் நம்மிடம் உண்டு. அப்புறம் ஏன் மின்வெட்டு? நமது மின்சாரத்தில் பெரும்பகுதி நம் நாட்டில் தொடங்கப்படும் வெளிநாட்டுத் தொழிற்சாலைகளின் கிளைகளுக்குத் தடையின்றி வழங்கப்படுகிறது என்பது தான் நிஜம். புதிய தொழிற்சாலைகளுக்காக ஒப்பந்தம் போடப்படும்போது மின்சார விஷயத்தில் ‘தடையின்றி’ வழங்கப்படுவதற்கான உடன்பாடும் ஏற்படுகிறது. மக்களும் சிறு தொழிற்சாலைகளும் பயன்படுத்த வேண்டிய மின்சாரத்தின் கணிசமான பகுதி பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குப் போய்விடுகிறது. இதனால், ஆட்சியாளர்களின் வேண்டியவர்களுக்கு அத்தொழிற்சாலைகளின் பங்குகள் சலுகை விலையிலோ இலவசமாகவோ கிடைக்கின்றன. மின்வெட்டின் பின்னாலுள்ள கசப்பான உண்மை இது.

அணு உலை விபத்து ஏற்பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பலமுறை உலகம் உணர்ந்தாகிவிட்டது. பேருந்து, ரயில், விமான விபத்துகளைப் போன்றதல்ல அது. அணு உலையைச் சுற்றிப் பல கிலோ மீட்டர் பரப்பில் வாழும் மக்கள் எல்லோரையும் கொடூரமாகத்தாக்கும் அபாயம் கொண்டது அணு உலை விபத்து. மக்களின் வாழ்வாதாரங்களான மண்வளம், நீர்வளம் ஆகியவற்றையும் பலநூறு ஆண்டுகள் எவரும் பயன்படுத்த முடியாதபடி நாசமாக்கும் ஆற்றலும் அணு உலை விபத்துகளுக்கு உண்டு. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஃபுகுஷிமா அணு உலைக்கு ஏற்பட்ட கதியையும் அதனால் உண்டான கொடூர விளைவுகள் இவற்றையெல்லாம் காட்சி ஊட கங்கள் நம் கண்முன்னே கொண்டு வந்த பின்னரும் ‘கூடங்குளம் பாது காப்பானது; இது வெடிக்காது; இங்கு நிலநடுக்கம் வராது . . .’ என்றெல்லாம் மடத்தனமாகச் சிலர் இன்னும் பேசிக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. உலை வெடிக்கும்வரை ‘வெடிக்காது; பாதுகாப்பானது’ என்று கூறிக்கொண்டிருப்பார்கள். வெடித்த பிறகு?

யூனியன் கார்பைடு விபத்து தொடர்பான இழப்பீடு விஷயத்தில் அரசு நடந்துகொண்ட விதத்தையும் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் அவலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நிலநடுக்கங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமாய் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. 2004இல் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி உண்டாக்கிய பேரழிவு குறித்து இவர்களின் பதில் என்ன? இந்தோனேஷியாவில் உண்டான நிலநடுக்கத்தின் தாக்கம் எவ்வளவு குரூரமாக இங்கு வெளிப்பட்டது! இத்தனைக்கும் பிறகு, நிலநடுக்கமோ சுனாமியோ கூடங்குளத்தை நெருங்காது எனப் பிதற்றுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நிலநடுக்கமோ சுனாமியோ வந்தாலும் ஃபுகுஷிமா உலை போல் கூடங்குளம் ஆகிவிடாது என்பது சிலர் கருத்து.

‘கூடங்குளம் பாதுகாப்பானது’ என்று அறிக்கைவிடும் எவருமே ‘எங்கள் ஊரில் அணு உலை அமையுங்கள்’ என்று கோரவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. டிவி, ஃபிரிட்ஜ், ஏசி இவையெல்லாம் இடையூறின்றி இயங்க மின்சாரம் தேவைதான். நடுத்தட்டு மக்களுக்கு இதுதான் கவலை. ஆனால், பல்லாயிரம் மக்களைப் பிணமாக்கி, அவர்கள் சமாதி மேல் தயாரிக்கப்படும் மின்சாரம் தேவையா என்பதை எண்ணிப் பார்ப்பது ஒவ்வொருவரின் கடமை.

அணு உலைகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பதற்கு இது ஏற்ற தருணம் . இது கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினை. தன் கொள்கையை மறு பரிசீலனை செய்ய அரசை நிர்ப்பந்திக்கத் தக்க பிரச்சினை. சில ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாகிவிட்டதே; இனி எப்படி நிறுத்துவது? என்ற முனகல்களும் ஆங்காங்கே கேட்கின்றன. இவையும் மறைமுகமாக கூடங்குளத்தை ஆதரிக்கும் குரல்களே. பல நூறு கோடி ரூபாய் செலவழித்த பின் சேதுக் கால்வாய் திட்டத்தைக் கைவிடவில்லையா? ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களால் நாட்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படவில்லையா? சென்னையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு எடுக்கவில்லையா? இப்படியிருக்க, மக்கள் நலனுக்காகக் கூடங்குளம் திட்டத்தைக் கைவிடுவதில் என்ன தவறு? மேலும், கூடங்குளம் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே மக்கள் எதிர்த்த பின்னரும் அதையும் மீறி கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தது மக்களின் குற்றமல்லவே! வாக்களிப்பது மட்டும்தான் மக்களின் ஜனநாயகக் கடமையா? மக்கள் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்வோம் என்ற அரசியல் திமிருக்குப் பெயர்தான் மக்களாட்சியா? இந்த வினாக்களுக்கான விடைகள் இலகுவானவையாகத் தோன்றலாம். ஆனால் சிக்கலானவை.

o

கூடங்குளம் அணு உலைகளுக்கெதிரான மக்கள் போராட்டம் இப்போது தீவிரமடைந்திருக்கிறது. அதற்குக் காரணமாய் அமைந்தவை இரண்டு நிகழ்வுகள். ஒன்று ஜப்பான் ஃபுகுஷிமா அணு உலை விபத்து; இன்னொன்று நிர்வாகம் நடத்திய விபத்துத் தடுப்புச் சோதனை. ‘அபாய ஒலி கேட்டதும் அனைவரும் ஓடி வந்து வாகனத்தில் ஏற வேண்டும்; அணுக்கசிவு ஏற்பட்டால் கதவு, சன்னல்களைப் பூட்டிவிட்டு, முகத்தில் ஈரத் துணியைச் சுற்றிக்கொண்டு படுக்க வேண்டும்; விபத்தின் தாக்கம் அதிகமானால் உடனே இடம் பெயர வேண்டும்’ என்றெல்லாம் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அவர்களைச் சிந்திக்கவைத்தன. மேலும் கதிர்வீச்சுத் தாக்காதிருக்க ஒரு மாத்திரையும் மக்களுக்கு வழங்கப்பட்டதாம். மக்கள் மனத்தில் பல ஐயங்களையும் கிலியையும் ஏற்படுத்திய செயல் இது. கூடங்குளம் எமன் குறித்த அச்சம் அவர்களைக் கலவரப்படுத்தியதாலேயே போராட்டத்தில் குதித்தார்கள். 2011 செப்டம்பர் 11 முதல் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கானோர் உண்ணா விரதப் போரில் ஈடுபட்டார்கள். 127 பேர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். சாதி, இன, மத வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஒரே பந்தலின் கீழ் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் உண்ணாவிரதப் பந்தலில் இருந்தார்கள். கடைகளெவையும் திறக்கப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உறுதிமொழியும் தமிழக அமைச்சரவைத் தீர்மானமும் போராட்டக் குழுவினருக்குச் சற்று நம்பிக்கை தந்துவிடத் தற்காலிகமாகப் போராட்டம் நிறுத்தப்பட்டது. பிரதமரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் போராட்டக் குழுவினருக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் அரசியல் பிரமுகர்கள் சிலருடன் பிரதமரைச் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், பிரதமரின் நோக்கம் மக்கள் பிரச்சினைகளை உள்வாங்குவதல்ல, அரசின் முடிவைப் போராட்டக் குழுவினரிடம் திணிப்பதுவே. பிரதமரின் அறிக்கையும் மறைமுக மிரட்டலும் தமிழக முதல்வருக்கு பிரதமர் அனுப்பிய கடிதமும் போராடும் மக்களிடையே அதிருப்தியையும் கொந்தளிப்பையும் உருவாக்க, சில நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் போராட்டம் தொடர்கிறது. வேலையாட்களையும் விஞ்ஞானிகளையும் அணு வளாகத்தினுள் செல்லவிடாமல் தடுப்பது என்ற வகையில் போராட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத் தருணத்தில், அறிவுத்தளத்திலிருந்தும் சமூகத் தளத்திலிருந்தும் இப் போராட்டத்துக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பது நமது தார்மீகக் கடமையாகும்.

அணு ஆதரவாளர் ஒருவரிடம் பேசும்போது அவர் சொன்னார், ‘நடைபெற்றது வெறும் mock drill தான். அதற்காகப் போராட்டம் நடத்துவது அவசியமற்றது!’

நான் கேட்டேன், ‘கூடங்குளம் திட்டம் பாதுகாப்பானது, விபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லாதது எனில் எதற்காக mock drill நடத்த வேண்டும்?’

ஆம் விபத்துகளுக்கான எல்லாவித சாத்தியக் கூறுகளும் கொண்டதுதான் கூடங்குளம் அணுஉலையும். கடலையும் நிலத்தையும் நஞ்சாக்கிப் பலகொடிய நோய்களின் விளைச்சல் நிலமாகவும் மாறப் போகிறது கூடங்குளம்.

-ஜே. ஆர். வி. எட்வர்ட்

நன்றி: காலச்சுவடு, நவம்பர்-2011

கூடன்குளம் - காத்திருக்கும் அபாயம்

அணு உலை வெடித்துக் கண்ணுக்குப் புலப்படாத கதிர்கள் காற்றிலேறி வருகின்றன. அபாய ஒலியைக் கேட்ட பெரும் மக்கள்திரள் வெளியேறிக்கொண்டிருக்கிறது. கூட்டத்தினிடையே தத்தளிக்கும் குடும்பத்தினருகே காட்சி மாறுகிறது. அதன் தலைவன் புகையாக வடிவமடைந்து வெளியேறும் அக்கதிர்களைக் காண்கிறான். அதனிடமிருந்து தன் குழந்தைகளைக் காப்பதற்காக மேலாடையைக் களைந்து அக்கதிர்களை அகற்ற முயன்று இயலாமையில் திணறித் தோற்றுக்கொண்டிருக்கிறான். “அணுமின் நிலையம் பாதுகாப்பானதென்று சொன்னவர்கள் தூக்கிலிடப்படவில்லை என்றால் அவர்கள் ஒவ்வொருவரையும் நானே கொல்வேன்’’ எனத் தன் குழந்தைகளைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவியின் குரல் ஒலிக்கும் அகிரா குரசோவாவின் புகழ்பெற்ற திரைப்படமான ட்ரீம்ஸ்இன் காட்சியை இச்சூழலோடு ஒப்பிட்டுத் தெளிவு பெறலாம். இப்படத்தைக் குறிப்பிட்டு இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் தெரிவித்து மேடையிறங்குகிறார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த தோழர் ஜி. எஸ். தயாளன். இன்னும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தினமும் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனித உரிமைப் போராளி மேதா பட்கர் நம்பிக்கையளித்துச் சென்றிருக்கிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் தொல். திருமாவளவன் போன்றோர் நேரடியாகச் சென்று உற்சாகமளித்திருக்கிறார்கள். மத்திய அரசின் சார்பாக அமைச்சர் நாராயணசாமியும் தமிழக அமைச்சர்கள் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தென்மாவட்டம் வந்த முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் தான் மக்களின் பக்கம் இருப்பதாக உறுதி தந்திருக்கிறார். பாமகவும் இப் போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கிறது. சூழலியல் ஆர்வலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரின் தார்மீக ஆதரவும் இந்த முன்னெடுப்பை இன்னும் தீவிரமடையச் செய்திருக்கிறது.

சுப. உதயகுமார் போன்ற சூழலியல் ஆர்வலர்களின் தலைமையில், மிகச் சிலரால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் இன்று இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மக்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு குடையின் கீழ் கூடுவதான இப்பெரும் எழுச்சி உலகமயமாக்கத்தால் மழுங்கிப்போய்க்கொண்டிருக்கும் நம் சமூகச் சூழலில் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தின் தொடக்கம்.

1988இல் அன்றைய சோவியத் யூனியன் அதிபர் மிகையில் கார்ப்பசேவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையில் கூடன்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு இரண்டு வருடங்கள் முன்புதான் சோவியத் யூனியனின் ஓர் அங்கமாக இருந்த உக்ரைனில் செர்னோபில் என்னுமிடத்தில் அமைந்திருந்த RBMK தொழில்நுட்பம்கொண்ட அணு உலை விபத்துக்குள்ளானது. அது வரை நிகழ்ந்த விபத்துகளில் இவ் விபத்தே மிக மோசமான ஒன்றாகக் கருத்தப்பட்டது. கதிர் வீச்சுகளின் சீற்றம் உக்ரைனை மட்டுமின்றி அண்டை ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரரீதியாகவும் ரஷ்யா மோசமான பின்னடைவை எதிர்கொண்டது. ரஷ்ய விளைபொருள்களுக்கான இறக்குமதியைப் பெரும்பாலான நாடுகள் தடைசெய்தன. அதனால் ரஷ்யா தனது அடுத்த அணுமின் திட்டத்தைக் கைவிடும் நிலையிலிருந்தது. இந்தப் பின்ணனியில்தான் அன்றைக்கு ரஷ்யாவின் நட்பாக இருந்த இந்தியா இவ்வொப் பந்தத்திற்கு இசைந்ததெனச் சொல்லப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான காலகட்டத்திலிருந்து இதற்கான எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசு அதைப் பொருட்படுத்தவே இல்லை. பிறகு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. ராஜீவ் கொலைசெய்யப்பட்டார். இவை மட்டுமின்றி அமெரிக்காவின் ஆதரவின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு 1997இல் புதுப்பிக்கப்பட்டது. 2000இல் இத்திட்டத்தின் இறுதி வடிவம் வரையறுக்கப்பட்டுத் திட்ட மதிப்பீடு மூன்றரைக் கோடி அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டது.

கூடன்குளம் கட்டடப் பணிகள் தொடங்கிய காலத்தில்தான் எதிர்ப்புப் போராட்டம் சற்றுத் தீவிரமடைந்தது. உலக அளவிலான சூழலியல் ஆர்வலர்கள் பலர் கூடன்குளத்தில் முகாமிட்டு அணு உலையின் பாதக அம்சங்கள் குறித்துப் பேசி அம்மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்க முயன்றிருக்கிறார்கள். அதே வேளையில் அரசும் அப்பகுதி மக்களைக்கொண்டே குழுக்கள் அமைத்து இத்திட்டத்தால் அப் பகுதியினர் அடைக்கூடிய நன்மைகள் குறித்து வாக்குறுதியை அளித்திருக்கிறது. அரசு சொன்னதுபோல அப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அணுமின் நிலையம் அமைவதால் அங்கே புதிய தொழில்களுக்கு வாய்ப்பு உருவாகும்; வர்த்தகமும் வளர்ச்சிபெறும் என அம்மக்கள் நம்பத் தொடங்கினர். நில மதிப்பும் அதிகரித்தது. பனை, மீன்பிடித்தல், சிறு வியாபாரம் ஆகியவை தவிர வேறு மாற்றுத் தொழில்களற்ற அம்மக்கள் எழுந்து வந்துகொண்டிருந்த இந்த அணு உலைகளைத் தங்கள் வாழ்வை மீட்டெடுக்க வந்த புதிய கடவுளர் எனக் கற்பிதம் கொண்டனர்.

முதற்கட்டமாக அணு உலை அமைக்கும் கட்டடப் பணிகளுக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வட இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். உணவு, உறைவிடம் போன்ற அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சுற்றியிருந்த சிற்றூர்களையே சார்ந்திருக்க வேண்டியிருந்ததால் அம்மக்களின் நம்பிக்கைக்கேற்றார்போல் அவர்களின் அன்றாட வருவாய் அதிகரித்தது. இச் சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட எந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் அவர்கள் உள்வாங்கவில்லை. அவை யாவும் மக்கள் ஆதரவில்லாத தெருமுனைப் பிரச்சாரங்களாகவே இருந்தன. மக்கள் அவற்றை வேடிக்கை பார்த்தார்களன்றி அவற்றில் தங்கள் பங்கு பற்றிச் சிந்திக்கவே இல்லை. தொடக்க காலத்தில் இப்பிரச்சாரம் தன்னலம் சார்ந்த உத்தியாகவே இருந்திருக் கிறது. அதன் மூலம் திடீர் செல்வந் தர்களானவர் நிறையப் பேர் என்னும் ஆதாரமில்லாத தகவல் ஒன்று இப் பகுதியில் உலவுகிறது. இத்தகவலும் அவர்களது அவநம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அணுமின் திட்டத்திற்கு எதிராக உண்மையாகவே குரலெழுப்புபவர்கள்மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் உண்டு என்பது வருத்தமளிக்கக் கூடியது.

1989இல் தூத்துக்குடியில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தலைமையில் திரண்ட பெரும் மக்கள்திரள் இத் திட்டத்தைக் கைவிடக்கோரித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிறகு மீனவ அமைப்புகள் சில தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தியிருந்திருக்கின்றன. அன்றைய மாநில அரசும் மத்திய அரசும் ஒரு முதலாளித்துவ அரசாகச் சமரசங்களை மட்டுமே மேற்கொள்ள முயன்றிருக்கின்றன. இன்றைக்கும் அவர்களுக்கு மக்களின் நலன்மீது எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது தவிர வேறு எந்த அரசியல் தலைவர்களின் ஆதரவும் அன்றைக்கு இப்போராட்டத்திற்குக் கிடைக்கவில்லை. நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளும் இவ்விஷயத்தில் மௌனமே சாதித்திருக்கிறார்கள். சோவியத் யூனியனின் திட்டம் என்பதுதான் அதன் காரணமென்றால் நாம் இந்த இந்திய இடதுசாரிச் சித்தாந்தத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

அணுமின் நிலையப் பாதுகாப்பிற்காகவும் கட்டுமானப் பணிகளுக்காகவும் கூடன்குளத்தில் சிறிய துறைமுகமொன்று 2004இல் நிறுவப்பட்டது. முதற்கட்டமாக VVER 1000 அணு உலைகள் இரண்டை நிறுவும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி இத் திட்டம் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்விரண்டு அணு உலைகளில் ஒன்றை டிசம்பர் 2009இலும் மற்றொன்றை மார்ச் 2010இலும் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது தள்ளிவைக்கப்பட்டு ஒன்று 2011இன் இறுதியிலும் மற்றொன்று 2012இன் தொடக்கத்திலும் செயல்படத் தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் 2008இல் இன்னும் நான்கு அணுமின் உலைகள் நிறுவுவதற்கும் இந்திய அணுமின் சக்திக் கழகமும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. செயல்பட ஆயத்தமாகவிருக்கும் இவ்விரண்டு அணு உலைகளும் இந்தியாவில் இதுவரை நிறுவப்பட்டுள்ள அணு உலைகளில் அதிக மின் உற்பத்தி சக்தி (1000விகீ) கொண்டவை. நிறுவப்பட உள்ள நான்கு உலைகளும் அவற்றைவிட 200MW அதிக உற்பத்தித் திறன்கொண்டவை. உதாரணமாகக் கல்பாக்கத்தில் கனடா தொழில் நுட்பத்துடன் செயல்பட்டுவரும் PHWR அணு உலைகள் இரண்டும் 220MW உற்பத்தித் திறன் கொண்டவைதாம். அங்கே நிறுவும் பணியிலிருக்கும் மற்றொன்றின் உற்பத்தித் திறன் 500MW தான்.

கூடன்குளம் அணுமின் நிலைய உற்பத்தி மூலம் நாட்டின் மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தத் தீர்வு கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்தான் அணு மின் நிலையத்திற்கு எதிரான பிரச்சாரம் மக்கள் போராட்டமாக வலுப்பெற்றிருக்கிறது. இதற்கான முதற்காரணம் புகுஷிமா அணு உலை விபத்து. வளர்ந்த நாடான ஜப்பானின் அதிஉயர் பாதுகாப்பு கொண்ட அணு உலைகள் பாதிப்புக்குள்ளானது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுவரை பதிவானதிலேயே பெரும் வீச்சு கொண்ட சுனாமிப் பேரலையால் புகுஷிமா மின் நிலையத்தின் உலைகளைக் குளிர்விக்கும் எந்திரப் பகுதி பாதிப்படைந்தது. அணுக்கதிர் கசிந்து நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலந்தது. இன்றும் அதை அகற்ற ஜப்பான் அரசு போராடிக்கொண்டிருக்கிறது. நம்பகமிக்க ஜப்பான் அரசே கையறுநிலையில் அதன் மக்களிடமே உண்மையான பாதிப்பை மறைக்க முயன்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிப்பின் புள்ளி விவரங்கள் அறிவித்ததைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் என்பதே அவற்றின் ஊகம்.

அணு உலைகளைக் குளிர்விக்கவும் அதன் நீர்மக் கழிவை வெளியேற்றவும் உலைகள் கடற்பகுதியில் அல்லது வற்றாத ஜீவநதிக்கருகில் அமைவது அவசியமாகிறது. புகுஷிமா விபத்திற்குப் பிறகு ஜப்பான், இந்தியா போன்ற சுனாமி ஆபத்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அணு உலைகளை நிறுவுவதென்பது அபாயகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் கூடன்குளம் பிரச்சினையையும் அணுக வேண்டும். அணுமின் திட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் தங்கள் முன்னெடுப்பிற்கு ஆதரவான சான்றாக இந்த விபத்தையும் சுனாமி பாதிக்கக்கூடிய வாய்ப்பையும் மக்களிடம் கொண்டுசென்றனர். மேலும் இயல்பிலேயே அரசின் மீது நம்பிக்கை இல்லாத நம் மக்களின் மனநிலையும் இதற்குச் சாதகமாக அமைந்தது.

இதற்கு மற்றொரு காரணம் கூடன்குளத்தில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி. இந்தியாவிலுள்ள அணுமின் நிலையம் எல்லாவற்றிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வொத்திகை நிகழ்ச்சிகள் அங்குள்ள மக்களுக்கு இயல்பான ஒன்று. கூடன்குளத்திலும் அந்நிகழ்ச்சிகளை முறைப்படுத்த அணுமின் நிலைய அதிகாரிகள் மக்களைச் சந்தித்து பாதுகாப்பு ஒத்திகை குறித்து விளக்கமளித்திருக்கிறார்கள். ஓர் அபாய ஒலி அறிவிப்பிற்குப் பிறகு மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு நகர்த்தப்பட்டுச் சில மணி நேரம் கழித்து அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்ப வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒத்திகைகளை இதுவரை சந்தித்திராத அம்மக்களுக்கு இது பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆபத்து நம் அருகே வந்துகொண்டிருப்பதன் சமிக்ஞையாக இதை உணர்ந்த அவர்கள் இப்போராட்டத்தில் தீவிரத்துடன் பங்குகொள்ளத் தொடங்கிவிட்டனர். மேலும் உலையின் நீர்மக் கழிவைக் கடலில் கலப்பதால் உருவாகும் மீன்வளப் பாதிப்பு, ஒப்பந்த நிறுவனங்களின் தரமின்மை இவை போன்று சொல்லப்படும் மற்ற காரணங்களும் இப்போராட்டத்திற்கு வலுசேர்த்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான எவ்வித விபத்தும் நிகழாமல் இந்தியாவில் பல அணு உலைகள் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அணு உலைகளின் நீர்ம, வாயுக் கழிவுகள் உலக அணு சக்திக் கழகத்தின் முறைப்படி சேதம் விளைவிக்கக்கூடிய கூறுகளைக் களைந்து தினந்தோறும் வெளியேற்றிக்கொண்டிருந்தாலும் அதனால் பெரும் பாதிப்பு இதுவரை எதுவும் நிகழவில்லை. இதன் திடக் கழிவு பற்றி இங்கே உலவிக்கொண்டிருக்கும் தகவல் வெறும் வதந்திதான். ஓர் அணுமின் நிலையத்தின் திடக் கழிவை அதன் ஆயுட்காலத்தில் சில முறைகள்தாம் - இருமுறையோ மும்முறையோதான் - வெளியேற்றுவார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மின்னாற்றல் மிக அவசியம். அதற்கு அணுமின் திட்டமே சிறந்த வழி. மேலும் இந்த நவீன அறிவியல் என்பதே இயற்கைக்கு எதிரானதுதான். ஆனால் நாம் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டோம். அதன் துணையின்றி இனி எதுவும் சாத்தியமல்ல எனும்போது நாம் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அணு மின் திட்டம் தவிர்த்த மற்ற திட்டங்களும் இயற்கைக்கு எதிரானவைதாம். சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடியவையும் பக்க விளைவுகளுடையவையும்தாம். மேலும் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் சொல்வது போலக் கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ள உலைகள் செர்னோபில் விபத்திற்குப் பிறகு ரஷ்யாவால் கைவிடப்பட்ட அணு உலைகள் அல்ல. அது RBMK தொழில்நுட்பம் கொண்டது. இது VVER தொழில்நுட்பம் கொண்டது. இவை எல்லாம் திட்ட ஆதரவாளர்களின் கருத்துகள்.

ஆனால் குளிர்விக்கும் முறையில் மட்டும்தான் சிறு வேறுபாடு உள்ளது மற்றபடி தொழில்நுட்பம் அதேதான் என்பது அதன் எதிர்ப்பாளர்களின் கருத்து.

அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரிடம் இதை எதிர்ப்பதற்கான திடமான காரணம் ஒன்று இருக்கிறது. அது அணுமின் நிலையங்களின் அணு ஆயுத உற்பத்தி. இதை யாரும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக 1998இல் இந்தியா நிகழ்த்திய பொக்ரான் சோனைக்கான அணு ஆயுதம் கல்பாக்கத்தில்தான் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதை வதந்தி என முற்றிலும் மறுக்க முடியாது. எனவே இத்திட்ட எதிர்ப்பைப் பழமைச் சித்தாந்தத்தின் தொடர்ச்சியெனப் பொதுச் சமூகப் பார்வையிலிருந்து அணுகுவது முறையற்றது. காலதாமதமானாலும் மக்களின் இவ்விழிப்புணர்வை வரவேற்க வேண்டுமே தவிர விமர்சித்துப் புறந் தள்ளுவது ஆரோக்கியமானதல்ல.

கூடன்குளம் அணுமின் நிலையம் செப்டம்பர் 28ஆம் தேதியில் செயலாற்றத் தொடங்குமென அதன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அறிவித்தார். அதைத் தொடர்ந்து எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி செப்டம்பர் 11இல் நூற்றுக்கும் மேற்பட்டோர், அங்கே திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர் போன்ற ஒருசாராரின் பங்களிப்புடன் தொடங்கிப் பின்னர் எல்லாத் தரப்பு மக்களும் இவ் வெதிர்ப்பு நிலைப் போராட்டத்திற்குள் ஒருங்கிணைந்தனர். கிறித்துவ அமைப்புகளும் இப்பகுதியில் பெரும்பான்மைச் சமூகத்தின் குருவான அய்யா வைகுண்டரின் வழிவந்த பாலபிரஜாபதியும் இதற்கு ஆதரவளித்ததோடு இப்போராட்டப் பந்தலுக்கு வந்து அவர்களை ஊக்குவித்ததும் இந்த ஒன்றிணைவிற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஐந்துநாள் தொடர் உண்ணா விரதத்திற்குப் பிறகுதான் தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு அமைச்சர்கள் பி. செந்தூர்பாண்டியன், சி. த. செல்லப்பாண்டியன், எஸ். பி. சண்முகநாதன் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை இடிந்த கரைக்கு அனுப்பிவைத்தது. ராதாபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டப் பிரநிதிகளுக்கும் இக் குழுவுக்கும் இடையிலான இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றைத் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்ற வேண்டுமென்பது போராட்டப் பிரதிநிதிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு மாற்றாக, மக்களின் இக்குழப்பங்களைத் தீர்க்கும்வரை அணுமின் திட்டப் பணிகளை நிறுத்துவைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் சாதுர்யமான தீர்மானம் ஒன்றைத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்குப் பிறகு உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இப்பிரச்சினை பற்றிய முதல்வர் ஜெயலலிதாவின் கடிதத்திற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சர் நாராயணசாமியை இடிந்தகரைக்கு அனுப்பிவைத்தார். ராதாபுரத்தில் தன்னைச் சந்திக்க வருமாறு நாராயணசாமி விடுத்த வேண்டுகோளைப் போராட்டக் குழு நிராகரித்து அவரை இடிந்தகரை போராட்டப் பந்தலுக்கு வரச் சொல்லி போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. களத்திற்கே சென்று திடமிக்க அம்மக்களைச் சந்தித்த அவர் தோல்வியுடன்தான் திரும்பியிருக்கிறார்.

பிரதமரைச் சந்திப்பதற்காகத் தமிழக அரசு அமைத்த குழுவின் உறுப்பினர்கள்மீதும் போராட்டக் குழுவினருக்கு அதிருப்தி ஏற்பட்டது. தொடக்கத்திலிருந்தே முன்னெடுப்பிற்குப் பெரும் ஆதரவு தெரிவித்து வரும் தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனின் பெயர் நீக்கப்பட்டு போராட்ட முன்னெடுப்பைக் கண்டுகொள்ளாமலிருக்கும் நடிகர் சரத்குமார் பெயர் சேர்க்கப்பட்டதை அவர்கள் எதிர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பாமக போன்ற கட்சிகளுக்கு இடமளிக்காமல் எதிர்நிலை கொண்டுள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்த்திருப்பது தங்கள் போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசுக்கு அறிவுருத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு தமிழக அரசின் ஆலோசனையின்படி அக்டோபர் ஏழாம் தேதி பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்தின் முஸ்தீபுகள் எல்லாம் சமரச முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன. பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதை அடுத்து அறிவித்தபடி அக்டோபர் ஒன்பதாம் தேதி இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். எவ்வித இடையூறுமின்றி இன்னும் சொன்னால் முன்பைவிடத் தீவிரமாக மக்கள் அதில் ஈடுபட்டனர். இச்சமயத்தில் அரசியல் கட்சிகளும் அரசும் உள்ளாட்சித் தேர்தலில் கவனம்கொண்டிருந்ததால் இப்பிரச்சினை குறித்து தீர்க்கமான முடிவை எடுக்கத் துணியவில்லை. மக்கள் தங்கள் அடுத்த போராட்ட வடிவமான முற்றுகைப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். உண்ணாவிரதம் தொடங்கிய நான்காம் நாள் கிழக்குக் கடற்கரைச் சாலையை மறித்துக் கூடன்குளம் பணிக்குச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பினர். முற்றுகை தீவிரமடைந்ததை அடுத்து அணுமின் நிலையத்தின் முக்கியப் பொறியாளர்கள், விஞ் ஞானிகள் ஆகிய யாரும் பணிக்கு வர முடியாதபடி பதற்றம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் போராட்டத்திற்கு எதிராக எந்நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த காவல் துறையினரின் வன்முறையும் உள்ளாட்சித் தேர்தலும்தான் இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு எல்லோரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கேதுவாகப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக சுப. உதயகுமார் தலைமையில் கூடிய ஆலோசனைக் குழு முடிவெடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கான ஊடகப் பங்களிப்பு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது ஜெயலலிதாவின் சூளுரைகள் தவிர்த்து இம்மக்கள் போராட்டம் பற்றி விரிவான செய்திகள் எவற்றிலும் இல்லை. திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் செய்தித்தாள்களில் அது மாவட்டச் செய்தியாகச் சுருக்கப்படுகிறது. இன்னும் சில ஊட கங்கள் முரணான தகவல்களுடன் இதைச் சிறுமைப்படுத்துகின்றன. இப்போராட்டம்மீதான அரசியல்வாதிகளின் கவனமும் மேலோட்டமாகவே உள்ளது. நாராயணசாமி இம்முற்றுகைப் போராட்டத்தை வன்முறை என எச்சரிக்கிறார். கிழக்கிந்திய மாநிலங்களில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் செயலுக்குப் பெயர்தான் வன்முறை என்பதை அவருக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரின் நிலைப்பாடும் இவ்விஷயத்தில் ஒன்றுதான். ஜெயலலிதா மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென ஓர் உயர்ந்த தொனியில் மத்திய அரசை எச்சரிக்கிறார். கருணாநிதி அதையே தாழ்ந்த குரலில் சொல்லிவருகிறார். தா. பாண்டியனும் தங்கபாலுவும் இதையேதான் வேறு குரல்களில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போராட்டம் மகத்தான மக்கள் போராட்டமாக மாறியிருப்பதே நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதுவே அதன் வெற்றியை உறுதிசெய்வதாகவும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான எளிய மக்கள் அன்றாடப் பணிகளை விட்டு விட்டுத் தங்கள் சிறுசேமிப்பைக் கொண்டு தங்களுக்காகத் தாங்களே போராடிவருகிறார்கள். இதற்குப் பின்னால் எந்த ஆடம்பர அரசியலும் நிறுவனங்களின் முதலீடும் இல்லை. ஊழல் ஒன்று மட்டுமே நாட்டின் தேசியப் பிரச்சினை அல்ல. இம்மாதிரியான போராட்டங்களில் நாடு தழுவிய ஒத்துழைப்பைத் தர எல்லாத் தரப்பினரும் முன்வருவது போராட்டத்திற்கு இன்னும் வலு சேர்க்கும். அடையாள அரசியலை முன்னிறுத்திப் போராடும் இளைஞர் அமைப்புகள் இப்போராட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போராட்டத்தை அப்பகுதிக்கு மட்டுமானதாகச் சுருக்கிவிட முடியாது. அரசியல்வாதிகளை மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரையும் இதற்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும்படியான முறைகளைப் போராட்டக்குழு முன்னெடுக்க வேண்டும்.

அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகையே திரும்பத் திரும்பப் பெரிதாகச் சொல்லப்பட்டுவருகிறது. தொடக்கத்திலிருந்து சூழலியல் ஆர்வலர்கள் அணுமின் திட்டத்தை எதிர்த்துக்கொண்டிருந்தாலும் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அது தீவிரமடைந்து பல நாடுகள் தங்கள் புதிய அணுமின் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகளை வேறு மின் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்தால் கொஞ்சம் இழப்பை ஈடுசெய்யலாம். அரசியல் தலைவர் ஒருவரின் தனிப்பட்ட நலனுக்காக நாடு ஓர் இடைத்தேர்தலைச் சந்தித்து, பல்லாயிரம் கோடி நஷ்டமாகியிருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் எதிர்பாராத இழப்புகளும் நேர்கின்றன. இது போன்ற தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக அரசு இதை எடுத்துக்கொண்டு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். மேலும் மக்களுக்கான திட்டம் என்பது மக்கள் ஆதரவின்றிச் சாத்தியமல்ல.

யுரேனியம் நிரப்பப்பட்ட உலை ஒன்று செயலாற்ற ஆயத்தமாகியிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் வந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு 18ஆம் தேதியிலிருந்து மூன்றாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. முற்றுகைப் போராட்டத்திற்கஞ்சி தங்கள் பாதுகாப்பிற்காக மத்திய விரைவுப் படையினரை அனுப்புமாறு அணுமின் நிலைய அதிகாரிகள் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது. இக்கோரிக்கை ஏற்கப்படுவதும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக அரசின் நிலைப்பாடும் தாம் இப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீவிரத்தைத் தீர்மானிக்கும். ஆனால் காணும் எவர் ஒருவரையும் கிளர்ந்தெழச் செய்யும் உணர்ச்சி மிக்க இம்மக்கள் போராட்டத்தின் அலைகள் எளிதில் ஓய்ந்துவிடக் கூடியவையுமல்ல.

-மண்குதிரை

நன்றி: காலச்சுவடு, நவம்பர்-2011

புதன், நவம்பர் 16, 2011

அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்!

அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,

பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.


அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.

கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?

அந்த அறிக்கையில் முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி செய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்?

இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது.

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன?

அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதை அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான் முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.

இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால்கூட 2030-ம் ஆண்டுக்குள் 4 லட்சம் மெகாவாட்தான் உற்பத்தி செய்ய இயலும். ஆனாலும் இந்த 4 லட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.

இந்தியாவில் அணு ஆற்றல் துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கான அமைப்பு, நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவு மின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்.

கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல் 2015-க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை.

இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

யுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா? அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?

கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200 கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.

1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்கு இப்போது திடீரென ஏற்படுவானேன்?

22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச் சரிக்கட்டத்தானே இந்தப் "புரா' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது?

அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.

ஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும், கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?

இனி தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள்.

உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில் 50 % மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?

ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

காவிரியில் பெருகிவரும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தை அளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும்.

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதை நீங்கள் ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

-பழ. நெடுமாறன்

நன்றி: தினமணி


(அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானி என்று பழ. நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவர் விமானத் தொழில்நுட்பம் படித்தவர். ஏவுகணைத்துறையில் பணியாற்றியவர் - பூவுலகின் நண்பர்கள்)

திங்கள், நவம்பர் 14, 2011

கூடங்குளம் அணுஉலையை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? சுவ்ரத் ராஜு, எம்.வி.ரமணா

அணு இழப்பீட்டு மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பொருளாதார நலன்களை 1 சதவிகிதம்கூட விட்டுத்தரத் தயாராக அணுஉலை நிறுவனங்கள் இல்லாத நிலையில், உள்ளூர் மக்கள் மட்டும் ஏன் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ள அணுஉலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்?

கூடங்குளம அணுஉலையை செயல்படுத்தத் தொடங்குவதற்கு எதிராக உள்ளூர் மக்களின் உறுதியான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், அணுசக்தி துறையின் அறிக்கைகள் மூர்க்கமான நிலைக்கு மாற ஆரம்பித்துள்ளன. இந்த போராட்டங்களுக்குப் பின்னால் அந்நிய சக்தி இருக்கிறது என்று இந்திய அணுசக்திக் கழகத் (என்.பி.சி.ஐ.எல்.) தலைவர் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமோ, இந்த அணுஉலைகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என்று உறுதி தந்தது மட்டுமில்லாமல், "தி இந்து" நாளிதழில் (சிறப்புக் கட்டுரை, நவம்பர் 6) எழுதியிருந்த கட்டுரையில் அணுசக்திதான் இந்தியா நவீனமயமாவதற்கும், வளம் பெறுவதற்குமான வழி என்று வாதிட்டு இருந்தார்.

இது போன்ற வாதங்கள் பல பத்தாண்டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, ஜவகர்லால் நேரு, "அணு புரட்சி"யை தொழிற்புரட்சியுடன் ஒப்பிட்டு, "ஒன்று நீங்கள் அதனுடன் சேர்ந்து சென்றாக வேண்டும், இல்லையென்றால்... மற்றவர்கள் முன்னேறி விடுவார்கள். அதன் பிறகு நாம் படிப்படியாக பின்னோக்கி செல்ல வேண்டியதுதான்." என்று கூறியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அணுசக்தி சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் காப்பாற்றப் படவில்லை. அணுசக்தி சார்ந்து முன்னேறலாம், பொருளாதார வெற்றி கிடைக்கும் என்பதெல்லாம் தேய்ந்துபோன, வரலாற்று ரீதியில் தவறான விஷயங்களாகிவிட்டன.


உற்பத்தி இலக்குகளும் உண்மை நிலையும்

மின்உற்பத்தியில் அணுசக்தி முன்னணி வகிக்கும் என்ற கனவுடன் அணுசக்தித் துறை இதுவரை வெளியிட்ட பல்வேறு பிரகடனங்களை வைத்து பார்க்கும்போது, அணுசக்தி மீது வைக்கப்படும் அதீத நம்பிக்கை பொய்த்துப் போனதாகத்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு 2000 ஆம் ஆண்டுக்குள் 43,500 மெகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று 1970களில் கூறியது. ஆனால் 2,720 மெகாவாட்தான் உண்மையில் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு 2.8 சதவிகிதம் மட்டுமே. உற்பத்தி செய்யப்பட்ட இந்த கொஞ்ச மின்சாரத்துக்கு செய்த செலவோ மலையளவு. இவ்வளவுக்கும் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகளின் முழுமையான கொள்கைரீதியிலான ஆதரவு, நிதி ஆதரவு ஆகியவற்றைத் தாண்டி, அணுசக்தித் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

தோரியம் எரிபொருளாவது பற்றி...

தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் விஷயத்தில், அணுசக்தித் துறை செய்த பிரகடனங்களுக்கும் அது எட்டிய இலக்குக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியது. 1970ஆம் ஆண்டில் "தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் சரிவை சந்தித்துவிட்டது", என்றாலும் அடுத்த 15 ஆண்டுகளில் தோரியத்தை எரிபொருளாகக் கொண்ட அணுஉலைகள் கட்டப்படும என்று அணுசக்தி கமிஷன் அப்போது கூறியிருந்தது. அப்படி கூறப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட, தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணுஉலைகள் இதுவரை கட்டப்படவேயில்லை. எனவே, தோரியம் சுழற்சி தொடர்பான பல்வேறு தீவிரமான தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

யுரேனியத்தைப் போல தோரியத்தை அணுஉலைக்கான நேரடி எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது. முதலில் ஒரு அணுஉலையை கட்டி யுரேனியத்தின் ஐசோடோப்பான யுரேனியம் 233யை உருவாக்க வேண்டும். யுரேனியம் 233 ஐசோடோப்புக்கு மூன்று முக்கிய பண்புகள் உண்டு. முதலாவதாக, அது அணுகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அணுகுண்டுகளில் வைப்பதற்கான யுரேனியம், புளூடோனியத்தை உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவதாக, யுரேனியம் 233 ஐசோடோப்பை உற்பத்தி செய்யும்போதே, யுரேனியம் 232 ஐசோடோப்பும் கூடவே உருவாகிவிடுகிறது. அது சக்தி வாய்ந்த காமா கதிர்களை வெளியிடுகிறது. அதன் காரணமாகத்தான் யுரேனியம் 232யை அணுகுண்டுகளில் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பண்பு இன்னும் பிரச்சினைக்குரியது. ஏனென்றால், யுரேனியம் 233 ஐசோடோப்பை அணுஉலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது உருவாகும் புதிய ஐசோடோப்பு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், செலவு மிகுந்த ஒன்றாகவும் உள்ளது.

எனவே, அணுகுண்டில் தோரியத்தை பயன்படுத்த முடியாத அதே காரணங்கள்தான், தோரியத்தைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குவதிலும் மிகப்பெரிய தடங்கல்களாக இருக்கின்றன. மூன்றாவதாக, அணுசக்தித் துறையின் திட்டப்படி, யுரேனியம் 233யை மொத்தமாக உற்பத்தி செய்வதற்கான வேக அணுஉலைகள் புளூடோனியத்தை எரிபொருளாகக் கொண்டவை. கனநீர் அணுஉலைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது, பயங்கரமான விபத்துகள் ஏற்படும் ஆபத்தை இவை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கின்றன. மேலும் மின் உற்பத்தியும் மிக அதிக பொருள் செலவில் நடைபெறுகிறது. பெரும்பாலான நாடுகள் மேலே கூறப்பட்டவற்றில் சில அல்லது ஒட்டுமொத்த காரணங்களுக்காக அணுஉலையில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டன. ஆனால், இந்தியா மட்டுமே தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கிறது, காரணம் இந்த ஓட்டத்தில் இந்தியா மட்டுமே ஓடுகிறது என்பதுதான்.

சமீப ஆண்டுகளாக, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தால் அணுசக்தியின் எதிர்காலம் தொடர்பான கனவுகள் மேலும் பெரிதாக பேசப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மன்மோகன் சிங் அரசின், மேற்கத்திய நாடுகள் சார்ந்த வெளியுறவுக் கொள்கைச் சாய்வுக்கான அடையாளம். ஆனால் அமெரிக்காவுக்கோ, புஷ் அரசில் முக்கிய ஆலோசகராக இருந்த ஆஷ்லே டெல்லிஸின் வார்த்தைகளில் கூறுவதானால், "இந்தியாவுடன் முழுமையான, பலன்தரக் கூடிய ஒரு ஒப்பந்தமே". மேலும் இந்த ஒப்பந்தம் இரண்டு சமமான தகுதியுடைய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதால், விரைவிலேயே அமெரிக்காவின் ராஜதந்திர குறிக்கோள்களுக்கு சார்பான நிலையை இந்தியா எடுத்தது. எடுத்துக்காட்டுக்கு, சர்வதேச அணு சக்தி ஏஜென்சியில் (ஐ.ஏ.இ.ஏ.)வில் ஈரானுக்கு எதிராக இந்தியா இரண்டு முறை வாக்களித்தது. இதன் காரணமாக இந்தியாவின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக மாற இருந்த, ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா எரிவாயுக் குழாய் திட்டம் அடியோடு கைவிடப்பட்டது.

அமெரிக்காவுடனான கூட்டுறவை வலுப்படுத்துவதற்காக மன்மோகன் சிங் அரசு என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அணுசக்தித் துறையின் முன்னாள் தலைவரான அனில் ககோத்கர், மராத்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், பல கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்ட அணுஉலைகளை நாம் கட்டாயம் இறக்குமதி செய்தாக வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகள், அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தக நலன்களையும் நாம் மனதில் கொண்டாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இறக்குமதிகளும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமும், "நவீன கால ஏகாதிபத்திய அடிமைத்தன" நடைமுறையை துரிதப்படுத்தும்.

அக்கறைகளை பொருட்படுத்த வேண்டாமா?

அணுசக்தி விரிவாக்கத்தில்தான் "அந்நிய சக்தி" செயல்படுகிறது, புதிய அணுலைகள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நடத்தப்படும் போராட்டங்களில் அந்நிய சக்தி இல்லை என்பதே உண்மை. இந்த போராட்டங்களுக்குப் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கிறது என்று என்.பி.சி.ஐ.எல்லின் திட்டமிட்ட வாதம், உள்ளூர் மக்களின் உண்மையான அச்சத்தை, அக்கறைகளை புறந்தள்ளுவதாக இருக்கிறது. அவர்களது இந்த வாதம் கூடங்குளத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே அதை எதிர்த்து வரும் கிராம மக்கள், நம்பிக்கை இழந்து தீவிர போராட்டத்தில் இறங்குவதற்கு முன் வரை புறக்கணிக்கப்பட்டார்கள் அல்லது கேலி செய்யப்பட்டார்கள். கூடங்குளம் அணுஉலைத் திட்டத்துக்குச் செலவு செய்யப்பட்ட மக்கள் வரிப்பணம் உள்ளூர் மக்களின் விட்டுக்கொடுக்காத தன்மையால் வீணாகிறது என்பதில் உண்மையில்லை, அவர்களது அச்சத்துக்கு பதில் அளிக்க மத்திய அரசு இவ்வளவு காலம் மறுத்து வந்ததே முக்கிய காரணம்.

தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவதற்கு உள்ளூர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. அணுஉலை விபத்துகள் மக்கள் உடல்நலனில் மிக பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஃபுகுஷிமா விபத்தால் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி நீண்டகாலத்தில்தான் மதிப்பிட முடியும். ஆனால் அதில் பெரும்பாலும் மோசமான விளைவுகளாகவே இருக்கும். அணுசக்திக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், செர்னோபிலில் 57 பேர் மட்டுமே நேரடியாக இறந்திருக்கிறார்கள் என்ற அபத்தமான, தவறான கருத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் அந்த விபத்து காரணமாக உலக அளவில் 9,000க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இன்னும் பலருக்கு புற்றுநோய் இருக்கலாம், ஆனால் அது குணமாகிவிடும் என்று யூகித்துக் கொள்ளப்பட்டிருக்கும். செர்னோபிலில் ஐயோடின் 131 ஐசோடோப்பு கதிரியக்கத்துக்கு உள்ளான குழந்தைகளுக்கு இப்போதும்கூட தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக, அமெரிக்க புற்றுநோய் நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இன்னும் சில நோய்கூறியல் வல்லுநர்கள் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்குமென மதிப்பிடுகிறார்கள்.

இன்றைக்கும்கூட, செர்னோபிலைச் சுற்றியுள்ள 10,000 சதுர கிலோ மீட்டர் பகுதி கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், அந்தப் பகுதி சீசியம் 137 கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டதும், அந்த தனிமத்தின் கதிரியக்க அரைஆயுள்காலம் 30 ஆண்டுகள் என்பதுமே இதற்குக் காரணம். ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த வளிமண்டல அறிவியலாளர்கள் ஃபுகுஷிமாவில் நடைபெற்ற பல்வேறு விபத்துகள் தொடர்பாக சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, செர்னோபில்லில் வெளியிடப்பட்டதைப் போல 40 சதவிகிதம் சீசியம் 137 வெளியிடப்பட்டதாக மதிப்பிட்டிருக்கிறது. ஆனால் அப்போது பெரும்பாலான நேரம் காற்று பசிஃபிக் பெருங்கடலை நோக்கி வீசியதால், கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி செர்னோபில்லில் இருந்ததைப் போல 10 சதவிகிதம்தான் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் எல்லா நேரமும் காற்று நமக்குச் சாதகமாக மட்டுமே வீசும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த மதிப்பீடுகள் இந்தியாவைப் பொருத்தவரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நிலப்பகுதியையும் கடலையும்தான் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அணுஉலை தொடர்பான வாக்குறுதிகள்

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் போன்ற நவீன அணுஉலைகள், 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என்ற வாதத்தை அறிவியல்ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா அணுஉலைகளும் வரையறைக்கு உட்பட்டவையே, மிக பயங்கரமான விபத்து நேரிடுவதற்கு மிகச் சிறிய அளவிற்காவது வாய்ப்பு இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், வி.வி.இ.ஆர் அணுஉலைகளில் கண்ட்ரோல் ராட் மெக்கானிசத்தில் ஏற்கெனவே தவறுகள் நேர்ந்துள்ளன. 2006ஆம் மார்ச் 1ஆம் தேதி, பல்கேரியாவின் கோஸ்லுடியு நான்காவது பிரிவில் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக, அங்குள்ள நான்கு முதன்மை சர்குலேஷன் பம்புகளில் ஒன்று செயலிழந்தது. இதனால் கண்டோல் ராட் உள்செலுத்துதலில் பிரச்சினை ஏற்பட்டது. இது விபத்தை ஏற்படுத்துவதற்கு மிக அதிக வாய்ப்பை கொண்டுள்ளது.

இழப்பீட்டு பிரச்சினை

அணுசக்தி நிபுணராக இல்லாதவர்கூட, அணுஉலை பாதுகாப்பை மிக எளிமையாக கேள்விக்கு உட்படுத்தி விட முடியும். அணுஉலைகளில் விபத்து ஏற்படுவதற்கு 1 சதவிகிதம்கூட வாய்ப்பு இல்லை எனும்போது, ஏன் அணுஉலை நிறுவனங்கள் அணுசக்தி இழப்பீட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு தலைகீழாக நிற்கின்றன? கூடங்குளம் அணுஉலையை விற்ற ஆட்டம்ஸ்டோரியெக்ஸ்போர்ட் என்ற நிறுவனம், இரு நாட்டு அரசுகளுக்கான சிறப்பு ஒப்பந்தத்தில், விபத்து நேரிட்டால் தனக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் யாரும் வழக்குத் தொடர முடியாது என்று ஒரு பிரிவையும் சேர்த்து இருக்கிறது. வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அணுஉலை நிறுவனங்கள் இந்தியாவிடம் அணுஉலைகளை விற்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதற்குக் காரணம், இந்தியாவின் புதிய அணு இழப்பீட்டு மசோதாவில், விநியோகஸ்தர்கள் மிகக் குறைவான இழப்பீடு தர வேண்டும் என்ற பிரிவு இருப்பதுதான். இப்படி அணுஉலை நிறுவனங்கள் தங்கள் பொருளாதார லாபத்தை 100 சதவிகிதம் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களை மட்டும் அரசு எப்படி கேட்க முடியும்?

(சுவ்ரத் ராஜு, எம்.வி.ரமணா - கட்டுரை ஆசிரியர்கள் இருவரும் அணு ஆயுத எதிர்ப்பு, அமைதிக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த இயற்பியலாளர்கள்)

(12-11-11 அன்று "தி ஹிந்து" நாளிதழில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு - ஞாநி

வணக்கம். நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று ! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார்.

நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கூடன்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அணு உலைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒழித்துக் கட்ட மத்திய அரசு சாம, தான, பேத தண்ட முறைகள் அனைத்தையும் கையாளுகிறது. அதில் ஒன்றுதான் உங்களை ஏவிவிட்டிருப்பது. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.

அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்தியவாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்யாசம்.

உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பலத்தை பயன்படுத்தி பெரிய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக உங்கள் ‘ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அதே அளவு இடத்தை எங்களுக்கு இந்த பத்திரிகைகளை ஒதுக்கமாட்டார்கள். ஒதுக்கினால், உங்கள் சாயங்களை வெளுத்துவிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.

செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஒரு அபத்தமான் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணுவிபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள் ?

1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ( நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.

விபத்து மட்டுமல்ல.அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?

இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாம்ல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்த துறையும் இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரி போல சுயேச்சையான் விசாரணை அமைப்பு அணுசக்தித் துறைக்கு இருந்தால்தானே உண்மைகள் வெளிவரமுடியும்? அப்படி ஒரு விசாரணைக்கு அந்த துறை தயாரா? அணு உலை அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றிய ஆய்வு முதல், ஊழியருக்கு கதிர் வீச்சு அளவு ஆய்வு வரை எந்த அறிக்கையையும் பகிரங்கப்படுத்த மறுப்பதுதானே வழக்கமாக இருக்கிறது ?

ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்க கலந்தார். அதிலேயே பெயிண்ட்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கல்ந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழ்நுதது. இந்த உலை கூடன்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும் ?

இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியை சுற்றியுள்ல கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய்கள், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற் உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான் மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.

ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- ” இந்தியாவில் சுநாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல.

விபத்துக்கு பயந்தால் முன்னேறமுடியாது என்று ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் விபத்துக்கு பயப்படாமல், கன நீரில் முகம் கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம் கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த உங்களுக்கு துளிக் கூட உரிமை கிடையாது. ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள். எதிர்க்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள். என்ன அநியாயம் இது ?

மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். தரமான, பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகல், நான்குவழிச் சாலை எல்லாவற்றையும் கூடங்குளத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி தருகிறீர்கள். அய்யா, இதையெல்லாம் அணு உலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமங்களுக்கு செய்வதுதானே அரசின் கடமை? அணு உலைக்கு சம்மதித்தால்தான் செய்வீர்களா? கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே ? ஏன் இல்லை ? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்ல. எனவே லஞ்சம் கொடுக்க வில்லை, அல்லவா?

கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அந்நிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரா ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாக் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார் ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி இந்தியா முன்னேறும் ? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத்தலைவராக இல்லாதபோதும் எதிர்க்கவில்லை ? உலகப் பொருளாதார ஏகாதிபத்யத்துடன் அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை நீங்கள்தான் பெற்றுத் தந்தீர்கள், இல்லையா? கூடங்குளம் விஷயத்தில் மட்டும் 100சதவிகித தேசபக்தர் ஆனது எப்படி ? 123ல் மட்டும் அமெரிக்க ஆதரவாளராக இருந்தது எப்படி ?

ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும் ? நம்மிடமே இருக்கிறதே ?

உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?

உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.

அவ்வளவு ஏன் ? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்துகொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ந்மக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகாவாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரிசக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை ? ஏன் பிரும்மாண்டமான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன ?

இந்த மாதம் 81 வது வயதில் நுழைந்துவிட்டீர்கள்.கடந்த 50 வருடங்களில் அணுசக்திதுறை அடுத்த இருபதாண்டு திட்டம் என்று சொன்ன எதுவும் அதன்படி நடக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு விஸ்வாசத்தினால், இந்த தள்ளாத வயதில் டெல்லி, நெல்லை, கூடங்குளம் என்று நீங்கள் அலைவது வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறீர்கள். அதிகபட்சம் இன்னும் 20 வருடங்கள். நூறைத் தாண்டி மனிதன் ஆரோக்கியமாகக வாழ்வது அரிது. உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.

கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.

இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.


மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான் காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

அன்புடன்
ஞாநி

(கல்கி 12.1.11 இதழில் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியுள்ளது)