வியாழன், ஆகஸ்ட் 26, 2010

"விலை' நிலங்களாகும் விளை நிலங்கள்!

தமிழகத்தின் விளைநிலங்களில் சுமார் 60 சதம் வரை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறியிருக்கும் நிலையில் உணவு உற்பத்திக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தவிர்க்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பொது மேடைகளிலும், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதற்கான பலன் என்னவோ பூஜ்யம்தான்.

5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகள் இன்று விவசாயமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் தோன்றிய பிறகே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளைநிலங்கள் துண்டாடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, இவற்றைச் சுற்றிலும் தொடங்கப்பட்ட வணிக வளாகங்கள், அவற்றையொட்டித் தோன்றிய குடியிருப்புகள் என விளைநிலங்கள் அனைத்தும் அரசின் பொருளாதாரக் கொள்கையையொட்டியே "விலை' நிலங்களாகின.

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மட்டுமே மாறவில்லை. அரசு அலுவலகங்களாக, அரசு கல்விக்கூடங்களாக, தனியார் கல்வி நிறுவனங்களாக, தொழிற்சாலைகளாக, தங்குமிடங்களாக எனப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி நிற்கின்றன.

இந்தியாவின் மூலாதாரத் தொழிலான உழவுத் தொழிலை அழித்து, மற்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்து வரும் தொழில்களால் நம் நாட்டு வளங்கள் அயல்நாட்டு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாய நிலங்கள் "விலை' நிலங்களாக மாற்றப்படுவதைத் தடுக்க பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் மானாவாரி விவசாயத்துக்கும் பயன்படாத நிலங்களை தேர்ந்தெடுத்துத் தொடங்க வேண்டும்.

இப்போது பெருநகரங்களில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலை சிறு நகரங்கள், வட்டத் தலைநகர் (பேரூராட்சி) போன்ற பகுதிகளிலும் வளர வேண்டும்.


இதன்மூலம், தனி வீடுகளுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் முன் பலமுறை ஆராய்ந்து, 100 சதவீதப் பயன்பாடு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கட்டடங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பல மாடிக் கட்டடங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அரசு நிலங்கள் எதிர்காலத் தேவைக்காகப் பாதுகாக்கப்படுவதோடு, புதிய நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் குறையும்.

அரசு, தனியார் கட்டடங்களின் மீதுள்ள வழக்குகளால் இன்றும் பல கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் பயனற்றுக் கிடக்கின்றன. எனவே, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, அதுபோன்ற கட்டடங்களையோ அல்லது அந்த இடத்தையோ பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை அமைக்க அவற்றின் தன்மைக்கு ஏற்ப விலைக்கு வாங்கும் நிலத்தின் அளவை அரசு நிர்ணயிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நிலத்தை வாங்குவதன் மூலம் நடைபெறும் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும்.

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம்.இந்த நிலையிலும், நம் நாட்டின் மக்கள்தொகை மிக விரைவாக உயர்ந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் 2050-வது ஆண்டில் சீனாவையும் விஞ்சி முதலிடத்துக்கு வந்துவிடுவோம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2-வது இடத்தில் இருக்கும்போதே, விவசாய நிலங்களில் 50 சதம் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில், மக்கள்தொகையில் முதலிடத்துக்கு வந்துவிட்டால் நிலைமை என்ன என்பதை இப்போதே யோசிக்க வேண்டும்.

இந்த நிலையில், சீனா இப்போது பின்பற்றி வரும் அதே திட்டத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதுதான் ஒரு குடும்பம் ஒரு வாரிசு திட்டம்.இந்தத் திட்டம் சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சியைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டம் நம்மிடம் ஏற்கெனவே இருந்தாலும் தீவிரமாகச் செயல்படுத்தப் படவில்லை. இப்போது அதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும், ஒரு குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் அவர்களுக்காக இரு வீட்டுமனைகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதே.

இதன்மூலம் உபரியாக உள்ள வீட்டுமனைகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், சிறிது காலத்துக்கு விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும்.

-இரா. மகாதேவன்

நன்றி: தினமணி, 20.08.2010

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

சென்னையின் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி?

ராஜ்பவன், ஆளுநர் மாளிகை என்றெல்லாம் இப்போது அழைக்கப்படும் இடம் கில்பர்ட் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்தாக இருந்தபோது அதன் பெயர் "கிண்டி லாட்ஜ்'. பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடிக் களிக்க, மரம் செடி கொடிகள், அடர்ந்த வனப்பகுதியாகக் காட்சியளித்த இந்த "கிண்டி லாட்ஜ்' தோட்டத்துக்கு நடுவில் ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த கில்பர்ட் ரோட்டரிக்ஸ், 1817-ல் இறந்த அடுத்த சில ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, இந்த "கிண்டி லாட்ஜ்'.

1821-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த 500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த "கிண்டி லாட்ஜ்' என்கிற தோட்ட வீட்டை விலைக்கு வாங்கியது. அப்போது கவர்னர் மாளிகை அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்தது. "கிண்டி லாட்ஜ்', அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கு வாரக் கடைசிகளில் ஓய்வெடுக்கும் மாளிகையாகவும், நண்பர்களுடன் பறவைகளை வேட்டையாடிக் களிக்கும் இடமாகவும் இருந்தது. 1910-ல்தான் இந்த கிண்டி லாட்ஜைச் சுற்றியுள்ள பகுதிகள், சென்னை வனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கிண்டி லாட்ஜும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும்தான் ஆளுநர் மாளிகைக்காக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது. சென்னை நகரின் ஒரு பகுதியாக, அதேநேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இணையான கட்டடக்கலை வனப்பும், வசதிகளும் நிரம்பிய "கிண்டி லாட்ஜ்', தமிழக ஆளுநரின் மாளிகையாக மாற்றப்பட்டது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்த இடம் அடையாறு பகுதியைப்போல, "மால்'களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பகுதியாக மாறியிருக்கக் கூடும்.

500 ஹெக்டேர், அதாவது 1,250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்த ஆளுநர் மாளிகைத் தோட்டம் (வனம்!), காலப்போக்கில் சுருங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது. முதலில், 1954-ல் மகாத்மா காந்தி நினைவகத்துக்காக 9.25 ஏக்கரும், புற்றுநோய் மருத்துவமனைக்காக 9 ஏக்கரும் இதிலிருந்து வழங்கப்பட்டது. 1958-ல் இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிக்காக (ஐ.ஐ.டி.) 388 ஏக்கரும், தேசியப் பூங்கா அமைப்பதற்காக வனத்துறைக்கு 625 ஏக்கரும் வழங்கப்பட்டது.

1970-ல் குருநானக் கல்லூரி தொடங்குவதற்காக இதிலிருந்து நிலம் வழங்கப்பட்டது. 1974-ல் 2.5 ஏக்கர் பரப்பில் ராஜாஜி நினைவகமும், 1975-ல் 6 ஏக்கர் நிலப்பரப்பில் காமராஜ் நினைவகமும் இதிலிருந்து வழங்கப்பட்ட இடங்கள்தான்.

1977-ல் தான், 1958-ல் வனத்துறைக்கு வழங்கப்பட்ட இடம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மேலும், 88 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறைக்கு வழங்கப்பட்டு, அதில் 22 ஏக்கரில் பாம்புப் பண்ணையும், குழந்தைகள் பூங்காவும் அமைக்கப்பட்டன.


ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி, கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்து விட்டிருக்கும் தென்சென்னைக்கு பிராணவாயு வழங்கும் நுரையீரல் பகுதியாகத் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இதன் பெருமை. இந்த வனப்பகுதி சுமார் 130 வகை பறவை இனங்களுக்கும், 350 தாவர இனங்களுக்கும், 60 விதமான வண்ணத்துப் பூச்சிகளுக்கும், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றான "பிளாக் பக்' என்றவகை மான்களுக்கும், புள்ளிமான்களுக்கும், நரிகள், பல்வேறு விதமான பாம்புகள், ஆமைகள், நத்தை வகைகள் போன்றவற்றுக்கும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

இத்தனை பெருமைகளும், முக்கியத்துவமும் வாய்ந்த ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி ஏற்கெனவே கணிசமாகச் சுருங்கி விட்டிருக்கிறது. இப்போது, இந்த வனப்பகுதிக்கு மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய முயற்சிகள் அரங்கேற்றப்படுகிறது என்னும்போது மௌனமாக வேடிக்கை பார்ப்பது விபரீதத்தில் முடிந்துவிடக் கூடும்.

கடந்த மாதம், தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்திருக்கும் ஒரு தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடியெனத் தாக்கி இருக்கிறது. ஆளுநர் மாளிகை வனப்பகுதியில் 500 படுக்கைகளுடன்கூடிய ஒரு மருத்துவமனையை நிறுவுவதற்காக நான்கு ஏக்கர் நிலப்பரப்பை வழங்க ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதுதான் துணைவேந்தரின் அந்தத் தகவல்.

ஏற்கெனவே வனப்பகுதிகள் சுருங்கிக் கொண்டு வருகின்றன. கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்த உஷ்ணப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படக்கூடிய தனித்தன்மை வாய்ந்த இதுபோன்ற வனப்பகுதி மிகவும் குறைவு. அதே மேலும் அழித்து, அதிலிருக்கும் மரம், செடி, கொடிகளையும், அதை வாழ்வாதாரமாகக் கொண்ட பறவைகள், விலங்குகள், பிராணி வகைகளை இம்சிப்பதில் மனிதன் என்ன சுகம் காண்கிறானோ தெரியவில்லை.

குறிப்பாக, மருத்துவமனை கட்டப்பட்டால், அதனால் உருவாகும் ஆள் நடமாட்டம், அதிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் போன்றவை அந்த உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்பது உறுதி. கடந்த 15 ஆண்டுகளில் பல பறவை இனங்கள் இந்தக் காடுகளில் இருந்து சென்று விடவோ, அழிந்துவிடவோ, செய்துவிட்டன என்கிறார்கள். இந்த நிலையில், மிச்சம் மீதி இருக்கும் வனப்பகுதியையும் அழித்து மருத்துவமனை அமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? வேறு இடமா கிடைக்கவில்லை?

ஆளுநர் மாளிகையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும் எந்தக் காரணத்துக்காகவும் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படக் கூடாது. ஏற்கெனவே சென்னை சுற்றுச்சூழல் பாதிப்பால் மாசுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் அதன் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி?

நன்றி: தினமணி (தலையங்கம் 23-08-2010)