சனி, டிசம்பர் 22, 2012

திருமதி ரோசலின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! -PMANE


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்
டிசம்பர் 21, 2012

பத்திரிக்கைச் செய்தி

[1] திருமதி ரோசலின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பு!
கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் நாள் இடிந்தகரையில் நடந்த அணுஉலை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையால் கைது செய்யப்பட்ட திருமதி. ரோசலின் தேவசகாயம் (வயது 63) என்ற எங்கள் அன்புத் தாயார் இன்று அகால மரணமடைந்தார். கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யத் தவறியதும், பிணை கொடுக்காமல் இழுத்தடித்ததும், மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும் என்று நிபந்தனை விதித்ததும்தான் அவர் அகால மரணமடையக் காரணங்கள். தமிழக அரசின் கைகளில் படிந்திருக்கும் இரத்தக்கரைக்கு அவர்கள் பதில் சொல்லியேத் தீரவேண்டும். எங்கள் போராளிகள் பிணை கிடைக்காமல் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மதுரையில் காவல் நிலையங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனைத் தமிழர்களை கொல்லத் திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு?

[2] குண்டர் சட்டக் கொடுமை!

தமிழக அரசு எங்கள் போராட்டக்காரர்கள் ஆறு பேரை குண்டர் சட்டத்தில் அடைத்து வைத்திருக்கிறது. லூர்துசாமி என்ற 68-வயதுப் பெரியவர் உழைத்து வாழ்கிற ஒரு மீனவர். நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் பிணையில் வெளியே உலவிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடாத தமிழக அரசு, உழைத்து வாழ்கிற உண்மையான மக்கள் மீது குண்டர் சட்டம் போடுகிறது. ஒருவர் மீது ஒரே ஒரு வழக்கு இருந்தாலும் குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் அண்மையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். தற்போது அமுலில் இருக்கும் சட்டங்களே அனைத்து விதமானக் குற்றங்களையும் கையாளப் போதுமானதாக இருக்கும்போது எதற்கு மேலும் கறுப்புச் சட்டங்கள்? இந்தியாவுக்கேப் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற முதல்வர் இந்திய ஜனநாயகத்துக்கு அளிக்கிற பரிசா இது? மற்ற மாநில மக்கள் இவரை ஒரு பாசிசத் தலைவர் என்று நினைக்க மாட்டர்களா?

[3] பேரிடர் நாடகம்!

அணுமின் நிலையத்தால் என்னென்ன தீங்குகள், பாதிப்புக்கள் வரும், மக்கள் எப்படித் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்ற அடிப்படை அறிவை சாதாரண மக்களுக்குக் கொடுங்கள் என்று நாங்களும், சமூக சேவகர்களும், நீதிமன்றங்களும் கேட்டுக்கொள்ளும்போது, அரசு அதிகாரிகள் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, பொய் சொல்லி அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நக்கநேரி என்ற குக்கிராமத்தில் யூன் 9 அன்றும் சங்கநேரி என்ற இன்னொரு குக்கிராமத்தில் டிசம்பர் 11 அன்றும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும், சேரன்மகாதேவி கோட்டாட்சியரும் சேர்ந்து முதியோர் உதவித்தொகை தருகிறோம் என்று ஒரு கூட்டம் மக்களைக் கூட்டிவைத்து, அணுஉலை ஆவணப்படம் ஒன்றை காட்டிவிட்டு, பேரிடர் பயிற்சி பிரமாதமாகக் கொடுத்துவிட்டோம் என்று கூறியிருக்கின்றனர். இன்று (டிசம்பர் 21) சிவசுப்ரமணியபுரம் எனும் கிராமத்தில் இதே போன்ற ஒரு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த “பேரிடர் பயிற்சி மிகச் சிறிய குக்கிராமங்களில் கொடுக்கப்படுவதும், பெரிய ஊர்களிலோ, கடலோரக் கிராமங்களிலோ கொடுக்கப்படாததும் ஏன்? முதியோர் உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என்றெல்லாம் லஞ்சம் கொடுப்பது ஏன்? அண்மையில் உவரி ஊருக்குப் போய் அணுமின் நிலையத்தின் மடிக்கணினி கொடுத்தும், தூண்டில் பாலம், மீன் பதனிடும் நிலையம், மருத்துவமனை போன்றவைக்  கட்டித்தருகிறோம் என்றெல்லாம் ஆசை காட்டியிருக்கிறார்கள் அதிகாரிகள். அங்கே ஒரு “பேரிடர் பயிற்சி நடத்தலாமே? தமிழக மக்கள் இது போன்ற கபட நாடகங்களுக்குத் துணை போகாது, தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் “பேரிடர் பயிற்சி கொடுக்கப்பட்ட ஊர்களில் சில ஊடக நண்பர்கள் போய் அந்த மக்களுக்கு அணுஉலை ஆபத்துக்கள் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது, எப்படி அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஒரு சிறிய ஆய்வு செய்து சொல்லுங்களேன்?

[4] வள்ளியூர் நீதிபதி அவர்கள் கண்ணியத்தை நாங்கள் மதிக்கிறோம்!

வள்ளியூர் நீதிபதி அவர்கள் பற்றி யாரோ இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதி பிரசுரித்துவிட்டு, நாங்கள் எழுதியது போன்ற ஒருத் தோற்றத்தை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். இந்தக் கட்டுரைக்கும் எங்களுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் கிடையாது என்பதையும், வள்ளியூர் நீதிபதி அவர்கள் கண்ணியத்தை நாங்கள் மதிக்கிறோம் என்பதையும் நாங்கள் இதன்மூலம் பதிவு செய்ய விரும்புகிறோம்.

போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

திங்கள், டிசம்பர் 17, 2012

தற்கொலையை நோக்கி தமிழக விவசாயிகள் !


காவிரி டெல்டா மாவட்டங்களில்... ஆறுகளைப் போலவே, ஆற்றாமையால் அழுது புலம்பும் விவசாயிகளின் கண்ணிலும் நீர் வற்றியே கிடக்கிறது. உச்சக்கட்டமாக உழவர்களின் உயிர்களும் உருகத் தொடங்கி இருப்பதுதான் பெரும் சோகம். எத்தனை முறை தோல்வியுற்றாலும், அடுத்த முறை கலப்பையோடு தயாராக நிற்பானே, தமிழ்நாட்டு விவசாயி? இப்போது மட்டும் என்ன ஆயிற்று அவனுக்கு? வயலுக்குத் தெளிக்கும் பூச்சிமருந்தை ஏன் வயிற்றுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறான்?

ஆதங்கத்தோடு அலசினோம் அதற்கான காரணத்தை...

டெல்டாவின் பயிர்க் காலம்... ஜூன் தொடங்கி... ஜனவரி வரையிலும் நீடிக்கும். குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று போகங்களும்... அதையட்டிய உளுந்து, பயறு சாகுபடியும் இதில் அடங்கும். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, முதல் போகமான குறுவை என்பது கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. காரணம்...? வழக்கமாக ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, திறக்கப்படாததுதான். இந்த ஆண்டு, அணை திறக்கப்பட்டதே செப்டம்பர் 17-ம் தேதிதான். மூன்று மாதங்கள் கடந்த பிறகே திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியைக் கைவிட்டனர் விவசாயிகள். அடுத்த போகமான சம்பாவுக்கும் பருவம் தப்பிப்போய்விட்டது என்பதால், அதிலும் அதிக ஈடுபாடு இல்லாமலேதான் இருந்தனர். செப்டம்பருக்குள் நாற்று நட்டால்தான், அக்டோபர் மாத மழைக்குள் பயிர் கிளம்பி, மார்கழியில் அறுவடைக்கு வரும். ஆனால், செப்டம்பர் வரையிலும் நாற்றங்கால் தயாரிக்கவே தண்ணீர் இல்லாதபோது, எதற்காக வம்பு என்று பயந்து கொண்டு பேசாமல் இருந்தனர்.
ஆனால், இடையில் அரசாங்கத் தரப்பிலிருந்து செய்யப்பட்ட குளறுபடிகள்தான், விவசாயிகளை மேலும் நோகடித்து, தற்போது தற்கொலையை நோக்கி இழுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளன. '12 மணி நேர மும்முனை மின்சாரம் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு பம்ப்செட் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்யலாம். அத்தோடு, பம்ப்செட் இல்லாத 10 விவசாயிகளுக்கு நாற்று உற்பத்தி செய்து கொடுத்தால்... விதை மானியம், உர மானியம், ஊக்கத்தொகை எல்லாம் தரப்படும்; நேரடி நெல் விதைப்பு செய்தால், அதற்கும் 'மானியம்’ தரப்படும்...' இப்படியெல்லாம் அறிவிப்புகளை அள்ளிவிட்டது அரசாங்கம். இந்த அலப்பறைகளால், 'நிலத்தை சும்மா போட்டு வைப்பதற்கு ஏதாவது செய்து வைக்கலாமே’ என்ற எண்ணத்தில் வயலில் இறங்கினார்கள், விவசாயிகள்.  

ஆசை காட்டிய அரசு, சொன்னபடி 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தையும் தரவில்லை, மானியங்களையும் தரவில்லை. மேட்டூரில் இருந்து தண்ணீரையும் தரவில்லை. இதனால், சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. கடனாக வாங்கிப் போட்ட பணம் வயலில் கருகிக் கொண்டிருக்க... அதைப் பார்க்க முடியாமல் வேதனையில் மனமுடைந்து போயிருக்கிறார்கள், விவசாயிகள். இதன் உச்சக்கட்டமாக அடுத்தடுத்து தற்கொலைகளும் அரங்கேற, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.

இதைப் பற்றி பேசும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் கீவளூர் தனபாலன், ''ஆலைக்குக் கொடுத்த கரும்புக்கு பணம் வராததால், உயிரை மாய்த்துக் கொண்ட மயிலாடுதுறை, மாப்படுகை விவசாயி முருகையனைத் தொடர்ந்து... இப்போது பயிர் கருகிப்போனதால், விஷம் குடித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் கீழ்வேளூர் அருகேயுள்ள கூரத்தாங்குடியை சேர்ந்த விவசாயி ராஜாங்கம். தன்னுடைய இரண்டு பிள்ளைகள், சகோதரனுடைய (இவர் இறந்துவிட்டார்) இரண்டு குழந்தைகள் என நான்கு பிள்ளைகளை ராஜாங்கம்தான் வளர்த்து வந்தார். ஆனால், இந்த நான்கு பிள்ளைகளுமே தற்போது தந்தை இல்லாமல் தவிக்கின்றன'' என்று சோகம் பொங்கச் சொன்னவர்,
''தயவு செய்து இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் குடும்பம் நீங்கள் இல்லாமல் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை  நினைத்துப் பாருங்கள்'' என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

''ஆறு ஏக்கர்ல விதைக்கால் (நேரடி நெல் விதைப்பு) செஞ்சாரு. அது புயலடிச்சப்ப மூழ்கி, அழுகிப் போச்சு. சரி போவுதுனு அப்படியே விட்டுட்டாரு. ஆனா, வாய்க்கால்ல தண்ணி வந்ததும் எல்லோரும் நாத்தங்கால் அமைச்சு விதைவிட ஆரம்பிச்சதும், இவரும் நாத்து விட தயாராயிட்டார். கீவளுர் போய் ஏழு சிப்பம் விதை வாங்கி, நாத்து விட்டாரு. விட்ட நாத்தைப் பறிச்சு நடறதுக்குகூட தண்ணி வரல. ரிப்பேரா கிடந்த டீசல் இன்ஜினை கடன் வாங்கி ரிப்பேர் செஞ்சு, தண்ணி பாய்ச்சி பாதி வயலுக்கு நட்டாரு. மீதி வயலும், மீதி நாத்தும் சும்மாதான் கிடந்துச்சு. பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு, திரும்பவும் ஆத்துல கொஞ்சம் தண்ணி வந்தவுடனே, யார் யாரையோ பார்த்து கடன் வாங்கி, ஒரு கட்டு முன்னூரு ரூபாய்னு பத்து கட்டு நாத்து வாங்கிட்டு வந்து, மீதமிருந்த வயலையும் நட்டாரு. அதுவரைக்கும் கையில இருந்த நகையெல்லாம் அடகு வெச்சாச்சு. அஞ்சு பைசா வட்டிக்கு நாப்பதாயிரம் ரூபாய்க்கு மேல கடனும் வாங்கியாச்சு.

வாய்க்கால்ல தண்ணி குறைஞ்சு போகவும், திரும்பவும் இன்ஜினுக்கு டீசல் வாங்கி ஊத்தி, தண்ணி இறைக்க ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கும் ஊரைச் சுத்தி வட்டிக்கு கடன் வாங்கியாச்சு. ஒரு கட்டத்துல வாய்க்கால்ல சுத்தமா தண்ணி வராம போயிடுச்சு. 'நட்ட நடவு காயுதே’னு புலம்பினவரு... அப்பவும் அசராம ஊர்குளத்துல இன்ஜின் போட்டு தண்ணி இறைச்சாரு. தொடர்ந்து, அதை ஓட்டறதுக்கு டீசல் வாங்க காசில்லை. என்கிட்டே வந்து 'என்னா இருக்கு’னு ஆராய்ஞ்சு பாத்தவரு 'ஒண்ணும் இல்லையே’னு சோர்ந்து போய் படுத்தாரு. மறுநாள் நிறைய பேரைக் கேட்டும் கடன் கிடைக்காததால சுணங்கிப் போய் வந்தார். அப்படியே கொல்லைப் பக்கம் போனவர், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிச்சு செத்துட்டாரு'' என்றபடி தேம்பித் தேம்பி அழுகிறார், ராஜாங்கத்தின் மனைவி தேவி. அவரைத் தேற்றுவதற்கு யாரிடமும் வார்த்தைகள் இல்லை.
''வட்டாட்சியர், கோட்டாட்சியர்... என அதிகாரிகள் வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை உதவியோ நிவாரணமோ... எதுவும் அறிவிக்கப்படவில்லை. சாதி மோதல் காரணமாக இறந்தவர்களின் குடும்பம்... சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கெல்லாம், அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்று நிவாரணமாகத் தரும் அரசாங்கம், தனது கையாலாகாத நிலையால் மாண்டு போன மனித உயிருக்கு கருணை காட்ட யோசிக்கிறது. அப்படி நிவாரணத்தைக் கொடுத்துவிட்டால், 'தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை இருக்கிறது' என்பது வரலாற்றில் பதிவாகிவிடும் என்பதால், சுத்தமாக மூடி மறைக்கப் பார்க்கிறது அரசாங்கம்'' என்று குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி கேட்டபோது, ''அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருக்கிறோம், நிச்சயம் நிவாரணம் பெற்றுத் தருவோம்'' என்று நம்பிக்கை ஊட்டும் வகையில் சொன்னார்.

இது இப்படியிருக்க.. ராஜாங்கம் இறந்த ஈரம் காய்வதற்குள், நவம்பர் 29 அன்று கீழையூர் வட்டத்தில் உள்ள மகிழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜும் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுவிட, 'இன்னொரு விதர்பாவாக மாறிக் கொண்டிருக்கிறதோ டெல்டா’ என்ற அச்சத்தில் ஆடிப்போய் இருக்கிறார்கள், ஒட்டுமொத்த விவசாயிகளும்!

''அரசை நம்பி விவசாயம் செய்தவன், இன்று வீணாகப் போகும் நிலைமையில் அவனைக் காப்பாற்ற வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. அதற்காக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு 20 ஆயிரம் ரூபாயை அரசு இழப்பீடாகத் தர வேண்டும். தண்ணீர் வராது என்பதால், சுதாரித்துக் கொண்டு சாகுபடி செய்யாமல் போட்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் வருமானஇழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு ஏக்கருக்கு
10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாகத் தர வேண்டும். அதோடு, காவிரி பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க இந்த ஆண்டே முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால், சாவின் விளிம்பில் நிற்கும் விவசாயிகள் சவக்குழிக்குள் விழுவதை, இனி யாராலும் தடுக்க முடியாது. அந்தப் பாவம் முழுவதும் ஆள்பவர்களைத்தான் சேரும்'' என்று சாபம் விட்டார் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.

விவசாயத்தில் தோல்வி, கந்துவட்டிக் கொடுமை, அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாதக் கொடுமை என்று கடந்த பல ஆண்டுகளாகவே, தற்கொலை பூமியாக மாறிக்கிடக்கிறது மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதி. அங்கே இதுவரை இரண்டு லட்சம் விவசாயிகள் வரை தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள். அப்படியரு நிலைக்கு, டெல்டாவும் மாறிவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் விவசாயிகளைத் தேற்றி, காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைவிடுத்து, விவசாயத் 'தற்கொலை'களை மூடி மறைப்பதில் கவனத்தைச் செலுத்தினால்... விளைவு விபரீதமாகவே இருக்கும் என்பதற்கும் சாட்சி... விதர்பாவேதான்!

-கரு. முத்து,படங்கள்: கே. குணசீலன்

நன்றி: பசுமைவிகடன், 25.12.2012

புதன், டிசம்பர் 12, 2012

கூடங்குளம் அணு உலை சட்டப் போராட்டம் - கோ. சுந்தர்ராஜன்


அணுசக்தியை ராணுவரீதியாக மட்டுமன்றி ஆக்கபூர்வமாகவும்கூடப் பயன்படுத்தக் கூடாது என்பதே பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் அடிப்படையான நிலைப்பாடு. தொழில்நுட்பரீதியில் அணு சக்தி மனித குலத்துக்கு எதிரானது என உறுதியாக நம்புகிறோம். அணு உலை விபத்துக்கள் மட்டுமல்ல அவற்றின் ஒட்டு மொத்தச் செயல்பாடுகளுமே மனிதர்கள், இயற்கை, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு எதிரானது. எனவே அணு சக்தியின் பயன்பாட்டை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எமது இயக்கத்தின் ஆழமான நம்பிக்கை. அது உண்மையும் கூட. யுரேனியத்தின் தொடர்வினையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இன்னும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அணுக்கரு பிளவு என்னும் வினை ஒருமுறை தொடங்கப்பட்டுவிட்டால் பிறகு அதை நம்மால் ஓரளவு மட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. நூறு சதவிகிதம் வெற்றிகரமானதும் பாதுகாப்பானதுமான இயந்திரம் என உலகில் எதுவும் கிடையாது. இது இயந்திரங்களின் அடிப்படை விதி. எனவே எப்போதும் ஆபத்தை உள்ளடக்கியிருக்கும், மனித சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதுகாப்பற்ற இந்த அணு சக்தியை நாங்கள் எதிர்க்கிறோம்.


கூடங்குளம் அணு உலைத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே எங்கள் அமைப்பு இதை எதிர்த்து வந்திருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கெதிரான முதல் வழக்கை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 2011இல் தொடர்ந்தோம். அணு உலை என்பது அரசின் கொள்கை முடிவு. அதற்கெதிராக நீதிமன்றதுக்கு செல்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது. அது மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டியது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்க முடியாது என்ற அடிப்படை உண்மையை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆகவே நாங்கள் அப்படியொரு கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. அணு உலை நிறுவப்பட்டது முதல் தற்போது வரை இந்திய அணுசக்திக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அத்தகைய குறைபாடுகளுடன் அணு உலை தொடங்குவதை அனுமதிப்பது ஆபத்தானது என்பதை வலியுறுத்துவதே நாங்கள் தொடர்ந்த வழக்குக்கு அடிப்படை.

ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின்னர் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பையும் ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அந்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்துவதற்காகவே வழக்குத் தொடர்வது குறித்து யோசித்தோம். கூடங்குளம் அணு மின் உலையைச் செயல்படுத்துவதில் பின்பற்றப்படும் தவறான நடைமுறைகள் குறித்து மக்களின், அரசின் கவனத்தை அதன் மூலம் ஈர்க்க நினைத்தோம். செப்டம்பர் 2011இல் ஒன்று, மற்றது மார்ச் 2012இல் என மொத்தம் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் குறித்து ஆய்வு செய்த நிபுணர்குழு அரசுக்குப் பல் வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதில் இணைப்பு 8இல் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் கூடங்குளம் அணு உலை குறித்தது. 17 பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன. புகுஷிமா அணு உலை விபத்தையொத்த அபாயங்களைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகள் அவை. அவற்றை நிறைவேற்றாமல் கூடங்குளம் அணு உலை இயக்கப்படுவது ஆபத்தானது என்பதை நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டினோம்.

முழுமையான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு அது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களது ஒப்புதல் பெறப்பட்ட பின்பே சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையின்மைச் சான்று அளிக்க வேண்டும் என 1994இன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது. இதற்கு முன்னரே அதாவது 1991இல் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்குள் எந்தத் தொழிற்சாலையும் செயல்படக் கூடாது என வலியுறுத்துகிறது. தவிர தேசிய அணுசக்தி கழகம் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டு கூடங்குளம் அணு உலை செயல்படும் என்பதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது இப்படி எந்தச் சான்றிதழையும் பெற்றிருக்க வில்லை. ஆனால் அவர்கள் 1989இல் வாங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதல் எல்லாக் காலத்துக்கும் போதுமானது எனத் தெரிவித்திருந்தார்கள். இதை எதிர்த்துத்தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். 1994இன் சுற்றுச்சூழல் சட்டப்படி, 1994க்கு முன்பு ஒப்புதல் பெறப்பட்டிருந்த திட்டங்கள், அவை உள்ளூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றிருந்தாலோ திட்டம் தொழில்நுட்பரீதியில் எந்தவித மாற்றங்களுக்கும் உள்ளாகாததாக இருந்தாலோ மாசு அளவு மாறுபடாமல் இருந்தாலோ அவை புதிதாக ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. இவை எவையுமே கூடங்குளம் அணு உலைக்குப் பொருந்தவில்லை. 2001இல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு அனுப்பிய ஒரு நோட்டீசில் தனது ஒப்புதலைப் பெறாமல் வேலைகளைத் தொடங்கியது குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தது.

மத்திய அரசின் நிபுணர் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் அணு உலை செயல்பட அனுமதி அளிக்க மாட்டோம் என அணு சக்தி ஒழுங்குமுறைக் கழகம் 2012 ஜூனில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் வெப்பநிலை 45 டிகிரிவரை இருக்கலாம் எனச் சான்றிதழ் வழங்கியிருந்ததை அறிந்துகொண்டோம். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியேற்றப்படும் நீரின் வெப்ப நிலை 37 டிகிரி என இருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீரின் வெப்பநிலையை 45டிகிரிவரை உயர்த்திக்கொள்வதற்கு எப்படி அனுமதித்தது என்பது குறித்து நீதிபதிகளே கேள்வியெழுப்பினர். உடனடியாக ஒரே இரவில் 45 டிகிரி வெப்பநிலையை 37 டிகிரியாகக் குறைத்துச் சான்றிதழ் வழங்குவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூச்சப்படவேயில்லை. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. எப்படித் திடீரென இவ்வளவு வெப்ப நிலையைக் குறைத்துச் சான்றிதழ் வழங்கினீர்கள் என்றோ அந்த அளவுக்கு வெப்ப நிலையைக் குறைப்பது எப்படி என்றோ அடிப்படையான எந்த கேள்வியும் எழுப்பாமல் நீதிமன்றம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டது. நீதிமன்றத்தின் இந்தச் செயல் எங்களுக்குப் பதற்றத்தை உருவாக்கியது. சாதாரண மக்களைக் காப்பாற்ற வேண்டிய நீதிமன்றங்கள் அரசின் அங்கமாகச் செயல்படுகிறது என்ற கசப்பான உண்மையை எங்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

நீதிமன்ற விசாரணைகள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த சமயத்தில் கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துவிட்டது. வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும்போது எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்? இது எங்களுக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி. மக்கள் போராட்டம் தீவிரமடையவும் இந்த உத்தரவு ஒரு காரணமாக அமைந்தது என்பதை இங்கே நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். எனவே அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தோம். மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அளித்திருந்த 17 பரிந்துரைகளை மேற்கொள்ளாமல் ஒப்புதல் வழங்கமாட்டோம் எனத் தெரிவித்துவிட்டு இப்போது எப்படி எரிபொருள் நிரப்ப உத்தரவிட்டீர்கள் எனக் கேள்வியெழுப்பினோம். அதற்குப் பதில் தெரிவித்த ஒழுங்கு முறை ஆணையம் கூடங்குளம் உச்சபட்ச பாதுகாப்பு கொண்டது என்றும் அதீத பாதுகாப்புக்குத்தான் 17 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துவிட்டது. நீதிமன்றமும் அதை ஒப்புக்கொண்டு இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது. தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை நீதிமன்றம் தீர்மானிக்க இயலாது என - இரண்டு மூன்று மாதங்கள் விசாரணை நடத்திய பின்னர் -நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எனவே நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகள் தவிர இழப்பீடு குறித்த மற்றொரு வழக்கையும் தொடர்ந்துள்ளோம்.

இந்திய சட்டப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள்தாம் அதற்கான நிவாரணப் பணிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலை விபத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற் சாலை நிர்வாகம்தான் நிவாரணம் வழங்க வேண்டும். இதுதான் நடைமுறை. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் ரஷ்ய நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என அணுசக்திக் கழகம் தெரிவித்துள்ளது. ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் தொகையின் வரம்பு வெறும் 1500 கோடி ரூபாய். அதுவும் இயந்திரக் கோளாறுக்கான இழப்பீடு மட்டுமே. அதைக் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இது மிகச் சொற்பத் தொகை என்பதால் இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு தனி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதாவது விபரீதத்தின் போதோ இயந்திரக் கோளாறின் போதோ 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஆதாரம் தேவைப்பட்டால் அதை யார் வழங்குவது? ஆனால் உச்சபட்ச பாதுகாப்பு கொண்டதெனக் கூறப்படும் இந்த அணு மின் நிலையத்தில் இழப்பீட்டின் அளவை உயர்த்துவதற்கு ரஷ்ய நிறுவனம் தயாராக இல்லை. அதையும் மத்திய அரசு ஒத்துக்கொண்டது.

அணு உலைக் கழிவு மிகப் பெரிய பிரச்சினை. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளே இக் கழிவுகளை என்ன செய்வதெனத் தெரியாமல் திணறுகின்றன. அணுக் கழிவை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள் என நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். ஏனெனில் உச்சநீதிமன்றம் பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்படுவதாகத் தெரிகிறது.

கூடங்குளம் அணு உலைகளைப் பொறுத்தவரை இவை முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. இவற்றைக் கையாள்வது எளிதல்ல. கையாள்வது குறித்த அனுபவ அறிவு இந்தியாவுக்குக் கிடையாது. எனவே உச்சபட்ச பாதுகாப்பு மட்டும் போதாது. அதீத பாதுகாப்பும் தேவை.

மேலும் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் ஒரு வல்லுநர் குழுவை நியமித்து கூடங்குளம் பகுதியில் காணப்படும் சிக்கல்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு இரண்டு அறிக்கைகளை அளித்துள்ளது. அந்தப் பணிகளை பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தான் ஒருங்கிணைத்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கைகளின் படி கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டுள்ள பகுதியின் நிலவியல், புவியியல், நீரியல் கூறுகள் அணு உலைக்கு ஊறு விளைவிக்கும் விதத்திலேயே உள்ளன. கூடங்குளத்திலிருந்து 90 கிமீட்டரில் கடல் நீருக்குள் இரண்டு வண்டல் குவியல்கள் உள்ளன. இவை சுனாமி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பப்புவா நியூ கினியாவில் 1998இல் இந்த வண்டல் குவியல்களால் பெரிய சுனாமி ஒன்று ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பம் வந்தால்தான் சுனாமி உருவாகும் என்பதில்லை. மிகச் சிறிய அளவிலான பூகம்பமே இந்த வண்டல் குவியல்கள் மூலம் சுனாமியை உருவாக்கும் ஆபத்து கொண்டவை. எனவே கூடங்குளம் அணு உலைக்கு உச்சபட்சப் பாதுகாப்பு தேவையில்லை என்பதில் உண்மையில்லை.

2012இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழடுக்கு மட்டத்திலான விபத்து நடந்தால் எப்படி மக்களை அப்புறப்படுத்துவீர்கள் எனக் கேட்டிருந்தோம். அப்படி ஒரு விபத்தையே நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனப் பதிலளிக்கிறார்கள். இதை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளோம். அச்சன்கோயில் பிளவு கூடங்குளம் வழியாகவே போகிறது. இந்தப் பிளவு நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் முக்கியக் காரணி. மேலும் சின்னச்சின்ன எரிமலைக் குழம்புகள் கூடங்குளத்தில் காணப்படுகின்றன. இவை எல்லாம் இருப்பதால் கூடங்குளத்தில் 7 அடுக்கு விபத்து நடக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. தண்ணீரைப் பொறுத்த அளவில் கூடங்குள அணு உலை குளிர்விப்பில் மிக அதிகமாகக் கடல் தண்ணீர்தான் பயன்படப் போகிறது. தினமும் 4200 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்குப் பிறகு அணு உலையிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கடலில் கலக்கும். அணு உலைக்குள் குளிர்விப்பானாக செயல்பட்டு வெளியேறும் இந்தக் கழிவு நீர் கடல்வாழ் உயிரினங்களை முற்றிலும் அழித்துவிடும். கழிவு நீரில் வெறும் வெப்பம் மட்டும் இல்லை, கதிரியக்கமும் இருக்கும்.

கல்பாக்கத்தில் கடலில் வருடத்திற்குப் பல்லாயிரக்கணக்கான கிலோ அளவில் சிங்க இறால்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. தற்போது ஆண்டுக்கு 5 கிலோகூடக் கிடைப்பதில்லை, இதற்குக் காரணம் அணுக்கழிவுநீர் கடலில் கொட்டப்பட்டதுதான். கல்பாக்கம் கடல் பகுதியில் செயற்கைப் பவளப்பாறைகளை உருவாக்கப் போவதாக இந்திய அணு சக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? இயற்கையான பவளப் பாறைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்பது தானே? அணு உலை சட்டபூர்வமாக இயக்கப்படத் தேவையான அறிவுறுத்தல்களை உச்ச நீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். நீதிமன்றம் சென்றதன் மூலம் அணு உலை விஷயத்தில் அரசின் செயல்பாட்டில் காணப்படும் பல அசட்டுத்தனங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குக் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்குக் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல் பெறவில்லை என்பது நாங்கள் நீதிமன்றம் சென்றதால்தான் தெரியவந்தது. மேலும் வழக்கு விசாரணை குறித்த செய்திகள் வருவதால் இந்தியா முழுவதிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இவை எல்லாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் ஏற்பட்ட அனு கூலம். நியாயத்திற்காக கூடங்குளம் பகுதியை சேர்ந்த மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். சட்டப்படி அதன் வழிமுறைப்படி அணு உலையின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துகிறோம். நீதி அமைப்பின் செயல்பாடுகள் அது எளிய மக்களைப் பாதுகாக்கத் தவறிவிடுமோ என்னும் பயத்தை உருவாக்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உயர் நீதிமன்றத்தில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே கூறியிருக்கிறாறே என மேற்கோள் காட்டுகிறார்கள். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்க முடியும்? அப்துல் கலாம் அணு விஞ்ஞானியே அல்ல. அவரை மேற்கோள் காட்டுவது அறியாமை.

தலித்துகளும் மீனவர்களும் வாழும் பகுதி என்பதால் அதீதப் பாதுகாப்பு தேவையில்லை என்று அரசு கருதுகிறதா? அமைச்சர்களுக்கு மட்டும்தான் அதீதப் பாதுகாப்பு தேவையா? இவர்களுக்கு அதீதப் பாதுகாப்பு தேவையில்லை என்பதை எப்படித் தேசிய அணு சக்தி கழகமும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் முடிவுசெய்ய முடியும்? இதனால்தான் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அணு உலையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். மக்கள் போராட்ட மும் நீதிமன்றப் போராட்டமும் வெவ்வேறுவகையான செயல்பாடுகள். நீதிமன்றத்தின் வெற்றி தோல்விகள் மக்கள் போராட்டத்தைப் பாதிக்கப்போவதில்லை. நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் மக்கள் போராட்டம் அணு உலை மூடப்படுவது வரை தொடரத் தான் செய்யும்.

-கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
சந்திப்பு: தேவிபாரதி, மண்குதிரை
தொகுப்பு: செல்லப்பா

நன்றி: காலச்சுவடு, டிசம்பர் 2012வியாழன், டிசம்பர் 06, 2012

கொசுவரூபம் : உலகம் முழுவதும் பரவும் டெங்கு உங்களையும் தாக்கலாம் உஷார்!

ந்திய அரசும் இந்த நாட்டின் மாநில அரசுகளும் மிக அலட்சியமாகக் கையாளும் ஒரு பிரச்னை, இப்போது சர்வதேச மருத்துவச் சமூகமும் உலக சுகாதார நிறுவனமும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் பொருளாகி இருக்கிறது. சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் அனுமானமும் கணிப்புகளும் உறுதியானால், இந்தியா அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்தக் கணிப்புகள் சொல்லும் அதிரவைக்கும் செய்தி... 'டெங்கு ஒரு கொள்ளைநோயாக உருவெடுக்கிறது!’  

 சமீபத்தில், பருவநிலை மாறுபாடுகள் தொடர்பாக விவாதித்த உலக சுகாதார நிறுவனம், டெங்கு தொடர்பாக ஓர் அஞ்சவைக்கும் எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. உலகெங்கும் பருவநிலை மாறுபாட்டால், கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டி இருக்கும் அது, மலேரியா மற்றும் டெங்குவின் தாக்குதல் இனி விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கும் சூழலில், எதிர்காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து கோடிப் பேர் டெங்கு வால் பாதிக்கப்படலாம் என்றும் அவர்களில் 15 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்றும் சொல்கிறது.

இந்தியாவுக்கு இது மிகப் பெரிய கெட்ட செய்தி. ஏனென்றால், உலகில் டெங்குவின் மையமே இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், டெங்குவால் 2009-ல் 15,535 பேர் பாதிக்கப்பட்டு, 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர்; 2012-ல் இதுவரை மட்டுமே 35,000 பேர் பாதிக்கப்பட்டு, 216 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசுடைய கணக்கு. இந்த போலிக் கணக்கின்படி பார்த்தாலே, டெங்கு பாதிப்பு 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. ஆனால், உண்மையான கணக்கு இந்திய மக்களால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று சொல்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள். ''டெங்கு தொடர்பாக இந்திய அரசு சொல்லும் கணக்குகள் கேலிக்கூத்தானவை'' என்கிறார்  சர்வ தேச அளவில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அட்லாண்டா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் டெங்கு பிரிவுத் தலைவரான ஹெரால்டு எஸ்.மார்கோலீஸ். ''எப்படியும் ஆண்டுக்கு 3.7 கோடிப் பேர் இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்படலாம்'' என்கிறார் டெங்கு ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஹால்ஸ்டெட்.

இந்த எண்ணிக்கை நமக்கு மலைப்பை உருவாக்கலாம். ஆனால், உள்ளூர் கள நிலவரங்கள் நம்பச் சொல்கின்றன. இந்திய அரசின் கடந்த அக்டோபர் வரையிலான கணக்கு, நாட்டிலேயே தமிழகத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது (5,376 பேர்). தமிழகத்திலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில், இதுவரை 15 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், மேலூரின் கள நிலவரமோ அதிரவைக்கிறது.

மேலூர், சுக்காம்பட்டியைச் சேர்ந்த செந்திலின் மனைவி சங்கீதா, மகள்கள் சோபியா, ரூபியா மூவருமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் டெங்கு இவ்வளவு தீவிரம் அடையாதபோது சங்கீதாவுக்கும் சோபியாவுக்கும் டெங்கு தாக்குதலை உறுதிசெய்து பரிசோதனை முடிவுகளை வழங்கிய மருத்துவத் துறை, ரூபியாவுக்கு அப்படி வழங்க மறுத்து வைரஸ் காய்ச்சல் என்று வழங்கியதாகச் செந்தில் சொல்கிறார். இதன் விளைவு... சிறுமி ரூபியா மரணம் அடைந் தார். அப்போதும்கூட வைரஸ் காய்ச்சலால் மரணம் என்றே சான்றிதழ் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார் செந்தில். இந்த ஊரைச் சேர்ந்த பலர், ''அதிகாரிகள் 'டெங்கு மரணம்’ என்று சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்ததோடு, உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங் களில் பயன் கிடைக்காது'' என்று மிரட்டியதாகவும் கூறுகிறார்கள். மேலூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு சொல்வதைப்போல், குறைந்தது 25 மடங்கு இருக்கும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த விஷயத்தை மறைப்பதில் அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதற்கும் உண்மை நிலவரம் என்னவாக இருக்கிறது என்பதற்கும் இன்னோர் உதாரணம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில், டெங்குவால் கடந்த மாதம் கிட்டத்தட்ட மூன்று நாளைக்கு ஒரு பிணம் விழ... மக்கள் உறைந்துபோய் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளோ, வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் என்று உண்மையை மறைப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக, நாளிதழ்களில் அன்றாடம் வரும் டெங்கு மரணச் செய்திகளை மறுக்கும் வகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பே இல்லை'' என்று பேட்டி கொடுத்திருக்கிறார், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநரான கரு.ராமநாதன். இதனால் கொதித்தெழுந்த மக்கள், ஆங்காங்கே அவருடைய உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் இறங்க, அடுத்த சில நாட்களில் சுகாதாரத் துறைத் திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் புதுக்கோட்டை வந்து 'டெங்கு பாதிப்பு இருக்கிறது’ என்று உண்மையை ஓரளவுக்கு ஒப்புக்கொள் ளும் சூழல் உருவாகி இருக்கிறது.

வெளிப்படையாகவே மருத்துவர்களும் பரிசோதனைக்கூட நிர்வாகிகளும் பொய் சொல்கிறார்கள் என்கிறார்கள் மக்கள். பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோவின் அனுபவம், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை முழுமையாக அம்பலப்படுத்துகிறது. '' ஊரிலுள்ள என் மகள் டெங்குவால் பாதிக்கப்பட்டார். என்னென்ன வகையான காய்ச்சலையோ சொல்லிக் குழப்பி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னைக்கு அவளை அழைத்து வந்து தனியார் மருத்துவ மனையில் வைத்து, அவள் உயிரைக் காப்பாற்றி னேன். கிட்டத்தட்ட 85 ஆயிரம் ரூபாய் செல வானது. நான் ஒரு மருத்துவன். உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு, மாநில அரசுப் பணி களில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவன். எனக்கே இந்த நிலை என்றால், சாமானியர்கள் என்ன செய்வார்கள்?'' என்கிறார் இளங்கோ. 2007-ல் தமிழகம் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டபோது, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் இளங்கோ.

ஆனால், இப்படியான குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையுமே அரசும் அதிகாரவர்க்கமும் மறுக்கின்றன. தமிழக அரசே ஓர் உதாரணம். ''அரசு எதையும் மறைக்கவில்லை'' என்று அடித்துக் கூறுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்.

டெங்குவில் நான்கு வகைகள் இருக்கின்றன. அதேபோல, நோயின் தாக்குதலிலும் பல கட்டங்கள் இருக்கின்றன. பெரிய தொந்தரவுகள் கொடுக்காமல் ஒரு வாரத்தில் கடந்துவிடுவதில் இருந்து, மரணத்தைத் தருவது வரை. டெங்குவால் பாதிக் கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்வதற்குள் ளாகவே பலரையும் அது கடந்துவிடும். கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள். உண்மைகளை மறைக்க இந்த அம்சத்தைத்தான் அரசு பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால், டெங்குவால் ஒரு வாரக் காய்ச்சலில் அடிபட்டவர்களும்கூடப் பல மாதங்களுக்கு அதன் பாதிப்புகளை உடல் அளவிலும் மனதள விலும் சுமக்க வேண்டும். மேலும், அடுத்தடுத்த முறை டெங்குவின் பாதிப்புக்கு உள்ளானால், மரணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் அதிகம்.

டெங்குவுக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கின்றன. பிரெஞ்சு மருந்து நிறுவனமான 'சனோஃபி பாஸ்டர்’ இதில் முன்னணி வகிக்கிறது. கடந்த வாரம் டெங்கு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாக அறிவித்த இந்த நிறுவனம், ''எல்லாம் நல்லபடியாக முடிந்தால், 2015 இறுதிக்குள் சந்தைக்கு இந்த மருந்து வரலாம்'' என்கிறது. ''ஆனால், அப்படி வந்தாலும், டெங்குவில் இப்போது இருக்கும் மூன்று வகைகளுக்குத்தான் அது பலன் அளிக்கும். மீதி ஒரு வகைக்கு மருந்து கண்டறியப்பட வேண்டும். டெங்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சி என்பது பெரும் சவால், முழுமையான தடுப்பு மருந்து இன்னும் 10 ஆண்டுகளில் கண்டறியப்படலாம், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்!'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இத்தகைய சூழலில், ஐரோப்பாவிலும் இப்போது டெங்கு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 1,357 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவோடு ஒப்பிடுகையில், இது பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், இதற்கே ஐரோப்பிய நாடுகள் பதற்றம் அடைந்திருக்கின்றன. முன் எப்போதையும் விட டெங்குவின் தாக்குதல் இப்போது தான் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறது ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்தியா வில் இருந்து டெங்கு பாதிப்போடு வந்தவர்கள் மூலமாகவே உலகெங்கும் டெங்கு பரவுகிறது; இந்திய அரசின் அலட்சியமும் தில்லுமுல்லுமே உலகம் முழுவதும் டெங்கு பரவ முக்கியமான காரணம் என்று ஐரோப்பியர்கள் சந்தேகிக்கின்றனர். பிரச்னையை இந்திய அரசு மூடி மறைப்பதால், மக்கள் இடையே விழிப்பு உணர்வு இல்லாமல் போகிறது; மருந்தைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் அது முட்டுக்கட்டையாகிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்திய அரசோ, 'இந்தப் பிரச்னையில் உண்மையைப் பேசினால், டெங்குவைக் கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டி இருக்கும். அப்படி அறிவித்தால், டெங்குவுக்கான சிகிச்சைக்கு முழுமையாகப் பொறுப்பு ஏற்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவும் வேண்டி இருக்கும். கொசுக்கள் மீது மக்களுக்கு ஏற்படும் அச்சம், மின்சாரத்தை முழுமையாகக் கொடுக்க முடியாத அரசின் மீதான கோபமாக உருவெடுக்கும். சர்வதேச அளவில் சுற்றுலா மற்றும் வியாபாரம் சார்ந்து இந்தியாவுக்கு அடி விழும். எல்லாவற்றுக்கும் மேல் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில் ஆட்சிக் கனவுகளுக்கு டெங்கு உலைவைக்கும்’ என்று நினைக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் மட்டும் தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 34 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டு உள்ளது. அரசின் துரோகத்தால், தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன. டெங்குவுக்கு ஒரு வார சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் மருத்துவமனைகள், வெறும் 300 ரூபாய்க்குச் செய்யக்கூடிய டெங்கு ரத்தப் பரிசோதனைக்கு 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றன. அரசு சிறப்பு ரத்த தான முகாம்கள் நடத்தினால், ஏராளமாக ரத்தம் திரட்ட முடியும் என்கிற சூழலில், அப்படிச் செய்யாததால், டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தத்தட்டுகள் பெற கூடுதல் விலை கொடுத்து மக்கள் அலைகிறார்கள். ஒருபுறம் நோயும் இன்னொருபுறம் சுயநல வெறி பிடித்த அரசும் மருத்துவத் துறையுமாக நோயாளிகளைக் கொல்கின்றன.

ஒரு கொள்ளைநோய்த் தாக்குதலின்போது, மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்களைக் காக்கவும் முடியாத அரசு, குறைந்தபட்சம் மக்கள் அவர்களை அவர்களே காத்துக்கொள்ளக்கூட அனுமதிக்காமல் தடையாக இருக்கிறது. காலம் இதை ஒருபோதும் மன்னிக்காது!

-சமஸ்

சாவுகூட எங்களைப் பிரிக்காது!
மதுரை - சென்னகரம்பட்டியில் தலித் மக்களின் மண் உரிமைக்காகப் போராடியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட அம்மாசி, வேலுவை நினைவு இருக்கிறதா? வேலுவின் மகன் வேலுமணி, தனது கல்லூரித் தோழி மஞ்சுளாவைக் காதலித்து கடந்த மார்ச் மாதம்தான் திருமணம் செய்திருக்கிறார். திடீரென டெங்குவால் பாதிக்கப்பட்ட வேலுமணி, கடந்த 16-ம் தேதி இறந்துவிட, அடக்கம் செய்த மறுநாளே 'காதல் கணவனைப் பிரிந்த சோகம் தாங்க முடியாமல், தீக்குத் தன்னைத் தின்னக் கொடுத்திருக்கிறார் மஞ்சுளா. உடலில் 65 சதவிகிதத் தீக் காயங்களுடன் இருக்கும் மஞ்சுளாவை மேலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்துக் காப்பாற்றப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் மருத்துவர்கள்.

தலை முடி வழிக்கப்பட்டு, உடல் முழுக்கக் கட்டுக்களுடன் மஞ்சுளாவைப் பார்த்தபோது, என்னை அறியாமலேயே கலங்கின கண்கள். திக்கித் திணறித்தான் பேசினார் மஞ்சுளா. ''தலை தீபாவளியைச் சந்தோஷமாக் கொண்டாடினோம். ஆனா, தீபாவளிக்கு மறுநாள் ராத்திரியே அவருக்குக் குளிர்க் காய்ச்சல் வந்துருச்சி. விடியறதுக்குள்ள ரொம்பத் துடிக்க ஆரம்பிச்சிட்டாரு. பயந்து போய் மேலூர் பெரியாஸ்பத்திரிக்குப் போனோம். ரத்த டெஸ்ட் எடுத்தாங்க. டெஸ்ட் ரிசல்ட்கூடக் கொடுக்காம, 'இது மர்மக் காய்ச்சலு... மதுரைக்குக் கொண்டுபோங்க’னுட்டாங்க. மதுரைக்குப் போனதும் அவசர சிகிச்சைப் பிரிவுல சேர்த்தாங்க. திரும்பவும் 114-வது வார்டுக்கு மாத்துனாங்க. தள்ளுவண்டிகூடத் தரலை. நடந்தே கூட்டிக்கிட்டுப் போனோம். ராத்திரி மயக்கமாகி, கண்ணு சொருகிடுச்சு. அப்பவும் பாதி மயக்கத்துல அவுக, 'கண்ணு பயந்துராத... உன்னைவிட்டுப் போவ மாட்டேன். உங்கூட வாழத்தான் நான் பொறந்தேன். போவ மாட்டேன்...’னு அழுதாக. அப்பவே அவுகளுக்கு கை, கால் எல்லாம் ஜில்லுனு போயிருச்சு. அப்புறம்... அப்புறம்...'' என்று அதற்கு மேல் பேச முடியாமல் மயங்கிச் சுருண்டுவிட்டார்.

'சாவுகூட எங்களைப் பிரிக்காது... சாவுகூட எங்களைப் பிரிக்காது...’ என்று சன்னமாக அவரது உதடுகள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தன!

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

நன்றி: ஆனந்தவிகடன், 05 டிசம்பர் 2012