காவிரி டெல்டா மாவட்டங்களில்... ஆறுகளைப் போலவே, ஆற்றாமையால் அழுது புலம்பும் விவசாயிகளின் கண்ணிலும் நீர் வற்றியே கிடக்கிறது. உச்சக்கட்டமாக உழவர்களின் உயிர்களும் உருகத் தொடங்கி இருப்பதுதான் பெரும் சோகம். எத்தனை முறை தோல்வியுற்றாலும், அடுத்த முறை கலப்பையோடு தயாராக நிற்பானே, தமிழ்நாட்டு விவசாயி? இப்போது மட்டும் என்ன ஆயிற்று அவனுக்கு? வயலுக்குத் தெளிக்கும் பூச்சிமருந்தை ஏன் வயிற்றுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறான்?
ஆதங்கத்தோடு அலசினோம் அதற்கான காரணத்தை...
டெல்டாவின் பயிர்க் காலம்... ஜூன் தொடங்கி... ஜனவரி வரையிலும் நீடிக்கும். குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று போகங்களும்... அதையட்டிய உளுந்து, பயறு சாகுபடியும் இதில் அடங்கும். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, முதல் போகமான குறுவை என்பது கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. காரணம்...? வழக்கமாக ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, திறக்கப்படாததுதான். இந்த ஆண்டு, அணை திறக்கப்பட்டதே செப்டம்பர் 17-ம் தேதிதான். மூன்று மாதங்கள் கடந்த பிறகே திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியைக் கைவிட்டனர் விவசாயிகள். அடுத்த போகமான சம்பாவுக்கும் பருவம் தப்பிப்போய்விட்டது என்பதால், அதிலும் அதிக ஈடுபாடு இல்லாமலேதான் இருந்தனர். செப்டம்பருக்குள் நாற்று நட்டால்தான், அக்டோபர் மாத மழைக்குள் பயிர் கிளம்பி, மார்கழியில் அறுவடைக்கு வரும். ஆனால், செப்டம்பர் வரையிலும் நாற்றங்கால் தயாரிக்கவே தண்ணீர் இல்லாதபோது, எதற்காக வம்பு என்று பயந்து கொண்டு பேசாமல் இருந்தனர்.
ஆனால், இடையில் அரசாங்கத் தரப்பிலிருந்து செய்யப்பட்ட குளறுபடிகள்தான், விவசாயிகளை மேலும் நோகடித்து, தற்போது தற்கொலையை நோக்கி இழுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளன. '12 மணி நேர மும்முனை மின்சாரம் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு பம்ப்செட் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்யலாம். அத்தோடு, பம்ப்செட் இல்லாத 10 விவசாயிகளுக்கு நாற்று உற்பத்தி செய்து கொடுத்தால்... விதை மானியம், உர மானியம், ஊக்கத்தொகை எல்லாம் தரப்படும்; நேரடி நெல் விதைப்பு செய்தால், அதற்கும் 'மானியம்’ தரப்படும்...' இப்படியெல்லாம் அறிவிப்புகளை அள்ளிவிட்டது அரசாங்கம். இந்த அலப்பறைகளால், 'நிலத்தை சும்மா போட்டு வைப்பதற்கு ஏதாவது செய்து வைக்கலாமே’ என்ற எண்ணத்தில் வயலில் இறங்கினார்கள், விவசாயிகள்.
ஆசை காட்டிய அரசு, சொன்னபடி 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தையும் தரவில்லை, மானியங்களையும் தரவில்லை. மேட்டூரில் இருந்து தண்ணீரையும் தரவில்லை. இதனால், சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. கடனாக வாங்கிப் போட்ட பணம் வயலில் கருகிக் கொண்டிருக்க... அதைப் பார்க்க முடியாமல் வேதனையில் மனமுடைந்து போயிருக்கிறார்கள், விவசாயிகள். இதன் உச்சக்கட்டமாக அடுத்தடுத்து தற்கொலைகளும் அரங்கேற, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.
இதைப் பற்றி பேசும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் கீவளூர் தனபாலன், ''ஆலைக்குக் கொடுத்த கரும்புக்கு பணம் வராததால், உயிரை மாய்த்துக் கொண்ட மயிலாடுதுறை, மாப்படுகை விவசாயி முருகையனைத் தொடர்ந்து... இப்போது பயிர் கருகிப்போனதால், விஷம் குடித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் கீழ்வேளூர் அருகேயுள்ள கூரத்தாங்குடியை சேர்ந்த விவசாயி ராஜாங்கம். தன்னுடைய இரண்டு பிள்ளைகள், சகோதரனுடைய (இவர் இறந்துவிட்டார்) இரண்டு குழந்தைகள் என நான்கு பிள்ளைகளை ராஜாங்கம்தான் வளர்த்து வந்தார். ஆனால், இந்த நான்கு பிள்ளைகளுமே தற்போது தந்தை இல்லாமல் தவிக்கின்றன'' என்று சோகம் பொங்கச் சொன்னவர்,
''தயவு செய்து இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் குடும்பம் நீங்கள் இல்லாமல் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்'' என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
''ஆறு ஏக்கர்ல விதைக்கால் (நேரடி நெல் விதைப்பு) செஞ்சாரு. அது புயலடிச்சப்ப மூழ்கி, அழுகிப் போச்சு. சரி போவுதுனு அப்படியே விட்டுட்டாரு. ஆனா, வாய்க்கால்ல தண்ணி வந்ததும் எல்லோரும் நாத்தங்கால் அமைச்சு விதைவிட ஆரம்பிச்சதும், இவரும் நாத்து விட தயாராயிட்டார். கீவளுர் போய் ஏழு சிப்பம் விதை வாங்கி, நாத்து விட்டாரு. விட்ட நாத்தைப் பறிச்சு நடறதுக்குகூட தண்ணி வரல. ரிப்பேரா கிடந்த டீசல் இன்ஜினை கடன் வாங்கி ரிப்பேர் செஞ்சு, தண்ணி பாய்ச்சி பாதி வயலுக்கு நட்டாரு. மீதி வயலும், மீதி நாத்தும் சும்மாதான் கிடந்துச்சு. பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு, திரும்பவும் ஆத்துல கொஞ்சம் தண்ணி வந்தவுடனே, யார் யாரையோ பார்த்து கடன் வாங்கி, ஒரு கட்டு முன்னூரு ரூபாய்னு பத்து கட்டு நாத்து வாங்கிட்டு வந்து, மீதமிருந்த வயலையும் நட்டாரு. அதுவரைக்கும் கையில இருந்த நகையெல்லாம் அடகு வெச்சாச்சு. அஞ்சு பைசா வட்டிக்கு நாப்பதாயிரம் ரூபாய்க்கு மேல கடனும் வாங்கியாச்சு.
வாய்க்கால்ல தண்ணி குறைஞ்சு போகவும், திரும்பவும் இன்ஜினுக்கு டீசல் வாங்கி ஊத்தி, தண்ணி இறைக்க ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கும் ஊரைச் சுத்தி வட்டிக்கு கடன் வாங்கியாச்சு. ஒரு கட்டத்துல வாய்க்கால்ல சுத்தமா தண்ணி வராம போயிடுச்சு. 'நட்ட நடவு காயுதே’னு புலம்பினவரு... அப்பவும் அசராம ஊர்குளத்துல இன்ஜின் போட்டு தண்ணி இறைச்சாரு. தொடர்ந்து, அதை ஓட்டறதுக்கு டீசல் வாங்க காசில்லை. என்கிட்டே வந்து 'என்னா இருக்கு’னு ஆராய்ஞ்சு பாத்தவரு 'ஒண்ணும் இல்லையே’னு சோர்ந்து போய் படுத்தாரு. மறுநாள் நிறைய பேரைக் கேட்டும் கடன் கிடைக்காததால சுணங்கிப் போய் வந்தார். அப்படியே கொல்லைப் பக்கம் போனவர், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிச்சு செத்துட்டாரு'' என்றபடி தேம்பித் தேம்பி அழுகிறார், ராஜாங்கத்தின் மனைவி தேவி. அவரைத் தேற்றுவதற்கு யாரிடமும் வார்த்தைகள் இல்லை.
''வட்டாட்சியர், கோட்டாட்சியர்... என அதிகாரிகள் வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை உதவியோ நிவாரணமோ... எதுவும் அறிவிக்கப்படவில்லை. சாதி மோதல் காரணமாக இறந்தவர்களின் குடும்பம்... சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கெல்லாம், அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்று நிவாரணமாகத் தரும் அரசாங்கம், தனது கையாலாகாத நிலையால் மாண்டு போன மனித உயிருக்கு கருணை காட்ட யோசிக்கிறது. அப்படி நிவாரணத்தைக் கொடுத்துவிட்டால், 'தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை இருக்கிறது' என்பது வரலாற்றில் பதிவாகிவிடும் என்பதால், சுத்தமாக மூடி மறைக்கப் பார்க்கிறது அரசாங்கம்'' என்று குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி கேட்டபோது, ''அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருக்கிறோம், நிச்சயம் நிவாரணம் பெற்றுத் தருவோம்'' என்று நம்பிக்கை ஊட்டும் வகையில் சொன்னார்.
இது இப்படியிருக்க.. ராஜாங்கம் இறந்த ஈரம் காய்வதற்குள், நவம்பர் 29 அன்று கீழையூர் வட்டத்தில் உள்ள மகிழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜும் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுவிட, 'இன்னொரு விதர்பாவாக மாறிக் கொண்டிருக்கிறதோ டெல்டா’ என்ற அச்சத்தில் ஆடிப்போய் இருக்கிறார்கள், ஒட்டுமொத்த விவசாயிகளும்!
''அரசை நம்பி விவசாயம் செய்தவன், இன்று வீணாகப் போகும் நிலைமையில் அவனைக் காப்பாற்ற வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. அதற்காக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு 20 ஆயிரம் ரூபாயை அரசு இழப்பீடாகத் தர வேண்டும். தண்ணீர் வராது என்பதால், சுதாரித்துக் கொண்டு சாகுபடி செய்யாமல் போட்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் வருமானஇழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு ஏக்கருக்கு
10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாகத் தர வேண்டும். அதோடு, காவிரி பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க இந்த ஆண்டே முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால், சாவின் விளிம்பில் நிற்கும் விவசாயிகள் சவக்குழிக்குள் விழுவதை, இனி யாராலும் தடுக்க முடியாது. அந்தப் பாவம் முழுவதும் ஆள்பவர்களைத்தான் சேரும்'' என்று சாபம் விட்டார் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.
விவசாயத்தில் தோல்வி, கந்துவட்டிக் கொடுமை, அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாதக் கொடுமை என்று கடந்த பல ஆண்டுகளாகவே, தற்கொலை பூமியாக மாறிக்கிடக்கிறது மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதி. அங்கே இதுவரை இரண்டு லட்சம் விவசாயிகள் வரை தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள். அப்படியரு நிலைக்கு, டெல்டாவும் மாறிவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் விவசாயிகளைத் தேற்றி, காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைவிடுத்து, விவசாயத் 'தற்கொலை'களை மூடி மறைப்பதில் கவனத்தைச் செலுத்தினால்... விளைவு விபரீதமாகவே இருக்கும் என்பதற்கும் சாட்சி... விதர்பாவேதான்!
-கரு. முத்து,படங்கள்: கே. குணசீலன்
நன்றி: பசுமைவிகடன், 25.12.2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக