சனி, டிசம்பர் 22, 2012

திருமதி ரோசலின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! -PMANE


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்
டிசம்பர் 21, 2012

பத்திரிக்கைச் செய்தி

[1] திருமதி ரோசலின் மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பு!
கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் நாள் இடிந்தகரையில் நடந்த அணுஉலை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையால் கைது செய்யப்பட்ட திருமதி. ரோசலின் தேவசகாயம் (வயது 63) என்ற எங்கள் அன்புத் தாயார் இன்று அகால மரணமடைந்தார். கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யத் தவறியதும், பிணை கொடுக்காமல் இழுத்தடித்ததும், மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும் என்று நிபந்தனை விதித்ததும்தான் அவர் அகால மரணமடையக் காரணங்கள். தமிழக அரசின் கைகளில் படிந்திருக்கும் இரத்தக்கரைக்கு அவர்கள் பதில் சொல்லியேத் தீரவேண்டும். எங்கள் போராளிகள் பிணை கிடைக்காமல் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மதுரையில் காவல் நிலையங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனைத் தமிழர்களை கொல்லத் திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு?

[2] குண்டர் சட்டக் கொடுமை!

தமிழக அரசு எங்கள் போராட்டக்காரர்கள் ஆறு பேரை குண்டர் சட்டத்தில் அடைத்து வைத்திருக்கிறது. லூர்துசாமி என்ற 68-வயதுப் பெரியவர் உழைத்து வாழ்கிற ஒரு மீனவர். நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் பிணையில் வெளியே உலவிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடாத தமிழக அரசு, உழைத்து வாழ்கிற உண்மையான மக்கள் மீது குண்டர் சட்டம் போடுகிறது. ஒருவர் மீது ஒரே ஒரு வழக்கு இருந்தாலும் குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் அண்மையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். தற்போது அமுலில் இருக்கும் சட்டங்களே அனைத்து விதமானக் குற்றங்களையும் கையாளப் போதுமானதாக இருக்கும்போது எதற்கு மேலும் கறுப்புச் சட்டங்கள்? இந்தியாவுக்கேப் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற முதல்வர் இந்திய ஜனநாயகத்துக்கு அளிக்கிற பரிசா இது? மற்ற மாநில மக்கள் இவரை ஒரு பாசிசத் தலைவர் என்று நினைக்க மாட்டர்களா?

[3] பேரிடர் நாடகம்!

அணுமின் நிலையத்தால் என்னென்ன தீங்குகள், பாதிப்புக்கள் வரும், மக்கள் எப்படித் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்ற அடிப்படை அறிவை சாதாரண மக்களுக்குக் கொடுங்கள் என்று நாங்களும், சமூக சேவகர்களும், நீதிமன்றங்களும் கேட்டுக்கொள்ளும்போது, அரசு அதிகாரிகள் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, பொய் சொல்லி அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நக்கநேரி என்ற குக்கிராமத்தில் யூன் 9 அன்றும் சங்கநேரி என்ற இன்னொரு குக்கிராமத்தில் டிசம்பர் 11 அன்றும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும், சேரன்மகாதேவி கோட்டாட்சியரும் சேர்ந்து முதியோர் உதவித்தொகை தருகிறோம் என்று ஒரு கூட்டம் மக்களைக் கூட்டிவைத்து, அணுஉலை ஆவணப்படம் ஒன்றை காட்டிவிட்டு, பேரிடர் பயிற்சி பிரமாதமாகக் கொடுத்துவிட்டோம் என்று கூறியிருக்கின்றனர். இன்று (டிசம்பர் 21) சிவசுப்ரமணியபுரம் எனும் கிராமத்தில் இதே போன்ற ஒரு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த “பேரிடர் பயிற்சி மிகச் சிறிய குக்கிராமங்களில் கொடுக்கப்படுவதும், பெரிய ஊர்களிலோ, கடலோரக் கிராமங்களிலோ கொடுக்கப்படாததும் ஏன்? முதியோர் உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என்றெல்லாம் லஞ்சம் கொடுப்பது ஏன்? அண்மையில் உவரி ஊருக்குப் போய் அணுமின் நிலையத்தின் மடிக்கணினி கொடுத்தும், தூண்டில் பாலம், மீன் பதனிடும் நிலையம், மருத்துவமனை போன்றவைக்  கட்டித்தருகிறோம் என்றெல்லாம் ஆசை காட்டியிருக்கிறார்கள் அதிகாரிகள். அங்கே ஒரு “பேரிடர் பயிற்சி நடத்தலாமே? தமிழக மக்கள் இது போன்ற கபட நாடகங்களுக்குத் துணை போகாது, தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் “பேரிடர் பயிற்சி கொடுக்கப்பட்ட ஊர்களில் சில ஊடக நண்பர்கள் போய் அந்த மக்களுக்கு அணுஉலை ஆபத்துக்கள் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது, எப்படி அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஒரு சிறிய ஆய்வு செய்து சொல்லுங்களேன்?

[4] வள்ளியூர் நீதிபதி அவர்கள் கண்ணியத்தை நாங்கள் மதிக்கிறோம்!

வள்ளியூர் நீதிபதி அவர்கள் பற்றி யாரோ இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதி பிரசுரித்துவிட்டு, நாங்கள் எழுதியது போன்ற ஒருத் தோற்றத்தை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். இந்தக் கட்டுரைக்கும் எங்களுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் கிடையாது என்பதையும், வள்ளியூர் நீதிபதி அவர்கள் கண்ணியத்தை நாங்கள் மதிக்கிறோம் என்பதையும் நாங்கள் இதன்மூலம் பதிவு செய்ய விரும்புகிறோம்.

போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

(1) பிணை கொடுப்பதென்பது நீதித்துறை சம்பந்தப்பட்டது. அதற்க்கு நீங்கள் எப்படி அரசைக் குற்றம் கூற முடியும்....சரி ..சரி ..நீங்கள் தான் கூடங்குளம் போராட்ட குழுவினராச்சே ...அரசைக் குறை கூறாமல் பொழுது விடியாதே..

(2) பிணை நிபந்தனையில் ஒரு குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்குள் இருந்துகொண்டு தினமும் குறிப்பிட்ட காவல் நிலயத்தில் கையொப்பமிட வேண்டும் என்பது வழக்கம் தானே......உங்களுக்கு வீட்டுக்குள்ளேயே ராமஜெயம் எழுதுற மாதிரி வீட்டுகுள்ளார சமைச்சுக்கிட்டே கையெழுத்து போட்டுக்கலாம்னு சொல்லியிருந்தாத் தான் திருப்தியா....அட...ஏசப்பாவே

(3) பிணை கிடைக்கவில்லையெனில் அடுத்த உயர்நிலை நீதிமன்றத்தில் பிணைக்கு விண்ணப்பிப்பதை விட்டுவிட்டு இங்கு பிளாக்கில் விண்ணப்பித்து என்ன பயன்...?

(4) போராட்டக்காரர் என்று ஆகிவிட்ட பிறகு சிறைக்கு பயப்பட்டால் எப்படி சாரே.... ...காலையில் அரெஸ்ட் செய்து மாலை வரை கல்யாண மண்டபத்தில் வைத்திருந்து விட்டு பிறகு விட்டு விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு போராடியது மாதிரி தெரிகிறதே ...

(5) குண்டர் சட்டத்தையே செல்லாது என அறிவிக்கக் கோரி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் போட்டு ஒரு கை பாக்கலாமில்ல .....அதான் அய்யா சுந்தரராஜன் இருக்காரே.

கருத்துரையிடுக