நம்மாழ்வார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்மாழ்வார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நம்மாழ்வார் தொடுத்த போர் !

நம்மாழ்வார் இறப்புச் செய்தி வெளியான நாளிதழ்களின் மறுபக்கம் மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருந்தது. அது எம்.எஸ். சுவாமிநாதனின் மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்துதான். இது தற்செயலானதாகத் தோன்றினாலும், இந்திய விவசாய வரலாற்றின் திசைகளைச் சுட்டிக் காட்டும் இரு வேறு பாதைகளின் வரைபடம் என்றும் இணையாததாகவே உள்ளது. கடந்த 50,60 வருடமாக நாம் அதிகமாக நோயுற்று இருக்கிறோம், நோய்களின் பெயர்களும் நமக்கு நெறைய நேரம் தெரிவதில்லை, மருந்துக்கடைகளில் மருந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், மருத்துமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது, மருத்துவர்கள் கட்டடங்களுக்கு மேல் கட்டடங்கள் கட்டுகிறார்கள், வியாபாரம் அமோகம், கல்லாபெட்டி நிரம்பி வழிகிறது. 80 சதவீத மக்களின் நோயுற்ற உடல்களின் காரணம் என்ன? ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை நோய்களினால் முடக்கிப் போட அடிப்படை காரணமாக உணவு இருக்கிறது. ஒரு பன்னாட்டு அரசியல் காரணமாக நம்முடைய உணவு முறையும், விவசாய முறையும் மாற்றப்பட்டது, நம் முந்தைய அரசின், அரசியல்வாதிகளின் துணையோடு, 1960 களில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் நம்முடைய விவசாய முறை மாற்றப்படுவதற்கு, விடுதலை கிடைப்பதற்கு முன்பே போடப்பட்ட இந்த சதிதிட்டத்திற்கு பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள் உள்ளன.
நம்மாழ்வார் ஆரோவில் பெர்னார்டுடன் 
புகைப்படம் உதவி- பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ஆரம்பித்த நாளிலிருந்தே நம்முடைய பாரம்பரிய விவசாய முறையும், கல்வி முறையும் மாற்றப்பட்டு, அது இழிவானதாக சுட்டிக்காட்டும் போக்கு ஆரம்பித்து விட்டது. மக்களே தம்முடைய வாழ்க்கையை நாகரிகமற்றதாக எண்ணும் போக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்க ஆரம்பித்த காலத்திலிருந்து விடுதலை கிடைப்பது வரை பல்வேறு உலக நாடுகளின் விவசாய ஊடுருவல் நம்முடைய நாட்டில் இருந்தன. காந்தி புகழ்பெற்ற தலைவராயிருந்த போதிலும், அவரோடு இணைந்து பணியாற்றிய, தற்சார்பு சிந்தனைகளை விதைத்த ஜே.சி. குமரப்பா போன்றவர்களை நேருவின் படையினர் புதிய, நவீன இந்தியாவை உருவாக்குவதில் தடையாக இருக்கக்கூடும் என்று முதலிலேயே கண்டுகொண்டனர். பிரமாண்டமான இந்தியாவை உருவாக்குவற்காக ஜே.சி. குமரப்பா போன்ற சிறியவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். விவசாயத்தைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வைத்திருந்தாலும், பன்னாட்டு நவீன தொழில்நுட்பத்தை எதிர்த்து, 5000 வருட இந்திய விவசாய வரலாற்றை முன்வைத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். அவருடைய எச்சரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. நாம் நோயுற்று இருப்பதின் முதல் விதை இதுதான்.

 பப்ளிகேசன் டிவிசன் 1960 களில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஒன்று Food weapon,(உணவு ஆயுதம்), இரண்டு weather weapon(தட்ப வெப்ப ஆயுதம்). இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தவர் வைகை குமாரசாமி, நாம் நோயுற்று இருப்பதை முதலில் உணர்ந்த தலைமுறையைச் சார்ந்தவர் அவர். புத்தகத்தின் கருத்துகள் எளிமையானவைதான், எல்லா அபாயங்களையும் போல, ஒரு நாட்டை அடிமையாக்குவற்கான எதிர்காலத் தொழில்நுட்பத்தை வலுவாக அப்புத்தகங்கள் முன்வைத்தன. ஒரு நாட்டின் உணவு முறைகளையும், தட்பவெப்பத்தினையும் மாற்றி அமைப்பதன் மூலம் அந்நாட்டை அடிமையாக்க முடியும் என்பதுதான். இதற்கான திட்டங்களின் முதல் படிதான் பசுமைப்புரட்சி.

 1960 களில் இச்சதித்திட்டம் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா தன்னுடைய போரை இந்தியாவின் மீது தொடங்கியது. போரை மிகவும் வெற்றிகரமாக நடத்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, சென்னையில் இருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லாமல் விவசாய விஞ்ஞானிக்கான விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை போரும் தொடர்கிறது. விருதுகளும் தொடர்கின்றன. எம்.எஸ். சுவாமிநாதனைத் தவிர இப்போரில் இந்தியாவின் மிக முக்கிய பார்ப்பனர்கள் ஈடுபட்டனர், அல்லது இந்த இந்த பார்பனர்தான் வேண்டும் என்று அமெரிக்கா அடம்பிடித்து சிவராமன் போன்ற பார்ப்பனர்களை நியமித்தனர். இந்த சிவராமன்தான் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அழித்து, நம் நிலக்காட்சிகளின் அழகையும், 500 வருட தமிழ்க்காட்சிப் படிமங்களையும் மாற்றியவர். கருவேல மரத்தை வலுக்கட்டாயமாக திணித்தவர், நம்முடைய காமராஜர் அல்ல. காமராஜர் ஆட்சிக்காலத்தில் சிவராமனால் திணிக்கப்பட்டது. இவ்வாறு தமிழனின் உடலையும், மனதையும் நிலைகுலையச் செய்யும் போர் இன்று வரை உக்கிரமாகத் தொடர்கிறது. போரின் விளைவுகள் தெரிந்ததே, மரணங்களும், துயரங்களும் . ஈழஇனப்படுகொலைக்குப் பின்னர் ‘ஒவ்வொறு அழிவுக்குப் பின்னரும் நெறைய வாய்ப்புகள் உள்ளன’ அன்று கூவிய எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இம்மரணங்களும், துயரங்களும் நடக்கும் என்று தெரிந்தேதான் பசுமைப்புரட்சியை அரங்கேற்றினார். இரண்டு லட்சங்களுக்கு மேலான விவசாயின் தற்கொலைகளுக்குப் பின்னும் அமெரிக்க பயணம் இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இரண்டு வருடங்களுக்கும் மேலான கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை வழிநடத்தும் சுப.உதயக்குமார், ‘பார்பனத்துவம், அணுத்துவம்’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அணுசக்தி துறையின் பெரும்பாலன அனைத்து தலைவர்களும், அதிகாரிகளும் பார்பனர்களே, இந்தியாவின் அணுசக்தி கொள்கைக்கும், அணு உலையினால் மக்கள் கொல்லப்படுவதற்கும் பார்பனர்களின் சதியே காரணம் என்று ஆராய்ந்து விளக்குகிறார் உதயக்குமார். அதே வாதம் பசுமைப்புரட்சிக்கும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து, நம்முடைய விவசாய முறை தவறு என்றும், பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்தாவிடில் உணவுத்தட்டுப்பாடு காரணமாக பஞ்சம் வந்து எல்லோரும் சாக வேண்டியதுதான் என்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு முன் உணவுத்தட்டுப்பாடு வந்தது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதுதான். அதற்கான ஆதாரங்கள் உள்ளது. மேலும் இச்சதித்திட்டம் இந்திய விவசாயிகளின் மத்தியில் சுலபமாக நிறைவேற்றப்படவில்லை, நெறைய எதிர்ப்புகள் இருந்தன. அதிகாரத்தின் மூலமும், அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலியின் மூலமும், தினமணி போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சியான தலையங்களாலும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் உச்சபட்சமாக ஹலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் போன்ற கொடிய விஷங்கள் நிலங்களில் தூவப்பட்டன. அதன் விளைவுகள் இன்னும் பயங்கரமாக உள்ளது. நாம் நோயுற்றதற்கான போர் இப்படித்தான் நடந்தேறியது. இக்கொடிய வரலாற்றை அறிந்தவர் சிலர், அறியாதவர் பலர். மருத்துவர்கள் கார்ப்பொரேட்டுகளாக மாறியதும் இதனால்தான். அனேக மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பாவர்களே தவிர, நீங்கள் நஞ்சான உணவு உட்கொள்ளுகிறீர்கள், உணவை மாற்றுங்கள் நோய்கள் குணமாகும் என்று சொல்வதில்லை.

 நம்மாழ்வார் குறித்த அஞ்சலிக்கட்டுரைக்கு இவ்வரலாறே அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பல்வேறு அழிவுகள் நடந்து விட்டன. சுற்றுச்சூழல் முன்னோடியான ரேச்சல் கார்சன் தன்னுடைய ’மொளன வசந்தம்’ புத்தகத்தில் முதலில் பூச்சிக்கொல்லியின் கொடுமையால் எவ்வாறு நிலமும், உயிரினங்களும் அழிந்தன என்பதை விளக்க ஆரம்பித்தார். ஒற்றைவைக்கோலில் புரட்சியை ஆரம்பித்தார் ஃபுகோகா சதித்திட்டங்கள் அம்பலமாக தொடங்கின. இந்தியாவிலும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் அமெரிக்க எம்.எஸ். சுவாமிநாதன் சதிகளை அம்பலப்படுத்தத் தொடங்கினர். வந்தனா சிவா, கிளாட் ஆல்வாரிஸ், ரிச்சார்யா போன்றோர் ஊடகங்களில் போரின் கொடுமையை விளக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் எஸ்.என், நாகராஜன், வைகை குமாரசாமி போன்றோர் மூர்க்கமாக இதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். புளியங்குடியில் கோமதி நாயகம் விவசாய இயக்கம் இவர்களின் சிந்தனைப் புரட்சிகள் சிறப்பாக செயல்படுத்தியது. சிறுபத்திரிக்கைகள், குறுங்குழுக்கள் மத்தியில் வேகமாக பரவ ஆரம்பித்தன. இச்சூழலில்தான் விவசாயத்துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து பூச்சிக்கொல்லியின் கொடுரங்களை உணர்ந்து, புகோகாவின் தத்துவங்களைத் தரிசித்து வேலையை உதறி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு எதிராகத் தலைமையேற்று பெருந்திரள் விவசாய இயக்கமாக மாற்ற தன்னையே அர்ப்பணித்தார் நம்மாழ்வார். அன்றிலிருந்து அவர் சாகும் வரை எந்த கூட்டத்திலும் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன்களின் பேரை அவர் உச்சரிக்க மறந்ததில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஞானம், விவசாய வரலாற்றில் நேரடி அனுபவம், மண்ணோடும், சகதியோடும் கரைந்த விவசாய அறிவு என்று தமிழகத்தையும், உலகத்தையும் வலம் வரத் தொடங்கினார் நம்மாழ்வார். அவரது பயணங்கள் அசாத்தியமானது. தீவிரவாத இயக்களின் தலைவர்கள் போல இருஇரவுகள் அவர் ஒரே ஊரில் தங்கியதில்லை. பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு அவர் மூச்சாயிருந்தது. நோயுற்றவர்களும், விவசாயிகளும், இளைஞர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். பின் தொடர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயிகளாக மாறினர். அவரது நேரடியான விவசாய செயல் முறை விளக்கங்கள் மந்திரத்தன்மையுடையதாய் வசீகரமாக இருந்தது. சிந்தனையிலும் செயலிலும் சளைக்காத போராளியாக இருந்தார். 5000 வருட தமிழக விவசாய அறிவைத் தேடி அவற்றில் மூழ்கித் திளைத்தார். சிறு விவசாயச் செயல்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் அவரை குதூகலிக்கச் செய்தன. சிலந்தி வலைத் தொடர்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். சிலந்தி இல்லாமல் விவசாயம் இல்லை!

 நான் ஒரு மாத காலம் அவரோடு இரவு பகலாக பயணித்திருக்கிறேன். பயணங்களின் கவனக்குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். தன்னைத் தேடி வந்த இளஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தார். வெவ்வேறு ஊர்களில் பன்முகமான விவசாய பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒரு வறட்சியான ஊரையை மக்களின் துணையோடு காடாக மாற்றியிருந்தார், வெறு மரங்கள் நடுவதே சில ஊரில் செய்தார், கால்வாயிலிருந்து மீன்கள் விவசாய நிலத்திற்கு வந்து இரவு முழுவதும் எச்சமிட்டு அதிகாலையில் கால்வய்க்குத் திரும்பும் முறைகளை சில ஊர்களில் ஏற்படுத்தியிருந்தார், கால்நடைகளோடு இணைந்த விவசாயப் பண்ணை, தேனீக்களோடு இணைந்த பண்ணை, மண்புழு எரு மட்டுமே கொண்ட பண்ணைகள் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விவசாயமுறை என்றே அவர் பணி இருந்தது. ஒரே விவசாய முறையை எல்லா ஊர்களிலும் திரும்பத் திருப்பச் செய்யும் விசயத்தை அவர் ஒரு போதும் அவர் செய்வதில்லை. பெரும்பாலும் நீரில்லாத, விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைத் தேர்தெடுத்து அதனை பசுமைப் பூமியாக மாற்றுவதில் அவருக்கு அதிகம் உற்சாகம் இருந்தது. எல்லாமே பசுமையாக மாறியது.

 விவசாயத்திற்கு பிறகு, அவர் பசுமைப் புரட்சியின் கொடுமைகளை ஊர் ஊராக விளக்குவதில் நாட்டுப்புறப் பேச்சாளராக மாறியிருந்தார். 2000 த்திற்குப் பிறகு பயணம் மட்டுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. நகரங்களில் பசுமைப் புரட்சியின் விளைவுகள், விதைகளைப் பாதுகாப்பது, பன்னாட்டு அரசியல் போன்றவை விரிந்தாலும், கிராமங்களில் நேரடியான கள அனுபவம், செயல்முறை விளக்கங்கள் என்று பேச்சைக் குறைத்தார். இடது சாரி சிந்தனை, திராவிட இயக்களின் பேச்சாற்றல், பெரியாரியம், தொல் தமிழ் அறிவு, போன்றவை கலந்து கதம்பமாக மிளிரின. 1960 களில் இவ்வளவு பெரிய கொடூரம் நிறைவேறியது எப்படி என்று இடதுசாரி இயக்கங்களோ, அரசியல் இயக்கங்களோ, தெரியாமல் இருந்தன?. மக்களின் வாழ்வையும், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிப்போடும் பசுமைப்புரட்சிக்கு இந்தியாவில் எல்லா அரசியல் இயக்கங்களும் எப்படி துணை போயின? என்ற கேள்வியும் எழுப்பினார். அதற்குப் பிறகும் கூட இடது சாரி இயக்கங்கள், தன்னைத் தனியாக விட்டுவிட்டன, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 பயணத்தில் நானும் அவரும் ஒரு பள்ளியில் தங்கினோம், இரவு உணவு வழங்கப்பட்டது. சமையல் நன்றாக இருந்தது என்றார், பாவமாய் ஓர் அம்மாவைக் கூட்டி வந்து, இவர்தான் சமைத்தார், இவருடைய கணவர் இறந்து விட்டார், மிகவும் துயரம் என்று ஒருவர் அறிமுகப்படுத்தினார் பரிதாப உணர்வோடு. "அற்புதம்! உன்னைப் பிடித்த கஷ்டம் ஒழிந்தது, விட்டு விடுதலையாகி நிம்மதியாக உன் வாழ்க்கையைத் தொடரு, இனிதான் உனக்கு விடிவு காலம்" என்றார் அந்த அம்மாவைப் பார்த்து, எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டனர், பின்னர் சிரித்தனர், அவர்தான் நம்மாழ்வார்.

 நம்மாழ்வாரின் திடீர் மரணம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இப்பொழுதுதான் எல்லாம் கூடிவருகிறது, மெதுவாகப் பற்றிப் பரவுகிறது என்று உற்சாகமான காலகட்டத்தில் நம்மைவிட்டு மறைந்து விட்டார். எனினும் நம்மாழ்வார் என்பது ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சி, அம்மரபின் நெருப்பை அணைக்காமல் பிறருக்கு கொண்டு செல்வதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

 ஏன் அதனை நெருப்பு என்று குறிப்பிடுகிறேன் என்றால், அது அவிக்கக்கூடியது. ஆனால் பசுமைப்புரட்சியின் சதிகாரர்களை அம்பலப்படுத்தி அவர் கூறியதை யாரும் மறந்து விடக்கூடாது, அவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும், எந்தப் பூச்சிக்கொல்லிக்காகக் கடன் வாங்கி, அதனால் மனம் உடைந்து அதே பூச்சிக்கொல்லியை அருந்தி, தான் வேலை செய்த மண்ணில் விழுந்து, கைகளால் மண்ணைக்கட்டிக் பிடித்து தற்கொலை செய்தார்களோ, அந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும், அதையே நம்மாழ்வாரின் நெருப்பு என்கிறேன். இந்த நெருப்பை நிறுத்தி விட்டால் நம்மாழ்வார் இல்லை, இந்த அரசியல் நெருப்பை அறியாமல் அவரை படிமக்குறியீடாக மாற்றுவதை எதிர்ப்போம். அவர் சாமியாரோ, அன்பானவரோ, ஜக்கி வாசுதேவோ இல்லை?

 2012 முதல் நம்மாழ்வாரின் பணி உக்கிரமடைந்தது, பாலாறு அழிவை மக்களுக்கு செய்தியாக்கி நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். பனை காக்க நடந்தார், கெயில் கேஸ்க்கு எதிராக விவசாயிகளோடு கைகோர்த்தார், அணுஉலைகளை எதிர்த்தார், விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடும் மீத்தேன் வாயுத் திட்டதை எதிர்த்தார். முதலில் அடையாளமாக உண்ணாவிரதம் இருந்தவர், இது கதைக்குதவாது என்று நேரடியாக மக்களைச் சந்தித்து வீரவுரையாற்றினார். உக்கிரமான போர் என்றே சொல்ல வேண்டும், அவர் இறப்பதற்கு முதல் நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை கடுமையாக எதித்துப் பேசினார். இறுதியாக அவரின் செய்தியாக மீத்தேன் வாயுக்காக விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த கற்களையும், வேலிக் கல்லையும், பிரித்துப் போட ஆணையிட்டார், விவசாயிகள் அக்கல்லைப் பிடுங்கி வீசினார். இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர், போரைத் தொடர்ந்து நடத்துவோம், நம்மாழ்வாரை, உயிர்ப்பிப்போம்.

 -ஆர்.ஆர்.சீனிவாசன் 

 (தீராநதி பெப்ரவரி 2014 இதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)

சனி, ஜனவரி 11, 2014

‘கட்டபொம்மனா... எட்டப்பனா..?’ - நம்மாழ்வார் (மலரும் நினைவுகள்...!)

 ‘‘மோர்ல வெண்ணெய் எடுக்கத் தெரியாதவ... முறத்துல தங்கம் எடுப்பாளா?’’ என்கிற சொலவடையைப் போல், வயலுக்குப் போடும் உரத்திலேயே எது நல்ல உரம்... எது கெட்ட உரம் எனத் தெரியாமல் கண்டதையும் அள்ளிப் போடுபவர்கள் நம் அப்பாவி விவசாயிகள். அப்படியிருக்கும்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் (பி.டி.) பற்றி பரவிக்கிடக்கும் எதிரெதிர் கருத்துக்களால் குழம்பாமலா இருப்பார்கள்?




இந்தக் குழப்பத்துக்கு விடை தேடும் முயற்சியாக பொங்கலை முன்னிட்டு, கடந்த (2007 ஜனவரி) 13-ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன 'மனித உரிமை-சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர் குழு' மற்றும் 'தோழமை' ஆகிய அமைப்புகள். ‘மரபணு மாற்றப்பட்ட விதைகள் உழவர்களின் வளர்ச்சிக்கா.... நிறுவனங்களின் வளர்ச்சிக்கா..?’ என்ற தலைப்பில் நடந்த விவாத அரங்க நிகழ்ச்சியை வழக்கறிஞர்கள் குழுவின் செயலாளர் சுந்தரராஜன் துவக்கி வைத்தார்.


'உழவர்களின் வளர்ச்சிக்கே' என்றபடி முதலில் மைக் பிடித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தாவர மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் சதாசிவம், ‘‘மரபணு மாற்று தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வறட்சி, உப்பு தன்மையைத் தாங்கி வளரும் தாவரத்தையும், பூச்சி நோய் தாக்காத பயிரையும் வளர்க்க முடியும். அமெரிக்காவுல இருக்கும் ஹவாய் பகுதியில் விளையும் பப்பாளியில் வட்டபுள்ளி நோயின் தாக்கம் அதிகமிருந்தது. எந்த மருந்தடிச்சும் சரியாகலை. பிறகு மரபணு மாற்று தொழில் நுட்பத்தில் வட்டப்புள்ளி நோயை எதிர்க்கும் பப்பாளியை வெளியிட்டாங்க. அதனால வட்டபுள்ளி நோய் தடுக்கப்பட்டதோடு, விளைச்சலும் நல்லா இருந்தது. பி.டி. விவசாயிகளுக்கான கண்டுபிடிப்புதான். இதனால விவசாயிங்களுக்குதான் லாபம்’’ என்று உலக மேற்கோள்களை எல்லாம் சுட்டிக்காட்டி உட்கார்ந்தார்.

வழக்கமான கலகலப்போடு பேசிய 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், ‘‘இந்தியாவில் 55 சதவிகித குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் பாதிப்பு இருக்கு, மூளை வளர்ச்சியும் குறைவாகவே இருக்கு. அதனால் பி.டி-யில் உருவான கோல்டன் அரிசி சாப்பிடுங்கள். இதில் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறதுனு சொல்றார் வெளிநாட்டு விஞ்ஞானி. அதே வைட்டமின் ஏ... கேரட், இறைச்சி, முருங்கைக் கீரை இதிலெல்லாம் இருக்கே. அதைச் சாப்பிடச் சொல்லவேண்டியதுதானே? விவசாயம் இன்று வியாபாரமாகிவிட்டது. நம்மை அடிமையாக்க பலரும் துடிக்கிறார்கள்’’ என ஆக்ரோஷமாக பேசினார்.

பெங்களூரு உயிரியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த குருமூர்த்தி நடராஜன் பேசும்போது, ‘‘இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பத்தாண்டுகளில் பூச்சி மருந்து உபயோகிக்கும் அளவு கிட்டதட்ட 14 சதவிகிதம் குறைந்துள்ளது. இப்படி விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தால் நிறுவனங்கள் எப்படி வளர முடியும்? நாம் சாப்பிடும் அரிசியை பாலீஷ் செய்வதால் அதில் உள்ள வைட்டமின் போய் விடுகிறது. அதே சமயம் கோல்டன் அரிசி ஒரு சதவிகிதமாவது பலன் கொடுத்தால் நமக்கு நன்மைதானே’’ என்று வாதம் செய்தார்.

ஆவேசமாக மைக் பிடித்த உழவர்-உழைப்பாளர் கட்சியின் அகில இந்தியப் பிரதிநிதியான நல்லா கவுண்டர், ‘'ஆடு, மாடு, மனுஷனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வாங்க. எங்கேயாவது விதைக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வாங்களா..? அந்த மாதிரியான வேலைகளை அமெரிக்கா மாதிரியான பைத்தியக்கார நாடுங்கதான் செய்யும். இதெல்லாம் இங்க எப்படிங்க சரிப்பட்டு வரும்? ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக் காட்டலாம். எங்களுக்கு இருப்பதே ஒரு வயிறுதான். தயவுசெய்து அந்த வயித்துல அடிக்காதீங்கய்யா’’ என சொன்னபோது ஒட்டுமொத்த கூட்டமும் ‘உச்’ கொட்டியது.

அடுத்துப் பேச வந்தவர் கலகலப்பு பார்ட்டியான 'வானொலி புகழ்' துகிலி சுப்ரமணியம், ‘‘நாம பயன்படுத்தும் பல பொருட்கள் வெளிநாட்டுல இருந்து வந்ததுதான். அதுலயும் பல பாதிப்புகள் இருக்கத்தான் செய்யுது. ஆனால், அதை எல்லாத்தையும் தேவை கருதி ஏத்துக்கிட்டோம். அதேபோல இந்த பி.டி. வகையையும் ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அந்தக் கம்பெனி பூச்சி மருந்து ஒரு மூடி, இந்த கம்பெனி மருந்து ஒரு மூடினு நீங்களாவே யார் யாரோ சொன்னதை எல்லாம் அடிச்சுக்கிட்டு, இப்போ விளைச்சல் வரலைனு யாரையும் குற்றம் சொல்லக் கூடாது’’ என்று வழக்கமான பாணியில் போட்டுத்தாக்கினார்.

கடைசியாக பேசிய ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 'அரச்சலூர்' செல்வம், ‘‘அமெரிக்க பத்திரிகை ஒன்றில் ‘எங்களிடம் பி.டி. விதை அலர்ஜிக்கு மருந்து கிடைக்கும்’ என்று விளம்பரப்படுத்தியது ஸ்டர்லிங்கான் என்ற நிறுவனம். மரபணு மாற்றம் மூலம் மக்காச்சோளத்தை அறிமுகப்படுத்தியதே அந்த நிறுவனம்தான். இதில் இருந்தே உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். இந்த விதைகளால் பாதிப்பு இல்லை. அப்படி பாதிப்பானால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என இங்கிருக்கும் யாராவது உத்தரவாதம் கொடுக்க முடியுமா?’’ எனக் கேட்டார். அதற்கு யாரும் பதில் கொடுக்காத நிலையில் விவாதம் முடிவுக்கு வந்தது.

பி.டி. ஆதரவு வரிசையில் 'ராசி' விதை நிறுவன மேலாளர் டாக்டர் தியாகராஜனும் எதிர்ப்பு வரிசையில் டாக்டர் சிவராமனும் கருத்துக்களை முன் வைத்துப் பேசியது கூட்டத்தைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.


அடுத்துக் கேள்வி நேரம் தொடங்கியபோது 'துகிலி'யாரை நோக்கி, ‘‘அந்த உரத்தைப் போடுங்க, இந்த மருந்தை போடுங்கனு நீங்கதானே ரேடியோவுல சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டுத்தானே பயிரிட்டோம். நிலம் கெட்டு போச்சு. இப்ப பி.டி. பருத்தியால் லாபம்னு வேற சொல்றீஙகளே’’ என்று கண்ணையன் என்பவர் குரல் உயர்த்தினார்.

அதற்குப் பதிலளித்த துகிலி, ‘‘அப்போ அரசாங்கம் என்ன சொன்னதோ அதைத்தான் நாங்களும் சொன்னோம். அதயும் மீறி இயற்கை உரத்தை போடுங்கனு உரக்க சொன்னவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்’’ என்று சளைக்காமல் பதில் கொடுக்க... கூட்டத்தில் ஏக சலசலப்பு.
சட்டென்று மைக் பிடித்த நம்மாழ்வார், ‘‘நாம எல்லோரும் கட்டபொம்மனா இருக்க போகிறோமா... இல்ல எட்டப்பனா மாறப்போறோமா? என்பதை முடிவு செய்றதுதான் இப்ப முக்கியம்’’ என்று உணர்ச்சி பிழம்பாக வெடிக்க... சலசலப்பு ஓய்ந்தது.
''இந்த விவாதம் ஒரு ஆரம்பம்தான். மீண்டும் மீண்டும் இதுபோன்ற விவாதங்கள் நடத்தப்பட்டால் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று சொல்லி விவாதத்தை முடித்து வைத்தார், விவாத அரங்கின் நடுவரான லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட்.
நன்றி: பசுமை விகடன், 10-02-2007

வெள்ளி, மே 17, 2013

“இனி, விவசாயம் இளைஞர்கள் வசம்!” - கோ. நம்மாழ்வார்


பதின்பருவப் பையன்போல நம்மாழ்வார் ஓடித் திரிந்து இயற்கை விவசாயத்துக்கு நீர் பாய்ச்சியதால், இன்று தமிழகம் முழுக்கப் பரவலாக பல்லாயிரம் ஏக்கரில் பச்சை கட்டியிருக்கிறது இயற்கை விவசாயம். நம்மாழ்வாருக்கு வயது 75. வெண்தாடியைக் கோதிக்கொண்டே பிரகாசப் புன்னகை பூக்கிறார்.
''இயற்கை விவசாயத்தின் அவசியம் புரிகிறது. ஆனால், இளைஞர்களை அதன்பால் இழுக்கும் அளவுக்கு அது லாபமாக அமையுமா?''
''தண்ணீர் அதிக அளவு தேவைப்படாத, நிதி வசதி அதிகம் தேவைப்படாத, ஏகமாக தொழிலாளர்கள் தேவைப்படாத விவசாய முறையே நம் இயற்கை விவசாயம். நிலம் வாங்கியோ அல்லது குத்தகைக்கு எடுத்தோ, இன்று இளைஞர்கள் விவசாயம் செய்ய வருகிறார்கள். இயற்கை நெல் ரகங்களைப் பொறுத்தவரை வருடம் முழுக்கத் தண்ணீர் தேவை இல்லை.  நிலம் வெடித்துப் பாளம் ஆகாமல் ஈரமாக இருக்கும் அளவுக்கு ஈரப்பதம் இருந்தாலே போதும். மாப்பிள்ளைச் சம்பா, சம்பா மோசனம், மடு முழுங்கி, காட்டுயானம், சீரகச் சம்பா என சுமார் 63 ரகங்கள் இப்போது இருக்கின்றன. பசுமைப் புரட்சிக்கு முன்னர் பல லட்சம் இயற்கைப் பயிர் வகைகள் இந்தியாவில் இருந்தன. இந்த இயற்கை விதைகளைத் திருடித்தான் ரசாயனப் பயிர்களான வைக்கோல் இல்லாத முக்கால் அடி உயரப் பயிர் ரகங்களை உருவாக்கினார்கள். ரசாயன மருந்து தெளித்து விளைவிக்கப்பட்ட பயிர்கள் நோய்களைப் பெருக்கிவரும் நிலையில், இப்போது இயற்கை உணவுகளுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரசாயன விவசாயத்தைவிட இயற்கை விவசாயம்தான் இன்றைய தேதியில் லாபமானது. தமிழகம் எங்கும் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் லாபகரமான முறையில் இயற்கை விவசாயம் நடக்கிறது. குதிரைவாலியும், சீரகச் சம்பாவும் அதை விளைவிப்பவர்களைக் கடனாளி ஆக்குவதும் இல்லை, உண்பவர்களை நோய்வாய்ப்படுத்துவதும் இல்லை. இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்ட பல இளைஞர்கள், இன்றைக்கு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த விவசாயிகள் மக்கள் நாயகர்களாக உருவாகுவார்கள். இந்த ஆரோக்கியமான போக்கின்மீது மேலும் வெளிச்சம் பாய்ச்ச, வருடம்தோறும் நெல் விழா நடத்துகிறோம். இந்த வருடத்துக்கான விழா மே 25, 26-ம் தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் நடக்கிறது. சுமார் 3,000 விவசாயிகள் நெல்லைப் பரிமாறிக்கொள்ளப்போகிறார்கள். மெதுமெதுவாகவேனும் இனி விவசாயம் தமிழகத்தில் தழைத்தோங்கும்!''
''ஆனால், தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்தும் சட்டம், இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேறும்போல் இருக்கிறதே?''
''இனி, தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, நான்கு மடங்கு கூடுதலான விலை கொடுத்து நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் முடிவு. அதாவது, இந்த மசோதாவின் மூலம் நில அபகரிப்பைச் சட்டப்பூர்வமாக்க இருக்கிறார்கள். எம்.எஸ்.சுவாமிநாதன் 'தேசிய உழவர் நல ஆணையம்’ என்றோர் அமைப்பை உருவாக்கி, அதற்குத் தலைவராக இருந்துகொண்டு ஓர் அறிக்கையை மத்திய அரசுக்குக் கொடுத்தார். அதில் மாற்றுத் தொழில் கிடைத்தால் 40 சதவிகித விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். அதன் அடிப்படையில் அமைந்த, ஆசை காட்டி மோசம் செய்யும் வேலைதான் அந்த மசோதா!''  
''வளர்ச்சியின் பெயரால் நிறைவேற்றப்படும் மசோ தாக்கள், மக்கள் உரிமைகளைப் பாதிக்கிறது என்பது உண்மையா?''  
''ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது என்றால், இந்தியக் குடிமக்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கும் ஒரு உரிமை பறிபோகிறது என்று பொருள். விளை நிலங்களை அழித்து, ரசாயன ஆலைகள் அமைத்து, விவசாயத்துக்கு வழங்கிய மானியங்களைக் குறைத்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் உணவு உற்பத்தியைக் கொடுத்து என விவசாயிகளை நிலத்தில் இருந்து துரத்தியடித்தார்கள். இப்போது உணவுப்பொருட்களின் தேவை அதிகரிக்கவும் உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவருகிறார் கள். உணவு உற்பத்தியில் நமது விவசாயிகள் தன்னிறைவு அடைந்த காலம் ஒன்று உண்டு. ஆனால், வருடம் நான்கு போகம் விளைவித்த உழவனை எலிக் கறி உண்ணும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது இன்றைய சந்தை அரசியல். கடந்த ஆண்டு காவிரியில் தர வேண்டிய தண்ணீரை, மத்திய அரசு வாங்கித் தரவில்லை. விளைவு, 10 லட்சம் ஏக்கர் பயிர்கள் பட்டுப்போய்விட்டன. 'காவிரியில் தண்ணீர் இல்லை. அதனால், பயிர்கள் விளைச்சல் இல்லை!’ என்று மட்டுமே இதைப் பார்க்கக் கூடாது. மாடு கன்றுகளுக்கும், மக்களுக்கும் குடிநீர் இல்லாமல் போகிறது. மக்கள் தண்ணீரைக் காசு கொடுத்துப் பெற்றுக்கொள்கிறார்கள். காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாத மாடுகள் என்ன ஆகும்? நோஞ்சானாகி உழவுக்குப் பயன்படாத அடிமாடுகளாக ஆகிவிடுகின்றன!''
''காவிரித் தீர்ப்புதான் மத்திய அரசிதழில் வந்துவிட்டதே?''
''கடைமடைக்கு வராத காவிரி, டெல்லி அரசிதழில் வந்தது தமிழக அரசின் சாதனை என்று சொல்லிக்கொள்ளலாம்தான். காவிரியில் நமக்கு விட வேண்டிய தண்ணீரை ஏரி, குளங் களில் சேமித்துவைத்துவிட்டுத் தண்ணீர் இல்லை என்கிறது கர்நாடகம். இந்த நிலையில், 'நீதிமன்றம் சொல்கிற தீர்ப்பைச் செயல்படுத்துவது யார்?’ என்ற கேள்வி எழுகிறது. அந்தப் பொறுப்பு நிரம்பிய மத்திய அரசோ வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம் உத்தரவு மட்டுமே போடுகிறது. முரண்டுபிடிக்கும் மாநில அரசு செயல்படாமல் இருப்பதால் உத்தரவு, உத்தரவாக மட்டுமே இருக்கிறது. இனி, வருங்காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு தேவை. இதே கோரிக்கையோடு தீர்ப்புகளைச் செயல்படுத்தும் செயல் கமிட்டி தேவை என தமிழக அரசு கோரியிருக்கிறது. நாம் நீதிமன்ற உத்தரவுகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாகச் செயல் கமிட்டி அமைய வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் விருப்பம்!''
''ஒரு குடம் குடிநீருக்காக மக்கள் அலைபாயும் நிலை உருவாகிவிட்டதே?''
''அதிக மழை, அதிக வெப்பம், அதிகக் குளிர், அல்லது பருவ மழையே இல்லாமல்போவது என்ற சூழலில், தமிழகத்தில் ஜீவ நதிகள் என்று எதுவுமே இல்லாத நிலையில்... எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு தண்ணீரைச் சேமித்தால் மட்டுமே தண்ணீர்ப் பஞ்சத்தில் இருந்து நாம் தப்ப முடியும். கிட்டத்தட்ட 36,000 ஏரி, குளங்களைக்கொண்ட நீராதாரம்தான் நம்முடையது. இதைக்கொண்டே வருடம் நான்கு போகம் விளைச்சல் நடந்தது. ஆனால், அந்த ரத்த நாளங்கள் உண்டாக்கிய வளங்களை மணல் கொள்ளையர்கள் தின்றுவிட்டார்கள். விளை நிலங்களை ரியல் எஸ்டேட் பேர்வழிகள் திருடிவிட்டார்கள். சிறிய ஆறுகள் இருந்த சுவடே தெரியாமல் கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன. போதாக்குறைக்கு அரசு புதிதாகக் கட்டிய நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையங்கள் என எல்லாவற்றையும் ஏரி, குளங்களில் கட்டிவைத்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் நமது நீராதாரம்பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் சுயநலமாக நாம் நடந்துகொண்டதன் பின்விளைவுதான், ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் இன்று அலையும் நிலை!''  
''கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டனவா?''
''காலம் காலமாக நீர் நிர்வாகத்தைச் சிறப்பாக நிர்வகித்து வந்தவர்கள் கிராம மக்கள்தான். பாசனக் கட்டமைப்பை விரிவுபடுத்துவது என்னும் நோக்கத்தில்தான் பொதுப்பணித் துறை அதில் தலையிட்டது. தனது தண்ணீர்த் தேவைகளை, தானே தீர்த்துக்கொண்ட அந்த மேலாண்மை சிதைக்கப்பட்டது. கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்பது கிராமத்தில் இருந்து தண்ணீரை எடுத்து, நகர்ப்புற மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்திசெய்வதாக அமைந்ததுதான் சிக்கலாகிப்போனது. விவசாயமே நடக்காத நகரத்துக்கு விளை நிலங்களின் தண்ணீரை எடுத்துக் கொடுத்தபோதே, கூட்டுக் குடிநீர்த் திட்டம் தோல்வி அடைந்துவிடுகிறது. நகர மக்களின் தண்ணீர்த் தேவையை, தண்ணீரைச் சேமிப்பதன் மூலமே சரிசெய்ய முடியும். தங்கத்தைச் சேமிக்கும் மக்களுக்குத் தண்ணீரின் அருமை தெரியவில்லை!''
''மது ஒழிப்புக்காக வைகோவும் தமிழருவி மணியனும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அது தொடர்பான விவாதங்களின்போது மறக்காமல் எழுப்பப்படும் கேள்வி இது... கள் எனப்படுவது உணவா... மதுவா?''
''மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அவர்களோடு நானும் இணைகிறேன். ஆனால், கள் என்பது அதிக போதை தரக்கூடிய மதுவல்ல; அது உணவாகவும் மருந்தாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்துவந்துள்ளது. அதைப் பனம் பாலாகவும், தென்னம் பாலாகவும் பார்க்க வேண்டும். சுமார் 15 லட்சம் பனை, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். கள் இறக்கும் உரிமை வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் பக்கம்தான் நான் நிற்பேன். அவர்களின் நலனுக்காக மதுவை ஒழித்தால், அது மக்கள் நல நடவடிக்கையாக இருக்கும்!''

-டி.அருள் எழிலன், படம்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்
நன்றி: ஆனந்தவிகடன், 22-05-2013

செவ்வாய், மார்ச் 13, 2012

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் ! ... பகுதி: 2

வில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் எனக்கு வாய்த்த நண்பர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் க.சு.சுப்பையா தாவரவியலில் அறிவாழம் உள்ளவர். இலக்கியப் பரிமாற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். சுப்பையா குடும்ப நண்பராகவும் ஆனார்.

நுண்ணறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளவர்களை முடக்குவதற்கு... மேற்பதவிகளில் இருந்தவர்கள் அயராது பாடுபடுவார்கள்; பலவித வித்தைகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். இதிகாச காலம்தொட்டு, இன்றையக் காலம் வரை மேற்பதவிக்காரர்களின் குணம் மாறாது இருப்பது ஆச்சரியம்தான்!

மேற்பதவிக்காரர்களின் கட்டுப்பாடுகள் பிடிக்காதவர்கள், ஒருகட்டத்தில் சலிப்படைந்து வெளியேறுவார்கள். இப்படி வெளியேறியவர்களில் க.சு.சுப்பையாவும் ஒருவர். பின்னாளில் 'ஸ்பிக்' ரசாயன உரக் கம்பெனியின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சுப்பையாவை, தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றின்போது சமீபத்தில் பார்த்தேன். உடல் நலிவுற்ற நிலையில் இருந்தார்.

இன்னொரு நண்பர்... 'ஸ்டோர் காப்பாளர்' சங்கரன். மிக எளிமையானவர். அதுவே அவரது வலிமையும்கூட! அவர் சினந்து நான் பார்த்ததே இல்லை. விதைகள் விளைபொருட்கள், இடுபொருட்கள், கருவிகள் அனைத்தும் இவர் பொறுப்பில் இருந்தன. ஆதலால் எல்லாரையும் சந்திக்கும் அவசியம் இவருக்கு இருந்தது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர். வெளி செல்வாக்கும் உண்டு. யாராக இருந்தாலும், இவரிடம் ஏதாவது உதவி பெற்றிருப்பார்கள். எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழா நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றவர்.
பாரதி விழாவின்போது நா.வானமாமலை, நல்லக்கண்ணு, பாலதண்டாயுதம், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி போன்றவர்களோடு நெருக்கமாக இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதுவே... பாரதியுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 'பாரத சமுதாயம், ஒப்பில்லாத சமுதாயமாகவும்... உலகத்துக்கு ஒரு புதுமையாகவும் விளங்க வேண்டும்' என்கிற உணர்ச்சித் தீ, அப்போதுதான் என்னையும் பற்றிக் கொண்டது.

'நேர் படப் பேசு, நையப் புடை’ என்கிற பாரதி சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர்களில் பருத்திப் பிரிவு விஞ்ஞானி ராஜகோபாலின் தந்தையும் ஒருவர். மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கோயில்களுக்குப் போவதில்லை. வீட்டிலேயே கடவுள் படங்களை வைத்து வழிபடுபவர். அவர் ஒரு முறை கூறிய சொல், வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கிறது.

‘YIELDING TO INJUSTICE AND MISUSE OF POWER ARE NOTHING BUT MORAL PROSTITUTION.’

'அநீதிக்கு விட்டுக் கொடுப்பதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மனதளவில் விபசாரம் செய்வதைத் தவிர வேறில்லை' வாழ்க்கையின் இலக்கணத்தைச் சொன்ன வார்த்தைகள் இவை. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அநாகரிகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அந்த வார்த்தைகளின் சத்தியமான உண்மை நெஞ்சை அறைகிறது.

கோவில்பட்டி வந்த ஆறு மாதத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்தேறின. பண்ணைக்குள்ளேயே எனக்கு வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது. திருமணம் முடித்து மனைவி சாவித்திரியை அழைத்து வந்துவிட்டேன். பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த என்னை, 'மேலாளர்' பதவி கொடுத்து, கரிசல் காட்டுப் பண்ணைக்கு மாற்றி விட்டார்கள்.

உடனடியாக எனக்கு இருந்த கடமைகள் இரண்டு. ஒன்று, வேலியாக வளர்ந்திருந்த சீமைக் கருவேல் மரங்களை வேரோடு பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். இரண்டு, 158 ஏக்கர் நிலத்துக்கும் முள்கம்பி வேலி போட வேண்டும்!

சீமைக் கருவேல் வேலியை அப்புறப்படுத்த வேண்டிய முடிவு எப்படி வந்தது?

'வேலியே பயிரை மேய்ந்த கதை' என்பதற்கு ஆதார சம்பவம் அது.
வேலியில் இருந்து 12 மீட்டர் தூரத்துக்குப் பருத்திச் செடி வளர்ச்சி குன்றி இருந்தது. வேலியில் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி 60 சென்டி மீட்டர் அகலம் மற்றும் ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார்கள். குறுக்கிட்ட சீமைக்கருவேல் வேர்களை எல்லாம் வெட்டி வீசினார்கள். அடுத்தப் பருவத்தில் இருந்து பருத்திச் செடி நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்தது. இந்த வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு, மீண்டும் பருத்திச் செடி வளர்ச்சி குன்றியது. நிலத்தை அகழ்ந்து பார்த்த போது ஓர் உண்மை புரிந்தது. சீமைக் கருவேல் மரம்... தனது வேரை, வெட்டப்பட்ட பள்ளத்துக்குக் கீழே அனுப்பியது. பிறகு, வேரானது மேல் எழுந்து நீண்டு பயிரை மேய்ந்தது. சீமைக் கருவேல் வேரில் சுரக்கும் நச்சு, பயிர்ச் செடிகளின் சாரத்தைச் சப்பி எடுத்துவிடுகிறது. இந்த உண்மை தெரிந்த பிறகே வேலிக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

வேலிக்காக சீமைக்கருவேல் வளர்த்தது போலவே... சிந்தனை மட்டத்தில் ஒரு நச்சுமரம் வளர்க்கப்பட்டது. 'அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஆராய்ச்சியும் நடைமுறையும் இந்தியாவில் புகுத்தப்பட்டால், இங்கு விளைச்சல் பெருகும், பஞ்சம் அகலும்' என்ற பிழையான கருத்து அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் முழக்கமாக இருந்தது.

இதற்கேற்ப ஆராய்ச்சிகளும் பயிர் வகைகளும் மாற்றப்பட்டன.
கோவில்பட்டி வட்டார உழவர்கள் எதைப் பயிரிட வேண்டும் என்பதை டெல்லியில் முடிவு செய்தார்கள். அமெரிக்க எண்ணெய் கம்பெனி ராக்பெல்லர் நிறுவனமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் கைகோத்தபடி புதிய ஒட்டுரகச் சோளம் (C.S.H), ஒட்டுரகக் கம்பு (HB) விதைகளை உண்டு பண்ணி, கோவில்பட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், பூஞ்சணக் கொல்லி நஞ்சுகளைப் பரிந்துரை செய்தார்கள்.

நடப்பில் இருந்த விதைக்கும், டெல்லி இறக்குமதி செய்த விதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நடப்பில் இருந்தவை... பொறுக்கு விதை முறையில் தனித்தேர்வு (Pure Line Selection) செய்யப்பட்டவை.

நம் மூதாதையர் சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்த முறைதான் இந்த பொறுக்கு விதை முறை. விளைந்துள்ள ஒரு நிலத்தில் இறங்கி, நன்கு விளைந்துள்ள சில கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளை உதிர்த்து சேமித்து வைத்து, தனி நிலத்தில் விதைப்பார்கள். அதில் விளையும் சிறந்த கதிர்களை மீண்டும் கொய்வார்கள்; சேமிப்பார்கள். இப்படி மீண்டும் செய்வதன் மூலம் பெறுவதே பொறுக்கு விதைகள். கோவில்பட்டி 2 வெள்ளைச் சோளம், கே.1 (கோவில்பட்டி) மிளகாய், கே.1 கம்பு, கே.2 ராகி எல்லாம் இப்படித் தேர்வு செய்யப்பட்டவையே. டெல்லி அனுப்பிய சோளமும், கம்பும் அப்படிப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட இரண்டு செடிகளின் மகரந்தத்தையும் சூலையும் ஒட்டுக் கட்டித் தயாரிக்கப்பட்டவை.
பொறுக்கு விதையில் இருந்து விளைந்தவற்றிலிருந்து திரும்பத் திரும்ப விதை எடுக்கமுடியும். ஒட்டு விதையில் அப்படி செய்தால்... பகுதி செடிகளில் கதிர் வராது, அல்லது கதிரில் மணி பிடிக்காது.

பாரம்பரிய விதைகளை விதைப்பதற்கு என்று ஒரு பருவம் உண்டு. ஒட்டு விதைகளுக்கு அத்தகையக் கட்டுப்பாடு கிடையாது. பாரம்பரிய விதைக்கு ஆட்டு எரு, மாட்டு எரு, பிண்ணாக்கு போதுமானது. ஒட்டு விதைகளுக்கு ரசாயன உரம் தேவை.

பாரம்பரிய விதைகள் உயர்ந்த தரம் உள்ளவை. ஒட்டு விதைகள் கூடுதல் விளைச்சலுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டவை. அவை, 'அமோக விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties) என்று பெயர் சூட்டப்பட்டவை. ஆனால், வானம் பார்த்த பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும் அமோகமாக விளையாதது மட்டும் அல்ல; அதனால் வந்த பக்க விளைவுகளும் பாதகமாகவே இருந்தன!

-இன்னும் பேசுவேன்...

நன்றி:  பசுமைவிகடன், 25 மார்ச் 2012

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

நதி, தன் வரலாறு கூறும் கதையைப் போன்றதுதான் நம் வாழ்க்கையும். எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து, எங்கோ போய் முடிகிற தண்ணீரின் போக்கைப் போல இந்த வாழ்க்கை, சுற்றிச் சுழற்றுகிறது. கனவிலும் நினையாத ஊருக்கு நம்மைக் கிளம்பச் சொல்கிறது. வரைபடத்திலும் பார்த்திராத ஊரில், நம்மை வாழச் சொல்கிறது. திரும்பிப் பார்க்கிற போதெல்லாம் வாழ்க்கையின் வழித்தடங்கள் அழகியச் சித்திரங்களாகவும், ஆச்சரியப்படத்தக்க விசித்திரங்களாகவும் நமக்குள் விரிகின்றன.

புத்தன் என்றால், எப்படி போதி மரத்தடியும், துக்கம் நேர்ந்த வீடும் தவிர்க்க முடியாத நினைவுகளாகத் தலைதூக்குகிறதோ... அதைப்போலத்தான் நம் வழித்தடங்களும். 'எனது வாழ்க்கை’ என்கிற இரண்டு வார்த்தைகள், என்னை இழுத்துச் சென்ற தூரம் அதிகம். என் நினைவுகளின் வழிப்பயணத்தில் உங்களையும் விரல் பிடித்து அழைத்துச் செல்கிறேன்.


1966...
கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையம்...
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்... 


''செலவைக் கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த உழவர்க்குப் பயன்படாது'' என்று சீறலாகப் பேசும் பண்ணை மேலாளர், அதற்கான காரணங்களை விளக்கிப் பேசுகிறார்.
எல்லோரும் ஆமோதித்து தலை ஆட்டுகின்றனர்.
''அப்படியானால், இந்த உண்மையை ஆண்டு அறிக்கையில் எழுத வேண்டும்; ஆராய்ச்சி முறைகள் மாற்றப்படவேண்டும்'' என்று மேலும் அழுத்தம் கொடுக்கிறார் மேலாளர்.

அந்த ஆதங்கத்தைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்டு அறிக்கையில் அதை எழுதுவதற்கு மட்டும் யாருமே இசைந்து கொடுக்கவில்லை.

''கோவில்பட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை கோவில்பட்டியில் முடிவு செய்யவில்லை. கோவையில் முடிவு செய்வார்கள்; அல்லது டெல்லியில் முடிவு செய்வார்கள்; அல்லது அமெரிக்காவில் முடிவு செய்வார்கள். 'நமது ஆராய்ச்சி சரியில்லை' என்று நாமே எழுதிவிட்டால், இந்த நிலையத்தை மட்டும் இழுத்து மூடுவார்கள். நாம் எல்லாரும் விரிவாக்கப் பணியாளராக வெயிலில் அலைய நேரிடும்!''  என்பதுதான் அதற்கான காரணமாக அங்கிருந்தவர்களால் முன் வைக்கப்படுகிறது.

இந்த வார்த்தைகள், அந்த பண்ணை மேலாளரை மனதளவில் நொறுக்கிப் போடுகிறது. 'எதற்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்கிற துளியளவு அக்கறைகூட இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து, வாழ்நாள் முழுவதும் பொய்யையே கட்டி அழப்போகின்ற அந்தக் கூட்டத்தில், நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா? நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்' என்று மனதுக்குள் மருகுகிறார்!

மறுநாள், தன்னுடைய நேரடி உயர்அதிகாரியான மீனாட்சி முன்பாக போய் உட்காருகிறார் பண்ணை மேலாளர். எந்தச் சூழலிலும் முகம் சுளிக்காதவர் மீனாட்சி. ஆனால், அன்றைய தினம், 'நான் என் வேலையை விடப்போகிறேன்' என்று பண்ணை மேலாளர் சொன்னதும்... அதிர்ச்சி அடைந்தவராக நிமிர்கிறார்.

''வெளியில போய் என்ன செய்வீங்க?''
''உறவினர்கள், நண்பர்கள் நிலங்களில் வேலை செய்வேன்''

''உங்கள் அப்பா செலவிலேயே ஆளாகிவிட்டீர்களா?''

''இல்லையில்லை... எனது கல்விக்காக அரசு செலவிட்டிருக்கிறது. அதற்காக, உழவர்களுக்குக் கேடு செய்யும் பணியைத் தொடர வேண்டுமா?''

''அப்படிச் சொல்லவில்லை. உங்களுடைய அறிவு, விரிந்து பரந்த வட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து.''

''அது எப்படி சாத்தியப்படும்?'’

''அவசரப்பட்டு தெருவில் போய் நிற்காதீர்கள். வாய்ப்பு தேடிவரும், காத்திருங்கள்...''

அந்தப் பண்ணை மேலாளரின் கோபத்தையும் ஆதங்கத்தையும் மீனாட்சியின் வார்த்தைகள் அமைதிப்படுத்துகின்றன. மீனாட்சி சொன்ன வாய்ப்புக்காக மேலும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறார்.

1969... மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விடைபெறும் அந்த பண்ணை மேலாளர், 'பறவையின் விடுதலைக்குச் சமமான விடுபடல்' என்று துள்ளித் திரிந்து வெளியேறுகிறார்.

அந்த மேலாளர், நான்தான் என்பது என் நெஞ்சுக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். ஆனால்...?
-இன்னும் பேசுவேன்...

நன்றி: பசுமை விகடன், 25-02-2012