புத்தன் என்றால், எப்படி போதி மரத்தடியும், துக்கம் நேர்ந்த வீடும் தவிர்க்க முடியாத நினைவுகளாகத் தலைதூக்குகிறதோ... அதைப்போலத்தான் நம் வழித்தடங்களும். 'எனது வாழ்க்கை’ என்கிற இரண்டு வார்த்தைகள், என்னை இழுத்துச் சென்ற தூரம் அதிகம். என் நினைவுகளின் வழிப்பயணத்தில் உங்களையும் விரல் பிடித்து அழைத்துச் செல்கிறேன்.
1966...
கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையம்...
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்...
''செலவைக் கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த உழவர்க்குப் பயன்படாது'' என்று சீறலாகப் பேசும் பண்ணை மேலாளர், அதற்கான காரணங்களை விளக்கிப் பேசுகிறார்.
''அப்படியானால், இந்த உண்மையை ஆண்டு அறிக்கையில் எழுத வேண்டும்; ஆராய்ச்சி முறைகள் மாற்றப்படவேண்டும்'' என்று மேலும் அழுத்தம் கொடுக்கிறார் மேலாளர்.
அந்த ஆதங்கத்தைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்டு அறிக்கையில் அதை எழுதுவதற்கு மட்டும் யாருமே இசைந்து கொடுக்கவில்லை.
''கோவில்பட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை கோவில்பட்டியில் முடிவு செய்யவில்லை. கோவையில் முடிவு செய்வார்கள்; அல்லது டெல்லியில் முடிவு செய்வார்கள்; அல்லது அமெரிக்காவில் முடிவு செய்வார்கள். 'நமது ஆராய்ச்சி சரியில்லை' என்று நாமே எழுதிவிட்டால், இந்த நிலையத்தை மட்டும் இழுத்து மூடுவார்கள். நாம் எல்லாரும் விரிவாக்கப் பணியாளராக வெயிலில் அலைய நேரிடும்!'' என்பதுதான் அதற்கான காரணமாக அங்கிருந்தவர்களால் முன் வைக்கப்படுகிறது.
இந்த வார்த்தைகள், அந்த பண்ணை மேலாளரை மனதளவில் நொறுக்கிப் போடுகிறது. 'எதற்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்கிற துளியளவு அக்கறைகூட இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து, வாழ்நாள் முழுவதும் பொய்யையே கட்டி அழப்போகின்ற அந்தக் கூட்டத்தில், நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா? நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்' என்று மனதுக்குள் மருகுகிறார்!
மறுநாள், தன்னுடைய நேரடி உயர்அதிகாரியான மீனாட்சி முன்பாக போய் உட்காருகிறார் பண்ணை மேலாளர். எந்தச் சூழலிலும் முகம் சுளிக்காதவர் மீனாட்சி. ஆனால், அன்றைய தினம், 'நான் என் வேலையை விடப்போகிறேன்' என்று பண்ணை மேலாளர் சொன்னதும்... அதிர்ச்சி அடைந்தவராக நிமிர்கிறார்.
''வெளியில போய் என்ன செய்வீங்க?''
''உங்கள் அப்பா செலவிலேயே ஆளாகிவிட்டீர்களா?''
''இல்லையில்லை... எனது கல்விக்காக அரசு செலவிட்டிருக்கிறது. அதற்காக, உழவர்களுக்குக் கேடு செய்யும் பணியைத் தொடர வேண்டுமா?''
''அப்படிச் சொல்லவில்லை. உங்களுடைய அறிவு, விரிந்து பரந்த வட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து.''
''அது எப்படி சாத்தியப்படும்?'’
''அவசரப்பட்டு தெருவில் போய் நிற்காதீர்கள். வாய்ப்பு தேடிவரும், காத்திருங்கள்...''
அந்தப் பண்ணை மேலாளரின் கோபத்தையும் ஆதங்கத்தையும் மீனாட்சியின் வார்த்தைகள் அமைதிப்படுத்துகின்றன. மீனாட்சி சொன்ன வாய்ப்புக்காக மேலும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறார்.
1969... மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விடைபெறும் அந்த பண்ணை மேலாளர், 'பறவையின் விடுதலைக்குச் சமமான விடுபடல்' என்று துள்ளித் திரிந்து வெளியேறுகிறார்.
அந்த மேலாளர், நான்தான் என்பது என் நெஞ்சுக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். ஆனால்...?
-இன்னும் பேசுவேன்...
நன்றி: பசுமை விகடன், 25-02-2012
2 கருத்துகள்:
We tasted the Very first ignition of the real story of NAMAZVAR.We expect naked truths in Agri..
Pasumai vikatan doing a good job for farmers.Even the non farmers also reading the book.
Regards,
PPrabhu
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனையும் நம்மாழ்வார் ஆக்க வேண்டும்.
கருத்துரையிடுக