கடந்த 2011 மார்ச் 11ஆம் நாள் ஜப்பானில் நடந்த அணு உலை நேர்ச்சியின் வீச்சு இன்னும் குறையவில்லை என்பதையே அங்கு சென்றால் அறிய முடிகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஜப்பானின்
புகுசிமா அணு உலை நேர்ச்சி 770,000 இலட்சம் கோடி கதிரியக்க அலகுகளைக்
கக்கியிருக்கிறது. ஒப்பீட்டு அளவில் இதை ஹிரோஷிமாவில் போடப்பட்ட
குண்டுகளைப் போல அறுபது மடங்குக் கதிர்வீச்சு என்று
கணித்திருக்கிறார்கள். இந்நேர்ச்சியால் வெளியேறியிருக்கும் ‘சீசியம்-137’
இன்னும் பல்லாண்டுகளுக்கு ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் அளவிலான
நிலப்பரப்பு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.
இவற்றை
எல்லாம் மூடி மறைத்த ஜப்பானின் ஊடகங்கள் பற்றியும் அணு, தொழிலகப்
பாதுகாப்பு முகமை (‘நிசா’), அரசு, புகுசிமா அணு உலையின் இயக்குநராக இருந்த
‘டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் (‘டெப்கோ’) ஆகியன ஒன்றுக்கொன்று எப்படி
நயவஞ்சக உடந்தையாக இருந்தன என்பது பற்றியும் நான் பல கட்டுரைகள் எழுதி
வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ‘வெளியேற்று பகுதி’ என்று சொல்லப்பட்ட
20 கி.மீ சுற்றளவில் அமைந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓர் இலட்சம்
பேரின் வாழ்வுரிமை பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் தீமைகள் நிறைந்த
கதிர்வீச்சால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் நான் நிறைய
படித்திருக்கின்றேன்.
இவ்வளவு தெரிந்திருந்தும் கடந்த ஜனவரியில்
புகுசிமாவிற்குச் சென்றபோது தான் என்னால் உண்மையான சூழ்நிலையை உணர
முடிந்தது. நேர்ச்சி நடந்து பத்து மாதங்கள் ஆன பிறகும் கூட, மண்ணில்
கதிரியக்கத்தின் அளவு அதிகமாகவே இருந்தது; உணவுச் சங்கிலி மாசுபாடு பல
இடங்களில் வளர்ந்து கொண்டிருந்தது; காற்றில் கலந்திருந்த கதிர்வீச்சு
மட்டும் தான் கொஞ்சம் குறைந்திருந்தது. நேர்ச்சி நடந்து முடிந்துவிட்டதாக
இன்னும் நம்மால் சொல்ல முடியாது. ஏனென்றால் அணு உலையைப்
பிரித்தெடுப்பதற்கும் பாதுகாப்பாக மூடுவதற்கும் இன்னும் பல்லாண்டுகள்
தேவைப்படும்.
புகுசிமா அணு உலை ‘மூடுவதற்கான குளிர்
நிலை’யை அடைந்து விட்டதாகவும் கதிர்வீச்சு மட்டுப்படுத்தப்பட்டு
விட்டதாகவும் திசம்பரில் பன்னாட்டு அணுஆற்றல் வாரியம் (‘IAEA’) கூறினாலும்
உண்மை நிலை வேறாக இருந்தது. அங்கிருந்த நிலையப் பொறுப்பாளர்கள் யாருக்குமே
உருகிய அணுக்கரு எங்கிருக்கிறது என்பதோ, அது எவ்வளவு ஆழமாகக் காப்புப்
பொருட்களில் (containments) இறங்கியிருக்கிறது என்பதோ கூடத் தெரியவில்லை.
உள்ளுறுப்புக் காட்டி (‘Endoscope’) போன்ற கருவிகளைக் கொண்டும் தொலைநிலைப்
புகைப்படக் கருவிகளைக் (remote cameras) கொண்டும் அணுக்கருவால்
ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அளக்கக் காலம் கடந்துவிட்ட நிலையில் அவர்கள்
முயன்று கொண்டிருந்தார்கள்; அதில் ஓரளவு வெற்றி கிடைத்தது என்று
வேண்டுமானால் சொல்லலாம்.
அறிஞர்கள் பலர் கூறுவது போல்,
பக்கவாட்டில் இருந்து ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சுக் கசிவுகளைக்
கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. ஒரு
குழியை அணு உலை அருகில் வெட்டி அதில் தான் கதிரியக்கத் தனிமங்களைப் போட்டு
மூட வேண்டும். இது பல்லாண்டுகள் உழைப்பும், மிகப்பெரிய செலவும் பிடிக்கும்
செயல்.
புகுசிமா அணு உலை மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டிருக்கிறது; இன்று வரை கதிரியக்கம் அங்கிருந்து கசிந்து
கொண்டே இருக்கிறது. பல மாதங்களுக்கு அங்கு தொடரும் எனக் கருதப்படும் நில
நடுக்க அதிர்வுகள் ஏற்கெனவே நிலையில்லாமல் இருக்கும் உலையின் கட்டமைப்பில்
இருந்து இந்தக் கசிவை மேலும் கூட்டிவிடுகின்றன. அணு உலையின் அடித்தளத்தில்
இருக்கும் 120,000 டன் கதிரியக்க நீர் காற்றிலும் கடலிலும் கலந்து
கொண்டிருக்கிறது.
அணு உலைப் பொறுப்பாளர்களோ இதைப் பற்றிப்
பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. காற்றில் எவ்வளவு கதிர்வீச்சு
கலந்திருக்கிறது, மண் எவ்வளவு கெட்டுப்போய் இருக்கிறது, செடிகொடிகள், நீர்
ஆகியவற்றில் கதிர்வீச்சின் அளவு என்ன என்பன போன்ற எவற்றையும் அவர்கள்
முறையாகக் கவனிக்கவில்லை. சுற்றுச்சூழலில் நிலவும் கதிர்வீச்சாலும்
கதிர்வீச்சால் கெட்டுப்போன உணவையும் நீரையும் அம்மக்கள் உட்கொள்வதால்
ஏற்படும் கதிர்வீச்சுப் பாதிப்புப் பற்றியும் ‘டெப்கோ’வோ வேறு அலுவலர்களோ
இதுவரை ‘உத்தேச’ மதிப்பீட்டைக் கூட எடுக்கவில்லை.
‘வெளியேற்று பகுதி’யில் இருந்து 200 கி.மீ
வரையிலும் கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. ‘வெளியேற்று
பகுதி’யில் காணப்படும் அதே அளவு ‘சீசியம்-137’, 200 கி.மீ. தொலைவு
தாண்டியும் இருக்கிறது; அணு உலையில் இருந்து 200 கி.மீ. தொலைவான
பகுதிகளில் தாய்ப்பாலிலும் குழந்தைகளின் சிறுநீரிலும் கூட ‘சீசியம்-137’
கலந்திருக்கிறது என்றால் கதிர்வீச்சின் தாக்கத்தை ஊகித்துக்கொள்ளுங்கள்.
உலைப் பொறுப்பாளர்களிடம் இருந்து
நம்பத்தகுந்த எந்தத் தகவலும் கிடைக்காத சூழலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
கைகளில் வேலையளவுமானி (‘Dosimeter’), கைகர் (‘Geiger’) எண்ணி போன்ற
கதிரியக்க அளவுமானிகளைக் கொண்டு தாங்களே புகுசிமா நகரில் கதிரியக்கத்தை
அளந்து கொள்கிறார்கள். அவர்கள் அளக்கும் போது 1 மைக்ரோ சீவற்றில் (சீவற்று
– கதிரியக்க அலகு) இருந்து 3 மைக்ரோ சீவற்று வரை கதிரியக்கம் தெரிகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம், இவை புகுசிமா அணு உலை அமைந்திருக்கும்
பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கதிரியக்க அளவு இல்லை என்பதும் அங்கிருந்து
60 கி.மீ தொலைவில் உள்ள புகுசிமா நகரில் எடுக்கப்பட்ட கதிரியக்க அளவு
என்பதும் ஆகும். இந்த அளவு கதிரியக்கம் வெளிப்பட்டால், அவை ஆண்டுக்கு 25
மில்லி சீவற்று அளவுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும். இங்கும் நாம்
கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று - ஆண்டுக்கு 1 மில்லி சீவற்று என்பது தான்
பொது மக்கள் தாங்கிக்கொள்ளக் கூடிய உச்ச அளவு கதிரியக்கம் என அமெரிக்காவின்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை பரிந்துரைத்திருக்கிறது.
கதிரியக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதைக்
கண்ட ஜப்பான் அரசு, கதிரியக்க உச்ச அளவாக 20 மில்லி சீவற்று என
மாற்றியிருக்கிறது. இந்த அளவு கொண்டு பார்த்தாலும் ஜப்பானின் வடக்குப்
பகுதிகள் பலவற்றில் கதிரியக்கம் உச்ச அளவை விட அதிகம் தான்!
இதற்கிடையில், ஜப்பான் அரசு அமர்த்திய
விசாரணைக் குழு, கடந்த திசம்பர் இறுதியில் கூறியிருக்கும் தன்னுடைய
அறிக்கையில், ‘டெப்கோ, நிசா, ஜப்பான் அரசு ஆகிய மூன்றையும் அணு உலையில்
எழும் சிக்கல்களைக் கையாள ஆயத்தமாகவில்லை’ என்று குறை கூறியிருக்கிறது.
இது தவிர, அணு உலை அமைப்பாளர்கள், உலையைப் பற்றிய முழு விவரங்களை
அரசுக்குத் தெரிவிக்காமல் சிக்கலுக்கு வித்திட்டதாகவும் அவ்வறிக்கை
கூறுகிறது.
குறைத்து மதிப்பிடப்பட்ட சிக்கல்கள்
507 பக்க அளவில் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை, நானூறு பேருக்கும் அதிகமானோரை நேர் கண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வறிக்கையில்
1) ஆழிப்பேரலை(சுனாமி)யால் எழும் சிக்கல்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள நிலை
2) ஏற்கெனவே வந்த பேரலைகளின் உயரத்தில் 50 விழுக்காடு உயரம் மட்டுமே கூட்டி அணு உலைகள் அமைப்பதைச் சிந்தித்த நிலை
3) ஆழிப்பேரலையால் பின்புல மின்னாக்கிகள்
(‘Backup Generators’) செயல் இழந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது
ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கப்படாத நிலை
4) அணு உலையின் மையம் அதிகச் சூடானால்
என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ அணுக்கரு உருகிவிட்டால் என்ன செய்ய
வேண்டும் என்பது பற்றியோ பயிற்றுவிக்கப்படாத நிலை
5) சிக்கல்கள் நேரும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிகள் அடங்கிய குறிப்பேடு ஏதும் இல்லாத நிலை
எனப் பல சிக்கல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நெருக்கடி நிலை குளிர்விப்பானுக்குத்
தண்ணீர் கொண்டு செல்வதற்கு மாற்று வழிகள் கண்டுபிடிப்பதிலேயே பல மணி
நேரங்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. குளிர்விப்பானில் இருந்து செயல்
இழப்புச் சைகைகள் வந்த பிறகும் கூட, ஊழியர்கள் குளிர்விப்பான் இயங்கிக்
கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம்
உடனடியாகக் கவனித்திருந்தாலே, மார்ச்சு 12, 14, 15 ஆகிய நாட்களில் ஏற்பட்ட
பாதிப்பு, கதிர்வீச்சுக் கசிவு, வெளிப்பட்ட ஹைட்ரஜன் வெடிப்பு ஆகியவற்றை
வெகுவாகக் குறைத்திருக்கலாம். ஆனால் வெளியேறிய கதிர்வீச்சின் அளவு கூட
முறையாக அளக்கப்படவில்லை என்பது தான் உண்மை நிலையாக அங்கு இருந்தது.
‘நிசா’, ‘டெப்கோ’விடம் இருந்து
கதிர்வீச்சுக் கசிவுகள் பற்றிய செய்திகளைப் பெற்று ஊழியர்களுக்குத்
தெரிவிப்பதில் மெத்தனம் காட்டியதாக இடைக்கால அறிக்கை கூறுகிறது. உரிய
பாதுகாப்பு நிலைகளை ‘டெப்கோ’ கொண்டிருக்கிறதா என ‘நிசா’ சரிவரப்
பார்க்கவில்லை. ‘அணு உலை இயங்குநிலையில் இருக்கிறதா என்பது பற்றிய
‘டெப்கோ’வின் தவறான மதிப்பீடு’, ‘தண்ணீர் கொண்டு செல்வதற்கு மாற்றுவழியைக்
காண்பதில் காட்டிய சுணக்கம்’, ‘ஹைட்ரஜன் வெடிப்புகளைப் பொருட்படுத்தாத
நிலை’, ‘பாதிப்பு பெருகுவதைத் தடுக்கத் தவறியமை’ என எல்லாச் சிக்கல்களையும்
அவ்வறிக்கை ஆவணப்படுத்தியிருக்கிறது.
அப்பகுதியில் இருந்து மக்களை
வெளியேற்றுவதில் அரசு கையாண்ட அணுகுமுறையோ இன்னும் மோசம். ‘ஸ்பீடி’
எனப்படும் ஜப்பானின் கதிர்வீச்சுச் சிறப்பு எச்சரிக்கை, தடுப்பு முறை
கொடுத்த தரவுகளை அரசு சரியான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது.
‘ஓடுங்கள்’ (‘Just Run’) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்த அரசின்
அறிவிப்பால் அங்கு வாழ்ந்து வந்த ஏறத்தாழ 100,000 பேர் ‘வெளியேற்று
பகுதி’யில் இருந்து இடம்பெயர்ந்து எங்கே செல்வது என்னும் விவரம் தெரியாமல்
கதிர்வீச்சு இன்னும் அதிகமுள்ள பகுதிகளுக்குச் சென்று குடியேற நேர்ந்தது.
‘லிடேற்று’
ஊரில் இருக்கும் கெனிச்சி என்னும் பால் பண்ணை உழவரின் கருத்து இங்கு
கவனிக்கத்தக்கது. “கடந்த ஏப்ரலில் நாங்கள் அனைவரும் கதிர்வீச்சுப்
பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அரசு
சொன்னது. அதே அரசு தான், ஜூன் மாதம் எங்களை அழைத்து, ‘இங்குள்ள பசுக்கள்
எல்லாம் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவற்றைக் கொன்று விட்டு
உடனடியாக இப்பகுதியை விட்டு தப்பி ஓடுமாறு’ அறிவுறுத்தியது. மாடுகள்
கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டிருப்பதால் கொன்ற மாடுகளைச் சாப்பிடவும்
கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இயல்பு நிலையை விடக் கதிர்வீச்சு
ஏப்ரல் மாதம் நூறு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னர் தான்
நான் அறிந்து கொண்டேன். இன்றும் ஆயிரக்கணக்கானோர் கதிர்வீச்சுப்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் வாழ்ந்து வருகிறார்கள்’ என்கிறார் அவர்.
புகுசிமா, மியாகி, யமகற்று, இவாற்று ஆகிய
பகுதிகளில் உள்ள மக்கள், ஜப்பான் அரசின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை
இழந்துவிட்டார்கள். தொழில்நுட்பம், பொருளியல் ஆகியவற்றிலும் நிலநடுக்கம்,
ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதிலும்
ஜப்பான் புகழ்பெற்றிருந்தாலும் செர்நோபில் நேர்ச்சியில் உக்ரைன் நடந்து
கொண்டதை விடப் படுமட்டமாக நடந்து கொள்வதாகவே அம்மக்கள் கருதுகிறார்கள்.
ஆனால் உண்மையில் அங்குள்ள பாதிப்போ –
செர்நோபில் நேர்ச்சியைப் போல் ஐந்து மடங்கு பெரிதாக இருந்தது; 11000 சதுர
கிலோ மீட்டருக்கும் அதிகமான வேளாண் பகுதியில் உள்ள உணவுப் பயிர்கள்
பாதிக்கப்பட்டிருந்தன. ஆழிப்பேரலை, நிலநடுக்கம் ஆகிய இயற்கைச்
சீற்றங்களின் போது எடுத்த உறுதியான நடவடிக்கைகளைப் போல் ஜப்பான் அரசால்
செயல்பட முடியவில்லை. ஏனென்றால் அணு உலை நேர்ச்சியால் அடைந்த பாதிப்பு
என்பது கற்பனைக்கும் அறிவியலுக்கும் எட்ட முடியாத இடத்தில் இருந்தது.
‘அணுத் தொழில்நுட்பம் என்பது இயற்கை
அறியாத ஒன்றாகும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் கதிர்வீச்சு பாதிப்பைத்
தான் ஏற்படுத்துகிறது. வாழ்வியல் கொள்கைகள் அனைத்தையும் அணுத்
தொழில்நுட்பம் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. அணுத் தொழில்நுட்பம் அழிவுக்
கல்லறையைச் சுமந்து வரும் கால வெடிகுண்டைப் போன்றது தான். இது வரை
அவ்வெடிகுண்டின் அருமை நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்; ஆனால் இப்போது
புரிந்து விட்டது. அவ்வெடிகுண்டு வெடிக்கத் துடிக்கும் ஒவ்வொரு நொடியும்
இப்போது முன்பை விடத் தெளிவாக நம்முடைய காதுகளில் கேட்கத் தொடங்கிவிட்டது’
என்று புகுசிமா நேர்ச்சிக்குப் பிறகு அணுத் தொழில்நுட்ப ஆய்வாளர் ஜிஞ்சபுரோ
டகாகி கூறியிருப்பதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.
மறைத்து வைக்கப்பட்ட அறிக்கைகள்
பொது மக்கள் தங்கள் பாதுகாப்புக்குத்
தெரிந்து கொள்ள வேண்டிய அணு உலை பற்றிய விவரங்களை ஜப்பான் அரசு மூடி
மறைத்து வருகிறது. இவ்விவரங்கள் அனைத்தும் ஊடகங்கள் தற்போது வெளிக்கொண்டு
வரும் செய்திகள் மூலம் தெரிய வருகின்றன. கடந்த மார்ச் 25ஆம் நாள் ஜப்பான்
தலைமை அமைச்சர் நாடோ கானிடம் இவ்வறிக்கைகள் கொடுக்கப்பட்டன.
திசம்பர்
மாதம் வரை மறைத்துவைக்கப்பட்டிருந்த இவ்வறிக்கைகள் குறிப்பிட்ட சில மூத்த
அலுவலர்களுக்கு மட்டும் காட்டப்பட்டுப் பின்னர் மறைக்கப்பட்டு விட்டன.
‘அறிக்கையில் உள்ள விவரங்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதால் அவ்வறிக்கையை
வெளியிடவில்லை’ என்று மூத்த அலுவலர் ஒருவரே கூறும் அளவு அறிக்கை
அமைந்திருக்கின்றது.
இன்னும் ஓராண்டுக்கு அணு உலையில் இருந்து
கதிரியக்கத் தனிமங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வாய்ப்பு இருப்பதாக
அறிக்கை தெரிவிக்கிறது. இப்படி நடந்தால், 170 கி.மீ., சுற்றளவுக்குள்
இருக்கும் ஏறத்தாழ 4 கோடிப் பேர் தங்கள் இடங்களைக் காலி செய்ய
வேண்டியிருக்கும். 170 இல் இருந்து 250 கிலோ மீட்டர் சுற்றுப் பகுதிகளில்
உள்ள டோக்கியோ, சென்டை, புகுசிமா ஆகிய நகரங்களில் வாழும் மக்கள்
தற்காலிகமாக வேற்றிடம் செல்ல வேண்டியிருக்கும். இத்துடன் நின்று
விட்டாலாவது சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்னும் பல்லாண்டுகளுக்கு
மக்கள் அவ்விடங்களில் வாழவே முடியாது. இக்கருத்துகளை எல்லாம் சொல்லும்
அரசின் அறிக்கை, ‘நாங்கள் கூறுவது முழுமையானது இல்லை; இது மேலோட்டமான ஒரு
கணிப்புத் தான்’ என்று வேறு அச்சுறுத்துகிறது.
அறிக்கையில் கூறப்பட்டிருக்கும்
கருத்துகள் தவிர்த்து, நான்கு உலைகளிலும் ஏற்பட்டிருக்கும் ஹைட்ரஜன்
வெடிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மீது போதுமான கவனம்
செலுத்தப்படவில்லை. அப்பாதிப்புகள் பற்றிச் சிந்தித்து அரசு அவற்றை
எல்லாம் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
இப்படி ஓர் அறிக்கை இருப்பதை மட்டும்
ஒத்துக்கொண்ட அணு உலைச் சிக்கலுக்கான அமைச்சர் கோசி ஓசோனோ, ‘அறிக்கை
எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறும் சில சூழ்நிலைகள், உறுதியாக
நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எனவே அதை மக்களின்
பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை. அறிக்கை கூறும்
சூழ்நிலைகள் வந்தாலும் மக்களை வெளியேற்ற போதுமான காலம் இருக்கிறது’ என்று
மழுப்பலாகக் கூறுகிறார். அவருடைய கூற்றே ஜப்பான் அரசு, மூன்று உலைகளும்
எப்படி உருகின, எப்படி நேர்ச்சி நடந்தது என்பதை ஆராய்வதை விடத்
தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறது என்பதை
வெளிப்படுத்தி விடுகிறது.
விசாரணைக் குழு
டோக்கியோ பல்கலைக்கழகத்தின் மருத்துவத்
துறை முன்னாள் பேராசிரியரும் கொள்கைப் படிப்புகளுக்கான தேசிய பட்டதாரிக்
கல்லூரிப் பேராசிரியருமான கியோசி குரோகவா தலைமையில் புகுசிமா நேர்ச்சியால்
நடந்திருக்கும் சிக்கல்களை ஆராய, தன்னாட்சிக் குழு ஒன்று
அமைக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற கொய்ச்சி டனாகா போன்ற
அறிஞர்கள் உள்ள இக்குழுவிற்குப் பாதிக்கப்பட்டோரை விசாரணைக்கு அழைக்கும்
உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
புகுசிமா அணு உலை ஆழிப்பேரலைக்கு முன்பு
வந்த நில நடுக்கத்தாலேயே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்பதற்கான
சான்றுகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. இங்கு நாம் கவனிக்கத்தக்க
ஒரு விடயம், புகுசிமா அணு உலை 9 ரிக்டர் வரை நில நடுக்கத்தைத் தாங்கும்
அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது தான்! இந்த உண்மைகள் எல்லாம்
நிறுவப்பட்டால், ஜப்பானில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்பு அளவீடுகள்
மீதும் நம்முடைய ஐயம் விரிவடையும். விசாரணைக் குழுவின் தலைவர் குரோகவா,
‘உலக நாடுகள் ஜப்பான் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை புகுசிமா நேர்ச்சி
கேள்விக்குள்ளாக்குவதால் நடுநிலையான தன்னாட்சி விசாரணை தேவை’ என்று கருத்து
தெரிவித்திருக்கிறார்.
புகுசிமா நேர்ச்சிக்கு முன் உலக அளவில்
(இந்தியா உட்பட) பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகளைத் தானும் பின்பற்றி
வருவதாக ஜப்பான் கூறி வந்தது. ஆனால் கதிரியக்கப் பாதிப்பைக் கையாண்ட
மோசமான முறை, தொழிற்சாலைகளுக்கு ஆதரவான அரசின் நிலை, உலை பற்றிய
கமுக்கங்களை மறைத்தது, வாழ்வா சாவா போராட்டத்திற்கு மக்களைக் கொண்டு வந்தது
ஆகியன அணு ஆற்றல் தொழில்நுட்பம் மிகப் பெரிய தீங்குகளை கொண்டு வருகிறதோ
என்னும் கேள்வியை உலகமெங்கும் எழுப்பியிருக்கிறது.
தொழில் சார் சமூக ஒழுக்கம், தொழிலகப்
பாதுகாப்பு, நேர்ச்சிகளைக் கையாள்வதில் தேர்ந்த ஆளுமை ஆகியவற்றைக் கொண்ட
நன்கு வளர்ச்சியடைந்த ஜப்பானிலேயே இப்படிப்பட்ட கேள்விகள் மையம் கொண்டால்,
பேரழிவுகளை அணுகுவதில் போதிய தேர்ச்சியில்லாத நிலை, நில நடுக்கம் வரும்
வாய்ப்புகள் கொண்ட புவியமைப்பு, பாதுகாப்புப் பற்றிப் போதிய விழிப்புணர்வு
இல்லாத சமூகம் ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவில் நாம் அணு உலைகளை எப்படிக்
கையாளப் போகிறோம் என்பது நியாயமான கேள்வியாகவே தெரிகிறது.
- பிரபுல் பித்வாய்
ஆங்கில மூலம்: பிரண்ட்லைன் - பிப்ரவரி 11 - 24, 2012 இதழ் (http://www.frontlineonnet.com/stories/20120224290310600.htm)
மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி
நன்றி: கீற்று.காம்
1 கருத்து:
இந்தியாவில் நாம் அணு உலைகளை எப்படிக் கையாளப் போகிறோம்...
நியாயமான கேள்விதான்...
கருத்துரையிடுக