செவ்வாய், பிப்ரவரி 21, 2012

அவசியம் தேவையானதா "நியூட்ரினோ' ?

தமிழக மக்களின் அச்சத்தைத் தூண்டுவதற்காகவே "நியூட்ரினோ' என்றொரு அறிவியல் பெயர் தற்போது விவாதிக்கும் பொருளாக உருவாகியுள்ளது. இந்தப் பெயர் மக்களுக்கு நன்மை செய்யப்போகிறதா அல்லது தீமை செய்யப்போகிறதா என்ற கேள்வி பெரும்பாலான தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.


இந்த "நியூட்ரினோ' குறித்த தெளிவான பார்வை தமிழகத்தில் இல்லை என்பதால், பல சமூக ஆர்வலர்கள் இதுகுறித்த போராட்டங்களைத் தொடங்கவில்லையா அல்லது விழிப்புணர்வு இல்லையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

"நியூட்ரினோ' என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். பல கோடி நியூட்ரினோக்கள் சூரிய ஒளியிலிருந்தும், விண்மீன்களிலிருந்தும் நாள்தோறும் வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன.
 
இந்த அணுத்துகளைப் பிடித்து அதை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி உலகளவில் 1930-களில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
நியூட்ரினோ துகள்களை ஒரு இரும்பிலான பிரமாண்ட கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
இந்த ஆய்வகத் திட்டம் இப்போது தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது.

மேலும் இது தமிழக-கேரள எல்லையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வில் மத்திய அணு சக்தி துறையும் ஈடுபடவுள்ளது. இது உலகளவில் அமைக்கப்படும் 5-வது நியூட்ரினோ ஆய்வகத் திட்டமாகும்.

இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை சாதாரண தரைத்தளத்தில் அமைக்க முடியாது. கடுமையான பாறைகள் கொண்ட செங்குத்தான மலைப்பகுதியில் மட்டுமே அமைக்க முடியும்.
 
உலகிலேயே மிகக் கடினமான பாறைகள் கொண்டது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இதன் காரணமாகவே பொட்டிபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

10 மீட்டர் அகலமும், 2.5 கிலோ மீட்டர் நீளமும் உள்ள இந்த நியூட்ரினோ ஆய்வகமானது மலையிலிருந்து சுரங்கம் அமைத்து ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். இதற்காக சுரங்கத்தைத் தோண்டும்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பாறைகள் வெட்டப்பட வேண்டும். இதற்கு 1,000 டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த வெடி மருந்துகளைப் பயன்படுத்தி 1 லட்சம் டன் பாறைகள் வெட்டப்படும். இதனால் மலைப் பகுதியியைச் சுற்றி 1 லட்சம் டன் தூசிகள் காற்றில் பரவும் அபாயமும் உள்ளது.

மேலும், இந்த வெடி மருந்தைப் பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் அதிர்வால் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையில் பாதிப்பு ஏற்படும் என அணு கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சியாளர் டி.வி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே சிறந்த பசுமைமாறா காடான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைத்தால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் சூரிய ஒளியிலிருந்து நியூட்ரினோவை எடுத்தால் இயற்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் செயற்கையான முறையில், அதாவது அணுவைப் பிளந்து நியூட்ரினோக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வுக் கூடத்துக்கு அனுமதி அளித்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், அப்பகுதியில் யானைகள் மற்றும் எருதுகள் சரணாலயம் உள்ளது. அதைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் கவனத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்ற சிக்கலின் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டபோது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு கைவிட்டது.

நியூட்ரினோ சக்தியின் மூலம் எந்தவொரு பொருளையும் தகர்த்தெறிந்து எதிரியைத் தாக்கும் ஏவுகணையைத் தயாரிக்கவே இந்த ஆய்வுக் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிலர் குற்றம் கூறியுள்ளனர்.

கனடாவில் சட்பரி, அமெரிக்காவில் செüடன் சுரங்கம், ஜப்பானில் மி-ஓகா, இத்தாலியில் கரேன் சாஜோ மலைப் பகுதிகளில் இந்த ஆய்வுக் கூடம் இன்றளவும் இயங்கி வருகிறது.

இப்போது தேனியில் அமைக்கப்படவுள்ள இந்த ஆய்வுக் கூடம் 120 ஆண்டுகள் வரை இயங்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது 120 ஆண்டுகளுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி பாதிக்கப்படும். நம்முடைய வளமான வனங்கள் சிதைந்து விடும். நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் அமைந்தால் அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு, தனிப்புகழ் பெறும் வாய்ப்பு கிட்டும்.
 
""இளம் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சி மாணவர்களையும், பொறியாளர்களையும் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாய்ப்பை தமிழகம், இழந்துவிடக் கூடாது. இந்த ஆய்வுக் கூடத்தில், எவ்வித ஆபத்தான கதிர் வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படாது. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சுற்றுப்புறத்தையோ, நீர், நில வளத்தையோ இந்த ஆராய்ச்சி எவ்விதத்திலும் பாதிக்காது.
 
நியூட்ரினோ கருவி, மற்ற தொலைநோக்குக் கருவிகளைப் போன்றது. தமிழகத்தில் இது அமைவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு சென்று ஆராய்ச்சிகளைப் பார்க்க முடியும்'' என்று மத்திய அணு சக்தி துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உடைக்கப்பட்ட வளமான பாறைகளை மீண்டும் நியூட்ரினோவால் உருவாக்க முடியுமா? ஆராய்ச்சிக் கூடத்தின் சப்தத்தால் காட்டைவிட்டு வெளியேறும் விலங்கினங்கள் மீண்டும் தங்களது புகலிடத்துக்கு வர முடியுமா? காற்றில் பறக்கும் தூசிகளைக் கட்டுப்படுத்துமா? அல்லது தேனி மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையாவது நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தால் முன்னேற்ற முடியுமா? என்ற கேள்விகளுக்கு "இல்லை' என்ற பதில்தான் கசப்பான உண்மை.

இத்தனையும் இழந்த பின்பும் "நியூட்ரினோ' அவசியம்தானா...?

-ஆர். ஜி. ஜெகதீஷ்

நன்றி: தினமணி, 20-02-12

4 கருத்துகள்:

Minsaram சொன்னது…

அவசியம் தேவையானதா மின்சாரம்?
ஏன் தீப்பந்தத்தையே விளக்காக பயன்படுத்தலாமே.

பெயரில்லா சொன்னது…

அருமையான கட்டுரை!! ஊழல் அரசியல்வாதிகள், மக்கள் - இவர்களை நினைத்தால் தமிழகத்திற்கு விடிவுகாலம் என்ற ஒன்றே இல்லையோ என அஞ்சும்படியாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

அருமையான கட்டுரை!! ஊழல் அரசியல்வாதிகள்,மக்கள் - இவர்களை நினைத்தால் தமிழகத்திற்கு விடிவுகாலம் என்ற ஒன்றே இல்லையோ என அஞ்சும்படியாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

அருமையான கட்டுரை!! ஊழல் அரசியல்வாதிகள்,மக்கள் - இவர்களை நினைத்தால் தமிழகத்திற்கு விடிவுகாலம் என்ற ஒன்றே இல்லையோ என அஞ்சும்படியாக உள்ளது.

கருத்துரையிடுக