‘‘மோர்ல வெண்ணெய் எடுக்கத் தெரியாதவ... முறத்துல
தங்கம் எடுப்பாளா?’’
என்கிற சொலவடையைப் போல், வயலுக்குப் போடும் உரத்திலேயே எது நல்ல உரம்...
எது கெட்ட உரம் எனத் தெரியாமல் கண்டதையும் அள்ளிப் போடுபவர்கள் நம் அப்பாவி
விவசாயிகள். அப்படியிருக்கும்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் (பி.டி.) பற்றி
பரவிக்கிடக்கும் எதிரெதிர் கருத்துக்களால் குழம்பாமலா இருப்பார்கள்?
இந்தக் குழப்பத்துக்கு விடை தேடும் முயற்சியாக
பொங்கலை முன்னிட்டு, கடந்த (2007 ஜனவரி) 13-ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன 'மனித உரிமை-சுற்றுச் சூழல் நீதிக்கான
வழக்கறிஞர் குழு' மற்றும் 'தோழமை' ஆகிய அமைப்புகள். ‘மரபணு மாற்றப்பட்ட விதைகள் உழவர்களின் வளர்ச்சிக்கா....
நிறுவனங்களின் வளர்ச்சிக்கா..?’ என்ற தலைப்பில்
நடந்த விவாத அரங்க நிகழ்ச்சியை வழக்கறிஞர்கள் குழுவின் செயலாளர் சுந்தரராஜன்
துவக்கி வைத்தார்.
'உழவர்களின் வளர்ச்சிக்கே' என்றபடி முதலில் மைக் பிடித்த தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக் கழக தாவர மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குனரான
டாக்டர் சதாசிவம்,
‘‘மரபணு மாற்று தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி
வறட்சி, உப்பு தன்மையைத் தாங்கி வளரும் தாவரத்தையும், பூச்சி நோய் தாக்காத பயிரையும் வளர்க்க
முடியும். அமெரிக்காவுல இருக்கும் ஹவாய் பகுதியில் விளையும் பப்பாளியில்
வட்டபுள்ளி நோயின் தாக்கம் அதிகமிருந்தது. எந்த மருந்தடிச்சும் சரியாகலை. பிறகு
மரபணு மாற்று தொழில் நுட்பத்தில் வட்டப்புள்ளி நோயை எதிர்க்கும் பப்பாளியை
வெளியிட்டாங்க. அதனால வட்டபுள்ளி நோய் தடுக்கப்பட்டதோடு, விளைச்சலும் நல்லா இருந்தது. பி.டி. விவசாயிகளுக்கான
கண்டுபிடிப்புதான். இதனால விவசாயிங்களுக்குதான் லாபம்’’ என்று உலக மேற்கோள்களை எல்லாம் சுட்டிக்காட்டி
உட்கார்ந்தார்.
வழக்கமான கலகலப்போடு பேசிய 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், ‘‘இந்தியாவில் 55 சதவிகித குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் பாதிப்பு
இருக்கு, மூளை வளர்ச்சியும் குறைவாகவே இருக்கு. அதனால்
பி.டி-யில் உருவான கோல்டன் அரிசி சாப்பிடுங்கள். இதில் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறதுனு
சொல்றார் வெளிநாட்டு விஞ்ஞானி. அதே வைட்டமின் ஏ... கேரட், இறைச்சி, முருங்கைக் கீரை
இதிலெல்லாம் இருக்கே. அதைச் சாப்பிடச் சொல்லவேண்டியதுதானே? விவசாயம் இன்று வியாபாரமாகிவிட்டது. நம்மை
அடிமையாக்க பலரும் துடிக்கிறார்கள்’’ என ஆக்ரோஷமாக பேசினார்.
பெங்களூரு உயிரியல் தொழில் நுட்பக் கல்வி
நிறுவனத்தைச் சேர்ந்த குருமூர்த்தி நடராஜன் பேசும்போது, ‘‘இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட
பத்தாண்டுகளில் பூச்சி மருந்து உபயோகிக்கும் அளவு கிட்டதட்ட 14 சதவிகிதம் குறைந்துள்ளது. இப்படி
விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தால் நிறுவனங்கள் எப்படி வளர
முடியும்? நாம் சாப்பிடும் அரிசியை பாலீஷ் செய்வதால்
அதில் உள்ள வைட்டமின் போய் விடுகிறது. அதே சமயம் கோல்டன் அரிசி ஒரு சதவிகிதமாவது
பலன் கொடுத்தால் நமக்கு நன்மைதானே’’ என்று வாதம்
செய்தார்.
ஆவேசமாக மைக் பிடித்த உழவர்-உழைப்பாளர்
கட்சியின் அகில இந்தியப் பிரதிநிதியான நல்லா கவுண்டர், ‘'ஆடு, மாடு, மனுஷனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வாங்க.
எங்கேயாவது விதைக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வாங்களா..? அந்த மாதிரியான வேலைகளை அமெரிக்கா மாதிரியான
பைத்தியக்கார நாடுங்கதான் செய்யும். இதெல்லாம் இங்க
எப்படிங்க சரிப்பட்டு வரும்? ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக்
காட்டலாம். எங்களுக்கு இருப்பதே ஒரு வயிறுதான். தயவுசெய்து அந்த வயித்துல
அடிக்காதீங்கய்யா’’ என சொன்னபோது ஒட்டுமொத்த கூட்டமும் ‘உச்’ கொட்டியது.
அடுத்துப் பேச வந்தவர் கலகலப்பு பார்ட்டியான 'வானொலி புகழ்' துகிலி
சுப்ரமணியம்,
‘‘நாம பயன்படுத்தும் பல பொருட்கள் வெளிநாட்டுல
இருந்து வந்ததுதான். அதுலயும் பல பாதிப்புகள் இருக்கத்தான் செய்யுது. ஆனால், அதை எல்லாத்தையும் தேவை கருதி ஏத்துக்கிட்டோம்.
அதேபோல இந்த பி.டி. வகையையும் ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அந்தக் கம்பெனி பூச்சி
மருந்து ஒரு மூடி, இந்த கம்பெனி மருந்து ஒரு மூடினு நீங்களாவே
யார் யாரோ சொன்னதை எல்லாம் அடிச்சுக்கிட்டு, இப்போ விளைச்சல்
வரலைனு யாரையும் குற்றம் சொல்லக் கூடாது’’ என்று வழக்கமான பாணியில் போட்டுத்தாக்கினார்.
கடைசியாக பேசிய ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள்
கூட்டமைப்பைச் சேர்ந்த 'அரச்சலூர்' செல்வம், ‘‘அமெரிக்க பத்திரிகை ஒன்றில் ‘எங்களிடம் பி.டி. விதை அலர்ஜிக்கு மருந்து
கிடைக்கும்’ என்று விளம்பரப்படுத்தியது ஸ்டர்லிங்கான் என்ற
நிறுவனம். மரபணு மாற்றம் மூலம்
மக்காச்சோளத்தை அறிமுகப்படுத்தியதே அந்த நிறுவனம்தான். இதில் இருந்தே உண்மையைப்
புரிந்து கொள்ள முடியும். இந்த விதைகளால் பாதிப்பு இல்லை. அப்படி பாதிப்பானால்
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என இங்கிருக்கும் யாராவது உத்தரவாதம் கொடுக்க
முடியுமா?’’
எனக் கேட்டார். அதற்கு யாரும் பதில் கொடுக்காத நிலையில்
விவாதம் முடிவுக்கு வந்தது.
பி.டி. ஆதரவு வரிசையில் 'ராசி' விதை நிறுவன
மேலாளர் டாக்டர் தியாகராஜனும் எதிர்ப்பு வரிசையில் டாக்டர் சிவராமனும்
கருத்துக்களை முன் வைத்துப் பேசியது கூட்டத்தைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்க
விஷயமாகும்.
அடுத்துக் கேள்வி நேரம் தொடங்கியபோது 'துகிலி'யாரை நோக்கி, ‘‘அந்த உரத்தைப் போடுங்க, இந்த மருந்தை போடுங்கனு நீங்கதானே ரேடியோவுல சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டுத்தானே பயிரிட்டோம். நிலம் கெட்டு போச்சு. இப்ப பி.டி. பருத்தியால் லாபம்னு வேற சொல்றீஙகளே’’ என்று கண்ணையன் என்பவர் குரல் உயர்த்தினார்.
அதற்குப் பதிலளித்த துகிலி, ‘‘அப்போ அரசாங்கம் என்ன சொன்னதோ அதைத்தான் நாங்களும் சொன்னோம். அதயும் மீறி இயற்கை உரத்தை போடுங்கனு உரக்க சொன்னவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்’’ என்று சளைக்காமல் பதில் கொடுக்க... கூட்டத்தில் ஏக சலசலப்பு.
சட்டென்று மைக் பிடித்த நம்மாழ்வார், ‘‘நாம எல்லோரும் கட்டபொம்மனா இருக்க போகிறோமா... இல்ல எட்டப்பனா மாறப்போறோமா? என்பதை முடிவு செய்றதுதான் இப்ப முக்கியம்’’ என்று உணர்ச்சி பிழம்பாக வெடிக்க... சலசலப்பு ஓய்ந்தது.
''இந்த விவாதம் ஒரு ஆரம்பம்தான். மீண்டும் மீண்டும் இதுபோன்ற விவாதங்கள் நடத்தப்பட்டால் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று சொல்லி விவாதத்தை முடித்து வைத்தார், விவாத அரங்கின் நடுவரான லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட்.
நன்றி: பசுமை விகடன், 10-02-2007
1 கருத்து:
அருமையான நிகழ்வு
கட்டபொம்மனாக வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக