வெள்ளி, அக்டோபர் 26, 2012

பூவுலகின் நண்பன்: பியூஸ் மானுஷ்


பியூஸ்... ஓர் உற்சாகமான இளைஞர். எதைப் பற்றியும் அவரிடம் பேசலாம். ''எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா, நல்லாத் தமிழ் பேசுவேன். தமிழ்நாட்டின் வரலாறு தெரியும். குறிப்பா, இந்த சேலம் நகரத்தைப் பத்தி முழுக்கத் தெரியும். நான் பொறந்து, வளர்ந்த மண் இதுதான். அதனால் நீங்களாவது, 'எங்கேயோ பிறந்து, இங்கு வந்து’னு எழுதிடாதீங்க...'' - அன்பாகச் சிரிக்கிறார் பியூஸ் மானுஷ். இரு தலைமுறைகளுக்கு முன்பு துணி வியாபாரம் செய்ய ராஜஸ்தானில் இருந்து சேலத் துக்கு வந்த குடும்பத்தின் வாரிசு. பியூஸ் சேத்தியா இவரது உண்மைப் பெயர். சேத்தியா என்ற சொல் சாதியைக் குறிப்பதால் தன் பெயரை 'பியூஸ் மானுஷ்’ என்று மாற்றிக்கொண்டார்.  

கடந்த சில ஆண்டுகளில் சேலம் நகரத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பலவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. 'சேலம் மக்கள் குழு’, 'சேலமே குரல் கொடு’ போன்ற அமைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்னைகளுக்காக அரசாங்கத்துடன் மல்லுக்கட்டிவரும் இவர், சேலத்தில் ஒரு பிரமாண்ட பறவைகள் சரணாலயத்தையே உருவாக்கி இருக்கிறார். கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் இருந்து சில பன்னாட்டு நிறுவனங்களைப் பின்வாங்க வைத்திருக்கிறார். 150 ஏக்கரில் ஒரு கூட்டுறவுப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேலான மரங்களை சேலம் மலைப் பகுதி களில் உருவாக்கி இருக்கிறார்.
''சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் படித்தேன். எங்கள் வகுப்பறையில் இருந்து பார்த்தால் மலைகள் தெரியும். ஒருநாள் ஆசிரியர் எங்களை மலைகளை வரையச் சொன்னார். நான் மட்டும் பிரவுன் நிறத்தில் வரைந்தேன். 'ஏன் பச்சையா வரையலை?’ என்று அவர் கேட்க... 'எந்த மலையும் பச்சையா இல்லையே சார்?’ என்று நான் சொன்னதைக் கேட்டு அவருக்கு அதிர்ச்சி. உடனே, எல்லோரையும் பிரவுன் நிறத்திலேயே வரையச் சொன்னார். 'நம் வார்த்தை ஒரு வகுப்பறை அளவில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது எனில், இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய முடியும்’ என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாகப் பதிந்தது.

பிறகு, சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்தேன். பெரும்பாலான தனியார் கல்லூரி களில் என்னவெல்லாம் அட்டூழியங்கள் நடக்குமோ, அனைத்தும் அங்கும் உண்டு. முந்தைய ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்குச் சொற்ப சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாக நியமிப்பார்கள். கல்வியில் கொஞ்சமும் தரம் இருக்காது. இவற்றை எதிர்த்துக் கேட்கலாம் என்றால், மாணவர் சங்கத்துக்கு அனுமதி இல்லை. ஆகவே, நான் மாணவர்களைத் திரட்டி, தரமான கல்விக்காகப் போராட்டம் நடத்தினேன். கோரிக்கை நியாயமானது என்பதால், அரசாங்கம் எங்கள் பக்கம் நிற்கும் என்று நினைத்தேன். ஆனால், என் மீது பொய்யாகக் கொலை முயற்சி வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். முதன்முறையாக இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்தேன்.  

கல்லூரி முடிந்து வெளியே வந்ததும் சேலத்தைச் சுற்றி இருக்கும் மலைப் பகுதிகளில் மரங்கள் நட ஆரம்பித்தேன். அப்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் நட்டிருப்பேன். பிறகு, மேட்டூர் பகுதியில் நீர் வளத்தையும் நில வளத்தையும் நஞ்சாக்கிவரும் 'கெம்பிளாஸ்ட் சன்மார்’ என்ற தொழிற்சாலைக்கு எதிராகப் போராடியவர் களுடன் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் உண்மையிலேயே 'ஆக்டிவிஸம்’ என்றால் என்ன, மக்களுடன் இணைந்து வேலை பார்ப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். மேட்டூரில் அந்தத் தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளினால் பல நூறு ஏக்கர் விவசாய நிலம் நிரந்தரமாக நஞ்சாகிவிட்டது. இப்போதும் முழுமையாகப் பிரச்னை தீரவில்லை என்றாலும், போராட்டங்கள் மூலமாக ஓரளவு மக்களுக்கு நீதி கிடைத்தது.  

அதன் பிறகு, பன்னாட்டு நிறுவனச் சூறையாடல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடத் துவங்கினோம். 2008-ல் 'ஜிண்டால் குழுமம்’ கஞ்ச மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்காக ஒரு திட்ட வரைவைக் கொடுத்தது. அதன்படி அவர்கள் திறந்தவெளிச் சுரங்கத்தில் வெடி வைத்து மலையை உடைப்பார்கள். இத்தனைக்கும் நகரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கிறது அந்த மலை. மூன்று லட்சம் மக்கள் அங்கு வசிக்கின்றனர். சேலத்துக்குத் தேவையான கணிச மான காய்கறிகள் அந்தப் பகுதியில் இருந்துதான் வருகின்றன. 40 ஆயிரத்துக்கும் அதிகமான கால் நடைகள் அங்கு இருக்கின்றன. அந்தச் சுரங்கம் மட்டும் வந்துவிட்டால் இவை அத்தனையும் காலி. ஆனால், இவ்வளவும் தெரிந்து, அரசு அனுமதி கொடுத்தது. அதற்கு எதிராக  மக்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடினோம். இறுதியில், அந்த நிறுவனம் திட்டத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டது.

அடுத்து, வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான 'மால்கோ’ நிறுவனம் 1996-ம் ஆண்டில் இருந்து ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் இருந்து பாக்ஸைட் தாதுவை வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. கொல்லிமலையில் இருந்து தினசரி 400 லாரி லோடு மண்ணும் ஏற்காட்டில் இருந்து தினமும் 40 லாரி லோடு மண்ணும் கீழே இறங்கியது. இவை எவற்றுக்கும் எந்த அனுமதியும் இல்லை. காட்டில் சுள்ளி பொறுக்கப்போகும் ஏழை மக்களை விரட்டி அடிக்கும் வனத் துறை, 2008-ம் ஆண்டு வரை இயற்கை வளத்தைச் சூறையாடிய இந்த நிறுவனங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, தடுத்து நிறுத்தினோம். ஆனால், பாக்ஸைட் எடுத்தது போக மீதம் உள்ள 80 சதவிகித ரசாயனக் கழிவுகள் கலந்த மண்ணை காவிரி ஓரத்தில்தான் கொட்டினார்கள். வருடக்கணக்கில் கொட்டிய அந்த ஆபத்தான கழிவுகள், இப்போதும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. இன்று அந்த விஷத்துக்கும் ஒரு மதிப்பு வந்துவிட்ட தால் எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதை முழுவதும் அள்ளவே குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.

இப்படி சேலத்தின் கனிம வளங்களைச் சட்டத் துக்குப் புறம்பாக வெட்டி எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான எங்களின் போராட்டம் இப்போதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், இந்த அரசு ஓய்வு கொடுப்பதே இல்லை. ஒன்று முடிந்தால் அடுத்தது, அது முடிந்தால் இன் னொன்று என வரிசையாகப் பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது!'' என்று ஒரு தேர்ந்த தொழிற்சங்கவாதிபோலப் பேசும் பியூஸ், ஈழப் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன் நிற்கிறார். சேலம் நகரத்தின் குறுக்காக ஓடும் திருமணிமுத்தாறு, ஒரு சாக்கடையாக மாற்றப்பட்டதையும் உலக வங்கி நிதி உதவியுடன் அதில் சிமென்ட் தரை அமைக்கப்பட்டதையும் எதிர்த்து சட்டப் போராட்டமும் நடத்திவருகிறார்.
பியூஸின் முக்கியமான பங்களிப்பு, கன்னங்குறிச்சியில் இருக்கும் மூக்கனேரி பறவைகள் சரணாலயம். இந்தப் பிரமாண்டமான ஏரியை இரண்டே வருடங்களில் ஒரு சரணாலயமாக மாற்றி இருக்கிறார். ''2009-10 வருடத்தில் சேலத்தில் கடுமையான வறட்சி. அப்போதுதான் குறைந்தபட்சம் ஏரியைத் தூர் வாருவோம் என நினைத்து இதைச் செய்தோம். தூர் வாரிய மண்ணைக்கொண்டு ஏரிக்குள்ளேயே சிறு மணல் திட்டுக்களை உருவாக்கினோம். அவற்றில் புங்கன், கருவேலம், அரச மரம், ஆல மரம், மூங்கில், சீத்தாபழம், சிங்கப்பூர் செர்ரி, கோணப் புளியங்காய் என விதவிதமான மரக்கன்றுகளை நட்டோம். மணல் திட்டு கரை யாமல் இருக்க பக்கவாட்டில் அருகம்புல்,வெட்டி வேர், மூங்கில் ஆகியவற்றை வைத்தோம். எல்லா வேலைகளும் ஒரே நேரத்தில் நடந்தன. மக்கள் பணம் 17 லட்ச ரூபாயைக்கொண்டு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினோம். அடுத்த சில மாதங்களில் நல்ல மழை. தூர் வாரியதால் ஏழு கிலோ மீட்டருக்கு நிலத்தடி நீர் ஊறியது. நட்ட மரங்கள் செழித்து வளர்ந்தன. ஒவ்வொரு மணல் திட்டும் ஒரு தீவுபோல மாறியது. படிப் படியாகப் பறவைகள் வந்து சேர்ந்தன. இப்போது இங்கே 41 வகையான பறவைகள் இருக்கின்றன. நிறையப் பறவைகள் இங்கேயே கூடு கட்டிக் குஞ்சு பொரித்து... இது ஒரு பறவைகள் சரணாலயமாகவே உருவாகிவிட்டது. இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகத் தேர்வுசெய்திருக்கும் தமிழக அரசு, மாநிலம் முழுக்க உள்ள 500 ஏரி களில் இதேபோல செய்யப்போகிறது!'' என்கிறார்.

இந்த ஏரிக்குள் இப்போது 45 மணல் திட்டுக்களும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களும்-இருக்கின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, 'மூக்கனேரியில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்த விநாயகர் சிலைகளைக் கரைக் கக் கூடாது’ என்று சேலம் நகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார் பியூஸ். ஆனாலும், கரைக்கப்பட்டன. உடனே, 'மக்களிடம் பணம் வசூலித்துதான் இந்த ஏரி தூர் வாரப்பட்டது. அதில் சிலைகள் கரைக்கப்பட்டபோது தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஆனால், என்னால் முடியவில்லை. என்னைக் கைது செய்யுங்கள்’ என்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த விஷயம் பரவலான கவனத்தைப் பெற்றது.

''என்னைச் சிலர் 'வட நாட்டு ஆள்’ என்பார்கள். சிலர் 'பச்சைத் தமிழன் இல்லை’ என்பார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. நான் பச்சைத் தமிழனோ, சிவப்புத் தமிழனோ... சாதாரண மக்களை அரசாங்கம் வஞ்சிக்கும்போதும், நிறுவனங்கள் சுரண்டும்போதும் அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருக்க என்னால் முடியாது. திராவிடம், தமிழ்த் தேசியம், கம்யூனிஸம் என நான் எந்த அரசியல் கொள்கையும் பயின்றது இல்லை. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களோடு போராடுகிறேன். தவறுகள் வந்தால் திருத்திக்கொள்வேன்!'' - மூக்கனேரி பறவைகள் சரணாலயத் தில் பரிசலில் துடுப்பு போட்டபடியே பேசுகிறார் பியூஸ். மேலே பறந்து செல்லும் பறவைகள் சிறகுஅசைத்து ஆமோதிக்கின்றன!

-பாரதி தம்பி
படங்கள் : எம்.விஜயகுமார்

நன்றி: ஆனந்தவிகடன், 31-10-2012

17 கருத்துகள்:

J.P Josephine Baba சொன்னது…

சமூக போராளியான நண்பர் பியூஸ் மானுஷ்’ க்கு வாழ்த்துக்கள்.

கோ.திருநாவுக்கரசு சொன்னது…

Joining issues with Tamils and guarding the Tail habitat ,this person stand very tall and with us. Tamils have to embrace such dedicated people as one with us.What a great change compared to the ones who live as parasites and make a living by making life miserable for Tamils

நம்பள்கி சொன்னது…

நான் கேள்விப் பட்டிருக்கிறேன்; சேலம் இந்த விஷயத்தில் தமிழ் நாட்டில் முன்மாதிரி! அறிவுள்ள மக்கள் சேலத்தில் வசிக்கிறார்கள்!

சீனி மோகன் சொன்னது…

பியூஸ் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்.

சீனி மோகன் சொன்னது…

பியூஸ் தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்.

G.KARTHY சொன்னது…

very inspiring article. welldone.

G.KARTHY சொன்னது…

very good.unspiring article

hari சொன்னது…

In salem manush fights.... For other districts... Who will do these activities...we have to make these changes to all over the country... In order to reclaim our real life with nature. More peoples like minded should joint their hands
like manush... Like poovulagu.

அப்துல் மாலிக் சொன்னது…

உங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆசை பகிரவும் நன்றி ........

சித்திரவீதிக்காரன் சொன்னது…

ஏரியை மீட்டு பறவைகளைக் காக்கும்பியூஸ் மானுஷ் என்ற அற்புதமான மனிதரை கொண்டாடுவோம்.

Unknown சொன்னது…

பியூஸ் தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்....

dhaya சொன்னது…

இவர கவர்மெண்ட் அரஸ்ட் செய்துட்டு

dhaya சொன்னது…

சேலம் ஏரிகளின் காவலன் என பெயர் எடுத்த "புயூஷ் மனிஸ்"
இன்று சேலம் சிறையில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

இளைஞர்களே எனக்கு இவரை இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் தனி மனிதனாக அவர் அவ்வூருக்கு செய்தது கொஞ்ச நெஞ்ச சேவை அல்ல
இரண்டு வெளிநாட்டு கம்பெனிகளை தனது ஊரில் கால் பதிக்கவிடாமல் இழுத்து மூடி இருக்கிறார் .

தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறார்
சமூகப்பணிகளுக்காக தன் உழைப்பை அற்பனித்த அவர் சிறையில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறார் ஆனால் என் இளஞ்சிங்கங்கள் காபாலி படத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறது

ஈர நெஞ்சம் கொண்ட இளைஞர்களே மற்றும் சமூக ஆர்வலர்களே இவரை மீட்க தயவு செய்து ஒன்று சேறுங்கள் உங்கள் பின்னால் நிற்க நானும் தயார்.

(இச்செய்தியை Facebook முழுவதும் சேர் செய்து சிதறடியுங்கள்)

dhaya சொன்னது…

சேலம் ஏரிகளின் காவலன் என பெயர் எடுத்த "புயூஷ் மனிஸ்"
இன்று சேலம் சிறையில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

இளைஞர்களே எனக்கு இவரை இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் தனி மனிதனாக அவர் அவ்வூருக்கு செய்தது கொஞ்ச நெஞ்ச சேவை அல்ல
இரண்டு வெளிநாட்டு கம்பெனிகளை தனது ஊரில் கால் பதிக்கவிடாமல் இழுத்து மூடி இருக்கிறார் .

தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறார்
சமூகப்பணிகளுக்காக தன் உழைப்பை அற்பனித்த அவர் சிறையில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறார் ஆனால் என் இளஞ்சிங்கங்கள் காபாலி படத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறது

ஈர நெஞ்சம் கொண்ட இளைஞர்களே மற்றும் சமூக ஆர்வலர்களே இவரை மீட்க தயவு செய்து ஒன்று சேறுங்கள் உங்கள் பின்னால் நிற்க நானும் தயார்.

(இச்செய்தியை Facebook முழுவதும் சேர் செய்து சிதறடியுங்கள்)

Dr T MURUGESAN சொன்னது…

கேடுகெட்டக்காவல்துறை

ஜாபர் அலி சொன்னது…

நானும் என்னால் முடிந்தவரை எல்லா இடங்களிலும் கத்திக்கொண்டு இருக்கிறேன். யாருமே கண்டு கொள்ளவில்லை.

தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் மடமையில் முதலிடத்தில் இருக்கிறான் தமிழன் :(

ஜாபர் அலி சொன்னது…

நானும் என்னால் முடிந்தவரை எல்லா இடங்களிலும் கத்திக்கொண்டு இருக்கிறேன். யாருமே கண்டு கொள்ளவில்லை.

தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் மடமையில் முதலிடத்தில் இருக்கிறான் தமிழன் :(

கருத்துரையிடுக