புதன், அக்டோபர் 10, 2012

அடுத்தக் கட்டம் நோக்கி 'மான்சான்டோ'... அமெரிக்கப் பயண அனுபவம்!


மரபணு மாற்றுப் பயிர்களுக்கு, உலகம் முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக மிரண்டு போயிருக்கும், மரபணு விதை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், எதிராகக் குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்களைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து விவசாயப் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதை நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அடங்கியக் குழுவை, அமெரிக்காவில் உள்ள தங்களது ஆய்வகங்களைப் பார்வையிடுவதற்காக சமீபத்தில் அழைத்துச் சென்றது மான்சான்டோ நிறுவனம். அந்தக் குழுவில் நானும் ஒருவன்.

அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோவின்  மூலக்கூறு இனப்பெருக்க ஆய்வகத்துக்கு (Monsanto Molecular Breeding Center) அழைத்துச் சென்று, கண்ணாடி சன்னல்கள் வழியே உள்ளே இருந்த இயந்திரங்களைக் காட்டி, தங்களது தொழில்நுட்பங்கள் 'பாதுகாப்பானது' என விளக்கினர். தங்களின் புதிய ஆய்வுகள் எப்படி நடக்கின்றன என்று, நடைபாதையில் பொறுத்தியிருந்த கணினித் திரையில் படமாகக் காட்டினர்.
அங்கு நடந்த ஆய்வுகளைப் பார்த்தபோது, மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு உலகமெங்கும் எதிர்ப்பு இருப்பதால், அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. 'மரபணு மாற்றம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தாது' என்று நம்பப்படுகிற 'ஜீன் மார்க்கர்’ என்கிற தொழில்நுட்பத்தில் மிகவேகமாக ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அதேபோல, 'எம்.ஆர்.என்.ஏ. தெளிப்பு' Messenger RNA என்கிற தொழில்நுட்பத்துக்கும் நகர்ந்திருக்கிறார்கள். மரபணுக்களின் ஆதாரமாக அமைந்துள்ள டி.என்.ஏ (DNA) மூலக்கூறுகளை அலசி ஆராய்ந்து, தேவையான இணைப்பை மட்டும் எடுத்து, தங்களின் விருப்பமான விதைக்குள் புகுத்துவதே இந்தத் தொழில்நுட்பம். முதற்கட்டமாக, மக்காசோளம் மற்றும் சோயா மொச்சையில் இந்த ஆய்வுகளை மான்சான்டோ கையில் எடுத்துள்ளது. இதற்காக ஆண்டொன்றுக்கு 1 பில்லியன் டாலர்களை, இந்திய மதிப்பில் 550 கோடி ரூபாயை செலவு செய்கிறது.

இத்தகைய ஆய்வை மரபணு மாற்று விதைகளைத் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுமே செய்து வருகின்றன. அவற்றுள் ஒன்றான பயனீர் (Pioneer-DuPont) ஆய்வகத்துக்குள்ளும் சென்று பார்வையிட்டோம். எல்லா வகை விதைகளையும், அதை வைத்தே அனைத்து வகை உணவுப் பண்டங்களையும் காப்புரிமைக்குள் கொண்டுவர, இந்நிறுவனங்கள் முனைப்புடன் இயங்குவது நன்றாகவே புலப்பட்டது. 'அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க வேண்டும். அதிக விளைச்சல் எடுக்க வேண்டும்' என்பதே எங்கள் நோக்கம் என்று இதற்கு காரணம் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அங்கு நடக்கும் ஆய்வுகள் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆய்வுகள் அல்ல என்பதுதான் உண்மை. அவர்களுக்குத்தான் தெரியுமே... விளைச்சல் என்பது பல்வேறு காரணங்களால் நடப்பது என்று!
இந்தியாவில் இருந்து வந்திருந்தவர்களுக்கான தனி விளக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ராஷ்மி நாயர், மான்சான்டோவின் அடுத்தத் திட்டமான 'ஒருங்கிணைந்த விவசாய முறைகள்' பற்றி விளக்கினார். 

அதாவது அனைத்து இடங்களிலும் விளைச்சல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குறைவாக விளையும் இடங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப விதைக்கச் சொல்கிறது இந்தத் திட்டம். இதற்காக மண்வளத்தை செயற்கைக் கோள்கள் மூலமும், மண்பரிசோதனைகள் மூலமும் ஆராய்ந்து, பல ஆண்டுகளாக எடுத்து வைத்துள்ள மண்பரிசோதனை முடிவுகளையும் கணினியில் செலுத்தி, வெவ்வேறு இடங்களில் உள்ள மண்வகை வேறுபாடுகளுக்கு ஏற்ப பயிர்களின் இடைவெளியை மாற்றி விதைப்பதையும், அவ்விடங்களுக்கு ஏற்ப இயந்திரங்கள் மூலமே உரமிடுவதையும் அது பரிந்துரைக்கிறது. இதற்காக கணினி மூலம் திட்டமிட்டு விதைக்கும் கருவி, உரமிடும் கருவி, களைக் கொல்லி தெளிப்பது ஆகிய வேலைகளை அதாவது பல வகைத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதையே... 'ஒருங்கிணைந்த விவசாயம்' என்கிறது மான்சான்டோ.

மான்சான்டோவின் நிர்வாகத் துணைத் தலைவரும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியுமான ராப் ப்ராளே, ''ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்'’ என்றார். நான் ஒரு தாளில் ''உண்மையில் பி.டி. மரபணு விதைகள் விளைச்சலை அதிகப்படுத்தியதா?, அமெரிக்க விவசாயத்தில் இன்று பெரும் பிரச்னையாக வளர்ந்துவரும் களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தியை களைகள் பெற்று வருவது பற்றி தங்களின் கருத்து?'' என்றெல்லாம் கேட்டேன். என் வாழ்நாளில் நான் கேட்டிராத மிக வளவள... கொழகொழ பதிலை பி.டி பருத்தி கேள்விக்குச் சொல்லிவிட்டு, 'கேள்வி நேரம் முடிந்தது' என்று முடித்துக் கொண்டார்.
களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தி பெறும் களைகள் பற்றிய கேள்வியை, விடாமல் மான்சான்டோவின் மற்ற அதிகாரிகளிடமும் கேட்கவே செய்தேன். 'சால்ஜாப்பு' மட்டுமே பதிலாகக் கிடைத்தது. மிசிசிபி மாநிலத்தில் உள்ள மான்சான்டோவின் கற்கும் மையத்தில் இருந்த ஜே ப்ரேயர் என்கிற விஞ்ஞானி மட்டும் ஓரளவு உண்மையைப் பேசினார். ''ஆமாம் இது இங்கு பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனாலும் சமாளிக்க முடியும் அளவில்தான் உள்ளது'’ என்றார்.

''எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு...

''மான்சான்டோவின் 'ரவுண்டப்' தெளித்து, சாகாத களைகள் இருந்தால், பிற களைக்கொல்லிகளைத் தெளிக்க, பரிந்துரைத்துள்ளோம்'' என்றார்.

''அப்படியெனில், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்டோமே'' என்றேன்.

''புரியவில்லை'’ என்றார்.

''மான்சான்டோவின் களைக்கொல்லிகளை, பயிர் இருக்கும் போதே, தெளிக்கலாம். ஆனால், வேறு கம்பெனி களைக்கொல்லி என்றால், அது பயிர் மீது படாமல்தானே தெளிக்க வேண்டும்... இல்லையா?. இது கூடுதல் வேலை தானே?’ என்றதும் புரிந்துகொண்டவர், ''உண்மைதான். ஆனால் இதை அப்படிப் பார்க்கக் கூடாது'’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

'நிறைய விளக்கங்கள் கிடைக்கும், மரபணு மாற்றுப் பயிர்கள் பற்றிய புதிய தெளிவு கிடைக்கும் அங்குள்ள விஞ்ஞானிகளிடம் பேசிய பின் எதிர்க்க மாட்டீர்கள்’ என்றெல்லாம் கூறித்தான் இங்கிருந்து விமானத்தில் ஏற்றினார்கள். ஆனால், அவர்களுடைய உண்மையான நோக்கம்... விளக்கம் கொடுப்பதல்ல, தனக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்குவதுதான் என்பதை பயணத்தின் முடிவில் நன்றாகவே உணர முடிந்தது! விவசாயிகளும், நுகர்வோரும் விழித்துக் கொண்டால் மட்டுமே தப்பிக்க முடியும்!

வேறென்ன சொல்ல?!










-அரச்சலூர் இரா. செல்வம்

நன்றி: பசுமைவிகடன், 25 அக்டோபர், 2012








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக