புதன், ஆகஸ்ட் 17, 2011

சிறுநுண் எறும்பின் சூழல் - சு.தியடோர் பாஸ்கரன்

பணி ஓய்வுகாலத்தின் பெரிய அனுகூலம் காலையில் அவசரமாகப் புறப்பட்டு வேலைக்கு ஓட வேண்டியதில்லை. மனம்போனபடி நடைப்பயிற்சி போகலாம். எங்கள் வீட்டருகிலேயே இருக்கும் வயற்புரங்கள், கொய்யாத் தோப்பு, ஏரிக்கரை இவைதான் நான்போகும் தடங்கள். நடக்கும் பாதையில் நான் அடிக்கடி பார்ப்பது சாரிசாரியாக எறும்புகள் எங்கோ போய்க்கொண்டிருப்பது. காலையில் மட்டும்தான் இதைப் பார்க்க முடியும். சில இடங்களில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் போய்க்கொண்டிருக்கும். சிலசமயம் ஒரு தனிக்குழுவாகவும் நகர்ந்துகொண்டிருக்கும். இவைகளை மிதித்துவிடாமல் எச்சரிக்கையாக சென்றபோதிலும், ஒருநாளும் நான் உட்கார்ந்து அவைகளை உன்னிப்பாக கவனித்ததில்லை. அண்மையில் கிடைத்த எறும்பு பற்றிய ஒரு நூலை படிக்கும் வரை.

பெங்களூர்வாசிகளான அஜய் நரேந்திராவுக்கும் சுனில் குமாருக்கும் எறும்புகள் மேல்தனி அக்கறை. கடந்த நூற்றாண்டில் தேனி, குளவி போன்ற சிற்றுயிர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுகள் (Sociobiology) பலவிவரங்களைதந்து, ஒரு புதிய ஆய்வுதளத்தை திறந்துவிட்டிருக்கின்றன. இதில் எறும்புகள் பற்றிய ஆய்வு தனித்துறையாக வளர்ந்திருக்கின்றது. புதியபுதிய தொழில்நுட்பக்கருவிகளின் வரவும், கம்ப்யூட்டரின் துணையும், டிஜிட்டல் போட்டோகிராபியும் இத்துறையில் பலர் ஆர்வம் கொள்ள செய்திருக்கிறது. துல்லியமாகப் படமெடுக்கக்கூடிய காமிராக்களின் வரவால் சிற்றுயிர்கள் பற்றிய கவனிப்பு அதிகரித்திருக்கின்றது.

அஜயும் சுனிலும் எறும்புகளைப் பற்றி தகவல் திரட்டும்போது, இந்தப் பொருளில் இதுவரை 1903இல் பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய ஒரே ஒரு புத்தகம்தான் வந்திருக்கின்றது என்ற விவரத்தைக் கவனித்தார்கள். ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகிவிட்டது. இன்னொரு நூல் எழுதினால் என்ன என்று கேட்டதின் பலன்தான் நூற்றிஐம்பது வண்ணப்படங்களுடன்கூடிய இந்த அருமையான 2நூல். நண்பர்களிடமும், காட்டுயிர் ஆர்வலர்களிடமும் நிதிதிரட்டி அவர்களே வெளியிட்டுள்ளனர். கடந்த நூறாண்டுகளில் இந்தத் துறையில் நடந்த ஆய்வுகளின் சாராம்சத்தை உள்ளடக்கியது இந்நூல். அத்துடன், எறும்புகளை இனங்கண்டுகொள்ள தனித்தனி அடையாளக் குறிப்புகளும், படத்துடன், இடம் பெற்றிருக்கின்றன. இருபத்து வருட உழைப்பு.

இவ்வுலகில் ஒரு கடுகளவிலிருந்து நான்கு செ.மீ அளவுள்ள ஏறக்குறைய 12000 வகை எறும்புகள் உள்ளன. அவை எல்லா இடங்களிலும் வியாபித்து, பரவி இருக்கின்றன. அதிலும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் எறும்புகள் இல்லாத இடமே இல்லை எனலாம். மழைக்காடுகளில் மரத்தின் விதானங்களிலும், தரைக்கு அடியில் வளைகளிலும், மக்கிப்போகும் மரக்கட்டைகளிலும் என எறும்புகளுக்குப் பலவித வாழ்விடங்கள். காட்டுத்தரையில் கிடக்கும் இலைக்குவியல்களில் வசிக்கும் எறும்புவகைகளும் உண்டு. தரைக்கடியில் உள்ள காலனிக்கு ஒரு கோட்டை போல வட்டமான மண்ணாலான வாசலைக் கட்டும் எறும்புகள் உண்டு. புள்ளினங்கள் போலவே, காட்டின் வெவ்வேறு சூழல்களில் - மரப்பொந்துகளில், புதர்களில் - வாழும் விதவிதமான எறும்பினங்கள் ஒரு காட்டின் செழுமைக்கு ஒரு குறியீடு. அதிலும் தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் நெருக்கம் மிகுதி. சில எறும்பினங்களுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதுடன் விதைகளைப் பரப்புவதிலும் பங்கு உண்டு. பறவைகள் போன்ற பல உயிரினங்களுக்கு எறும்புகள் இரையாகின்றன. இதையே பிரதான இரையாகக் கொள்ளும் ஒருவிலங்கு, உடும்பு போன்ற விலங்கு. இதன் ஆங்கிலப்பெயர் Ant-eater. அவ்வப்போது கூவம் நதிக்கரையில் பிடிபட்டு இதன்படம் ‘அதிசயவிலங்கு’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியாவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

தேனிக்களின் சமூக அமைப்பு போன்றே எறும்புகளிலும் ராணி, வேலைக்காரன், சிப்பாய் என தனித்தனி வேலை செய்யும் எறும்புகள் உள்ளன. நாம் சாதாரணமாக வெளியில் காண்பவை எல்லாமே பெண் வேலைக்கார எறும்புகளே. ஆண் எறும்புகளைக் காண்பதரிது. காலனியில்தானிருக்கும். கூட்டையும் உணவு சேகரிப்பையும் பாதுகாப்பது சிப்பாய்களின் வேலை. ஒரு காலனிக்கும் மற்றொன்றிக்கும் போர்மூள்வதும் உண்டு. சில இனங்கள் அடிமை எறும்புகளையும் உருவாக்கி, காலனிக்கு வேண்டிய வேலைகளை எல்லாம் இவைகளைச் செய்யவைக்கின்றன.

மற்ற உயிரினங்கள் சிலவற்றுடன் சேர்ந்து எறும்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்று நூலாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒரு எறும்பினம் கூடு கட்டுவதற்கெனவே வங்கு போன்ற இடத்தை தண்டின் நடுவே உருவாக்கிக்கொள்ளும் மரமொன்று இருக்கின்றது. அதுபோலவே, தமிழகக் காடுகளில் இலைகளைக் கொண்டு மரங்களில் ஒரு பலூன் போல, கூடுகட்டும் எறும்பினம் உண்டு. எச்சிலுடன் இலைகளைமென்று, ஒரு பசையை உருவாக்கி பல அறைகளுடைய இக்கூட்டைக் கட்டுகின்றன. மரத்தில் தூக்கணாங்குருவி கூடுபோல், கால்பந்து அளவில் தொங்கும் இதில் சிவப்புமரங்கொத்தி (Rufous Woodpecker) ஒரு கூட்டை உருவாக்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது. அதிசயம் என்னவென்றால் இந்த முட்டைகளையோ, அதிலிருந்து பொரிக்கும் குஞ்சுகளையோ எறும்புகள் ஒன்றும் செய்வதில்லை. இந்தப் பிணைப்பினால் எறும்புகளுக்கும், மரங்கொத்திக்கும் என்ன நன்மை என்பது பறவையியலாளர்கள் மத்தியில் ஒரு புதிராகவே இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு எறும்புக் கூட்டில் மரங்கொத்தி தொத்திக் கொண்டிருப்பதை நான் முதுமலைக்காட்டில் பார்த்ததுண்டு. தாவரங்களில், அதிலும் ரோஜா செடியில் காணக்கூடிய aphid ஒட்டுப் பூச்சிசுரக்கும் பால் போன்ற திரவத்தை எறும்புகள் உட்கொள்கின்றன. ஆகவே எறும்புகளின் பசு என்று இந்தப்பூச்சி குறிப்பிடப்படுகின்றது.

வேதியல் எறும்புகளின் வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. ஊர்ந்து செல்லும்போது அவை வகையான வேதியல் தடயத்தை விட்டுச்செல்கின்றன. இதைத் தொடர்ந்துதான் மற்ற எறும்புகள் சாரிசாரியாக ஊர்கின்றன. கவனித்துப் பார்த்தால் அவை நேர்கோட்டில் போகாமல், வளைந்து வளைந்து செல்வது தெரியும். எறும்புக்காலனியில் இவை ஒரு நெடியைப் பரப்பி அபாய அறிவிப்பை விடுக்கின்றன.

எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, ஒவ்வொரு எறும்பையும் மோந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச்சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்லவிடுகின்றது எவ்வாறு தேனீயின் நடனத்திலிருந்து மனிதர் சில அறிவியல் உண்மைகளை கண்டுகொண்டார்களோ அதேபோல எறும்புகளிடமிருந்தும் பலபாடங்களை மனிதர் கற்றுக் கொள்ள முடிகின்றது. உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் முக்கியமானது. தாங்கள் சேர்த்துவைக்கும் உணவில் பூசனம் பூத்துவிடாமலிருக்க இவை ஒருவேதியல் கூறைப் பயன்படுத்துகின்றன. இதைப்பார்த்து மனிதர்களும் பாடம் கற்றுள்ளனர், அந்த வேதியல்கூற்றை தனிப்படுத்தி, அதன் இயல்பைக் கண்டறிந்த பின்னர், மருந்து தயாரிப்பில் இன்று அது பயன்படுத்தப்படுகின்றது. எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக ஒரு அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது.

நமது பழமொழிகளிலும், நாட்டுப்புறவியலிலும் புராணங்களிலும் எறும்புகள் அவ்வவ்போது தோன்றுகின்றன. திருச்சிக்கருகே உள்ள திருவெறும்பூர் சிவாலயத்தின் கதையில் எறும்பிற்குச் சிறப்பிடம் உண்டு. அசுரர்களுக்குப் பயந்த தேவர்கள், அவர்கள் கண்களிலிருந்து தப்ப எறும்பு உருவெடுத்து தினமும் வரிசையாக ஊர்ந்து அந்தப்பாறையின் உச்சிக்குச் சென்று சிவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தேவர்களின் அன்பால் நெகிழ்ந்த சிவன் எறும்பேஸ்வரன் எனும் பெயரை ஏற்றுக்கொண்டு தேவர்களுக்கு அருள்பாலித்ததாக ஸ்தலபுராணம் கூறுகின்றது. அதே போல திருவானைக்கோவில் சிவன் கோயிலில் லிங்கத்தை சிலந்தி வழிபட்டதாக ஐதீகம்.
*புறம்: 173:6-7

On A Trial with Ants. A Handbook of Ants
Of Peninsular India. By Ajay Narendra
And Sunil Kumar. 2006. Bangalore

நன்றி: உயிர்மை, ஜூலை 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக