பார்க்கும்போது சற்று பயமாகவும், சிறிது நேர நிலைப்பாட்டிற்குப்பின் ஆச்சரியமாகவும் இருந்தது. நான் தினமும் மாலை நடை போகும் குளக்கரையில் மாலை 6 மணிக்கு 500க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் திடீரென பறந்து அங்குமிங்கும் அமர்ந்தவாறு இருந்தது. சிறிதும், பெரிதுமாக பச்சை, பழுப்பு, வெளிர் மஞ்சள் என பல நிறங்களோடு என் இருபக்கமும் உள்ள மக்காச்சோள கதிர்கள்,காலிஃபிளவர் செடிகளில் அமர்ந்து இலைகளை உண்ணத்துவங்கின. என் மேல் அமர்ந்த சிறிய மஞ்சள் நிற வெட்டுக்கிளியைக் கையில் பிடித்தபோது, படுபயங்கரமான துர்நாற்றத்தை வெளிப்படுத்த,சட்டென அதை விடுவிக்க வேண்டியதாகியது. நாம் இதுவரை தொலைக்காட்சி சேனல்களிலும், சில ஆங்கிலப் படங்களிலுமே பார்த்துப்பழகியதை, நேரில் இவ்வளவு எண்ணிக்கையில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்! இத்தனை எண்ணிக்கையில் எங்கிருந்து வந்தன? என் மனதில் தோன்றிய அடிப்படையான கேள்விக்கு ,உத்தமபாளைய கல்லூரி, விலங்கியல் துறை பேராசிரியர் பதிலளித்தார். பருவ மழை பொய்ப்பதும், பருவத்திற்கு ஏற்றாற் போல் வெயிலில் மாற்றங்கள் இல்லாமையும், இவ்வாறு வெட்டுக்கிளிகள்,பூச்சிகள் போன்ற சிற்றினங்களின் திடீர் வளர்ச்சியைத் தூண்டி விடுகின்றன என்றார்.
கணுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த வெட்டுக்கிளிகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்கப்படாத வகையினங்களும் இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. விஞ்ஞானிகள் வெட்டுக்கிளியின் உடலமைப்பை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். தலைப்பகுதி, நடுப்பகுதி, பின்பகுதி. தலைப்பகுதியில் கண்கள் ,வாய், உணர்வுக் கொம்புகள் உள்ளன. கூட்டுக்கண்கள் போல் தோற்றமளிக்கும் இவைகளுக்கு 5 கண்கள் உண்டு. வாயில் 32 பற்கள் உண்டு. இவை ரம்பம் போல் செயல்படுகின்றன. பற்களின் எண்ணிக்கை வகையினத்திற்கு ஏற்றாற் போல் மாறுபடுகின்றன. இவைகளின் உண்ணும் முறையும் சற்று வித்தியாசமானது. இட வல அமைப்பைக் கொண்ட வாய்ப்பகுதி மேலும் கீழுமாக அசைந்து உணவை சிறிது சிறிதாக பிய்த்து, முதலில் வாயின் உள்ளே மடக்கித் தள்ளி ,பின் நிதானமாக அரைத்து, கூழாக்கி உண்ணுகின்றன.கண்களை மேலும், கீழுமாகவும் ,இடவலமாகவும் உருட்டும். இதனால் நாலா திசைகளையும் ,பார்க்க முடிகிறது. கண்களை விட உணர்வுக் கொம்புகள் மூலம் தமக்கு எதிரானவைகளை அடையாளம் கண்டுகொள்கிறது.
இதன் நடுப்பகுதி, வயிறு, 2 இறக்கைகளைக் கொண்டுள்ளது. இறக்கைகள் பறப்பதற்கு மட்டுமல்லாமல், மேலும் கீழும் அசைத்து ஓசை எழுப்பி, எதிர்பாலினத்தைக் கவரவும் பயன்படுத்துகிறது. தவிர தனது உடலைச் சுத்தப்படுத்தவும் இவ்வாறு செய்யும். இப்பகுதியில் 2 ஜோடி குட்டையான முன்னங்கால்கள் உள்ளன. பின் பகுதியில் 2 ஜோடி உயரமான பின்னங்கால்கள் உள்ளன. இவை தாவிக் குதிக்கும்போது ஸ்பிரிங் போல் செயல்படுகின்றன. இரண்டு தனித்தனி துண்டங்களாக உள்ள இவை, ஒரு இணைப்பால் இணைக்கப்பட்டு எப்போதும் எம்பிக் குதிக்க உதவுகின்றன. இவ்வமைப்பு இதன் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் கருவியாகச் செயல்பட்டாலும், இக்குணம் அறிந்த பறவைகள்,அலட்டிக் கொள்ளாமல் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. பின்பகுதியிலேயே துர்நாற்றத்தை உமிழக் கூடிய சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகள் மூலம் வெளிப்படும் திரவம்,எதிரிகளை விரட்டுவதற்கும், தன் குழு சார்ந்த நபர்களை அழைப்பதற்கும் பயன்படுகிறது. இந்த வாசனையை நுகர்ந்து, இதன் சகாக்கள் ,பல மீட்டர் தூரத்திலிருந்தும் ஒன்று கூடி வரும். பின் பகுதியின் இறுதியில் முனை அமைப்பு உள்ளது. இது தான் மலப்புழை . அதுவே புணர்ச்சிக்கான உறுப்பாகவும் செயல்படுகிறது.
பெண்களே ஆணை விடப் பெரிதாக இருக்கும். பருவம் கொண்ட பெண்கள் தங்கள் உடலின் நெடியின் மூலம் ஆணை அழைக்கும். இந்த நெடியை சில சமயம் நாம் அறியலாம்.பருவம் எய்த ஆண்கள், தங்கள் உடலைப் பின்னங்கால் உதவியோடு உயர்த்தி, நிமிர்ந்த வாக்கில் தன் இரு இறக்கைகளையும் மேலும் கீழும் அசைத்து ஒலி எழுப்பும். உடன்படும் ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும். உடலுறவு, பல மணி நேரம், பல தடவை, பல ஆண் பெண்களோடு கலவையாக நடக்கும். உடலுறவுக்கேற்ற கால, நேர, சந்தர்ப்ப, சூழல்களை இவை ஏற்றுக் கொள்வதில்லை. பெண் வருடத்திற்கு குறைந்தது 5 முறை முட்டையிடுகிறது. முட்டைகளை சற்று நீர்ப்பாங்கான இடங்களில் 1 செ.மீ. குழி பறித்து அதில் இடும். மலப்புழையின் இறுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய கொக்கி போன்ற அமைப்பு மூலமே பூமியில் குழி தோண்டிக் கொள்கின்றன. இவை சுமார் 180 முட்டைகள் இடும். இதைக் கஞ்சி போன்ற திரவம் மூடியிருக்கும். 18 நாட்களுக்குப் பின் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. பருவ நிலை மாறுபாடு ,வெட்டுக்கிளிகளின் சுரப்பிகளைத் தூண்டி, அதிகமாக சுரக்கச் செய்து ,அதிக உடலுறவில் ஈடுபடச் செய்கிறது. இதுவே இதன் அதீத இனப்பெருக்கத்திற்கு காரணம் என்கிறார்கள் சார்லஸ் வேலண்டைன் ரிலே மற்றும் நார்மன் சிரிடில். இவர்களின் ஆய்வே வெட்டுக்கிளிகள் குறித்த சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது.
வெட்டுக்கிளிகள் பொதுவாக பிரதேசம் சார்ந்தவை. பூச்சி மருந்துகளின் பாதிப்பு, எதிரிகளின் தொல்லை கருதி இவை இடம் பெயருகின்றன. உலகளாவிய அளவில் விவசாயிகளின் பெரும் எதிரியாகக் கருதப்படும் இவை, வேதியியல் தெளிப்புகளால் அதிகம் கொல்லப்படுகின்றன. அதிகளவில் இனப்பெருக்கம் உள்ள ஐரோப்பிய வெட்டுக்கிளிகளை, சிறிய ஹெலிகாப்டர் கொண்டு, ஆஸ்திரேலியா,அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வானிலிருந்து மருந்து தெளித்துக் கொல்கின்றனர். இதனால் இவை இடப்பெயர்ச்சிக்கு ஆளாகின்றன. ஓர் ஆய்வின்படி ஒரு வெட்டுக்கிளி 27 நாட்களில் 400கி.மீ. பயணித்ததாக அறிக்கை வந்துள்ளது. அதிகபட்சமாக 14 வருடங்கள் வாழும் இவை, மிக அதிக புரதச்சத்து, அதிக நார்ச்சத்து கொண்ட கோதுமை, கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றையே உண்கின்றன. ஆஸ்திரேலிய மலை வெட்டுக்கிளிகள் சுமார் 5000 எண்ணிக்கையில் ,திடீர் தாக்குதல் நடத்தி, கோதுமை வயல்களில் சுமார் 4 மணி நேரத்தில் 10 ஏக்கர் பயிரை நாசமாக்குமாம்.
பசியாலும், பஞ்சத்தாலும்,கையேந்தி நிற்கும் ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, நைஜர், உகாண்டா போன்ற நாட்டு மக்கள் இதைப் பிடித்து, இறக்கை, கால்களை வெட்டிவிட்டு வறுத்து, உப்பு போட்டு உண்கிறார்கள். போர்க் காலத்தில் இவையே அவர்களின் பிரதான உணவாக இருந்ததாம். சீனா போன்ற அதிகளவு பூச்சிகளை உண்ணும் நாடுகள் இவற்றைப் பிடித்து கால், இறக்கைகளை நீக்கிவிட்டு ,லேசாக உடலை அழுத்த அதன் மலப்புழையிலிருக்கும் கழிவுகள் ,பச்சை ரத்தம் வெளியேறிவிடும். ஹீமோலிம்ப் என்ற திரவமே சத்துகளை கடத்தியாக உள்ளது. இதுவே கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. இதில் ஆக்ஸிஜன் இல்லாததால் இவற்றின் ரத்தம் பச்சை நிறமாக உள்ளது. ரத்தம் முழுவதும் வெளியேறியதும், மசாலா பொருட்கள் சேர்த்து வறுத்து நீண்ட கம்பியில் குத்தி வைத்து விடுவார்கள். ஒவ்வொன்றாக எடுத்து உண்பது மட்டுமே பாக்கி. சீனர்களின் மிக விசேஷ உணவு "வெட்டுக்கிளி ஃபிரை" .
ஆஸ்திரேலியப் பழங்குடிகளில் பெண்கள் தாங்கள் கருவுற்ற காலத்தில் இதை உண்கிறார்கள்.. இவர்களைப் போல், செங்கால் நாரை, ஆந்தைகள் இரவில் இவற்றைப் பிடித்து உண்கின்றன. உடலுறுதி கொண்ட வளமான சந்ததிகளை உருவாக்குவதே இதன் நோக்கம்!
- கிருஷ்ணன் ரஞ்சனா
நன்றி: உயிரோசை இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக