வியாழன், செப்டம்பர் 22, 2011

தொல்லை தராதீர் .......குளவிகள் கூடுகட்டுகின்றன!

பொதுவாக ஜூலை இறுதியில் துவங்கி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இறுதிவரை குளவிகள் பரபரப்பாக இருக்கும். மிக முக்கியமாக புதிய கூடுகளைக் கட்டுதலில் மூத்த குளவிகள் ஈடுபடுவதும், கருவுற்ற இளம்பெண்கள், புழுக்களைக் கவ்விக் கொணர்ந்து தங்கள் கூடுகளில் அடைத்து, அதன் உடலில் முட்டைகளைச் செலுத்துவதுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, வேலைக்காரப் பெண் குளவிகள், இளம் குளவிகளை சீராட்டுவதுமாக இருக்கும். இந்த மாதங்களில் இதன் உடலில் ஊறும் ஹார்மோன்கள் அவைகளை அவ்வாறு பரபரப்பாக இயங்கத் தூண்டும். கோபமோடு எப்போதும் இருக்கும். உடலில் வேதிப் பொருட்கள் விஷமாக கொடுக்கின் முனையில் சொட்டதயாராக இருக்கும். சீண்டிப்பார் போரோ அல்லது அதன் தினசரி நிகழ்வில் குறுக்கிட்டவரோ தாக்கப்படுவர்.

லாரி பேக்கர் தனது பசுமை இல்லக் கனவினையும், அதற்கான எளிமையான தொழில் நுட்பத்தையும் குளவிகள் மூலம்தான் கண்டறிந்தாராம். இவற்றை, "இயற்கை படைத்த சிறந்த கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்" என பாராட்டும் இவரது வீடுகள் அனைத்தும் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டப்படுகின்றன. கம்பிக்குப் பதிலாக மூங்கிலோ அல்லது தென்னை கட்டைகளோ கிடைத்தால் அதுவே போதுமானதாகும். அதுபோல செம்மண் கலவை அதிகம் உபயோகிக்கப்படுகிறது. சுடப்படாத செங்கல்லே போதுமானது. இவ்வாறான கட்டுமான அமைப்பு, பல மாடிக் கட்டிடங்களாகவும், இயற்கை பேரிடர்களால் தாக்கப்படாததாக, தற்போது கட்டப்படும் கட்டுமான செலவில் 30 சதவீதம் குறைவாக உள்ளதால் கேரள மாநிலம் இவரின் தனித்திறமையைப் புரிந்து ஏழைகளுக்கான வீடுகட்டும் திட்டத்தை ஒப்படைத்தது. மிகக் குறைந்த செலவில் அதி நவீன இல்லங்களை, குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு மாசும் ஏற்படாத வகையில் கட்டித்தந்துள்ளார். இவரின் அரைமுட்டை வடிவ இல்லக் கூரை, குளவிக் கூடுகள் மூலம் கற்றுக் கொண்டதன் விளைவு என அடிக்கடி கூறுவதுண்டு.

குளவிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வகையினங்கள் உண்டு. இவை தேனி என்றும் கூறமுடியாமல் எறும்பு என்றும் வகைப்படுத்தப்படாமல் இரண்டிற்கும் இடையினலான அமைப்பாகத் திகழ்கிறது. இவ்வினத்தை "அபோ கிரைட்டா" என அறிவியல் கூறுகிறது. இவற்றின் உடல் மூன்றமைப்பு கொண்டது. தலை, நடுஉடல், பின்பகுதி. சில வகை கூட்டமாகவும், சில வகை தனிமையிலும் வாழ்கின்றன. கூட்டமாக வாழ்பவை, ராணி குளவியின் தலைமையில் இயங்குகின்றன. தேனீ, எறும்பினங்கள் போல், குளவி வகுப்பிலும் பெண்ணே சகல சக்தி படைத்தவையாக இருக்கிறது. ஒரு கூட்டத்தில் 10,000க்கும் மேல் இருக்கும். இங்கு ஆண் விந்தணுவைப் பாய்ச்சுவதற்கும், பெண்ணிற்குத் தேவைப்படும்போது உடலுறவு சுகத்தை தருவதற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர, எதிரிகள் வருவதை அடையாளம் கண்டு தெரிவிப்பது ,இதன் பிரத்யேகப் பணியாகும். வேலைக்காரக் குளவிகள் அனைத்தும் பெண்ணாக உள்ளது. ராணிக் குளவி சற்று பெரிதாக இருக்கும். அவை கட்டும் கூட்டில் ராணிக்கென்று தனி அறை உண்டு. ராணியின் முக்கிய வேலை, கூடு கட்டும் இடத்தை தேர்வு செய்து, கட்டுமானப் பிரிவுகளை வகுப்பது, இனப்பெருக்கம் செய்வது. தனியாக வாழும் வகுப்பினங்கள், தேவைப்படும்போது தங்கள் இன நபருடன் இணைந்து செயல்படும். சரியான நபர் கிடைக்காதபோது, பிற வகுப்புக் குளவிகளோடு இணையும். இதற்கு இரு சாராரிடம் இருந்தும் பெருமளவு எதிர்ப்புகள் வருவதில்லை.

இதன் தலைபாகத்தில் இரு ஜோடி கண்கள் உணர்வுக் கொம்புகள், வாய் காணப்படுகிறது. கிட்டத்தட்ட கூட்டுக்கண்கள் ஒத்த அமைப்பு .தவிர முன் தலை பகுதியில், முக்கோண அமைப்பிலான நிறைய கண்களும் சில இனங்களுக்கு உண்டு. இதை "ஒசிலி" என அழைக்கிறார்கள். இதன் உணர்வுக் கொம்புகள் 12---15 கட்டுகள் கொண்டதாக இருக்கும். கொம்புகள் மூலமே உணவின் தன்மை, கூடுகட்டும் போது தேவைப்படும் பொருட்களின் தன்மைகளைத் தொடுதல் உணர்ச்சி மூலம் கண்டறிகிறது. நடுப்பகுதியில் மூன்று ஜோடிக் கால்களும், இரண்டு ஜோடி இறகுகளும் இருக்கும். தேனிக்களைப் போல, இவைகளும், இறகுகளை விசிறிக் கொள்வதன் மூலம் சக தோழர்களுக்கு சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. பொதுவாக அவைகள் வேதி திரவத்தை வெளிப்படுத்துவதன் மூலமே சமிக்ஞைகளை தெரியப்படுத்தும். பின் பகுதியில் மலப்புழையும், கொடுக்கும் உள்ளது. இங்கு விஷத்தை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இதன் கொடுக்கானது உள்ளுணர்வின் கட்டளைக்கு அடிபணிந்தே செயல்படுகிறது. மலப்புழையின் மூலமே உடலுறவு கொள்ளும். இந்நிகழ்வு பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடக்கிறது. இவைகளுக்கு இரவில் கண்தெரியாது. இதனால் தன் நடமாட்டங்கள் அனைத்தையும் வெயிலுடன் கூடிய பகல் வேளையிலேயே செய்கின்றன. இவை பெருமளவு மனிதர்களாலும், பிற பறவையினங்களாலும் தாக்குதலுக்கு ஆளாவதும் இவ்வேளையில்தான்.

இதன் இல்லற வாழ்வு சுவாரசியமானது. பல கட்டங்களைக் கொண்டது. ராணிக் குளவி தான் காமமுற்றிருக்கும் போதெல்லாம் ஆணை அழைத்து உறவு கொள்ளும். பருவ காலங்களில் தன் கருப்பையில் முட்டை உருவாகி விட்டால், வலுவான ஆணுடன் உறவு கொண்டு, அதன் விந்தணுவை ,தன் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள பை போன்ற பிரத்யேக அமைப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளும். கருமுட்டை சீராக உருவான பின் விந்தணுவோடு கலப்புறச் செய்து , குஞ்சு பொரித்தலுக்கு உண்டான ஏற்ற பக்குவத்தோடு, வெளியேற்றும். குளவிகள் முட்டைச் சார்பு கொண்டவை. அதாவது, பிற உயிரினங்களின் உடலில் தங்களது முட்டையை செலுத்தி பொரித்தலுக்கு ஏதுவாக்கும். இதன் காரணமாகவே இவை புழுக்களை அதிகம் வேட்டையாடுகின்றன. பாயர் கம்பெனியில் வேலை பார்த்து வெளியேறிய அண்ணன் வெங்கட் ராமன் குளவிகளை "விவசாயிகளின் நெருங்கிய ,நம்பகத் தோழன்" என்றழைப்பார். தங்கள் கம்பெனி பூச்சி மருந்துகளே இவைகளை அழித்து வருவதாக அடிக்கடி கூறுவார். புழுக்கள் கிடைக்காத போது மண்ணிற்குள் புதைந்து வாழும் "நில சிலந்திகளை" இவை வேட்டையாடும்.

குளவிகள் பிராந்தியம் சார்ந்து வாழ்பவை என்பதால், அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தங்களது கூட்டை அமைத்துக் கொள்ளும். தேனிக்களைப் போல் இவைகளுக்கு மெழுகு சுரக்கும் சுரப்பிகள் கிடையாது. எனவே மண், மரப்பிசின், சுண்ணாம்புக் கலவை போன்றவை கொண்டே அழகான கூட்டை அமைத்துக் கொள்கின்றன.அப்பொருட்களை உருண்டையாக்கி, கவ்விக் கொணர்ந்து வாயினாலும், முன்னங்கால்களாலும், அமைக்கும் அழகையும், அப்போது அவை வெளியிடும் ரீங்கார ஒலியையும் ரசிப்பதற்கு தனி உணர்வு வேண்டும். பாதி கூட்டைக் கட்டி முடித்த பின், தான் கொணர்ந்த புழுவையோ, சிலந்தியையோ உட்செலுத்தும். கொட்டுப்பட்டதால் ஏற்கெனவே மயக்க நிலையில் உள்ள இவை, எதிர்ப்பேதும் தெரிவிக்க முடியாத நிலையில், அதன் உடலில் கொடுக்கின் உதவி கொண்டு ஓரிரு திடகாத்திரமான முட்டைகளை உட்செலுத்தும். பின் மீதமுள்ள கூட்டையும், அதன் வாயிலையும் அடைத்து விடும். இரையின் உடலில் உள்ள முட்டை, பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து வெளியேறும் வரை அவை உயிரோடு இருக்கும். உடலைக் கிழித்து வெளியேறும் குளவிக் குஞ்சுகளுக்கு, புழுவின் உடலே துவக்க இரையாகும். முட்டை பொரிந்ததை உணர்ந்த தாய்க் குளவி, கூட்டின் வாயிலை உடைத்து,தன் வாரிசை அழைத்துக் கொண்டு தன் கூட்டை அடையும். பின் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு , வேலைக்காரப் பெண் குளவிகளிடம் ஒப்படைக்கப்படும். அவை இதற்கு தேன், இனிப்பு கலந்த பழச்சாறு போன்றவைகளை உணவாக ஊட்டுகின்றன. இவை பெரும்பாலும் இவ்வகை உணவுகளையே உட்கொண்டாலும், அவ்வப்போது, சிறிய ஈ, கொசு, வண்டுகளையும் உணவாக்கிக் கொள்ள தயங்குவதில்லை.

வேலைக்காரக் குளவிகள் வளர்த்த, திடகாத்திரமான பெண் குளவி, பிற்காலத்தில் ராணிக்குளவியாகும் சந்தர்ப்பம் ஏற்படின், தலைமையோடு பெருமளவு விரிசல் கொள்ளாமல், சில சந்தர்ப்பம் சார்ந்த எதிர்ப்புகளை மட்டுமே காண்பித்து , பின் வெளியேறும். அப்போது அது, தனக்கு விசுவாசமான ஆண் மற்றும் பெண் குளவிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லும். அந்த சமயங்களில் தான் அவை பிற குளவிகளின் கூட்டையோ அல்லது தேனீக்களின் கூட்டையோ தாக்கி, தனதாக்கிக் கொள்கின்றன. அந்தப் போரில் பலத்த உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் அவை கூட்டமாக இறந்து விடும்போது, ராணிக் குளவி தன் கூட்டிலேயே ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, ஆணை விந்தணுவைப் பாய்ச்ச ஆணையிடும். இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இவற்றின் வாழ்க்கை முறை இதுவரை சரியாக கணிக்கப்படவில்லை. ஆப்பிரிக்க,ஆஸ்திரேலிய வகை குளவிகள், நம் தோட்டங்களில் காணப்படும் கதம்ப வண்டு, போன்ற இனங்கள் மிகவும் கொடியவை, கோபம் கொள்பவை. தங்கள் எதிரியை 1/2 கி.மீ. துரத்திக் கொட்டுபவை. ஒரு முறை என் வலது தோள்பட்டையில் கொட்டுப்பட்டு, இரண்டு மாத காலம் கையை அசைக்கவே முடியாத அளவு வேதனைப்பட்டிருக்கிறேன்.

இப்பூமிப்பந்து,பூச்சிகளால் நிரம்பியது. அதன் சமநிலையும் இவைகளால் மட்டுமே நிலைநாட்டப்படுகிறது. அவற்றுக்கு தோள்கொடுப்பதாய் பறவைகளும்,பிற ஜீவராசிகளும் உள்ளன. இங்கு மனிதனால் ஆவதற்கு ஒன்றுமே இல்லை. இந்தியாவைப் பொறுத்த மட்டில் குளவிகளைப்பற்றிய விரிவான புத்தகம் என்று ஒன்றுமே கிடைக்கவில்லை. தற்போது பெங்களூர் மீனாட்சி எழுதிய நூல் மட்டுமே உள்ளது. தவிர குளவி, தேனீ, பிற பூச்சியினங்களுக்கு அயல் நாட்டவரின் புத்தகங்களையே நாட வேண்டியுள்ளது. அவை அந்தப் பிரதேசங்களை வைத்தே பெரும்பாலும் எழுதப்பட்டவை. பிளினி, சிசரோ போன்ற தத்துவ, அறிவியல் அறிஞர்கள் தொடங்கி, கடந்த 60 வருடங்களாக குளவிகள் குறித்த ஆய்வு உலகெங்கிலும் நடந்து வருகின்றது. டாக்டர் ஷூவல்ட்டே, அதன் பிதாமகராகத் திகழ்கிறார். அயல் மகரந்தச் சேர்க்கையின் அற்புத தூதுவனாகவும், வேளாண்மையின் பாதுகாவலனாகவும் திகழும் பூச்சிகளைப் பற்றிய விரிந்த ஆய்வுகளும் அதைப்பற்றிய நூல்களுமே இந்தியாவில் நிறைய வரவேண்டும்.

1945ல் வந்திறங்கிய டி.டி.டி. துவங்கி, இன்று புழக்கத்தில் உள்ள என்டோ சல்ஃபான் வரை, இவைகளைக் கொன்று குவித்து வருவதை ஐ.நா. சபையின் பூச்சியியல் ஆய்வாளர்கள், கவனத்தில் கொள்ளவில்லை போலும்! இதே நிலை நீடிக்குமெனில் குளவிகளும் "அழிவின் சிவப்பு பட்டியலில்" வெகு விரைவில் இடம்பெறும்.

-கிருஷ்ணன் ரஞ்சனா

நன்றி: உயிர்மை இணையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக