வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கூடங்குளம் போராட்டம் – ஒரு அற்புத அனுபவம்

கூடங்குளத்திற்கும் எனக்குமான உறவு மறைந்த சூழல் ஆர்வலர் அசுரனின் மூலம் தொடங்கியது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு மரணத்தின் நிழல் தெரிந்த நிலையிலும் அவர் "புதிய கல்வி" சுற்றுச்சூழல் இதழ் உட்பட பல்வேறு ஊடகங்களில் எழுதிய அணுசக்தித் துறை நடத்திய நெல்லை நாடகம். கிழித்தெறிந்த மக்கள்! , கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! போன்ற கட்டுரைகள் வாயிலாக கூடங்குளம் சந்திக்கவிருக்கும் ஆபத்துகள் குறித்த தகவல்களை அறிந்திருந்தேன். பின்னர் அசுரன் எனக்கு நண்பராகி அவ்வபோது தொலைபேசி வழி பேசியபோதும் கூடங்குளம் குறித்த பல்வேறு தகவல்களை என்னிடம் பகிர்ந்திருந்தார்.

(அனைத்துப் படங்களும் சொடுக்கினால் பெரிதாகும்)

அதன்பின்னர் கல்பாக்கம் குறித்து நான் பணிபுரிந்த தொலைகாட்சியில் ஒரு செய்திக்கதையை செய்ய முயற்சித்தபோது அறிமுகமான மருத்துவர் ரமேஷ் (கோவை) அவர்களும் கூடங்குளம் குறித்து ஒரு அறிமுகத்தை வழங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து எஸ்.பி. உதயகுமார் அவர்கள் மிக நெருங்கிய நண்பரானதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுஉலை குறித்து அரசுத் தரப்பில் கட்டமைக்கப்படும் பல பொய்களை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்நிலையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் கடந்த 11-09-2011 அன்று 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

அடிப்படையிலேயே எனக்கு உண்ணாவிரதம் போன்ற வழிமுறைகளில் ஈடுபாடு இல்லை. அதை ஈவெரா பெரியாரும் ஏற்கவில்லை என்பதை அறிந்திருக்கிறேன். மேலும் எழுத்தாளர் அருந்ததி ராய் சென்னையில் பேசியபோது, மக்கள் தற்கொலை செய்து கொள்வதை அரசு விரும்புகிறது – தற்கொலைப் படையாக மக்கள் மாறுவதற்குத்தான் அரசு பயப்படுகிறது என்று பேசினார். மேலும் சுய விளம்பரத்திற்காக சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் முதல், கடைக்கோடியில் இருப்பவர்கள்வரை உண்ணாவிரதம் இருப்பதை பார்த்து வந்ததால் இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதமும் முதலில் என் கவனத்தை கவரவில்லை.
ஆனால் உண்ணாவிரதம் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் ஏழாவது நாளை கடந்தபோது அந்த உண்ணாவிரதம் என் கவனத்தை கவர்ந்தது. எட்டாவது நாளான 18ம் தேதி நானும், "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் அணுசக்தி ஆய்வாளர் நண்பர் சுந்தர்ராஜனும் இடிந்தகரை கிராமத்திற்கு சென்றோம்.

(போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் "பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்)

அந்த கிராமத்தின் சூழல் மிகவும் புதுமையாகவே இருந்தது. சென்னை போன்ற நகரங்களில் பத்து பேர் போராட்டம் செய்தால் காவல்துறையினர் 20 பேர் இருப்பார்கள். போராட்டக்காரர்களை மிரட்டுவதற்காக தடி, கண்ணீர்புகை வாகனங்களுடன், உளவியல் ரீதியான அச்சுறுத்தலுக்காக புகைப்படம், வீடியோ, காவல்துறை வாகனத்தின் மீதான கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏதோ சமூக விரோத செயல் நடைபெறுவதைப்போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.


(செய்தியாளர்களுடன் ஊடுருவி நிகழ்வை பதிவு செய்யும் காவல்துறையினர்)

ஆனால் இடிந்தகரை கிராமத்தின் எல்லைப்பகுதிகளில் மட்டுமே காவல்துறையினர் முகாம் இட்டிருந்தனர். இடிந்தகரை கிராமத்தில் சீருடை அணிந்த ஒரு காவலரைக்கூட நான் பார்க்கவில்லை.

(காவல்துறை வாகனத்தின் உச்சியில் கண்காணிப்பு கேமரா)

கிறித்துவ தேவாலயத்தின் முன்புறத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எட்டாவது நாளானதால் போராட்டக்காரர்களின் அனைவரது முகமும் மிகவும் வாடியிருந்தது. எனினும் வலைபதிவர் கூடல்பாலா போன்றவர்கள் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதோடு அதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை நண்பர்கள் எஸ்.பி.உதயகுமார், மை.பா. சேசுராஜன் போன்றோர் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாலும் எந்த ஒரு தனிநபரையும் முன்னிலைப்படுத்தாமல் ஒருமித்த கூட்டு முயற்சியாகவே அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

போராட்டத்தில் 127 பேர் நேரடியாக கலந்து கொண்டு உண்ணாநோன்பை மேற்கொண்டிருந்தாலும், மேலும் சுமார் 100 பேர் உண்ணாவிரதம் நடந்த அனைத்து நாட்களிலும் அங்கேயே இருந்து அந்த போராட்த்திற்கு தேவையான அனைத்துப்பணிகளையும் செய்து கொண்டிருந்தனர். இதில் மீனவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வழக்கறிஞர்கள், மதகுருமார்கள் என அனைத்துத் தரப்பினரும் இருந்தனர்.

(உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்தவரை மருத்துவசிகிச்சைக்காக தூக்கிச் செல்கின்றனர்)

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 127 தனிநபர்கள் என்றாலும்கூட அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும்கூட அவர்தம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கான மனநிலை இல்லாமல், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மட்டும் தேவையான உணவுகளை மட்டுமே தயாரித்துக் கொடுத்தனர். பெரியவர்கள் பலரும் இரவு உணவை மட்டுமே உட்கொள்வதாக கூறினர்.

127 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அந்த இடத்தின் எதிரே இருந்த மிகப்பெரிய மைதானம் முழுவதும் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தல் முழுக்க மக்கள் குழுமியிருந்தனர். இதற்கு முன் அத்தனை பெரிய மனிதத் திரளை நான் மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். பிரியாணிப் பொட்டலங்கள், மற்ற ஏற்பாடுகள், போக்குவரத்து ஆகிய அனைத்தையும் செய்து ஊடகங்களின் கவனத்தை கவர்வதற்கு அரசியல் கட்சிகள் படும்பாடு ஊடகத்தில் சில வருடங்கள் பிழைப்பு நடத்திய எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இதுபோன்ற எந்த வசதியும் இல்லாத நிலையில் தினமும் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காலை முதல் மாலைவரை அங்கே குழுமினர்.

போராட்டம் நடக்கும் நாட்கள் அனைத்திலும் அந்தப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. என்ன காரணத்தாலோ பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது.

வைகோ, சீமான், விஜயகாந்த் போன்ற பிரபலத் தலைவர்கள் முதல் பல சிறு மற்றும் குறுகிய மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள்வரை அனைத்துத் தரப்பினரும் மாநிலம் முழுவதிலும் இருந்து இடிந்தகரை வந்து போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

உண்ணாவிரதம் துவங்கியபோது அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதமும் நடந்து கொண்டிருந்ததால், ஊடகத்துறையின் கவனம் இடிந்தகரை மீது முதல் சில நாட்களுக்கு முழுமையாக விழவில்லை. ஆனால் சில நாட்களிலேயே தமிழ்நாட்டு ஊடகங்கள் புறக்கணிக்க முடியாத செய்தித் தன்மையை இடிந்தகரை உண்ணாவிரதப் போராட்டம் பெற்றுக் கொண்டது. புதியதலைமுறை தொலைக்காட்சி சென்னையிலிருந்து சிறப்புச் செய்தியாளர்களையும், நேரடி ஒளிபரப்பு செய்யும் வாகனத்தையும் இடிந்தகரைக்கு அனுப்பி போராட்டத்திற்கு வலு சேர்த்தது. எனவே மற்றைய ஊடகங்களும் இடிந்தகரை போராட்டத்தை எடுத்துரைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது.


இந்த நிலையில் 19-09-2011 அன்று மேதா பட்கர் இடிந்தகரை வந்தார். மேதா பட்கருடன் என்டிடிவி போன்ற அனைத்திந்திய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களும் இடிந்தகரையில் கரை ஒதுங்கினர்.

மேதா பட்கர் ஆற்றிய உரையும், அவரது அணுகுமுறையும் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றவர்களையும், அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது.

(மேதா பட்கர் ஆங்கிலத்தில் உரையாற்ற, தமிழில் மொழி பெயர்க்கிறார் சுப. உதயகுமாரன்)

அதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அறிக்கையும் வந்தது. சில நாட்களுக்கு முன் கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர், தனது நிலையை மாற்றிக்கொண்டு கூடங்குளம் பகுதி மக்களின் ஐயங்களை தீர்க்கும்வரை அணுஉலை தொடர்பான வேலைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வெளியிட்ட அறிக்கை, போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

போராட்டக்குழுவின் பிரதிநிதிகள், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து, முதல்வர் தம் நிலையை உறுதி செய்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

+++

இடிந்தகரை மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையும் பேருதவி செய்தது. உண்ணாவிரதம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்வரை பலவழிகளிலும் போராட்டக்குழு தலைவர்களை உளவியல் ரீதியாக மிரட்டி வந்த காவல்துறை, உண்ணாவிரதம் தொடங்கிய பின்னர் அந்த ஊருக்குள் நேரடியாக நுழையாமல் ஒதுங்கி இருந்ததே, காவல்துறை செய்த மிகப்பெரிய உதவியாகும்.

எனினும் உளவுத்துறை காவல்துறையினர் தம் பங்கை செவ்வனே ஆற்றியதாகவே தெரிகிறது. உள்ளூரில் உள்ள செய்தியாளர்கள் மூலமாகவும், போராட்டக்குழு தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதன் மூலமும் தகவல்களை பெற்றுக்கொண்டிருந்தனர். ஒரு பிரபல தனியார் தொலைகாட்சியின் செய்தியாளர், பினாமியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர். அந்தச் செய்தியாளர், தாம் சேகரிக்கும் செய்திகளை பணி புரியும் நிறுவனத்துக்கு செய்து கொடுப்பதைவிட, சற்று அதிக பொறுப்புணர்வுடன் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கும் கொடுப்பதாக அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.

+++

பங்கேற்பாளனாக, ஆதரவாளனாக, பார்வையாளனாக, விமரிசகனாக, பத்திரிகையாளனாக பல்வேறு போராட்டங்களில் நான் கலந்து கொண்டிருந்தாலும், போராட்டம் குறித்த நகர்ப்பகுதி சார்ந்த பொதுமக்களின் பார்வையை நான் உணர்ந்திருக்கிறேன்.

போராட்டங்களின் காரணம் குறித்தோ, நியாயம் குறித்தோ எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை ஒரு பொதுத்தொல்லையாக மட்டுமே கருதும் மனநிலை நகர்ப்புறத்து மக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான மனநிலையை கட்டமைப்பதில் அரசும், ஊடகங்களும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன.

அரசு என்ற அமைப்புக்கு எதிரான போராட்டத்தை, ஆளும் அரசியல் கட்சிக்கும், ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சருக்கும் எதிரான தனிப்பட்ட போராட்டமாக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஆட்சித்தலைமை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் உதவியுடன் போராட்டத்தை ஒடுக்கவே முயற்சி செய்கிறது. இந்த முயற்சி வெற்றியும் அடைந்து வருகிறது. எனவே இந்த போராட்ட வடிவங்களிலும், மக்களுடைய போராட்ட உணர்வுகளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டிருந்தது.

ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் நடந்த போராட்டமும், அந்த போராட்டம் அடைந்த வெற்றியும் எனக்கு மட்டுமல்ல என் சிந்தனைகளை ஒத்த நண்பர்களிடமும் நம்பிக்கை விதைகளை விதைத்துள்ளன.

நியாயமான எந்த போராட்டத்திற்கும் மக்கள் தயாராகவே உள்ளனர். அதற்கு அவர்களை தயார் படுத்தும் பணி மட்டுமே நம்மிடம் உள்ளது என்பதை என்னைப் போன்றவர்கள் உணர்வதற்கு இடிந்தகரை மக்களின் போராட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

-பி. சுந்தரராஜன்,

வழக்கறிஞர்

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//ஒரு பிரபல தனியார் தொலைகாட்சியின் செய்தியாளர், பினாமியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர். அந்தச் செய்தியாளர், தாம் சேகரிக்கும் செய்திகளை பணி புரியும் நிறுவனத்துக்கு செய்து கொடுப்பதைவிட, சற்று அதிக பொறுப்புணர்வுடன் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கும் கொடுப்பதாக அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.//

Who is that black sheep???

பட்டிக்காட்டான் சொன்னது…

உண்மை என்றுமே தோற்காது

அ. ராமசாமி, மதுரை சொன்னது…

மிகச்சரியான நேரத்தில் மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அசுரனின் பணிகளை நினைவு கூர்ந்து நினைவு படுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

santhanam சொன்னது…

nanri sundara rajan.
sirappana karuthurai
santhanam.

jojo சொன்னது…

கூடங்குளம் மக்களின் போராட்டத்தை அழகாக வெளியிட்டுள்ளீர்கள் ...நன்றி பல கோடி.

கருத்துரையிடுக