திங்கள், பிப்ரவரி 13, 2012

கூடங்குளம் நாட்குறிப்பு (EPW Article)

கடற்படையின் முன்னாள் தலைவரும் அவர் மனைவியும் (இருவருக்கும் 70க்கு மேல் வயதாகிறது) மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்திலிருந்து இந்தியாவின் தென் கோடியில் உள்ள ஒரு கிராமத்துக்கு எதற்காகப் பயணம் மேற்கொள்ள வேண்டும்? இரண்டு காரணங்கள்: அங்குள்ள மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் கூடங்குளத்திலும் இடிந்தகரையிலும் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் சென்றோம். குறிப்பாக மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான எஸ். பி. உதயகுமார் தாராப்பூரில் இருந்து ஜெய்தாபூர் வரை கடந்த ஏப்ரலில் யாத்திரை மேற்கொண்டதற்குப் பின்னர் இங்கு வரவேண்டுமென்ற எண்ணம் உறுதிப்பட்டது.
உதயகுமார் உத்வேகமூட்டும் ஒரு தலைவர் என்பதில் சந்தேகமில்லை. போக்ரான்-மிமிக்குப் பிறகு மினியா போலிஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக அட்மிரல் ராமதாஸை அழைக்க வந்திருந்தபோதுதான் அவரை முதல்முதலாகச் சந்தித்தோம். இந்தியா வெளிப்படையாக அணு ஆயுத சக்தியாகத் தன்னை அறிவித்துக்கொண்ட சமயத்தில் நாங்கள் அதற்கு எதிராகத் தனியாகப் போரிட்டுக்கொண்டிருந்தோம்.

தன் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து விட்டு வெளிநாட்டின் பல பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிவிட்டு அவருடைய சொந்த ஊரான நாகர்கோயிலுக்கு உதயகுமார் திரும்பியிருந்த நேரம் அது. கூடங்குளம் மின்னணு உலைக்கு எதிரான போராட்டம் துளிர்த்துக்கொண்டிருந்த சமயம். 2006ஆம் ஆண்டில் அணு ஆயுத ஒழிப்பு மற்றும் அமைதிக்கான (CNDP) கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கூடங்குளத்துக்குச் சென்றிருந்தோம். அவருடனான தொடர்பைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் இந்தப் போராட்டத்துக்கு எங்களுடைய தனிப்பட்ட ஆதரவைத் தெரிவிப்பதற்காகவும் இந்த முறை அங்கு சென்றோம்.

கூடங்குளத்தை நோக்கிய பயணம் 

மூன்று நாட்களில் ஏழு மாநிலங்களைக் கடந்து செல்லும் ரயில் பயணம் சுயபரிசோதனைக்கும் உரையாடலுக்கும் போதுமான வாய்ப்பை அளிக்கிறது. செய்தித்தாளில் உதயகுமாரும் அவருடைய தோழர்களும் ‘அரசாங்கத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதாகவும்’, ‘ராஜ துரோகம்’ செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைப் படித்த பிறகு அவர்களைக் கிராமத்தில் சந்திப்போமா அல்லது சிறையில் சந்திப்போமா என்ற சந்தேகம் எழுந்தது.

நாங்கள் இடிந்தகரைக்குச் சென்று சேரும்வரை இதற்கான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் எங்கள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. கூடங்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளைக் கடந்து காரில் விரைந்தோம். அவை பார்ப்பதற்கு அருமையாக இருந்தன. இந்தியாவிலேயே காற்றாலை மின்சாரம் தயாரிக்கத் தகுந்த சூழல் தமிழ்நாட்டில்தான் உள்ளது. நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரியின் அளவு காற்றாலைகளால் குறைந்துவிடுவதால் இந்தக் காற்றாலைகள் தினமும் சில மணி நேரங்களுக்குச் செயல்படாமல் நிறுத்திவைக்கப்படுவதாகப் பின்னர் கேள்விப்பட்டோம்! (இந்தக் குற்றச்சாட்டை நிறுவுவதற்கான சான்று எங்களிடம் இல்லை. ஆனால் இப்படி ஒரு கருத்து உலவுவது ஆரோக்கியமான அறிகுறி அல்ல.)

டிசம்பர் 6, நினைவில் நிற்கும் நாள்

இடிந்தகரையின் 107 வருடப் பழமை வாய்ந்த தேவாலயத்தின் கம்பீரமான கூம்புதான் முதலில் உங்கள் கவனத்தை ஈர்க்கும்; கூடங்குளம் அணு உலைகளின் மேற்கூரைகளின் வளைவுகள் அல்ல. கடலில் இருந்து பார்த்தாலொழிய வெளியே தெரியாதபடி அக்கட்டடம் மறைவாக உள்ளது. தேவாலயத்துக்கு முன்னால் போடப்பட்டுள்ள மேடைக்கு ஒலிப்பெருக்கிகள் வழிகாட்டின. அங்கே 3000 பேர் குழுமியிருந்தார்கள். அவர்களில் 80 சதவீதத்தினர் பெண்களும் குழந்தைகளும்.

பாபாசாகேப் அம்பேத்கரின் செய்தியின் சமகாலப் பொருத்தத்தைப் பற்றி உத்வேகமூட்டும் வகையில் உரையாற்றிக்கொண்டிருந்தார் குமார். அன்று அம்பேத்கரின் நினைவு நாள் (மகா பரிநிர்வாணம்). பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட துயர நாளும் அன்று தான். இந்த நாளைச் சமூக நல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்கப் போராட்டக் குழுவின் தலைமை எடுத்த முடிவு மதிநுட்பம் வாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யர்களால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட கூடங்குளம் அணு மின் உலை VVER (Vodo - Vodyanoy energeticheskiy reactor) செயல்படத் தொடங்கும் நிலையில் இருந்தபோது அதன் அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்தக் கோரும் அகிம்சைப் போராட்டத்தின் 113ஆவது நாளும் அதுதான். பாதுகாப்புக் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்று விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உள்ளிட்ட பல குழுக்களும் பலமுறை கோரிக்கை விடுத்த பிறகும் அணு உலை செயல்படத் தயாராகிவிட்டது.

இப்போது போராட்டம் ஏன்?

அணுமின் நிலையத்தைக் கட்டிக்கொண்டிருந்த இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் போராட்டம் கடந்த இருபது வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதே சமயத்தில், அப்போது இந்தப் போராட்டம் இவ்வளவு அமைப்புரீதியாக ஒழுங்காகத் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களின் ஆட்சேபணைகள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டன. பல ஆண்டுகளாகத் தவறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டதோடு எதிர்ப்பாளர்களைப் பிரிக்கவும் செயலிழக்கவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அணு உலை அதிகாரிகள் ஆகஸ்டு மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தத் திட்டமிருந்ததன் நேரடி விளைவாகக் கடந்த நான்கு மாதங்களாகப் போராட்டம் தீவிரமடைந்தது. முன்கூட்டி அபாய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. அமானுஷ்யமான அபாய ஒலி திடீரென்று கிளம்பி உள்ளூர் மக்களைத் திடுக்கிட்டுப் பீதியடைய வைத்தது. கொடூரமான ஊளையைப் போன்ற அந்தப் பயங்கரமான ஒலி சோதனை ஓட்டம் முழுக்கத் தொடர்ந்து ஒலித்தது. இந்த ஒலி, நெருங்கிக்கொண்டிருக்கும் அபாயத்தை அவர்களுக்கு உணர்த்தி, அவர்களிடையே திகிலுணர்வை மீண்டும் ஏற்படுத்தியது. மக்களை அணு மின் நிலையத்துக்கு எதிர்த்திசையில் ஓடுமாறும், ஏதாவது அசௌகரியமான அறிகுறிகளோ எதிர்விளைவுகளோ தோன்றினால் தங்கள் கண்களையும் முகத்தையும் மூடிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்ட அறிவிப்பு செய்தித்தாள்களுக்குத் தரப்பட்டது அவர்களுடைய திகிலை அதிகப்படுத்தியது (இந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது).
அணு மின் சக்தி பற்றிய அறிவும் தகவல்களும் இந்தியாவைப் பொருத்தவரை ரகசியமாக வைக்கப்படுகின்றன. ஆகவே நேரக்கூடிய அபாயங்களும் பிரச்சினைகளும் மக்களிடம் ஒருபோதும் விளக்கப்படுவதில்லை.

ஒருவேளை இடர்பாடுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் அது அதிகார வர்க்கத்துக்கே உரிய அலட்சியத்துடன் தான் சொல்லப்பட்டது. அல்லது ஃபுகுஷிமாவுக்குப் பிறகு, (மகாராஷ் டிராவிலுள்ள ஜெய்தாபூர் அணு மின் நிலையத்தைப் பொறுத்தவரை) உண்மைகள் தாறுமாறாகத் திரித்துச் சொல்லப்பட்டன. ஆகவே மக்கள் தகவல்களின் ஆதாரத்தைத் தேடி அலைய வேண்டியிருந்தது. அதற்கு வழிவகை தெரியாமல் அவர்கள் திண்டாடினார்கள். அதிர்ஷ்டவசமாக, அவர்களுக்குப் பொறுப்புள்ள அசாதாரணமான தலைவர்கள் கிடைத்தார்கள், அவர்கள் மக்கள் மனத்தில் எழுந்த கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விடையளித்தார்கள். அணு உலைகளின் எல்லா விளைவு களைப் பற்றியும், ஃபுகுஷிமா மற்றும் செர்னோபில், 3 மைல் தீவு ஆகிய வற்றிலிருந்து பெறப்பட்ட பாடங்கள் வரையிலும் அவர்களுக்கு அறிவுறுத்தி னார்கள். அத்துடன் அவர்களுக்குப் பக்கத்தில் உள்ள நிஜமான பேரிடர் களைப் பற்றியும் விளக்கினார்கள்.

எச்சரிக்கை உணர்வும் கேள்வி கேட்கும் தன்மையும்கொண்ட பொதுமக்கள் அதிகாரத்துக்கு எதி ரான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படு கிறார்கள் என்பதுதான் இதன் சாரமான செய்தி.

யாருடைய தேசியம்?

இந்தப் பின்னணியில்தான் நாங்கள் கூடியிருந்த மக்களிடம் சில வார்த்தைகளைப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். நாங்கள் யார் என்பதையும் ஏன் அவர்களு டன் இருப்பதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் தமிழிலும் ஆங்கிலத் திலும் ஹிந்தியிலும் பகிர்ந்துகொண் டோம். அணு மின் சக்திக்கும் அணு ஆயுதங்களுக்கும் எதிராகப் பேசுவ தற்கு எப்படி ஒரு முன்னாள் கடற் படைத் தலைவர் (கப்பலோட்டிய தளபதி) ஒப்புக்கொண்டார் என்று தெரிந்துகொள்வதற்கு அவர்களி டையே பெரிய ஆர்வமிருந்தது. வாழ் நாள் முழுக்க அணு மின் சக்தியின் முக்கியத்துவத்தை ஆதரித்துவந்த அவர் தன்னுடைய கருத்துகளை மாற்றிக்கொண்டு இப்படி அணு மின் சக்திக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்ததற்கான காரணம் என்ன என்ற கதை கேட்டுக்கொண் டிருந்த மக்களிடையே ஏற்படுத்திய விளைவுகள் வெளிப்படையாகத் தெரிந்தன. தன்னுடைய தற்போதைய கருத்துகள் தேசிய விரோதமானவை என்று கருதப்படும்போது அது எவ்வளவு வலியைத் தருகிறது என்பதை அவர் விளக்கியபோது அந்த அனுபவத்தை அவர்களால் தெளிவாக உணர முடிந்தது.

அந்த நாளின் உண்ணாவிரதம் இடிந்தகரை வீதிகளில் நடந்த மாபெரும் அமைதி மற்றும் ஒற்றுமை ஊர்வலத்துடன் நிறைவடைந்தது. அமைதி மற்றும் ஜனநாயகரீதியான எதிர்ப்பின் அடையாளமாகத் தொடர்ந்து விளங்கும் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இந்த ஊர்வலத்தில் பங்கு பெற்றவர் களோடு உரையாடியபோது உணர முடிந்தது. அண்மைக் காலங்களில் இதைப் போன்ற எதிர்ப்புகள் எவையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 113ஆம் நாளன்று மூவாயிரத்து சொச்சம் பேர் (அதில் 80% பெண்கள்) தெருக்களில் நடந்து போவதைக் கற்பனைசெய்து பாருங் கள். இது முழுக்க முழுக்க கிறிஸ்த வர்களால் (வெளிநாட்டுச் சக்திகளின் நிதியுதவியால்) தலைமையேற்று நடத்தப்படும் போராட்டம் என்று சொல்லப்படும் பொய்யுரையைத் தகர்ப்பதுபோல எல்லா நம்பிக்கை களையும் சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டார்கள். இந்துக் கோயில்களிலிருந்தும் மசூதிகளிலிருந் தும் இமாம்களிடமிருந்தும் தேவா லயங்களிலிருந்தும் போராட்டத்துக் கான ஆதரவு கிடைத்தது. அனை வரது பிரார்த்தனைகளும் இதற்குப் பக்கபலமாக இருந்தன.

‘அணு சக்தி 100% பாதுகாப்பானது’ என்று மக்களுக்குத் தெரியப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நட வடிக்கைகள் எவையும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விஜயம் உள்பட, மக்களிடம் எந்தப் பலனை யும் தரவில்லை என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்துகொண்டோம். மாறாக ஒரு முன்னாள் ஜானதிபதி, அதுவும் ஒரு தமிழர், மீன்பிடிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவ்வளவு தூரம் வந்தும், தங்களிடம் உரையாடித் தங்களது கவலைகளைப் பற்றிக் கேட்காமல் அதிகாரிகள் சிலரிடம் மட்டும் பேசிவிட்டுத் திரும்பியது தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்ற உணர்வே மக்களிடம் எழுந்தது. அவர்கள் தங்கள் போராட்டத்தை முன்னைவிட அதிக உற்சாகத்துடன் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். நமது மிகப் பெரிய, ஆனால் வலுவற்ற ஜனநாயகத்தில், ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே அகன்றுகொண்டே போகும் இடைவெளியை இது காட்டுகிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது.

பெண்களின் எதிர்ப்பு

அண்மையில் கூடங்குளத்துக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருமே போராட்டத்தில் பெண்கள் பெருமளவு திரண்டுள்ளதையும் அவர்கள் பங்கேற்பையும் கண்டு வியந்திருக்கிறார்கள். நாங்களும் விதிவிலக்கல்ல.

இடிந்தகரையில் செலவிட்ட இரண்டு நாட்களும் வரலாற்றையும் மரபு வழிக் கதைகளையும் எண்ணிப் பார்த்தபடியும் அநீதி இழைக்கப்பட்ட சம்பவங்களையும் துணிச்சல் மற்றும் ஒற்றுமையின் கதைகளையும் பேசியபடி கழிந்தன. ஒரு மகா சக்தி - அது ஏசுவாகவோ அல்லாவாகவோ அம்மனாகவோ இருக்கலாம் - தங்களுக்கு உதவுவதான நம்பிக்கை அங்கு நிலவியது. அதனுடன் ஆழமாக வேர்விட்டிருந்த கோபமும் அமைப்பின் மீதும் அவர்களைத் துச்சமாக நடத்திய அதிகாரிகள்மீதும் ஏற்பட்ட ஏமாற்றமும் சேர்ந்துகொண்டிருந்தன. வீட்டையும் அடுப்பங்கரையையும் வேலையையும் விட்டுவிட்டு வாரக் கணக்கில் மாதக் கணக்கில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பெண்களால் கூடங்குளம் தனித்து நிற்கிறது.

எப்படித் தளராது தொடர்ந்து போராட்டங்களில் பங்குபெற முடிகிறது என்று அவர்களில் பலரையும் கேட்டோம். அவர்கள் சிறிதும் தயக்கமின்றித் தலைமையின் தரம், அர்ப்பணிப்பு உணர்வு, நேர்மை, போராட்டத்தில் அவர்களது வெளிப்படையான முழுமையான ஈடுபாடு ஆகியவற்றைக் காரணமாகக் குறிப்பிட்டார்கள். இந்த இயக்கம் ஒளிவுமறைவற்ற தன்மையோடு, அறிவு புகட்டுவதாகவும் அனைவரையும் பங்குபெற வைப்பதாகவும் அமைந்துள்ளது. எல்லாத் தளங்களிலும் வளர்ந்துவரும் நம்பிக்கை, உள்ளூர் ஆலோசனை, திறமையின் மீதான கவனம் ஆகியவை தன்னியல்பான செயலூக்கம் கொண்டதாக உள்ளன. பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளைப் பராமரித்துக்கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் அவர்களுக்குச் சிறிதும் பெரிதுமாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லா வயதிலும் உள்ள குழந்தைகள் அவர்களுடைய கதைகளையும் கவிதைகளையும் பாடல்களையும் மேடைக்கு வந்து எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாணவர்கள் வீட்டுப் பாடங்களைச் செய்ய உதவிசெய்யப்படுகிறது. அவர்கள் பள்ளி செல்வது தடைப்படவில்லை. மகத்தான ஈடுபாட்டையும் படைப்பூக்கத்தின் எழுச்சியையும் ஒரு புதிய பாடமாகப் படிக்கக் கிடைப்பதையும் இந்தப் போராட்டத்தில் காண முடிகிறது. அற்புதமான, புதிய தலைமை இளைய தலைமுறையிலிருந்து தோன்றி வருவதை இதன் மூலம் உணர முடிகிறது.
சுவாரஸ்யமான பல விவரங்கள், அணு மின் நிலையங்கள் மற்றும் நிலக்கரி மின் நிலையங்கள் ஆகியவற்றின் அபாயங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் உள்ள மாற்று வழிகள், நாட்டின் இதர பகுதியில் நடக்கும் போராட்டங்கள், ஃபுகு ஷிமாவின் தற்போதைய நிலவரம், அவர்களுடைய சொந்த வரலாறு, அம்பேத்கர், காந்தி, தற்போதைய போராட்டத்தில் அவர்களுக்கு உள்ள தொடர்பு எனப் பல விஷயங்களும் போராட்ட மேடைகளில் சொல்லப்படுகின்றன. இளையவர்களும் முதியவர்களும் கவனமாகக் கேட்கிறார்கள். மேலும் அவர்களுடைய சொந்த வரலாறும் சூழ் நிலையும் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மேலும் அரிக்கப்படும் அவர்கள் கரையோரம் பற்றியும் அவர்களது மீன்பிடித் தொழில் எதிர்கொண்டிருக்கும் அபாயமும் அவர்களுக்குச் சொல்லப்படுகின்றன.

போராட்டத்தின் உருமாறும் தன்மை

முற்றிலும் வேறான குழுக்களை இணைக்கத் தலைவர் பலரும் உதவியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் போராட்டமே தன்னளவில் மக்களைப் பல வகைகளில் உருமாற்றியுள்ளது. உரு மாற்றம் நிகழ்ந்த விதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பொதுமக்கள் நலனுக்காக என்று சொல்லி அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முனைப்புகளிலிருந்து மக்கள் அந்நியப்பட்டு நிற்பது அதிகரித்து வருவதன் பின்னணியில் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவான அச்சுறுத்தலுக்கு எதிராகவும் ஒரு பொதுவான நோக்கத்திற்காகவும் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. மக்களை ஒன்றுபடுத்தும் வலுவான காரணமாக இவை உள்ளன.

தங்கள் வாழிடங்களை விட்டு இடம்பெயர்வது குறித்த நியாயமான அச்சமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஃபுகுஷிமாவுக்குப் பிந்தைய கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது. இங்கே அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றிப் பொதுவாகவும் அணு மின் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ள அபாயங்கள் பற்றிக் குறிப்பாகவும் எழுப்பப்படும் தீவிரமான, நன்கு ஆராயப்பட்ட, அக்கறையுடன் கூடிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தகவல் அறியும் உரிமை நமக்குண்டு என்ற தன்னம்பிக்கையுடன் மக்களால் இவை எழுப்பப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒட்டுமொத்த அனுபவமும் நாடு முழுவதும் வெளிநாடுகளிலும் நடந்துவரும் இதே போன்ற போராட்டங்களோடு இந்தப் போராட்டத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ஜெய்தாபூர், காக்ராபூர், கைகா, கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களைச் சுற்றி வாழும் மக்களின் உடல்நலன் தொடர்பான அபாயங்களைப் பற்றிய கவலை இங்கே நிலவுகிறது. வளர்ச்சியின் பாதைகளைச் சுற்றிச் சூழ்ந்துள்ள வெளிப்படையான பிரச்சினைகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்க ஆசைப்படும் விஷயங்களையும் பற்றிய ஒன்றுபட்ட உணர்வு உருவாகிவருகிறது. பெண்கள் நீண்ட பயணங்களை மேற்கொண்டு ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தங்கள் சொந்த அனுபவங்களையும் தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார்கள்.

7 டிசம்பர்

ஒரு காலத்தில் கடற்கரையாக இருந்த பகுதியில் காலை நடைப் பயிற்சியை மேற்கொண்டபோது, மின் நிலையத்தைத் தெளிவாகப் பார்த்துவிட முடியுமென்று நினைத்தோம். மீனவர் குழு ஒன்று எங்களைத் தங்கள் படகில் ஏறச் சொன்னது எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. நாங்கள் படகில் ஏறினோம். படகு அடர்ந்த நுரைகளுடைய கடும் அலைகளைக் கடந்து செல்லும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோம். கடலுக்குள் சென்றதும் அழகிய இந்தியப் பெருங்கடலின் கரையில் பல ஏக்கர் நிரப்பரப்பில் அமைந்துள்ள கூடங்குளம் உலையின் வானளாவிய கட்டடம் எங்கள் பார்வையில் பட்டது. சமீபத்தில் 1000 படகுகள் பங்குபெற்ற போராட்டத்தைப் பற்றிச் சொன்ன மீனவர்கள், அணு மின் நிலையத்தின் குளிர்விப்பான்களின் கழிவு, கடலில் எந்த இடத்தில் ஓடிவந்து சேரும் என்பதைக் காட்டினார்கள். இதனால் கடல் சூழலில் தவிர்க்க முடியாமல் அதிகரிக்கவிருக்கும் வெப்பநிலையைப் பற்றியும் மீன்களைப் பற்றியும் அவற்றைத் தலைமுறை தலைமுறையாகத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பதைப் பற்றியும் பேசினார்கள்.

பார்ப்பதற்கு அமைதியாகவும் அழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ள அந்தக் கட்டடத்தை வாகான இடத்திலிருந்து நிறைய புகைப் படங்கள் எடுத்தோம். தீர ஆராய்ந்து பார்த்தால் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவைக்கு அணு மின்சாரம் மிகச் சிறிய அளவே உதவுகிறது என்பதைக் காட்டும் புள்ளி விவரங்களைப் பற்றி யோசித்தோம்.

கேள்விகள், அதிகமான கேள்விகள்

கூடங்குளத்துக்கு நேரில் சென்ற பிறகு புதிதாகத் தோன்றியுள்ள, சிரமமான, எண்ணிப்பார்க்க முடியாத கேள்விகளை இங்கே பகிர்ந்துகொள்கிறோம். கவனிப்பதற்கு நாம் தயாராக இருந்தால் மட்டுமே பதில்கள் கிடைக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

என்ன விலை கொடுத்தாவது அணு சக்தி தேவை என்ற அதீதமான ஆவேசம் எதனால் வந்தது? அணு சக்தித் துறைக்கு மட்டும் இவ்வளவு முதலீடுகளும் வள ஆதாரங்களும் கிடைப்பது எப்படி? புதுப்பிக்கத்தக்க மின் சக்தி ஆற்றல் துறைக்கு ஏன் அந்த அளவு முதலீடும் வளங்களும் அளிக்கப்படவில்லை?

அணு சக்திக்கான பொறுப்பு குறித்த மசோதாவைச் சுற்றி எழும் கடினமான கேள்விகளை ஆழமாக மறு ஆய்வு செய்யும்போது நாம் ஏன் அணு சக்தி குறித்த செயல்பாடுகளை நிறுத்த மறுக்கிறோம்? இந்தியாவில், அணு சக்தி ஆற்றலைப் பொதுவாகவும் கூடங்குளம் அணு சக்தி நிலையத்தைப் பற்றிக் குறிப்பாகவும் தொடர்புபடுத்தி எழுந்துள்ள ஆழமான பிளவை நாம் எவ்வாறு அணுகுகிறோம்? இந்தத் தேசத்து மக்களுக்கான தொலை நோக்கிலான மின் சக்தி உத்தரவாதம், பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த விஷயத்தை நாம் முதிர்ச்சியோடும் உடனடியாகவும் அணுகுவது அத்தியாவசியமானது.

தேசத்தின் 14000 கோடி ரூபாய் முதலீடு வீணாகப் போய்விடக் கூடாது என்ற நியாயமான கவலைகள் ஒருபுறம் இருக்க, கூடங்குளம் உலையை அணு சக்திக்குப் பதில் முழுக்க முழுக்க எரிவாயுவால் இயங்கும் நிலையமாக மாற்றுவதற்குத் தகுந்த காரணங்களோடு முன்வைக்கப்படும் புதிய ஆய்வுத் திட்டங்களை (எரிபொருளை மாற்றுவது நன்கு அறியப்பட்ட கோட்பாடு) யாரும் காது கொடுத்துக் கேட்காதது ஆச்சரியமளிக்கிறது. இதைத் திட்டமிட்ட வகையில் செய்ய முடியும். அமெரிக்காவில் இரண்டு மூன்று இடங்களில் இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ஷோர்ஹாம் மற்றும் மற்ற பல நிலையங்கள். இந்த மாற்றங்கள் பற்றிய திட்ட விளக்கக் கையேடுகள் போதுமான அளவு வெளியாகியுள்ளன.

தேசத்தின் மின்சாரக் கொள்கை பற்றிப் பாரபட்சமற்ற, தேசிய அளவிலான முயற்சியுடன் கூடிய தீவிரமான மறு ஆய்வுக்கு நம் அரசாங்கம் தயாராக இல்லாதது பற்றியும் பல அசௌகரியமான கேள்விகள் உள்ளன. பல துறைகளிலும், குறிப்பாக நமக்குள்ள ஆற்றல் விருப்பங்களையும் நம் தேசத்தின் நலன்களையும் அதன் முன்னுரிமைகளையும் பற்றி ரஷ்யர்களும், பிரஞ்சுக்காரர்களும் அமெரிக்கர்களும் நமக்குக் கட்டளையிடுவதாகத் தெரிகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மக்கள் எதிர்ப்பு இயக்கங்களில் நாங்கள் பார்ப்பதும் கேட்பதும் இதுதான்:

நாங்கள் உங்களோடு உடன்படவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் கவனித்துக் கேட்க வேண்டும் என்றும், உங்களைத் தேர்ந்தெடுத்த எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தம். அதிகப் பணம் வாங்கும் வெளிநாட்டு ஆலோசகர்களோடும் நிபுணர்களோடும் அரசாங்கப் பிரதிநிதிகளோடும் கலந்தாலோசிப்பதற்குப் பதில் எங்களோடு கலந்து பேசுங்கள். இவர்கள் சக்தி வாய்ந்த சுயநல சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

முடிவுகள்

டிசம்பர் 18. கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் இரண்டு வாரங்களில் செயல்படத் தொடங்கிவிடும் என்று மாஸ்கோவில் அறிவித்ததன் மூலம் பிரதமர் பெரும் புயலொன்றை ஏற்படுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு யதார்த்த நிலவரத்தின் மீதும் கூடங்குளம் விஷயத்தில் சற்றே மாறுபட்ட கருத்துகொண்ட முதல்வர் ஆளும் இந்த மாநிலத்தின் அரசியல் சூழல்மீதும் செலுத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது.

போராட்டத்தை நடத்துபவர்களிடமிருந்து இன்று காலையில் வந்த தொலைபேசிச் செய்தியின்படி 20000க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கூடங்குளத்தில் ஊர்வலமாகப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய மெய்யான, அஹிம்சையான, அமைதிப் போராட்டம் நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களால் மிதித்து நசுக்கப்பட்டது குறித்து அவர்கள் ஆழ்ந்த வருத்தமடைந்திருக்கிறார்கள். இணையமும் செய்தித்தாள்களும் இப்போது முன்னாள் ஜனாதிபதி மத்தியஸ்தராகவும் தீர்வுகாண முயல்பவராகவும் வேடமேற்றதைப் பேசுகின்றன. சவால்கள் கடினமானவை. தீர்வுக்கான வழிகள் அறிவார்த்த முறையில் அரசியல் அறிவாண்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும். நமது பாரபட்சமான அபிப்பிராயத்தில் கடைசி முடிவு மக்களிடம் இருக்க வேண்டும். அவர்களது நீண்ட கால நன்மையே அதன் மையமாக இருக்க வேண்டும்.

இந்த அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் வளர்ச்சியையும் தேசத்தின் முன்னேற்றத்தையும் தடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகச் சவால் விடுவதற்கு மக்கள், குறிப்பாகக் கூடங்குளத்துப் பெண்கள் முன்னணியில் இருப்பார்கள். இனி மின் தடை இருக்கக் கூடாது என்பதிலும் மின்சாரத்தின் தேவை குறித்தும் அவர்கள் தெளிவோடு இருக்கிறார்கள். ஆனால் மின்சாரம் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். தங்கள் கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கும் வேண்டிய மின்சாரம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். நாற்கரச் சாலை, பள்ளிக்கூடம், அதிநவீன மருத்துவமனை முதலான ஆசைகாட்டலுக்கு மயங்கிவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். இந்த வகையான வாக்குறுதிகள் அர்த்தமற்றவை எனவும் தங்களை அவமானப்படுத்துவதாகவும் நினைக்கிறார்கள். இவையெல்லாம் குடிமக்கள் என்ற முறையில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் என்று கருதுகிறார்கள். அதுவுமில்லாமல், சூரிய சக்தி மின்சாரத் திட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவற்றைப் பற்றிப் படித்த பிறகு அவர்கள் தங்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். இது அத்துமீறிய செயலா? இது முட்டுக்கட்டை போடுவதாகுமா? இது தேச விரோதமா? அரசாங்கத்துக்கு எதிரான போரா?

இது அத்துமீறிய செயலா? இது முட்டுக்கட்டை போடுவதாகுமா? இது தேச விரோதமா? அரசாங்கத்துக்கு எதிரான போரா?

கீழே தரப்பட்டுள்ள கோஷங்கள் ராஜ துரோகமானவையா அல்லது தொலைநோக்குக் கொண்டவையா என்று வாசகர்களே முடிவுசெய்து கொள்ளலாம். 

வேண்டாம், வேண்டாம் அணு உலை வேண்டாம்.
வேண்டும் வேண்டும் சூரிய உலை வேண்டும்.

-எல். ராமதாஸ் & லலிதா ராமதாஸ்
தமிழில்: குவளைக் கண்ணன்

நன்றி: எகனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி,  டிசம்பர் 31, 2011 
& காலச்சுவடு, பிப்ரவரி 2012

2 கருத்துகள்:

இருதயம் சொன்னது…

கூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒரு பார்வை

http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_14.html

JOTHI சொன்னது…

தகவல்கள் தரும் செய்தி வருத்தத்தைத் தருவதாக உள்ளது..உண்மையான அறிவியல் என்றுமே மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும்.தீமை செய்யும் அறிவியலை விட்டு நனமையை செய்யும் அறிவியலையே ஊக்குவிப்போம்..

கருத்துரையிடுக