கார்ப்பரேட் கம்பெனிகளே, நீங்கள் தாய் உள்ளத்தோடும் கருணையோடும் யோசித்து முடிவெடுத்து உங்களது பங்கான 30% மின்வெட்டை ஏற்றுக்கொண்டால், எங்கள் வாழ்வும் மலரும். சமூக வளர்ச்சியில், நீங்களும் பங்கு எடுத்த பெருமை கிடைக்கும்''
-இப்படி, கார்ப்பரேட் கம்பெனிகளை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளன தமிழகத்திலிருக்கும் பருத்தி, பஞ்சுநூல் மில் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள்.
இதைப் பார்க்கும்போது... ஒரு கொலை செய்த ரவுடி... பல கொலைகளை செய்த/செய்துகொண்டிருக்கும் ரவுடியை பார்த்து ஜீவகாருண்யம் பேசுவது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆம், தங்களுடைய வருமானத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டதற்கே... சித்தாந்தம், வேதாந்தம், சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை பற்றி பேசும் இந்தப் பருத்தி, பஞ்சு, நூல் மில் முதலாளிகள்தானே... லட்சக்கணக்கில் பருத்தி விவசாயிகள் மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போதும்... இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு பருத்தி ஏற்றுமதிக்குத் தடை கோரினார்கள்.
ஒன்று உள்ளூர் வர்த்தகம் என்றால், இன்னொன்று உலக வர்த்தகம். ஒன்று சிறிய சுரண்டல்... மற்றொன்று பெரிய சுரண்டல். இதில் நியாயம், தர்மம் என்கிற சொற்களுக்கு இடமே இல்லை.
'கட்டுப்பாடற்ற உலக வணிகம், கட்டுப்பாடற்ற உலக முதலீடு நம் நாட்டுக்கு நல்லதல்ல. நல்லது செய்வது போல ஒரு மாயையை உண்டாக்கி, ரத்தம் வராமல் கொன்று விடும்' என்று கடந்த 30 ஆண்டுகளாக கரடியாக பலரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். 'வலிமையான மிருகம், எளிய மிருகங்களை வேட்டையாடி தின்று விடுவது போல... வலியவன், எளியவனை அழித்து விடுவான்’ என்று எச்சரிக்கை செய்தார்கள். 'பொருளாதாரத்தில் கடைநிலையில் இருக்கும் விவசாயிகள் முதலில் பலியாவார்கள். அடுத்து, சிறுசிறு தொழில்களை விழுங்குவார்கள்’ என்றும் எடுத்துச் சொன்னார்கள். அதற்கெல்லாம் யாருமே காது கொடுக்கவில்லையே!
தொழில் சுணக்கத்தால் வருவாய் குறைந்ததையே தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆலை அதிபர்கள், வாழ்நாள் முழுவதையும் வறுமைக்கு அடகு வைத்த விவசாயிகளைப் பற்றி இப்போதாவது சிந்தித்துப் பார்க்கட்டும். இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாலைகளில் பாதி தமிழ்நாட்டில் இருப்பதாகப் பெருமை பேசுகிறார்கள். அது எவ்வளவு உண்மையோ, பருத்தி விவசாயிகள் தற்கொலைக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதும் அவ்வளவு உண்மை. பருத்தி விவசாயிகளை வைத்து கொழுத்தவர்கள், செத்து விழுந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு என்ன செய்தார்கள்? ஒரு குடும்பத்தையாவது தத்து எடுத்து உதவி இருப்பார்களா?
'தடையற்ற உலக வர்த்தகச் சட்டம்' இந்திய அரசின் முட்டாள்த்தனமான பொருளாதாரக் கொள்கை முடிவு. 100 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டு, உலக பணக்காரர்கள் 100 பேரை உருவாக்கியதைத் தவிர எதைச் சாதித்தது உலகமயம்? பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்தபோது தடுக்கத் தவறிவிட்டு, தற்பொழுது வேண்டுகோள் விடுத்து என்ன புண்ணியம்?
இவர்கள் கதை இப்படியென்றால்... அரசு தன் பங்குக்கு மின்கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூத்தடித்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் சில அரைவேக்காடுகள், 'விவசாயத்துக்கு எதற்காக இலவச மின்சாரம்... அதற்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும்?' என கேள்விகளை எழுப்புகின்றனர்.
அரசே ஒரு சிலரை தயார் செய்து இப்படி கேள்விகளைக் கேட்க வைத்து, பின்பு 'மக்கள் கருத்தே மகேசன் கருத்து’ என்கிற பெயரில் விவசாயத்துக்கு மின்கட்டணம் விதிக்க நடத்தும் சூழ்ச்சியாகக்கூட இதை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!
விவசாயம் என்பது வயிறு சம்பந்தப்பட்டது... தொழிற்சாலைகள் என்பது வசதி சம்பந்தப்பட்டது. வசதியைப் பெருக்கிக் கொள்ள, பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், வரிச்சலுகை, தண்ணீர் சலுகை, கூலிச்சலுகை என அள்ளி அள்ளிக் கொடுப்பது இந்தக் குருட்டு கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக, விவசாயத்துக்குக் கிள்ளிக் கொடுக்கும் இலவச மின்சாரம் கண்களை உறுத்துகிறது.
650 கோடி முதலீடு செய்த ஜப்பானைச் சேர்ந்த நோக்கியா செல்போன் கம்பெனிக்கு, ஓராண்டில் இந்திய அரசு கொடுத்த சலுகைகள் மட்டும் 700 கோடிக்கும் மேல். ஆனால், 120 கோடி மக்களுக்கு சோறு போடும் உழவர்களுக்கு, சலுகை கொடுக்கக் கூடாதாம்.
அய்யா புண்ணியவான்களே வாழ்க்கைக்கு எது முக்கியம்... சோறா...
செல்போனா..?
-தூரன் நம்பி
நன்றி: பசுமைவிகடன், 10.3.2012
1 கருத்து:
வசதியை அடித்து நொறுக்கிளாலே வயிறு தானா நிரம்பிவிடும்
கருத்துரையிடுக