ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

ஆகா...அன்னை பூமி சட்டம் !

வீடு, விளைநிலம், விளைச்சல் என்றே நாம் சுழன்று கொண்டிருந்தாலும்... தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்பது போன்ற உலக சட்டங்கள்தான், உள்ளூரில் நாம் உளுந்து விதைப்பதைக்கூட, இன்றைக்கு தீர்மானிக்கின்றன.

இதுதான் எதார்த்த நிலை! இத்தகையச் சூழலில், பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகின் பல நாடுகளிலும் நடைபெறும் விவசாயம், விவசாயப் பிரச்னைகள், விவசாய அரசியல், விவசாயப் போராளிகள், இயற்கை நேசர்கள் பற்றிய செய்திகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். என்ன... உலகம் சுற்ற புறப்படுவோமா!

'உலகம், மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம்' என்கிற இறுமாப்பு, மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல, இங்கே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகள் தொடங்கி, பிரமாண்டமாகத் திரியும் யானைகள், திமிங்கலங்கள் வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த உலகம் சொந்தம். ஒன்றை பூண்டோடு அழித்து, மற்றொன்று வாழ நினைத்தால்.. அது, 'நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டுவதற்கு சமம்' என்பதை சங்க காலம் தொடங்கி, இன்று வரையிலும் நம்முன்னோர்கள் பாடல்களாக, கதைகளாக, கல்வெட்டுகளாக, ஓலைச்சுவடிகளாக, செவிவழிச் செய்திகளாக இன்னும் பற்பல வடிவங்களாக சொல்லிச் சென்றுள்ளனர்.

ஆனாலும்,  'நுனிமரத்தில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டும்' வேலை இங்கே தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக, முதன்முறையாக ஆப்பு வைத்துள்ளன சிறிய நாடுகள் இரண்டு. தென்அமெரிக்க நாடுகளான ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள்... இந்த பூமியில் மனிதர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் இயற்கையின் படைப்பில் உருவான ஒவ்வொன்றுக்குமே உள்ளது’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 'அன்னை பூமி சட்டம்' (Law of Mother Earth) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளன.
இயல்பாகவே... இயற்கை மீது அபரிமிதமான நேசமும், காதலும் கொண்டவர்கள் தென்அமெரிக்கர்கள். காரணம், அந்த அளவுக்கு அங்கே இயற்கைச் செல்வம் ஒரு காலத்தில் நிறைந்து கிடந்ததுதான். கிட்டத்தட்ட ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு இணையாகக் காடுகளும் ஆறுகளும் மலைகளும் நிறைந்த பூமி அது. அப்படிப்பட்ட செல்வங்கள், வளர்ந்த நாடுகளின் கண்களை உறுத்த, ஜனநாயகம், சட்டம், விதிகள், ஒப்பந்தம் என விதம்விதமான பெயர்களைச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி, அனைத்தையும் சுரண்ட ஆரம்பித்துவிட்டன.

எண்ணெய் வளங்களை உறிஞ்சிய நாடுகள்... கழிவுகளைக் காடுகளில் கொட்டி வனவளத்தை அழித்தன. பழங்குடிகளின் குடியிருப்புகள் கழிவுகளாலும், புகையாலும் மூச்சடைத்தன. குறிப்பாக 'செர்வான்’ என்ற நிறுவனம், உலகின் மிகப்பெரியக் காடுகளில் ஒன்றான அமேசான் காடுகளை நாசமாக்கியது. சர்வதேச முதலீடுகள் மூலம் இந்த நாசச் செயல்கள் செழிப்பாகவே நடந்தன.
ஒரு கட்டத்தில் தங்களது வளங்களும், வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதைக் கண்டு கொதித்து எழுந்த ஈக்வடார், 2008|ம் ஆண்டு 'அன்னை பூமி சட்டம்' என்பதை உருவாக்கியது. 'அரசாங்கம் என்பது அந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்குமானது’ என்கிற இந்த சட்ட விதிகளின் அடிப்படையில் 'செர்வான்’ நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஈக்வடார் நீதிமன்றம், 'செர்வான் நிறுவனம் 1,800 கோடி டாலர் (நம்மூர் தொகையில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும்' என அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

'அட இது நல்லாயிருக்கே’ என முடிவு செய்த பொலிவியா நாடும் 'அன்னை பூமி சட்டம்' என்பதை அமல்படுத்திவிட்டது. தென்அமெரிக்காவைச் சேர்ந்த மேலும் ஆறு நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மனித உரிமைக்கு இருப்பதுபோல, இயற்கைக்கும் சம உரிமை கொடுக்கும் வகையில் சர்வதேச சட்டம் கொண்டு வரும் முயற்சியிலும் இந்த நாடுகள் இறங்கியுள்ளன.

இத்தனை ஆண்டுகளாக இயற்கை அன்னையின் மடியை அறுத்து, பால் குடித்து பழக்கப்பட்டுவிட்ட ஆதிக்க நாடுகள், இப்படி ஒரு சட்டம் சர்வதேச அளவில் உருவாவதை சும்மா விட்டுவிடுவார்களா?

இன்றைக்கு சர்வதேச அளவில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தும், சூழலை எந்த அளவு வரை மாசுபடுத்தலாம் என்பதைத்தான் வலியுறுத்துகின்றனவே தவிர, மாசுபடாமல் இருப்பதற்கான விதிகளை யாரும் வகுக்கவே இல்லை.

இன்று நடக்கும் எல்லா பேரிடர்களும்... இயற்கையின் சமநிலையை மனிதர்கள் குலைத்ததால், வந்த வினைகளே. இயற்கை தன்னை சரி செய்து கொள்ள முயலும்போது, மனிதகுலம் அழிகிறது.

'இயற்கைக்கு சமஉரிமை வழங்கினால் மட்டுமே, மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள சமநிலை காக்கப்படும்' என்பதை உணர்ந்துதான் ஈக்வடார் மற்றும் பொலிவியா நாட்டின் அதிபர்கள் 'அன்னை பூமி சட்டம்' என்கிற அதிஅற்புதமான சட்டத்தை உருவாக்கியுள்ளனர், என்பதை கடந்த இதழில் பார்த்தோம்.

மரங்கள், கனிம வளங்கள் போன்றவற்றுக்காக இயற்கையைச் சூறையாடுவது ஒருபக்கம் இருக்கட்டும். அவையெல்லாம், பணம் பண்ண வேண்டும் என்கிற பேராசையின் விளைவாக நடத்தப்படும் கொடுமைகள். ஆனால், நம்முடைய அன்றாட உணவுக்குக் காரணமாக இருக்கும் அதி உன்னதமான உயிரினங்களையும் ஒழித்துக் கட்டிக் கொண்டிருப்பது... கொடுமையிலும் கொடுமை அல்லவா!
இன்று உலகில் உள்ள மனிதர்கள் உண்ணும் உணவில் மூன்றில் ஒருபங்கு தேனீக்களால் வந்தவை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பரிணாமத் தத்துவத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான சார்லஸ் டார்வின், ''இந்த சின்னஞ் சிறு உயிரினம் மட்டும் பூமியில் தோன்றியிருக்காவிட்டால்... பூமியின் முகம் இப்படி இருந்திருக்காது'' என்று மண்புழுவை சிலாகித்து எழுதினார்.

அந்த மண்புழுவுக்கு இணையாக தேனீக்களையும் கூறலாம். தேனீக்கள் மட்டும் பூமியில் தோன்றியிருக்காவிட்டால்... உலகில் பூக்கும் தாவரங்களின் தன்மையே மாறி இருக்கும். அத்தகையத் தேனீக்களையும், பூச்சிக்கொல்லிகளின் தாறுமாறான பயன்பாடுகள் காரணமாக நம்மையும் அறியாமல், நாம் அழித்துக் கொண்டே இருக்கிறோம்.

நாம் பயிரிடும் நூறு வகை பயிர்களில் எழுபதுக்கும் மேலானவை, தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 'தேனீ வளர்ப்பு' என்பது மிகப் பெரியத் தொழில். லட்சக்கணக்கான தேனீப் பெட்டிகள் ஆப்பிள், ஆரஞ்ச், அல்மாண்ட், திராட்சை என பழத் தோட்டங்களில் வைக்கப்படுகின்றன. அப்படி பெட்டிகளை வைப்பதற்கு தேனீ வளர்ப்பவர்களுக்கு விவசாயிகள் பணம் தருகிறார்கள்.

'ஒரு தேன்கூட்டிலிருந்து ஒரே ஒரு தேனீ வீதம், 200 கூடுகளிலிருந்து 200 தேனீக்கள், பூச்சிக்கொல்லிகளால் சாகடிக்கப்பட்டால்... ஆறுமாத காலத்தில் உலகின் விவசாய உற்பத்தியில் 50 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய்) மதிப்புள்ள விளைபொருட்கள் விளையாமல் போகும்’ என்கிறது அமெரிக்க தேனீ வளர்ப்போர் சங்கம்.
கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தில் கூட்டம், கூட்டமாக செத்து விழுகின்றன தேனீக்கள். இதுதொடர்பாக கடந்த மாதம் 10|ம் தேதி அமெரிக்க தேனீ வளர்ப்போர் சங்கத்தினர் கூடி விவாதித்தனர். விவாதத்தில், 'வைரஸ் நோய், மரபணு மாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள்’ என தேனீக்களின் சாவுக்கு பல காரணங்கள் விவாதிக்கப்பட்டன. ஆனால், எந்தக் காரணத்தையும் அந்தக் கூட்டம் உறுதி செய்யவில்லை. தேனீக்களின் சாவையும் தடுக்க முடியவில்லை.

அமெரிக்க தேனீக் கூட்டங்கள் சாவின் காரணமாக, அந்நாட்டின் வேளாண் பொருளாதாரம் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. 2005|ம் ஆண்டு கணக்கின்படி, பிரச்னை தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே, அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள், 200 பில்லியன் டாலர் அளவுக்கு விளைச்சல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம் (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய். கிட்டத்தட்ட 2 ஜி ஊழலுக்கு சொல்லப்படும் கணக்கைப்  போல ஆறு மடங்கு).  தேனீக்கள் அழிவு அந்த நாட்டு விவசாயிகளை கடும் கவலையில் தள்ளியுள்ளது. 

அந்நாட்டு விஞ்ஞானத்தாலும் இதற்குத் தீர்வை சொல்ல முடியவில்லை. ஆனால், நாம்தான் அவர்களுடைய விஞ்ஞானம் உசத்தி என இங்கே ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.

-அரச்சலூர் செல்வம்

2 கருத்துகள்:

Dinesh சொன்னது…

இந்தியாவில் நிலத்தடி நீருக்கான உரிமை குடிமக்களுக்கு மறுக்கும் சட்டம் தயார் ஆகிகொண்டிருக்கிறது..அதை எதிர்போம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பதிவு ! நன்று ! நன்றி !

கருத்துரையிடுக