இந்தியாவோட 'இருபத்தி நாலாம்
புலிகேசி', 'அட்டகத்தி', மாண்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங்ஜிக்கு,
வணக்கம் சொல்லிக்கறான்... உங்க பாசக்கார கோவணாண்டி.
ஐயா, உங்களோட பொதுவாழ்க்கையில ஒரே ஒரு தடவை உண்மையைப்
பேசி, உலகத்தையே புல்லரிக்க வெச்சுட்டீங்கனு... எங்க ஊரு இங்கிலிபீஸு
வாத்தியாரு அடிக்கற ஆனந்தக் கூத்து... தாங்க முடியலீங்க.
நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியலையா?
''உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. அரசு நிர்ணயிச்ச
விலை, அம்மிக் கல்லாட்டம் அசையாம கெடக்குது. எப்படி தொடர்ந்து தொழில்
செய்யறது? லாபகரமான விலை கொடுத்தாத்தானே நாலு பேரு மூட்டையில பணத்த
கட்டிக்கிட்டு நம்ம நாட்டுல தொழில் தொடங்க வருவாங்க. அப்பத்தானே, அன்னிய
முதலீடு அம்பாரமா குவியும்! அதைப் பார்த்துட்டு உள்ளூரு தொழில்
அதிபருங்களும், அவங்கவங்க குவிச்சு வெச்சுருக்கற பணத்த தொழில்ல முதலீடு
செய்வாங்க'' அப்படினு ஒரு கூட்டத்துல வெளிப்படையா போட்டு
உடைச்சுட்டீங்களாமே?!
இதை இங்கிலிபீஸு பத்திரிகையில படிச்சுட்டு வந்து, அவரு
எங்ககிட்ட சொன்னதும், ''அள்ளையில ஆப்பு சொருகுனாலும், 'அய்யோ..'.னு கத்தாத
மனுசன், இன்னிக்கு வாயத் தொறந்து நல்லது சொல்லியிருக்காரு. இனிமே பால்
விலை, கரும்பு, நெல், தேங்காய்னு எல்லா விலையும் கூடிரும். விவசாய சாதிக்கு
நல்ல காலம் பொறந்திருச்சு’'னு நான் புளகாங்கிதப்பட்டுப் போய் சொன்னதுதான்
தாமசம், பொங்கி எழுந்துட்டாரு, மனுசன்.
''அடேய் கிறுக்குப்பயலே... அவரு சொன்னது உன்னைய மாதிரி
கோவணாண்டிகளுக்கு இல்லைடா. கோமான், சீமான் மாதிரியான ஆளுங்களுக்கும், 8
ஆயிரம் கோடி செலவு பண்ணி, தன் பொஞ்சாதிக்கு ஒரு குடிசையைக் கட்டிக் கொடுத்த
அம்பானிக்கும்... பல ஆயிரம் கோடிகளை வாங்கி, ஏரோபிளேன்ல கொட்டி
பறக்கவிட்டுட்டு, பேங்குக்கு மஞ்சக் கடுதாசியை நீட்டுற அளவுக்கு நாடகமாடுற
மல்லையா மாதிரி ஆளுங்களுக்காகவுந்தான் மன்மோகன் தன்னோட வாயைத்
தொறந்துருக்காரு. ஆட்சியில உக்கார வெக்குறதும், கவுத்து விடுறதும், கவுறாம
காப்பாத்துறதும் தொழில் அதிபருங்கதானே. அதனால நீ ஓவரா சந்தோஷப்படாதே...
ஒடம்புக்கு ஆகாது. உன்னோட வேலை, ஓட்டுப் போடுறது மட்டுந்தான்.
உங்கள மாதிரி சம்சாரிக, 'விளைபொருளுக்கு கட்டுப்படியான
விலை கொடுங்க’னு பல வருஷமா கூப்பாடு போடுறீங்க. 'அதக் கேக்கக்
கூடாது’னுதான் காதை தலைப்பாகையால மூடிக்கிட்டாரு சிங். அதைக்கூட விடுங்க,
உசுரைக் கொடுத்து விளையவெச்சு, ஆலைக்கு கரும்பை கொடுத்து காசு வாங்க
முடியாம கதறிக்கிட்டு கிடக்கீங்க. இந்தா தர்றேன்... அந்தா தர்றேன்னு
போக்குக் காட்டுறாங்க. ஆனா, கேக்காமலேயே, முகேஷ் அம்பானி கம்பெனிக்கு...
ரெண்டு மடங்கு விலையை அள்ளிக் கொடுத்திருக்காரு இந்த மவுனச்சாமி.
கிருஷ்ணா, கோதாவிரி நதிப்படுகையில கிடைக்கற இயற்கை எரிவாயுவை எடுத்து, ஒரு பி.டி.யு. (ஙிஜிஹிஙிக்ஷீவீtவீsலீ tலீமீக்ஷீனீணீறீ uஸீவீt)
4.2 அமெரிக்க டாலர்னு விலை வெச்சு, நம்ம
அரசாங்கத்துக்கு விற்பனை பண்ணுது அம்பானி கம்பெனி. இது, இந்தியாவுல
கிடைக்குற எரிவாயு. ஆனா, அமெரிக்க டாலர்ல விலையை நிர்ணயம் செய்றாங்க.
ஏன்னா, இந்திய ரூபாயை அரசாங்கமே மதிக்கறதில்லையே. ஒரு டாலருக்கு 60 ரூபாய்
கொடுக்க வேண்டியிருக்கும்போது... யாருதான் மதிப்பா?
மத்த ஆசிய நாடுகள்ல, 'எரிவாயுவுக்கு என்ன விலை
கொடுக்குறாங்க?’னு, ரங்கராஜன் தலைமையில ஒரு வல்லுநர் குழு ஆய்வு பண்ணி,
'ஒரு பி.டி.யு.-க்கு 6 அமெரிக்க டாலருக்கு மேல யாரும் விலை கொடுக்கல.
நாமளும் 6 டாலர் கொடுக்கலாம்'னு சொன்னாங்க. ஆனா, '6 டாலர் கொடுத்தா...
விலைவாசி கூடிப்போகும்.
மின்சாரம், உரம் விலை உசந்துடும்... இப்படியெல்லாம்
எதிர்க்கட்சிகள் எகிற ஆரம்பிச்சிடுவாங்க’னு மின்சாரத் துறை, உரத் துறை
அமைச்சருங்க கடுமையான எதிர்ப்பை தெரிவிச்சதோட, '5 டாலர் கொடுத்தா போதும்'னு
அமைச்சரவைக் கூட்டத்துல சொல்லியிருக்காங்க. கடைசியா, 'ஆறே முக்கா டாலர்
கொடுக்கலாம்'னு பிரதமருக்கு குறிப்பு எழுதியிருக்காரு பெட்ரோலிய மந்திரி.
ஆனா, இது எதையுமே கண்டுக்காம, குருட்டுப் பூனை
விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி, 4.2 டாலரா இருந்த விலையை 100 மடங்கு உசத்தி...
8.4 டாலர்னு அறிவிச்சுட்டாரு சிங். அட, அந்த அம்பானியே இதை எதிர்பாக்கலைனா
பார்த்துக்கோயேன்''னு வாத்தியாரு சொல்லச் சொல்ல... ஒடம்பு அப்படியே
புல்லரிச்சு போச்சுங்கய்யா.
மண்ணுக்கு கீழ இருக்கறதெல்லாம் ஒட்டுமொத்த
இந்தியாவுக்கும்தான் சொந்தம். அதுல ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்கு இருக்கு.
ஆனா, அந்த அம்பானி மட்டும்தான் இந்தியன்கிற கணக்கா, ஒரே ஒரு ஆளுக்கு
மொத்தத்தையும் பட்டா போட்டுக் கொடுத்திருக்கீங்க. 'நீ அவல் கொண்டு வா...
நான் உமி கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் ஊதி ஊதி திம்போம்'கற கதையா...
நிலத்துல சும்மாச்சுக்கும் விரவிக் கிடக்கற கேஸை எடுத்து, நோகாம நொங்கு
திங்குறவங்களுக்கு... கேக்காமலேயே கொடுக்குற நீங்க, கரடியா கத்துற எங்களை
மட்டும் ஏன் கண்டுக்க மாட்டேங்கறீங்க.
சிமென்ட் கம்பெனி அதிபருங்க, துணி கம்பெனி அதிபருங்கனு
எல்லாரும், விலையைக் கூட்டணும்னா... உற்பத்தியைக் குறைச்சு, விலையை
ஏத்திடறாங்க. ஆனா, சம்சாரிக்கு மட்டும் உற்பத்தி குறைஞ்சாலும், கூடுனாலும்
விலை கிடைக்கறதில்ல. அடிக்குற வெயிலுக்கு பனை மரமே கருகிப் போயி
கெடக்குறப்ப, தென்னையைப் பத்தி என்னத்த சொல்ல? பல லட்சம் தென்னமரங்க
கருகிப் போச்சு. தேங்காய் உற்பத்தி கொறைஞ்சு போச்சு. ஆனாலும், தேங்காய்க்கு
அதே மூணு ரூபாய்... நாலு ரூபாய்தானே விலை கிடைக்குது. ஏனுங்க இப்படி?
விவசாயிக மட்டும் இந்த நாட்டுல என்ன பாவம் செஞ்சாங்க?
ஆண்டவனும்
காப்பாத்தல... ஆண்டவர்களும் காப்பாத்தல... ஆள்பவர்களும் காப்பாத்தல.
இப்படியே, கம்பெனிக்காரங்க கண்ணுல வெண்ணையையும்... விவசாயிங்க கண்ணுல
சுண்ணாம்பையும் வெச்சுக்கிட்டே போனா, சீக்கிரமே சோமாலியா மாதிரி சோத்துக்கு
சிங்கியடிச்சுட்டு... அக்கம் பக்கத்து நாடுகள்ல பிச்சையெடுக்கற நிலைதான்
இந்தியாவுக்கு வரும்.
ஆமா... தெரியாமத்தான் கேக்குறேன். 91-ம் வருஷம்,
நரசிம்ம ராவ் கெவருமென்ட் இருக்கும்போது, தடாலடியா நிதியமைச்சர் பதவியில
வந்து குதிச்சீங்க. அரசியலுக்கு துளிகூட சம்பந்தமில்லாத உங்கள, அதுல உக்கார
வெச்சாரு அந்த மவுனச்சாமியாரு நரசிம்ம ராவ். 'உலகமயம்... தாராளமயம்...
இதெல்லாம்தான் எதிர்காலத்துல வலிமையான இந்தியாவை கட்டமைக்கும்'னு சொல்லிச்
சொல்லியே... நாட்டை பல நாட்டுக்காரங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்தீங்க.
கேள்வியே இல்லாம கண்ட கண்ட பொருளையும் ஊருக்குள்ள நுழையவிட்டீங்க. இடையில
ஒண்ணு ரெண்டு வருஷம் நீங்க பதவியில இல்லாட்டியும், நீங்க போட்ட கோட்டைத்
தாண்டாமத்தான் ஆட்சியை நடத்தி முடிச்சுது சுதேசி பேசுற பிஜேபி. ஆகக்கூடி,
இருபது வருஷமா அதே பொருளாதார கொள்கையிலதான் ஊறுகாய் கணக்கா இந்தியாவே
ஊறுது. நிலைமை அப்படியே நீடிச்சும்... உங்களோட பொருளாதாரப் புண்ணாக்கு
கணக்கெல்லாம், எந்தப் பலனையும் தரலைனு நீங்களே இப்ப ஒப்புதல் வாக்குமூலமும்
கொடுக்கறீங்க?
நிறையபேர் வீட்டு வாசல்ல கார் நிக்கறதும்... அத்தனை
குடிமகன்களோட கைகள்ல செல்போன் இருக்கறதும் வளர்ச்சியா..? வீக்கத்துக்கும்
வளர்ச்சிக்குமே வித்தியாசம் தெரியாத உங்களையெல்லாம் வெச்சுகிட்டு இந்த நாடு
இன்னும் என்னென்ன பாடுபாடப் போகுதோ...
இப்பவே, ஏற்றுமதி குறைஞ்சு, இறக்குமதி எகிறி... 'கரன்ட்
அக்கவுண்ட் டெபிசிட்' (வர்த்தகப் பற்றாக்குறை) வருது. இந்த நிலை
நீடிச்சா... ஒட்டுமொத்தமா விவசாயம் அழிஞ்சு, 'கஞ்சிக்கே டெபிசிட்'
வந்துடும்'னு பெரிய பெரிய படிப்பு படிச்சவங்கள்லாம் டி.வி. பொட்டியில வந்து
வந்து கதறிட்டிருக்காங்க!
ஆகக்கூடி உங்க பொருளாதாரப் புடலங்காயெல்லாம் எந்தக்
காலத்துலயும் வேகாதுங்கறதுதான் உண்மை. பேசாம பொட்டிய கட்டிக்கிட்டு
வீட்டைப் பார்க்க கிளம்புங்க. இந்த நாடு இன்னும் நாசமா போற காலத்துல
பிரதமரா நீங்க இல்லங்கற பேராவது மிஞ்சும்!
இப்படிக்கு,
கோவணாண்டி.
கோவணாண்டி.
நன்றி: பசுமை விகடன், 25 ஜூலை 2013
2 கருத்துகள்:
வருத்தமான உண்மைகள் என்றாலும் நக்கலை படித்து வரும் விக்கலை அடக்க முடியல.
பொருளாதார நிபுணர்கள் என்றுமே சிறந்த அரசியல் அறிஞர்களாக (statesmen) இருந்ததில்லை. ஒரு சிலர் அரசியல்வாதிகளாக (politicians) இருந்திருக்கிறார்கள். நமது சிங் அவர்கள் இந்த இரண்டு வகையிலும் சேராத மூன்றாவது வகை. அதாவது பாவப்பட்ட மனிதர். அவருக்கு உரிய கௌரவமோ அதிகாரமோ அவர்கள் கட்சியில் இல்லையே! – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
கருத்துரையிடுக