விதைத்தவன் உறங்கினாலும், விதைகள்
உறங்குவதில்லை... ஆம். விதைகள் சாகாவரம் பெற்றவை. ஒவ்வொரு பகுதியிலும்,
அந்தந்தப் பகுதியின் தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்ப ஆயிரமாயிரம் விதைகளை
அள்ளிக் கொடுத்துள்ளது, இயற்கை. காயாக, கனியாக, பருப்பாக, பூவில் இருந்து
தேனாக என, பூமியில் உள்ள உயிர்களுக்கு உயிர் வாழத் தேவையான உணவை உற்பத்தி
செய்து தருகின்றன, விதைகள். அந்த விதைகளைப் பன்னெடுங்காலமாக பாதுகாத்து
போற்றி தலைமுறை தலைமுறையாகப் பரப்பிக் கொண்டு இருப்பவை பறவைகளும்,
விலங்குகளும் மட்டுமல்ல... சில மகத்தான மனிதர்களும் கூட. பலர், அத்தகையச்
சிறப்பானப் பணிகளை பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் தவமாக
செய்திருக்கிறார்கள். அவர்களை நினைவுகூர்வது, நம் கையிலுள்ள விதைகளுக்குச்
சொல்லும் நன்றிக்கு ஒப்பானது.
அது... உலகில் அறிவியல் விழிப்பு உணர்வு ஆரம்பித்த
காலம். கண்ணில் காணும் ஒவ்வொன்றைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த
காலம். அந்தக் காலகட்டத்தில் விதைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்,
'பல்லுயிர்ப் பெருக்கத்தின் தந்தை’ என அழைக்கப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த
விஞ்ஞானி நிகோலாய் இவனோவிச் வாவிலோ. ஒவ்வொரு பயிருக்குமான மூல விதைகளைத்
தேடி உலகம் முழுக்கப் பயணித்தார். அதன் மூலமாக தாவரவியலில் பல புதிய
கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்தார். என்றாலும், இவரது
கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை, உணவுப் பயிர்களின் தோற்ற மையங்கள்.
நெல்லின் தாயகம் இந்தியா மற்றும் சீனா; கோதுமையின்
தாயகம் மெசபடோமியா; வேர்க்கடலையின் தாயகம் பிரேசில்; மக்காச்சோளத்தின்
தாயகம் ஆப்பிரிக்கா... எனவும் ஒவ்வொரு பயிரின் தாயகத்தையும் கண்டறிந்து
உலகுக்கு அறிவித்தவர்... இந்த இவனோவிச் வாவிலோ. அத்தோடு நில்லாமல், பல
பயிர்களின் 'காட்டு விதை’ எனப்படும் மூல விதைகள், நாட்டு ரக விதைகளைத்
தேடித் தேடி சேகரித்துப் பாதுகாத்தார்.
இவரை கௌரவிக்கும் விதமாக 1929-ம்
ஆண்டு, வேளாண் விஞ்ஞான அகாடமி என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் முதல் தலைவராக
வாவிலோவை அமர வைத்து அழகு பார்த்தார், அப்போதைய ரஷ்ய அதிபர் லெனின்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமான விஞ்ஞானிகள் இவரிடம்
மாணவர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
ஒரு கட்டத்தில் அதிபராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு,
'டார்வினை விமர்ச்சித்தார், தேச விரோத சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்தார்’
எனப் பல காரணங்களைச் சொல்லி, வாவிலோவை சைபீரிய சிறையில் அடைத்தார். உலகம்
முழுக்க விதைகளைத் தேடித் தேடிப் பறந்த அந்தப் பறவை, சிறைப்பறவையாக
மாற்றப்பட... 1943-ம் ஆண்டு, தனது 56-ம் வயதில் பயணத்தை முடித்துக்
கொண்டது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் விதைகள், கிழங்குகள், பழங்கள்
என சேகரித்து வருங்கால மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்திய வாவிலோ, உண்ண உணவு இன்றி இறந்தது, சரித்திர சோகம்.
வாவிலோவின் விதை வங்கி, ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்
நகரில் இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரின் ஜெர்மானியப் படை
சோவியத் ரஷ்யாவின் மீது படையெடுத்து, பீட்டர்ஸ்பர்க் நகரை முற்றுகையிட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உணவு இன்றி செத்து
விழுந்தனர். அதேநேரம் வாவிலோவின் விதை வங்கியில், அவரது உதவியாளர்கள் 12
பேர் உள்ளேயே முடங்கி கிடந்தனர்.
அவர்களுக்குத் தேவைக்கும் அதிகமான உணவு, விதைகளாக அங்கு
நிரம்பி இருந்தன. ஆனால், ஒருவர் கூட அந்த விதைகளைத் தொடாமல்,
பாதுகாத்ததோடு, உணவின்றி பட்டினியால் இறந்தும் போயினர். விதைகள் அடுத்தத்
தலைமுறைக்கான உயிர் ஆதாரம் என்பதால், அதை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை
நீத்த 12 விஞ்ஞானிகளின் தியாகம், விதைகள் வரலாற்றின் கண்ணீர்ப் பக்கங்கள்.
அவர்களுக்கு வீர வணக்கம் செய்வோம்..!
தாரை வார்க்கப்பட்ட விதைகள்..!
இந்தியாவில் விதைகள் பற்றிய வரலாற்றில்
குறிப்பிடத்தக்கவர் மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த
ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா. பல ஆண்டு கால கடின உழைப்பால் சேகரித்த
இந்தியப் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை, சர்வதேச நெல் ஆராய்ச்சி
நிலையத்துக்குத் தாரை வார்த்து தருமாறு அப்போதைய இந்திய அரசு
ரிச்சார்யாவுக்கு ஆணை பிறப்பித்தது. அப்போது, கிட்டத்தட்ட 20 ஆயிரம் நெல்
வகைகள் இருப்பில் இருந்தன. நம் நாட்டின் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய விதைகளை, பன்னாட்டு நிறுவனத்துக்கு தர மறுத்தார், ரிச்சார்யா.
ஆராய்ச்சியாளர்கள், உணவு அமைச்சர் உள்ளிட்ட பலர்
ரிச்சார்யாவிடம் விதைகளைக் கொடுத்து விடுமாறு மன்றாடினார்கள். ஆனால், 'நமது
ரகங்கள்... வைரஸ் தாக்குதல் இல்லாதவை. ஆனால், இதை மேம்படுத்தித் தருகிறோம்
என்ற பெயரில் நீங்கள் கொடுக்கப் போவது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும்
விதைகள். அதை நான் அனுமதிக்க முடியாது’ என தனது கொள்கையில் உறுதியாக
இருந்தார். உடனடியாக, அவரை இயக்குநர் பொறுப்பில் இருந்து தூக்கியது, இந்திய
அரசு. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார், ரிச்சார்யா. 'நாங்கள்
ரிச்சார்யாவை ஒரு அறிவியலாளராகவே மதிக்கவில்லை’ என நீதிமன்றத்தில்
தெரிவித்தது,
இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம். அரசுப் பணியில் இருந்து
விடுபடுபவர்களுக்கு கிடைக்கும் நியாயமான உரிமைகள்கூட, கிடைக்காமல், தனது
ஓய்வுகாலத்தை வறுமையோடு கழித்தார் ரிச்சார்யா.
அவர் பாடுபட்டு சேகரித்த அத்தனை மூல விதைகளும்
இந்திராகாந்தி கிரிஷி விக்யான் வித்யாலயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2003-ம்
ஆண்டு ஓர் ஒப்பந்தம் மூலமாக இங்கிருந்த 22 ஆயிரத்து 972 ரகங்கள் பன்னாட்டு நிறுவனமான
ஸிண்ஜெண்டாவிடம் போய் சேர்ந்து விட்டது. ரிச்சார்யா அமர்ந்திருந்த
இயக்குநர் பதவியில், அவருக்குப் பின்பு அமர்த்தப்பட்டவர்தான் 'பசுமைப்
புரட்சி புகழ்’ எம்.எஸ். சுவாமிநாதன்.
-ஆர். குமரேசன்
நன்றி: பசுமை விகடன், 10-07-2013
4 கருத்துகள்:
படிக்க வேண்டிய படைப்பு! பரப்ப வேண்டிய தகவல்! நன்றி!
மக்காச்சோளத்தின் வகைகள் யாவை? ஆங்கிலத்தில் flint corn, dent corn என்கிறார்களே, தமிழில் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புரட்சி என்ற பெயரில் நம் மக்களின் வாழ்வாதரத்தையே அழித்துவிட்டனர். இன்று வரை இறந்து போன விவசாயிகளுக்கு சாமிநாதனும், இந்திய அரசாங்கமுமே காரணம்.
புரட்சி என்ற பெயரில் நம் மக்களின் வாழ்வாதரத்தையே அழித்துவிட்டனர். இன்று வரை இறந்து போன விவசாயிகளுக்கு சாமிநாதனும், இந்திய அரசாங்கமுமே காரணம்.
கருத்துரையிடுக