செவ்வாய், ஜூலை 23, 2013

உணவு பாதுகாப்பு சட்டம்...1,000 ஓட்டைத் திட்டம்!

ஆளுக்கு 5 கிலோ அரிசி... அல்லது வேறு தானியம்... மலிவு விலையில் கிலோ 2 ரூபாய் அல்லது 3 ரூபாய்க்கு 65 சதவிகித இந்திய மக்களுக்கு தரவேண்டும் என்று அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். இந்த அதிசயத் திட்டத்துக்கு 'உணவு பாதுகாப்பு சட்டம்’ என்று பெயர் சூட்டி விழா எடுக்கிறது மத்திய அரசாங்கம்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு களுக்குப் பிறகும், 65 சதவிகித மக்கள் மாதம் 5 கிலோ உணவு பொருட்கள்கூட வாங்கமுடியாத  நிலையில் வைத்திருக்கிறோமே என்று வருத்தப்படுவதற்கு பதிலாக, வறுமையை, பசிப்பிணியை மூலதனமாக்கி, ஓட்டு வங்கியைப் பெருக்கி... மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காக அலைந்து திரிந்து அறிமுகம் செய்த திட்டம்தான் இந்த உணவு பாதுகாப்பு சட்டம். மொத்தமுள்ள 120 கோடி பேரில் சுமார் 80 கோடி பேர் சாப்பிடுவதற்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்றால், நாம் செய்திருப்பது கின்னஸ் சாதனைதான் போங்கள்...

பல்வேறு மாநில அரசுகள், இலவசமாக அரிசி வழங்கவே செய்கின்றன. அந்த இலவசத்திற்கு, இப்போது சட்ட அங்கீகாரம் தந்திருக்கிறது மத்திய அரசாங்கம். உணவு பாதுகாப்பு என்றால் என்ன?

தேவையான உணவு, தேவையானபோது, தேவையான அளவில், சிரமம் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். அதை வாங்கும் சக்தி மக்களுக்கு இயல்பாகவே இருக்கவேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு என்பது உலக அரங்கில் ஒப்பிட்டால் அதிகமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தோனேஷியாவில் ஒரு கிலோ அரிசி 2 டாலர். இந்தியாவில் அரை டாலருக்கும் ஒரு டாலருக்கும்தானே விற்கிறது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் முடங்கினால், எப்படி பொருளாதாரம் வளரும்? ஆக, எல்லாச் சூழலிலும், நிலைத்து நீடிக்க நிரந்தர உணவு உற்பத்திதானே, உணவு பாதுகாப்பாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்?

ஆனால், புரட்சிகரமான இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தில், உணவு உற்பத்தி பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. உற்பத்தியை உறுதி செய்யாமல் உணவு பாதுகாப்பு எப்படி சாத்தியம்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இந்த சட்டியில் ஆயிரம் ஓட்டை அல்லவா இருக்கிறது. சட்டி நிறைவது எப்போது, வயிறு நிறைவது எப்போது?

நமது நாட்டின் உணவுத் தேவையில் 70 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது சிறு விவசாயிகள்தான். ஆகவே, அரசு என்ன செய்யவேண்டும்? சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஊக்கம் தந்து,  மேலே சொன்ன நாடுகளைப்போல மானியம் தந்து உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியைக் கூட்டி வறுமையை ஒழிக்க இந்த சட்டத்தின் மூலம் வழி கண்டிருக்கவேண்டும். மாறாக, இந்த சட்டம் பிச்சைப் பாத்திரத்தை தூக்கி கையில் தந்துவிட்டு, வறுமையை விரட்டும் திட்டம் என்று கும்மாளம் போடுகிறது. அதேசமயம், நாள் ஒன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான சிறுகுறு விவசாயிகளை கிராமங்களைவிட்டு விரட்டி அடிக்கிறது.

மேலும், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், காடு கழனிகள் காங்கிரீட் காடுகளாகவும், மாறுகின்றன. நெல் நட்ட வயலில், கல்லு நட்டு காசு பண்ணுகின்றனர் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். அனைத்து கறுப்புப் பணமும் அங்குதான் பதுக்கப்படுகிறது. விளைநிலங்கள் விவசாயிகளைவிட்டு வேகமாக வெளியேறுகிறது. இது நல்லதுக்கு இல்லை. இதைத் தடுப்பது பற்றி இந்த சட்டத்தில் ஒன்றுமில்லை. ஆறுகள், மனித கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறிவிட்டன. திருப்பூர் சாயப்பட்டறை ரசாயனக் கழிவுகள், நொய்யல் வழியாக காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில்கூட விஷத்தைக் கக்குகிறது. அதேபோல் ஆம்பூர், வாணியம்பாடியில் உற்பத்தியாகும் விஷக்கழிவுகள் பாலாற்றை நாறடிக்கின்றன; நீரும் விஷமாகிவிட்டது. அளவுக்கு அதிகமான ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால், மண் புண்ணாகிக் கிடக்கிறது. நீரும் விஷம், நிலமும் விஷம்... அப்புறம் விளைவது மட்டும் எப்படி சொக்கத் தங்கமாக இருக்கும்?


இன்று உணவுக்கு செலவழிப்பதைவிட மருத்துவத்துக்குச் செலவழிப்பதே அதிகம். இந்தியாவில் 50 சதவிகித பெண்களுக்கு ரத்த சோகை, 47 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டசத்துக் குறைபாடு உள்ளது என்று ஐ.நா. எச்சரிக்கிறது. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், இது ஒரு தேசிய அவமானம் என்று சொல்லியதோடு நிறுத்திக்கொண்டார் பிரதமர் சிங். இந்த குறைபாடுகளை களைய ஒரு நடவடிக்கையும் எடுக்காதவர்கள், இன்று திடீரென ஞானோதயம் பிறந்துபோல ஆடுகிறார்கள்!  

விரைவில் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டம் கூடவிருக்கிறது. அங்கு விவாதத்திற்கு பிறகு இந்த சட்டம் கொண்டுவந்து இருக்கலாம். நிறைகுறைகள் சரி செய்யப்பட்டிருக்கும். சட்டம் முழுவடிவம் பெற்றிருக்கும். அதற்குள் ஏன் இந்த அவசரம்? கூடிய விரைவில் நடக்கப் போகும் தேர்தலில் வாக்கு வங்கி பெருக்க நினைக்கும் திட்டம்தான்.  

ஐந்து கிலோ அரிசியில் வறுமை நீங்கப்போவதும் இல்லை. வயிற்றுப் பசி ஆறப்போவதும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி இளைஞர்கள் திடகாத்திரமாக வளர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளிக்கொண்டு வரப்போவதும் இல்லை. வருடா வருடம் நான்கைந்து லட்சம் கோடி புரளுவதால், இன்னுமொரு உலகளாவிய ஊழலுக்கு வேண்டுமானால் இந்தச் சட்டம் உதவும்.

இப்போது கொள்முதல் செய்யப்படும், ஐந்தாறு கோடி டன் உணவு தானியங்களையே, ஒழுங்காக பாதுகாக்க அரசினால் முடியவில்லை. மழையில் நனைந்து, புழுத்து, முளைத்து, எலி பாதி... பெருச்சாளி பாதி என விரயமாகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்து முடித்த மாதிரி தெரியவில்லை. 'எலி தின்கிற தானியங்களை ஏழைகளுக்காவது இலவசமாக கொடுங்கள். பாவம் மக்கள் பசியாறட்டும்’ என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், பிரதமர் சிங்கோ, இலவசம், மானியம் இரண்டும்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் இரண்டு முக்கிய காரணிகள் என்று சொல்லி, விவசாயிகள் பயன்படுத்தி வந்த உர மானியத்தை எடுத்தார். பூசல் மானியத்தைத் தூக்கினார். வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் மானியத்தைத் தடுத்தார்.

ஆனாலும் என்ன ஆனது? ஏற்றுமதி இறங்கி வருகிறது. இறக்குமதி எகிறி வருகிறது. வர்த்தகப் பற்றாக்குறை விரிந்துகொண்டே போகிறது. இந்த இக்கட்டான நிலையில்  1.25 லட்சம் கோடி மானியம் என்பது சாத்தியமா? இதுவும் பொய் கணக்குதான். 3 லட்சம் கோடி தேவை. ஆளுக்கு 5 கிலோ. 80 கோடி மக்களுக்கு 4 கோடி டன் ஒரு மாதத்திற்கு, ஆக வருஷத்திற்கு 48 கோடி டன். சற்று ஏறக்குறைய 50 கோடி டன் கொள்முதல் செய்யவேண்டும். உணவு தானியங்கள் வாங்கி,  விநியோகம் செய்ய 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். நாடு இன்று இருக்கும் நிலையில் இது நடக்கிற காரியமா...?

ஆக, உற்பத்திக்கும் வழி வகுக்காமல், செலவுக்கும் வழி தெரியாமல், வாக்குச்சீட்டு ஒன்றை மனதில்கொண்டு போடப்பட்ட இந்தச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டமல்ல, உணவு உற்பத்தி ஒழிப்புத் திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

-பசுமை நம்பி

நன்றி: நாணயம் விகடன்,  28-07-2013

3 கருத்துகள்:

Kannaiyan Subramaniam சொன்னது…

I welcome this ordinance. Yes, there are serious flaws. This is the first ever act which makes food as an entitlement under law. Irresponsible opposition also responsible for the UPA to take the ordinance route.Let us hope for a better debate in the parliament.
S.Kannaiyan
09444989543

st.mannan சொன்னது…

இதும் ஏமாற்றும் வித்தைதானா......கடவுளே ..கடவுளே.

M.Perumal,B.B.E.,M.Sc. சொன்னது…

Peoples are not aware of their rights. Yet to be peoples are living like slavers. First we will give awareness to the people about "you are a slavers.

கருத்துரையிடுக