இந்திய வரலாற்றில்
எத்தனையோ ஒப்பந்தங்கள் உருவாகி இருக்கின்றன. 'ஏ.கே.அந்தோணி
- சி.கே.
ஜானு ஒப்பந்தம்’ அவை
அனைத்திலும் இருந்து வேறுபட்டது. தனிச் சிறப்பு கொண்டது!
ஒரு
மாநிலத்தின் உச்ச அதிகாரப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதல்வருக்கும் காட்டின் கடைசிக்
குடிசையில் வாழும் ஒரு பழங்குடி
பெண்ணுக்கும் இடையில் உருவான ஒப்பந்தம் அது. சுமார் 25 ஆயிரம் ஆதிவாசி மக்களுக்கு
நிலம் பெற்றுத்தந்து மண்ணுரிமையை உறுதி செய்த ஜானு,
கேரளப்
பழங்குடிகளின் சமரசமற்ற தலைவி!
''திருவனந்தபுரத்தில்
உள்ள கேரள அரசின் தலைமைச்
செயலகத்தை சுற்றி 1,000
குடிசைகள் அமைத்து அங்கேயே தங்கிவிட்டோம். போலீஸின் அடக்கு
முறைகளுக்கு அஞ்சவில்லை. 48 நாட்
கள் போராட்டத்துக்குப் பிறகு
ஏ.கே.அந்தோணி அந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதித்தார். அடக்கி
ஒடுக்கப் பட்ட கேரளப்
பழங்குடிகளின் வரலாற்றில் அது ஒரு முக்கியமான நாள். ஆனால், எங்கள் போராட் டம் அத்துடன் முடியவில்லை.
இன்றும் தொடர்கிறது'' உறுதியான
குரலில் பேசும்
ஜானு, 'முத்தங்கா
போராட்டம்’ நடத்தியபோது, இந்தியாவே திரும்பிப் பார்த்தது.
ஏ.கே.அந்தோணி அரசு அறிவித்தபடி அனைத்து
பழங்குடிகளுக்கும் நிலம் வழங்காததை அடுத்து,
2003-ல் முத்தங்கா காட்டுப் பகுதியைக் கைப்பற்றி குடிசை
அமைத்தார்கள் பழங் குடி
மக்கள். 'இனிமேல்
இது தான் எங்கள் நிலம்’ என
போர்முழக்கம் செய்தார்கள்.
பழங்குடிகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சி களும் ஓரணியில் ஒன்றுசேர்ந்தன.
போலீஸ் உள்ளே நுழைந்து அடித்து நொறுக் கியது. ஜானு உள்பட சுமார் 3,000
பழங்குடி மக்கள் கொடூரமாகச் சித்ரவதைக்கு உள்ளாகினர். 'உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது’ என்று அப்போது ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம்
எழுதினார் அருந்ததி ராய். அண்மையில் 'பூவுலகின்
நண்பர்கள்’ நடத்திய பெண்கள்
தினவிழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ஜானுவைச் சந்தித்தேன்.
''நான்
படிக்கவில்லை. ஏழு வயதிலேயே விறகு பொறுக்கவும் கூலி வேலைக்கும் செல்லத் துவங்கினேன்.
பிறகு, தையல்
வேலை பார்த்தேன். எந்த வேலையுமே
மூன்று வேளை கஞ்சிக்கு உத்தரவாதம் இல்லாதது. விவரம் தெரியத் தெரிய,
அரசியல் கட்சிகள் எங்கள் ஆதிவாசி மக்களை ஏய்த்து பிழைப்பது புரிந்தது.
ஊர், ஊராக
அலைந்து திரிந்து எங்கள் மக்களைப் போராட அணி திரட்டினேன். 1992-ல் 'ஆதிவாசிகளின் விகாசன பிரவர்த் தக சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினோம்.
எத்தனையோ போராட்டங்கள், கைதுகளுக்குப் பிறகு
'கோத்ர
மகா சபை’யைத்
தொடங்கினோம். எங்கள் மக்கள் எல்லோரும் வந்து சேரத் துவங்கினார்கள். அந்தச் சபை
நடத்திய போராட்டங்கள் மூலம் இதுவரை 25
ஆயிரம் பழங்குடி மக்களுக்கு நிலம் பெற்றுத் தந்துள்ளோம்.
எல்லோரும் இங்கு வந்துவிட்டால்
தங்களுக்கு போஸ்டர் ஒட்டவும், கொடி
தூக்கவும் ஆள் இல்லாமல் போய்விடும்
என்று பயந்த அரசியல் கட்சிகள், உடனே
தங்கள் கட்சிகளில் பழங்குடிகள்
பிரிவை ஆரம்பித்தார்கள். சி.பி.எம்.,
சி.பி.ஐ., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்துக் கட்சிகளும்
இப்படிச் செய்தன.
இந்த மக்கள் எல்லாம் ஒரே
அணியில் ஒன்றாக இருந்திருந்தால்,
பிரச்னை முடிந்திருக்கும். அப்படி முடிந்துவிட்டால், இவர்கள் எதை சொல்லி ஓட்டுக் கேட்டு
வருவார்கள்? அதனால் ஆதிவாசிகளைப்
பிரித்து வைத்து பிரச்னை முடியாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படியே தங்கள் கட்சியில் சங்கம்
வைத்திருந்தாலும் மக்கள் சும்மா இருக்க
மாட்டார்கள். அதனால் பெயரளவுக்கு போராட்டங்களை நடத்தினார்கள்.
இதில் எந்தக் கட்சியும்
விதிவிலக்கு இல்லை!''
''ஆனால், நீங்களும் சில காலம் சி.பி.எம்-மில் இருந்தீர்கள் இல்லையா?''
''இருந்தேன்.
பழங்குடி மக்களுக்கு ஏதேனும் நன்மை
நடக்கும் என நம்பினேன். ஆனால்,
அவர்களிடம் எந்தக் கோரிக்கை வைத்தாலும், 'மேலிடத்தில் கேட்க வேண்டும்’ என்பது மட்டுமே பதிலாக வரும். அவர்கள் ஆட்சியில்
இருக்கும்போதும் அதே பதில்தான். காங்கிரஸுக்கும் சி.பி.எம்-முக்கும் போட்டி இருப்பதைப்
போல வெளியே தெரியும். ஆனால், பழங்குடி
மக்களை ஏமாற்றுவதில்தான் அவர்களுக்கிடையே போட்டி இருந்தது. இந்த உண்மையை
உணர்ந்தவுடன், அங்கிருந்து
வெளியேறிவிட்டேன்!''
'' 'வனத்துக்குள் வனத்துறையை அனுமதிப்பது இல்லை. வனவிலங்கு சரணாலயத்தை
எதிர்க்கிறீர்கள்’ என வளர்ச்சிக்கு
எதிரானவர்களாக உங்களைச் சித்திரிக்கிறார்களே..?''
''பழங்குடி
மக்களாகிய எங்களுக்கு காசு, பணம் சம்பாதித்துவைக்க
ஆசை இல்லை.ஆனால், இந்த
மண்ணின் மீதான உரிமை நாங்கள்
சாகும் வரையிலும் எங்களிடம் இருக்கவேண்டும். எனக்கு ஒரு ஏக்கர்
நிலம் இருக்கிறது.
அது என் சொந்த நிலம் இல்லை. என் வாழ்க்கை முடிந்த பிறகு அது வேறு ஒருவரின் நிலம். ஆனால், வாழும் வரையிலும் அந்த மண்ணின் மீதான
எனது உரிமையை
நான் ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன். நாங்கள் இந்த வனத்தையும், இதில் உள்ள மரங்களையும் தெய்வம் என
மதிக்கிறோம்.
வனத் துறையோ, மரம் வெட்டிகளுக்குத்
துணை போகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சட்டப் பாதுகாப்புடன் மரம் கடத்துவதற்காக
உருவாக்கப்பட்ட வனத் துறை, இன்று
வரை அதைத்தான்
செய்துகொண்டு இருக்கிறது. அதேபோல வன விலங்கு சரணாலயம் என்று சொன்னவுடன், நகர்ப்புறவாசிகள் நல்ல விஷயம் என்று
நினைக்கிறார்கள். ஆனால், இப்படி
ஓர் அறிவிப்பை செய்து உலக வங்கியிடம் இருந்து கோடிக்கோடியாகப் பணம் பெறுகிறார்கள். அப்படி வாங்கிய பணத்தில் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு எனச்
செலவிடப்படுவதே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் எத்தனை யானைகள் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றன
என்பது எங்களுக்குத் தெரியும்.
சுற்றுலா என்ற பெயரில் கூட்டம்,
கூட்டமாக மக்களை வனத்துக்குள் அனுமதித்து... அவர்கள் குடித்துவிட்டுக்
கும்மாளம் போடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் யானைகளுக்கு
உப்புப் போட்ட உணவு வைத்து
விரட்டுகிறார்கள். உண்மையில் இந்தச் சட்டங்களும் சரணாலயங்களும் வருவதற்கு முன்பு
ஆயிரம், ஆயிரம்
ஆண்டுகளாக பழங்குடிகளாகிய நாங்கள் இந்த வனத்தில்தான் வாழ்ந்துவருகிறோம். எந்தக்
காலத்திலும் ஒரு பழங்குடி, தந்தத்துக்காக
யானையை வேட்டையாடியது இல்லை. காய்ந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பார்களே தவிர, ஒரு காலத்திலும் பழங்குடி மக்கள் பச்சை
மரங்களை வெட்டியது
இல்லை. இவற்றைச் செய்யும் வனத்துறைதான் வனத்தின் முதல் எதிரியே தவிர...
பழங்குடிகள் அல்ல!''
''பழங்குடிகளின்
போராட்டத்துக்கு மற்ற மக்கள் ஆதரவு தருகிறார்களா?''
''ஆதரவு
தர வேண்டும். ஏனென்றால் நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. இந்த அறையில்
ஏ.சி. ஓடுகிறது என்றால், இதற்குத் தேவையான
சக்தி எங்கள் வனத்தில் இருந்துதான் உருவாகிவருகிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கும் எங்கோ
இருக்கும் காட்டு மரங்களுக்கும் தொடர்பு
இருக்கிறது. இந்த இயற்கைதான் காட்டையும் நாட்டையும்
இணைக்கிறது. அதனால், எல்லா மக்களும்
இந்தப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும். ஏனெனில் இது காட்டுக்கான போராட்டம் மாத்திரம்
அல்ல; நாட்டுக்கான
போராட்டமும்கூட!''
''தமிழ்நாட்டு
பழங்குடி மக்கள் மத்தியிலும் வேலை பார்த்திருக்கிறீர்கள்தானே?''
''ஆம்.
நீலகிரி, திண்டுக்கல்
பகுதியில் உள்ள பழங்குடி மக்களிடம்
கொஞ்ச காலம் வேலை பார்த்துள்ளேன். என் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலப் பறிமுதல் வழக்கு
ஒன்று நிலுவையில் உள்ளது. கேரளாவில்
பழங்குடி மக்களை அரசியல் கட்சிகள் பிளவுபடுத்தி வைத்துள்ளன என்றால், தமிழ்நாட்டுப்
பழங்குடி மக்களை என்.ஜி.ஓ-க்கள் பிடித்துவைத்துள்ளன. பழங்குடிகளின் வறுமையை வைத்து
புராஜெக்ட் போட்டு சம்பாதிக்கிறார்கள்.
உணர்வுடன் போராட வருபவர்களை உடனுக்குடன் கண்டறிந்து, 'நாங்கள் சம்பளம் தருகிறோம்’ என்று அழைத்து அத்தோடு காலி
செய்துவிடுகிறார்கள். சம்பளம்
வாங்கிக் கொண்டு போராட முடியாது. போராட்டம் என்பது உணர்வுடன், மக்களிடம் இருந்து வரவேண்டும். என்.ஜி.ஓ-க்களை
அப்புறப்படுத்தும் வரையிலும் அது
முடியாது!''
''நீங்கள்
ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?''
''இதற்கு
முன்பு திருமணம் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. இப்போது எனக்குக் கொஞ்சம்
வயதாகிவிட்டது... கொஞ்சம். (வெட்கத்துடன்
சிரிக்கிறார்). என் போராட்ட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இதை
எல்லாம் புரிந்துகொண்ட
ஓர் இணை கிடைத்தால் பார்க்கலாம்!''
''செக்கோட்டை என்ற சின்னஞ்சிறிய ஆதிவாசிக் கிராமத்தில் பிறந்த நீங்கள்
படிக்கவில்லை.
உங்களிடம் பணம் இல்லை.
உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இவற்றை ஒரு தடையாக என்றைக்கேனும்
நினைத்தது உண்டா?
''இல்லை.
போராட வேண்டும் என்ற உறுதியான எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அது உண்மையாக இருக்க
வேண்டும். அவ்வளவு தான். அது மட்டும்
இருந்துவிட்டால் போதும். பணம்,
படிப்பு, மொழி
எதுவும் தேவை இல்லை. அவற்றை
ஒரு காரணமாகச் சொல்வது,
ஏமாற்று வேலை!''
சந்திப்பு: பாரதி
தம்பி,
படம்:
சொ.பாலசுப்ரமணியன்
நன்றி: ஆனந்தவிகடன், 27-03-13
1 கருத்து:
கேரளப் பழங்குடியினப் போராளி ஜானு அவர்களைப் பற்றி நானும் படித்திருக்கின்றேன் அவர்கள் சொன்னது போல் ngo க்கள் என்று சொல்லக்கூடிய தொண்டு நிறுவனங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் இந்திய திருநாட்டின் மக்களை பிச்சைகாரர்கள் போன்று காட்டுவது பரிதாபமாக படங்கள் போடுவது என்று இவர்கள் செய்யும் கேவலங்களை சொல்லி மாளாது. நன்கொடை வாங்கி இவர்களை சேவை செய்ய யார் அழைத்தார்கள் சேவை செய்ய வேண்டுமெனில் இவர்களது சொந்த பணத்தில் செய்ய வேண்டியது தானே. எங்களுக்கு பணம் கொடுத்தால் வரி விளக்கு பெறலாம் என்று ஏமாற்றும் தில்லாலங்கடி ஆட்டக்காரர்கள் அரசுக்கு வரி கட்டினால் அரசு மக்களுக்கு திட்டங்கள் போடுமே திட்ட செலவுக்கு தானே வரி கொடுக்கின்றோம் இந்த வரிப் பணத்தை அரசுக்கு (மக்களுக்கு தான்யா திட்டம் ) செல்ல விடாமல் இவர்கள் கொள்ளையடிக்க நாம் கொடுக்க வேண்டுமாம் அரசுக்கு கொடுக்கக் கூடாதாம் இவர்களை முழுமையாக ஒழித்தால் அன்றி விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியாது பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது கருப்பு பணத்தைக் கண்டறிய முடியாது
மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது
கருத்துரையிடுக