உங்கள்
முன்பும் உலகத்தின் முன்பும் இந்த அங்கீகாரத்தால் பணிவு பெற்றவளாக; 2004ன் அமைதிக்கான நோபல் விருது
பெற்றவர் என்கிற கௌரவத்தால் மேன்மை பெற்றவளாக நிற்கிறேன்.
நோபல்
விருது பெறும் முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்கிற அடிப்படையில் கென்ய மக்களின், ஆப்ரிக்க மக்களின் சார்பிலும்
உலகத்தின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களும் பெண்
குழந்தைகளும் இப்போது அதிகம் என் கவனத்தில் இருக்கிறார்கள். தங்கள் குரல்களை
உயர்த்தவும் தலைமைத்துவத்தில் மேலும் அதிக இடத்தை கோரவும் இது அவர்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இளைஞர்களும் முதியவர்களுமான எமது ஆண்களுக்கும் இந்த அங்கீகாரம் பெருமையைத் தரும்.
ஒரு தாயாக, இந்த விருது இளைஞர்களுக்கு தரக்கூடிய
உந்துதலை நான் போற்றுகிறேன். தங்களது கனவுகளை துரத்துவதற்கு இளைஞர்கள் இதை
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த
விருது எனக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இது
உலகெங்கும் உள்ள எண்ணிலடங்காத தனிநபர்களின், அமைப்புகளின் உழைப்பிற்கான
அங்கீகாரம். அமைதியாக, பல சமயங்களில் அங்கீகாரங்கள்
எதுவுமின்றி அவர்கள் சுற்றுச்சூழலை காக்கவும், ஜனநாயகத்தை மேம்படுத்தவும், மனித உரிமைகளை வென்றெடுக்கடுக்கவும்
ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு
செய்வதன் மூலம் அவர்கள் சமாதானத்தின் விதைகளை தூவுகிறார்கள். அவர்களும் இன்று
பெருமைப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். இந்த விருது தங்களுக்கான அங்கீகாரம்
என்று கருதும் எல்லோருக்கும் நான் கூற விரும்புவது, உங்கள் பணியை மேம்படுத்தவும் இந்த
உலகம் நம் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் இதை
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த
அங்கீகாரம் எனது குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, என்னோடு இணைந்து பணிபுரிபவர்களுக்கு
மற்றும் உலகெங்கும் உள்ள ஆதரவாளர்களுக்கும் உரித்தானது. கடுமையான சூழலில்
நிறைவேற்றப்பட்ட எங்களது பணி தழைக்கவும், எமது பார்வை செழுமையடையவும் அவர்கள்
நிறைய உதவியிருக்கிறார்கள். ஜனநாயகத்தை வென்றெடுக்க முடியும் என்றும் அவர்களது சூழல் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்
என்றும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த கென்ய மக்களுக்கும் நான் நன்றியுடையவளாக
இருக்கிறேன். இந்த ஆதரவின் காரணமாகவே இன்று இந்த கௌரவத்தை ஏற்றுக்கொள்ள நான் இங்கே
நின்று கொண்டிருக்கிறேன்.
முன்பே
நோபல் பரிசு வென்ற அதிபர்கள் நெல்சன் மண்டேலா மற்றும் F.W . டி கிளர்க், மதபோதகர் டெஸ்மண்ட் டுட்டு, ஆல்பர்ட் லுதுலி, அன்வர் எல் சதத், ஐநா அவையின் பொதுச் செயலாளர் கோபி
அன்னான் உள்ளிட்ட ஆப்ரிக்கர்களின் வரிசையில் நானும் இடம் பெறுவது மிகுந்த
பெருமைக்குரியது.
எல்லா
இடங்களிலும் உள்ள ஆப்ரிக்கர்கள் இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எனக்கு தெரியும்.
எனது சக ஆப்ரிக்க சகோதர, சகோதரிகளே! மக்கள்
மீதான நமது கடமையுணர்வை
இன்னும் தீவிரப்படுத்தவும், சச்சரவுகளையும்
வறுமையையும் குறைக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் நாம் இதை
பயன்படுத்திக் கொள்வோம். ஜனநாயக ஆட்சிமுறையை தழுவுவோம், மனித உரிமைகள் காப்போம். நமது சுற்றுச்சூழலை
காப்போம். இந்த பணிக்கு நாம் தயாராகவே இருக்கிறோம். நமது பெரும்பாலான
பிரச்னைகளுக்கான தீர்வு நம்மிடமிருந்துதான் வர வேண்டும் என்று நான் எப்போதுமே நம்புகிறேன்.
இந்த
வருடத்தின் நோபல் விருதின் மூலம், நார்வே நாட்டு நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழலையும் மற்றும் அதற்கும் ஜனநாயகம், அமைதி ஆகியவற்றுக்கும் இருக்கும்
தொடர்பையும் இந்த உலகத்தின் முன்பு வைத்திருக்கிறது. இந்த முற்போக்கு பார்வைக்காக
நான் மிகவும் நன்றியுடையவளாக இருக்கிறேன். தொடர்ச்சியான வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் அமைதி ஆகியவை பிரிக்க
முடியாதவை என்று அங்கீகரிப்பது, இன்றைய
சூழலுக்கேற்ற முக்கியமான ஒரு கருத்தாக்கம். இந்த இணைப்புகளை உருவாக்குவதும்
சாத்தியப்படுத்துவதுமே கடந்த 30 ஆண்டுகளில் எங்களது பணியாக இருந்திருக்கிறது.
கென்யாவின்
கிராமப்புற பகுதிகளில் எனது சிறுவயது இயற்கை சார்ந்த அனுபவங்களே
எனக்கு ஓரளவுக்கு உத்வேகத்தை அளித்திருக்கின்றன. கென்யாவில், அமெரிக்காவில், ஜெர்மனியில் எனக்கு கிடைத்த கல்வி
அந்த அனுபவங்களை செழுமைப்படுத்தியிருக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு, காடு இருந்த
இடங்களில் பல்லுயிரியத்தை அழிக்கும், தண்ணீர்
வளத்தை சீரழிக்கும், வணிகரீதியிலான தோட்டங்கள் உருவாவதை
நான் வளரும் போது பார்க்க முடிந்தது.
சீமாட்டிகளே,கனவான்களே,
1977ல்
நான் பசுமை வெளி இயக்கத்தை (Green Belt
Movement) தொடங்கியபோது, கிராமப்புறப் பெண்களின் தேவைகளாக
இருந்த விறகுகள், சுத்தமான குடிநீர், சரிவிகித உணவு, உறைவிடம், வருமானம் ஆகியவற்றின் பற்றாக்குறைகளை
சமாளிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
ஆப்ரிக்கா
எங்கிலும் பெண்களே குடும்பத்துக்கு முக்கியமான பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
நிலத்தை உழுவது, குடும்பத்துக்கு உணவு உற்பத்தி
செய்வது என்று முக்கியமான பங்கு வகித்தார்கள். அதன் விளைவாக, குடும்பம் தழைக்க உதவும் இயற்கை
ஆதாரங்கள் அழிந்து போகுமளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் போது பெண்கள்தான் அதை
முதலில் உணர்கிறார்கள்.
எங்களுடன் இணைந்து பணிபுரிந்த பெண்கள், முன்பு போல அடிப்படை தேவைகளை கூட
நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்றனர். இதற்கு காரணம், அவர்களது சுற்றுச்சூழல் தொடந்து மோசமாக
பாதிக்கப்படுவதுடன் உணவுப்பயிர்களுக்கு மாற்றாக வணிகரீதியிலான விவசாயத்தின்
அறிமுகமும்தான். சிறு விவசாயிகளின் விளைபொருட்களின் வணிகத்தையும்,
ஏற்றுமதியையும் சர்வதேச வணிக நிறுவனங்களே
தீர்மானிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான தேவையான வருமானம் நிச்சயமில்லை.
நமது சுற்றுச்சூழல் அழியும்போது, அது சுரண்டப்படும்போது அது சரிவர
கையாளப்படாத போது நமது வாழ்க்கைத்தரத்தை, நமது
வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை சேதப்படுத்துகிறோம்.
பெண்களால் அடையாளப்படுத்தப்பட்ட சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற
இயற்கையான தேர்வாக மரம் வளர்ப்பு இருந்தது. தவிர மரம் வளர்ப்பு எளிமையான, நிறைவேற்றக்கூடிய விரைவில்
பலனளிக்க்ககூடிய ஒரு செயல்பாடாக இருந்தது. இதனால் அர்ப்பணிப்பும் ஆர்வமும்
குறையாமல் இருந்தது.
குழந்தைகளுக்கான கல்வித் தேவைகளை, குடும்பத் தேவைகளை சந்திக்க உதவும்
வருமானம், விறகு, உணவு, உறைவிடம் எல்லாம் தந்த சுமார் 30
மில்லியன் மரங்களை நாங்கள் எல்லோரும் சேர்ந்து நட்டோம். இந்த செயல்பாடு வேலை
வாய்ப்புகளை உருவாக்குவதோடு நீர்தேக்கு பரப்பையும் நிலத்தையும் மேம்படுத்த உதவும்.
தங்களது ஈடுபாட்டின் மூலம் பெண்கள் தங்களது வாழ்க்கையில் குறிப்பாக சமூக மற்றும்
பொருளாதார தளங்களில் ஒரு சக்தியைப் பெற்றார்கள். குடும்பத்தில் முக்கியத்துவம்
கிடைத்தது. இந்த பணி தொடர்கிறது.
ஆரம்பத்தில் இது கடினமான பணியாக இருந்தது. காரணம் அவர்கள் ஏழைகள்
என்பதால் அவர்களிடம் முதலீடு மட்டுமல்ல; சவால்களை எதிர்கொள்ளக்கூடிய அறிவும் திறமையும் கூட இல்லை என்று
வரலாற்று ரீதியாகவே நமது மக்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது பிரச்னைகளுக்கான தீர்வுகள்
வெளியிலிருந்துதான் வர வேண்டும் என்று அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தவிர, சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக
இருந்தால்தான், அது சரியாக பராமரிக்கப்பட்டால்தான் அவர்களுடைய தேவைகள் முழுமையாக
நிறைவேறும் என்பதை பெண்கள் உணரவில்லை. சுற்றுச்சூழல் முறையாக
பராமரிக்கப்படாவிட்டால், பற்றாக்குறையாக
இருக்கும் வளங்களை பங்கிட்டுக்கொள்வதில் உருவாகும் பிரச்னைகள் வறுமையிலும், சில
சமயங்களில் போராட்டத்திலும் முடியும் என்பதை
அவர்கள் அறியவில்லை. சர்வதேச பொருளாதார நடைமுறைகளில் உள்ள நியாயமற்ற தன்மைகளையும்
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
சமூகங்கள் இந்த இணைப்புகளைப் புரிந்து கொள்ள நாங்கள் ஒரு
குடிமக்கள் கல்வி திட்டத்தை வடிவமைத்தோம். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்களது
பிரச்னைகளை அடையாளப்படுத்தவும் அதற்கான காரணிகளை கண்டறியவும் தீர்வுகளை வகுக்கவும்
வழிவகை செய்யப்பட்டது. பிறகு அவர்களுடைய சொந்த
நடவடிக்கைகளுக்கும் சூழலிலும் சமூகத்திலும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கும்
தொடர்புகளை உருவாக்குகிறார்கள். ஊழல், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்
எதிரான வன்முறை, குடும்ப அமைப்பின் சிதைவுகள், கலாச்சாரங்களிலும் சமூகங்களிலும்
சச்சரவுகள் என்று நமது உலகத்தை நோக்கி பல பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அவர்கள்
அறிந்து கொள்கிறார்கள். மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம்
ரசாயனங்களின், போதை மருந்துகளின் தவறான பயன்பாடு பற்றி அவர்கள்
தெரிந்து கொள்கிறார்கள். நிரந்தர தீர்வு இல்லாத மோசமான நோய்கள் இருக்கின்றன. எய்ட்ஸ், மலேரியா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு
தொடர்புடைய நோய்கள் குறிப்பாக கவலைப்பட வேண்டியவை.
சூழலைப் பொறுத்தவரையில் சுற்றுச்சூழலுக்கும் சமூகங்களுக்கும் கேடு
விளைவிக்கக்கூடிய பல மனித செயல்பாடுகள் அவர்களுக்கு தெரிய வருகின்றன. கொடுமையான
வறுமைக்கு காரணமான காட்டை அழித்தல், தட்பவெட்ப நிலையின்மை, மண்-நீர் மாசு
உள்ளிட்ட பல செயல்பாடுகளை பற்றி அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள்
அவர்களே தீர்வுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்கிறார்கள்.
தங்களுடைய உள்ளார்ந்த ஆற்றலை
உணர்ந்து செயலின்மையை கடந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். தாங்கள் தழைக்க உதவும்
சூழலுக்கு அவர்களே முதன்மையான
பாதுகாப்பாளர்களும் பயனாளர்களும் என்பதை அவர்கள் உணரத்தொடங்குகிறார்கள்.
அரசாங்கங்களை பொறுப்பாளர்களாக
கேள்விக்குட்படுத்தும் அதே வேளையில், தங்களுடைய உறவு நிலைகளில் தங்களது
தலைமைகளிடமிருந்து எதிர்பார்க்கும் நீதி, நேர்மை நம்பிக்கை போன்ற பண்புகளை
அவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஒட்டுமொத்த சமூகங்களும் புரிந்துகொள்கின்றன.
ஆரம்பத்தில் பசுமைவெளி இயக்கத்தின் மரம்
வளர்ப்பு செயல்பாடுகள் ஜனநாயகம், அமைதி போன்ற பிரச்னைகளை கையிலெடுக்காவிட்டாலும்,
ஜனநாயக வெளி இல்லாமல் சுற்றுச்சூழலின் பொறுப்பான நிர்வாகம் சாத்தியமில்லை என்பது
தெளிவானது. இதனாலேயே
கென்யாவில் மரம் என்பது ஜனநாயக போராட்டத்தின் குறியீடு ஆனது. பரவலாக இருந்த அதிகார
துஷ்பிரயோகம், ஊழல், சுற்றுச்சூழல் நிர்வாக முறைகேடுகள் போன்றவற்றை எதிர்க்க
குடிமக்கள் திரண்டார்கள். ‘மனசாட்சியின் கைதிகளை’ விடுதலை செய்ய கோரியும்
ஜனநாயகத்துக்கு மாறக் கோரியும் நைரோபியின் உஹுரு பூங்காவிலும் தேசத்தின் பல
இடங்களிலும் சமாதான மரங்கள் நடப்பட்டன.
ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் திரள்வதற்கும், நடவடிக்கை
எடுப்பதற்கும் மாற்றத்தை சாத்தியப்படுத்தவும் பசுமைவெளி இயக்கம்
சாத்தியப்படுத்தியது. பயம், நிராதரவான உணர்வு எல்லாவற்றையும் கடந்து
அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை தற்காத்துக்கொள்ள மக்கள் கற்றுக்கொண்டார்கள்.
கென்யாவில் நடந்த இனப்பிரச்னைகளின் போது
பசுமை வெளி இயக்கம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரண்டு சமூகங்களுக்கிடையில்
சமாதான மரங்களை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டிய நேரத்தில் மரம் அமைதிக்கான,
தீர்வுக்கான ஒரு குறியீடாகவும் இருந்தது. கென்ய நாட்டு அரசியல் சாசனம் மீண்டும்
வரையப்பட்டபோது, அமைதியின் கலாச்சாரத்தை முன்னெடுக்க இது போன்ற பல மரங்கள்
நாடெங்கிலும் நடப்பட்டன. மரத்தை அமைதியின் குறியீடாக பயன்படுத்துவது என்பது பரவலான
ஒரு ஆப்ரிக்க மரபு. உதாரணமாக, கிகியுவைச் சேர்ந்த முதியவர்கள் கையில் திகி
மரத்தாலான கைத்தடியை வைத்திருப்பார்கள். சர்ச்சையில் ஈடுபடும் இரண்டு
குழுக்களிடையே அதை வைத்தால் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு சமாதானமாக போக
வேண்டும். ஆப்ரிக்காவில் பல சமூகங்களில் இது போன்ற மரபுகள் உண்டு.
சூழலை பாதுகாப்பதற்கும் சமாதானத்தின் மரபை வளர்ப்பதற்கும்
பங்களித்த கலாச்சார தொன்மத்தில் இது போன்ற வழக்கங்கள் இருந்தன. இந்த கலாச்சாரங்கள் அழிந்து புதிய மதிப்பீடுகள் அறிமுகமாகும்போது, உள்ளூர்
பல்லுயிரியம் மதிக்கப்படுவதோ, பாதுகாக்கப்படுவதோ இல்லை. இதன் காரணமாக அவை அழிந்து
மறைந்து போகின்றன. இதற்காகவே, பசுமைவெளி இயக்கம், கலாச்சார பல்லுயிரியம் என்கிற
கருத்தாக்கத்தை, குறிப்பாக உள்நாட்டு விதைகள் மற்றும் மருத்துவத் தாவரங்களை மனதில்
கொண்டு ஆய்வு செய்கிறது.
சூழலியல் கேடுகளின் காரணிகளை நாங்கள் ஒன்றொன்றாக
புரிந்துகொண்டபோது, நல்ல நிர்வாகத்தின் தேவையை உணர்ந்தோம். சொல்லப்போனால் ஒரு
நாட்டிலுள்ள சுற்றுச்சூழலின் நிலை, அந்த நாட்டின் நிர்வாகத்தை பிரதிபலிக்கும்.
நல்ல நிர்வாகம் இல்லாமல், அமைதி இருக்க முடியாது. மோசமான நிர்வாகங்கள் உள்ள
நாடுகளில் பல போராட்டங்கள் இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க சரியான சட்டங்கள்
இருக்காது.
பசுமைவெளி இயக்கம், பிற சமூக இயக்கங்கள் மற்றும் கென்ய பொதுமக்களின்
வீரமும், பொறுமையும் அமைதியான முறையில் ஜனநாயகத்துக்கு வழி வகை செய்து, உறுதியான குடிமை சமூகத்துக்கு அடிக்கல்
நாட்டியது.
தோழர்களே, சீமாட்டிகளே, கனவான்களே
நாங்கள் இந்த பணியை தொடங்கி 30 வருடங்கள்
நிறைவடைந்துவிட்டன.
சூழலை, சமூகங்களை மாசுபடுத்தும் செயல்பாடுகள்
தொடர்கின்றன.
மனிதகுலம் தனது
வாழ்வாதாரத்தை மிரட்டுவதை நிறுத்த, நமது சிந்தனையில் மாற்றம் கோரும் சவாலை நாம்
இப்போது எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த உலகத்தின் காயங்களை ஆற்ற, அதன் மூலம்
நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டிருக்கும் காயங்களை ஆற்ற, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும்
அதன் வேறுபாடுகள் அழகியல், அதிசயத்துடன் அணைத்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
நமது பரிணாம
வளர்ச்சியை பகிர்ந்துகொண்ட வாழ்வின் பெரிய குடும்பத்தோடு நாம் மீண்டும் நமது
தகைமையுணர்வை மீட்டுக்கொள்வதற்கான தேவையை உணரும் போது இது நிகழும்.
வரலாற்றின் போக்கில், மனிதம் புதிய விழிப்புணர்வு
நிலையின் இன்னொரு தளத்துக்கு செல்ல வேண்டிய, மேம்பட்ட அறத்தை நோக்கி நகர வேண்டிய நேரம்
ஒன்று வரும். நமது பயங்களைத் துறந்து ஒருவருக்கொருவர் நம்பிக்கையை அளிக்க வேண்டிய
நேரம்.
அந்த நேரம் இதுதான்.
அமைதியின் புரிதலை இன்னும் விரிவாக்க வேண்டும் என்று உலகிற்கு
சவால் விடுத்திருக்கிறது நார்வே நாட்டின் நோபல் பரிசுக் குழு. சரிசமமான வளர்ச்சி
இல்லாமல் அமைதி இருக்க முடியாது. ஜனநாயகமான ஒரு தளத்தில் சுற்றுச்சூழலின் சரியான
நிர்வாகம் இல்லாமல் வளர்ச்சி இருக்க முடியாது. இந்த மாற்றம் ஒரு கருத்தாக்கம்.
அதன் நேரம் வந்துவிட்டது.
தங்களது குடிமக்களின் கற்பனை திறனும் ஆற்றலும்
செழுமைப்படுத்த உதவும் நியாயமான, நேர்மையான சமூகங்களை உருவாக்குமாறு ஜனநாயக தளங்களை
விரிவாக்குமாறு நான் எல்லா தலைவர்களையும், குறிப்பாக ஆப்பிரிக்க தலைவர்களை
கேட்டுக்கொள்கிறேன். கல்வி, ஆற்றல்கள், அனுபவங்கள், அதிகாரத்தைகூட பெறுவதற்கும்
அனுபவிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்கும் நம்மிலிருப்பவர்கள்தான் அடுத்த தலைமுறை
தலைமைக்கான முன்னுதாரனமாக திகழ வேண்டும். இந்த நேரத்தில், என்னுடன் நோபல் பரிசு
வென்றிருக்கும் ஆங் சான் சூ கியின் சுதந்திரத்திற்கும் நான் கோரிக்கை
விடுக்கிறேன். அவர் பர்மிய மக்களுக்கான - உலக மக்களுக்கான ஜனநாயகம் மற்றும்
அமைதிக்கான தனது பணியை தொடர வேண்டும்.
குடிமைச் சமூகங்களின் அரசியல், பொருளாதார,
சமூக வாழ்க்கையில் கலாச்சாரத்துக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆப்ரிக்காவின்
வளர்ச்சியில் தவறிப்போன இணைப்பாக கலாச்சாரம் இருக்கக்கூடும். கலாச்சாரம் என்பது
இயக்க ரீதியிலானது, காலத்தோடு தன்னை மாற்றிக்கொள்வது. பெண்களின் பிறப்புறுப்பை
அறுப்பது போன்ற பழைய பின்னோக்கிய மரபுகளை தூக்கியெறிந்து நல்ல, உபயோகமான விஷயங்களை
அணைத்துக்கொள்வது.
ஆப்ரிக்கர்கள் குறிப்பாக தங்களது கலாச்சாரத்தின் சிறந்த கூறுகளை
மறுபடியும்
கண்டறிய வேண்டும். அவற்றை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் ஒரு தகைமையுணர்வை,
அடையாளத்தை, தன்னம்பிக்கையை தங்களுக்கே
அளித்துக் கொள்வார்கள்.
சீமாட்டிகளே, கனவான்களே
குடிமைச் சமூகத்துக்கும், அடிப்படை இயக்கங்களுக்கும் உந்துதலைத்
தந்து அவர்களை மாற்றத்துக்கான ஊக்க சக்தியாக செயலாற்ற செய்ய வேண்டிய தேவையும்
இருக்கிறது. சமூகத்தில் கட்டுப்பாடுகளையும் சமநிலைகளையும் பராமரிக்கும்
பொறுப்புள்ள குடிமக்கள் திரளை கட்டமைப்பதில் சமூக அமைப்புகளுக்கு உள்ள பங்கை
அரசாங்கங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்.
எந்த நிலையிலும் லாப நோக்கங்களை விட பொருளாதார நியாயம், சூழலியல்
நேர்மை, நெறி ஆகியவற்றை அமல்படுத்துவது மிக
முக்கியம் என்பதை தொழில் மற்றும் சர்வதேச அமைப்புகள் உணர வேண்டும். இப்போது
நிலவிக்கொண்டிருக்கும் சர்வதேச ஏற்றத்தாழ்வுகளுக்கும் நுகர்வு கலாச்சாரங்களுக்கும் நாம் விலையாக
நமது சுற்றுச்சூழலையும், சமாதானமான ஒத்திசைந்த வாழ்வையும் பலி
கொடுத்துக்
கொண்டிருக்கிறோம். தேர்வு நம்முடையதே.
தங்களுடைய நீண்டகால கனவுகளை நிறைவேற்றும்
செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் இளைஞர்களை
கேட்டுக்கொள்கிறேன். நல்ல எதிர்காலத்தை வடிவமைக்க தேவையான கற்பனை வளமும் ஆற்றலும்
அவர்களிடம் இருக்கிறது. இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் உங்கள்
சமூகங்களுக்கும் இந்த உலகத்துக்குமான பரிசு. நீங்கள்தான் எங்களது நம்பிக்கையும்
எதிர்காலமும்.
பசுமைவெளி இயக்கம் முன்னிறுத்தும்
வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறை ஆப்ரிக்காவிலும் பிற பகுதிகளிலும்
பின்பற்றலாம். இந்த செயல்பாடுகளின் தொடர்ச்சிக்காகவும் விரிவாக்கத்துக்காகவுமே
நான் வாங்காரி மாத்தாய் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறேன். நிறைய
சாதித்திருக்கிறோம், ஆனாலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
மேதமைகளே,
சீமாட்டிகளே, கனவான்களே
எங்களது வீட்டின் அருகில் இருந்த
ஒடையிலிருந்து அம்மாவுக்காக தண்ணிர் பிடித்துக்கொண்டு வரும் சிறுவயது அனுபவத்தை
நினைவுக்கூர்ந்து இந்த உரையை முடிக்க நினைக்கிறேன். அப்போதெல்லாம் நேரடியாக நான்
ஓடையிலிருந்து தண்ணீர் குடித்திருக்கிறேன். அரோரூட் இலைகளுக்கிடையில்
விளையாடியவாறு, மணிகள் என்று நினைத்து தவளைகளைகளின் முட்டைகளை எடுக்க முயற்சி
செய்வேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது சிறு விரல்களை அதன் மீது வைக்கும்
போது அது உடைந்து விடும். பிறகு ஆயிரக்கணக்கில் தவளைக்குஞ்சுகளைப் பார்ப்பேன்.
கறுப்பு நிறத்தில், உற்சாகத்தோடு செம்மண் மீதிருந்த தெளிவான தண்ணீரின் ஊடாக அவை
கடந்து செல்லும். எனது பெற்றோர்களிடமிருந்து நான் பெற்ற உலகம் இதுதான்.
இன்று சுமார் 50 வருடங்கள் கழித்து,
ஓடைகள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பிடிக்க பெண்கள் வெகுதூரம் நடக்க
வேண்டியிருக்கிறது. அப்படி பிடிக்கும் தண்ணீரும் எப்போதும் சுத்தமாக இருப்பதில்லை.
குழந்தைகளுக்கும் தாங்கள் எதைத் தொலைத்தொம் என்று தெரியவில்லை. தவளைக் குஞ்சுகளின்
வீடுகளை மீட்டுருவாக்கி நமது குழந்தைகளுக்கு
எழிலும் அதிசயமும் நிறைந்த உலகத்தை மீட்டுத் தருவதுதான் நம்முன் இருக்கும்
மிகப்பெரிய சவால்.
மிக்க நன்றி.
(தமிழ் மொழி பெயர்ப்பு: கவிதா முரளிதரன்)
பூவுலகு மார்ச்-ஏப்ரல் 2013 இதழில் வெளியான கட்டுரை
2 கருத்துகள்:
வாங்கரி மாத்தாயின் நோபல் உரை மூன்றாம் உலக நாடுகளின் சோகத்தைப் பிழிந்தெடுக்கின்றது. 'இருண்ட கண்டத்தின்' கனிமவளக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும்
தவிப்பின் அலறல் ..எட்வர்ட் மூங்கின் மௌன "அலறல்" ஓவியத்தைப்போன்ற எச்சரிக்கைப்படிமம்...சூழலியல் மூலம் சமாதானத்தை நிலைநிறுத்த, ஆதாரமான தொன்மங்களை மரபிலிருந்து மீட்டெடுக்கும் மூன்றாம் உலகப்பெண்ணியத்தின் ஆதிக்குரல்!...அவருக்குக் கிடைத்த அங்கீகாரம் அவர் சொன்னது போல இதன் முன்னோடிகள் தொடங்கி, போராடிவரும் பலருக்குமான பகிர்வுதான்....தோழி கவிதா முரளிதரன் வாங்கரியின் ஆன்மாவை ஒற்றியெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்! அருமை!
"தவளைக் குஞ்சுகளின் வீடுகளை மீட்டுருவாக்கி நமது குழந்தைகளுக்கு எழிலும் அதிசயமும் நிறைந்த உலகத்தை மீட்டுத் தருவதுதான் நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால்."
கருத்துரையிடுக