புதன், மார்ச் 13, 2013

வெட்டப்படும் மரங்கள்.. அலறும் விலங்குகள்! --- சிக்கலில் ஈஷா


"மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இருப்பது நெருக்கமான உறவு. இந்த உறவை யாரும் பிரிக்கவோ அல்லது இந்த உறவு இல்லாமலோ மனிதன் வாழவே முடியாது’ என்று சொன்னவர் ஜக்கி வாசுதேவ். அப்படிப்பட்ட மரங்களை வைத்தே ஜக்கி வாசுதேவ் மீது இப்போது சர்ச்சை மேகம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பொதுநல மனுவின் மூலம் அதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்துள்ளார். 
அவரிடம் இதுபற்றிக் கேட்டோம். ''1990-களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து, இக்கரை பொலுவம்பட்டியில் மிகச் சிறிய அளவில் ஜெகதீஷ் என்பவர் ஆசிரமம் தொடங்கினார். பிறகு அவர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன பிறகு, அவருடைய ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். அடர்ந்த வனப் பகுதியை மொட்டையடித்து, ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட பரப்பளவு 37,424.32 சதுர மீட்டர். 2005 முதல் இந்த நிமிடம் வரை படுவேகமாக 55,944.82 சதுர மீட்டரில் கட்டடங்களைக் கட்டி உள்ளனர். இதுபோன்ற அடர்ந்த வனப் பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

மாவட்ட கலெக்டரும் மாவட்ட வனச்சரக அதிகாரியும் நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்து ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவை அனைத்தும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் பார்வைக்கு வைக்கப்படும். அதன்பிறகு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தி, அதில்தான் ஒப்புதல் வழங்கப்படும். இதில், ஏதாவது ஒன்றில் பிசகினால்கூட வனப் பகுதிக்குள் ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது.
ஆனால், ஈஷா தியான மையம் எந்த அனுமதியும் பெறாமல், கட்டடம், விளையாட்டு மைதானம், செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளை செய்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சத்குரு என்ன நினைத்தாரோ? ஏற்​கெனவே கட்டியுள்ள கட்டடங்களுக்கும், புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஆய்வில் இறங்கிய வனச்சரக அலுவலகம் தனது அறிக்கையில், 'ஈஷா தியான மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடங்களைக்கொண்ட அடர்ந்த வனப் பகுதி. அங்கு கட்டடங்கள் கட்டுவது விதிமுறைகளுக்கு மாறானது. எனவே, உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அறிக்கை அளித்தது. அத்துடன் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் ஈஷா தியான மையத்துக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது.
மாறாகக் கட்டடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்த படிவத்தைத் திரும்பக் பெற்றுக்​கொள்கிறோம் என்று ஈஷா தியான மையம் மனுச் செய்கிறது. விதிமுறைகளைப் பின்பற்றச் சொன்னால், அதைச் செய்யாமல், அனுமதி கேட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தீர்வா?'' என்று கேட்டார்.
வெற்றிச்செல்வனின் மனுவைப் பரிசீலித்த, உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர், விதிமுறை மீறிய கட்டுமானங்கள் பற்றி உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கும் ஈஷா தியான மையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதேபோல, சிவராத்திரி விழா நடத்துவதற்கும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கடைசி நேரத்தில் மகாசிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு  மாவட்டக் கலெக்டரும், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும், வனத் துறை அதிகாரிகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, ஈஷா மைய மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ், ''நாட்டில் பசுமை விழிப்பு உணர்வை ஏற்படுத்த, ஈஷா சார்பாக இதுவரை ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டும் வருகிறோம். பசுமைப் புரட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஈஷாவுக்கு விருதுகளை வழங்கி இருக்கிறது. 1993-ல் கட்டடம் கட்ட ஆரம்பித்தபோது இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இல்லை. அதன்பிறகு, விதிமுறைகள் இயற்றப்பட்டதும் இதுகுறித்து நோட்டீஸ் வந்தது. கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்திவிட்டோம். புதிய விதிமுறைப்படி கட்டடம் கட்டவும் திருத்தங்கள் செய்வதற்கும் விண்ணப்பிக்க உள்ளோம். எங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.
சிவராத்திரி முடிந்த பிறகும் தூக்கத்தைத் தொலைத்​திருக்கிறது ஈஷா.
ஜோ.ஸ்டாலின்
நன்றி: ஜூனியர்விகடன், 17-03-2013


தொடர்புடைய பதிவு: அத்தனைக்கும் ஆசைப்படாதே…. ..

1 கருத்து:

வித்யாஷ‌ங்கர் சொன்னது…

kanimozhi help him in out of the way

கருத்துரையிடுக