நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 'மூன்று மணி நேர மின்வெட்டு' என ஆரம்பித்தது... தற்போது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என்பதையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதுமே இத்தகையத் தாறுமாறான மின்வெட்டு நீடிப்பதால்... விவசாயம், வணிக நிறுவனங்கள், வீடுகள் என எந்தப் பயன்பாட்டுக்குமே மின்சாரம் சரிவரக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது! இந்தக் கொடுஞ்சூழலுக்கு நடுவேயும், 'சூரியன் இருக்க... கவலை எதற்கு!' என்றபடி சிலர் தெம்போடு நடைபோடுகிறார்கள்.
ஆம், கொஞ்சம் முன்யோசனையோடு, முன்கூட்டியே 'மாற்று சக்தி'யைப் பற்றி யோசித்த இவர்கள், சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதால்... மின்வெட்டைப் பற்றிக் கண்டு கொள்வதுமில்லை. கவலைப்படுவதுமில்லை!
மின் வெட்டு இல்லவே இல்லை!
இப்படி மின்வெட்டு கவலையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் வீடுகள், நிறுவனங்கள் என்றிருப்பவற்றுள்... திருவண்ணாமலை மாவட்டம், வேடியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள 'அருணாசலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி'யும் ஒன்று! ஆம்... முழுக்க முழுக்க சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது இப்பள்ளிக்கூடம்!
''இந்தப் பகுதியில இருக்கற குழந்தைகளுக்காக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேந்த 'ஆல்வின் ஜாஸ்வர்’ன்றவர் 99-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கூடத்தை 40 மாணவர்களோட ஆரம்பிச்சார். சில காரணங்களால் அவரால சரிவர நடத்த முடியல. அதனால, 2005-ம் வருஷம் எங்கிட்ட பொறுப்பைக் கொடுத்தார். இப்போ சுத்துப்பட்டு பதினோரு கிராமத்தைச் சேர்ந்த 210 குழந்தைங்க படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லாதவங்க... வறுமை நிலையில் உள்ள பெற்றோரோட குழந்தைகள், இப்படிப்பட்ட குழந்தைகள்தான் எல்லாருமே. அதனால, வெளிநாடுகள்ல இருந்து கிடைக்கற உதவிகளை வெச்சு இலவசமா கல்வி கொடுத்துட்டிருக்கோம்.
பாடங்களுக்கு அடுத்தபடியா கம்ப்யூட்டர், டி.வி. மூலமா நிறைய சொல்லிக் கொடுக்கிறோம். அதுக்கு, 'கரன்ட் கட்’ பெரிய பிரச்னையா இருந்துச்சு. அப்போதான், 'சோலார் பவர் யூனிட்’ போடலாம்னு முடிவு பண்ணி, 2009-ம் வருஷம் அதை அமைச்சோம். அதுக்குப் பிறகு பள்ளிக்கூடத்துல கரன்ட் கட் பிரச்னையே இல்லை'' என்று முன்னுரை தந்த பள்ளி நிர்வாகி மதன், தொடர்ந்தார்.
தமிழகத்தில் சாதகமானச் சூழல் !
''தமிழ்நாட்டில் சோலார் பவருக்கு தட்பவெப்ப நிலை சாதகமா இருக்கு. டிசம்பர் மாசத்துல மட்டும்தான் மின் உற்பத்தி பாதியா குறையும். மத்த மாசங்கள்ல முழு உற்பத்தி இருக்கும். இங்க, 28 சோலார் பேனல்கள் வெச்சு, அது மூலமா ஒரு மணி நேரத்துக்கு ரெண்டரை கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி பண்றோம். அதை 'பேட்டரி’யில் சார்ஜ் பண்ணி பயன்படுத்துறோம்.
'லேப்’ல இருக்குற கம்ப்யூட்டர்கள்ல 'சி.ஆர்.டி. மானிட்டர்’கள்தான் இருக்கு. அதனால அதுக்கும், ஜெராக்ஸ் மெஷினுக்கும் மட்டும் அதிக அழுத்தம் உள்ள கரன்ட் தேவைப்படும். அந்த ரெண்டுக்கு மட்டும் மின்வாரியம் கொடுக்குற மின்சாரத்தைப் பயன்படுத்துறோம். மத்த எல்லாத்துக்குமே சோலார் கரன்ட்தான்.
குறைந்த அழுத்த மின் சாதனங்கள் !
சோலார் கரன்டை சிக்கனமா பயன்படுத்தணுங்கிறதுக்காக... 23 வாட்ஸ் டியூப் லைட், 49 வாட்ஸ் ஃபேன்னு குறைஞ்ச அழுத்தத்துல இயங்குற சாதனங்களைத்தான் பயன்படுத்துறோம். மொத்தம் 24 டியூப் லைட், 24 ஃபேன், 6 சி.எப்.எல்.பல்பு, ஒரு ஆர்.ஓ சிஸ்டம், ஒரு மோட்டார் (ஒன்றரை ஹெச்.பி), 3 கம்ப்யூட்டர், 2 பிரிண்டர், ஒரு எலக்டிரிக் பெல்னு மொத்தப் பள்ளிக்கூடமுமே சோலார் கரன்ட்லதான் இயங்குது.
எப்பவாவது சோலார் கரன்ட் உற்பத்தி குறைஞ்சா... மின் வாரிய மின்சாரம் மூலமா பேட்டரிகளை சார்ஜ் பண்ணிக்குவோம். அதனால கரன்ட் பில் எங்களுக்கு ரொம்பக் குறைவாத்தான் ஆகும். எல்லாத்துக்கும் மேல... தடையில்லா மின்சார சப்ளை இருக்குது. இதுக்கு 'ஜெல்’ பேட்டரிகளைப் பயன்படுத்தினா, பத்து வருஷம் வரைக்கும் தாங்கும். சாதாரண பேட்டரிகளா இருந்தா... 5 வருஷம்தான் தாங்கும். அப்பப்போ பேட்டரிகளை மட்டும்தான் கவனிச்சு பராமரிக்க வேண்டியிருக்கும். வேற எந்த வேலையும் கிடையாது.
குறைவான செலவுதான் !
நாங்க அமைக்கிறப்போ, '80 வாட்ஸ்’ பேனல் ஒண்ணோட விலை 15 ஆயிரம் ரூபாய். அதனால எங்களுக்கு மொத்தம் ரெண்டரை கிலோ வாட் அளவுக்கு சோலார் யூனிட் அமைக்க, ஏழே முக்கால் லட்சம் ரூபாய் செலவாச்சு. இப்போ, 150 வாட்ஸ் பேனலே 7 ஆயிரத்து 500 ரூபாய்தான். அதேமாதிரி பேட்டரிகள்லயும் பல ரகங்கள் இருக்கு. இப்போ, ஆறு லட்ச ரூபாய் செலவுலயே, பத்து வருஷம் தாங்கக்கூடிய ஜெல் பேட்டரிகளை வெச்சு, 3 கிலோ வாட் அளவுக்கு உற்பத்தி பண்ற யூனிட் அமைச்சுடலாம். 65 ஆயிரம் ரூபாய்ல வீடுகளுக்கு அமைச்சுட முடியும். இதுக்கு மானியமும் கிடைக்குது. ஆனா, நாங்க இதுவரை மானியம் வாங்கறதுக்கு முயற்சிக்கவே இல்லை'' என்று பெருமை பொங்க தகவல்களைத் தந்தார் மதன்!
தொடர்புக்கு, மதன்,
செல்போன்: 99524-33997.
செல்போன்: 99524-33997.
உபத்திரவம் செய்யும் அரசாங்கம்!
அரசாங்கமே சூரியசக்தி மின்சாரத்தைப் பற்றி தற்போது பெரிய அளவில் பிரசாரத்தைத் தொடர ஆரம்பித்துள்ளது. ஆனால், அதிகார வர்க்கம் மட்டும் இன்னமும், பழையத் தூக்கத்திலிருந்து விழிக்காமலே இருப்பதுதான் கொடுமை. இதற்கு உதாரணம்... மதனுக்கு நேர்ந்த அவதிதான்.
''ஆரம்பத்துல நாங்க சோலார் யூனிட் போட்டுட்டு, முறையா மின்வாரியத்துக்கு தகவலும் கொடுத்துட்டோம். பயன்பாடு இல்லாததால, தொடர்ந்து அடிப்படைக் கட்டணம் மட்டுமே கட்டிக்கிட்டு இருந்தோம். ஆனா, நாங்க கொடுத்த தகவல அவங்க சரியாக கவனிக்காம அசட்டையா இருந்துட்டு, கடைசியில... 'அதெப்படி இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவு குறைச்சலா மின் கட்டணம் வரும். சோலார் மின்சாரம்னு சொல்லி யார ஏமாத்தறீங்க. மின்சாரத்தைத் திருடிட்டீங்க’னு எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 12 ஆயிரம் ரூபாய் 'ஃபைன்’ போட்டு கனெக்ஷனையும் கட் பண்ணிட்டாங்க. அப்பறம் பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் அது முடிவுக்கு வந்துச்சு.
மத்த நாடுகள்ல எல்லாம் மின் உற்பத்தி பண்றவங்களுக்கு ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்து அரசாங்கமே உதவி பண்ணுது. இங்க உபத்திரவம்தான் பண்ணுது அரசாங்கம். பேனல்களுக்கும், பேட்டரிகளுக்கும் போடுற வரிகளைக் குறைச்சாலே... சோலார் மின்சார உற்பத்திக்கான சாதனங்கள வாங்கற செலவு கணிசமா குறைஞ்சுடும். மக்களும் அதிக அளவுல ஆர்வம் காட்டி, இதை அமைக்க முன்வருவாங்க'' என்று தன் அனுபவத்தைச் சொன்னார் மதன்.
-காசி. வேம்பையன்
படங்கள்: க. முரளி
நன்றி: பசுமைவிகடன், 10-12-2012
5 கருத்துகள்:
Indian Oil Corporation has installed solar panels in Rajashthan. Mr. Sarangi, who is one of the lead engineer in that program mentioned that the dust settling on the panel is a serious issue. For example, he mentioned that the available power, increases by 500 kW after water wash. But, they don't have enough water to wash (Rajashthan). Do you see such problems?
"சோலார் மின்சாரம்னு சொல்லி யார ஏமாத்தறீங்க. மின்சாரத்தைத் திருடிட்டீங்க’னு எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 12 ஆயிரம் ரூபாய் 'ஃபைன்’ போட்டு கனெக்ஷனையும் கட் பண்ணிட்டாங்க"
நானும் சோலார் பேனல் அமைக்க ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்தேன். மேற்கண்ட வரிகளைப் படித்ததும், அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டேன்.
தேவையான பகிர்வு... நன்றி...
பகிர்கிறேன்...
நல்லபதிவு!பயனுள்ளது!!!
பயனுள்ள பகிர்வு. நன்றி.
கருத்துரையிடுக