சனி, நவம்பர் 24, 2012

ஒற்றைக்கொம்பன்களுக்கு எமன்கள் யார்?

ந்திய ஒற்றைக்கொம்பன்களுக்கு இது போதாத காலம். நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில், காண்டாமிருகங்கள் வாழும் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் மட்டும் கடந்த ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 101 காண்டாமிருகங்கள் இறந்திருக்கின்றன. ஒரு பக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வேட்டையாடிகள்... சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு காண்டாமிருகம் இறந்திருக்கிறது.

 உலகில் தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து காண்டாமிருகங்கள் அதிகம் வாழ்வது இந்தியாவில்தான். சுமார் 2,300 காண்டாமிருகங்கள் இங்கு இருக்கின்றன. உலகில் காணப்படும் இரண்டு பெரிய வகை காண்டாமிருகங்களில் இந்திய ஒற்றைக்கொம்பன்களும் ஒன்று. ஒருகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவை வாழ்ந்து இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் தொடங்கி சாத்தான்குளம் வரை இவற்றின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அஸ்ஸாம், மேற்கு வங்க வனங்களோடு இந்தியாவில் இவற்றின் எல்லை முடிந்துவிட்டது. காரணம், வேட்டை.
உலகின் பழமையான விலங்கினங்களில் ஒன்று காண்டாமிருகம். ஆகையால், உலகின் பல்வேறு நாடுகளிலும் காண்டாமிருகம் தொடர்பாக ஏராளமான புனைவுகள் உண்டு... அதன் சிறுநீரில் தொடங்கி ரத்தம், இறைச்சி, கண், எலும்புகள் என்று அதன் ஒவ்வோர் உறுப்பு தொடர்பாகவும். இந்த நம்பிக்கைகளின் உச்சம், காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் மருத்துவத் தன்மை.

பிறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் காண்டாமிருகங்களுக்குக் கொம்பு வெளிப்படும். பொதுவாக, ஓர் அடி நீளம் வரை இது வளரும். கெராட்டின் எனப்படும் இழைப்புரதங்களால் ஆன இந்தக் கொம்பில் மருத்துவக் குணங்கள் ஏதும் இல்லை என்று சொல்கிறது விஞ்ஞான உலகம். ஆனால், பாரம்பரிய மருத்துவர்களோ காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரைக்கும் எல்லா வியாதிகளுக்கும் இது சிறந்த நிவாரணி என்று சொல்லிக் காசாக்குகிறார்கள். முக்கியமாக, நீடித்த பாலியல் உறவுக்கு!

எல்லாப் பாரம்பரிய மருந்துகளுக்கும்போல், காண்டாமிருகக் கொம்பு மருந்துத் தயாரிப்புக்கும் சீன மருத்துவம்தான் தாய். சீன அரசே இதை ஊக்குவிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாரம்பரிய சீன மருத்துவ வளர்ச்சிக்கு என்று சீன அரசு ஒதுக்கீடு செய்த 130 மில்லியன் டாலர் உதவி இந்த விஷயத்தில் அரசின் ஆதரவை வெளிப்படையாகவே காட்டியது. உலகிலேயே காண்டாமிருகக் கொம்பு அதிகம் இறக்குமதி செய்யப்படும் சீனாவில் இருந்து வெவ்வேறு வடிவங்களில், காண்டாமிருகக் கொம்பு பயணிக்கிறது. இதற்கான முக்கியமான சந்தை, வியட்நாம்.

வன உயிரினக் கடத்தல் என்பது ஒரு பெரிய வியாபாரம். போதை மருந்துக் கடத்தலுக்கு அடுத்து, உலகில் அதிக அளவில் பணம் கொழிப்பது இதில்தான். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தத் தொழிலில் உச்சத்தில் விலை போகும் பொருள்... காண்டாமிருகக் கொம்பு. ஒரு முழு போலார் கரடியின் விலை 6 லட்சம். சைபீரியப் புலியின் விலை 35 லட்சம். ஆனால், காண்டாமிருகக் கொம்பின் விலையோ ஒரு கிலோ   30 லட்சம். ஆகையால், காண்டாமிருக வேட்டைக்காக எவ்வளவு செலவு  செய்யவும் கள்ளச் சந்தைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அடிப்படையில், மிக சுவாரஸ்யமான ஒரு விலங்கு காண்டாமிருகம். அதன் பிரமாண்ட உருவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மந்தமான விலங்கு. ஆனால், ஓட ஆரம்பித்தால், காடே புழுதி பறக்கும். யோசித்துப் பாருங்கள்... 2,000 கிலோ எடை உள்ள ஒரு மிருகம் 50 கி.மீ. வேகத்தில் ஒடும் காட்சியை... அட்டகாசமாக நீந்தும். புல்தான் பிடித்தமான உணவு. தனிமை விரும்பியான இது, பகல் முழுதும் நீர்நிலைகளில் புரண்டு கழித்துவிட்டு, இரவிலும் அதிகாலையிலும் மேயும். ஒரு காண்டாமிருகம் தன் ஆளுமையைப் பொறுத்து இரண்டு முதல் எட்டு சதுர கி.மீ. வரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அபாரமான மோப்ப சக்தியும் செவித்திறனும் உண்டு. ஆனால், பார்வைத் திறன் குறைவு. சில அடி தொலைவுக்கு அப்பால் உள்ள பொருட்கள்கூட இதன் கண்களுக்குத் தெரியாது. எங்கே முதன்முதலில் சாணி போடுகிறதோ, அதே இடத்தில்தான் திரும்பத் திரும்ப சாணி போடும். சாணி போடும் இடத்தை நெருங்கி விட்டதை மோப்ப சக்தியின் மூலம் நீண்ட தூரத்துக்கு முன்னரே தெரிந்துகொண்டு, அந்த இடத்தைப் பின்னோக்கி நடந்தே சென்றடையும். கிட்டத்தட்ட ஒரு மக்கு குண்டான் என்று நாம் இதைச் சித்திரப்படுத்திக்கொள்ளலாம். இந்தப் பண்புகள்தான் காண்டாமிருக வேட்டையை எளிமையானதாக்கிவிடுகிறது.
இந்தியாவில் 102 ஆண்டுகளுக்கு முன்பே காண்டாமிருக வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கீரி முடி, பாம்புத் தோல், புலி - சிறுத்தைப் பல், எலும்பு, தோல், யானைத் தந்தம், மான் கொம்பு என்று விரியும் இந்திய வன உயிர் கடத்தல் சந்தையில் காண்டாமிருகக் கொம்புக்குத்தான் முக்கியமான இடம்.

பொதுவாக, காண்டாமிருக வேட்டை மூன்று விதங்களில் நடக்கிறது. குழிப் பறிப்பு, மின் தாக்குதல், துப்பாக்கிச்சூடு. கால் நூற்றாண்டுக்கு முன்வரை குழிப் பறிப்பு, மின் தாக்குதல் முறைகளையே அதிகம் இந்திய வேட்டையாடிகள் கையாண்டனர். இப்போது அதிகரித்து இருக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக வேலையைச் சீக்கிரமாக முடிக்கத் துப்பாக்கிச் சூட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். முதல் தோட்டா காண்டாமிருகத்தின் காலுக்கு, அடுத்து மார்புக்கு, பிறகு தலைக்கு. பின்னர், கோடரியால் கொம்பை வெட்டி எடுப்பது இந்திய பாணி. ஆப்பிரிக்காவில் இந்த வேட்டை இன்னும் கொஞ்சம் நவீனமானது. பதிவு எண் அழிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் வந்து, துப்பாக்கி மூலம் உயிர்க்கொல்லி ஊசி மருந்தைச் செலுத்தி, காண்டாமிருகத்தைச் செயல் இழக்கவைத்து, தானியங்கி ரம்பம் மூலம் கொம்புகளை அறுத்துச் செல்வது. ''எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்... அவ்வளவு வருமானம் இதில் இருக்கிறது'' என்கிறார்கள் வேட்டையாடிகள்.

முன்பெல்லாம் ஏழ்மை - வறுமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பழங்குடிகளும் ஏழைத் தொழிலாளர்களும்தான் காண்டாமிருக வேட்டையில் முன் நிற்பார்கள். காண்டாமிருக மருந்தும் பாரம்பரிய நாட்டு வைத்தியர்களிடம்தான் கிடைக்கும். ஆனால், இப்போது முழுக்க ஆயுதப் பயிற்சி எடுத்த தொழில் முறை வேட்டையாடிகளும் இணையம் வழியே தொழில் நடத்தும் கனவான்களும் புகுந்து விளையாடும் தொழில் ஆகிவிட்டது இது.

''வன உயிரினக் கடத்தல் தடுக்க முடியாதது அல்ல; ஆனால், இதற்குப் பின் பெரும் அரசியல் இருக்கிறது. உலகெங்கும் பயங்கரவாத மற்றும் பாதாள உலக அரசியலுக்குச் செல்லும் பணத்தில் பெரும் பகுதி இதன் மூலம் செல்கிறது. முக்கியமாக, இந்தக் கடத்தலுக்கு அடி விழுந்தால், ஆயுதச் சந்தைக்கு அடி விழும். நடக்கிற கதையா இது?'' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

காஸிரங்கா பூங்காவில், காண்டாமிருக வேட்டையாடிகளை எதிர்கொள்ள ஏற்கெனவே 152 தடுப்பு முகாம்கள் உள்ளன. 562 பேர் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சமீபத்திய இழப்புகளுக்குப் பிறகு, மேலும் ஆள் எடுக்கவும் ராணுவப் படையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் கண்காணிப்புப் பணி யில் இலகுரக விமானங்களைப் பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஆனால், அரசியல் பலம் பெற்ற வேட்டையாடிகள் சிரிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட ஒரு பிரமாண்ட உயிரினம், இப்போது மனிதன் முன் உயிர்ப்பிச்சை கேட்டு நிற்கிறது!

-சமஸ்
நன்றி: ஆனந்தவிகடன், 28.11.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக