சனி, நவம்பர் 10, 2012

புறக்கடை வழியாகப் பாயும் பி.டி. எமன்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் பிரதமர்!


'இந்தியாவில் மரபணு மாற்றுப்பயிர்கள் தேவையில்லை. இருக்கின்ற பாரம்பரிய விதைகளை வைத்தே, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நம்மால் உற்பத்தி செய்ய முடியும்' என்று ஓயாமல் முழங்கி வருகின்றனர்... இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும்! இதையெல்லாம் ஆழமாக அலசி ஆராய்ந்து... 'மரபணு மாற்றுப்பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. களஆய்வுகள் செய்வதையும் நிறுத்த வேண்டும்’ என, தன்னுடைய பரிந்துரையில் அழுத்தம் கொடுத்து மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கிறது வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு! இதையடுத்து... விவசாயிகள், நுகர்வோர், இயற்கை ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், அது நீண்டநாட்களுக்கு நீடிக்காது என்பதற்கான அறிகுறிகள், தற்போது பலமாகவே தெரிய ஆரம்பித்துவிட்டன!

'அமெரிக்க அதிபர்களை, தனது பேன்ட் பையில் வைத்திருக்கிறது’ என்று அமெரிக்காவின் பிரபல 'வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையால் புகழப்பட்ட மான்சான்டோ நிறுவனம்... 'நீங்கள் சொல்வதைச் சொல்லிக் கொண்டே இருங்கள்... நாங்கள் செய்வதைச் செய்துகொண்டே இருக்கிறோம்’ என்றபடி, முன்பைவிட அதிதீவிரமாக இந்தியாவில் சுழல ஆரம்பித்திருக்கிறது... கையில் பி.டி. உணவுப்பயிர் விதைகளை வைத்துக் கொண்டு! இந்திய அரசியல், இந்திய அரசு மற்றும் அதிகார வர்க்கத்தில் இருக்கும் 'விசுவாசி'கள் பலரும் இதற்கு பலமாக ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர்.
பி.டி. கத்திரிக்காய் தொடர்பாக இந்திய விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்திய அன்றையச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பி.டி. கத்திரி களப்பரிசோதனைக்குத் தற்காலிகத் தடைவிதித்தார். இதற்கே ஆடிப்போனது... மான்சான்டோ நிறுவனம். அடுத்த சில மாதங்களிலேயே... சுற்றுச்சூழல் துறையிலிருந்து தூக்கி வீசப்பட்டுவிட்டார் ஜெய்ராம் ரமேஷ்! இந்தியாவுக்குள் பி.டி பயிர்களை சந்தைப்படுத்த, என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்தான்.

இந்தியாவில் நாடாளுமன்றம்தான் உயர் அதிகாரம் படைத்தது. அத்தகைய அவையிலிருக்கும் காங்கிரஸ், பி.ஜே.பி. என்று பல கட்சி எம்.பி-க்களும் அடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு... 'மரபணு மாற்றுப்பயிர்களுக்கு இந்தியாவில் இடமில்லை’ என்கிற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. கட்சி பேதமில்லாமல் அதிலிருக்கும் அனைத்து உறுப்பினர்களுமே இதை ஆதரித்துள்ளனர். இப்படிப்பட்டச் சூழலில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை மீது, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அதன் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அப்படி விவாதம் நடத்தினால்... காங்கிரஸ், பி.ஜே.பி. என்று எந்தக் கட்சியுமே அறிக்கையை எதிர்த்துப் பேச வழியில்லை. ஆகக்கூடி, பி.டி. விதைகளுக்கு எதிராகத்தான் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம்!

இங்கேதான் பி.டி. விசுவாசிகளின் மூளை பக்காவாக வேலை செய்திருக்கிறது. பி.டி. பயிர்களுக்கு ஆதரவு தருவது ஒன்றையே தன்னுடைய வாழ்நாள் சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சிலர், 'இதை எப்படி தகர்க்கலாம்?’ என யோசித்து... 'பிரதமரின் அறிவியல் ஆலோசனைக்குழு’  என்கிற புதிய அஸ்திரத்தைத் தந்திரமாகக் கையில் எடுத்துள்ளனர்.

பேராசிரியர் ராவ் தலைமையிலான இக்குழுவில், உயிரித்தொழில்நுட்பத் துறையின் செயலாளர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பல துறைகளின் செயலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால், இக்குழுவின் அறிக்கைகள், 'விசுவாசிகளின் குரலாகத்தான் ஒலிக்கும்’ என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அறிக்கை தயாரிப்பு நடந்திருக்கிறது. அதாவது, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை வரிக்கு வரி மறுக்கிறது, இந்த ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள்!

'இப்போதுள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்பக் கண்காணிப்பு அமைப்புகள், கம்பெனிகளுக்குச் சாதகமான முறையில் அமைந்துள்ளன. மேலும் அவை, இன்றையத் தேவைக்கு ஏற்றவைகளாக இல்லை’ என்பது நிலைக்குழுவின் வாதம்.


'இப்போதுள்ள அமைப்புகள் மூலம் அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்றுப்பயிர்... மிகச்சிறப்பான, நல்லவிதமான முடிவுகளைத் தந்துள்ளன’ என்பது அறிவியல் ஆலோசனைக்குழுவின் மறுவாதம். இதன்காரணமாக... மரபணு மாற்றுப்பருத்தியின் தாக்கத்தால் நடந்த தற்கொலைகளையும் ஒட்டுமொத்தமாக மூடி மறைக்கிறது ஆலோசனைக் குழுவின் பரிந்துரை!

'மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு என்பது வெறும் உணர்வுப்பூர்வமான ஒன்றே ஒழிய, அறிவியல் அடிப்படையில் இல்லை. இதை எதிர்க்கும் மக்கள் விவரம் தெரியாமலே எதிர்க்கிறார்கள்’ என்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவையே கேவலப்படுத்தும் வகையில் தனது பரிந்துரையில் கூறியிருக்கிறது ஆலோசனைக்குழு.

அதிக அளவிலான நாடுகள், அதி தீவிரமாக எதிர்க்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தைத் தூக்கிப்பிடிக்கும் இக்குழு, எந்த ஒரு இடத்திலும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் மாற்று வழிகளைப் பற்றி துளிகூட ஆலோசிக்கவில்லை. மேலும், 'தற்போதுள்ள வயல்வெளி சோதனைகளுக்குப் பல மாநிலங்கள் தடைவிதித்துள்ளதும், பி.டி கத்திரிக்குத் தடை விதிக்கப்பட்டதும் விஞ்ஞானிகளை மனதளவில் நிலைகுலையச் செய்துள்ளது. நமது விஞ்ஞானிகளை தனிமைப்படுத்தியுள்ளது' என்றும் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது இக்குழு... பொதுமக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட அக்கறைஇல்லாமல்!

இந்தியா உட்பட நூற்றுக்கும் மேலான நாடுகள் ஒன்றுபட்டு உலக விவசாயம் குறித்து உருவாக்கிய 'வளர்ச்சிக்கான வேளாண் அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கை’யை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கை, 'இயற்கை சார்ந்த விவசாயம்தான் உலக மக்களின் உணவை உத்தரவாதம் செய்யும்; உலகம் சூடாவதைத் தடுக்கும்; மரபணு மாற்றுப்பயிர்கள், உணவு உத்தரவாதத்தை அளிக்காது’ என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த நிலையிலும், அதற்கு முற்றிலும் முரணாக ஒரு அறிக்கையை, விஞ்ஞானிகள் என்கிற போர்வையில் முன் வைக்கிறது ஆலோசனைக்குழு!

ஆக... 'அறிவிப்பு வேறு... நடைமுறை வேறு’ என்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது,  மன்மோகன் சிங்கின் அறிவியல் ஆலோசனைக்குழு. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு... புறக்கடை வழியாக பாயக் காத்திருக்கும் பி.டி. எமனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கிறார் பிரதமர்!

-ஆர். செல்வம்

நன்றி: பசுமைவிகடன், 25-11-2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக