புதன், செப்டம்பர் 12, 2012

கூடங்குளத்தில் நடப்பது என்ன?


கூடங்குளத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களுக்கும், ஆளும் அரசாங்கத்திற்கும் இடையேயான ஒரு யுத்தம். இந்த யுத்தத்தின் மையக் கரு என்னவென்றால்,
 “நாட்டின் வளர்ச்சி பற்றியும், நில, நீர், கடல் வள ஆதாரங்களின் பயன்பாடு பற்றியும் தீர்மானிப்பதில், அவற்றோடு நெருங்கிய தொடர்புடைய மக்களுக்கு உள்ள அதிகாரத்திற்கும், மக்களால் என்றோ ஒரு நாள், ஒரு நபர்-ஒரு வாக்கு முறை முலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கப் பிரதிநிதிகளின் அதிகாரத்திற்கும் உள்ள முடிவெடுக்கும் அரசியல் முரண்பாடாகும்.

இது நாள் வரை, ஏட்டளவில் மட்டுமே பார்த்து படித்து வந்த ஜனநாயகம் (மக்களாட்சி) இன்று உண்மையில் இடிந்தகரை மக்களின் ஒருமித்த சக்தியின் வெளிப்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

“அணு மின்சார மாய வலை” 

ஆளும் அரசாங்கங்களின் பிரதிநிதிகளாக உள்ள பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர், அவரது உத்தரவுக்காக காத்திருந்து செயல்படும் அமைச்சர்கள், அரசின் செயல் இயந்திரங்களான மாவட்ட நிர்வாகம், காவல் துறை என அனைத்து துறைகளும்,.. அது மட்டுமா... அரசின் கொள்கைகளை மக்கள் நலனுக்காக வகுக்கும் அதிகாரமும், பொறுப்பும் கொண்ட சட்டமன்ற எதிர்கட்சிகள் என அனைத்து “ஜனநாயகத்தின் தூண்களும் இன்று கூடங்குளம் அணு உலையை மக்களை பலி கொண்டாவது இயக்கிவிட துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் பின்னணியில், அணு உலையை அமைப்பதிலும், அதன் இயக்கத்திலும் அக்கறை கொண்ட கூலிக்கும், பட்டம், பதவிக்கும் மாரடிக்கும்  “விஞ்ஞானிகளும் தேசியக் கட்சிகளின் கூலிப்படையும் சேர்ந்து கொண்டு அம்மையார் சொன்ன ‘அணு மின்சாரம் என்ற மாய வலையை விரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.  

இந்த மாய வலையில் விவரம் கெட்ட, மக்கள் அரசியல் புரியாத தான்தோன்றிகள் வேண்டுமானால் விழமுடியும்.  இடிந்தகரை மக்கள் போன்று சுய புத்தியால் ஆய்ந்து அறிந்த எவரும் விழமுடியாது.

யாருக்கு உரிமை

தென் தமிழக நிலப்பரப்பிற்கு சொந்தக்காரர்கள் சொல்கிறார்கள் இன்று அணு உலை வேண்டாம் என்று. இதை எங்கோ இருந்து கொண்டு ஆட்சி செய்யும் அதிகார வர்க்கம் தவறு என்றும் அந்த நிலப்பரப்பில் தான் நினைத்ததை செய்ய தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்ற தொனியிலும் செயல்பட்டு வருகின்றது. நீதி மன்றங்களும் இதையே நிலைநாட்டுகின்றன.  இந்த அதிகார வர்க்கங்கள், கடலையும், கடற்கரையையும் காலம், காலமாக மனித வளர்ச்சிக்கு பயன்படுத்தி பாதுகாத்து வரும் மக்களை ஒன்றும் தெரியாத ஏமாளிகள் என்று பட்டம் சூட்டுகின்றன. அதிகார வர்க்கத்தின், குறிப்பாக அரசின் இந்த பொய்ப் பிரச்சாரத்தை தோலுரிக்க எழுந்ததே இடிந்தகரை மக்கள் போராட்டம்.

இன்று வரை, இடிந்தகரை ஊருக்குள் மக்கள் இருக்கும் போது சென்று விளக்கம் சொல்லத் திராணியில்லாத அரச அதிகாரம், மக்கள் முற்றுகைப் போராட்டத்திற்காக கடற்கரையில் குழுமியிருக்கும் போது ஊருக்குள் புகுந்து தேவாலயத்தையும், மக்களின் பொது சொத்துக்களையும் நாசம் செய்துள்ளது.  போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயனைக் கைது செய்துவிட்டால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அதிகார வர்க்கமும், அரசியல் கட்சி அல்லக் கைகளும் கணக்கு போடுகின்றன.


ஆனால், இன்று நடக்கும் யுத்தம் சொல்வது என்ன தெரியுமா? இது மக்கள் அரசியல், மக்கள் அறிவு, மக்கள் பலம். அணு உலை கூடாது என்பது மக்களின் கொள்கை. அணு உலை என்பது அணு குண்டு தயாரித்து புவியை அழிக்கவே பயன்படும் ஒரு தொழில் நுட்பம். அதனால் நீடித்த மின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. மின்சாரம் தயாரிக்க பல வழிகள் உண்டு. ஆனால், தென் தமிழக புவியியற் பரப்பையும், அங்குள்ள வளங்களையும் நீடித்த மனித பயன்பாட்டிற்கு காக்க மக்களால் மட்டுமே முடியும். ஆகவே, கூடங்குளம் வட்டாரப் பகுதி மக்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என்பதே மக்களின் அரசியல். 



இந்த அரசியலை ஏற்காத ஆதிக்க, அதிகார கும்பலே அணு உலை வேண்டும் என்ற அரசியலை செய்து வருகிறது. உதயகுமார், புஷ்பராயன் மற்றும் அவர்களது போராட்டக் குழுவினால் மட்டுமே மக்களின் அரசியலை அதிகார வர்க்கத்திடம் பேசி வாதிட முடியும் என்று மக்கள் நம்பியிருக்கிறார்கள். அவர்களே மக்களின் உண்மையான நண்பர்கள். ஆனால், மத்திய மாநில அரசுகளும், அதன் கைக் கூலிகளும், மக்கள் நண்பர்களுக்கு எந்த அளவுக்கு கொடுமை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து வருகின்றனர். பல அவதூறுகள், இழி சொற்கள் என நெருப்பு வார்த்தைகளை கூறிவருவதோடு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கின்றனர்.

இருப்பினும், நமது மக்கள் நண்பர்கள் மக்களிடமிருந்து பெறும் ஆதரவு சக்தி என்பது மேற்சொன்ன அனைத்து தீய சக்திகளையும் தவிடு பொடியாக்கும் வல்லமை பெற்றது. இந்த மக்கள் சக்தி, இவர்களை வரலாற்று போராளிகளாகவும், சமூகத்தின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற மனிதர்களாகவுமே மாற்றி வருகிறது. இன்று, இடிந்தகரையானது,  மக்கள் நண்பர்கள் துவண்டு விடாதபடி தாங்கிப் பிடிக்கும் பஞ்சு மெத்தையாக விரிந்துள்ளது. இதே பஞ்சு மெத்தை, இரும்புக் கரங்களாகவும் நீண்டு, அணு உலை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்தும்... வெற்றி கிட்டும் வரை...

-கல்பனா சதீஷ்
(kalpsat@yahoo.co.in)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக