சனி, செப்டம்பர் 15, 2012

கூடங்குளம்: தண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...


கூடங்குளத்தின் கடல் ஓரத்தில் நடந்துவந்த போராட்டத்தை, நாடு முழுவதும் பரவ வைத்தது மட்டும்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரே சாதனை. 'ஈரைப் பேன் ஆக்கி பேனைப் பெருமாள் ஆக்குவது’ என்று கிராமத்தில் சொல்வார்கள். போலீஸ் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால், அமைதிப்படுத்துவதை விட தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்பது  ஆட்சியாளர்களுக்கு இன் னமும் தெரியாமல் இருப்பது, தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்!

 கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டி, அதற்கான வேலைகள் தொ​டங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, இதை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் சில நூறுபேர்தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிக மானதைத் தொடர்ந்து, போராட்டத்தில் அதிகம் பேர் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் சாயப் பட்டறைகள், கடலூர் கெமிக்கல் நிறுவனங்கள், திண்​டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றோடு கூடங்குளமும் பேசப்படும் நிலைக்கு வந்தது.

கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிரான பிரசாரங்கள் பெருகின. அது தமிழகத்திலும் பற்றிக்கொண்டது. இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டது. கூடங்குளம் மக்களைச் சந்தித்து அவர்களது பீதியை அதிகப்படுத்தும் அளவிலான வகுப்புகளை அணுமின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.

'அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்’ என்று தொடங்கி 'ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர். தாங்கள், சாவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை கூடங்குளம் மக்கள் உணர ஆரம்பித்தனர். அப்போதுதான், 'கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருமுனைப் பிரசாரம் செய்யத் தொடங்கினனர். மாதத்துக்கு ஒரு கிராமத்தில் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட, பெண்கள் மட்டும் இதில் கலந்துகொள்வது என்று முடிவானது. முதலில் கூடங்குளம்... அடுத்து இடிந்தகரை... கூத்தங்குழி... பெருமணல்... வைராவிக் கிணறு... கூடுதாழை... செட்டிக்குளம் என்று பரவியது. மாதத்துக்கு ஓர் ஊர் என்று இருந்ததை, தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர். இடிந்தகரையில் பந்தல் போட்டு 127 பேர் உட்கார்ந்தனர். அணு உலையை எதிர்க்கும் அமைப்புகளும் வைகோ உள்ளிட்ட ஒருசில அரசியல் தலைவர்கள் மட்டுமே ஆதரித்த நேரத்தில்... இதற்கான எண்ணெய் வார்த்தவர் முதல்வர் ஜெயலலிதா.

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் தூத்துக்குடியில் பேசிய அவர், 'உங்களில் ஒருத்தியாக நான் அங்கேயே வந்து போராடத் தயார்’ என்ற அவருடைய அறிக்கைதான், கூடங்குளம் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து போராட்ட ஆர்வத்தைத் தூண்டியது. 'மக்களின் அச்சத்தைக் களைந்த பிறகுதான் அணு உலைப் பணிகளைத் தொடர வேண்டும்’ என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். போராட் டக்காரர்களை அழைத்துப் பேசினார். அதையே அமைச்சரவைத் தீர்மானமாகவும் ஆக்கினார். டெல்லிப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்​பட்டன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார். 'அணுஉலை ஆபத்தானது. நான் உங்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறிவித்த அவர், 'அணு உலையைத் திறக்க வேண்டும்’ என்று உத்தரவிடும் போதாவது கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களை நேரில் அழைத்து மனமாற்றம் செய்திருக்க வேண்டும். அல்லது அந்தப் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து இருக்க வேண்டும்.
ஓர் ஆண்டு காலமாக கூடங்குளத்தைச் சுற்றி இருக்கும் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் இருப்பது, ஓர் அரசாங்கம் சமாதா னப்படுத்தும் பிரச்னையாகத் தெரியவில்லையா? முதல்வர் செல்லவில்லை... இன்று முதல்வருக்கு அடுத்த நிலை முக்கியஸ்தர்களாகச் சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் அகியோராவது சென்றார்களா? தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருக்கும் தேபேந்திரநாத் சாரங்கிக்கு கூடங்குளம் எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியுமா? சட்டம் ஒழுங்கையும் உளவுத் துறையையும் ஒருசேரக் கவனிக்கும் டி.ஜி.பி. ராமானுஜம் ஒரு முறையாவது அந்தப் பகுதிக்குப் போய் வந்திருப்பாரா? அந்த மக்களைச் சந்தித்து இருப்பாரா? 

அவருடைய போலீஸ் வாழ்க்கை ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில்தான் ஆரம்பித்தது. அந்தப் பாசமாவது இருந்திருக்க வேண்டாமா? காதி கிராமத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒரே ஒரு முறை உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்றார். உதயகுமாரனும் புஷ்பராயனும் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாதது மட்டுமல்ல... அந்தக் கேள்வியைக்கூட உள்வாங்கிக்கொள்ள செந்தூர்பாண்டியனால் முடியவில்லை. தமிழக அரசாங்கம் அமைத்த குழுவினராவது அந்த உண் ணாவிரதப் பந்தலுக்குப் போனார்களா? அணு உலையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

இப்படி எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் ஜெயலலிதா, விவகாரத்தை அடக்குவதற்குத் தேர்ந் தெடுத்த நபர் ராஜேஸ் தாஸ். தென் மண்டல ஐ.ஜி. கேரளாவுக்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்திய தேனி, பெரியகுளம் மக்களைப் பார்த்து, கோப வார்த்தைகளைச் சொல்லிச் சீண்டிவிட்டு, அடிதடிக் கலவரமாக அந்தப் போராட்டத்தை மாற்றியவர். ஒரு ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்கத் தெரியாமல்... தடுத்து... துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேர் கொலையான சம்பவமும் இவரது காலத்தில்தான். இப்போது, அவருக்குக் கூடங்குளம் அசைன்மென்ட். 'ஒழுங்கா இருங்க... இல்லைன்னா உதயகுமாரைத் தூக்கிடுவேன்’ என்று, எந்தப் போலீஸ் அதிகாரியாவது, கொந்தளித்து இருக்கும் மக்கள் முன்னால் சொல்வாரா? ஐ.ஜி. ஓர் இடத்தில் இருந்தாலே, கீழே உள்ள போலீஸ்காரர்கள் துணிச்சலாக அடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே. ஊருக்குள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை சமாதானப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல்... அவர்களைக் கடலுக்குள் விரட்டிவிட்டு... அவர்களுக்கு ஆதரவாக சென்னை தொடங்கி எல்லா இடங்களிலும் போராட்டத்தைப் பரவவிட்டு... அதன்பிறகு, 'மீனவர்கள் மாய வலைகளுக்குள் சிக்க வேண்டாம்’ என்று அறிக்கை விடுவதுதான் ஒரு முதலமைச்சரின் விரைந்து முடிவெடுக்கும் திறனா?

இது ஏதோ ஜெயலலிதாவின் சொந்தப் பிரச்னை என்பது மாதிரி, மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தன் வாய், கண், காது மூன்றையும் மூடிக்கொண்டு விட்டது. உண்ணாவிரதம் இருப்பதும் போராட்டம் நடத்துவதும் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், அந்த மக்கள் கிளப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மத்திய அரசாங்கம்தான். அவர்கள் அமைத்த விசாரணைக் குழுவினரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வரவில்லை. அமைச்சர் நாராயணசாமி மட்டும் தெரியாத்தனமாக ஒரு முறை வந்தார். அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. 'அணு உலை பாதுகாப்பானது என்றால், உங்கள் மாநிலத்தில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்தான் கடல் இருக்கே’ என்று, மக்கள் கிண்டல் செய்ததைப் பார்த்து நொந்துபோய், 'மக்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனார். தமிழகத்தை டெல்லியில் பிரதிபலிக்கக்கூடிய ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் மக்களை மனமாற்றம் செய்ய வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டி.வி.க்களில்களில் மட்டுமே பேசினர். 'இரண்டு வாரத்தில் அணுஉலை செயல்படத் தொடங்கும்’ என்பதைச் சொன்னாலே அணுஉலை செயல்பட ஆரம்பித்து விடும் என்று மத்திய அரசு மௌனமாக இருந்தது. இப்போதுகூட அது ஜெயலலிதாவின் சுமை என்ற அலட்சியம்தான் டெல்லி காங்கிரஸ் தலைகளுக்கு இருக்கிறது.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவதில் கை தேர்ந்த கருணாநிதி, இப்போது புதிய புத்தராகப் பரிமாணம் பெற்றுள்ளார். 'மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவி​னரிடம் பேசி ஆபத்து ஏற்படாது என உத்தரவாதம் தர வேண்டும். காவல்துறையை வைத்துக்கொண்டு போராட்டத்தை ஒடுக்க ஜெயலலிதா கருதிவிடக் கூடாது’ என்று உபதேசம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்தே சொல்லாமல் இருந்த கருணாநிதி, திடீரென கடந்த பிப்ரவரி மாதம், 'கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் அலைய வேண்டும். கூடங்குளத்தை செயல்பட விடாமல் ஏன் வைத்துள்ளீர்கள்? போராட்டக்காரர்களுடன் ஏன் முதல்வர் பேசுகிறார்? அவர்களை இவரே தூண்டி விடுகிறாரா?’ என்று பேசியதன் மூலமாகத்​தான் ஜெயலலிதா சினம்கொண்டு... உடனே நடவடிக்​கைகளில் இறங்கினார். யாரோ போட்ட உத்தரவுக்காக அன்று தூண்டிவிட்ட கருணாநிதி... இன்று அப்படியே மாற்றிப் பேசுவது எத்தகைய நாடகம். 'கூடங்குளம் பிரச்னை ஒன்று போதும், தென் மாவட்டத்தில் நாம் ஜெயிக்க!’ என்று இப்போதே சில  தி.மு.க. பிரமுகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். அந்த அளவுக்கு அரசியல் கொக்குகள் மீன்களுக்காகக் கரையில் காத்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், மற்றவர்களைவிட ஜெய லலிதாவுக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள அணு உலைகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கச் சொன்னது. அதன்படி அமைக்கப்பட்ட குழு 11 விதிமுறைகளைக் கொடுத்தது. அதில் இதுவரை 6 மட்டுமே கூடங்குளத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும் அதை விளக்கி கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் செய்யவும் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும். அந்த மக்களிடம் அவர் பேச வேண்டும். அப்போதுதான் தென் மண்டலம் அமைதியாகும்.
ஜெ. நினைத்தால் அமைதிப்படுத்தலாம். ராஜேஸ் தாஸ்களால் நிச்சயம் முடியாது!

ப.திருமாவேலன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்,
ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்

நன்றி: ஜூனியர்விகடன், 19 செப்டம்பர் 2012

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும்
உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென்மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள்காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணுவிஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

கருத்துரையிடுக