செவ்வாய், செப்டம்பர் 11, 2012

பி.டி. விதைகளுக்கு வருகிறது தடை!


'மரபணு மாற்றுப்பயிர்களால் எந்தப் பலனும் இல்லை. அதனால் அதை இந்தியாவில் அனுமதிக்கத் தேவையில்லை’ என மரபணு மாற்றுப்பயிர்களுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது, நாடாளுமன்ற நிலைக்குழு. இந்த அறிக்கை சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நிலைக்குழுவின் தலைவரும்... மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற அவைத் தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யாவிடம் பசுமை விகடன் இதழுக்காக சிறப்பு பேட்டி எடுத்தோம்.
இனி, அந்தப் பேட்டியிலிருந்து...

''நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?''
''பி.டி., ஜி.எம். என்றெல்லாம் அழைக்கப்படும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் வருகைக்குப் பிறகு, நாடு முழுவதும் வறுமை, விவசாயிகள் தற்கொலை... என மோசமானச் சூழல் நிலவத் தொடங்கியது. அதனால் நடந்த போராட்டங்களுக்கும் உள்நோக்கம் கற்பிக்கப்பட்டதால், விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மக்கள் முன் வைக்க முடியாமல் போனது. எனினும், உங்களைப் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக வேறு வழியின்றி அனைத்துக்கட்சி எம்.பி-க்கள் அடங்கிய நிலைக்குழுவை அரசு அமைத்தது. பி.டி. விதைகள் மற்றும் பருத்தியால் விளைந்த நன்மை, தீமைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, இந்தத் தொழில்நுட்பம் நமது நாட்டுக்குத் தேவையா... இல்லையா? என்பதை அரசுக்குத் தெளிவுபடுத்தத்தான் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, ஒன்றரை ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த அறிக்கையை மத்தியச் சுற்றுசூழல் மற்றும் வனவள அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளோம்.''
''இந்த விஷயத்தில் கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன... எந்த அளவுக்கு ஆழமாக ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள்?''
''பி.டி. விதைகளை ஆதரித்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த நம் நாட்டின் விவசாய விஞ்ஞானிகள், அதை எதிர்த்து போராட்டங்களை நடத்திய பொதுநல அமைப்புகள் என பலதரப்பட்டவர்களையும் பாராபட்சமின்றி எங்கள் குழு விசாரித்தது. இதில் சுமார் 70 பேர் நேரில் ஆஜராகி சாட்சியங்கள் அளித்தனர். பி.டி. விதைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவன தரப்பு அதிகாரிகளிடமும் விசாரணை செய்தோம். நாடு முழுவதும் சுற்றி பலதரப்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை அலசினோம். குறிப்பாக, விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் கோரேகாவ்ன் கிராமத்தில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டோம். எங்களைப் பொறுத்தவரை நூறு சதவிகிதம் ஈடுபாட்டோடும்... நேர்மையோடும் இந்த ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளோம்.''

''உங்கள் குழு அளித்திருக்கும் அறிக்கை, என்ன சொல்கிறது என்பதை இங்கே சில வரிகளில் பகிர முடியுமா?''
''பி.டி விதைகளின் தாக்கம், நம் நாட்டின் பயோடைவர்சிட்டி மற்றும் சுற்றுச்சூழல் மீது மிக அதிகமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலைகளுக்கு மூலக் காரணமே இதுதான். இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர, மான்சான்டோ நிறுவனத்தின் பி.டி பயிர்களைத் தடை செய்வது ஒன்றுதான் வழி. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளின் பரிசோதனைகளை ஆய்வுக்கூடங்களில்தான் செய்ய வேண்டுமே தவிர, விவசாயிகளிடம் கொண்டு செல்லக் கூடாது. நம் நாட்டில் உள்ள பரிசோதனைக் கூடங்களும் பன்னாட்டுத் தரத்தில் இல்லை. அதை தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. இத்தகையச் சூழலில் இங்கே பி.டி. என்கிற ஒன்று தேவையே இல்லை என்றெல்லாம் முக்கியமான விஷயங்களில் ஆணித்தரமாக கருத்துக்களை எடுத்து வைத்துள்ளோம்.''

''பருத்தி உள்ளிட்ட பி.டி. விதைகளால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் என்று எதையாவது அழுத்தமாக உங்கள் குழு கண்டறிந்திருக்கிறதா?''
''இந்த விதைகளின் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உலகிலேயே அதிகமாக நம் நாட்டில்தான் கத்திரிக்காயில் 2 ஆயிரத்து 200 வகைகள் இருந்தன. இவற்றில் பலவற்றையும் ஏற்கெனவே அழித்துவிட்டனர். இந்நிலையில் பி.டி. கத்திரி விதைகளை அனுமதித்தால்... இன்னும் சில காலங்களில் பி.டி கத்திரிக்காய்கள் மட்டுமே இங்கு இருக்கும். பருத்தியில், கிட்டத்தட்ட இந்த நிலை உருவாகி விட்டது. பி.டி பருத்தியின் ஆக்கிரமிப்பால் நம் நாட்டின் பிரத்யேகமான பருத்தி ரகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இன்று பருத்தியில் 93 சதவிகிதம் மான்சான்டோவின் ரகங்கள்தான். இதனால் எதிர்காலத்தில் நமது விவசாயம், அந்த நிறுவனத்தையே முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.

மான்சான்டோவின் வரவு, இதுவரை 25% ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை அழித்தொழித்துவிட்டது. ஓர் ஆண்டில் பருத்தியில் மட்டும் மான்சான்டோ நிறுவனத்தின் விற்றுமுதல் 25 ஆயிரம் கோடி ரூபாய். இது நம் நாட்டின் விவசாயத்துறை பட்ஜெட்டைவிட அதிகம். இவற்றைவிட வேறு என்ன பாதிப்புகள் வேண்டும்?'''

''இத்தகைய ஆபத்து மிகுந்த பி.டி. விதைகள், இந்தியாவுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்துவிட்டனவே... அது எப்படி?''
''உலக நாடுகளை தன்வசப்படுத்த நினைக்கும் அமெரிக்கா, நம் நாட்டையும் குறி வைத்தது. முதல் கட்டமாக, 2002-ம் ஆண்டில்தான் நமது ஆட்சியாளர்களால் இந்தியாவில் பி.டி. விதைகள் நுழைக்கப்பட்டன. இதில் முக்கியப் பங்காற்றியது நம் நாட்டு விஞ்ஞானிகள்தான். அவர்களில் பலரையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று குஷிப்படுத்தி, நன்றாக கவனித்திருக்கிறார்கள்.
அதுதான் அந்த விதைகள் இங்கே சர்வசாதாரணமாக நுழைந்ததற்குக் காரணம். அப்படிப்பட்ட விஞ்ஞானிகள் யார்? என்பது குறித்து விசாரிப்பது எங்களுடைய வேலை அல்ல. அதனால் எங்கள் அறிக்கையில் பொதுவாகத்தான் கூறியிருக்கிறோம். இதன் அடுத்தக் கட்டம்தான்... சில்லறை வர்த்தகத்தில் வால்மார்ட் நிறுவனம் நுழைய முயற்சிப்பதும்... அதற்கு ஆளுங்கட்சி உட்பல பல தரப்பிலிருந்தும் ஆதரவு காட்டப்படுவதும்.''

''இங்கே குழுக்கள் அமைப்பதும்... அறிக்கைகள் சமர்ப்பிப்பதும் வழக்கமே. ஆனால், அவற்றின் மீதெல்லாம் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. அப்படியிருக்க, இந்த நிலைக்குழுவின் அறிக்கை, எந்த அளவுக்கு விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும்?''
''பருத்தி உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட அனைத்து விதைகளுக்கும் இங்கே முழுமையான தடை கண்டிப்பாக வரும். கடைசியாக நடந்த அறிவியல் மாநாட்டில் பேசிய பிரதமர், தனது துவக்க உரையில், 'சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பவைக்கு நம் நாட்டில் எந்த வகையிலும் அனுமதி கிடையாது’ என மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். எங்கள் அறிக்கையிலும் பிரதமரின் பேச்சை நினைவுபடுத்தி 'தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளோம். ஆளும் கூட்டணி அரசு, அடுத்தப் பொதுத்தேர்தலுக்குள் மரபணு மாற்று விதைகளைத் தடை செய்யவே நினைக்கிறது.''

''அறிமுகப்படுத்திய கட்சியே தடை விதிக்க ஆதரவு அளிப்பது வியப்பாக உள்ளதே?
''அதுதான் நம்நாட்டின் அரசியல்! பிரச்னையின் வீரியமும் அவர்களை ஆதரிக்க வைக்கிறது. ஆனால், எங்கள் மார்க்சிஸ்ட் கட்சி, ஆளும் அரசுக்கு ஆதரவு தந்தபோதும் சரி, எதிரணியில் உள்ள போதும் சரி... இந்த விதைகளை எதிர்த்தபடிதான் இருக்கிறது. இந்தக் குழுவைப் பொறுத்தவரை இடம் பெற்றிருந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒருமனதாக முடிவு செய்து பி.டி. விதைகளுக்குத் தடை விதிக்கும்படி கையெழுத்து இட்டு பரிந்துரைத்திருக்கிறார்கள். இது கண்டிப்பாக நடக்கும்.''

சுற்றுசூழல் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளை ஓர் அரசியல்வாதியாக இருந்து பார்க்காமல்... விவசாயிகளின் பார்வையில் பார்த்து, மரபணு மாற்றுப் பயிர்களைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலுசேர்த்து, நீண்டகாலமாக நடந்துவரும் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும் நிலையை உருவாக்கிஇருக்கும் நிலைக்குழுவினருக்கும்... அதை முன்னெடுத்துச் சென்ற பாசுதேவ் ஆச்சார்யாவுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சொல்லி விடைபெற்றோம்.

-ஆர். ஷஃபி முன்னா

நன்றி: பசுமைவிகடன்,  25-12-2012

1 கருத்து:

prabhakaran சொன்னது…

em es swaminathan aaraichchi maiyamum, velan amaichchar sarath bavarum inthiya marabu vivasaayaththai aliththolippathil munnaniyil iruppavarkal.ivarkalai adakki vaiththaale pothum inthiya vivasaayam nalla nilamaikku vanthu vidum.

கருத்துரையிடுக