திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் இந்திய அணுமின் நிறுவனம் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு தண்ணீர் உயர் அழுத்த அணு உலைகளை நிறுவியுள்ளது. முதலாம் அணு உலை 2011 டிசம்பரில் செயலுக்குக் கொண்டுவரப்படவிருந்தது. தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனப் பயந்த அப்பகுதி மக்கள், அணு உலை இயக்கப்பட இருப்பதைத் தடுத்து நிறுத்தினர். தெரியவருகின்ற ஆவணங்களை ஆராயும்போது அணு உலையின் மையப்பகுதியையும் எரிந்து முடிந்த யுரேனியத்தையும் குளிர்விப்பதற்குத் தேவையான கையிருப்புத் தண்ணீர் அணுமின் நிலையத்தில் இல்லை என்பது தெரியவருகிறது.
கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தண்ணீர் வெப்பக் குறைப்பானாகவும் (moderator) குளிர்விப்பானாகவும் தேவைப்படுகிறது. இத்திட்டத்தில் தண்ணீரும் கடல் நீரும் மூன்று வகைக் குளிர்விப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீர் முதன்மைக் குளிர்விப்பானாக அணு உலையின் மையப்பகுதியில் நிகழும் அணுப்பிளவால் (fission) ஏற்படும் பெரும் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் வெப்பத்தின் ஒரு பகுதியை இரண்டாம் குளிர்விப்பானான தண்ணீர், மின் உருளையைச் சுழலவைக்கும் நீராவி உருவாகக் காரணமாகிறது. வெப்பக் கட்டுப்பாட்டுக்கும் முதல் மற்றும் இரண்டாம் குளிர்விப்பான்களாகவும் பயன்படுத்தப்படும் தாதுக்களும் அயன்களும் நீக்கப்பட்ட சுத்தமான தண்ணீர், அருகருகே இணைந்து செல்லும் வளையங்கள் ஊடாகச் செலுத்தப்படுகிறது. இவ்வளையங்கள் மூன்றாம் குளிர்விப்பானாகச் செயல்படும் மன்னார் வளைகுடா கடலிலிருந்து எடுக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குப் பின் அங்கேயே மீண்டும் வெளியேற்றப்படும் கடல் நீரால் குளிர்விக்கப்படுகின்றன. அணு உலையின் மையப்பகுதியில் வெளிப்படும் வெப்பத்தில் 30 விழுக்காடு முதன்மை மற்றும் இரண்டாம் குளிர்விப்பான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீதமுள்ள வெப்பம் கடல் நீருக்கு மாற்றப்படுகிறது. அணு எரிபொருளின் (யுரேனியம்) ஆற்றல் முடிந்த பிறகும் அதன் திறனிழப்பால் (பீமீநீணீஹ்) வெப்பம் உருவாவதால் அணு உலையின் மையப் பகுதியை மின் உற்பத்தி இல்லாதபோதும் தாதுக்கள் நீக்கப்பட்ட தண்ணீரால் குளிரூட்ட வேண்டியுள்ளது. இதே போன்று ஆற்றல் இழந்த எரிபொருள் சேமிப்பையும் மறுவூக்கம் (reprocessing) செய்யும் வரையிலோ திறனிழப்பு வெப்பம் சாதாரணக் காற்றின் மூலம் கட்டுப்படும் அளவுக்குக் குறையும் வரையிலோ தண்ணீரால் குளிரூட்டப்பட வேண்டும்.
ஓர் அணு உலைக்குச் சுத்தமான தண்ணீர், உலை செயல்படும்போது 2832 கன மீட்டரும் உலை நிறுத்தப்பட்டிருக்கும்போது 400 கன மீட்டரும் தேவைப்படுகிறது. குடிநீர் போன்ற இன்ன பிற பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு 1272 கன மீட்டர் தண்ணீர் அணுமின் நிலைய வளாகத்துக்குத் தேவைப்படுகிறது. இவ்வாறாக ஒரு நாளைக்கு மின் உற்பத்திக்கும் வளாகப் பயன்பாட்டிற்குமாக மொத்தம் 6936 கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. (முத்துநாயகம் மற்றும் பிறர் - 2011). அணு உலைச் செயல்பாட்டிற்கு வந்து ஓர் ஆண்டு முடிந்து மறுபடியும் எரிபொருள் நிரப்பப்பட்ட பின், சேகரிக்கப்பட்ட செயல்திறன் இழந்த பொருளைக் குளிர் நிலையில் வைக்க மேலும் தண்ணீர் தேவைப்படும்.
வரலாற்றுப் பின்னணி
கூடங்குளம் அணுமின் திட்டம் 1989ஆம் ஆண்டு சில நிபந்தனைகளோடு அனுமதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி (Environmental Impact Assessment) மின் உற்பத்திக்கான தண்ணீர், மின் உலை வளாகத்திலிருந்து வடமேற்குத் திசையில் 65 கி.மீ. தொலைவில், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் கட்டப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து கொண்டுவரப்பட வேண்டும். அணுமின்திட்ட வளாகத்தின் இரண்டு உலைகள் மற்றும் பிற குடிநீர்த் தேவைகளுக்கான 7 நாள் கையிருப்பு நீர் 60,000 கன மீட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த நீர்த்தேக்கம் அணு உலைகளிலிருந்து பாதுகாப்பான உயரமாகக் கணக்கிடப்பட்டிருக்கும் 35 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும் (NEERI - 2003). இத்திட்டத்திற்கு இசைவு வழங்கியபோது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுமம் (AERB) தண்ணீர் குறித்த கீழ்வரும் ஆணைகளைத் தந்தது.
¬ அணு உலையின் மையத்தைத் தங்கு தடையில்லாமல் குளிர்விப்பதற்கும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்குமான தேவையான நீண்டகால நீர்த்தேக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
¬ ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்க வசதியானது பேச்சிப்பாறையிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், தடைபடும் மற்றும் பற்றாக்குறை வேளைகளிலும் போதுமானதாக இருக்க வேண்டும்.
¬ பேச்சிப்பாறையிலிருந்து 65 கி.மீ. நீள அளவுக்குப் போடப்படும் நீர்க்குழாயின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
¬ பேச்சிப்பாறை அணைக்கு ஆபத்து நேரிடினும் தண்ணீருக்கான மாற்று ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
¬ இந்திய அணுமின் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது மேற்கூறிய அணை ஆபத்தையும் கருத்தில் கொண்டு மேல்கோதையாற்றுத் தேக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் வழிகளையும் இணைத்துத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
நீர் ஆதாரங்களும் சேகரிப்பும்
இந்திய அணுமின் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டையும் தயாரிக்கும் முன் கிடைக்கப்பெறும் உறுதியான தண்ணீர் அளவு பற்றி ஆராயவில்லை, 120 வருடங்களாகப் பேச்சிப்பாறை அணைத் தண்ணீரைப் பயன்படுத்திவரும் மக்களிடம் இத்திட்டம் பற்றித் தகவல் தெரிவிக்கவில்லை. ஓர் ஆய்வு முடிவின்படி குமரிமாவட்டம் 1901 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் 52 ஆண்டுகளில் வறட்சி மற்றும் வறட்சி நிகர் சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கிறது. 1963 முதல் 1990 வரை எதிர்பார்ப்பில் 15 விழுக்காட்டிலிருந்து 37 விழுக்காடுவரை நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது (ரமேஷ் - 2006). இன்றைய நிலையில் அணையிலிருந்து நீர்க்குழாய் அமைப்போ அணு உலை வளாகத்தில் நீர்த்தேக்கமோ உருவாக்கப்படவில்லை. மாறாக அங்கே நான்கு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கடல்நீர் சுத்திகரிப்பு அமைப்புகள்
கடல் நீர் சுத்திகரிப்புக்கென மூன்று வகையான தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை அ) எதிர் சவ்வூடுபரவல் முறை (reverse osmosis) ஆ) பல கட்ட ‘பளிச்’ முறை (multi stage flash) இ) பன்முறை நீர்த்திவலைச் சுருக்கமுறை (multiple vapour compression) என்பன. கடல்நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில் பாபா அணு ஆய்வுமையம் (BARC) (அ) மற்றும் (ஆ) முறைகளில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கின்ற போதிலும் (இ) தொழில்நுட்பத்தில் எந்த அனுபவமும் அதற்கு இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மொத்தம் ஆறு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் நகரியத் தேவைக்காக ஒரு நாளைக்கு 1200 கன மீட்டர் தண்ணீர் தயாரிக்கும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் பாபா அணு ஆய்வு மையத்தால் (அ) தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு சுத்திகரிப்பு நிலையங்களும் 115 கோடி ரூபாய் செலவில் ஓர் இஸ்ரேலிய நிறுவனத்தால் (இ) தொழில்நுட்பத்தில் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இத்தொழில்நுட்பம் இந்தியாவில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படவிருப்பதால் பிரச்சினைகள் நேரிடும்போது விரைவாக அவற்றைச் சரிசெய்யும் அனுபவம் நம்மிடம் இல்லாத காரணத்தால் அப்பிரச்சினைகளை எதிர்கொள்வது கடினம்.
கையிருப்பு நீர்
அணுமின் வளாகத்திலுள்ள மூன்று கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் (மீதமுள்ள ஒன்று அவசர உபயோகத்துக்கானது) இரண்டு அணு உலைகளுக்கு மற்றும் பிற பயன்பாடுகளுக்கும் போதுமான சுமார் 7680 கன மீட்டர் தண்ணீர் பெறலாம். அணுமின் நிலையத்தில் 12 பெரிய தொட்டிகளில் 11,445 கன மீட்டர் கையிருப்புத் தண்ணீர் தேக்கிவைக்க முடியும். (கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிறர் - 2011) இதில் 2000 கனமீட்டர் தண்ணீர் தீ விபத்துத் தடுப்புத் தொட்டிகளில் இருக்கும். 1425 கன மீட்டர் தண்ணீர் அணு உலை வளாகத்துக்கு வெளியே உள்ள நகரிய வீட்டு உப யோகத்துக்கெனப் பயன்படும். வளாகத்துள் குடிநீர்க் காரணங்களுக்குத் தேவைப்படுவது 1200 கனமீட்டர் தண்ணீர். இவை போக 8020 கன மீட்டர் தண்ணீர் அணுமின் உற்பத்திக்கெனக் கையிருப்பாக அமையும். இந்த அளவானது இரண்டு அணு உலைகளின் மையங்களையும் 1லு நாட்கள் மட்டுமே குளிரூட்டுவதற்குப் போதுமானதாகும். தண்ணீர் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இரண்டு அணு உலைகளும் நிறுத்தப்பட வேண்டியிருக்கும். அவ்வேளைகளில் கையிருப்புத் தண்ணீர் 10 நாட்களுக்குப் போதுமானது.
நிபுணர் குழுவின் கையிருப்புத் தண்ணீர்க் கணக்கீடு
முத்துநாயகம் கமிட்டியின் (2011) அறிக்கையில் “ஒழுங்குமுறை ஆணையம் ஏழு நாட்களுக்கான தண்ணீர்க் கையிருப்பு இருந்தாலே போதுமானது என்ற போதிலும் பொதுமின் விநியோக இணைப்பு (grid) கடல் சுத்திகரிப்பு நிலையங்கள் மின்சாரம் பெறுவதில் தடை ஏற்பட்டாலும் பல நீர்த்தொட்டிகளில் இருக்கும் கையிருப்புத் தண்ணீர் 10 நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி ஒழுங்கு முறைக் குழுமம் நீர்க் கையிருப்பு குறித்து 30 நாட்கள் தண்ணீர்க் கையிருப்பை ஒழுங்கு முறையாக விதித்துள்ளது. “அணு உலைகளின் மையப்பகுதியின் வெப்ப வெளியேற்றத்திற்கான குறைந்தபட்சக் கையிருப்புத் தண்ணீரை எல்லாச் சூழ்நிலைகளிலும் நீண்டகால அளவில் உறுதிசெய்ய முடியாவிட்டால் அந்த வளாகம் பயன் பாட்டிற்குப் பொறுத்தமற்றது எனக் கருத வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அணு உலை மையப்பகுதி பாதுகாப்பான நிலையில் இருப்பதற்குக் குறைந்தபட்சம் 30 நாட்களுக்குத் தேவையான கையிருப்புத் தண்ணீர் நிச்சயமாக இருக்க வேண்டும். (அழுத்தம் கட்டுரையாளருடையது)
நிபுணர் குழு கீழ்க்காணும் விஷயங்கள் குறித்து மவுனம் காக்கின்றது.
1. வளாகத்தின் குடிநீர்த் தேவை
குடிநீர்த் தேவைக்காக இரண்டு தொட்டிகளிலுள்ளது 1425 கன மீட்டர் தண்ணீராகும். ஆனால் ஒரு நாளைக்குத் தேவையானது 1272 கனஅடி தண்ணீர். நீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உபயோகத்தைக் குறைத்தாலும் கையிருப்பு நீர் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காது. (அணு உலைக்கான தண்ணீரில் போரோன் மூலகங்களும் வேதிப் பொருட்களும் கலப்பதால் அதைக் குடிநீராகப் பயன்படுத்தவியலாது.)
2. விநியோக மின் இணைப்புக் கோளாறு தவிர்த்த பிற இடர்கள் மூலம் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயலிழத்தல்
நிபுணர் குழுவானது விநியோக மின் இணைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாகக் கடல்நீர் சுத்திகரிப்பில் ஏற்படும் சிக்கல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. விநியோக மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பெறுவது தடைபட்டு இரண்டு அணு உலைகளும் தாமாகவே நின்றுவிடும்போதும் அவற்றிற்குக் குளிர்விப்பானாக 800 கன மீட்டர் தண்ணீர் வேண்டும். (எல்லா அணு உலைகளும் அவற்றின் பாது காப்புக்கான பம்புகள் மற்றும் உபகரணங்கள் இயங்குவதற்கு வேண்டிய மின்சாரத்தைப் பொதுமின்விநியோக இணைப்புகள் மூலமே பெறுகின்றன. ஏனெனில் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்துவதைவிடப் பொதுவிநியோகம் மூலம் உலைகள் மின்சாரம் பெறுவது உத்தரவாதமானது.) வேதிப் பொருட்களையும் நுண்ணுயிர்க் கலவைகளையும் கொண்ட கடல் நீரைச் சுத்திகரிக்கும் ஒரு நிலையம் அசாதாரணமான பல நுட்பங்களை உள்ளடக்கிய இயந்திர மாகும். அதைச் சுத்தம்செய்து மாசற்ற நிலையில் பராமரிப்பது மிகக் கடினமான காரியம். அந்த இயந்திரம் கூடத் தேய்மானத்தாலும் துருப்பிடிப்பதாலும் ‘சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள்’ என்று அணு விஞ்ஞானத் துறையால் அழைக்கப்படும் கடல் நுண்ணுயிர்கள் மற்றும் ஜெல்லி மீன்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளாலும் செயலிழக்க வாய்ப்பு உண்டு. உலகம் வெப்பமயமாவதால் ஜெல்லி மீன்கள் 600 மில்லியன் வருடங்களுக்கு முன் தாம் இழந்த ஆதிக்கத்தைத் தமது பன்மடங்குப் பெருக்கத்தால் மீண்டும் பெறும் சாத்தியம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக அவை கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கப்பல்கள் மற்றும் மின் நிலையங்களுக்குள் ஊடுருவது அதிகரித்துள்ளது. இவ்வாறான ஜெல்லிமீன் தாக்குதல்களால் 2011ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஜப்பான், ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 50 ஆண்டுக் கால அணு எதிர்ப்புப் போராட்டங்களால் செய்ய முடியாத இந்தச் சாதனையை ஜெல்லிமீன்கள் நிகழ்த்தியுள்ளன. “அணுஉலைகள் ஃபிளூம்ஸ் என்று அழைக்கப்படும் வடிகட்டிகளைக் கொண்டிருந்தாலும் உலக அளவில் திடீரெனப் பெருகிவரும் ஜெல்லிமீன்களுக்கு இந்த வடிகட்டிகள் ஈடு கொடுக்க முடியவில்லை”.
3. கடல் சுத்திகரிப்பு நிலையங்கள் நீண்டகாலம் செயல்படாமல் இருத்தல்
இந்தியாவில் பல கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தபோதிலும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இந்தத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தாலும், கூடங்குளம் அணு உலைகளுக்கான கடல்நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு அனுபவம் இல்லை. இதுவரை இங்கு இல்லாத இந்தத் தொழில்நுட்பத்தில் கோளாறுகள் ஏற்படும்போது இஸ்ரேலிய வல்லுநர்களை அழைத்து வந்துதான் அவற்றைச் சரிசெய்ய இயலும். அப்போது 10 நாட்களுக்கும் மேலாகப் பழுதுபார்க்கும் பணி நடக்க நேரிட்டால் என்னசெய்வது? 2008இல் சென்னைக்கு அருகிலுள்ள மீஞ்சூரில் இருக்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பழுதை 45 நாட்கள் ஆன பிறகே சரிசெய்ய முடிந்தது. அப்போது நிபுணர்கள் நெதர்லாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள்.
4. அணு உலை நிறுத்தமும் அயோடின் குழியும்
கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்தால் அணு உலைகள் மட்டுமே நிறுத்தப்படும், பிற இயந்திரங்களைப் போல் அணு உலைகளை நிறுத்திய பிறகு மறுபடியும் உடனடியாக இயக்க இயலாது. இதற்கு ‘அயோடின் குழி - ஸெனான் விஷமாதல்’ (iodine pit - xenon poisoning) என்ற அசாதாரணமான நிகழ்வு காரணமாகிறது. பொதுவாக மறுபடியும் உலையை இயக்குவதற்கு 3 நாட்களாவது ஆகும்.
கூடங்குளத்தின் முதல் திட்டவரைவில் பேச்சிப்பாறையிலிருந்து கொண்டுவரப்படும் 60,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு உடைய நீர்த்தேக்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் இருக்கும் என்றிருந்தது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நிலையத்தில் சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்கும் நீர்த்தேக்கிகள் பக்க அமைப்புக்கான விதிகளைப் பின்பற்றி வேலை தொடங்குவதற்கும் 2001 அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது. இந்த நீர்த்தேக்க உருவாக்கம் ஏன் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை எனத் தெரியவில்லை. அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுமமும் மத்திய அரசின் நிபுணர் குழுவும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன. இந்த நீர்த்தேக்கம் உருவாகியிருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெறுமனே கிடக்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஆறே நாட்களில் 60,000 கன மீட்டர் தண்ணீரைத் தேக்க முடியும்.
மாயநீர் உலகம்
கூடங்குளம் அணுமின் நிறுவனம் மற்றும் அணுசக்தித் துறைகளின் தகவல்கள் அடிப்படையில் தேசிய ஊடகங்களில் அணு உலைகளுக்குத் தேவையான தண்ணீர் கையிருப்பு இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. 2011 அக்டோபர் 19ஆம் தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான அறிக்கையின் சில குறிப்புகள் பின்வருமாறு தெரிவிக்கின்றன. “விபத்தோ இயற்கைப் பேரிடரோ ஏற்பட்டால் உலை மையத்தைக் குளிரூட்டலில் வைத்திருப்பதே முழுமுதல் செயல்பாடாக இருக்கும். இது ஃபுகுஷிமாவிலிருந்து கற்றுக்கொண்டது. இந்திய அணு உலைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மாற்றுவழிகளில் நீர் வழங்கும் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள நீர் ஆதாரம் மட்டுமல்லாமல் தொலைவிடங்களிலிருந்து குழாய்கள் மூலம் நீர்கொண்டுவந்து உள்நீர் அதிகரிப்புக்கும் ஈடுகட்டுவதற்கும் வழிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்புக்காகத் தொலைவிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது உயர்மட்டத் தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் வெடித்துச் சிதறுவது தவிர்ப்பதற்காக நைட்ரஜன் செலுத்தும் வாய்ப்பு என்று மூன்று வகையான ஏற்பாடுகள் உள்ளன.” (அழுத்தம் கட்டுரையாளர்களுடையது) (தேஷ்பாண்டே - 2011)
கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தொலைவிலிருந்து நீர் கொண்டுவரும் குழாய் அமைப்பும் இல்லை; உயர்நிலை நீர்த்தொட்டிகளும் இல்லை. பிற அணுமின் வளாகங்களில் குழாய் அமைப்புகளும் உயர்நிலைத் தொட்டிகளும் உள்ளன.
440 மெகாவாட் மின் உற்பத்திறன் கொண்ட கன நீரால் குளிரூட்டமும் வெப்பக் குறைப்பும் ஏற்படுத்தப்படும் சென்னை அணுமின் நிலையத்தில் 28400 கனமீட்டர் தண்ணீர் கொள்ளவுக்கான வசதி உள்ளது. ஃபுகுஷிமா ஆய்வுக் குழுவின் (Fukushima task force) அறிவுறுத்தலின் பேரில் அங்குக் கூடுதல் நீர்க் கையிருப்புக்காக மேலும் 750 கன மீட்டர் தண்ணீர் சேமிப்புக்கு வழி செய்யப்பட்டுள்ளது (கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிறர் - 2011) இலகுவான நீரை (Light water) உபயோகிக்கும் தாராப்பூர் அணுமின் நிலையத்தில் 3860 கனமீட்டர் நீர் சேமிப்பு வசதி உள்ளது (பட்டாச்சார்ஜி மற்றும் பிறர் - 2011). ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்குத் தாராப் பூரில் கையிருப்புத் தண்ணீராக 12 கன மீட்டர் உள்ளது. கூடங்குளத்தில் (ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கு) 5 கன மீட்டர் கையிருப்புத் தண்ணீர்தான் உள்ளது.
முடிவுகள்
அணு உலை வளாகத்திலோ அதற்கு அருகிலோ உள்ள தண்ணீர் ஆதாரங்களைப் பற்றிய முழுமையான கணிப்புகள் செய்யாத நிலையிலேயே இந்திய அணுமின் உற்பத்தி நிறுவனம் ரஷ்யாவுடன் 13000 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த அணுமின் நிலையத்துக்கான ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறது. கூடங்குளம் நிலையத்தின் கட்டுமானங்கள் அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுமம் மற்றும் இந்திய அணுமின் நிறுவனத்தின் ஆணைகள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் சில அங்கங்கள் அணு உலை வளாகத்தின் பாதுகாப்புத் தன்மை பற்றித் தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. வேண்டிய அளவைவிடத் தண்ணீர் சேமிப்புத் திறன் குறைவாக இருப்பதால் கூடங்குளம் அணு உலையை இயக்குவது என்பது ஒரு அபாயகரமான விளையாட்டு.
-வி. டி. பத்மநாபன், ஆர். ரமேஷ், வி. புகழேந்தி
தமிழில்: பெர்னார்ட் சந்திரா
நன்றி: Koodankulam’s Reserve Water Requirements, EPW, May 5, 2012
நன்றி: காலச்சுவடு, ஜூலை 2012
1 கருத்து:
விரிவான, விளக்கமான கட்டுரை...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.2)
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
கருத்துரையிடுக