ஒரு தட்டில் நவதானியக் கொழுக்கட்டை, தினைப் பொங்கல், தேன் தினைமாவு, வரகரிசிச் சோறு, வழுதுணங்காய் சாம்பார், கம்பு - வல்லாரை தோசை, நிலக்கடலைச் சட்னி, கூட்டுக் காய்கறிப் பொரியல், சாமைக் கூட்டாஞ்சோறு, குதிரைவாலி தயிர்சோறு, பானகம் இவை எல்லாவற்றையும் வைத்துத் தருகிறார்கள். நீங்கள் எப்படிச் சாப்பிடுவீர்கள்? அதாவது, எதை எதோடு சேர்த்துச் சாப்பிடுவீர்கள்? எதில் தொடங்கி எதில் முடிப்பீர்கள்?
சென்னை லயோலா கல்லூரியில் கடந்த வாரம் 13 சுற்றுச்சூழல் அமைப்பினருடன் சேர்ந்து 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் ஒருங்கிணைத்த ஐந்திணை சுற்றுச்சூழல் விழாவின் இரவு பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்றபோது இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது (பக்கத்தில் ஒரு நண்பர் தோசைக்குச் சாமைக் கூட்டாஞ்சோறைத் தொட்டுச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கொத்சு என்று நினைத்தாரோ, என்னவோ?). கூர்ந்து யோசித்தால், இது குழப்பம் அல்ல; இழப்பு. பாட்டனும் பூட்டனும் காலங்காலமாகச் சாப்பிட்ட உணவின் பெயரே தெரியாமல் போனதையும் எப்படிச் சாப்பிடுவது என்பதையே அறியாமல் போனதையும் வேறு எப்படிச் சொல்வது?
உலகிலேயே நிலத்தைச் சூழல் சார்ந்து பிரித்து, வாழ்முறையை வகுத்த சமூகம் தமிழ்ச் சமூகம்தான்.
திணை என்பது வெறும் பெயர் அல்ல;
அது ஓர் அறிவியல்.
சூழலியல் அறிவியல்.
இயற்கையோடு இயைந்த வாழ்வை அடிப்படையாகக்கொண்ட அறிவியல். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் ஐந்திணைகளும் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன?
இதைத் திரும்பிப் பார்க்கும் நிகழ்வாகத்தான் ஐந்திணை விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்கள். விழாவின் முக்கியக் களம் உணவின் மீதான அரசியல்!
திணை என்பது வெறும் பெயர் அல்ல;
அது ஓர் அறிவியல்.
சூழலியல் அறிவியல்.
இயற்கையோடு இயைந்த வாழ்வை அடிப்படையாகக்கொண்ட அறிவியல். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் ஐந்திணைகளும் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன?
இதைத் திரும்பிப் பார்க்கும் நிகழ்வாகத்தான் ஐந்திணை விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்கள். விழாவின் முக்கியக் களம் உணவின் மீதான அரசியல்!
விழாவை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடக்கி வைத்தார். ''சாப்பாடுதான் மூலாதாரம்கிறதைப் புரிஞ்சுக்கிட்டுதான், நம்ம மேல தாக்குதலைச் சாப்பாட்டுல இருந்து தொடங்குறான். நவீன விவசாயம் என்ன செய்யுதுனு புரிஞ்சுக்க பெரிய விஞ்ஞான அறிவு எதுவும் தேவை இல்லை. ஒரே ஓர் உதாரணம் சொல்றேன் கேளுங்க.
நவீன விவசாயம் என்ன செஞ்சுது? விவசாயியையும் மாட்டையும் பிரிச்சுது. மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏரை விட்டுட்டான்; டிராக்டர் வந்துச்சு; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி மாட்டு வண்டியை விட்டுட்டான்; பெட்ரோலும் டீசலும் இறக்குமதி ஆவுது; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏத்தம் இறைக்கிறதை மறந்துட்டான்; ஆழ்குழாய்க் கிணறு வந்துச்சு; மோட்டாரும் குழாயும் விக்குது; கம்பெனிக்காரன் பெருக்குறான். விவசாயி ஓட்டாண்டி ஆயிட்டான். நவீன விவசாயம் என்ன பண்ணுதுனு இப்பப் புரியுதுங்களா?'' என்று நம்மாழ்வார் கேட்டபோது ஒட்டு மொத்தக் கூட்டமும் உறைந்துபோனது.
''குதிரைவாலியும் வரகும் சாமையும் அரிசிக்கு நல்ல மாற்று. கேழ்வரகும் தினையும் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை. நெல்லுக்கும் கோதுமைக்கும் பாய்ச்சும் நீரில் பத்தில் ஒரு பங்கு போதும் இவற்றுக்கு. ஆனால், அரிசி, கோதுமையைவிடப் பல மடங்கு ஊட்டச்சத்து மிக்கவை!'' என்றார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
''நீங்கள் இயற்கை உணவுக்கு மாறுவது எளிது. ஆனால், விவசாயிகள் மீண்டும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது அத்தனை எளிதுஅல்ல; இயற்கை விவசாயத்தில் ஒரு வண்டி எரு அடிக்க வேண்டிய இடத்துக்கு, நவீன விவசாயத்தில் ஒரு சட்டி யூரியா போதும். ஆனால், அது விஷம். அதனால்தான், கூடுதல் செலவு, கூடுதல் சுமையைப் பார்க்கா மல் இயற்கை விவசாயத்துக்குத் திரும்புகிறோம். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் ஏன் இயற்கை விளைபொருள்களின் விலை கூடுதலாக இருக்கிறது என்று கேட்டு நிராகரிக்கிறார்கள். நான் கேட்கிறேன்... நஞ்சு என்று தெரிந்த அரிசியை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள், சத்தான உணவு என்று தெரியும் அரிசிக்கு 40 ரூபாய் கொடுக்கக் கூடாதா?'' என்றார் முன்னோடி இயற்கை விவசாயியான வைகை குமாரசாமி.
''உணவு நஞ்சாயிடுச்சு, தண்ணி நஞ்சாயிடுச்சு, காத்தும் நஞ்சாயிடுச்சு; இன்னமும் எப்படி மௌனமா இருக்கோம்? சொரணை இருந்தாத்தானே உயிர் இருக்குனு அர்த்தம்?'' - சமூகச் செயற்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் கேள்வி இன்னமும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!
-சமஸ்
படங்கள் : ரா.மூகாம்பிகை
நன்றி: ஆனந்தவிகடன், 08-08-12
3 கருத்துகள்:
நல்ல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...
நன்றி…
(த.ம. 2)
[காணொளி] ஐந்திணை சுற்றுச்சூழல் விழா
http://www.periyarthalam.com/2012/07/31/ainthinai-vizha-videos/
இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
கருத்துரையிடுக