கூடங்குளம் அணுமின்
திட்டத்தின் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதற்கு அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு “பூவுலகின் நண்பர்கள்” கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் இன்று (10-08-12) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்திக் குறிப்பில், “கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் அளித்த அறிக்கைகள் 09-08-12 அன்று நடைபெற்ற அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தின் 107வது கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது: அதன் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்பி, அதனை இயக்குவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கூடங்குளம் அணுஉலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில், ஜப்பான் புகுஷிமா விபத்திற்கு பிந்தைய (இந்திய அணுஉலைகள் பாதுகாப்பு குறித்த) நிபுணர் குழுபரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே கூடங்குளம் அணுஉலை செயல்படுத்தப்படும் என்று அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கூடங்குளம் அணுமின்
திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலைகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம்
வழங்கிய அனுமதி, சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டது என்றும், எனவே அதை
செல்லாது என அறிவிக்கக்கோரியும் தொடரப்பட்ட வழக்கு இது வரை தீர்ப்பளிக்கப்படாமல்
நிலுவையில் உள்ளது.
கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்காக பேரிடர் மேலாண்மைக்
கொள்கைகள் முறையாக வகுக்கப்படவில்லை என்றும், பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள்
வகுக்கப்பட்டு, செயல்படுத்தாத நிலையில் கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது என்று
தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில்
கூடங்குளத்தில் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அணு ஆற்றல்
ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பு,
நீதிமன்றத்தின் மாண்பையும் - நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில்
அமைந்துள்ளது.
மேலும் கூடங்குளம்
அணுஉலையின் பாதுகாப்பு ஆய்வு அறிக்கை மற்றும் கள ஆய்வு அறிக்கை ஆகியவற்றை
அணுசக்திக்கு எதிரான மக்கள் அமைப்பினருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய தகவல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு
ஆய்வு அறிக்கை மற்றும் கள ஆய்வு அறிக்கை ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை.
சுற்றுச்சூழல் நீதியியலின்
சாராம்சமான “வருமுன் காப்போம்” என்ற முக்கிய கோட்பாட்டை முற்றிலுமாக
புறந்தள்ளிவிட்டு, கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலைகளில் எரிபொருள்
நிரப்பலாம் என்று அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதற்கு
“பூவுலகின் நண்பர்கள்” வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் அணு ஆற்றல்
ஒழுங்குமுறை ஆணையம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய அனுமதியை உடனடியாக திரும்பப்பெற
வேண்டும் என்று “பூவுலகின் நண்பர்கள்” கோரிக்கை விடுக்கிறது.
1 கருத்து:
கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!
http://www.lawyersundar.com/2011/11/blog-post.html
கருத்துரையிடுக