'அதான்... அரசாங்கம் சார்புல நிவாரணத்தைக் கொடுத்துட்டிருக்கோமே.. இன்னும் என்ன?’னு நீங்க கேப்பீங்கனு தெரியும்மா. ஆனா, பிரச்னையே அதுதாங்க. நீங்க பிடுங்கச் சொன்ன ஆணியை விட்டுட்டு, தேவையில்லாத ஆணியைத்தான் அதிகாரிங்க பிடுங்கிக்கிட்டு இருக்காங்கம்மா. அதைப்பத்திதான் சொல்ல வந்தேன்.
சோமாலியா நாட்டுல... பட்டினியால குத்துயிரும், கொலை உயிருமா மக்கள் அலையறது அன்றாட காட்சிங்கறது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படி அலையற அந்த ஜீவனுங்க பின்னாடியே, பொணந்தின்னி கழுகுங்களும் அலையுமாம். 'இந்த உடம்பு எப்ப செத்து விழும்... நாம கொத்தித் திங்கலாம்?'னு! அதேமாதிரிதான் புயல் தாக்குதலால நடைபிணமாக கிடக்கற எங்க மக்களை சுத்திச்சுத்தி அலைஞ்சுகிட்டிருக்குது அதிகாரிகள் கூட்டம். 'தானே’வால பாதிக்கப்பட்டவங்களுக்கு நீங்க கொடுத்த நிவாரணம் மொத்தத்தையும், தானே வெச்சுக்கப் பாக்குது இந்தக் கூட்டம்.
4 மாச நெல்லு காலி; ஒரு வருச கரும்பு காலி; அம்பது, நூறு வருஷம் நின்னு பலன் கொடுக்குற பலா, முந்திரி, தென்னை எல்லாம் காலி; மொத்தத்துல பிய்ச்சுப் போட்ட தலையணை கணக்கா கிடக்குது புயல் பூமியோட விவசாயம்.
இதையெல்லாம் பார்த்துட்டு ஆளாளுக்கு ரத்தக் கண்ணீர் வடிச்சுட்டிருக்காங்க. ஆறுதல் சொல்ல வேண்டிய அதிகார வர்க்கமோ... ஆளாளுக்கு முறுக்கிக்கிட்டு நிக்கறாங்களாம். விவசாயத்துறை சொல்றதை... வருவாய்த்துறை கேட்கறது இல்லை; வருவாய்த்துறை சொல்றதை... மின்சாரத்துறை கேட்கிறது இல்லை; இவங்க யாரு பேச்சையுமே காவல்துறை கேட்கிறது இல்லை... இப்படி ஒவ்வொரு துறையுமே மூலைக்கு ஒண்ணா திரியுது. இவங்களோட சண்டையெல்லாமே... பாதிப்பை கணக்கெடுக்குறதுக்காக இல்லை. நிவாரணத்தைப் பங்கு போடறதுக்குத்தான்!
கீழ்மட்ட அதிகாரிகள சரியான வகையில வழி நடத்தி, மக்களுக்கு முறையா நிவாரணம் போய்ச் சேரணும்னா, மாவட்ட தலைமையில சரியான அதிகாரிங்க இருக்கணும். இந்த விஷயத்தைப் புரிஞ்சுகிட்டு, புயல் அடிச்சதுமே அந்த இடத்துல சரியான ஆளை அமர்த்தியிருக்கணும். ஆனா, இருபத்தி அஞ்சு நளைக்குப் பிறகு, முழிச்சுக்கிட்டு கலெக்டர்கள இப்பத்தான் மாத்தியிருக்கீங்க. இதுமட்டும் போதாதது... கீழ்மட்டத்துல இருக்கற புல்லுருவிகளையும் கொஞ்சம் களையெடுத்தீங்கனா... புண்ணியமா போகும்!
அப்பன், ஆத்தாளா இருந்து எங்க ஆளுங்களுக்கு இத்தனைக் காலமும் சோறு போட்ட மரங்களெல்லாம் சாய்ஞ்சிக் கிடக்குது. அதை வெட்டி, ஒழுங்குபடுத்தி வெளியேத்தவே இன்னும் ஆறு மாசம் ஆகும் போலிருக்கு. அதுக்கு வழியில்லாம நாங்க கையைப் பிசைஞ்சுகிட்டு நிக்கறோம். இந்த நேரத்துல மரக்கன்னுகள கொண்டு வந்து கொடுத்து 'நடுங்க நடுங்க'னு அதிகாரிங்க சொன்னா... எங்க தலையிலயா நட்டுக்க முடியும்?
முதல்ல, விறகுக்குப் போறது, வேலைக்கு ஆகுறதுனு விழுந்து கெடக்குற மரங்களை பிரிச்சு, அதை அரசே எடுத்துக்கிட்டு, உரியப் பணத்தைக் கொடுக்கச் சொல்லுங்க. 'வலுத்தவன் வெட்டினதே வாய்க்கால்’ங்கிற கணக்கா, இந்த அதிகாரிங்களும், ஒங்க கட்சி ஆளுங்களும் சேர்ந்துகிட்டு, விவசாயிகளோட நஷ்ட கணக்கை அரைகுறையா எடுத்து வெச்சுருக்காங்க. அதையெல்லாம் தூக்கி வீசிட்டு, நல்ல அதிகாரிகள அனுப்பி, முழுக் கணக்கையும் மறுபடியும் எடுக்கச் சொல்லுங்க.
பொத்தாம் பொதுவா பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்னு சொல்லாம... நீண்டகாலப் பயிர் இழப்பு (பலா, முந்திரி), ஒரு வருடப் பயிர் இழப்பு (கரும்பு, வாழை), குறுகியகாலப் பயிர் இழப்பு (நெல், காய்கறிகள்) என, கணக்கெடுக்க சொல்லுங்க. இதுக்கெல்லாம் உரிய இழப்பீடு எவ்வளவுங்கறத விவசாய பிரதிநிதிகள்கிட்டயும் கேட்டு முடிவு பண்ணுங்க. அப்பத்தான், எங்க ஆளுங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை முழுசா தீர்க்க முடியும். காலமெல்லாம் அவங்க மனசுல நல்ல முதலமைச்சரா நீங்க நிறைய முடியும்!
கடைசியா ஒரு சில வார்த்தைகள்... நிவாரணம் கொடுக்கறது முக்கியமில்ல. அது சரியா போய் சேர்ந்துச்சானு பாக்குறதுதுதான் முக்கியம். இல்லைனா... மக்களோட கோபம் உங்க பக்கம்தான் திரும்பும். இதுவரைக்கும் உங்க ஆட்சியோட கெட்டப்பேரெல்லாம்... மன்னார்குடி கும்பல் மேல விழுந்துகிட்டிருந்துச்சு. அவங்கள துரத்தி அடிச்சுட்டீங்க! இனி, எது நடந்தாலும் அது உங்களைத்தான் நேரடியா தாக்கும்... மறந்துடாதீங்க!
இப்படிக்கு,
கோவணாண்டி
கோவணாண்டி
நன்றி: பசுமைவிகடன், 10-2-12
1 கருத்து:
nice
http://www.ambuli3d.blogspot.com/
கருத்துரையிடுக