செவ்வாய், ஜனவரி 31, 2012

(அணு மின்நிலைய) கதிர் வீச்சுக்கு இல்லை மதவெறி!

வயிற்றுப் பசிக்காரனிடம் முழங்கால் பசிக்காரன் உபவாசம் இருப்பது நல்லதுதான் என்று கூறும் நிலையே கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை நோக்கி வீசப்படும் கணைச் சரங்களால் தோன்றியுள்ளன.  

எதிர்ப்பாளர்களைத் ""தீய சக்திகள்'' என்று சற்றும் கூச்சமின்றிச் சாடுவோர் தங்களை தேசபக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாகக் கருதிக் கொள்வதுதான் விசித்திரம். கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பை ஒரு நாடகம் என்று கொச்சைப்படுத்துவோர், தாங்கள் ஏற்றுள்ள பாத்திரங்களை மறந்துவிடுகின்றனர். ""உலகமே ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் கதாபாத்திரங்கள்'' என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளதை உணர்ந்தால் விமர்சனம் தரம் தாழ வேண்டிய நிலையிருக்காது.  

மேகாலய மாநிலத்தில் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை வெட்டி எடுப்பதற்குத் தடையாக இருந்து போராட்டம் நடத்திவரும் மக்களும் கூடங்குள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் ஏறக்குறைய ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பது என்ன தவறு?  

இன்னும் தெளிவாகக் கூறினால் கூடங்குளத்தில் போராடுபவர்கள் நோயை எதிர்த்தும் மேகாலயாவில் எதிர்ப்பவர்கள் "நோய் முதல்' எது என்பதைக் கண்டறிந்து அதை எதிர்த்தும் போராடி வருகின்றனர் என்பதே உண்மை. அமைப்பாக அணி திரளும்போதுதான் மக்கள் திரளின் வலு கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன. போராட்டம் தொடர்ந்து நடைபெற அமைப்பே அடிப்படையாகும். இந்தியாவுக்கு அணுகுண்டு தேவையென்று கூறுவோர் கைவசமுள்ள 100 அணுகுண்டுகள் போதாவெனக் கூறுகின்ற நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும்? சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே இருப்பதாகப் புலம்புவோரை என்ன செய்வது?

 சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இருப்பதைவிட 100 அணுகுண்டுகள் கூடுதலாக இருந்தால் அவை பயந்து ஓடிவிடுமா?

 பிரதமராக இருந்த நேரு அணுகுண்டு தயாரிக்க வேண்டுமென்று ஏன் விரும்பவில்லை? மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று தொடங்கினால் உறுதியாக அது அணுகுண்டுப் போராகத்தான் இருக்கும்; அப்படியொரு போரின் முடிவில் பூமியில் உயிரினம் எதுவும் மிஞ்சாது என்பதை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால்தான் போருக்கான பொறி தோன்றும்போதே அதை அணைத்து உலகைக் காக்கும் சமாதானப் புறாவாக விளங்கினார். நீரிலும் நிலத்திலும் நடக்கும் அணுஆயுத சோதனைகளுக்குத் தடை விதிக்கக் கோரிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் அணுஆயுதக் கொள்கையையும் மாற்றி அமைத்துத் திசை திருப்பினார் இந்திரா காந்தி.

 உலகிலுள்ள நாடுகளில் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளை எளிதாக விரல்விட்டு எண்ணிவிட முடியும். அவை தவிர, மிகப் பெரும்பான்மையான நாடுகளில் ராணுவம்கூடப் போதுமான வலுவுடன் இருப்பதாகக் கூற முடியாது. மக்கள்தொகை ஒரு கோடிக்கும் குறைவான நாடுகள் ஏராளமாக உள்ளன. சென்னை நகர மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கைக்கொண்ட நாடுகள் இருக்கின்றன. அவற்றிடம் அணுகுண்டு இல்லை.

 கூடங்குளத்துக்கு நேரில் சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணுமின் நிலையம் ஆபத்தில்லாதது என்று கூறினார். நாளேடுகளில் 4 பக்க விளக்க அறிக்கை தந்தார். தலைசிறந்த அறிவியல் மேதையான அவர், இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென இளைஞர்களிடத்தில் வெறியூட்டினார்.  

அணுமின் நிலையத்தைக் காப்பாற்ற அவருக்கு ஏன் அக்கறை? கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகள் மறுத்துவிட்ட நிலையில் தமிழகத்தின் தலையில் கட்டப்பட்ட திட்டம்தான் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் என்பதை அவரால் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியுமா? அம்மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? 

 அணுக்கழிவைப் பாதுகாக்க நூற்றுக்கு நூறு உத்திரவாதமுள்ள முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியாதா? 

 அணுமின் நிலைய விபத்துகளால் ஏற்படும் இழப்பைச் சாலை விபத்து, ரயில் விபத்து, விமான விபத்து ஆகியவற்றுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது?  

ஏனைய விபத்துகளில் இறந்தோரின் மரணத்துடன் பாதிப்புகள் கடுமையாகத் தொடர்வதில்லை. ஆனால், அணுமின் நிலைய விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தலைமுறைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. போபால் நச்சு வாயு விபத்தின் விளைவுகள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதை நாம் அறியவில்லையா? 

செர்நோபில் விபத்தின் தாக்கம் அண்டை நாடுகளின் நிலம், நீர், தாவரங்களென, விலங்குகளென விரியவில்லையா?  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்கெனவே பணிபுரிந்தோர், இப்போது பணிபுரிவோர் ஆகியோரைச் சுயேச்சையான மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்த அரசு தயாரா? அதைச் சுற்றி வாழும் மக்களையும் பரிசோதிக்க அரசு ஏற்பாடு செய்யுமா?  

முன்னால் செல்பவரின் காலில் முள் குத்தினால் நாம் எச்சரிக்கையுடன் நடப்பதில்லையா? பிறருடைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். பரமார்த்த குருவின் சீடர்கள் ஆற்றின் ஆழத்தைச் சராசரிக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டது போன்று அணுமின் உற்பத்தியில் கூட்டல், கழித்தல் பார்த்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. 

 அணு வல்லமை என்பதன் லட்சணம் வீணாகப் பகையை வளர்ப்பதில்தான் முடியும். இந்தியா போன்ற கனிம வளமுள்ள நாட்டை எளிதில் ஏமாற்றித் தங்களுடைய நலன்களைப் பெருக்கிக் கொள்ள விழையும் நாடுகள் ஆயுத விற்பனைக்காகப் போர்களை விரும்புகின்றன. போர் மேகம் சூழ்ந்துள்ள அச்ச நிலையிலேயே மக்களை வைத்துள்ள நாடுகளின் தலைவர்கள் பதவியில் நீடிக்க வழி காண்கின்றனர்.  

கத்தோலிக்க தேவாலயத்தினர் கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பில் முன்னணியில் இருப்பது எவ்வகையில் தவறாகும்? கிறிஸ்தவ நாடுகளில் அணுமின் நிலையம் இருக்கும் சூழலில் கூடங்குளத்தில் பிரச்னை என்ன? அணுமின் நிலையத்துக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை உணர்த்துவதே முக்கியமாகும். கடற்கரை கிராமங்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுவது தேவாலயத்தினரின் பொறுப்பாகும். மீனவர்களான அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் பாதிரியார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்க முடியாது.  

மேகாலயாவில் யுரேனியம் வெட்டியெடுக்க கிறிஸ்தவ அமைப்புகள் தடையாக உள்ளனவென்றும் கூடங்குளத்திலும் அவையே பிரதான எதிர்ப்பாக இருக்கின்றனவென்றும் சொல்வதன் மூலமாகக் கிறிஸ்தவர் அல்லாதாரிடையே வெறியைத் தூண்ட முயலும் செயல் வெளிப்படையாக நடக்கிறது.மீண்டும் மீண்டும் இந்தியா அணுவல்லமை பெற வேண்டுமென்று கிளிப்பிள்ளை மாதிரி இடைவிடாமல் கூறிக் கொண்டிருப்பதன் மூலமாக இங்குள்ள வறுமை, பிணி, அறியாமை ஆகியவற்றை மறக்கடிக்க முயற்சி செய்கின்றனர். அரசு தன் ராணுவத்தால் மக்களை அடக்கலாம். தாற்காலிக வெற்றியும் பெறலாம். எனினும் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதை வரலாறு நன்றியுடன் அழுத்தமாகப் பதிவு செய்யும்.

தெ.சுந்தரமகாலிங்கம், 
வத்திராயிருப்பு, 
விருதுநகர் 

நன்றி: தினமணி 23-01-2012

2 கருத்துகள்:

இருதயம் சொன்னது…

கதிரியக்கம் குறித்த உங்களின் பார்வை தவறானது . இயற்கையாகவும் , மருத்துவ ரீதியாகவும் மனிதன் பெறுகிற கதிரியக்கத்தை நீங்கள் அறியவில்லையா அல்லது வேண்டும் என்றே மறைக்கிறீர்களா என்பது எனக்கு விளங்கவில்லை . மத ரீதியாக போராட்டங்களை பிரிப்பதை நானும் விரும்பவில்லை . ஆனால் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கி போர்ராடுகிரார்கள் என்றால் அது தவறு. அப்படி இல்லை எனில் செலவு கணக்குககளை வெளியிடலாமே . பல மாதங்களாய் நடக்கும் இந்த கேள்விக்கு முற்றுபுள்ளி வைக்கலாமே என்பது தான் எனது எண்ணம் .

உண்மை இந்தியன் சொன்னது…

இயற்கையான கதிரியக்கத்தின் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் பரவலாக நடந்து வருகிறது. மருத்துவரீதியான கதிரியக்கத்திற்கு யாரும் தினமும், தொடர்ச்சியாக ஆட்படுவது இல்லை. ஆனால் அணுஉலை இருக்கும் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் அவர்களை அறியாமலே அணுக்கதிர் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி பலவழிகளிலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதைத் தெரிந்தும் மறைப்பது அணுசக்தித்துறையும், அதன் ஆதரவாளர்களும்தான்.

வெளிநாட்டில் கடனும், ஆயுதமும், தொழில்நுட்பமும், தானியங்களும் இவை எல்லாவற்றிலும் லஞ்சமும் வாங்கும் அரசும், அதன் ஆதரவாளர்களும் போராட்டத்திற்கும் வெளிநாட்டு பணம் வருகிறது என்று கதைப்பது நகைச்சுவை.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் அனைத்தும் உள்துறை அமைச்சகம் மூலமாகவும் Foreign Contribution Regulation Act என்ற சட்டத்தின் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டே வருகிறது.

கருத்துரையிடுக